7
மையல் கொண்டேன் மாதீரா…
ஜியா ஜானவி ❤️
ஈசன், மயங்க போனவளை இழுத்து அணைத்து இதழில் அணைத்தவன் அதை ட்ரீட்மென்ட் என்று கூற… அவள் பயந்து அதிர்ந்து பார்க்க…
அவனோ அவளது செவ்விதழ்கள் உயிர் அமிர்தத்தை மிக ஆழமாகவே உறிஞ்சி எடுத்தான். அவளது இதழ்களை உறிஞ்ச.. உறிஞ்ச.. அவனுக்குள் போதை ஏறிக்கொண்டே போனது!! சாதாரண போதை அல்ல… பெண்ணின் இதழ்ரச போதை அது!!
எவ்வண்டும் தனை மறந்து அப்பூவிதழ்களின் தேனில் துஞ்ச வைக்கும் கிறக்கும் போதை!! பேதையவளின் இதழ் அமுத போதை!!
இதழ் மீட்டியவர் மீண்டதாக சரித்திரமும் இல்லை இப்பூலோகத்தில்!!
இதழ்ளை விட விருப்பமின்றி அதில் லயித்து இருந்தவனை பியூன் மணியின் குரல் கலைத்தது.
“சார் அந்த பொண்ணு வந்துட்டு. வெளியே நிற்குது” என்று!!
அட இது கனவா? என்று சுற்றுமுற்றும் பார்க்க.. கனவேதான் என்று நிதர்சனம் புரிந்தது.
“ட்ரீட்மெண்ட் என்றெல்லாம் சொல்லி அதுக்கு பேர் எல்லாம் கூட வச்சாம்லே… ச்ச எல்லாம் வேஸ்ட்லே… ஏலே ரைட்டரு அடுத்து தரமா ஒன்னு வைக்கல… அருவா பறந்து வரும்” என்று நம்மை மிரட்டியவன், இடது கையால் பிடரியை நீவி கொண்டவன் காதில் குயிலின் மெல்லிய ஓசை… மென் புல்லாங்குழலில் இருந்து வெளி வரும் இசை போல…
“சார்… எக்ஸ்க்யூஸ் மீ!!” என்று வாசலில் நின்றாள் மாது!!
சேலை கட்டிய செந்தாமரையே…
செத்தே போனடி!!
சேலையில் உந்தன் அழகை கண்டு!!
ஜாதி மல்லி பூச்சரமே…
கொக்கி போட்டாயடி நின்
நீண்ட பின்னலில்..
செவ்விதழ்கள் கொண்டு..
எனைதின்று மோட்சம் கொடுடி…
என் ராட்ஷசியே!!
என்று ஈசாவின் மனம் ரகசியமாய் அவளை… அவளது அழகியலை கொஞ்சிக் கொண்டிருந்தது.
முதலில் தஷாவுக்கு அவனை அடையாளமே தெரியவில்லை. அன்றோ முதலில் அவன் முதுகை தான் பார்த்திருந்தாள். பின்பு வெட்டப்பட்டவுடன் அரை மயக்கத்தில் தன் அருகே நின்ற ஆஜானுபாகுவான உருவம் அரக்கன் ஆகவே அவளுக்கு தென்பட.. அப்படியே மயங்கி சரிந்து விட்டாள்.
அடுத்து அவனது வீட்டிலும் அவனைப் பார்த்து இருந்தாலும் அரைகுறையாகத்தான் ஞாபகத்தில் இருந்தது.
தன் முன்னால் இருப்பது சேர்மனின் மகன் என்று மரியாதை மதிப்பு மட்டுமே அவள் கண்களில் அப்போது தென்பட்ட பாவம்!!
அய்யோ பாவம்!! இவன் தான் அவன் என்று தெரிந்தால்??
கண்களை மூடி அந்த குரலை ரசித்தவன் கண்களை திறக்க.. எதிரே அவனது மாமி!!
அவளது கண்களை பார்த்த ஈசா அசந்து தான் போனான்.
அக உணர்ச்சி அனைத்தையும் அப்படியே காட்டும் அந்த நீள விழிகளில்.. என்ன ஒரு தெய்வீக அழகு..!! பால் போன்ற அந்த விழிகளில் உருண்டோடும் கருந்திராட்சை அவ்வளவு அழகு!! பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமே பசியே வராது!!
அவள் மீது மோகமே வரவில்லை..
மாறாக காதல் பெருகியது!!
இவ்வளவு நாள் அவன் பார்த்த பெண்களின் கண்களில் இப்படி ஒரு அழகை அவன் பார்த்ததே இல்லை..!!
நிச்சயம் இவள் சாதாரண பெண்ணில்லை என்பது அவனது அடியாழம் வரை பாய்ந்தது..!!
இவள் ஒரு தேவதை!!
இவளை மோகம் கொண்டு நெருங்கி
தான் களங்கப்படுத்தி விடக்கூடாது என்று அவனுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது.
பெரும்காதல் கொண்டே அவளை ஆராதிக்க வேண்டும்!! அணு அணுவாய் அவளை காதல் செய்ய வேண்டும்!!
அவளை முத்தமிடும் ஆசையை அப்படியே முடக்கினான்!!
மொத்தமாக கொள்ளையிடும் காதல் முகிழ்த்தது அவனுள்!!
“உடம்பு இப்ப பரவாயில்லையா? காயம் எல்லாம் ஆறிடிச்சா?” என்று சாதாரணமாக அவன் கேட்க.. பரவாயில்லை என்று தலையாட்டியவளுக்கு ‘இந்தக் குரலை எங்கேயோ கேட்டு இருக்கோமே? எங்கே?’ என்று மெல்ல மெல்ல ஞாபகம் வர.. அவனை உற்றுப் பார்த்த பின்பு தான் புரிந்தது அவன் யாரென்று!!
அதுவரை மரியாதையை மதிப்பை காட்டிக் கொண்டிருந்த அவளது விழிகள் பயத்தில் விரிய…
“என்ன ஞாபகம் வந்துடுச்சு போல?” என்று பிடரியை நீவிட்டப்படியே சிரித்தவன கண்டதும் இன்னும் நடுக்கம் கொண்டது பெண்ணின் மனம். மனதின் நடுக்கத்தை முகம் அப்படியே பிரதிபலிக்க…
“ஹே… என்னமோ ஒன்னு தூக்கிட்டு போயி ரேப் பண்ற மாதிரி இல்ல பயப்படுறவ.. ஜஸ்ட் பேச தான் கூப்பிட்டேன். பேசிட்டு போயிடுவேன்!! இங்கே பேச பிடிக்கலைன்னா அப்போ நாளைக்கு உங்க வீட்டுக்கு வரட்டா?” என்றவனை கண்டதும் அலறியடித்து ஓட தான் தோன்றியது கோதைக்கு.
“இல்ல நா… இல்ல. நா போறேன்.. நேக்கு…” என்று உளறி அவள் நடுங்கிய கால்களை மிகச் சிரமப்பட்டு திரும்பி நடக்க முயற்சிக்க…
“இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாலும்.. நீ உள்ளிருக்கும் போது அந்தக் கதவுகள் சாத்தப்படும்!!” என்று ஆழ்ந்த குரலில் கூறியவனை அலட்சியப்படுத்த முடியாமல் மெல்ல திரும்பி அவனை பாவமாக பார்த்தாள்.
“வா லே!” என்று அவன் அழுத்தமாக கூப்பிட…
மெல்லிய இடை அசைந்து அசைந்து வர.. பின்னலோ அவளது பின்னழகில் அதற்கேற்ப தாளமிட.. ஒரு கையால் புடவை முந்தானையை இறுகப் பற்றிக்கொண்டு.. தன் பயத்தை போக்க மேற்பற்களால் செவ்விதழ்களைக் கடித்தபடி மெல்ல நடந்து வந்த பெண்ணை இமைக்காமல் பார்த்து ரசித்தான் ஈசன்!! அவ்விதழ்களில் ருசிக்க ஆசை கொண்ட மனதை அடக்கியப்படி!!
“உட்காரு லே!!” என்று அதட்டிய உடன் சட்டென்று குடுகுடுவென்று ஓடிவந்து அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். ஆனால் இன்னமும் இமை தாழ்த்தி தான் இருந்தது. அவனை நிமிர்ந்து பார்க்கலாம் இல்லை.
“ம்ம்ம்… உன் பேரு என்ன?” தெரிந்து கொண்டே கேட்டான். அவள் குரலைக் கேட்க..
“த்தா… தாட்சாயணி!!”
“பொருத்தமான பேரு தான். ஈசனுக்கு பொருத்தமான பேரு தான். மாமனாருக்கு அப்பவே தெரிஞ்சு இருக்கு!!” என்று மெச்சிக் கொண்டான்.
ஈசன் என்பது அவனது பெயர் என்று அவளுக்கு தெரியவில்லை. இங்கே அழைத்து வந்த மணியும் சேர்மனின் மகன் பிரகதீரா என்றுதான் கூறி இருந்தான்.
“அப்புறம் அன்னைக்கு நடந்தது வந்து விபத்துனு சொல்லமாட்டேம்ல.. அவன திட்டம் போட்டுத்தான் அடிக்க போனேன். நீதான் ஊடால வந்து மாட்டிட்ட.. நீ மட்டும் இல்லேன்னா அந்த நாதாரிய அன்னைக்கும் என் கையால போட்டு இருப்பேன்.. ம்ப்ச்.. தப்பிச்சிட்டான்ல..!!” என்று அலட்சியமாக நன்றாக இருக்கையில் சாய்ந்தப்படி அமர்ந்திருந்தவன் மட்டுமல்ல அவனின் பேச்சும் அவளுக்கு திகிலை ஏற்படுத்தியது.
“இப்போ உடம்புக்கு பரவாயில்லையா?” என்று கேட்க அவளோ தலையை ஆட்டி பதில் சொல்ல…
“வாயைத் திறந்து பதில் சொல்லனும்!! என் கண்ணை பார்த்து சொல்லனும்!!” என்று அவனின் கூரிய வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அதில் தெரிந்த சுவாரஸ்யமும் ரசனையும் அவ்வளவு உவப்பானதாக இல்லை அவளுக்கு. மனதுக்குள் எச்சரிக்கை மணி அடிக்க… எச்சிலை விழுங்கிக் கொண்டே “சார் நான் போகவா எனக்கு கிளாஸ் இருக்கு!!” என்றாள்.
“உனக்கு கிளாஸ் கொடுத்த வாத்தி எவேம்ல?” என்று கேட்க அவளோ பயந்து பயந்து “எங்க டிபார்ட்மெண்ட் ஹெச்ஓடி” என்றாள்.
சட்டென்று அருகில் இருந்த மணியை அடித்து மணியை அழைத்தவன் “இவங்க டிபார்ட்மெண்ட் ஹெச்ஓடிய சீக்கிரம் வர சொல்லுல!” என்றவுடன்,
நாற்பத்தி ஐந்து வயதில் டபுள் புரமோஷன் போட்ட வயிற்றோடு நடக்க முடியாமல் ஓடி வந்தார் அந்த ஹெச்ஓடி நீலமேகம்.
“வணக்கம் சார்!!” என்று அவர் வணக்கம் வைத்தவுடன் “என்னவே காலேஜ் நடத்துரீக? இவங்களுக்கு உடம்பு சரியில்லைனு தெரிந்து எதுக்கு நீங்க கிளாஸ் எல்லாம் அலாட் பண்ணுனீங்க.. இன்னும் ரெண்டு மாசத்துக்கு இவங்களுக்கு எந்த கிளாஸ் கொடுக்கக்கூடாது. விருப்பப்பட்டா இவங்க காலேஜ் வருவாங்க.. போவாங்க!!” என்றான் கட்டளையாக!!
அதில் நீலமேகம் ஷாக்காகி இருவரையும் மாறி மாறி பார்க்க “என்ன பார்வை அங்க.. பேசினது நானு இங்க!!” என்றான் சற்று அதட்டல் குரலோடு.
“அதில்ல சார்… வேலை பார்க்காமல் சம்பளம் இவங்களுக்கு மட்டும் எப்படி? இவங்களுக்கு ஃபேவரா பண்ணா மற்ற ஸ்டாப் எல்லாம் அவங்களுக்கும் கேட்பாங்க. நான் பாரபட்சமா நடக்கிறேனு என் மேல புகார் வாசிப்பாங்க!!” என்று அவர் மென்று முழுங்கி கூற…
“எவன் கேட்கிறானோ அவனை எங்கிட்ட இழுத்து வாம்ல… அவனுக்கு இன்சூரன்ஸ் போட்டுடலாம்!! அப்படியே உமக்கும்? என்று கேட்க..
அவர் பதறி நடுங்கி “வேண்டாம் சார்!! மேடம்க்கு எப்போ விருப்பமோ அப்ப வந்தா போதும். அதுவும் வரணும்னு கூட அவசியமில்லை. போன்ல… போன்ல ஒரு அட்டனன்ஸ் போட சொல்லிடுங்க. நான் உங்களுக்கு இங்க பிரசெண்ட் போட்டுடுறேன்!! என்ன மேடம் ஓகேவா?” என்று பவ்யமாக தன்னை பார்த்து கேட்டவரை கண்டு இன்னும் விதிர் விதிர்த்துப் போனாள் தாட்ஷாயணி. நிலைமை நம் கையை மீறி கொண்டு செல்வதை பார்த்து தடுக்கவும் வழியின்றி அமர்ந்து இருந்தாள்.
நீலமேகத்தின் பார்வையை உணர்ந்த ஈசன் அவனுக்கு விளக்கம் கொடுக்க பிடிக்கவில்லை என்றாலும் கொடுத்தான். அதுவும் தஷாவுக்காக!! அவள் தான் முகம் வெளிறி போய் அமர்ந்து இருந்தாளே!!
“இங்கே பாருங்க வாத்தி… ஹான்… ஹெச்ஓடி.. இவங்களுக்கு கையில ஒரு சின்ன விபத்து. எல்லாம் நம்ம ஆளுக வேலை தான்!! அப்போ நாம தாம்ல பார்த்துக்கணும்!! அதனால இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு இவங்க வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி வந்ததா தான் ரெக்கார்டு இருக்கனும்!! மாசம் மாசம் சம்பளம் டான்னு அவங்க அக்கவுண்டுக்கு போயிடணும்!! இதுல ஏதாவது மாற்றமும் நடந்ததுனா???” என்று அவரை பார்க்க..
“இல்ல சார்… இல்ல சார் அதெல்லாம் ஒன்னும் நடக்காது. மேடம் வந்தாலும் சரி.. வராவிட்டாலும் சரி சம்பளக் கவர் அவர்களைத் தேடி போகும். கூடவே அட்டென்ஷூம் இருக்கும்” என்றார் மிக பவ்வியமாக.
“சரி நீ போகலாம்!!” என்றதும் இருவரையும் பார்த்துக் கொண்டே போனவரை சொடக்கு போட்டு அழைத்தவன் “இங்கன நடந்த விஷயம் இங்கனவோட மறந்திடனும்!! மறந்து இதுக்கு கண்ணு காது மூக்கு வச்சு வெளியில நீ சொன்ன…?” என்று முடிக்காமல் பார்க்க...
“அதுக்கப்புறம் பேசுறதுக்கு வாய் இருக்காதா சார்?” என்று அமைதியாக அவர் கேட்க..
“இல்ல… தலையே இருக்காது!!” என்றான் வெகு நக்கலாக…
அதற்கு பின் ஏன் அவர் அங்கே இருக்கப்போகிறார் தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடி தன் கேபினில் அமர்ந்ததும் தான் அவருக்கு மூச்சே வந்தது. வழுக்கைத் தலையில் வழிந்த வியர்வையை கர்சீப்பால் துடைத்து கொண்டே தண்ணீரை வேகவேகமாக அருந்தினார்.
அதன்பின் அவளைப் போகச் சொல்ல அவளோ விட்டால் போதும் என்று தன் கேபினில் அமர, மற்றவர்களுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியாவிடினும் அன்று முதல் ஹெச்ஓடி நீலமேகத்தின் பார்வையில் அவள் மரியாதையாக நடத்தப்பட்டாள். எப்பொழுதும் அலட்சிய பாவனையோடு அனைவரையும் வேலை வாங்கி… சொடக்கு போட்டு கூப்பிட்டு தன் வேலைகளையும் சேர்த்து பார்க்கச் சொல்லும் நீலமேகத்தின் இந்த நடவடிக்கையை மற்றவர்கள் அதிசயமாக வியந்து பார்க்க.. இவளுக்கு தான் ஈசனை கண்டால் கடித்துக் குதறும் வேகமும் ஆத்திரமும் வந்தது!!
ஒரு சைவ பிள்ளைய அசைவ பிள்ளையா மாத்திட்டான்!! ஈசா…. ஈஈஈ….
அவன் சொன்னது போல் இவள் வேலைக்கு வராமல் இல்லை. ஒருவேளை வேலைக்கு வராமல் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக அன்னையிடமும் தந்தையிடமும் இவற்றை எல்லாம் சொல்ல வேண்டி வரும்… அதுவும் ஈசனே நேரில் வந்து பார்த்து விட்டு சென்றதை கூறினால்… அவ்வளவுதான்!!
ஏற்கனவே சந்திரமதி பயத்தோடுதான் உலாவிக் கொண்டிருக்கிறார். இதையும் கேட்டால் அவ்வளவுதான் உடனே சொட்டையனோ.. தொப்பயனையோ பார்த்து நமக்கு கட்டி வைத்து விடுவார் என்று பயந்து அவள் வாயையே திறக்கவில்லை.
அதேபோல எப்பொழுதும் போல வருவதும் போவதும் கேபினிலேயே படுத்து அவ்வப்போது தூங்கும்போதுமாக அவளது நாட்கள் நகர்ந்து கொண்டே போக… இப்பொழுது கையில் போட்டிருந்த ஹேண்ட் சில்லிங்கை கூட கழட்டி விட்டாள். ஆனாலும் அவ்வப்போது சிறிது வலிக்கத்தான் செய்தது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் வேலை தரும்போது தரட்டும் என்று அமைதியாகவே நாட்களைக் கடத்தினாள்.
அவளை கட்டம் கட்டி தூக்க ஒருவன் வருகிறான் என்பதை அறியாமல்…
ஜார்ஜ் இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு வழியாக எழுந்து அமர்ந்து கொள்ள தக்க வண்ணம் முன்னேறியிருந்தான்.
அவனை வைத்து எவ்வளவு காரியம் சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்த சிங்காரத்திற்கு ஜார்ஜின் இந்த நிலைமை கவலை தான்!!
ஆனாலும் அதில் கூட தன்னுடைய சுய நலத்தை புகுத்தி தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வித்தை தெரிந்தவன் சிங்காரம்!! எனவே ஜார்ஜை பார்த்து பேசிவிட்டு அவனது மருத்துவ செலவை கட்சி சார்பாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு இன்னும் தன் மீதும் தன் கட்சி மீதும் பலத்த நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு வந்தான்.
இடையில் இரண்டு முறை ஈசன் அகத்தியா பக்கம் சென்று வந்தான். அவளை நேராக பார்க்கவில்லை என்றாலும் கல்லூரியை பள்ளியை சுற்றி வருவது போல அவளது கேபினை கடந்து செல்லும்போது ஒரு நிமிடம் தாமதித்து செல்லும் அவனது நடை!!
அவனது இந்த விசிட்டும்.. ஃப்ளிர்ட்டும் யாருக்கும் தெரியாது என்று அவன் நினைத்திருக்க அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட ஆத்மநாதன் சிங்காரம் இருவருக்குமே தெரிந்ததிருந்தது. இருவரும் வெவ்வேறு முடிவுகளை எடுக்கத் துணிந்திருந்தனர்.
அதில் சிங்காரம் முந்திக்கொண்டான்!! முந்தினவன் கை மந்திரவாள் அல்லவா?
ஆம்!! தஷாவை… ஜார்ஜ்க்குப் பெண் கேட்டு சந்திரசேகரன் இல்லத்திற்கு தன் படைகள் சூழ வந்து இறங்கினான் சிங்காரம்.
ஜார்ஜ்க்கு இதில் பிடித்தம் இல்லை. “எதுக்கு யா அந்த பொண்ண கட்டணும்?” என்று கேட்க..
“உனக்கு ஊரு புல்லா தொடுப்பு இருக்கிறது எனக்கும் தெரியும்லே.. ஆனாலும் அந்த பொண்ண தான் கட்டணும். அதை வைத்து ஆத்மநாதனை பழிவாங்க ஏகப்பட்ட பிளான் வெச்சிருக்கேன் தெரியுமாலே நானு?” என்றான்.
“அந்த பொண்ண கட்டுவதற்கும் ஆத்மநாதனை பழி வாங்குவதற்கும் என்னங்கயா சம்பந்தம்? எனக்கு ஒன்னுமே புரியலையே!!” என்று அவன் தலையை சொரிய…
“அதாம்லே நீ எனக்கு வாலா இருக்க.. நான் உனக்கு தலையா இருக்கேன்!!” என்று அவன் தலையில் தட்டியவன் “ஆத்மநாதன் இன்னும் எத்தனை நாளைக்கு எம்எல்ஏ வா இருக்க முடியும்லே? அவனுக்கு அடுத்தது அவனோட வாரிசுகள்தான் இறங்கும். அதுல பெரியவன் ஏதோ ட்ரெய்னிங் என்று வெளியூர் போயிட்டானு கேள்வி!! வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை… இப்போ அந்த பொண்ண உனக்கு பொண்டாட்டி ஆக்கி அவளையே சாட்சியா போட்டு அவ மூலமாகவே ஈசன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தா… கண்டிப்பா கேஸூ நிக்கும்!! எப்படியும் குறைந்தது நாலு வருஷம் தண்டனையை அவனுக்கு வாங்கி கொடுத்திட்டோம்னா அவனால எந்த தேர்தலிலும் நிற்க முடியாது பாருலே!! எப்படி என்னோட ஐடியாலே?” என்று அவன் கொக்கரிக்க…
கொக்கரிக்கும் சேவலை கொதிக்கும் சால்னாவில் போட்டு கொத்து பரோட்டாவுக்கு ஊற்றி திங்க அருவாவோடு ரெடியானான் ஈசன்!!
அதன் பின் அவனது குஸ்தி இடத்திலேயே அவனுக்கு வேலை பிடித்துக்கொள்ள.. 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது தஷாவை பார்த்து!! மாமியின் எண்ணம் அவனது மனதை பிராண்ட.. தனது புல்லட்டுடன் புறப்பட்டு விட்டான். காதலியை காண!!
அதுவும் காலையில் கல்லூரிக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் வந்து கொண்டிருந்த பேரூந்துக்கு முன்னால் சென்றவன் டிரைவரிடம் ஏதோ சைகை செய்ய… புரிந்து கொண்டவனோ வண்டி பிரேக் டவுன் என்று சொல்ல அனைவரும் கீழே இறங்கி நின்றனர்!!
இவன் எதார்த்தமாய் வருவது போல அங்கே வந்து டிரைவரிடம் பேசிவிட்டு வேற வண்டி ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியவன், வேறு எந்த வண்டியும் அவர்கள் பக்கம் வந்து விடாமல் கரெக்டாக வேலை செய்தான்!!
மற்றவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ ஆனா தாட்சாயணிக்கு புரிந்தது அவன் தான் வண்டியை ஏதோ சொல்லி நிறுத்தி இருக்கிறான் என்று!!
யாரும் பார்க்காதவாறு அவன் அருகில் மெல்ல சென்று அவனிடம் “ஏன் இப்படி பண்றேள்? எல்லாருக்கும் காலேஜுக்கு நேரம் ஆகுறதோன்னோ!!” என்றாள் எங்கோ பார்த்தபடி…
“உனக்கும் தெரியும்லே நான் உன்னை பார்க்கிறேனு. ஆனா நான் வந்தாலே நீ ஓடி ஒளியுற.. இல்லாத வேலையை காரணம் காட்டுற… உன்னை இப்படி பக்கத்துல பார்க்கணும்னு ஆசலே மாமி!! அதுவும் உன்னை பார்த்து ஒரு வாரம் வேற ஆயிடுச்சா? மனசு ஃபுல்லா நீ வந்து பிராண்ட ஆரம்பிச்சுட்ட!! அதான் இந்த ஈசனோடு சின்ன சித்து விளையாட்டு!!” என்று கூறியவன் கண்களில் கூலர் அணிந்து கொண்டு மற்றொரு பக்கம் திரும்பி இருந்தாலும் பார்வை என்னவோ அவளை தான் துளைத்துக் கொண்டிருந்தது அங்கம் அங்கமாய்!!
“அதான் பாத்தாச்சுல கிளம்புங்களேன்!!” என்று அவள் கெஞ்சாத குறையாக கெஞ்ச..
“அதையே கொஞ்சம் கொஞ்சி சொன்னா எப்படி இருக்கும்லே… ஸ்ஸ்.. ஜிவ்வுன்னு இருக்கும்!!” என்று சரசமாக வினவியவனை கண்டு இவள் இரண்டடி பின்னால் நிற்க…
அவனோ….
“கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் புல்லட்டு!!
ஆன் த வே யில் பாடிக்கலாம் டூயட்டு!!” என்ற பாடல் பாட…
“அய்யோ!! பெருமாளே!!” என்று அதிர்ந்த நின்றவளை கண்டுகொள்ளாமல் மற்றவர்களுக்கு சின்னச்சின்ன கேப்பை வரவைத்து அனைவரையும் அனுப்பியவன், தற்செயல் போல் வேண்டுமென்றே தாட்சாயணியை தேங்க வைத்து தன்னுடன் அழைத்து சென்றான் புல்லட்டில்!!
அதேநேரம் தாட்சாயணி வீட்டுக்குள் நுழைந்து இருந்தான் சிங்காரம் தன் படைகளோடு… அவளைப் பெண் கேட்டு!!
ஏலேய்… வருவோம்ல…
