அறையில் உட்கார்ந்து கொண்டு சிலாகித்து வாசித்து கொண்டு இருந்தான் சிவா.
காரணம் அலெக்சாண்டர் வாழ்க்கை வரலாறு அப்படி இருந்தது.
தைரியம் என்றால் உலகத்தில் இவர்தான் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
இப்போது போன் அடித்தது. போனை எடுத்துப் பார்க்க ராஜ்
எடுத்து காதில் வைக்க என்ன மச்சான் கெளம்பிட்டியா என்று குரல் கேட்டது.
இவன் பதிலுக்கு கெளம்பிட்டேன் உனக்காக காத்துட்டு இருக்கேன் என்று சொன்னான்.
காரணம் ராஜ்க்கு பொண்ணு பார்க்க போக வேண்டும்.இவனையும் அழைத்து போகிறேன்… என்று இவனிடம் சொல்லி இருந்தான்.
சரிடா அஞ்சே நிமிஷத்தில வந்துடறேன் என்று சொல்லி விட்டு ராஜ் இணைப்பை துண்டித்தான்.
இவன் வீட்டைப் பூட்டி வெளியே போய் அவனுக்காக காத்திருந்தான்.
கார் வந்து நின்றதும் இவன் போய் முன் சீட்டில் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது.
இவன் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டே கையில என்னடா புக் என்று ராஜ் கேட்டான்.
இவன் மகிழ்ச்சியாக அலெக்சாண்டர் பிறந்ததிலிருந்து இவன் படித்தவரை சொல்லிக் கொண்டே வர அவன் ஆர்வமாக கேட்டுக்கொண்டு வந்தான்.
பிறகு மணப்பெண் வீட்டுக்கு வந்ததும் இவர்கள் இருவரும் சேர்ந்து இறங்கி நிற்க பின்னால் இருந்த ராஜீன் பெற்றோர் இறங்கி முன்னால் போனார்கள்.
வரவேற்பு எல்லாம் முடிந்து இவர்கள் இருவரும் சேர்ந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருக்க பெரியவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ராஜ் அவனுடைய அம்மா காதில் பொண்ணிடம் கொஞ்சம் பேசனும் என்று சொன்னான்.
அவர்களும் மணப்பெண் திவ்யாவின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இவனை அனுப்பி வைத்தனர்.
ராஜ் எழுந்து போய்விட சிவா மட்டும் தனியாக தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தான்.
பத்து நிமிடம் கழித்து ராஜ் இவனிடம் திரும்பி வந்தான்.
இவன் ஆர்வமாக அவனிடம் என்ன ஆச்சு என்று கேட்டான்.
அவன் மகிழ்ச்சியாக
திவ்யாவுக்கும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்ன்னு சொல்லிட்டா என்று சொன்னான்.
இவன் யோசித்துப் பார்த்தால் அதெப்படி வெறும் பத்து நிமிடம் மட்டும் பேசிவிட்டு ஒரு ஆணை முழுதாக அறிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.
இப்போது இவன் கையில் இருந்த புத்தகத்தைப் பார்க்க இவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
காரணம் பலநாள் திட்டமிட்டு ஒரு சேனையை வைத்துக்கொண்டு திட்டமிட்டு போரில் வென்றதைவிட வெறும் பத்து நிமிடம் பேசிய ஒருவனை நம்பி எந்த திட்டமிடுதலும் இல்லாமல் தன்னுடைய எதிர்கால வாழ்க்கையை ஒப்படைத்த திவ்யாவின் தைரியம் எல்லாவற்றையும் விட அதிகம் என்று இவனுடைய மனதில் தோன்றியது.
