மைவிழி மணிமொழி
மைவிழி மணிமொழி 5
அன்பே…!
நினைவகம் நிரம்பியது
உன் நினைவுகளால்…
நினைவுகள் யாவும்
நீயே ஆனாய்
கனவினில் கூட
கவிதை யானாய்
உன்முகமதை
நகலெடுத்தே விழிகளுக்குள்
ஒட்டியது யாரோ…
உன் பேச்சினை
ஒலிப்பதிவு செய்தே
செவிகளுக்குள்
இசைப்பவர் யாரோ..
இரவோ பகலோ
என்னுடன் நீ
நினைவாய் மனம்
நிறைந்தாய்
மாற்று வேலை
மறந்தே உன்னுடன்
வாழ்கிறேன்
என்பொழுதுகள் உன்
பொழுதாகவே…
———மணிமொழி
இணைந்தே இறக்க
இருக்கும் வரை
இணைந்தே
இருந்திட ஏங்கினேன்…
விதியொன்று
விதித்தது
பிடித்ததை இழந்திடு
இழந்திடு… இழந்திடு…
பிரியங்கள் இழந்திடு
இனியில்லை உனக்கு
இவளது நிழலும்…
போகாதே மணிமொழி
தந்ததேன் உயிர்வலி
——–கருப்பன்
மறுநாள் காலை…
மணிமொழி போனில் அழைத்தாள்…
நவீன் எங்க இருக்க…
உன்ன பாக்கத்தான் வந்துட்டு இருக்கேன் …
சீக்கிரம் வாரீயா…
ஏன் மாலை தானே பஸ் ….
ஆமாம் கொஞ்சம் வெளிய போவோம்….
சரி வந்துட்டே இருக்கேன்
சரியாக பத்து நிமிடங்களில் மணிமொழி தங்கியிருந்த அபார்ட்மெண்ட் வந்து போன் அழைத்தான்
தோ வந்துட்டேன் சொன்னவள் அடுத்த வினாடி ரிசப்சனில் இருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தாள் ..
வெள்ளைச் சுடிதாரில் சின்னதாய் குங்குமப் பொட்டு வைத்திருந்தாள் இருக்கிக் கட்டிய கூந்தலில் வெள்ளைக் கலரில் க்ளிப் மாட்டியிருந்தாள். ஆளைப் பார்த்ததும் அசந்து போய் நின்றான்…
என்னாச்சி நவீன்… அவன் மயங்கி நின்றதைப் பார்த்து குறும்பாய் கண் சிமிட்டி சிரிக்க
ஒண்ணுமில்ல … சற்றுத் தடுமாறி சிரித்துக் கொள்ள
டேய் திருடா என்னவோ சொல்ல வந்து மறைக்கிற பாரு…
இல்ல மணி இன்னைக்கு ரொம்ப இலட்சணமா இருக்க..!
ஐயே… ரொம்பதான் வழியிற… இந்த கர்சீப் என சிரித்துக் கொண்டே கொடுக்க
எங்க போகனும் மணி…
தி நகர் போகலாம் கொஞ்சமா திங்ஸ் வாங்கனும் அப்புறம் உனக்கு ட்ரஸ் வாங்கனும்…
தி.நகர் பறந்தான் காலை வேளை ஆதலால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது…
மணிமொழி ஆசை ஆசையாய் அவனுக்கான ஆடைகளைத் தேடிக் கொண்டிருக்க ஏதோ இனம்புரியாத சோகம் அவனை அழுத்தத் தொடங்கியிருந்தது
ஏன் மணி நம்ம காதலுக்கு அப்பா அம்மா ஒத்துப்பாங்களா..?
“என்னாச்சுடா உன் முகமே சரியில்லை …”
“கண்டிப்பா ஒப்புக் கொள்வார்கள்” “அவர்கள் மறுக்க எந்த காரணமும் இல்லை அப்படி மறுத்தால் கூட நான் வேறொருவரை எதற்காகவும் நினைக்க மாட்டேன்” “ஆமா இதையே எத்தனை தடவை கேப்ப நீ….”
சமாதானம் ஆனாலும் மனது ஏனோ தவிப்பாய் தவித்துக் கொண்டிருந்த காரணம் நவீனுக்கு அப்போது விளங்கவில்லை
அன்று மாலை மணிமொழி கிளம்பும் போது நவீன் அருகே தான் இருந்தான்..
பஸ்ஸ்டாண்ட் நானும் வரவா மணி…
வேணாம் நவீன் கால்டாக்ஸில தான் போறேன் நீ வீட்டுக்கு கிளம்பு
சரி அடிக்கடி கால் பண்ணு….
ம்ம் சரி பை…
கிளம்பி கடைவந்தாலும் ஏதோ குழப்பத்திலில் இருந்தான் சரவணனும் இரண்டொரு முறை கேக்க ஒண்ணுமில்ல வேலயப்பாரு என சமாளித்து விட்டான்
பெற்றோரை சந்திக்க மணிமொழி இன்று தஞ்சாவூர் கிளம்பிய மறுநாள் பரந்தாமன் நவீனை சந்திக் வந்திருந்தார்
“வணக்கம் தம்பி என் பெயர் பரந்தாமன் மணிமொழியோட மாமா”
வணக்கம் வாங்க உள்ள வாங்க அழைத்தான்
ஒரு நிமிசம் சரவணா கடை பார்த்துக்கோ வீட்டுக்கு போய்ட்டு வாரேன் ..
வாங்க சார் வீட்டுக்கு போகலாம்அழைத்து சென்றான்
பரந்தாமனோட மனைவி ராகினியும் தம்பி ரகுராமும் வந்திருந்தார்கள்…
ட்ராபிக்கில் இறங்கி சரியாக பதினைந்து நிமிடங்கள் பயணித்தது இப்போதுதான் டெவலப் ஆகியிருக்கும் கல்பனா நகர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் மத்தியில் இருந்தது நவீனோட வீடு..
புதிதாக கட்டப்பட்டு இன்னும் குடியேறாத வீடு பெயிண்ட் வாசனை அடிக்க உள்ளே நுழைந்தார்கள் …
வீட்டிற்கு தேவையான பொருட்கள் யாவும் வாங்கி வைத்திருந்தான்…
பரந்தாமன் கண்களைச் சுழற்றிப்பார்த்தார் உயர்ரக குஷன் வகை சோபாக்கள் பெரிய சைஸ் ஸ்மார்ட் டிவி ரூம்களில் ஏசி ஒரு குடும்பம் நடத்த தேவையான பொருட்கள் அனைத்தும் இருந்தது.. கஷ்டப்பட்டு பொருள் சேர்த்து வாங்கியிருப்பது புரிந்தது பார்த்து பார்த்து வாங்கி வைத்திருந்தான்
வீட்டை பார்த்தனர் கொஞ்சம் பெரிய வீடுதான் வெளியில் தோட்டம் அங்கே ஊஞ்சல் என பணக்காரத்தோரணையோடு இருந்தது
சொந்த வீடா தம்பி
ஆமாங்க சொந்த வீடுதான் சின்ன வயசுலேருந்து சம்பாரித்த காசு சார் எல்லாவற்றையும் வீட்டுலதான் போட்டு இருக்கேன் அது போக பேங்க்ல கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு தொழில்ல நல்ல வருமானம் வருது
மணிமொழியை விரும்புகிறிங்களா தம்பி நேரடியாக கேட்டார் பரந்தாமன்
அந்த கேள்வியை எதிர்பார்க்காத நவீன் கொஞ்சம் தடுமாறி பதில் சொன்னான் “ஆமாம் சார் கொஞ்ச நாளாக இருவரும் விரும்புகிறோம்…”
கொஞ்சநாளாத்தானே நீங்க விரும்புறீங்க ஆனா மணிமொழியோட வாழ்க்கையை வேறொருவரோடு இணைச்சி ரொம்ப நாளாகவே காத்திருக்கோம்…
“சார் நீங்க சொல்றது எனக்கு புரியல “
தம்பி நீங்க நல்ல உழைப்பாளி… இடம், பொருள், பணமெல்லாம் இருக்கு
மணிமொழிக்கு நல்ல பொருத்தம் தான் ஆனா…
“என்ன சார் ஆனா ” நவீன் பதற்றத்தோடு கேட்க
பரந்தாமன் பேச பேச அப்படியே நொறுங்கி போனான் அவர் சொல்வதை இவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை
மணிமொழியை விட்டுக்கொடுங்கள் என்று காலில் விழப்போனார் பரந்தாமன்.
பதறித்தூக்கினான் “எழுந்திருங்க சார் என்ன பாவதாரியா ஆக்காதீங்க”
தம்பி இது ரெண்டு பேர் வாழ்க்கை இப்போ உங்க கையில இருக்கு நீங்க மனசு வைச்சா தான் தம்பி
அதுக்காக நான் சாகனுமா சார் நவீன் கேட்க
“நான் அப்படி சொல்லல ஆனா நீங்க இந்த தியாகத்தை பண்ணின நாங்க நல்லாயிருப்போம் . இல்லை என்றால் எங்க குடும்பமே சிதைஞ்சுடும் உங்க கையிலதான் தம்பி எங்க குடும்பமே இருக்கு” தம்பி கண்கலங்கி நின்றார்.
இதையெல்லாம் ஒரு பொருட்டாவே நினைக்காம போனை நோண்டிக்கொண்டிருந்தான் ரகுராம்
அது அவன் நார்மலான நபரா இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.
சரி சார் நான் மணிமொழிட்ட இதைப்பற்றி பேசவா
வேணாம் தம்பி அவ பிடிவாதக்காரி
அவளை விட்டு விலகிடுங்க போதும்
நாங்க பேசி சம்மதிக்க வைத்துக்கொள்கிறோம்.
ஆயிரம் சம்மட்டி கொண்டு இதயத்தில் அடித்தது போலிருந்தது நவீனுக்கு.
தொடரும்
