கொன்னது நீ தானா?
கொன்னது நீதானா?
(4)
உமேஷ், ‘வந்திருப்பவள் யார்’ என்று சொன்னதும் எந்தத் தடையும் இல்லை. அம்பிகா தங்குவதற்குத் தனியறை கிடைத்தது. உமேஷ் வெளியில் இருந்த சாளரத்திலிருந்த கட்டிலில் படுத்தார். வெகுதூரம் நடந்த களைப்பு அவரை தூங்க வைத்தது.
அறையின் உள்ளே இருந்த கட்டிலில் அமர்ந்த அம்பிகாவுக்கும் களைப்பு அதிகம் இருந்தாலும், அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள், தான் எடுத்துவந்த காகிதத்தைப் பிரித்தாள். இரத்தக்கரை படிந்திருந்தது வரிசையாகவும், நெடுவரிசையாகவும் எண்களால் நிரப்பப்பட்டிருந்த அந்தப் காகிதத்தை அம்பிகா உற்றுப்பார்த்தாள்.
1 2 3 4 5 6 7 8 9 10
ஆ 22 37 60 90 162 113 45 9 15 42 9
அ 32 4 27 46 74 111 200 140 56 11 4
அம்பிகாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இந்த எண்கள் எதைச் சொல்கின்றன ஆ, அ என்றால் என்ன அர்த்தம்?
தாமிரபரணிக்கரையில் மேடும் பள்ளமான இடத்தில் நடந்ததால் அவளுக்குக் களைப்பு மிகுந்து கண்கள் சொருகின. அந்த எண்கள் அவளின் மனதில் பதிந்தன. துண்டுக் காகித்தை தனது கைப்பையில் வைத்துவிட்டு அப்படியே படுத்தாள். சற்று நேரத்தில் தூங்கிப் போனாள்.
அம்பிகாவால் வெகுநேரம் தூங்க முடியவில்லை. ஒன்றரை மணி நேரம் தூங்கியவள் சட்டென்று விழித்தாள். வெளிச்சம் லேசாக சாளரத்தின் வழியாக வந்து கொண்டிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்தவள் ஜன்னல் அருகினில் சென்று ஸ்கிரினை விலக்கினாள். சற்று தூரத்தில் பெருமாள் கோயில் தெரிந்தது. சிறிய வயதில் அவள் அங்கு சென்றது ஞாபகம் வந்தது. ஆலயத்தினுள் இருக்கும் குலேசகர ஆழ்வார் ஞாபகமும் வந்தது. ‘ராஜாங்கமே வேண்டாம்’ என்று பெருமாளின் காலடியில் இருந்து அவர் செய்த இலக்கியசேவையும் ஞாபகம் வந்தது. ‘அரம்பையர்கள் சூழ, வான்ஆளும் செல்வமும் மண்ணரசும் எனக்கு வேண்டாம். பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆகவேண்டும்’ என்று பாடிய அவரை அம்பிகாவின் மனது அவரை ஒரு விநாடி எண்ணியது. ‘தெய்வமே எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நன்றாக முடிக்க எனக்கு அருள் தரவேண்டும்’ என்று எண்ணியவளைக் குலசேகரர் அன்புடன் பார்த்தார் அம்பிகாவுக்கு புதிய வெளிச்சம் பிறந்தது.
ஆ, அ என்று அந்தக் காகிதத்தில் எழுதி இருந்து அவளுக்கு ஞாபகம் வந்தது அ என்பது இறந்துபோன அருணாக இருக்குமோ? அப்படியானால் ஆ என்பது யாரைக் குறிக்கிறது? இதை எழுதியது யார்? இறந்து போன அருணின் எழுத்தாக இருக்குமோ? மீண்டும் கடிதத்தை எடுத்தவள் இது என்ன கணக்கு? அ என்று எழுதப்பட்ட எண்களின் கூட்டுத் தொகை குறைவாக இருக்க, அது சுழிக்கப்பட்டும் இருந்ததற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அம்பிகா மீண்டும் யோசித்தாள்.
அவளுக்குப் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஞாபகம் வந்தது. அருணின் விலாசமும் ஞாபகம் வந்தது.
தான் தங்கியிருந்த அறையை விட்டு வெளியில் வந்தவள்,
“உமேஷ், போகலாமா?” என்றாள்.
“போகலாம் மேடம் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றார்.
இருவரும் வீட்டில் இருக்க அனுமதித்தவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தார்கள்.
“இங்கிருந்து பிரேமதேசம் எப்படிப் போகவேண்டும்?” என்றாள்
அம்பிகா.
உமேஷுக்கு புரிந்தது. இறந்தவனின் வீட்டில் சென்று விசாரிக்க விரும்புகிறாள் போலும்.
“இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். அவன் வீடு அங்கிருக்கும் கைலாசநாதர் கோயிலுக்கு அருகில்தான். நான் ஏற்கனவே போய் விசாரித்து விட்டேன்”
“உமேஷ், நாம் உடனே அங்கே போகவேண்டாம்.
நீங்கள் ஏற்கனவே போய் இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். அவனின் நண்பர்கள் யாரிடமாவது விசாரிக்க வேண்டும்” என்றாள்.
“மேடம்,. இறந்து போன அருணுக்கு இந்த ஊர்தான். ஆனால் அவன் இந்த ஊரைவிட்டுப் போய் வெகு நாளாகிவிட்டது. படிக்கப்போகிறேன் என்று போனானாம் அப்புறம் பெங்களூரில் வேலை பார்த்தாக சொன்னார்கள்”
“பெங்களூரில் பிறகு விசாரிக்கலாம்.
அவனின் பள்ளித் தோழர்களை விசாரித்தீர்களா?”
“இல்லை மேடம்”
“சரி நான் விசாரிக்கிறேன். எப்பொழுதும் போல என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்றவள் முதலில் செல்ல சற்றுப் பொறுத்து அம்பிகாவை தொடர்ந்தார் உமேஷ்.
‘பிரேமதேசம் பிறகு செல்லாம். முதலில் இங்குள்ள பள்ளிக்கூடத்தில் விசாரிக்கலாம்’ என்று எண்ணியவள் அங்கு அருகில் ஏதேனும் பள்ளி இருக்கிறதா என்று பார்த்தாள்.
அம்பிகா எதிர்பார்த்தது போல பள்ளிக்கூடம் இருந்தது.
அதன் அருகே சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் எங்கிருக்கிறார் என்று விசாரித்தார்.
நல்ல வேளையாக அவர் அருகில் தான் இருந்தார். அவரின் வீட்டுக்கு சென்று
’‘தான் வந்த விவரத்தைக் கூற, வயது என்ன இருக்கும்?’
என்று கேட்டார். அவர் குரல் சற்று நடுங்கியது போலிருந்தது.
“இருபத்து ஐந்து இருக்கும்” என்றாள்.
“அப்படியென்றால் பதினைந்து வருடத்துக்கு முன்பு உள்ள ரிகார்டுகளை பார்க்க வேண்டும்” என்றார்.
“அதற்குப் பிறகும், பார்க்க வேண்டும் அவன் இங்கு பத்தாவது பிடித்திருக்க வேண்டும்” என்றாள் அம்பிகா.
“பெயர் என்ன?”
“அருண்”
என்றவள்,
”இப்பொழுது, காலை ஆறரை மணிதான் இருக்கும். பள்ளி திறந்திருக்காதே” என்றாள்.
“கவலை வேண்டாம் என்னிடம் சாவி இருக்கிறது. அதுமட்டுமல்ல. இது போன்ற வேலைகளுக்கு யாரும் இல்லாமல் இருப்பது நலம்” என்றார்.
இருவரும் பள்ளிக் கூடத்துக்குச் சென்றார்கள்.
பழைய மாணவர்களின் விவரங்கள் கணனியில் இருக்கிறதா? என்றபடி கணனியை ஆன் செய்தாள்.
சற்று நேரத்தில் அவளுக்கு வேண்டிய விவரங்கள் கணனியில் மின்னின,
அருணைப் பற்றிய விவரங்களைப் பார்த்தாள்.
அருண் அந்த வருடம் முதல் மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேறி இருந்தான்.
இது எப்படித் தலைமை ஆசிரியருக்கு மறக்கும்?
“அருணின் நண்பர்கள் யாராவது ஞாபகம் இருக்கிறதா?”
“எப்படி மேடம் இத்தனை வருடம் கழித்து ஒரு மாணவனின் நண்பர்களை நான் ஞாபகம் வைத்திருக்க முடியும்?”
“அருணுடன் படித்தவர்கள் பட்டியல் வேண்டும்.
இருங்கள் பார்க்கிறேன், என்று கணனியைக் கிளிக்கினாள்
“பள்ளியில் இரண்டாவது மதிப்பெண் பெற்றது?”
“ஞாபகமில்லையே” என்றார்.
பட்டியலைப் பார்த்த அம்பிகா
“ஆகாஷ்” என்றவள்,
“இங்கு பெண்களும் படிக்கிறார்களா?”
“ஏன் இல்லாமல்”
“அருணுடன் படித்த பெண்கள் பட்டியல்”
அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் கண்களில் சற்று பயம் தெரிந்தது
அம்பிகா அதைப் மீண்டும் பார்த்தாள்.
ஐந்து பெண்களின் பெயர் இருக்கிறது.
“இவர்கள் எங்கே?”
அதைப் பார்த்தவர்,
“எனக்குத் தெரியவில்லை” என்றார்.
ஒவ்வொருவராக விசாரிக்கத்தான் வேண்டும். முதலில் ‘அகிலா’ என்று நினைத்தவள், அவளின் விலாசத்தை எடுத்தாள்.
இந்த அகிலா என்ன செய்கிறாள்? என்றாள்.
“தெரியலையே”.
“சரிதான். நான் விசாரித்துக் கொள்கிறேன்” என்றவள், அந்த விலாசத்தைப் பார்த்தாள்.
“மேடம் நானும் கூட வரட்டா? என்றார் தலைமை ஆசிரியர்.
“இல்லை சரியாக வராது. நானே போய் விசாரித்துக் கொள்கிறேன். நான் இங்கு வந்து சென்றதை”
அவளின் முகபாவத்தை உணர்ந்து
“யாரிடமும் சொல்லமாட்டேன்” என்றார்.
வெளியில் வந்த அம்பிகா தெருக் கோடியில் உமேஷின் தலை தெரிந்ததைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, அகிலாவை சந்திக்கச் சென்றாள்.
தொடரும்
