எனைச்சுடுமோ வெண்பனி
எனைச்சுடுமோ வெண்பனி…
சுடும் வெண்பனி: 15
திருமணத்திற்கு இன்னும் இருநாட்களே
இடையேயிருந்த நிலையில், அதியிடம் அவளது பெற்றோர்களைப்பற்றி பேசி திருமணத்திற்கு வர சம்மதம் வாங்க தனது தாய் மாமனைத் தூதுவிட்டான் மாறன்.
உறவுகளிலே ஆகச்சிறந்த உறவு தாய்மாமன் உறவாகும்..தாயைப் போன்ற தன்னலமில்லாத உறவு…தன் மருமகனின்
நல்வாழ்விற்காக எதையும் செய்ய சித்தமாக இருக்கும்
சண்முகம், காலை உணவை முடித்து விட்டு அதியிடம் பேசச் சென்றார்.
அப்பொழுதுதான் எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, அதி காபி கலக்கிக் கொண்டிருந்த சமயத்தில்
தான் சண்முகம் காலிங் பெல்லை அலற விட்டார். குடியும்,
பேச்சும் சிரிப்புமாக விடியல் தொடங்கும் நேரத்தில்
உறங்கச் சென்ற மதுவும், சிமியும் “ஹேய், அதி யாரடி நடுராத்திரியில் தொல்லை செய்யறது?” என படுக்கையறையிலிருந்து சத்தமிட்டனர்.
ஒருவேளை ரேணுவாக இருக்குமோ
என கதவு துவாரத்தின்
வழியாகப் பார்க்க, வெள்ளையும்
சொள்ளையுமாக குளித்து உணவருந்திவிட்டு திருநீறுப் பட்டையிட்டபடி மாறனின் மாமா நின்றிருந்தார். குனிந்து தனது உடையையும்,
வீட்டையும் பார்த்த அதி மனதுள் அலறி
“ஏய் குடிகாரிகளா! சண்முகம் அங்கிள் வந்திருக்கிறார்டி…அங்கங்கே டின், பாட்டில் ஸ்னாக்ஸ் என இறைஞ்சு கிடக்குது…வந்து கிளியர் பண்ணுங்கடி…”என கத்திவிட்டு அவசர அவசரமாக ஹாலை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள்…மூவரும் சேர்ந்து ஒழுங்குபடுத்தியபின் குனிந்து தன் உடையைப் பார்த்த அதி குட்டி ஷார்ட்ஸும்,
கையில்லாத காட்டன் டாப்புமாக
இருந்தவள்..நேரமின்மையைக் கருதி சட்டென தன்னிடமிருந்த ஒரே ஒரு நைட்டியை மேலாக அணிந்தவள்,
தோழிகளை படுக்கையறையில் அடைத்து கதவை சாற்றிவிட்டு, மறக்காமல் ரூம் ஸ்பிரேயை அடித்துவிட்டே கதவைத் திறந்தாள்.
“வாங்க அங்கி..”என வரவேற்க தொடங்கியவள், அவர் தன்னை சித்தப்பா
என அழைக்கும்படி உறவுமுறையை
சொல்லிக் கொடுத்து நடத்திய பாடத்தை நினைவு கூர்ந்தவள் “வாங்க சித்தப்பா…”என வரவேற்று தனக்காக போடப்பட்டிருந்த காபியைத் தந்து உபசரித்தாள்.
சண்முகம் “என்னம்மா அதி, உன் தோழிகளை எங்க காணோம்…”
அதி “நேத்து ஷாப்பிங் அது இதுனு ரொம்ப அலைச்சல் சித்தப்பா…கால்வலினு
ரொம்ப நேரம் தூங்கலை…விடியற்காலையில் தான் தூங்க ஆரம்பிச்சாங்க…”என அவர்களை விட்டுக் கொடுக்காமல் பதிலளித்தாள்.
“மணி இப்பவே பத்தாகுது, வளர்ற புள்ளைங்க போய் சாப்பிட்டுவந்து நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க…” என அக்கறை காட்டிய சண்முகம் “உங்கிட்ட கொஞ்சம் பேசணும்மா..எங்க அப்பா அம்மா காலத்துல விவசாயம் தான் முக்கியமான தொழிலா இருந்தது…நாமதான் படிக்கலையேனு என்னைப் படிக்க வைக்க நினைச்சாங்க..ஆனால், எனக்கு படிப்பில்
ஆர்வமில்லை..எங்கக்கா நல்லாப் படிப்பா..பொட்டைப்பிள்ளைக்கு படிப்பு எதுக்குனு பத்தாவதோட
நிறுத்தி, கொஞ்சநாள் கழிச்சு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க…அவ கல்யாண வாழ்க்கையும் ரொம்ப நாள் நிலைக்கலை…சொத்து தகராறுல எங்க மாமாவை வெட்டிட்டு, அக்காவுக்கும் தொல்லை கொடுத்து விரட்டி விட்டுட்டாங்க…சொத்து பத்தோட வாழ்ந்தவ,
மணியையும் கூட்டிட்டு எங்கிட்டஅடைக்கலம் கேட்டு வந்தாங்க…அப்ப, எனக்கு கல்யாணமாகி
சுலோ மாசமாயிருந்தா…நான் ஒரு டீக்கடையுடன் கூடிய சின்ன டிபன் கடைதான் வைத்திருந்தேன்..எனக்கும் பெரிசா வருமானமில்லை…நான் விடியக்காலையில் கடைக்கு போனால், நைட் பதினொரு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன்…இதனால், சுலோ எங்கக்காவை
எப்படி நடத்துறானு ரொம்ப வருஷமாக தெரியாமல்
போனது…” என நிறுத்தியவர் தன் அக்காவின் நினைவில் கண்கலங்கினார்…
அதி “சித்தப்பா, போனதை நினைத்து கவலைப்படாதீங்க…அத்தை எங்கயிருந்தாலும் நாம நல்லாயிருக்கணும்னு தான் நினைப்பாங்க…” என ஆறுதல் கூறி, குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.
சண்முகம் “நீ சொல்லறதென்னவோ நிஜந்தாம்மா, இப்ப நான் ஒரு பெரிய ஹோட்டலுக்கு முதலாளியா
இருக்கேனா, அதுக்கு முக்கிய காரணம் எங்க அக்காவும், மணியும் தான்…ஒரு நிமிஷம், சும்மா இருக்க மாட்டாங்க
ரெண்டு பேரும்..கடைக்கு வர்றவங்களுக்கு மட்டும் டீ வித்தால் லாபம் வராதுனு, பக்கத்துல இருக்கிற நாலு கம்பெனிகளுக்கு பனிரெண்டு வயசுலயே சைக்கிளில்
போய் டீ விற்பான்…அக்கா அதுகூட பருப்பு வடை, உருளைக்கிழங்கு போண்டா, உளுந்து வடைனு அதையும் கொண்டு போனு சூடா போட்டுத் தருவாங்க..இதுல மட்டுமே, தினமும் ரெண்டாயிரம்
ரூபாய்க்கு விற்பனை ஆகும்…பள்ளி விடுமுறை நாட்களில் மணி போவான், மற்ற நாட்களில் கடைப் பையனுங்களை அனுப்புவேன்…கொஞ்ச, கொஞ்சமாக கடையை விரிவு படுத்தினோம்…மூன்று வேளை சாப்பாட்டைத் தவிர, எங்க அக்காவுக்கும், மருமகனுக்கும் பெருசா நான் எதையுமே செய்யலை…மணி படிச்சதும்
அரசு பள்ளியில்தான், பெரிய என்ஜினீயர் ஆகணும்னு அவனுக்கு ஆசை…அதைக்கூட நிறைவேற்றாமல், எம் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு, ஹோட்டலைப்
பார்த்துக்க ஆள் வேணும்னு சுயநலமா கேட்டரிங்
படினு சொல்லிட்டேன்…பெருசா எதுக்கும் ஆசைப்படாத
அவனும், படிச்சு முடிச்சுட்டு ஹோட்டலை விஸ்தாரமாக்கி முழுப்பொறுப்பையும் ஏத்துகிட்டு எனக்கு ஓய்வு கொடுத்தான்…” எனப் பெருமூச்சு விட்டவர்…
“எங்கக்காவை கவனிக்க மறந்ததால் மஞ்சள் காமாலை வந்து இறந்து போயிட்டாங்க…
அவங்களை ஒழுங்கா பார்த்துக்கலையோனு இப்பவரைக்கும் எனக்கு மிகவும் குற்ற உணர்வாகவும், உறுத்தலாவும் இருக்கு…இருக்கும்போது அவங்க அருமை புரியறதில்லை…அவங்க இல்லாத பொழுதுதான்,
நம்ம மனசே நம்மை குற்றவாளி கூண்டில் நிற்க வைக்குது..அவங்களுக்கு செய்யாததையும் சேர்த்து என் மருமகனுக்கு
செய்ய ஆசைப்படறேன்…என் பொண்டாட்டி, ரேணுவை மணிக்கு கட்டிக் கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையாக்கணும்னு பிரச்சனை பண்ணவும்தான், அவன் எல்லாத்தையும் விட்டுட்டு
இங்கே வந்துட்டான்…ரேணு எனக்கு தங்கச்சி மாதிரினு சொன்னதுக்கப்புறம் நானும் அவனை ஒண்ணும் சொல்லலை…” என சில மணித்துளிகள் பழைய நினைவுகளில் முழ்கியவர்…
“அப்புறம், எங்கக்கா மாமாவோட பங்காளிங்க
சொத்து மூன்று தலைமுறையாக
பிரிக்காமல் இருந்திருக்கு, அதுல நடந்த தகராறுல அண்ணந்தம்பிக எல்லாரும் வழக்கு போட்டிருக்காங்க, மாமாவோட சொந்தக்காரங்க மூலமாக தகவல் கிடைச்சு நானும் மாமாவோட பங்குக்காக நல்ல வக்கீல் வெச்சு கேஸ் போட்டேன்,
ரெண்டு வருஷம் இழுத்தடிச்சு இங்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் தீர்ப்பு வந்தது…எங்க மாமாவோட பங்காக, நல்ல தண்ணீர் பாசன வசதியோடு முப்பது ஏக்கர் நிலம் மணிக்கு வரும்…ஏதோ, என்னால முடிந்தது..இது வேற யாருக்கும் தெரியாது,
எம் பொண்டாட்டிக்கும் மட்டும் தெரிந்தது அந்த சொத்துக்காகவே மணிக்கு கல்யாணம் நடக்க விடமாட்டாள்…உங்க கல்யாணத்துக்கு அப்புறம்,
அதை என்ன பண்ணலாம்னு
ரெண்டு பெரும் சேர்ந்து முடிவெடுங்கம்மா…எனக்கு ரேணு மாதிரி தான் நீயும்…எம் மருமகன் ஒரு கடுமையான உழைப்பாளி…மத்தவங்களுக்கு பார்த்துப் பார்த்து செய்வானே தவிர அவனை ஒழுங்கா கவனிச்சுக்க
மாட்டான்…இனிமேல் அவன் உன் பொறுப்பும்மா, அவனை நீதான் நல்லா கவனிச்சுக்கணும்…”
“அவனுக்குனு எங்கிட்ட முதன் முதலாக கேட்டது உன்னைப் பிடிச்சுருக்கு, கல்யாணம் செய்து வைங்க மாமானுதான்…நல்ல தாய்மாமனாயிருந்து அவன் கல்யாணத்தை, எல்லா சொந்த பந்தத்தையும் கூப்பிட்டு விமரிசையாக பண்ணுனும்னு
எனக்கு ஆசை…ஆனால், உன் ஆசைக்காக கல்யாணம் சிம்பிளாயிருந்தா போதும்னு சொல்லிட்டான்…பத்து பேரோட கல்யாணம் நடந்தாலும், எல்லா சடங்குகளையும் முறைப்படி
நடத்தணும்னு எனக்கொரு ஆசை…உங்க அப்பாம்மா
இருவரும் மனசார வாழ்த்தி,
உன்னை தாரைவார்த்துத் தந்தால், உங்க வாழ்க்கை இன்னும் நல்லாயிருக்கும்மா…முக்கியமான நேரத்தில், அவங்களை நிராகரித்துவிட்டு பின்னாடி வருத்தப்பட கூடாதில்லையா…மனுஷன் தப்பு பண்ணறது சகஜம் தானே! அவங்க ரெண்டு பேரும் பிரிந்திருந்தாலும் உன்னை அம்போனு விட்டுட்டு
போகலையேம்மா…எத்தனையோ குழந்தைங்க
அப்பா அம்மானு ஒரு உறவே இல்லாமல் வளர்றாங்க…அவங்களுக்குத் தான் தெரியும், அப்பா அம்மா உறவோட அருமை… உதாசீனத்தோட
வலி தெரிந்த நீயே, அவங்க மனசாரத் திருந்தி வரும்பொழுது
உதாசீனப்படுத்தலாமா? உனக்குனு ஒரு குழந்தை பிறந்து, அது வளரும் போது தாத்தா பாட்டிங்கிற உறவுகளோடு
அவசியத்தை நீ உணர்வாய்…அப்ப, காலந்தாழ்த்தி வருத்தப்பட்டு ஒரு பயனுமில்லை…நான் சொன்னதை கொஞ்சம் பொறுமையாக
யோசிம்மா, நான் சாயங்காலம்
வருகிறேன்..” என்று சென்றுவிட்டார்…
காலை உணவை முடித்தபிறகும் அதி, சண்முகம் சொன்னதை யோசித்தபடியே அமைதியாகயிருக்க, டிசைனரிடம் தைக்கக் கொடுத்திருந்த அதியின் கல்யாண ப்ளௌஸையும்,
குஞ்சம் வைக்க கொடுத்திருந்த பட்டுப்புடவையையும், கூடவே பெண்களுக்கு
சூடாக வாங்கி வந்த தின்பண்டங்களையும் கதவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த மதுவிடம் தந்தவன் “என் அமுலு ஏதோ குழப்பமாக இருக்கிறாள்…என்னனு கேட்க மாட்டீங்களா? நீங்களெல்லாம் பிரெண்ட்ஸ்னு எதுக்கு இருக்கீங்க?”
என மதுவையும் சிமியையும்
பார்த்து கேள்வி கேட்டவன்…அந்த ரணகளத்திலும் ஒரு குதூகலமாக
மதுவிற்கு மட்டும் கேட்கும் வகையில் “பிரெண்டுக்கு மாமா வேலையெல்லாம் பார்க்கத்
தெரியுற உங்களுக்கு, இந்த வெள்ளைக்கொடி காட்டி தூது போற வேலையெல்லாம் செய்ய முடியாதா?” என நக்கலாக கேட்டுவிட்டு சென்று விட்டான்.
பின்னர் மதுவும், சிமியும் மாற்றி மாற்றி அதியை மூளை சலவை செய்து, ஒருவாறு அவளது பெற்றோர் திருமணத்தில் கலந்துகொள்ள சம்மதம் வாங்கினார்கள்.
அதி சம்மதம் சொன்ன ஒருமணி நேரத்தில்
வந்திறங்கிய அவளது பெற்றோர்களைப் பார்த்து “அதெப்படி இவ்வளவு சீக்கிரம் இங்கே வரமுடியும்..” என குழப்பத்திலேயே எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்…மேலும், மாறனும் அவனது மாமாவும் ரொம்ப நாள் தெரிந்தவர்களைப் போல அவர்களை வரவேற்று உபசரித்ததில் “இங்கே, என்னடா நடக்குது?”
என்றபடி பார்த்திருந்தாள்…
கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், மகளுக்கு தேவைப்படும் என நினைத்ததை எல்லாம் வாங்கி குவித்து விட்டனர்…அதிக்கோ, சிறுவயதில் உடம்பு சரியில்லாத நிலையில் தன்னை தனித்து விட்டவர்களின் செயலே மனதுள் வந்துபோனது…எத்தனைதான் வாங்கிக் குவித்தாலும், உடம்பு முடியாத நிலையில் அம்மாவிடம் கிடைக்கும்
அரவணைப்புக்கு இதெல்லாம் ஈடாகுமா? என நினைத்து அதனைச் சற்றும் சீண்டிக் கூட பார்க்கவில்லை…
இத்தனை நாட்கள் தங்களை விட்டு ஒதுங்கியிருந்த மகளை தன்னுடன் சேர்த்து வைத்த மருமகனின்
பேச்சிற்கு மறுபேச்சு பேசாதவர்கள்…மாறன் எவ்வளவோ சொல்லியும் அவர்களுக்கு
வாங்கி குவிப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை…இதைல்லாம்
பார்த்த சுலோவுக்கு, அடிவயிற்றில் தகதகவென நெருப்புப் பற்றிக் கொண்டதை போல தகிப்பிலிருந்தார்…”தாம் பார்த்து வளர்த்து விடாமலிருந்தால், இவனுக்கெல்லாம் இவ்வளவு பெரிய இடத்தில் சம்மந்தம் கிடைக்குமா?”
என பொறாமை கொண்டு கொதித்தவர், மாறன் மற்றும் அவனது அம்மாவின் இடையறாத உழைப்பினால் மட்டுமே தாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்
என்பதை வசதியாக மறந்துவிட்டார்…வசதி வந்ததும், பழசை மறப்பது வழக்கம் தானே! வெகு சிலரே, தம்மை தூக்கி விட்டவர்களை
இன்றும் நினைவில் வைத்து நன்றி மறக்காமல்
இருக்கின்றனர்…
அவர்கள் வாங்கி வந்த பொருட்களை திரும்ப எடுத்துச் செல்லும்படி
அதி கோபப்பட, தங்கள் மகளின் உதாசீனத்தை
மருமகனிடம் முறையிட்டனர் தேவேந்திரனும் ஜெஸியும்…மாறன் அதியிடம் சென்று “அதி அவர்கள் செய்ததை வேண்டாமென்று மறுத்தால்,
இத்தனை நாள் நீ படித்து முடிக்கும்
வரையில், உனக்காக செய்ததை ஏன் மறுக்கவில்லை…அது, அவர்கள் கடமை என்பதால் தானே ஏற்றுக் கொண்டாய்…நீ வேலைக்கு சென்று, கைநிறைய சம்பளம் வாங்குவதால்,
அவர்கள் பாசமாக வாங்கித் தருவதை வேண்டாமெனக்
கூறி மற்றவர்கள்முன் உன் பெற்றோரை அவமானப் படுத்தாதே! செய்த தவறை உணர்ந்தவங்க
மனுஷன், அந்தத் தவறை மன்னிப்பவன் உயர்ந்த மனுஷன்…என் அமுலு தேவதைனு எனக்குத் தெரியும்…அது மத்தவங்களுக்கு தெரிய வேண்டாமா?” என அவளை மென்மையாக
அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன்…”நாங்கூட எதையும் வாங்க வேண்டாமுனு தான் சொன்னேன்…எங்களுக்கு
இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு, அவளுக்கு வாங்கிக் கொடுக்காம
வேற யாருக்கு நாங்க வாங்கிக் கொடுக்கிறதுனு கேட்கிறாங்க…உனக்கு பிடிச்ச மாதிரி நாம வாங்கிக்கலாம்…இப்ப அவங்க வாங்கி கொடுத்ததை வேணாமுனு சொல்லாதே…”என பேசிப் பேசியே அதியை கரைத்தான்
மாறன்.
முதலில், வேண்டா வெறுப்பாக
திருமண ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்ட அதி, மாறனின் மாறாக் காதலினாலும், திருமணத்தைப் பற்றி அடிக்கடி பேசிய தோழிகளாலும் அவளையறியாமலே அவளுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தினர்…
திருமண நாளன்று அதிகாலையிலேயே தயாராகி சிவாலயத்திற்கு சென்றவர்கள்,
முறையான பூஜை மற்றும் திருமண சடங்குகளோடு
அன்றைய நாளை மகிழ்ச்சியாகவே தொடங்கினர்…கம்பீரமாக பட்டு வேஷ்டி, சட்டையில்
மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொன்ன மந்திரங்களை
அதிகவனமாக ஓதிக் கொண்டிருந்த
மாறனின் கண்கள் அடிக்கடி தன்னருகில் அமர்ந்த மனையாளிடம் சென்று வந்தது…
அலங்காரப் பெண்களின் கைவண்ணத்தில் மிதமான ஒப்பனையில் அச்சிவப்பு
வண்ணப்பட்டில் தேவதையாக, முகமெல்லாம்
மகிழ்ச்சியுடன் மாறனின் இடதுபக்கத்தில் அமர்ந்திருந்தாள்…மாறனுக்கு மட்டுமே உரியவள் ஆகப் போகும் சந்தோசம் அவளது முகத்திலேயே
தெரிந்தது…
திருமணத்திற்கு மாறனின் மாமா குடும்பம், அதியின் குடும்பம், அப்பார்ட்மெண்ட் ஓனர் குடும்பம் மற்றும் தோழிகளைத் தவிர, தன்னிடம் வேலை பார்க்கும் அனைவருக்கும், புதுத்துணிமணிகள் எடுத்துக் கொடுத்து கல்யாணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தான் மாறன்…நல்ல நேரத்தித்தில் தேவேந்திரனும், ஜெஸியும் தங்களது மகளை தாரை வார்த்துக் கொடுக்க, அனைவரின் ஆசிர்வாதத்துடன் திருமாங்கல்யம் அணிவித்து அதியை தன் சரிபாதியாக்கிக் கொண்டான் மாறன்…
தனது மெஸ்ஸுடன் இணைந்திருந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு, தடபுடலான மதிய விருந்து மாறனின் சார்பில் வைத்திருந்ததால், வேலை செய்யும் அனைவரும் திருமண நிகழ்ச்சி
முடிந்தவுடன் உடனடியாக பணிக்குத்
திரும்பி விட்டனர்…மற்ற அனைவரும் மணமக்களுடன்
ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் சென்று, திருமணத்தை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பினர்..
ரேணு ஆரத்தி எடுத்ததும்,
உள்ளே நுழைந்த அதியை மாறனின் வீட்டிலிருந்த சிறிய பூஜையறைக்கு அழைத்துச்
சென்ற சுலோ விளக்கேற்ற
வைத்து, பாலும் பழமும் உண்ண வைத்தார்..அதியின் பசியறிந்த
மாறன், அனைவரையும் தரமான ஹோட்டலில் உணவு உண்ண வைத்த பின்பே வீட்டிற்கு
அழைத்து வந்திருந்தான்…
அதிகாலையிலேயே எழுந்ததாலும், திருமண அலைச்சலினாலும் சோர்ந்து போனவள், மாறனின் படுக்கையறைக்கு சென்று ஏசியைக் போட்டுவிட்டு நன்றாக உறங்கிப் போனாள்…மதிய விருந்தை மேற்பார்வையிட்டு விட்டு, அறைக்கு உடைமாற்ற வந்த மாறன் தனது படுக்கையில்
உரிமையாக படுத்துறங்கும் மனைவியின்
அழகை ரசித்தபடியே உடைமாற்றியவன்…தான் செய்த பிழையை நேராக்கி, அதியை தன்னுடைய சொந்தமாக்கிய ஆனந்தத்தில் அவளின் பக்கத்தில்
படுத்து தானும் துயில் கொண்டான்.
