நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!! பாகம் – 2

தித்திக்குதே – 18 

 

சிவன்யா யாருமற்ற அறையில் அமர்ந்து தனியாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அதியனுக்கோ தூக்கி வாரிப் போட்டது. 

பதற்றத்தோடு உள்ளே நுழைந்தவன் அவளுடைய தோளை அழுத்தமாகத் தொட்டான். 

அவன் தொட்டதும் நிமிர்ந்து பார்த்தவள் “வா வா… அதி…. இங்க பாரு பானு உனக்கு ஹாய் சொல்றா பாரு…. என்னடா நீ பார்த்துக்கிட்டே இருக்க…? அவளுக்கு ஹாய் சொல்லு….” என்ற சிவன்யாவைப் பார்த்து அவனுக்கோ இதயத்தைப் பிடுங்கி எரிதனலில் வைத்ததைப் போல இருந்தது.

“வாட்….? எ… என்னடி சொல்ற நீ…? இங்கே யாருமே இல்ல…. நீயும் நானும் மட்டும்தான் இருக்கோம்… நீ யார் கூட பேசிக்கிட்டு இருக்க…?” என அதிர்ச்சியாகக் கேட்டான் அதியன்.

“ஐயோ உன்னோட விளையாட்டை மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா…?” எனச் சிரித்தாள் அவள்.

“சிவன்யாஆஆ…..?” அதட்டினான் அவன்.

அவனுடைய அதட்டலில் மிரண்டு போய் அவனைப் பார்த்தாள் அவள்.

அவளுடைய மிரட்சியை உணர்ந்து தன்னை அடக்கியவன் அவளுடைய தோள்களை அழுத்தமாகப் பற்றி தன் முகத்தைப் பார்க்கச் செய்தவன், “நான் ஒன்னும் விளையாடல சிவன்யா…. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க…? இங்க யாருமே இல்ல… முதல்ல எழுந்திரு…” என்க,

அவனுடைய கரத்தை தட்டி விட்டவள் “ப்ச்… வாட் இஸ் திஸ் அதி….? குழந்தை பயந்து அழுறா…. இப்போ எதுக்காக கத்துற..? அமைதியா பேசு….” என அவனைத் திட்டியவள் மறுபக்கம் திரும்பி, “அச்சோ செல்லக்குட்டி பயந்துட்டீங்களா…? அதெல்லாம் ஒன்னும் இல்லடா….  அழக்கூடாது….” எனச் சொல்ல அவனுக்கோ தலை கிறுகிறுத்தது. 

ஒரு நிமிடம் தனக்குத்தான் எதுவும் தெரியவில்லையோ என அஞ்சி வேகமாக வெளியே வந்தவன் அந்த அறையின் வாயிலில் நின்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த திவ்யாவைக் கண்டு திகைத்தான்.

“அக்கா இங்க என்னதான் நடக்குது..? பானு எங்க…? அந்த ரூம்ல யாருமே இல்லையே… இவ என்ன இப்படி தனியா இருந்து பேசிக்கிட்டு இருக்கா…? எனக்கு எதுவுமே புரியல… எனக்குத்தான் யாரும் தெரியலையா….? இல்லன்னா இங்க என்ன தான் நடக்குது..? யாராவது சொல்றீங்களா…?” என அவன் தன் குரலை உயர்த்த அவனுடைய கரத்தைப் பற்றி வெளியே ஹாலுக்கு அழைத்து வந்தவர் அவனை சோபாவில் அமரச் செய்தார்.

“நீ பார்த்தது நிஜம்தான்பா….”

“பு… புரியல….” என்றவனுக்கோ குரல் உள்ளே போயிருந்தது.

“என் பொண்ணு இறந்து அஞ்சு வருஷம் முடிஞ்சு போச்சுப்பா…” என்றதும் அவனுக்கோ இதயம் நின்று துடித்தது.

“வாட்…? எ.. என்ன சொல்றீங்க…?” என அதிர்ந்து கேட்டவனின் முன்னே வந்து நின்ற திவ்யாவின் கணவரோ திவ்யாவை சமாதானப்படுத்த அவனுக்கோ எதுவுமே புரியவில்லை.

பெருமூச்சோடு அதியனின் அருகே அமர்ந்து கொண்ட ரகுவோ பேசத் தொடங்கினான்.

“பானு அவளோட மூணாவது பிறந்தநாள் அன்னைக்கே இறந்து போயிட்டா… அவளை ஹாஸ்பிடல் கொண்டு போய் காப்பாத்த எவ்வளவோ போராடினோம்… பட் அவளோட தலையில பலமா அடிபட்டதால ப்ளீடிங் அதிகமாகி அவளைக் காப்பாத்த முடியாம போயிருச்சு… எங்க பா… பாப்பாவ இழந்தது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு… தாங்கவே முடியாத அளவுக்கு எல்லாருமே துடிச்சு போயிட்டோம்… திவ்யா அண்ணி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்ததால அண்ணா அவளைப் பாத்துக்கிட்டாங்க… ஆனா சிவன்யா தன்னோட வலியை தனக்குள்ளேயே போட்டு புதைச்சுக்கிட்டா… பானு இறந்துட்டாங்கற உண்மைய அவளால ஏத்துக்கவே முடியல… 

இப்போ வரைக்கும் எங்க வீட்ல அவகூட பானுவும் இருக்கா… பானுவுக்கு எட்டு வயசு ஆயிடுச்சு அப்படின்னு சொல்லிட்டே இருப்பா. நாங்க எவ்வளவோ எடுத்து சொல்லிப் பாத்துட்டோம்…. அவளுக்குப் புரியவே மாட்டேங்குது… மீறி ஏதாவது அதட்டிச் சொன்னாலும் அழுது துடிச்சுப் போறா… முதல் ரெண்டு வருஷம் எவ்வளவோ ட்ரை பண்ணி முடியாம அப்படியே விட்டுட்டோம்….” எனக் கவலையாகக் கூறிக் கொண்டிருந்த ரகுவை வெறித்துப் பார்த்தான் அதியன்.

அவனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. சிவன்யா எவ்வளவு பெரிய மன நோயில் சிக்கி இருக்கிறாள் என்பது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.

பானுவின் இறப்பு மட்டுமல்ல அவள் அந்த வீடியோவை பார்த்ததும்தான் இந்த அளவு அவளுடைய மனதை பாதித்திருக்கக் காரணம் என சரியாக ஊகித்துக் கொண்டவன் மிகவும் வலித்த தன் தலையை ஒற்றைக் கையால் தாங்கிக் கொண்டான்.

நிஜம் எது என்பது கூடத் தெரியாது நிழலில் வாழ்ந்து கொண்டிருப்பவளின் மேல் கோபப்பட்டது வேறு அவனை உடைந்து போகச் செய்தது. 

விழிகளின் ஓரத்தில் கண்ணீர் கசிய ஆரம்பிக்க யாரும் பார்ப்பதற்கு முதலே அதனைச் சுண்டி எறிந்தவன் உடல் விறைத்து நிமிர்ந்தான்.

அந்த ஒரு கயவனால் எத்தனை பேர் தான் துன்பப்பட்டு விட்டார்கள்…? 

ஒருவனுடைய சுய லாபத்திற்காக… அவனுடைய கொடூரமான செயலிற்காக எந்த ஒரு தவறுமே செய்யாத ஒரு குடும்பம் இந்த அளவுக்கு பாதிக்கப்பட வேண்டுமா…?

அவனால் கொஞ்சம் கூட அந்த கொடுமையைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் கொதித்து எழுந்தது.

பைத்தியம் போல தனியறையில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்த சிவன்யாவின் குரலைக் கேட்டு உள்ளுக்குள் அனைத்தும் உடைந்து நொறுங்க சட்டென எழுந்து கொண்டவன் உள்ளே சென்று அவளை இழுத்து இறுகணைத்துக் கொண்டான்.

“ஹேய் எ… என்னாச்சுடா…” என திடீரென தன்னை வந்து ஆக்ரோஷமாக இழுத்து அணைத்துக் கொண்ட அதியனைப் பார்த்து அதிர்ந்து கேட்டாள் சிவன்யா.

அவனோ அவளுடைய கேள்விக்குப் பதில் எதுவும் கூறாது அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அழுது விட பதறிப் போனாள் அவள்

“அதிம்மா என்னடா….? என்ன ஆச்சு…? அக்கா எதுவும் உன்னைத் திட்டுனாங்களா..? யாராவது உன்னை ஏதும் சொன்னாங்களா…? இரு நான் என்னன்னு கேட்கிறேன்…” எனக் கோபமாகக் கூறியவள் அவனை விலக்கிவிட்டு வெளியே செல்ல முயல மீண்டும் அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் நிறுத்திக் கொண்டவன்

“அஞ்சு நிமிஷம் இப்படியே இரு பேபி…. எனக்கு இப்போ நீ வேணும் ப்ளீஸ்… எங்கேயும் போகாத….. எதுவும் பேசாத…. இப்படியே இரு…” என்றவன் அவளை அணைத்து கண்மூடி நின்றுவிட அவனுடைய அணைப்பில் பாந்தமாக அடங்கி நின்றாள் அவள்.

ஐந்து நிமிடம் முடிந்ததும் அவனுடைய கன்னத்தில் முத்தம் பதித்தவள் கிசுகிசுப்பான குரலில் “பானு பாப்பா நம்மளையே பார்த்துக்கிட்டு இருக்கா… வீட்டுக்கு போய் எவ்வளவு வேணும்னாலும் ஹக் பண்ணிக்கலாம்… இப்போ இது போதும் ஓகேவா…?” என்றவளைப் பார்த்து சரி என தலை அதைத்தவன் அவளை அறைக்குள் அமர வைத்துவிட்டு அவள் தனியாக பேசுவதை தன்னுடைய ஃபோனில் வீடியோ எடுத்தவன் பின் வெளியே வந்து அந்த அறைக் கதவைப் பூட்டினான்.

“உங்க யாருக்கும் கொஞ்சமாவது அறிவில்லையா? அவ எவ்வளவு மன அழுத்தத்துல தவிச்சு போயிருந்தா இறந்த ஒருத்தங்க இன்னும் இருக்கான்னு நம்பி தனிய பேசி சிரிச்சுக்கிட்டே இருந்திருப்பா…. அவளுக்கு ட்ரீட்மென்ட் எடுக்காம நீங்க இப்படியே வளர விட்டு இருக்கீங்களே….? ஷிட்….. அட்லீஸ்ட் நான் வந்த அன்னைக்காவது என்கிட்ட சொல்லி இருக்கலாமே…. இது எவ்வளவு பெரிய ஆபத்துன்னு உங்களுக்குத் தெரியாதா…? கொஞ்சம் கொஞ்சமா அவள டிப்ரஷனுக்குள்ள தள்ளி சூசைட் வரைக்கும் கொண்டு போய்விடும்..” 

“ஐயோ கடவுளே….” எனப் பதறினார் திவ்யா.

“உடம்புல இருக்க நோயை சீக்கிரமா குணப்படுத்தலாம்… ஆனா மனசுல வந்த நோயை குணப்படுத்துவது ரொம்ப கஷ்டம்… அஞ்சு வருஷமா என்னோட சிவன்யா இப்படித்தான் இருக்காளா…? அட்லீஸ்ட் ஒரு தடவையாவது அவள டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனீங்களா..?” என அவன் கோபத்தில் கத்த அழுகையோடு இல்லை என மறுத்தாள் திவ்யா.

“நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணோம் தம்பி… அவ எங்க கூட வரவே மாட்டேன்னு சொல்லிட்டா… கவுன்சிலிங் கூட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவளுக்கு கொடுக்க ட்ரை பண்ணோம் பட் அவ எதுக்குமே ஒத்துக்கல….  பிடிவாதம் பிடிச்சு ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்கிட்டா… அவளுக்கு ஏதாவது ஆயிருமோங்கிற பயத்திலேயே அவளை அவளோட இஷ்டத்துக்கு விட்டுட்டோம்… என்னோட ஒரு குழந்தை இல்லாம போயிருச்சு… என்னோட வளர்ந்த குழந்தையும் நிஜம் புரியாம இப்படி நிக்கிறா…. நான் என்ன தம்பி பண்ணட்டும்…?” என அழுதவரை அதற்கு மேலும் கடிந்து எதுவும் கூற முடியாது வேதனையோடு விழி மூடித் திறந்தான் அதியன்.

அடுத்த நிமிடமே அவர்களுடைய வலியும் புரிய, அவர்களை மீண்டும் அமரச் செய்தான்.

“உங்க பொண்ணோட சாவுக்கு காரணம் யாருன்னு தெரியுமா…?” எனக் கேட்டான் அதியன்.

“அந்த நாய் யாருன்னு தெரிஞ்சா கண்டம் துண்டமா வெட்டுவேன் தம்பி…” என்றார் பானுவின் தந்தை. 

“அவனை எனக்குத் தெரியும்….” என்றான் நிதானமான குரலில் அவன்.

அங்கிருந்த அனைவரும் நொடியில் ஸ்தம்பித்துப் போயினர்.

திவ்யாவோ ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார்.

பெருமூச்சோடு சிவன்யா தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்று விடாது அவர்களிடம் கூறியவன் அவர்கள் துடித்து கதறியதைக் கண்டு இறுகி நின்றான்.

தன் மகளுக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு கதறித் துடித்தாள் திவ்யா.

“ஐயோ… அவனா இப்படி பண்ணது…? அந்தப் பாவிக்கு நாங்க என்ன பாவம் பண்ணினோம்…? என்னோட சொந்த அண்ணா மாதிரிதானே கவனிச்சேன்… என் குடியையே கெடுத்துட்டுப் போயிட்டானே… என் பிள்ளைய காவு கொடுத்துட்டு இப்படி தவிச்சுப் போய் கிடக்கேனே… என்னால தாங்க முடியலையே… ஐயோ…” எனக் கதறினார் திவ்யா.

இடிந்து போய் அமர்ந்திருந்தார் திவ்யாவின் கணவர். உதிரம் கொதித்தது. நரம்புகள் புடைத்தன.

ரகுவோ சிலை போல அமர்ந்திருக்க தன்னால் முயன்ற அளவுக்கு அவர்களை தேற்றத் தொடங்கினான் அதியன்.

“போதும் நீங்க இத்தனை வருஷமா அழுது துடிச்சு கஷ்டப்பட்டது எல்லாமே போதும்…. இனிமே உங்கள கஷ்டப்படுத்தினவன கஷ்டப்படுத்தலாம்… தப்பு செஞ்சவங்க தான் வலி அனுபவிக்கணும்… தப்பே செய்யாத நீங்க எதுக்கு இவ்வளவு வலிய அனுபவிக்கணும்…? இதுக்கு மேல ஒரு சொட்டுக் கண்ணீர் கூட இந்த வீட்டில் இருந்து வரக்கூடாது…” என்றான் அதியன்.

வைராக்கியத்தோடு தன் பெண்ணின் மரணத்திற்காக நியாயம் தேடும் நோக்கில் தன் விழி  நீரைத் துடைத்தெறிந்தாள் திவ்யா.

“அந்த நிரஞ்சன தண்டிச்சே ஆகணும்.. நமக்கு இந்த ஒரு நிரஞ்சனைத்தான் தெரியும்… ஆனால் உலகத்துல இவனை மாதிரி கேடுகெட்ட நிரஞ்சன் இன்னும் நிறைய பேர் மறைஞ்சு வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க…. இவங்களோட சாயம் எப்போ எல்லாருக்கும் முன்னுக்கும் வெளுக்குதோ அப்போதான் இவனுங்க அடங்குவாங்க.. 

தப்பு மறைக்கப்படக்கூடாது நம்ம பானுவுக்கு நடந்த அநியாயத்தை வெளியே கொண்டு வரணும்… நம்ம மேல தப்பு இல்லாத போது அதை எதுக்காக மறைக்கணும்..?

அவனுக்கு ஏற்ற தண்டனையை என்னால வாங்கிக் கொடுக்க முடியும்.. அதுக்கு உங்க சப்போர்ட் நிச்சயமா எனக்குத் தேவை… உங்களால நான் சொல்றதுக்கு சம்மதிக்க முடியுமா..?” எனக் கேட்டான் அதியன்.

“அந்த பரதேசி நாய்க்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்னா என்னோட உயிரைக் கூட தர்றதுக்கு நான் தயாரா இருக்கேன்..”  என்றார் பானுவின் தந்தை.


💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *