நினைக்க மறந்தாய்….. தனித்துப் பறந்தேன்…….

நினைக்க மறந்தாய்..... தனித்துப் பறந்தேன்

நினைக்க மறந்தாய்….. தனித்துப் பறந்தேன்…….

நினைக்க மறந்தாய்….. தனித்துப் பறந்தேன்…….

நினைக்க மறந்தாய்….. தனித்துப் பறந்தேன்…….

நினைக்க மறந்தாய்….. தனித்துப் பறந்தேன்…….

chapter – 1

      காலையில் கண் விழிக்கும் போதே சோர்வாக இருந்தது நம்ரதாவிற்கு. இரவு முழுவதும் குழந்தை ரம்யாவிற்கு இடைவிடாமல் காய்ச்சல் இருந்ததால், தூங்கவே முடியவில்லை. ரம்யா ஜுர வேகத்தில் சிணுங்கிக் கொண்டே இருந்தாள். படுக்கையில் படுக்கவேயில்லை. அவளை போட்டுத் தட்டிக் கொடுத்து நடுநடுவே மணி பார்த்து மருந்து கொடுத்து என இரவு முழுவதும் சரியாகயிருந்தது.

     

நம்ரதாவின் அம்மா சாந்தி கூட நம்ரதா மறுநாள் வேலைக்குப் போக வேண்டுமே என்று குழந்தையைப் பார்த்துக் கொள்ள வந்தார் தான். மற்ற நேரங்களில் பாட்டியிடம் ஒட்டுதலாகயிருக்கும் ரம்யா, இப்போது ஜுரத்தில் அம்மாவை விட்டு நகர மறுத்தாள். சாந்தி, அவளை நம்ரதாவிடம் இருந்து தூக்கியதும் சத்தமாக அழ ஆரம்பித்தாள். நம்ரதா தான் கடைசியில் தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அம்மாவைப் படுக்க அனுப்பி வைத்தாள்.

   

   இப்போதே மணி ஏழாகிவிட்டது. ஒன்பது மணிக்கு நவி மும்பையில் இருக்கும் அவளது ஐ.டி கம்பெனிக்கு போக வேண்டும். இன்று ஒரு புதிய ப்ராஜக்ட் பற்றி முடிவெடுப்பதற்காக சென்னையில் இருந்து டெக்னிக்கல் டைரக்டர் தீப் வருவதாக நேற்றே அவளுக்கு செய்தி வந்துவிட்டது. இந்த ப்ராஜக்டிற்கு, அவள் தான் ப்ராஜக்ட் லீட் என்பதால் அவள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். அதனால கண்டிப்பாக இன்று லீவு எடுக்க முடியாது.

  

    ‘கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ளேன்’ என்று கெஞ்சிய உடலை அலட்சியப்படுத்தி எழுந்து குளியலறைக்குள் சென்றாள். சிவந்து களைத்திருந்த கண்கள், வாடிய முகம், கலைந்த தலை எதையும் கவனிக்கவில்லை. மளமளவென்று பல் துலக்கி, குளித்து, பதினைந்து நிமிடங்களில் வெளியே வந்தாள்.

   

   இரவு முழுவதும் அனத்தியதிலும், மருந்தின் உதவியாலும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் ரம்யா. தொட்டுப் பார்த்ததில் ஜுரம் கூட இப்போது இல்லை. துறுதுறுவென்று இருக்கும் செல்லகுட்டி, நேற்று உடம்பு சரியில்லையென்றதும் என்னமாக படுத்திவிட்டது? குழந்தையை அன்புடன் பார்த்து செல்லமாக கடிந்து கொண்டே பீரோவில் இருந்து உடை எடுக்கத் திரும்பினாள்.

    

  கையில் கிடைத்த சுடிதாரை எடுத்து மளமளவென்று அணிந்து கொண்டு, குட்டையாக வெட்டியிருந்த முடியை வாரி போனிடெயில் போட்டு நெற்றியில் ஒரு பொட்டை ஒட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

   

   இப்போதே மணி ஏழரை ஆகிறது. மும்பையின் ட்ராபிக்கில் நீந்தி காரில் செல்ல நேரம் அதிகம் ஆகும் என்பதால் மெட்ரோவில் தான் செல்வாள். அவள் வீடு பாந்த்ரா மெட்ரா ரயில் நிலையத்தின் அருகில் இருந்ததால் இது வசதியாக இருந்தது.

   

   சமையலறையில் அம்மா அவளுக்கு மதிய உணவை டப்பாவில் போட்டபடியே காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் “என்னம்மா! இன்னிக்கு சீக்கிரம் போகணும்னு சொன்னியே! நான் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். ரமிக்குட்டி எப்படி மா இருக்கா?” என்று கேட்டார்.

   

   டைனிங் டேபிள் அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தபடி “இப்போ நல்லா தூங்கறாம்மா! ஜுரம் கூட இப்ப இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் உங்களுக்கு ரெஸ்ட் குடுப்பான்னு நெனைக்கிறேன். அப்பா எங்கம்மா?” என்று பதில் சொன்னாள் நம்ரதா.

   

   “அப்பா வாக்கிங் போயிட்டு அப்படியே காய் வாங்கிட்டு வரேன்னாரு! அதான் லேட் ஆகுதுன்னு நினக்கிறேன். இந்தா இந்த டிபனை சாப்பிட்டு அப்புறம் காபி குடி. நைட் பூரா முழிச்சிருந்தே! கண்டிப்பா பசிக்கும்” டிபன் தட்டையும், காபி டம்ளரோடு அவள் அருகில் வைத்தபடி பேசினார் சாந்தி.

   

   வேண்டாம் என்று மறுத்துப் பேச வந்த வாயை, காலியாக இருந்த வயிறு அடக்கி விட, அம்மா வைத்த இரண்டு தோசைகளையும், காபியையும் இரண்டு நிமிடங்களில் காலி செய்து விட்டு அம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்களது அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து மடமடவென்று மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

     நெரிசலாக இருந்த மெட்ரோவில் ஒரு வழியாக இடம் பிடித்து பயண நேரம் ஒரு மணி நேரமும் நின்றபடியே கழித்து ஸ்டாப்பில் இறங்கிய போது உடம்பு தள்ளாடியது. மணியைப் பார்த்தாள். மணி எட்டு ஐம்பது மணியாகிவிட்டதே என்று மூச்சைப் பிடித்தபடி முன்னூறு அடி தூரத்தில் இருந்த அலுவலகத்தை அடைந்த போது மணி சரியாக ஒன்பது.

   

   தன்னுடைய கேபினுக்கு சென்று உடமைகளை வைத்துவிட்டு, தேவையான பைல்கள், நோட் பேட், லாப்டாப் மற்றும் செல்போனோடு போர்ட் ரூமுக்கு விரைந்தாள். தலை வாரி முகம் திருத்தக்கூட நேரமில்லை.

    

  போர்ட் ரூமில் நுழைந்தவள், இன்னும் யாரும் வரவில்லை என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு பைல்களை அடுக்கி வைத்துவிட்டு லேப்டாப்பை ‘ஆன்’ செய்தாள். அவள் தரவேண்டிய ப்ரஸண்டேஷன் அதில் தான் இருந்தது. ‘சரி எல்லோரும் வருவதற்குள் ஒரு முறை சரி பார்த்து விடுவோம்’ என்று நினைத்து அதில் மூழ்கியவள் போர்ட் ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் எல்லோரும் வந்து விட்டனர் என்று நினைத்து வரவேற்கும் பாவனையில் எழுந்து நின்று இதழ்களை விரித்தவள் திகைத்து நின்றாள். எதிரில் நின்றிருந்தவரைப் பார்த்ததும் கண்கள் நிலை குத்தி நிற்க, அதிர்ச்சியில் வாய் திறந்திருக்க அசைவற்ற சிலையானாள்.

   

   ஏனென்றால் போர்ட் ரூம் வாயிலில் நின்று கொண்டிருந்தது அவள் முன்னாள் கணவன் ப்ரதீப். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சந்திப்பு.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *