கனலிடம் காற்றுக்கென்ன மோகம்
15. கனலிடம் காற்றுக்கென்ன மோகம்
வெய்யோன் தன் பொன்னிற கரங்களால் ஞாலமவளை அணைக்க ஆவல் கொண்டு வேகமாக உதயமாகினார். அறையில் படுத்துறங்கிக் கொண்டிருந்த தமிழின் கைப்பேசி இடைவிடாமல் அடித்து அவனை எழுப்பியது. அச்சத்தத்தில் எழுந்த தமிழ் தன் கண்ணை கசக்கிவிட்டு கைப்பேசியை எடுப்பதற்குள் அது மறுபடியும் அலற ஆரம்பித்தது. இதில் ஆது புரண்டு படுக்கவும், தமிழ் தன் கைப்பேசியை ஆதுவிற்கு தொந்தரவு தராமல் எடுத்துக் கொண்டு பால்கனி வந்து பார்க்கலானான்.
அவன் அலைப்பேசியில் மொத்தம் ஐந்து அழைப்புகள் செந்தூர் மேனேஜரிடம் இருந்து வந்திருந்தது. இக்காலை வேளையில் அவர் அழைப்பு ஏற்படுத்தியதால் குழப்புமுடனே அவருக்கு அழைக்க முற்பட.. அவரே மறுபடியும் அழைத்தார்.
அழைப்பை ஏற்ற தமிழ் “சொல்லுங்க ராஜன்.. எதுக்கு இவ்ளோ காலையிலையே கால் பண்ணிருக்கீங்க? என்று கேக்க அவரோ “தம்பி இங்க நம்ம புதுசா ஆரம்பிச்ச காளப்பட்டில இருக்கிற கட்டிடத்துல யாரோ பதினைந்து பேர் வந்து இது எங்க இடம்னு சொல்லி வம்பு பண்ணியதும் இல்லாம அங்க தொழிலாளர்களுக்காக போட்டுவச்சிருந்த செட்டையும் உடச்சு பொண்ணுங்க கிட்டயும் தப்பா பேசி மேல கைவச்சுருக்கானுங்க.. இதுல நம்ம கிட்ட வேலைபார்க்கறவங்க அவுங்களை அடிச்சு தட்டி கேக்கவும் பெரிய கைகலப்பு ஆகி ஒருத்தன் தலையில சைஸ் கல்லை எடுத்து போட்டுட்டானுங்க.. ஆனா யார் யார்மேல போட்டாங்கனு தெரியலை தம்பி.. ஆனா வம்பு பண்ணவங்கள்ல ஒருத்தனோட தலைலதான் அடிப்பட்டிருக்கு. இப்போ அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்க.. ஆனாலும் மீதி இருக்கவங்க இங்க யார் கல்லை போட்டதுனு எச்சா வம்பு பண்ணி அடிச்சிட்டு இருக்காங்க.. நீங்க கொஞ்சம் வாங்க தம்பி இங்கே” என்று ஒரே மூச்சில் பேசி அவன் மறுமொழி கூறுவதற்குகூட இடம் கொடுக்காமல் கட் செய்துவிட்டார்.
தமிழ் அவர் கூறியதை கேட்டு அவசரமாக தன் அறைக்குள் நுழைந்து தயாராகி ஆதுவை எழுப்பினான். எழுந்த ஆது “என்ன தமிழ் எங்கே கிளம்பீட்டீங்க இவ்ளோ நேரமா? என்று கேட்டவாறே சோம்பல் முறித்தாள். அவளிடம் “நான் இப்போ அவசரமா கோவைக்கு போகனும் ஆத்விகா. கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு காளப்பட்டி சைட்ல.. அதான் நான் இப்போவே போகனும்.. மதியம்க்கு மேல நீ தேவா கூட வந்துரு அங்க நம்ம வீட்டுக்கு..” என்று கூறி கீழே இறங்கினான்.
தமிழ் கீழே இறங்கவும் ஆது தூக்கம் மொத்தம் கலைந்தவளாக அவன் பின்னாடியே “இருங்க தமிழ்.. ஒன்னுமே சாப்பிடாம போறிங்க.. கொஞ்சம் ஒரு டம்ளர் பாலாவது குடிச்சிட்டு போங்க” என்று கூறியவாறே சமையலறையில் நுழைந்தாள். முன்தினம் மாலை கொண்டு வந்திருந்த மாட்டுப்பாலை காய்ச்சி ப்ரிட்ஜில் வைத்திருந்ததால் அதை எடுத்து அவசரமாக காய்ச்சி ஒரு கிளாசில் ஊற்றி வர, தமிழ் காரின் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
அவன் அவ்வாறு செல்வதைப் பார்த்த ஆது “இவனுக்கு போய் கொண்டுவந்தேன் பாரு.. என்னை சொல்லனும். பாவம்னு பார்த்து பால் எடுத்துட்டு வந்தா உதாசனப்படுத்திட்டு போறான்..” என்று தமிழை திட்டியவாறே அப்பாலை எடுத்துக் கொண்டு சமையலைறை சென்றாள்.
இதை தோட்டத்திலிருந்து பார்த்த பாட்டி இவர்களுக்குள் இருக்கும் ஊடலை அவரின் அனுபவத்தின் காரணமாக கண்டுகொண்டார். பின் ஒரு முடிவெடுத்தவராக மகியிடம் பேசவேண்டும் என எண்ணிக் கொண்டு இல்லம் நுழைய ஆது தன் அறைக்கு சென்று கொண்டிருந்தாள்.
பின் காலை ஏழுமணியளவில் ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். மகி வந்தவர் கிட்சனில் அன்றைக்கான உணவை சமையல் அம்மாவிடம் சொல்லிவிட்டு தாத்தா பாட்டிக்கான காலை உணவான கூழை கரைத்து எடுத்துக் கொண்டு சென்றார்.
தேவா எழுந்தவன் வீட்டில் தமிழ் இல்லாததைக் கண்டு ஆதுவிடம் “ எங்க ஆது தமிழை காணோம்?” என்று கேக்க… ஆது அவனிடம் “எர்லி மார்னிங் மேனேஜர் கால் பண்ணிருந்தாங்க.. காளப்பட்டி சைட்ல ஏதோ ப்ராப்ளம்னு சொன்னாங்க.. அதான் அவர் அப்போவே கிளாம்பிட்டாரு” என்று கூற தேவாவோ புருவ சுழிப்புடன் “காளப்பட்டி சைட்ல பிரச்சனையா? இப்போ யாரு பிராப்ளம் செய்யறது?” என்று யோசித்தவாறே… தமிழிற்கு கால் செய்ய முயற்சி செய்ய அதுவோ அணைத்து வைக்கப்பட்டதாக வந்தது.
ஆதுவிடம் திரும்பிய தேவா “நாம இப்போவே கிளம்பறோம் ஆது.. போய் ரெடியாகிட்டு வாங்க.. நான் அம்மா அப்பா தாத்தா பாட்டிகிட்ட சொல்லிட்டு வரேன்” என்று கூறி அவர்களிடம் சொல்ல சென்றான். ஆதுவோ தேவாவின் கூற்றை கேட்டு திவியை எழுப்ப சென்றாள்.
ஒருமணிநேரத்தில் கிளம்பிய மூவரும் ஹாலில் இருந்த பெரியவர்களிடம் சொல்லி செல்ல மகிமாவோ அவர்கள் அனைவரிடமும் “மூனு பேரும் பார்த்து போங்க.. சாப்பிடாமையே போறீங்க. வழிலையே சாப்பிட்டிறுங்க.. நானும் அப்பாவும் உங்க கூட வரலை. கொஞ்ச நாளுக்கு இங்க தாத்தா பாட்டிகிட்ட இருக்கிறோம்” என்று பாட்டி சொல்லியவாறே சொன்னார்.
இதைக்கேட்ட மூவரும் சரி என தலை அசைத்து கோவை நோக்கி பயணமானர். காரை வேகமாக செலுத்திய தேவா சரியாக இரண்டு மணிநேரத்தில் அவர்கள் வீட்டை அடைந்தான். இறங்கிய ஆது மற்றும் திவியிடம் “நீங்க கிளம்பி ஹாஸ்பிட்டல் போகறாதுனா போங்க.. இங்க நீங்க தனியாதான் இருக்கனும்.. எப்படியும் நானும் தமிழும் வரதற்கு லேட் நைட் ஆகலாம்.. சோ நீங்க ஹாஸ்பிட்டல் போனாலும் ஓகே இல்லை அத்தை வீட்டுக்கு போனாலும் ஓகே” என்று சொல்லி வீட்டிற்குள் கூட நுழையாமல் காளப்பட்டி சென்றான்.
மேலும் ஒன்றரைமணி நேரபயணத்திற்குப் பிறகு காளப்பட்டியை அடைந்த தேவா அவர்கள் கட்டும் கட்டிடத்திற்கு அருகே தமிழ் உள்ளானா? எனப் பார்த்தவாறே அங்கு நடந்த கலவரத்தில் எறியப்பட்ட தகரங்களை ஒதுக்கி விட்டு கவனமாக நடந்து கொண்டிருந்தான். இப்பொழுதும் தமிழின் எண் ஸ்விட்ஸ் ஆஃப் என்று வரவும் தமிழிற்கு ஏதோ என பயந்து “தமிழ்… தமிழ் எங்க இருக்க? நான் பேசறது கேட்குதா…” என்று அந்த பதினோரு மாடி கட்டிடத்தில் சத்தமிட்டவாறே ஒவ்வொரு மாடியாக துலாவிக் கொண்டிருந்தான்.
சரியாக பத்தாவது மாடியில் தமிழை சுற்றி பெரும் உடல் பருமன் கொண்ட நான்குபேர் அவனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவனை பார்த்ததும் ஆசுவாசமடைந்த தேவா விரைவாக அவனிடம் சென்று “என்னாச்சு தமிழ்? யார் இவுங்க? எதுக்கு வந்திருக்காங்க?” என்று கேள்விமேல் கேள்வி கேட்டான்.
தமிழோ தேவாவிடம் ஒரு மென் சிரிப்புடன் “இவுங்கள்லாம் தான் காலையில பிரச்சனை பண்ணினவுங்க.. சாருங்க யாருனு உனக்கு தெரிலையா தேவா? நம்ம மாறன் மாமாகிட்ட பிரச்சனை பண்ணின அதே சக்தி குரூப்” என்று சொல்ல தேவா அதிர்ச்சியுடன் தமிழைப் பார்த்தான்.
அவன் அதிர்ச்சியைப் பார்த்த தமிழ் சிரித்தவாறே அவனிடம் “நம்மளோட சின்னக் கவனக் குறைவால மறுபடியும் முளைச்சு வந்தவங்க.. அந்த சக்திதான் காலையில் ஆளுகளை அனுப்பி பிரச்சனை பண்ண சொல்லிருக்கான். காலையில் நான் இங்க வருவதற்கு முன்னே ராஜன் கொடுத்திருந்த புகார் அடிப்படையில போலீஸ் கூட்டிட்டு போய்ட்டாங்க.. அதுனால சக்தி சார்தான் இவுங்களை அனுப்பி பேரம் பேசுறாரு… என்ன பண்ணலாம்னு தான் நானும் யோசிச்சுட்டே இருக்கேன்.. நீ வந்துட்டீல இனி இதை நீயே பார்த்துக்கோ..” என்று கூறினான்.
தேவாவோ இதைக்கேட்ட பின் மிகவும் தெனாவட்டாக “ஓ நீ சொன்னா சரியாதான் இருக்கும்.. பத்தாதக்கு என்கிட்ட தெரிஞ்சுதான் ஒப்படைக்கிற போல..லாஸ்ட் டைம் நீ பாவம் பார்த்து மிரட்டிமட்டும் விட்டதோட பலன் நம்மையே மிரட்டி பார்த்திருக்கானுங்க.. இப்போ நம்ம கிட்ட வந்து கலவரம் பண்ணியதும் இல்லாம உன்முன்னாடியே இப்படி உட்கார்ந்திருக்கிறதுக்கு தண்டனை அனுபவிக்கனுமே தமிழ்” என்று கூறிக் கொண்டே தன் போனில் இந்தமாதிரி ஆட்களுக்கு என்றே அவர்களின் விசுவாசியான வீரா என்பவனை அழைத்து இக்கட்டிடத்திற்கு வர சொன்னான்.
வீரா என்பவன் இவர்களுக்கு யாரும் அறியாமல் உதவி செய்பவன்.. சுருங்க சொன்னால் இவர்களிடம் மோதும் நபர் கெட்டவன் என்கிற பட்சத்தில் அவர்களை கொலைகூட செய்பவன்.
அதிகமாக தமிழும் சரி தேவாவும் சரி யாரின் முன்னிலையிலும் வீராவுடன் தொடர்பு வைத்திருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால் தங்கள் முன்னால் இருப்பவர்கள் இனி இவ்வெளியுலகை காண இவ்விருவருக்கும் விருப்பம் இல்லையெனில் மட்டும் வீராவுடன் வெளிப்படையாகவே பேச்சுவார்த்தை நடத்துவர். இவர்களுக்கு இவ்வாறு வீராவுடன் நட்பு உள்ளது என்று யாவருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.
எப்பொழுதும் தேவா எடுக்கும் முடிவுகளிலும் சரி தமிழ் எடுக்கும் முடிவுகளிலும் சரி மற்றொருவர் தலையிடுவதில்லை. அதனால் தேவா வீராவை அழைப்பதிலையே புரிந்து கொண்ட தமிழ் ஒரு சிறு சிரிப்புடன் “முடிவு பண்ணிட்டியா? அப்போ அந்த சக்தியையும் நீயே பார்த்துக் கொள்கிறாயா?” என்று கேட்டான்.
தேவாவோ தமிழிடம் “அது மெயின் மேட்டர். அதுமில்லாம நீ ஆல்ரெடி முடிவு பண்ணிருப்ப.. சோ அதுல நான் தலையிடலை.. இத மட்டும் நான் பார்த்துக்கறேன்” என்று கூறி முடிக்ககவும் வீரா அவர்கள் இருக்கும் தளத்திற்கும் வரவும் சரியாக இருந்தது.
வந்த வீராவைப் பார்த்த தமிழும் தேவாவும் ஒரு சின்ன தலை அசைப்புடன் எழுந்து “பார்த்துக்கோ வீரா.. ஒருத்தனும் இனி நாளை விடியலை பார்க்க கூடாது” என்று சொல்லி கண்ணடித்தவாறே வெளியேறினர்.
இவ்வளவு நேரம் இவர்கள் இருவர் பேசியதைப் பார்த்தே பயத்தில் இருந்த சக்தியின் ஆட்கள் வீராவை பார்த்ததும் உயிர் பயத்தில் தமிழ் மற்றும் தேவாவிடம் சத்தமாக கெஞ்ச ஆரம்பித்தனர். ”தமிழ் சார் பிளீஸ் எங்களை காப்பாத்துங்க.. இனி யாருக்காகவும் நாங்க இந்த மாதிரி மிரட்ட வரமாட்டோம். இந்த நொடில இருந்து சக்திக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்று சத்தமாக கெஞ்ச தேவாவோ அவர்களிடம் திரும்பி “உங்களை கொஞ்சம் மிரட்டலாம்னு தான் வீராவ வர சொன்னோம். ஆனால் எப்போ நீங்க உங்க உயிர்பயத்துனால உங்க முதலாளிக்கு விசுவாசமா இல்லாம போனிங்களோ..அதுக்கே உங்களுக்கு தண்டனை கொடுக்கனும். சோ.. நீங்க சாகறது தப்பே இல்லை” என்று கூறி வீராவிடம் தலை அசைத்து வெளியேறினர்.
இவர்கள் கார் வாயிலை நோக்கி செல்வதற்கு முன்னே சக்தி ஆட்களின் அலறல் சத்தம் காதை எட்டியது. அதைக் கேட்டு இருபுறமும் தலை ஆட்டிய தேவா தமிழிடம் “இனி இவங்களோட பெரிய தலையை பார்க்கிறதுதான் நம்ம வேலை… அதை நீ பார்த்துக்கோ…இன்னிக்கு நம்ம இடத்துக்கு போகலாம்.. கொஞ்சம் மனசு மாறும்..” என்று கூறி ஒரு ஆசிரமத்திற்கு சென்றனர்.
தமிழும் தேவாவும் வீராவின் மூலம் கொல்லும் ஆட்களின் குடும்பங்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு ஹோம் மாதிரியான ஆசிரமத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது வீராவும் இன்று இறந்த மனிதர்களின் குடும்பத்தை இன்று இரவுக்குள் இங்கு கொண்டுவந்து விட்டுவிடுவான்.
அவ்வாசிரமத்தில் அனைத்து வயதினரும் உள்ளனர். சிறு குழந்தைகளை ஊரில் உள்ள பெரிய பள்ளியிலும் கல்லூரி செல்லுபவர்களை தரமான கல்லூரியிலும் சேர்த்துள்ளனர் தேவாவும் தமிழும். வயதானவர்களுக்காக ஒரு மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளனர். மற்றும் அங்கிருக்கும் நடுத்தர வயதுள்ள பெண்களுக்கும் கைத்தொழிலை கற்று கொடுத்து அவர்கள் உருவாக்குவதை ஆன்லைன் மூலம் சந்தை படுத்தி அவர்களுக்கு வருமானம் வரும் படியும் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் இவ்வாசிரமத்தைப் பற்றி அவர்கள் குடும்பத்திற்கு கூட தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் இருவரும்.
இங்கிருக்கும் அனைவருடனும் தமிழும் தேவாவும் பிள்ளைகளைப் போலவும் அண்ணன்களை போலவும் பாசமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் யாவருக்கும் தெரியாதது அவர்கள் கணவன் மற்றும் பிள்ளைகளின் சாவிற்கு காரணம் இவ்விருவர்கள் தான் என்று. அது தெரிந்தாலும் அவர்கள் பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
காரணம் இறந்தவர்கள் யாரும் சமுதாயத்திற்கோ இல்லை குடும்பத்திற்கோ நல்லது செய்தவர்கள் இல்லையே. உயிருடன் இருக்கும் போதும் இவர்களை மிக கீழ்த்தரமாக நடத்தியவர்கள் என்பதாலும் பாசமில்லா பிள்ளைகள் என்பதாலும் இவர்களுக்கு இருந்தும் ஒன்றே இல்லாமலும் ஒன்றே.
இப்பொழுது இவர்களின் கார் ஆசிரமத்தின் உள்நுழைவதை அங்கிருக்கும் தோட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதான அம்மா பார்த்துவிட்டு உள்நோக்கி “ராமா நம்ம பசங்க வந்திருக்காங்க பாருங்க” என்று கூறியதுதான் தாமதம் அனைவரும் வாயிலிற்கு வந்துவிட்டனர்.
அது மதிய நேரம் என்பதால் சிறுவர்கள் மற்றும் கல்லூரி செல்பவர்களை தவிர மற்றவர்கள் இருந்தனர். எப்பொழுதும் தேவாவும் தமிழும் அதிகமாக இங்கு வரமாட்டார்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்தாலும் அவர்களிடம் பாசமாக நடந்து அவர்களின் தேவைகளை கவனிப்பதால் அனைவரும் தமிழ் மற்றும் தேவாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.
இப்பொழுது இவர்கள் வரவும் வாயிலில் கூடிய வயதானவர்கள் இருவரையும் அன்புடன் வரவேற்று அவர்களுக்கான உடையை கொடுத்துவிட்டு உள்சென்றனர். இருவரும் வழக்கமாக இங்கு வந்தால் குளித்த பின்பே அவ்வாசிரமத்தில் உள்நுழைவர். காரணம் இங்கு வருவதற்கு முன்னால் இவர்களின் மூலமாக ஏதாவது ஒரு உயிர் போயிருக்கும் என்பதால்.
பின் இருவரும் குளித்து முடித்த பின் உள்ளே செல்ல அனைவரும் இருவரை சூழ்ந்து கொண்டு இருவரின் நலத்தை கேட்ட பின் இருவருக்கும் திருமணம் ஆனதைப் பற்றி கேட்க, இருவரும் அவர்களிடம் தங்கள் மனைவிகளின் புகைப்படத்தை காட்டி அவர்களிடம் அழைக்காததற்கு மன்னிப்பு கேட்டு அன்றைய நாளை மிகவும் சந்தோசமாக செலவழித்தனர்.
ஆனால் இவ்வாசிரமத்திற்கும் இவர்களின் துணைகளுக்கும் நேரப் போகும் விபரிதம் தெரிந்திருந்தால் இன்றைய கொலைகளை வீராவின் மூலம் செய்யாமல் இருந்துருப்பார்களோ இருவரும்….
