உன் மோகனத்தில் மயங்குகிறேன் கண்ணா
அத்தியாயம் 3
எவ்வளவோத் தடுத்தும் தனது அழுகையை தடுக்க இயலாமல் அருவியாய் கொட்டத் துவங்க, ஓசையெழுப்பாமல் வாயைப் பொற்றியபடி தன் கண்ணீரை மடி நனைக்க விட்டுக் கொண்டிருந்தாள் ஆதவிஶ்ரீ.
அவளது எண்ண அலைகள் இரயிலில் பின்னோக்கி நகரும் காட்சிகளைப் போல, கடந்த காலத்தை நோக்கி நகரத் தொடங்கியது.
இதே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்ஸில் தங்களது ஏசி கம்பார்ட்மென்ட்டின் வாசலில் நின்றவாறு தோழியர் அனைவரும் தங்களது மணிக்கடிகாரத்தைப் பார்த்தவாறே டென்ஷனுடன் நின்று கொண்டிருந்தனர்.
“எப்பப் பாரு இந்த எரும இதே வேலையத்தான் பண்ணுது. வரட்டும் வச்சுக்குறேன்.” என கைகளைப் பிசைந்தவாறே நின்றிருந்தாள் கல்யாணப் பெண்ணான ரோஸி.
இரயில் கிளம்பத் தயாராகுவதற்கு சாட்சியாக மெல்ல நகரத் துவங்க அனைவரும் அவசர அவசரமாக உள்ளே ஏறினர். ஆனாலும் வாயில் வழியாக எட்டிப் பார்த்தபடி பரிதவித்துக் கொண்டிருந்த வேளை, ஃப்ளாட்ஃபார்ம் படியிலிருந்து கடகடவென இறங்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் ஆதவிஶ்ரீ.
அவளைக் கண்டு விட்ட தோழியர் அனைவரும், “வாடி.. சீக்கிரம் வா.. அய்யோ.. ட்ரெய்ன் மூவ் ஆகிடுச்சு. சீக்கிரம் வா ஆதவி!” என தோழியர் கூட்டம் கத்துவதை உற்சாகமாக எடுத்துக் கொண்டு சிரித்தபடி ஓடிவந்த வேளை, ஒரு நெடியவன் வழிமறித்து கடந்ததால் அவனுடன் பலமாக மோதி இடித்து சுழன்று நின்றாள் ஆதவிஶ்ரீ.
மன்னிப்பு கேட்பதற்காக கையை உயர்த்திய நெடியவனிடம், “யோவ்! கண்ணென்ன பொடதிலயா வச்சுருந்த.. இப்போ பேச நேரமில்ல.. இல்லைன்னா வகுந்துருவேன் வகுந்து..” எனக் கத்தியவாறு மீண்டும் வேகமெடுத்து ஓடினாள் இரயிலைப் பிடிப்பதற்காக.
உயர்த்தியிருந்தக் கையை அந்தரத்தில் நிறுத்தியவன் அவள் இடித்தப் பகுதியில் ஏதோ உறுத்துவது போலத் தோன்றியதும் என்னவென்று தொட்டுப் பார்த்தபோது வைரத்தின் வடிவில் இருந்த உள்ளே இருப்பக்கம் முகம் பதித்த செயின் ஒன்று தன்னுடைய செயினுடன் மாட்டி பின்னிப் பிணைந்து தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த வைர வடிவ லாக்கெட்டைத் திறந்துப் பார்த்தபோது வயதான இருவரின் முகங்கள் பதிக்கப்பட்டு இருந்தது கண்டு இந்த செயின் அவளுடைய தாய் தந்தையரின் நினைவுப் பரிசாக இருக்க வேண்டுமென நினைத்து பத்திரப்படுத்தினான் அவன்.
இரயில் வேகமெடுக்கும் முன்பாக விரைந்து வந்து படிக்கட்டில் கால் வைத்து ஏறியவளை விட மூச்சு வாங்க நின்றனர் அவளது தோழியர்கள் அனைவரும். அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவளோ காய்ந்தத் தொண்டையை எச்சில் கூட்டி விழுங்கியபடி மூச்சு வாங்க,
“ஏன்டி.. ஓடிவந்தது நானு.. ஃபெர்ஃபார்ம் பண்றது நீங்களா?! அடச்சீ.. ரியாக்ஷன நிறுத்துங்க..” என ஆதவிஶ்ரீ அதட்டியதும் இயல்புக்கு வந்தனர்.
ஒருவாறு மூச்சு சீரானதும் தண்ணீரெடுத்து கொடுத்த தோழிக்கு புன்னகையைப் பரிசளித்தபடி, “தேங்க்ஸ் பேபி!” எனக் கூறிவிட்டு மடக்மடக்கென தண்ணீரை அண்ணார்ந்து பருகினாள் ஆதவிஶ்ரீ.
அப்போது ஒன்றைக் கவனித்த மஞ்சுளா, “ஆதி! உன் கழுத்துல…” என ஏதோ சொல்ல வந்தவளின் வாயைப் பொத்திய ரோஸி, மஞ்சுளாவின் காதருகே வந்து,
“தயவுசெஞ்சு செயினப் பத்தி சொல்லிடாத. அப்புறம் ஓடிப் போய் அவளோட செயின எடுக்குறேன்னு ட்ரெய்ன் செயினப் புடிச்சுத் தொங்கிருவா. அதோட எல்லாம் கெட்டு நாசமாப் போயிடும். புரியுதா?” எனக் கிசுகிசுத்து அவளை அடக்கிவிட்டு,
“ஏ.. வாங்கடி எல்லாரும் உள்ளப் போலாம்.. வா..வா..வா…..” என அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்ற ரோஸி, அந்த கடைசி வாக்கிய “வா”வில் சற்று அழுத்தம் கொடுத்து மஞ்சுளாவை இழுத்து கொண்டு சென்றாள்.
“ஏன்டி.. இப்டி மூச்சு வாங்க ஓடிவர்றதுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா இதெல்லாம் அவாய்ட் பண்ணிருக்கலாம்ல.” என்று கேட்டுவிட்டு ஆதவியிடமிருந்து தண்ணீரை வாங்கிப் பருகிய ரோஸியிடம்,
“யாரு சொன்னா நான் சீக்கிரம் வரலைன்னு. நான் அப்பவே வந்துட்டேனே..” என நிதானமாக ஆதவிஶ்ரீ கூறவும், திடுக்கிட்டு போனவளோ, “என்னடி சொல்ற? அப்பவே வந்து தொலைஞ்சுருக்கலாம்ல..” என ரோஸி கத்திவிட்டு மீண்டும் தண்ணீரைப் பருகத் தொடங்கினாள்.
“அதானே.. நீயும் தேவையில்லாம அந்த ஆள் மேல மோதி அத மிஸ் பண்ணாம இருந்துருக்கலாம்.” என மஞ்சுளா சட்டெனக் கூறியதும், “எதை?” எனப் புரியாமல் ஆதவிஶ்ரீ கேட்டது தான் தாமதம். ‘குபீர்’ரென குடித்த அத்தனை நீரையும் எதிரில் இருந்த ஸ்வர்ணா மீது துப்பிவிட்டாள் ரோஸி.
தன் முகத்தை வழித்து துடைத்தபடி ஸ்வர்ணா, “எப்பப் பாரு என்மேலயே வாந்தி எடுக்குற. உனக்கு என்னை பாத்தா வாஷ்பேஸின் மாதிரி தெரியுதா?!” என ரோஸி மீது பாய்ந்து அவளது கழுத்துப் பிடித்து உலுக்கத் தொடங்கினாள்.
ஆதவிஶ்ரீயைத் தவிர்த்து மற்ற அனைவரும் அவ்விருவரைப் பிரிக்க போராடிக் கொண்டிருந்தனர். கையில் வைத்திருந்த சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டவாறு, “அப்டி தான். விடாத.. அமுக்கு..” என கமென்ட் செய்தவாறு ஸ்வர்ணாவை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள் ஆதவிஶ்ரீ.
“அய்யோ.. இந்த சொர்ணாக்காக்கிட்டருந்து யாராவது காப்பாத்துங்களேன்.” எனக் கத்தியபடி ரோஸி திணறுவதை அப்போது தான் பார்த்தது போல, “ஆதவி இருக்கும் போது நீ ஏன் கவலைப்படுற.. ஏ..ச்சீ.. விடுறீ.. விடுறீன்னா…” என ஒரே நிமிடத்தில் இருவரையும் பிரித்து வைத்தாள் ஆதவிஶ்ரீ.
மூச்சு வாங்க ‘கொக்கு..கொக்கு..’ என இறுமியவாறு ஆதவியைப் பார்த்த ரோஸி, “ஏன்டி முதல்லயே வந்து காப்பாத்தல..” என ஆதங்கத்துடன் கேட்க, “இல்ல மச்சி.. நான் கொஞ்சம் சிப்ஸ் சாப்பிடுறதுல பிஸியா இருந்துட்டேன்..” என கேலியாக ஆதவிஶ்ரீ கூறுவதைக் கேட்ட அனைவரும் மேலும் முறைத்துப் பார்க்க,
“சரி..சரி.. அதான் சண்டைய நாட்டாமை வந்து விலக்கி விட்டுட்டேன்ல. அப்புறம் என்ன.. ஃப்ரீயா விடு.. ஃப்ரீயா விடு..” என அனைவரையும் சிரித்துக் கொண்டே சமாதானப்படுத்தினாள்.
“என் சிப்ஸ்ஸு…” என ஸ்வர்ணா காலியான கவரைப் பார்த்து பொறுமியவாறு ஆதவிஶ்ரீயிடம் முறைத்துக் கொண்டே திரும்ப, “டொட்டடொயிங்… இந்தா..” என தனது பேக்கிலிருந்து சிப்ஸ்ஸில் நாலைந்து பாக்கெட்டை எடுத்து ஆட்டவும், அதுவரை முறைத்த ஸ்வர்ணாவின் கண்கள் குளிரத் தொடங்கின.
“எனக்காக இவ்ளோ வாங்குனியா ஆதி?!” என ஆசையுடன் அத்தனைப் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டு, உடனே அதில் ஒன்றை பிய்த்து சிப்ஸ்ஸை எடுத்து வாயில் போட்டபடி,
“இப்பத் தெரியுதா?! நான் ஆதி சொன்னா ஏன் உடனே கேக்குறேன்னு. எனக்காக அவ எது வேண்ணாலும் செய்வ.. இல்ல ஆதி?!” என வெள்ளந்தியாக ஸ்வர்ணா கூறுவதைக் கேட்ட அனைவரும்,
“ஆமா.. ஆமா.. அவ தானே?! ரொம்ப நல்லவப்பா..” என நீட்டி இழுத்துக் கூறினாள் ரோஸி. கேலிக் கிண்டலனைத்தையும் ஏற்றவள் மெல்ல சிரித்தபடி,
“ஏ லூசுகளா! அவளுக்கு மட்டும் வாங்கல. உங்களுக்கும் சேர்த்து தான் வாங்கிருக்கேன். இந்தாங்க..” என ஒவ்வொருத்திக்கும் என்னென்ன பிடிக்குமோ அவையனைத்தையும் அவர்களின் கைகளில் கொடுத்தாள் ஆதவிஶ்ரீ.
தங்களுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கி வந்தவளின் அன்பில் சமாதானமடைந்த அனைவரும் அதன்பின் இயல்பாக பேச ஆரம்பித்தனர் ஒருத்தியைத் தவிர.
தனக்கு பிடிக்குமே என நயமான அச்சுமுறுக்குகள் நிறைய வாங்கிக் கொடுத்த ஆதவிஶ்ரீயை பார்த்து முகம் வாட, “ஆதி! எனக்காக அச்சுமுறுக்கெல்லாம் வாங்கிட்டு வந்துருக்க.. உன்கிட்ட போய் இத மறைச்சுட்டேனேடி..” எனக் கூறவும்,
வாயில் ஸ்நாக்ஸ்ஸை வைத்து கடித்த ரோஸி கண்களை விரித்து, “சொல்லிடாதடி பாவி..!!!” என ஜாடைக் காட்டி எச்சரித்தாள் மஞ்சுளாவை. “என்னடி.. என்ன மறைச்ச?” என கேஷவலாக தனது காலரைத் தூக்கி விட்டபோது திடுக்கிட்டு பதட்டத்துடன் தனது கழுத்தைத் தொட்டுப் பார்த்து தேடினாள் ஆதவிஶ்ரீ.
“இதைத் தான்டி சொல்லணும்ன்னு நினைச்சேன். நீ ஓடி வரும்போது இடிச்சியே ஒரு ஆள.. அவனோட கழுத்துல தான்டி உன் செயின் மாட்டிக்கிச்சு. இதை நான் அப்பவே சொல்லலாம்ன்னு தான் சொன்னேன். ஆனா ரோஸி தான்….” எனக் கூற கூற ஆதவிஶ்ரீயின் முகம் தீவிரமடைவதைக் கண்ட மஞ்சுளா வாக்கியத்தை முடிக்காமல் அப்படியே இழுத்தவாறு நிறுத்தினாள்.
ஆனால் ரோஸி கூறியபடி ஆதவிஶ்ரீ இரயிலை நிறுத்தும் செயினை நோக்கி, “ஏய்ய்ய்… இதை ஏன்டி முதல்லயே சொல்லல..” எனக் கத்தியபடி முன்னேறி ஓட முயன்றவளின் இடுப்பை இருக்கைகளால் இறுக்கி பிடித்துத் தடுத்தவாறு,
“அடியே.. வேணான்டி.. சொல்றதக் கேளுடி. ஃபைன் கட்டுற அளவுக்கு காசு வேற இல்லடி..” என கதறிக் கொண்டிருந்த ரோஸி, மேலும் மஞ்சுளாவைப் பார்த்து
“இதுக்குத்தானடி நான் அப்பவே சொன்னேன் சொல்லாத.. சொல்லாதன்னு.. அட என்னங்கடி வேடிக்கை பாத்துட்டிருக்கீங்க..? வாங்கடி.. என்னால தனியா சமாளிக்க முடியல..” எனக் காட்டுக் கத்து கத்தியபடி தோழியரைத் துணைக்கு அழைத்தாள் ஆதவிஶ்ரீயைத் தடுத்து நிறுத்துவதற்காக.
இவர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கண்ட சில பெரியோர்கள், “என்னம்மா.. என்னம்மா.. என்னாச்சு..” என பதறியவாறு விஷயத்தைக் கேள்விப்பட்டு ‘எங்கே அவள் ஏடாகூடமாக ஏதும் செய்துவிடுவாளோ?!’ என்றப் பயத்தில் டிடிஆரை அழைத்தனர்.
நடிகர் மனோபாலாவின் ஜாடையில் இருந்த டிடிஆரோ, “என்னம்மா.. என்ன பிரச்சனை?” என சலித்துக் கொண்டு வந்தார். அனைவரையும் உதறிவிட்டு கண்கள் கலங்க நடந்த அனைத்தையும் அவரிடம் கூறியவள், அவரது கண்முன்னேயே,
“சார்.. எனக்கு என் செயின் வேணும். அதுக்கு இந்தச் செயின இழுக்கணும். தப்பா எடுத்துக்காதீங்க..” என அவரிடமே தைரியமாக கூறிவிட்டு முன்னேறியவளைக் கண்டு பதறினார் டிடிஆர்.
“ஏம்மா.. ஏம்மா.. அது என்ன கோயில் மணியா?! ஆளாளுக்கு வந்து இழுத்துட்டு போறதுக்கு.?! இதோ பாரும்மா.. என் கண்ணு முன்னாடி இழுத்தன்னு வையி.. ஐயாயிரம் ரூபா ஃபைன் கட்ட செல்லுவேன் பாத்துக்கோ..” என கண்டிக்க,
தோழியர் அனைவரும் பதற, “அடியே..ஆத்தா.. உன் கால்ல வேணுன்னாலும் விழுறேன்டி. நாளனைக்கு எனக்கு கல்யாணம். ஜெயில்ல கம்பி எண்ண வச்சு களி திங்க வச்சுராதடி.. ப்ளீஸ் டி..” என ரோஸி உண்மையாகவே அழத் தொடங்கினாள்.
மற்றவர்களோ, “ஆதி.. ப்ளீஸ் ஆதி.. வேணாம் ஆதி.. சொல்றத கேளு ஆதி..” எனக் கெஞ்சிக் கொண்டிருந்தனர். ஆனால் ஆதவிஶ்ரீ பிடிவாதத்துடன் செயினை இழுப்பதிலேயே குறியாக இருந்தாள்.
இறுதியில் வேறு வழியில்லாமல், “ஆதவி.. அதே செயின் மாதிரியே நான் உனக்கு செஞ்சு தரேன்டி. சத்தியமா செஞ்சு தரேன்டி. என்னை நம்பு.. ப்ளீஸ் டி.. ப்ளீஸ் டி..” எனக் கெஞ்சியதும் தான் அதுவரை ஆடாத ஆட்டம் ஆடியவள், அதன்பிறகு தனது முயற்சியைக் கைவிட்டாள்.
ஏதோ புயலடித்து ஓய்ந்தது போன்ற சோர்வுடன் அனைவரும் அமர்ந்திருந்தனர். “கண்டிப்ப அதே மாதிரி செஞ்சு தருவீல்ல..” என சந்தேகத்துடன் ஆதவிஶ்ரீ கேட்க,
“ப்ராமிஸ்ப்பா.. கண்டிப்பா செஞ்சுத் தரேன்.” எனக் கூறி சமாதானப்படுத்தினாள் ஆதவிஶ்ரீ. சற்று நிமிடத்தில் ஆதவிஶ்ரீயின் கண்கள் கலங்கி கண்ணீர் வரத் தொடங்கின.
“அது எங்கப்பா நான் பிறந்ததும் எனக்காக ஸ்பெஷலா செஞ்சதுடி..” என வருத்தத்துடன் ஆதவிஶ்ரீ கூறவும், இதற்கு பதில் கூறத் தெரியாமல் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அதற்குப்பிறகு மற்றவர்கள் அனைவரும் கேலிக் கிண்டலென சிரித்துப் பேசியபடி எப்போதும் போலிருக்க, தான் மட்டும் எதிலும் ஈடுபடாமல் அமைதியாக ஒதுங்கிக் கொண்டாள் ஆதவிஶ்ரீ.
