காதல் கருவாயா
அத்தியாயம் 11
விடியற்காலைப் பொழுதில் கோவாவில் இனிதே அழகான செந்நிற சூரியன் அன்று மெல்ல எட்டிப் பார்த்து அனைவருக்கும் கதகதப்பை வழங்க முயற்சி செய்து கொண்டிருந்த நேரம், மெல்லத் தன் பூவிழி மலர்ந்து சுயவுணர்வுக்கு வந்தாள் ஆர்த்தி.
நேற்றிரவு இறுதியாக அவள் தடுமாறி கௌதமின் மீது விழுந்த வரை நிழலாக நினைவலைகளில் விழ, சட்டென எழுந்து தன்னை ஒருமுறை ஏறயிறங்கப் பார்த்தாள். ஆனால் தன் முந்தானை தன்னை முழுக்க சுற்றியிருந்தது மட்டுமல்லாது, கௌதமின் சட்டையும் அவள் மீது போர்த்தப்பட்டிருந்தது.
அதனைக் கண்டு அவளது எண்ணங்கள் தாறுமாறாகச் செல்லத் துவங்க, அவனைக் கண்டிக்கும் பொருட்டு அவனைத் தேடியபோது கௌதம் அங்கே இல்லை.
அவர்கள் தங்கியிருந்த பகுதியின் வார்டு ரோப் கதவு திறக்கப்பட்டதும், கௌதம் தான் வருகிறானென நினைத்து “உங்களுக்கு கொஞ்சமாவது…” என திட்டத் தொடங்கியவள் வந்தவர்களைக் கண்டு திகைத்துப் போனாள்.
ஆனால் ஆர்த்திக்கும் மேலான அதிர்ச்சி பாவனையோடு ஸ்வப்னா அங்கே நின்று கொண்டிருந்ததை விதிதேவனும் மௌனமாகக் கண்டு கழித்து சிரித்துக் கொண்டிருந்தானென்பதை சொல்லவா வேண்டும்?!
ஸ்வப்னாவுடன் அவளது நண்பர்களும் உள்ளே வந்து சற்று திகைத்தாலும், உடனே, “சாரி சிஸ்டர்.. யூ கேரி ஆன்..” என நமுட்டு சிரிப்புடன் தங்களது பகுதி நோக்கி வாயடைத்து நின்ற ஸ்வப்னாவையும் அழைத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர்.
‘அய்யோ.. இவங்க முன்னாடில்லாம் என் மானம் போச்சே..’ என மனதினுள் புலம்பியவாறு எழ முயன்றபோது கௌதம் வேறு உடையணிந்து கொண்டு உள்நுழைந்தான்.
அவளைப் பார்த்து புன்னகைத்தவனை கோபத்துடன் பார்த்தபடி, “நேத்து நைட் என்னாச்சு?! உங்க ஷர்ட் எதுக்கு என்மேல இருக்கு?” என அவனது சட்டையை சுருட்டி அவனிடம் விட்டெறிந்தவாறு கேட்கவும்,
சாவதானமாக தனது உடைகளை தன் பெட்டிக்குள் அடுக்கியபடி, “புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் நடந்துருக்கும்.. இதெல்லாம் சொல்லியாப் புரியணும்..” என ஆர்த்தியை நோக்கி ஸ்டைலாகக் கண்ணடித்துக் கேட்க, அதுவரையிருந்த கோபம் மாயமாய் கரைந்து சட்டென ஆர்த்தியின் முகம் சிவந்து விட்டது.
அவளது சிவந்த முகத்தில் தன்னைத் தொலைத்தவனாய் அவளை நோக்கி ஒரெட்டு வைத்தவனது காலடிகளைக் கண்டவள் மிரண்டு பின்வாங்கவும் நிதானித்தான் கௌதம். மனதின் ஓர் மூலையில் சிறியதாய் வலித்தது.
முகம் இருள, “பயப்படாத. நேத்து உனக்கு ஏதோ ஸ்மோக்கிங் அலர்ஜி மாதிரி வந்து குளிர்ல ரொம்ப நடுங்குன. அதான் என்னோட ஷர்ட்ட உனக்கு போர்த்தி விட்டேன். இப்ப டவுட் க்ளியர் ஆகிடுச்சுன்னா போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா. கிளம்பணும்.” என உணர்ச்சியற்றக் குரலில் கூறிவிட்டு கையோடு வாங்கி வந்திருந்த செய்தித் தாள்களை அமர்ந்து புரட்டிப் பார்க்கத் தொடங்கினான்.
தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள பாத்ரூம் சென்று கொண்டிருந்தவளை வழிமறித்து, “கௌதமை உன் கையில போட்டுக்கிட்டதா மனக்கோட்டை கட்டாத. அவர் என்னிக்கும் உனக்கு சொந்தமாக மாட்டார். ஹீ’ஸ் மைன்.” என வெறுப்புடன் மொழிந்தவாறு ஒயிலாக சாய்ந்து நின்றபடி கூறிய ஸ்வப்னாவிடம்,
“ஹேய்… உண்மையில…” என ஆரம்பித்து பட்டென தன் வாக்கியங்களைக் கூறாமல் நிறுத்திக் கொண்டாள். ‘ஓ… எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சுதுன்னு நினைச்சுட்டாள்லா..?! ஆனா நான் ஏன் இவக்கிட்ட உண்மைய சொல்லணும்..?! என்னை எவ்ளோ பாடுபடுத்திருப்ப.. இதை நெனச்சு நெனச்சே வெந்து சாவு..’ என மனதினுள் ஸ்வப்னாவைக் கறுவியவள் மேற்கொண்டு அவளை வெறுப்பேற்றும் விதமாக உடலை வளைத்து நெளித்து,
“யப்பா.. என்னமா பொரட்டி எடுத்துட்டார்..?! ரூம்க்கு போய் ஹீட்டர்ல குளிச்சா தான் சரிபட்டு வரும்..” என கைவிரல்களை சோம்பலாக முறித்தபடி ஸ்வப்னாவின் வெறுப்பிற்கு சற்று பெட்ரோல் ஊத்திவிட்டு முகம் கழுவத் தொடங்கினாள் ஆர்த்தி.
‘புஸ்ஸு.. புஸ்ஸு..’ என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவள், ‘உன்னை இந்தக் கோவாவிலயே சமாதி கட்டிட்டு என் அத்தானோட ஊருக்கு போகலைன்னா நான் ஸ்வப்னா இல்லடி…’ என உள்ளுக்குள் சபதமிட்டவள் வெறுப்பை உமிழும் பார்வையுடன் அங்கிருந்து தனது கூந்தலை சிலுப்பியவாறு நகர்ந்து சென்றாள்.
ஆனால் ஆர்த்தியின் மனதின் ஓர் மூலையிலும், ‘அப்படி நடந்திருந்தால் நன்றாகத் தான் இருக்கும்!!’ என்ற ஏக்கம் தேங்கியிருந்ததை சற்று உற்று நோக்கியிருந்தால் ஆர்த்திக்கு தன்னுடைய மனநிலை என்ன?! என்பதில் தெளிவு உண்டாகியிருக்கும்.
இரயில் நிலையத்தை விட்டு வெளிவந்ததும் ஓர் உயர் ரகக் காரொன்று வந்து ஆர்த்தியின் முன் சர்ரென வந்து நின்றது. கேள்வியுடன் அவள் அதைப் பார்க்கையில் ஸ்வப்னா அவளை அலட்சியம் செய்தவாறு,
“இந்த மாதிரி கார் என் அத்தான்கிட்ட எவ்ளோ இருக்குன்னு உன்னை மாதிரி தத்திக்கெல்லாம் அவர் சொல்லி பந்தா பண்ணிருக்க மாட்டார். அதனால நானே சொல்றேன். இது என் அத்தானோட பி எம் டபில்யூ செட்ல ஒன்னு. ஆ…ன்னு வாயப் பொளக்காம வந்து வண்டில ஏறு. இந்த மாதிரி சான்ஸ்லாம் எப்பவாவது தான் உன்னை மாதிரி அன்னாடங்காச்சிக்கு கிடைக்கும்.” என நக்கலாகக் கூறியபடி காரின் முன்பகுதியில் ஏறிக் கொண்டாள்.
அவளது வார்த்தைகளோ ஆர்த்தியின் மனதை வேறுவழியில் காயப்படுத்தி ரணமாக்கிக் கொண்டிருந்தது. மெல்ல ஸ்வப்னாவின் அருகில் வந்து கைகளை காரின் ஜன்னலில் பதித்து, “இவ்ளோ வசதி இருந்தும் என்ன புண்ணியம்..?! இந்த அன்னாடங்காச்சிக்கிட்ட சீர்வரிசைய புடுங்கித் தானே உங்க வீட்டுப் பொண்ணு கல்யாணத்த நடத்துனீங்க?! அதுனால இப்டி வாய்சவடால் அடிக்குறதுக்கு உனக்கு எந்த யோக்கியதையும் இல்ல. கடைசி நேரத்துல ஓசில அவர்கூட ஒட்டிக்கிட்டு வந்தது நான் இல்ல..” என நறுக்குத் தெறித்தாற் போல கூறிவிட்டு அமைதியாகப் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.
கௌதமிற்கும் அவர்களது விவாதவொலிக் கேட்டாலும், அவன் ஆர்த்தியிடம் எதிர்பார்த்ததோ வேறு வார்த்தைகளை. “இது என் புருஷனோட கார். எனக்குத் தான் அவர்க்கிட்ட முழு உரிமையும் இருக்கு” என அவள் கூறியிருக்க வேண்டுமென மிகவும் எதிர்பார்த்திருந்தான்.
தான் எத்தனை அலட்சியமாக இருந்திருந்தால் அவளது பூமனம் இத்தனை தூரம் வெறுப்பை உமிழும் வார்த்தைகளை உதிர்க்க வைத்திருக்குமென தன்னைத் தானே நொந்தவன் தன் கண்களின் கலக்கத்தை மறைக்க கூலர்ஸ்ஸை எடுத்து அணிந்தபடி அவனும் பின்பக்கமாக ஏறியமர்ந்தான்.
தன்னருகில் அமர்வான் என எதிர்பார்க்காத மெல்லிய அதிர்வை உணர்ந்த ஆர்த்திக்கு அந்நிமிடம் கோபம் கொள்ளத் தோன்றவில்லை. மாறாக மனது அந்நொடிகளை மிகவும் விரும்புகிறது எனப் புரிந்து குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.
ஆனால் முன்பக்கம் ஏறிய ஸ்வப்னாவிற்கு வாய் மற்றும் காதுகளிலிருந்து புகை வராதக் குறை மட்டுமே இருந்தது. தனதருகில் அமர்ந்து கார் ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் தாத்தாவைப் பார்த்து பார்த்து மெல்லியக் குரலில் முணங்கிக் கொண்டே வந்தாள்.
அங்கிருந்து தொடங்கிய அவர்களது மௌனப்பயணம் நேராக தன்னுடைய தோழர் தோழியரைக் காணும் வரை நீண்டிருந்தது ஏனோ ஸ்வப்னாவிற்கு வசதியாக இருந்தது.
ஏனெனில் கண்கொத்திப் பாம்பாய் அவள் கவனித்த வரை இருவருக்கும் எந்தப் பேச்சு வார்த்தையுமில்லை.. சிறு காதல் ஊடல் கண் ஜாடைகள் கூட இல்லையென்பதை உணர்ந்தவளுக்கு எங்கயோ இடித்தது.
அங்கே மிகப் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாசலில் இறங்கியதும் ஆர்த்தியை நோக்கி ஒருக் கும்பல் வந்ததென்றால், கௌதமை நோக்கி ஒருப் படையே ஆராவாரத்துடன் ஓடி வந்தது. “ஹேய்.. அங்கப் பாரு.. கௌதம் டி.. ஓ மைகாட்.. வா.. வா.. சீக்கிரம் வா..” என ஆங்காங்கே தேங்கி நின்ற கன்னியர் கூட்டமும் ஓடிவர அப்போது தான் ஆர்த்தியின் முகத்தில் பொறாமை எனும் நெருப்பு மெல்ல மெல்ல மூண்டது..
கௌதமின் கைவிரல்களைக் குலுக்கி சிலப் பெண்கள் பேசுவதும், சிலர் அன்பின் அடையாளமாக அணைத்துக் கொள்வதும் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் ஸ்வப்னாவிற்கு இதெல்லாம் சர்வ சாதாரணமாகத் தெரிய,
மெல்லத் தன் தோழியிடம் நெருங்கி, “ஹேய் மஞ்சு.. இவுங்கல்லாம் யாரு..?! அவர எப்டி இவுங்களுக்கெல்லாம் தெரியும்?!” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்கத் துவங்க,
“நீ பொண்ணு வீட்டு சைடுன்னா அவர் மாப்ள வீட்டு சைடுப்பா.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவரோட க்ளோஸ் ஃப்ரண்ட் தான் கௌதம். அதுனால தான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு நாங்க யாரும் வாயத் தொறக்கல..” என கன்னக்குழி விழ சிரித்தபடி மஞ்சுளா கூறிக் கொண்டிருந்த போது பேச்சு பேச்சாக இருந்தாலும் பார்வை முழுமவதும் கௌதமை சுற்றியே இருந்தது ஆர்த்திக்கு.
அக்கன்னியர் கூட்டம் தான் கௌதமிடம் தொட்டுப் பேசிக் கொண்டிருந்ததே தவிர, கௌதமின் செயல் ஏதும் அத்துமீறவில்லை என்பதை கவனிக்கத் தவறினாள் அவள்.
“அவுங்கள்லாம் ஸ்கூல்ஸ், காலேஜ்லருந்தே ஃப்ரண்ட்ஸ்..” என அவர்களைப் பற்றி மஞ்சுளா கூறிக் கொண்டிருக்கும் போதே, “ஹேய் அமுல்பேபி.. ஹவ் ஆர் யூ..?” என பேரழகி ஒருத்தி நளினமாக நடந்து வந்து கௌதமை இருக்க அணைத்துக் கொண்டாள்.
அதைக் கண்ட ஆர்த்திக்கு அப்போது தான் கௌதமின் மீது தனக்கிருந்த மொத்த உரிமைப் போராட்டமும் தலைதூக்கி ஆடியது. தன் தோழியைக் கண்ட ஆனந்தமும் கௌதமிடம் அப்பட்டமாகத் தெரிய,
“வாட் அ சர்ப்ரைஸ்… நீ வர மாட்டன்னு நெனச்சேன்.. பரவால்லயே..” எனத் தன் முத்துப்பற்கள் அழகாகத் தெரிய சிரித்த கௌதமிடம் அனைத்துப் பெண்களும் மயங்கிப் போனார்கள் என்றால் இங்கே ஆர்த்தியின் வயிறே கருகிப் பொசுங்கி விடுமளவிற்கு கோபக்கனல் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
‘யாரிவ.. அவளப் பாத்ததும் அப்டியே முப்பத்திரண்டு பல்லையும் காட்டிட்டு நிக்கறதப் பாரு.. ஒருநாளாவது என்கிட்ட இப்டி சிரிக்கத் தோணுச்சா இந்த மரமண்டைக்கு.. பாத்து… பாத்து.. வாய் சுளுக்கிக்கப் போகுது!! எனக்குன்னு வந்து சேருதுங்க பாரு.. கடவுளே.. இங்கயாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்ன்னு நெனச்சு வந்தேன்.. இங்கயுமா?!’ என உள்ளூர கௌதமை வசைபாடியவாறு தன் விதியை நொந்தபடி நின்றாள் ஆர்த்தி.
கௌதமை நெருங்கி நின்றவளோ, “ரொம்ப இளைச்சுட்டியேப்பா.. அப்பல்லாம் எவ்ளோ மசில்ஸ் இருக்கும் உனக்கு?!” என அவனது தோள்பட்டைகளை சற்று அழுத்திப் பார்த்து கூறியவளிடம் தன் கவனத்தைத் திருப்பினாள்.
தங்க நிறத்தில் அழகிய சிவான் சில்க்கில் இடை தெரிய மிக நேர்த்தியாக அணிந்திருந்தப் புடவையில் ஒருகுறையுமில்லை என்றாலும் கௌதமிற்கு இணையான வளர்ச்சியில் நின்றவளைக் கண்டு ஆர்த்தியின் மனமும் தடுமாறத் தான் செய்தது.
அழகிய மான் போன்ற விழிகளிலிட்ட மையே பல நூறு கவிதைகள் பேசியது கண்டு அங்குள்ள சிலக் காளையர்களின் கவனமும் சிதறுவதைக் கண்ட ஆர்த்தியும் இறுதியாக ஒப்புக் கொண்டாள் அப்பெண் பேரழகி தானென.
அதை மனமார ஏற்றாலும் கௌதமிடம் அவள் நெருங்கி நிற்பதை மட்டும் தன் மனம் ஏற்கவில்லை என்பதையும் உணர்ந்து பெரும் அவஸ்தைக்குள்ளானாள்.
ஆர்த்தியின் மனக்குமுறல் அவளது முகத்தில் தெரியாமல் மறைக்க முயன்றாலும் தன் மனைவியை அறிமுகப்படுத்தத் திரும்பிய கௌதமின் விழிகள் அதைக் கண்டு கொண்டு நகைக்கத் தொடங்கின.
அவளது முகமாற்றத்தையும் தன்னை சுற்றியுள்ள பெண்களின் மீது படிந்து மீண்ட அவளது கோபப்பார்வைகளையும் கொண்டு ஏதோ புரிந்தவன் போல,
“ஆஹா.. இப்டி முகம் சிவந்து போற அளவுக்கு கோபம் வருதா?! அப்ப உன்னை ஈஸியா என்வழிக்கு கொண்டு வந்துடுவேன்.. வாடி குட்டி பின்லேடி..” என செல்லமாகத் தன் மனதில் கிண்டலடித்தவாறு, “ஆர்த்தி…” எனக் கூப்பிட்டு அவளை தன்னிடம் வருமாறு அழைத்தான் கௌதம்.
அவனது பார்வையைத் தொடர்ந்து அனைவரும் ஆர்த்தியைப் பார்க்க, அவளுக்கோ மிகவும் கூச்சமாகிப் போனது. சங்கடத்துடன் நெளிந்தபடி அவனருகில் சென்று நின்றவளை,
“இவங்களத் தான் எங்கத்தான் வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க..” என ஸ்வப்னா ஆர்த்தியை அவமதிக்கும் நோக்கும் அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைத்தாள்.
