உன் மோகனத்தில் மயங்குகிறேன் கண்ணா
அத்தியாயம் 4
எவ்வித ஈடுபாடும் இல்லாமல் வந்த ஆதவிஶ்ரீயை உற்சாகப்படுத்த ரோஸி முதற்கொண்டு அனைவரும் முயற்சி செய்ததற்கு பலனாய் ஓரளவிற்கு பேசத் தொடங்கினாள் ஆதவிஶ்ரீ.
இருந்தாலும் செயினின் நினைவில் மனம் கலங்கிக் கொண்டே தான் இருந்தது. வீட்டிற்கு சென்றதும் தன் தாய் தந்தையர் செயினைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது என சிறுபிள்ளைப் போல அவ்வளவு பயம் அவளுக்கு.
ஒருவழியாக கேரளா சென்று இறங்கியதும், அவர்களை அழைத்துச் செல்வதற்காக ரோஸியின் வருங்காலக் கணவன் மைக்கேலுடன் நின்றிருந்த அதே நெடியவனைக் கண்டதும் அனைவரும், ‘அங்க இருந்தவன் நமக்கு முன்னாடி எப்டி இங்க?’ என்ற யோசனையில் அதிர்ச்சியானார்கள் என்றால் ஆதவிஶ்ரீயின் கண்களில் ஒளிமின்னல் வெட்டியது.
ஆனால் அந்த நெடியவனுக்கு ஆதவிஶ்ரீயைத் தவிர்த்து, அவளுடன் இருந்த தோழியர் மீது விழிகள் பதியவில்லை. பட்டாம்பூச்சியின் படபடப்போடு அதிகாலையில் பூத்த ரோஜாவின் மென்மையோடிருந்த தேகம், முத்துப் பற்கள் மின்ன அவனைப் பார்த்து எதையோ வேண்டி நின்ற துருதுரு விழிகள், அனைத்திற்கும் மேலாக அவளிடமிருந்து வந்த பெண்மைக்கே உரிய வாசனை அவனை வண்டாய் சுற்றி வரச் சொல்லி தூண்டிவிட்டு கொண்டிருந்ததை ஆதவிஶ்ரீ அறிய வாய்ப்பில்லை.
அவனது கூரிய விழிகளால் அவளை உச்சி முதல் பாதம் வரை அவன் ரசனையுடன் அளப்பதைக் கவனித்தவளுக்கு கோபம் சுள்ளென வந்தது. ‘எவ்ளோ திமிரு பாரேன்.. என்னாமா கெத்த மெயின்டெய்ன பண்ணிக்கிட்டே ஜொல்லு விடுறான். ஃப்ராடு.. இருடா மவனே.. என் செயின் மட்டும் என் கைக்கு வரட்டும். அப்புறம் உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன். பாக்குறான் பாரு.. அப்டியே மனசுக்குள்ள மன்மதன்னு நெனப்பு.. ஹிம்..’ என மனதினுள் அவனை வசைபாடியவாறு முகத்தைத் திருப்பினாள்.
ஆனால் தனது தோழியர் அனைவரும் தங்களது உடைகளை சரிசெய்தவாறு அவனின் கவனத்தை ஈர்க்க முயன்று கொண்டிருந்ததைக் கண்டவளுக்கோ ஏகத்திற்கும் முகம் கடுகடுத்தது.
“ஹேய் பேபி! ட்ராவல்லாம் ஓகேவா?!” என தன் மணவாட்டியான ரோஸியின் கன்னத்தில் முத்தமிட்டவாறு அணைத்தான் மைக்கேல். அதனைக் கண்ட பெண்களுக்கு சற்றே சங்கோஜம் பிறக்க ஆளுக்கொரு திசை நோக்கி பார்த்தனர்.
ஆதவிஶ்ரீயின் விழிகளும் எங்கெங்கோ பார்த்துவிட்டு இறுதியில் அவனது விழிகளில் வந்து நின்றது. ‘இதென்ன கண்ணா.. காந்தமா.. கண்ணாலேயே இப்டி இழுக்குறான்..?! இவன்கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் டீல் பண்ணணும்..’ என யோசித்தவாறே காரியமாக ஒருப் புன்னகையை அந்த நெடியவனை நோக்கி வீசினாள் ஆதவிஶ்ரீ.
ஆனால் பதிலுக்கு அவனும் பல்லிளித்து காட்டுவான் என்ற ஆதவிஶ்ரீயின் நம்பிக்கையை காலில் போட்டு மிதித்தாற் போல அசையாது கற்சிலையாக இன்னும் அதிகமான கூர்மையத் தன் கண்ணில் தேக்கியபடி ரசித்தான் அவன்.
‘அய்யய்ய.. சரியான கான்க்ரீட் கல்லு.. சரியாப் போச்சு போ.. இவனக் கட்டிக்க போறவ ரொம்ப பாவம்..’ எனக் கேலியாக மனதில் கிண்டலடித்தது அவளது முகத்திலும் விழியிலும் தென்பட்டதோ என்னவோ அவனது முகத்தில் தீவிரம் கூடியது.
சட்டென முகபாவனையை மாற்றிவிட்டு தனது லக்கேஜ்ஜைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நடக்க எத்தனித்தாள் ஆதவிஶ்ரீ. அப்போது மைக்கேல், “இவர் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் ருத்ரமோகன். இந்தியாலயே வளர்ந்து வர்ற பிஸினஸ் கிங்ஸ்ல இவரும் ஓருத்தர். அன்ட் இப்போ வரைக்கும் சிங்கிள் தான்..” என தனது நண்பனை அறிமுகம் செய்தக் கையோடு இறுதியில் நமுட்டு சிரிப்புடன் முடித்ததைக் கண்ட ருத்ரமோகன் அவனை சட்டெனத் திரும்பி முறைத்தான்.
ருத்ரமோகனின் உடல் விறைத்து நிமிர்ந்து நின்று தனது ஒருக்கையால் கூலர்ஸ்ஸை கண்களில் மாட்டியவாறு நின்றத் தோரணையில் கன்னியர் கூட்டம் அனைவரும் கிறங்கிப் போய் நிற்க,
‘என் செயின் இவங்கிட்ட இருக்குறதா தானே மஞ்சு சொன்னா. ம்ம்ம்… அதை எப்டி கன்ஃபார்ம் பண்றது?!’ என தன் விரல் நகத்தைக் கடித்தவாறு யோசித்துக் கொண்டிருந்தவளின் மீது கூலர்ஸ்ஸின் வழியாக ருத்ரமோகனின் விழிகளின் நிழல் நொடிக்கொரு தரம் விழுந்துச் சென்றது.
“போலாமா மைக்கேல்..?!” எனக் கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் கிளம்பிச் சென்றவனைக் கிட்டதட்ட ஓட்டமும் நடையுமாக அனைவரும் பின்தொடர வேண்டியிருந்தது.
‘ஷ்ஷப்பா… இப்பவே கண்ணக் கட்டுதே.. இதுக்கே இப்டி ஓடவிட்டு படுத்துறான். இவன்கிட்ட போய் என் செயின் மாட்டிக்கிச்சே.. நான் என்னடா பண்ணுவேன் பாண்டுரங்கா..!! முடியல…’ என மூச்சு வாங்க ஓடிவந்தவள் ஒருக்கட்டத்தில் முன்னே யார் நிற்கிறார்கள் எனக் கவனிக்காமல் தள்ளாடியபடி நடந்து சென்று மோதினாள் ருத்ரமோகனின் மீது.
காலை வேளையில் வெறும் வயிற்றுடன் இருந்தக் காரணத்தால் பசி மயக்கம் ஆதவிஶ்ரீயை தள்ளாட வைத்திருந்தது. ‘யார் மீது மோதினோம்?!’ என மெல்ல நிமிர்ந்து பார்த்தபோது,
‘என்ன..?’ எனும் விதமாக புருவங்களை ஸ்டைலாகத் தூக்கி, ருத்ரமோகன் தனது முகத்தை ஆட்டிக் கேட்க, சட்டென தன்னை சரிசெய்து கொண்டு தடபுடவென லக்கேஜ்ஜுகளைப் பிடித்தபடி, ‘மவனே.. யாருக்கிட்ட.. கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாத பரம்பரைடா நாங்க..’ என மனதினுள் புலம்பிக் கொண்டே நிமிர்ந்து நின்றாள் ஆதவிஶ்ரீ.
அவளது விளையாட்டான செய்கைகள் கண்டு தன்னை மீறி வந்த சிரிப்பை மூக்கை விடைத்துக் காட்டி அடக்க முயன்றவன், முகத்தைத் திருப்பி வேறுபுறம் நின்றவாறு உதிர்த்தான் ருத்ரமோகன்.
“லாரன்ஸ்…” என உரக்கக் கத்தியதும் நடுத்தர வயதுடைய ஒருவன் வேகமாக ஓடிவந்து ருத்ரமோகனுக்கு சல்யூட் அடித்தான் பவ்யமாக. அவர்களனைவரையும் ட்ராவல் பஸ் ஒன்றில் ஏற்றியவன் தானும் அதில் ஏறிக் கொண்டான்.
மைக்கேலும் ரோஸியும் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து தங்களுடைய காதல் சம்பாஷனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, மற்ற அனைவரும் இயற்கையை ரசித்தவாறு சலசலத்துக் கொண்டு வந்தனர்.
தெரிந்தோ தெரியாமலோ ஆதவிஶ்ரீ ருத்ரமோகனுக்கு பின்னாலிருந்ந இருக்கையில் அமர்ந்து கொள்ள, டிரைவர் சீட்டிற்கு அருகில் தனியே அமர்ந்திருந்த ருத்ரமோகன், தனக்கு முன்னாலிருந்த ‘மிரர் வியுவ்’வை சரிசெய்து ஆதவியின் பிம்பம் தனக்கு தெரிவது போல திருப்பி வைத்துக் கொண்டு அதன்வழியாக திரும்பி பாராமல் அவளது அசைவுகளைக் கவனித்து வந்தான்.
இது எதையும் அறியாதவளோ, ‘எதாவது உருப்படியா யோசிடி.. செயின் இல்லாம வீட்டுக்கு போனா, வீட்டுக்குள்ள வச்சக் கால நம்மள பெத்த தெய்வம் வெட்டியே போட்டுடும். இப்ப என்ன பண்றது?!’ என ரோஸியிடம் திரும்பி பார்த்து, “ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்..” என ஜாடைக் காட்டி அழைத்தாள் ஆதவிஶ்ரீ.
தன் மணவாளனுடன் சிரித்துப் பேசிக் கிசுகிசுத்துக் கொண்டிருந்தவள் மருந்துக்கும் கூட ஆதவிஶ்ரீயைத் திரும்பிப் பார்க்கவில்லை. தன்னிடம் செயின் வாங்கித் தருவதாக கூறிவிட்டு இப்போது கண்டு கொள்ளாமல் இருக்கும் தோழியைக் கண்டு ஆத்திரம் பொங்கியது ஆதவிஶ்ரீக்கு.
‘என்கிட்டயா உன் வேலையக் காட்டுற.. உன்னை இருடி.. இவள ஏதாவது பண்ணணுமே… ம்ம்ம்..’ என யோசித்தவளுக்கு மண்டையின் மேல் இரண்டு கொம்பு மானசீகமாக முளைக்க,
தனது பையில் வைத்திருந்த ஆப்பிளை எடுத்து ரோஸியின் மண்டையை நோக்கி குறி பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ணாடி வழியாக பார்த்திருந்த ருத்ரமோகனின் இதழ்கள் புன்னகையில் வளைந்தது.
எதேச்சையாக திரும்பி பார்த்த ரோஸி ஆதவிஶ்ரீயின் செயலைப் பார்த்து மிரண்டு விட்டாள். “என்னடி பண்ணப் பாத்த?! அம்மாடியோவ்.. எவ்ளோ பெரிய ஆப்பிள்..?!! இதை வச்சு என் மண்டைய பொழந்திருந்தா என்னிலைமை என்னாகுறது?! எரும.. எரும..” என ஆதங்கப்பட்டவாறே ஆதவிஶ்ரீயைத் தன் கையில் வைத்திருந்த ‘பௌச்’சால் அடித்தாள் ரோஸி.
“பின்ன என்னடி.. நானும் எவ்ளோ நேரந்தான் உன்னைக் கூப்பிடுறது?! கலயாணப்பொண்ணா போனனால உன்னைக் கல்லால அடிக்க முடியாதேன்னு.. இதோ.. இந்த ஆப்பிள மச்சு கூப்பிடலாம்ன்னு பாத்துட்ருந்தேன். பாழாப்போன அந்தக் கடவுள் உன்னைக் காப்பாத்திட்டாரு..” என சலித்துக் கொண்டவளின் கூற்றைக் கேட்டு முத்துப் பற்கள் தெரிய, ஜன்னல் பக்கம் திரும்பி சிரித்தான் ருத்ரமோகன்.
“அடிப்பாவி! காசு போட்டு உன்னை என் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்ததுக்கு எனக்கு இது தேவை தான்டி.. எதுக்குடி இப்டி பண்ணப் பாத்த?” என வருத்தத்துடன் கூறிய ரோஸியிடம்,
“ட்ரெய்ன்ல என்கிட்ட என்னடி சொன்ன? அதே மாதிரி செயின் வாங்கித் தரேன்னு சொன்னீல்லடி. எனக்கு வேற மாதிரி செயின் எதுவும் வேணாம்ன்னு சொல்லத் தான் கூப்பிட்டேன்.” என்று ஆதவிஶ்ரீ கூறியதைக் கேட்ட ரோஸி,
“ஹப்பாடா.. ஒருத் தொல்லை விட்டுச்சு..” என்று ஒருப் பெருமூச்சொன்றை வெளிவிட்டபடி ஆசுவாசமாகி மைக்கேல் கொடுத்த ஜூஸ்ஸை எடுத்துக் குடித்தாள் என்றால் ருத்ரமோகனின் புருவங்கள் கேள்வியுடன் ஆதவியை கண்ணாடியில் கண்டது.
“அதுக்கு பதிலா என்னோட செயின அவன்கிட்டருந்து எனக்கு வாங்கித் தா..” எனக் கூறியதும் இங்கே ஜூஸ்ஸைக் குடித்துக் கொண்டிருந்த ரோஸிக்கு அதிரிச்சியில் புரையேறியது என்றால் அங்கே ருத்ரமோகனின் சுழித்த புருவங்கள் விரிந்து,
‘ஓ… அப்போ மேடம் இதுக்காகத் தான் என்னையே நோட்டம் விட்டுட்ருக்காங்களா?! அதென்ன அவன்…?! மரியாதையில்லாம.. ஹூம்.. நீ எப்டி என்கிட்ட உன் செயின வாங்குறன்னு பாக்குறேன்..’ என குறும்பாய் தனது இதழை சுழித்து விட்டு தனது தலையை மெல்ல ஆட்டிக் கொண்டான் அவன்.
“அடியேய்.. எனக்கு நாளைக்கு கல்யாணம்டி. ஏன்டி என்னைப் போட்டு இப்டி படுத்துற.?! இன்னிக்கு ஒருநாள் என்னை ஃப்ரீயா விட்ருவியாம். நான் உனக்கு அப்புறமா அந்த செயின வாங்கித் தருவேனாம். ஓகேவா?” எனத் தனது கட்டைவிரலை ‘டீல்’ எனும்விதமாக ஆதவிஶ்ரீயிடம் நீட்ட,
படக்கென அவளது கட்டைவிரலைப் பிடித்து இறுக்கி வளைக்க முயன்றவாறு, “எப்டி..எப்டி.. இன்னிக்கு ஒருநாள் மட்டும் உன்னை விடவா?! இந்த மொல்லமாரி வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது. இன்னிக்கு மட்டும் தான் நீ ஃப்ரீயா இருப்ப. நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் கார்ல ஏறி ஓடிருவ ஹனிமூனுக்கு. இதையெல்லாம் இளிச்சவாயி மாதிரி நான் பாத்துட்டிருக்கணுமா?! கொன்னுடுவேன் கொன்னு.. எனக்கு இன்னிக்கே என் செயின வாங்கித் தர்ற நீ. இல்லைன்னு வையி.. ஈவு இரக்கமே பாக்காம உன் கல்யாணத்துல குட்டி கலாட்டா பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை..” என அவ்வளவு நேரமும் வலியால் துடித்தவளின் விரலை விடாது சிறுபிள்ளைப் போல கண்ணை உருட்டிக் கூறிக் கொண்டிருந்தவளை ஸ்வாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரமோகன்.
அவளது தவிப்பைக் கண்டவனுக்கு ‘பாவம்’ எனத் தோன்றினாலும், ‘வரட்டும்.. அவளாகவே வரட்டும்.. கண்மண் தெரியாமல் என்மீது மோதியதும் இல்லாமல் என்னையே திட்டி விட்டு ஓடினாள் அல்லவா! அவளாய் வந்து கேட்டால் கொடுத்து விடலாம்.’ எனக் கூறியபடி மீண்டும் ஒருதரம் கண்ணாடியில் அவளது பிம்பத்தைப் பார்த்தவன், பிறகு லேப்டாப்பைத் திறந்து தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான் அவன்.
ஓட்டத்தின் போது அவனை இடித்ததும் உரைத்த வார்த்தைகளின் விளைவாகத் தான் ஆதவிஶ்ரீயும் ருத்ரமோகனிடம் நேராக சென்று பேசத் தயங்கியதே தவிர அவன் மீது பயம் எழவில்லை. மாறாக தன் பெற்றோரை நினைத்துத் தான் பயந்தாள்.
“I love you.. I love you.. I love you mummy..” என்ற ரிங் டோன் அடிக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கியவாறே ஃபோன் காலை அட்டென்ட் பண்ணியவளுக்கு வார்த்தைகள் ஏதும் வரவில்லை.
சிலகண மௌனத்திற்கு பிறகு, “ஹாப்பி பெர்த் டே கண்ணா!!!” என அவளது பெற்றோர் இருவரும் ஒருசேரக் கத்தி வாழ்த்தியதும் தான் புரிந்தது.. அன்று அவள் இந்த பூமிக்கு பிறப்பெடுத்து வந்து இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகியுள்ளன என்பது.
விழிகளை மயில் தோகையென பெரியதாக விரித்து படபடவென இமைகள் அடித்துக் கொள்ள, அவளது கண்ணில் நீர் சுரந்து வழிந்தது தன் தாய் தந்தை மீதிருந்த அன்பினாலும் அவர்கள் ஆசையாக வாங்கிக் கொடுத்த தங்கச் செயினைத் தொலைத்த குற்றவுணர்வினாலும்.
