சொல்லவா ஒரு காதல் கதை - கார்த்திகா கார்த்திகேயன்
சொல்லவா ஒரு காதல்
கதை_கார்த்திகா கார்த்திகேயன்
அத்தியாயம் 4
உன் நினைவுகளை
தேடித்
தவிக்கிறேன்
வேர் நீரினைத்
தேடுவதைப் போல!!!
தன்னுடைய ஆச்சியை ஒரு நொடி பார்த்தவள் “ஆச்சி, நீ நல்லா
இருக்கியா? உனக்கு நல்லா ஆகிருச்சா?”, என்று
கேட்டாள்.
“இது என்ன கேள்வி? நீ தானே சொன்ன? கவலை
இல்லாம சந்தோஷமா இருந்தா எனக்கு நல்லதுன்னு. என் கவலை உன் மாமனைப் பத்தி தான்.
அதான் இனி நீ அவனைப் பாத்துக்குவியே? அப்புறம் என்ன? அதான்
நல்லா ஆகிட்டேன்”, என்று சொன்ன அன்னலட்சுமிக்கு “கடவுளே நாம வேணுக்குன்னு
மயக்கம் போட்டதை இவ கண்டு பிடிச்சிறக் கூடாது”, என்று
வேண்டுதல் வந்தது.
இருவரும் பேசுவதை செல்வமும் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்டிப்பாக தன்னுடைய அம்மா ஏதோ சித்து வேலை பார்த்திருக்கிறாள் என்று அவனுக்கு
புரிந்தது.
ராகவி என்ன நினைக்கிறாள் என்று எண்ணி அவள் முகம்
பார்த்தான். அவளோ அன்னலட்சுமியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அரக்கு நிறத்தில் அழகான சில்க் சேலை அவள் உடலை தழுவியிருக்க
முதல் முறை அவன் கண்கள் அவளை அளவெடுத்தது. காலையில் முகூர்த்த புடவையில் கூட அவளை
அவன் பார்க்க வில்லை.
திருமணத்தின் போது அவனால் அவளை பார்க்க முடியவில்லை. என்னவென்றே
தெரியாத பதட்டம் அவனை ஆட்கொண்டது. இந்த வயதில் விடலைப் பையன் போல துடித்துக்
கொண்டிருந்தது அவன் மனது. கடைசி நிமிடம் ஏதாவது நடந்துருமோ என்று அவன் மனம் பயந்த
பயம் அவனுக்கு தான் தெரியும்.
விருப்ப மில்லாமல் தான் இந்த திருமணத்துக்கு ஒத்துக்
கொண்டான். தன்னுடைய அம்மா இல்லாமல் போனால் இந்த திருமணம் நடக்காது என்று கூட
எண்ணியிருந்தான். ஆனால் மணப்பெண்ணாக அலங்கரித்து அவளை அவனுடைய அருகில் அமர
வைத்ததும் அவனை அறியாமலே பல எதிர்பார்ப்புகள் அவனுக்குள் உருவாகியிருந்தன.
அந்த பதட்டத்தில் அவளை திரும்பிக் கூட அவன் பார்க்க வில்லை.
அவளும் அப்படி தான். திருமணத்தை எண்ணி, தனக்கு வரப்
போகும் கணவனை எண்ணி பல கற்பனைக் கோட்டைகளை கட்டியிருந்த ராகவிக்கு இந்த
சந்தர்ப்பத்தை எதிர்க் கொள்ள முடியவில்லை.
தனக்கு வரும் கணவன் தன்னை பூ போல் கைக்குள் வைத்து
பார்த்துக் கொள்ள வேண்டும். அன்பில் குளிப்பாட்ட வேண்டும் என்று எல்லாம் அவளுக்கு
ஆசை உண்டு. ஆனால் செல்வமோ வார்த்தைகளை எண்ணி தான் பேசுவான். அவனுக்கு பொறுப்பு
என்பது அறவே கிடையாது.
எதை எல்லாமோ யோசித்த படி இருந்த அவளும் செல்வத்தை பார்க்க
வில்லை. பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அவன் அமர்ந்திருந்தான். அவனுடைய வயது
கூட யாருக்குமே தெரியவில்லை. அவ்வளவு அழகாக இருந்தான்.
அப்போது ராகவியை பார்க்க முடியாமல் போனதால் தன்னுடைய
அன்னையுடன் பேசிக்கொண்டிருக்கும் அவளை இப்போது இமைக்காமல் பார்த்தான்.
இது வரை அவளை அவன் சேலையில் கண்டதே இல்லை. அவள் அதிகம் சேலை
கட்டியதும் இல்லை. அதனால் அவன் கண்களுக்கு புதிதாக தெரிந்தாள்.
கழுத்தில் இருந்த நகைகள், அவன் கட்டிய
கனமான மஞ்சள் தாலி என்று அவளுக்கு தனிப் பொழிவைக் கொடுத்தது.
“ராகவி நெற்றி
வகிட்டில குங்குமம் வைக்காம இருக்க பாரு. இனி ஒழுங்கா வைக்கணும்”, என்று
சொல்லிக் கொண்டே அங்கு குங்குமச் சிமிழுடன் வந்தாள் ஜெயா.
அவள் சொன்னதை காதில் வாங்காமல் நின்றவள் குங்குமம் எடுக்க
கையைக் கொண்டு சென்றாள். “மோதிர விரலையும், பெரு
விரலையும் சேத்து வச்சு எடுக்கணும்”, என்று ஜெயா
சொன்னதும் அதன் படியே செய்தாள். ஆனால் ஜெயாவிடம் ராகவி ஒரு வார்த்தை கூட பேச
வில்லை. ஜெயாவும் அதை பெரியதாக எண்ணவில்லை.
இப்போது நெற்றி வகிட்டிலும் குங்குமம் ஏற முதல் முறையாக
பொண்டாட்டியாக எண்ணி அவளைப் பார்வையிட்டான் செல்வம். அவன் பார்வையில் இது வரை
இல்லாத ஆர்வமும் உரிமையும் வந்திருந்தது.
“என்ன மாம்ஸ் கண்ணாலே எங்க அக்காவை ரசிக்கிறீங்க போலயே?”,. என்று
கிண்டல் செய்து கொண்டே அங்கு வந்தான் ராஜா.
“எனக்கு ஒரு சந்தேகம் ராஜா, நம்ம
மாமாவா கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னது? இப்ப
என்னன்னா பொண்டாட்டியை ரசிக்கிற மாதிரியே இருந்ததே”, என்றான்
குமார்.
“கிண்டல் பண்ணாதீங்க டா ரெண்டு பேரும். சும்மா தான்
பாத்துட்டு இருந்தேன்”, என்று அசடு வழிந்தான் செல்வம்.
இப்படியே அனைவரும் பேசிக் கொண்டிருக்க இரவு ஏழு மணிக்கு
மேல் ஆனது. மதியம் மண்டபத்தில் மீதமான உணவை இரவுக்கு உண்டு கொள்ளளலாம் என்று
முடித்து விட்டார்கள்.
மணமக்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அன்னலட்சுமியின் அண்ணன்
வீட்டுக்கு செல்லலாம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க “நான் கிளம்புறேன்”, என்றான்
செல்வம்.
அனைவரும் அவனை திகைப்பாக பார்த்தார்கள். இதை எப்படி
எல்லாரும் யோசிக்காமல் போனார்கள் என்று எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டார்கள்.
செல்வம் தான் அங்கே தங்க மாட்டானே. அப்படியிருக்க அவன்
இங்கே இருப்பான் என்று எப்படி அனைவரும் எதிர் பார்த்தார்கள்.
அப்போது விஜி எதுவோ மறுத்து பேச வர “சரி தம்பி கிளம்பு. உன்
பொண்டாட்டியையும் சேத்து கூட்டிட்டு போ. ராகவி மாமா கிளம்புறான் பாரு. அவன் கூட
போ”, என்றாள் ஜெயா.
“எதுக்கு ஜெயா அங்க போக சொல்ற? அவன்
வீட்டை எப்படி எப்படி வச்சிருக்கானோ?”, என்றாள்
விஜி.
“அது புருஷன் பாடு,
பொண்டாட்டி பாடு. அவங்களுக்கு தனிமை கொடுக்க தானே பேசிட்டு இருந்தோம். அவங்க
கொஞ்சம் தனியா தான் இருக்கட்டுமே. இங்க நாம இத்தனை பேர் வேற வீட்ல போய்
தூங்குறதுக்கு அவங்க கொஞ்சம் அங்க நிம்மதியா இருக்கட்டும்”, என்று
ஜெயா சொன்னதும் அனைவருக்கும் அதுவே சரி என்று பட்டது.
தன்னுடன் அவள் வருவாளா என்று குழம்பி போய் இருந்தான்
செல்வம். உள்ளே இருந்து எந்த அரவமும் இல்லை.
“ராகவி என்ன பண்ணுற? மாமா நின்னுட்டு
இருக்கான் பாரு”, என்று குரல் கொடுத்தாள் விஜி.
அடுத்த நிமிடம் ஒரு பையுடன் கிளம்பினாள் ராகவி. அதில் தான்
அவளுடைய துணிமணி எல்லாம் இருந்தது. அனைத்தையும் அள்ளிக் கொண்டு அவனுடன் நடையைக்
கட்டினாள்.
போகும் இருவரையும் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வார்த்தை கூட இருவரும் யாரிடமும் சொல்லாமல் தான் சென்றார்கள்.
செல்வம் முன்பே சொல்லியிருந்ததால் அவன் திருப்பி சொல்ல
வில்லை. ராகவியோ அனைவரின் மீது அதிக கோபத்தில் இருந்ததால் யாரிடமும் சொல்லாமல்
சென்று விட்டாள்.
“கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு ரெண்டும் எப்படி
நம்மளை கண்டுக்காம போறாங்க பாரு”, என்றாள் ராணி.
“விடு ராணி அவங்க சந்தோஷமா இருந்தா சரி தான். ராகவியை
நினைச்சு தான் பயமா இருக்கு. செல்வத்தை நினைச்சும் தான். ரெண்டும் எப்ப கோப படுவாங்கன்னே
தெரியாது”, என்றாள் ஜெயா.
அவனருகே நடந்து செல்லும் ராகவிக்கு வரும் வழியில் இருந்த
வீடுகளில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தது எரிச்சலைக் கொடுத்தது.
“புதுப் பொண்டாட்டியை காலனி வீட்டுக்கு கூட்டிட்டு போறியா
செல்வம்?”, என்று ஒரு பெண் கேட்க பூமிக்குள்ளே புதைந்து கொள்ளலாமா
என்று இருந்தது ராகவிக்கு.
“பேசாம மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வந்துருக்கலாமோ? நாங்க
ரெண்டு பேர் மட்டும் வந்தது தப்போ? கடவுளே இன்னைக்கு
நைட் என்ன நடக்கும்னு எல்லாரும் கற்பனை பண்ணுவாங்களே”, என்று
கடுப்பாக வந்தது.
ஒரு வழியாக வீடும் வர அவன் தான் கதவைத் திறந்தான். அவளோ
பக்கத்து வீட்டையை வெறித்து பார்த்த படி இருந்தாள்.
தன்னுடன் ராகவி இருப்பது அவனுக்கு கலவையான உணர்வுகளைக்
கொடுத்தது. தயக்கம், தடுமாற்றம், பயம், வெட்கம்
என்று வேறு உலகில் இருந்தான் செல்வம்.
அவள் உள்ளே வராமல் இருக்கவும் “உள்ள வா ராகவி. யாராவது
பாத்தா ஏதாவது கேப்பாங்க”, என்றான்.
அடுத்த நொடி உள்ளே நுழைந்தாள். இரண்டு அறைகள் தான் அந்த
வீடு. ஒன்று அடுப்படி. மற்றொன்று ஹால். வெளியே பாத்ரூம்.
தரையில் பாய் விரித்திருக்க அதை சுற்றி சில கதை புத்தகங்கள், நியூஸ்
பேப்பர் என்று இறைந்து கிடந்தது. ஒரு டேபிளில் டிவியும் அதை சுற்றி சிடி பிளேயர்
ரிமோட் கேசட் என்று எலெக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களாக கிடந்தது.
ஒரு டேபிள் பேன் மட்டுமே அங்கு இருந்தது. அங்கிருந்த கேங்கரில் அவனுடைய சட்டைகள்
வரிசையாக தொங்கிக் கொண்டிருந்தன. எது அழுக்கு, எது
துவைத்தது என்று கூட தெரியாமல் இருந்தது.
“குப்பைக் காடா கிடக்கே”, என்று
எண்ணியவள் வேறு எதுவும் யோசிக்காமல் ஒரு மூலையில் சென்று அமர்ந்தாள்.
அவளுக்கு எதிரே அமர்ந்தவன் இருவருக்கும் காற்று வரும் படி பேனை
திருப்பி வைத்தான்.
முதலிரவு, மணமக்களுக்கு பல பல எதிர்பார்ப்புகளை கொடுக்கும் அழகான
நாள். இங்கோ இருவர் மனமும் எதிரெதிர் பக்கம் பயணித்துக் கொண்டிருந்தது.
காதலர்களாக இருந்தால் எவ்வளவோ பேசியிருப்பார்கள். பெண்
பார்த்து முறைப்படி கல்யாணம் ஆகியிருந்தால் வெட்கமென்னும் போர்வையை மணமகள் மூடிக்
கொள்ள அதை கள்ளச்சாவி போட்டு திறப்பான் மணமகன்.
ஆனால் இவர்கள் திருமணத்தை எந்த வகையில் சேர்க்க. அவள் பிறந்ததில் இருந்து அவளை அவனுக்கு
தெரியும். அவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவனை அவளுக்கு தெரியும்.
ஆனால் திருமணம் என்ற பந்தத்தில் இருவரும் இணைவார்கள் என்று
அவர்கள் எதிர் பார்த்தார்களா என்ன? காலம் இருவரையும்
கோர்த்து விட்டிருக்கிறது.
யோசித்து யோசித்து இருவருக்கும் தலை வலி தான் வந்தது. அப்படியே
தரையில் சாய்ந்து தூங்கி விட்டாள் ராகவி.
தூக்கம் வராமல் விழித்திருந்தது செல்வம் மட்டும் தான்.
இப்படி யாருக்கும் நிம்மதி இல்லாமல் இந்த கல்யாணம் அவசியமா? அவள்
படிப்பென்ன? தன்னுடைய படிப்பென்னா? அவளிடம்
அவன் அதிகமாக பேசியது கூட இல்லையே. எதற்குமே பொருத்தம் இல்லாமல் இருவரும் பொருந்தி
இருப்பது என்ன சந்தோசத்தைக் கொடுக்கும் என்று அவனுக்கு புரியவில்லை. சிறிது
நேரத்தில் அமர்ந்த வாக்கிலே அவனும் தூங்க ஆரம்பித்தான்.
காலையில் விரைவாக கண் விழித்து விட்டான் செல்வம். அவள் வெகு
நேரம் எழுந்து கொள்ளவே இல்லை. சீக்கிரம் எழ வேண்டும் என்ற எந்த கட்டுபாடும் இல்லை
தான். அவனும் தினமும் ஒன்பது மணிக்கு மேல் தான் எழுவான். ஆனால் இன்று நிலைமை அப்படி
இல்லையே.
வாழ்க்கையே ஒரு போராட்டத்திற்கு தயாராக இருக்க அவனுக்கு
மனதில் பல கவலைகள். அவளோ எந்த கவலையும் இல்லாதது போல நன்கு உறங்கினாள்.
இரவு முதலில் ராகவி தூங்கி விட்டாலும் சிறிது நேரத்திலே
அவளுக்கு உறக்கம் பறந்திருந்தது. கண் விழித்தவளுக்கு விடி விளக்கு வெளிச்சத்தில்
கொஞ்சம் மங்களாக அனைத்தும் தெரிந்தது.
புதிதாக இருந்த இடம் முதலில் திகைப்பைக் கொடுத்தாலும் அதன்
பின் இன்றைய நிலைமை புரிந்தது. தலையை திருப்பி அவனைப் பார்த்தாள். வெறும் தரையில்
உறங்கிக் கொண்டிருந்தான் செல்வம்.
இருவரும் இது வரை அருகருகே அமர்ந்தது கூட கிடையாது. ஆனால்
இன்றோ ஒரே வீட்டில் ஒரே அறையில். நினைக்கும் போது சிரிப்பாக வந்தாலும் நிதர்சனம்
திகைப்பைக் கொடுத்தது மட்டும் நிஜம்.
சிறு வயதில் விவரம் தெரியா வயதில் நான் என் மாமாவைத் தான்
கட்டிப்பேன் என்று சொல்லியிருக்கிறாளாம். கல்யாணத்திற்கு வந்த ஒரு பெண்மணி
சொன்னதைக் கேட்டாள். எந்த மாமனைக் காட்டிக்க போற என்று கேட்டதற்கு செல்வம் மாமாவை
என்று சொன்னாளாம். அதெல்லாம் ராகவிக்கு நினைவிலே இல்லை.
அப்போது சொன்னது போலவே நடந்து விட்டதே. ஆனாலும் இவனுடன்
எப்படி ஒட்ட முடியும்? கணவன் என்பது தனி உறவு அல்லவா? புதிதாக
பார்க்கும் மனிதனுடன் கூட அந்த உறவு எளிதாக அமைந்து விடும். ஆனால் வருசக் கணக்கில்
கூட இருந்தவருடன் இந்த உறவை எப்படி எளிதாக ஏற்க முடியும்?
அது மட்டுமில்லாமல் செல்வம் ஒரு பெண்ணை நினைத்து இத்தனை
வருடங்களாக திருமணத்தையே தவிர்த்தவன் இனி தன்னை மனைவியாக எப்படி ஏற்பான்?
திருமணம் முடிந்து விட்டது என்று இருவரும் ஒரே வீட்டில்
இருக்கலாம். ஆனால் அதன் பின் சேர்ந்து வாழ்வது என்பது எளிதான விஷயமா? ஒரு
டாக்டராக இருந்து கொண்டு குழந்தை பிறப்பு எப்படி எதனால் என்று தெரியாதவள் அல்லவே.
அப்படிப் பட்ட உறவை அவனுடன் எப்படி ஆரம்பிக்க முடியும்? ஆனால்
அதை எண்ணும் போதே அவளுடைய அடி வயிற்றில் ஒரு கிளர்ச்சி உருவானது மட்டும் உண்மை.
இப்படியே யோசித்து படுத்தவள் மீண்டும் உறங்கி விட்டாள். எட்டு
மணி போல் அவளுக்கு விழிப்பு வர மெதுவாக கண் விழித்தாள். விருட்டென்று எழுந்து
அமர்ந்தவள் தான் எங்க இருக்கோம் என்ற நினைவில் தலையை சுழற்றினாள்.
பின் நேற்று நடந்தது அனைத்தும் நினைவில் வர எழுந்து நின்று
அவனைப் பார்த்தாள்.
வாசலில் அமர்ந்திருந்தவன் அவள் எழுந்த அரவம் தெரிந்ததும்
“பின்னாடி பாத்ரூம் இருக்கு. குளிச்சிட்டு வா?”, என்றான் செல்வம்.
“நான் இப்ப குளிக்கிற மனநிலையில இல்லை”, என்று
எங்கோ பார்த்து கொண்டு சொன்னாள் ராகவி. மாமா என்ற வார்த்தையும் காணாமல்
போயிருந்தது. அவனிடம் பேசுவதே அவளுக்கு தயக்கத்தைக் கொடுத்தது.
பல படங்களை பார்த்திருப்பதால் “குளிக்காம அங்க போக முடியாது
ராகவி. பின்னாடி தொட்டில தண்ணி இருக்கும். குளிச்சிட்டு வா. நேரம் ஆச்சு உனக்கு
பசிக்கும். வா அங்க போகலாம்”, என்றான்.
“நான் அங்க வரல”
“ஏன் என்ன ஆச்சு? பகல்ல அங்க
இருந்துட்டு நைட் இங்க வந்துரலாம். எல்லாரும் உன்னை தேடுவாங்க. கிளம்பு”
“உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? நான்
அங்க வரலைன்னா வரலை தான்”, என்று திட்டவட்டமாக சொன்னதும் அதிர்ச்சியாக அவளைப்
பார்த்தான்.
“ப்ச் முதல்ல நீ குளிச்சிட்டு வா. அப்புறம் பேசலாம்”, என்று அவன் சொன்னதும்
தன்னுடைய உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள். அவனுக்குமே மற்றவர்களை எப்படி
எதிர்க் கொள்ள என்று தயக்கமாக இருந்தது. அவள் அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்னது
ஒரு விதத்தில் இவனுக்கும் சந்தோசமே. “அப்பாடி இவ பேரைச் சொல்லி இங்கயே இருந்தா
யாரையும் பாக்க வேண்டி இருக்காது”, என்று எண்ணினான்.
குளியல் அறைக்குள் சென்றவள் அங்கே கிடந்த அவனுடைய அழுக்கு
துணியை எடுத்து ஒரு பக்கெட்டில் போட்டு விட்டு தண்ணீரை தலைக்கு ஊத்தினாள். அவன்
குளிக்கும் ஹமாம் சோப் மட்டுமே அங்க இருக்க ஒரு வித குறுகுறுப்போடு அதையே எடுத்து
போட ஆரம்பித்தாள். என்ன வென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை ஆக்ரமித்தது.
அங்கேயே உள்ளாடை, பாவாடை என
அணிந்தவள் ஒரு நைட்டியை அணிந்து கொண்டு வந்தாள். அழுக்கு துணியை துவைக்க வேண்டும்
என்ற எண்ணம் கூட இல்லாமல் அங்கேயே போட்டு விட்டு வந்தாள்.
புது மலர் போல வந்தவளை இமைக்காமல் பார்த்தான். அவளை பார்க்க
வேண்டும் போலவும் இருந்தது. பாக்க கூடாது என்றும் இருந்தது. தன்னை சமாளித்துக் கொண்டான்.
“கடவுளே அங்க போகக் கூடாதுன்னு இவ சொல்லணும்”, என்று
எண்ணிக் கொண்டே “அங்க போகலாமா?”, என்று கேட்டான்.
அவளோ அவனிடம் எதுவும் சொல்லாமல் தலையை துவட்ட ஆரம்பித்தாள்.
அதில் அவளுடைய மனது புரிய “ராகவி சொன்னா கேளு. அங்க போய்
முகத்தை காமிச்சிட்டு வரலாம். என்னை யாரும் கணக்குல சேக்க மாட்டாங்க. உன்னை எல்லாரும்
தேடுவாங்க. தலையை காமிச்சிட்டு வரலாம். வா”, என்று
சொல்லும் போது அவன் குரலில் சிறிது அதட்டல் இருந்தது.
“இப்ப எதுக்கு அங்க போகணும்னு குதிக்கிறீங்க? அங்க
எதுக்கு போகணும்?”
“என்ன பேசுற நீ? அதான்
தேடுவாங்கன்னு சொல்றேன்ல?”
“உங்களுக்கு நான் சொல்றது புரியுதா புரியலையா? நான்
தமிழ்ல தான சொல்றேன்? இந்த வீடு தானே உங்க வீடு? நீங்க
இங்க தானே இருக்கீங்க? அப்ப நானும் இங்க தானே இருக்கணும்? நேத்து
கல்யாணம் முடிஞ்சது, இங்க வந்தோம். அப்ப இங்க தானே இருக்கணும்”
“அப்ப சாப்பாடுக்கு என்ன பண்ண?”
“அதை நாம தான் பாக்கணும். நீங்க இத்தனை நாள் எப்படி
சாப்பிடுவீங்க?”
“கடைல சாப்பிடுவேன்”
“எனக்கும் இன்னைக்கு கடையிலே வாங்கிட்டு வாங்க. தேவையான
பொருள் வாங்கின அப்புறம் நானே சமைக்கிறேன்”
“எதுக்கு இவ்வளவு பிடிவாதம்? அங்க எல்லாரும்
இன்னும் காணும்னு நினைப்பாங்க. எனக்கும் அங்க போகுறதுக்கு தர்ம சங்கடமா தான்
இருக்கு. போயிட்டு வந்துரலாமே. இல்லைன்னா இங்கயே வந்துரப் போறாங்க”
“வந்தா வராங்க. வரட்டும் நான் பேசிக்கிறேன். பேச வேண்டியது
இன்னும் பாக்கி இருக்கு. எனக்கு பசிக்குது. நீங்க சாப்பாடு வாங்கிட்டு வாங்க”, என்று
அவள் கண்கள் பளபளக்க சொல்லும் போதே அங்கு சாப்பாடு கூடையைத் தூக்கிக் கொண்டு அங்கு
வந்தான் குமார்.
“வா குமார்”, என்றான் செல்வம்.
“மாமா, ஜெயா சித்தி உங்க ரெண்டு பேருக்கும் டிபன் கொடுத்து
விட்டாங்க. இந்த சாப்பாட்டு ராமி பசி தாங்க மாட்டாளாம்”, என்று சிரித்தான்
குமார்.
“உண்மை தான் குமார். இப்ப தான் ராகவி பசிக்குதுன்னு சொன்னா.
இந்தா ராகவி சாப்பிடு”, என்று செல்வம் அதை வாங்கிக் கொடுத்ததும் “அதை கீழ வைங்க”, என்றாள்
ராகவி.
அவன் கீழே வைத்ததும் “அண்ணா, இந்த சாப்படை
அப்படியே திருப்பிக் கொண்டு போங்க”, என்றாள் ராகவி.
அவள் அப்படி சொன்னதும் இருவரும் திகைத்து விழித்தார்கள்.
“இவ இவ்வளவு நேரம் சீரியஸா தான் பேசிட்டு இருந்தாளா?”, என்று
எண்ணிக் கொண்டே அவளை பார்வையிட்டான் செல்வம்.
“ராகவி, இன்னும் சாப்பிடலை தானே? எதுக்கு
திருப்பி கொண்டு போக சொல்ற? ஒழுங்கா எடுத்து சாப்பிடு”, என்றான்
குமார்.
“அண்ணா நான் சொன்னது சொன்னதுதான். நான் அங்க வர மாட்டேன்.
அங்க உள்ள சாப்பாடு எனக்கு வேண்டாம். நீ உன் சித்தி கிட்ட போய் சொல்லு. கல்யாணம்
முடியலைன்னா செத்து போக சொன்னாங்க தானே. இன்னைக்கு அவங்க ஆசைப் படி கல்யாணம்
முடிஞ்சிருச்சு. இப்ப நான் சொல்றேன். அவங்க பொண்ணு செத்து போயிட்டா. அப்படின்னு
போய் சொல்லுங்க”, என்று சொல்லி விட்டு அங்கே அமைதியாக அமர்ந்து விட்டாள்.
இருவரும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தார்கள். வீட்டில்
உள்ளவர்களுக்கு தகவல் சொல்ல கூடையை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றான்
குமார்.
செல்வமோ அசையாமல் அதே இடத்தில் நின்று அவளை பார்வையிட்டுக்
கொண்டிருந்தான். “இவளுக்கு இவ்வளவு கோபம் வருமா? எல்லார்
மேலயும் இவளால எத்தனை நாள் கோப பட
முடியும்? சின்ன பொண்ணு”, என்று
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்த பார்வைக்கு என்ன பொருள்
என்று புரியாமல் “நான் டிபன் வாங்கிட்டு வரேன்”, என்று
சொன்ன செல்வம் வெளியே நின்ற ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றே விட்டான்.
அமைதியாக அமர்ந்தவளுக்கு தன்னுடைய கல்யாணக் கனவுகளே மனதில்
வந்தது. “எவ்வளவு சந்தோஷமா நடக்கணும்னு ஆசைப் பட்டேன்? ஒரு
வெக்கம், பூரிப்பு, உற்சாகம்னு எதுவுமே இல்லையே?”, என்று
எண்ணி அவள் மனது சோர்ந்து போனது.
கல்யாணக் கனவு மேகம் போல கலைந்து போனது என்று தோன்றியது.
ஆனால் மேகம் கலைந்த பின்னர் இருக்கும் நிர்மலமான வானம் போல் தன்னுடைய வாழ்க்கையும்
தெளிந்த நீரோடையாக இருக்கும் என்று அவளுக்கு அப்போது புரிய வில்லை. கடவுள்
தனக்கென்று இருப்பதை தான் தருவார் என்றும் அப்போது அவளுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
கடைக்கு சென்ற செல்வத்தை அவனுடைய நண்பர்கள் பிடித்துக்
கொண்டார்கள். “மச்சி, புது மாப்பிள்ளை எப்படி டா இருக்க? கண்ணு
எல்லாம் சிவக்க காணோம்? நல்ல தூக்கமா?’, என்று அவனை
சீண்டினார்கள். அவனுடைய நண்பர்கள் அனைவருக்கும் ஐந்தாம் கிளாஸ் ஆறாம் கிளாஸ்
படிக்கும் பிள்ளைகள் இருக்க அவர்கள் சர்வ சாதாரணமாக அவனை கிண்டல் அடித்தார்கள். அவனுக்கு
தான் கூச்சமாக இருந்தது.
இதற்கு தான் அவனும் வீட்டுக்குள்ளே இருந்து விடலாம் என்று
நினைத்தான். ஆனால் அவள் பசிக்குது என்று சொல்லியும் அப்படி இருக்க முடியுமா?
“ஏண்டா நீங்க வேற ஓட்டுறீங்க? அக்கா மக
பசிக்குதுன்னு சொன்னா. இட்லி வாங்க வந்தேன்”, என்று
புன்னகையோடு சொன்னான் செல்வம்.
“இன்னும் என்ன டா அக்கா மக?
பொண்டாட்டினு ஆசையா சொல்லு. எத்தனை தடவை சொன்னோம்?
கட்டிக்கிற வயசுல ரெண்டு முறைப் பொண்ணு இருக்கும் போது இன்னும் கல்யாணம் பண்ணாம
இருக்கேன்னு? இப்ப தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு”, என்று
ஒருவன் சொல்லவும் “புது மாப்பிள்ளையை விடு டா. அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.
இன்னும் கொஞ்ச நாளைக்கு நம்ம கூட செட் சேர மாட்டான். இங்க நிக்க வச்சு நேரத்தைக்
கடத்தாதீங்க. நீயும் தான் டா, நாளைக் கடத்தாம சீக்கிரம் பிள்ளை பெத்துக்குற வழியைப்
பாரு”, என்று மற்றொருவன் சொன்னதும் இருவருக்கும் சாப்பாடு
வாங்கிக் கொண்டு ஓடியே விட்டான்.
குமார் வீட்டுக்கு சென்றதும் “என்ன டா கூடையை அப்படியே
தூக்கிட்டு வர? அவங்க இன்னும் எந்திக்கலையா?”, என்று
கேட்டாள் விஜி.
“அம்மா கடுப்படிக்காத. ராகவி சாப்பாடு வேண்டாம்னு
சொல்லிட்டா. இங்க வரவும் மாட்டாளாம்”, என்று சொன்னதும்
அனைவர் கவனமும் அவனிடம் திரும்பியது.
“என்ன குமார் சொல்ற? உன்
தங்கச்சி என்ன தான் சொன்னா?”, என்று கேட்டாள் ஜெயா.
“சித்தி கல்யாணம் பண்ணலைன்னா செத்துப்போன்னு நீங்க சொன்னது
அவளுக்கு கோபம் போல? செத்துப் போய்ட்டேன்னு நினைச்சிக்கோங்கன்னு சொல்றா”, என்று
அவன் சொன்னதும் அனைவரின் புருவமும் உயர்ந்தது.
செல்வம் சாப்பாடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் போது
மொத்த குடும்பமே வீட்டுக்கு வெளியே தான் இருந்தது. அவளை சமாதான படுத்த தான்
வந்திருக்கிறார்கள் என்று அவனுக்கு புரிந்தது. அமைதியாக போய் கூட்டத்தோடு
கூட்டமாய் அவனும் போய் நின்று கொண்டான்.
அவளை எப்படி சமாதானப் படுத்த என்று தெரியாமல் அனைவரும்
திணறினார்கள். அவளோ கோபம் முழுவதையும் முகத்தில் காட்டி எள்ளும் கொள்ளும் வெடிக்க
நின்றாள்.
காதல் தொடரும்….
