இதழ்… 25
ரிஷியோ கொஞ்சம் கூட அலட்டாமல் தன் சொந்த வீட்டில் வலைய வருவது போலவே வந்தான்.
காயத்ரியை அம்மா என்று அன்பாக விளித்தான்!
பிடித்ததை உரிமையுடன் செய்ய சொல்லி சாப்பிட்டான்!
‘எப்போ நம்ம வீட்டுக்கு போகலாம் அம்மா’ என்று ஆசையாக கேட்டான்!
அதிதியை வெறுப்பேற்ற காயத்ரியிடம் உரிமை கொண்டாடினான்!
செல்லியிடம் சிரித்து பேசினான்!
இதை எல்லாம் பார்க்க பார்க்க பத்திக் கொண்டு வந்தது அதிதிக்கு!
அவன் அம்மா என்று அழைத்தால்… இவளுக்கு மனம் வலித்தது!
இவள் மீ என்று அழைத்தால்…
அவனுக்கு கோபம் மிகுந்தது!!
இடையில் மாட்டிக் கொண்டதோ காயத்ரி தான்!
ஒரு பக்கம் 23 ஆண்டுகளாக அன்பு கொட்டி வளர்த்த மகள்!
மறுபக்கம் அதே 23 ஆண்டுகளாக தன்னை அம்மா என்று அழைத்து நினைத்து வளர்ந்த மகன்!!
யாருக்கு சப்போர்ட் பண்ண முடியும்? அதனால் இருவரும் இருபக்கம் நின்றாலே.. இவர் அசட்டு சிரிப்போடு “நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க.. நான் இதோ வந்துறேன்” என்று நழுவிக் கொண்டார்.
இருவரது விழிகளும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டது!
ஒன்றோ எரி தனலாக.. மற்றொன்றோ குளிர் பனியாக..
இருவரும் இப்படி முறைத்துக் கொண்டு திரிவதில் எந்த ஒரு பயனும் இல்லை! இருவரும் பேச வேண்டும் என்று நினைத்தார் காயத்ரி!
இன்னமும் ரிஷி செய்ததில் இவருக்கு பெரும் கோபமும் வருத்தமும் உண்டு. ஆனால் அதைத் தாண்டி அவன் சொல்கிற நியாயம் அதை நினைக்க.. அவன் பால் மனம் உருகிற்று! பெறாத தந்தைக்காக.. அதுவும் தந்தையின் காதலுக்காக இவ்வளவு தூரம் ஒருவன் இறங்கி வந்து செய்வானா என்று மலைப்பானது!
அதே நேரம் பெண்ணின் மீது அவன் கொண்டது வெறும் பழிவாங்கும் உணர்வா? இல்லை காதல் உணர்வா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு!
அன்று இரவு சாப்பாட்டின் போது இட்லியும் காரச்சட்டினியும் வைத்திருக்க.. அந்த காரச் சட்னி அதிதிக்கும் பிடிக்கும் தான்.
ஆனாலும் இவர் இட்லி ஊற்றிக் கொண்டிருப்பதை பார்த்த ரிஷி “அம்மா கார சட்னி செய்ங்க!” என்று உரிமையோடு சொல்லிவிட்டு வந்ததிலிருந்து ஏனோ அந்த கார சட்னி பிடித்தம் இல்லாததானது அதிதிக்கு.
சாப்பிடாமல் அவன் காரச்சட்னி வெட்டுவதை பார்த்து “எனக்கு இது பிடிக்கலை. எனக்கு இது வேண்டாம்” என்றாள் பிடிவாதத்தோடு.
இவர்களுக்கு நடக்கும் அந்த பனி போரை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாரே காயத்ரி “சரி உனக்கு வேற என்ன செஞ்சு தரட்டும்?” என்று கேட்க “தேங்காய் சட்னி!” என்றாள்.
“வாவ்!! தேங்காய் சட்னியா? கார சட்னி தேங்காய் சட்னி செம காம்பினேஷன். சீக்கிரம் கொண்டு வாங்க அம்மா” என்று அவன் வேண்டுமென்றே இரு கைகளையும் தேய்த்துக்கொண்டு ஆர்வத்தோடு கூற..
அதிதிக்கோ அதுவும் பிடிக்காமல் போக.. அவனை முறைத்து விட்டு “வேண்டாம் எனக்கு கொத்தமல்லி சட்னி அரைச்சு கொடுங்க!” என்றாள்.
“இந்த ராத்திரியில கொத்தமல்லிக்கு நான் எங்கடி போவேன்?” என்று காயத்ரி பாவமாக கேட்க.. “அப்ப பின்னாடி புதினா இருக்கு தானே! அதை பறிச்சிட்டு வந்து புதினா சட்னி அரைங்க” என்றாள்.
இப்பவும் இவன் வாய் சும்மா இருக்காமல் “மாஸ்.. மாஸ்.. செம மாஸ்! சூடாக இட்லி இந்த பக்கம் கார சட்னி அந்த பக்கம் புதினா சட்னி வேற லெவல். அம்மா.. நான் போய் படிச்சிட்டு வரேன்” என்று அவன் எழுந்து கொள்ள…
“மீஇஇஇஇஇ…. எனக்கு வெறும் இட்லி பொடி மட்டும் வைங்க” என்று அவள் கத்த.. அவளுக்கு எப்போதும் பிரியமானது அல்லவா அந்த இட்லி பொடி! எப்பவுமே ஊருக்கு போகும்போது சண்டை போட்டு அரைத்து வாங்கிக் கொண்டு செல்வாள் அல்லவா? சரி என்று அதையும் கொண்டு வர.. அவளுக்கு முன் அதை கைப்பற்றியவன் “மா நல்லெண்ணெய்!” என்று இவன் குரல் கொடுத்தான்.
“இப்பவே கண்ண கட்டுதே!” என்று சமையலறைக்குள் நெற்றியை பிடித்துக் கொண்ட காயத்ரி அவனுக்கு நல்லெண்ணெயும் அதிதி கேட்காமலேயே அவளுக்காக வீட்டிலேயே செய்து வைத்திருந்த நெய்யையும் எடுத்துக் கொண்டு சென்றார்.
அவள் கண்களில் ஒரு மின்னல்! அதையும் அவனுக்கு முன்னால் வாங்கியவள் இட்லியில் மேலே நன்றாக நெய்யை தாராளமாக விட்டு அதன் மீது பொடியை தூவி அவள் சாப்பிட…
“மா.. இவ சாப்பாட்ல ஒரு என்சைக்ளோபீடியா! எப்படி எல்லாம் யோசிச்சு யோசிச்சு சாப்பிடுறா பாருங்க!” என்று வாய்விட்டு கூறியவன், “அம்மா செஞ்சு கொடுத்து சாப்பிட ஒரு கொடுப்பினை வேண்டும்!” என்றான்.
முணுக்கென்று காயத்ரி கண்களில் இருந்து தண்ணீர் வர.. அதே “அம்மா” என்ற வார்த்தை அதிதியும் தாக்க.. வாயில் வைத்து சாப்பாட்டோடு எழுந்து கொண்டாள் அதிதி.
எழுந்தவளின் கையை பிடித்த காயத்ரி “என்ன நினைச்சுட்டு இருக்க அதி நீ? இப்படி சாப்பிடாம இருந்தா சரியா போச்சா? உட்காரு முதலில் சாப்பிடு!” என்று அன்னையாய் அதட்டினார்.
அவள் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு உட்கார “அம்மானா அன்பு காட்டுவது மட்டும் கிடையாது! தப்பு செஞ்சா அடிக்கவும் தண்டிக்கவும் அம்மாவுக்கு உரிமை உண்டு! புரியுதா?” என்றதும் இப்பொழுது கர்வம் பொங்க ரிஷியை பார்த்தவள், மீதம் இட்லியை உள்ளே தள்ள… அதே சூடான இட்லி.. இரண்டு ஸ்பூன் நெய்.. அதன் மேல் பொடி என்று வெளுத்து வாங்கினாள்.
ரிஷியை பார்த்தவர் “உனக்கு தனியா சொல்லனுமா? அவ சின்ன பொண்ணு! அவகிட்ட ஒவ்வொன்னுத்துக்கும் போட்டி போட்டுகிட்டு இருக்க.. சாப்பிட்டு எழுந்திரு” என்ற அவனிடமும் அன்னையாய் அதட்டினார்.
இப்பொழுது அவனும் இவளை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்த.. “நீங்கள் இரண்டு பேரும் திருந்தவே மாட்டீங்களா? சின்ன பிள்ளை மாதிரி பிஹேவ் பண்றீங்க! உங்க வாழ்க்கை பற்றி நான் பயந்துட்டு இருக்குற அளவு கூட உங்களுக்கு பயம் இல்லை.. அப்படித்தானே?” என்று இருவரையும் பொதுவாக வைத்து அத்தனை பேச்சு அதுவும் ரிஷி செய்தவற்றை அவர் கண்டித்துக் கூறிய விதம்… அவன் மறுவார்த்தை பேசாமல் அனைத்தையும் வாங்கிக் கொண்டான்.
இதைப்பற்றி இன்னும் அவன் தந்தையிடம் மூச்சு விடவில்லை. அவருக்கு மட்டும் தெரிந்தால்.. கண்டிப்பாக கோபிப்பார் என்று தெரியும். அதனாலேயே அவருக்கு தெரியாமலேயே அனைத்தையும் திட்டமிட்டு காய்கள் நகர்த்தி இதோ அன்னையை தந்தையிடம் கொண்டு சேர்க்க வந்து விட்டான்.
அன்றி இரவு அதிதியோ தன் அறைக்குள் செல்ல ரிஷி கொஞ்சம் கூட தயங்கவே இல்லை, அவள் உள்ளே நுழைந்த மறுகணமே இவனும் நுழைந்து தாழிட்டு விட்டான் கதவை.
ஒரு நிமிடம் அதிர்ந்த காயத்ரி அதன்பின் அவர்களுக்குள்ளான பிரச்சனையை தீர்த்து அவர்களே தெளிவு பெற்று வரட்டும் என்று அவர் அறைக்கு சென்று விட்டார்.
பின்னால் இவன் வருவான் என்று அவளுக்கும் தெரியும் தான். அவளுக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கிறதே!
கரும் இருளை தன் ஒளிக்கற்றையால் ஒரு மாயலோக பகலாக்கிக் கொண்டிருக்கும் அந்த முழு நிலவினை தான் விழி சிமிட்டாமல் சாளரத்தின் அருகே நின்று பார்த்து இருந்தாள் அதிதி.
வெளி பார்வைக்கு அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் உணர்வு குவியலாய் இருந்தாள்.
மெல்ல அவள் பின்னே வந்து நின்றவன், அவளின் இருபுறமும் கைக்கொண்டு ஜன்னல் கம்பியை பற்றி கொண்டான். அவளோடு உரசவும் இல்லை.. அதே நேரம் விலகியும் இல்லை.
அவள் நிலவினை வெறிக்க.. இவனோ இளம் காற்றில் அவள் காதோரம் சதிராடும் முடிக்கற்றைகளையும் அந்த குட்டி ஜிமிக்கியையும் வெறித்து இருந்தான்.
எத்தனை நாட்கள் தாபம் பொங்க இவளது காதல் மடலை கற்றை மீசையால் உரசி தடித்த உதடுகளால் அந்த குட்டி ஜிமிக்கியை காது மடலோடு கவ்வி சரசம் செய்திருக்கிறான். அது எல்லாம் பெரும் ஆழியாய் வந்து அவனுள் பொங்க.. தன் உதட்டை கடித்து தன்னை சமன்படுத்திக் கொண்டவன், ஒரு பெருமூச்சு விட அது தனலாய் தகித்தது அவளின் பின்கழுத்தில்!!
மெல்ல அவனது முன்புறம் அவளது பின்புறத்தோடு உரச.. அவளோ அதனை தான் விரும்பவில்லை என்று முன்னே சுவற்றோடு ஒட்டி நிற்க…
“அதி… ப்ளீஸ் டி! சாரி… நான் செய்ததை ஜஸ்டிபை பண்ண சொல்லல.. ஆனா அதற்கு பின் இருக்கும் என் பக்க நியாயத்தை யோசித்துப் பார் என்று தான் சொல்கிறேன்” என்றவனின் முகம் அவள் முகத்திற்கு அருகில் செல்ல…
“எது? உன் பக்க நியாயத்தை புரிந்து கொள்ளனுமா?” என்று சட்டென்று திரும்பியவளின் இதழ்கள் இவன் இதழ்களுக்கு வெகு அருகில்..
இதழ்களின் இடைவெளியை பார்த்தவன் அதனை குறைக்கட்டுமா என்று கண்களால் சுட்டிக்காட்டி கேட்க..
“இவன் அப்பா காதலிச்சா அதுக்கு இவன் என்னை இப்படி செய்து விட்டு போவானா? நேரடியா வந்து இப்ப பேசுனது போலவே அப்பவே பேசி இருக்க வேண்டியதுதானே? பேருதான் சயின்டிஸ்ட்.. மண்டையில் ஒன்னும் இல்ல..” என்று அத்தனை பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தாள்.
“ஆரம்பிச்சிட்டியா.. இதான்னே வேணாம்கிறது” என்று அவளும் கண் பார்வையாலேயே எட்டி நில் என்று எச்சரிக்க..
”புரிஞ்சிக்கோ டி! என்னாலே நீ இல்லாமே இருக்க முடியாது அதி!” என்றான் மென்மையாக..
”ஆனா.. என்னால முடியும்! அதுக்கு தான் ரெண்டு மாசம் எனக்கு ட்ரெய்னிங் கொடுத்தீங்களே ப்ரொபசர்.. ரொம்ப நல்லாவே நான் கத்துக்கிட்டேன். சோ எனக்கு பிரச்சனை இல்லை!” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு..
”பொய்.. பொய்.. வாய் தான் சொல்லுது வேணாம்ன்னு.. ஆனா..”
என்றவன் அவளை நெருங்கி நின்று அவள் முகத்தை திருப்பி கண்களை பார்த்து.. “இது வேணும்னு சொல்லு டி!” என்றான் அதி மென் குரலில்..
”நோ நெவர்! மனசும் அதைத்தான் சொல்லுது! நீ என் கூட இப்படி ஒட்டி நிக்குறதால, நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காதே! பெட்டர் ஸ்டே அவே..!” என்றாள் கடினத்தோடு!
“ஸ்டே அவே வா??? நோ…!” என்றான் பிடிவாதத்தோடு!
“நீ உன் அம்மாவை கூப்பிட தானே வந்த.. உங்க அம்மாவை கூட்டிட்டு கிளம்பு!”‘என்றாள் அழுகையை அடக்கிய குரலில்..
“அப்போ நமக்குள்ள ஒண்ணுமே இல்லை என்கிறாயா?” அதிர்வோடு ரிஷி!
”நமக்குள்ளே என்ன இருக்கு? ஒண்ணுமே இல்ல!” விரக்தியாய் அவள்.
அவள் சுடிதார் டாப்ஸ் உள்ளே கிடந்த தாலியை எடுத்து வெளியே போட்டவன் “அப்போது இது என்னடி? இது சொல்லும் நம் உறவை!” என்றான் கண்டனத்தோடு.
அசால்டாக அவன் கையில் இருந்து அதை தட்டி விட்டவள் “நீ இதை என் மேல் உள்ள காதலுக்காகவோ நேசத்துக்காகவோ கட்டல.. அட்லீஸ்ட் இந்த ஊராருக்கு பயந்து கூட இதை நீ கட்டல.. உன் வேலை சீக்கிரம் முடிய இது ஒரு ஆயுதம்! அதுக்காக நீ கட்டுன.. இதுக்கெல்லாம் மரியாதை கொடுக்கணும்னு அவசியம் இல்ல” என்று அதனை மீண்டும் எடுத்து உள்ளே போட்டுக் கொண்டாள்.
“பொடுசு மாதிரி இருந்துகிட்டு என்னென்ன பேச்சு பேசுறா.. ஆனா எல்லாம் கரெக்டா பேசுறாளே! எப்படி இவளை சமாளிக்க..” என்று முகத்தை திருப்பி நெற்றியை தேய்த்துக் கொண்டே புலம்பினான் ரிஷி.
“சமாளிப்போம்.. சமாளிச்சு தானே ஆகணும்! என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவன், ”உன் கண்ணு சொல்லுது நீ பேசறது எல்லாம் உன் மனசுல இருந்து பேசலைன்னு..” என்று இவன் அவள் கண்களை கூர்ந்து பார்த்து கேட்க..
“என்ன கண்ணு சொல்லுச்சு? மண்ணு சொல்லுச்சுன்னு? அது பேசினால் அதெல்லாம் சரி ஆயிடுமா? நான் பேசணும்.. எனக்கு ஒன்னுனா நான் தான் பேசணும்!” என்றாள் கோபத்தோடு!
“அப்போ நமக்குள்ள நடந்தது எல்லாம்.. அதை என்னன்னு சொல்லி நீ ஜஸ்டிபை பண்ணுவ?” என்று இப்பொழுது அவளை தன் முன்னே நன்றாக திருப்பி கேட்க…
அவனை கூர்ந்து பார்த்தவள் உதட்டை சுழித்து “நம்ம வயித்துக்கு எப்படி பசியோ அது போல இதுவும் உடம்புக்கு! அதுவும் நமக்கு லைசென்ஸ் தான் கொடுத்து இருந்தாங்களே…” ‘நீ என்னை பயன்படுத்திக்கிட்ட’ என்று மறைமுகமாக அவள் கூற..
அவன் திட்டமிட்டு தான் கட்டி தூக்கினான் அவளை… அதிலும் அந்த குழியில் விழுந்தது.. அதன் பின்னான பஞ்சாயத்து எல்லாம் பழம் நழுவி பாலில் விழுந்த கதை தான்!
அதை அவள் சொல்லும் போது அவன் அதனை மறுக்கவில்லை! அதற்காக அவன் வருந்தவுமில்லை!
ஆனால்.. அவளோடு கூடியது அவள் மேல் காதல் கொண்ட பிறகு அல்லவா? அதை ஏதோ காம பசியில் அவன் காய்ந்த மாடாய் கம்பங் கொல்லையில் பாய்ந்த மாதிரி பேசுகிறாளே என்று ஏக கடுப்பு அவனுக்கு!
வேகங் கொண்டு அவள் பேசிய தாக்கத்தில் அதியின் உதடுகளை இழுத்து கடித்தான் ரிஷி!
“என்னடி சொன்ன ஏதோ விமனைசர் மாதிரி நடந்துக்கிட்ட மாதிரி சொல்ற? நான் அப்படிதான் நடந்துக்கிட்டேனா?” என்றவன் அவளை தோள்களை இறுக்கமா பற்றி கண்களில் தீப்பொறி பறக்க கேட்டான்.
“ஆமாம்… வெறும் உடல் தேவைக்கு மட்டுமே என்னை பயன்படுத்திக் கிட்ட! பாரு இப்ப கூட கடித்து வைச்சிட்ட..” என்று அவள் உதட்டை காட்டி பேசியவள், அவன் மார்பில் அடித்தாள் தன் பலங்கொண்டு வேக வேகமாக..
அவனுக்கோ வலித்தது!
அது அவள் அடித்ததினால் அல்ல.. அவள் பேசிய வார்த்தைகளால்..!
அதிதி சட்டென்று யாரையும் காயப்படுத்தாத பெண். அவளிடம் குறும்புத்தனம் இருந்தாலும் அதனோடு அழகிய மனம் படைத்தவள்.
சாதாரணமாக இருந்திருந்தால் கண்டிப்பாக இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க மாட்டாள். ஆனால் அவள் மனதில் அழுத்தமும்.. கூடவே இவ்வளவு மன அழுத்தத்தில் அவள் இருக்கும்போது… அவனின் அந்த ரகசிய சிரிப்பும்.. சீண்டலும்.. தான் அவளை அலைக்கழைத்து இவ்வளவு கோபம் ஆக்கியது.
அவள் அடிகளை வாங்கிக் கொண்டவன் அவளை மடை திருப்ப விருப்பங் கொண்டு, “வேண்டாம் அதி.. வேண்டாம் சொன்ன கேளு டிராக் மாறிடும்டி!!” என்று அவன் ஹஸ்கி வாய்ஸில் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கூற..
“ட்ராக் மாறிடுமா? மாறும் மாறும், ட்ராக் மாறும் வண்டிய பார்ட் பார்ட்டா கட் பண்ணி போட்டுட்டுவேன்! அப்புறம் எங்க அது மாறுறது?” என்று அவள் பேசயதில் தொணித்த இரட்டை அர்த்தத்தை கேட்டவன்,
“அடிப்பாவி..!!” என்று வாயை பிளந்தான். இவள் இப்போது அவளாக இல்லை பயங்கர குழப்பத்திலும் அழுத்தத்திலும் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்.
“நீ ஸ்ட்ரஸ்சா இருக்க அதி. நாம பேசலாம். நான் பேசணும்னு தான் இப்போ இங்க வந்ததே!” என்று அவனும் மென் குரலில் கூறி சமாதானப்படுத்த முயல..
“ஸ்ட்ரெஸ்ல தான் இருக்கேன். பயங்கர ஸ்ட்ரெஸ்ல இருக்கேன்! எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான்! பெரிய ஆன்டி ஹீரோ ரீவேஞ்ச் எடுக்க வந்துட்டான்! உனக்கு ரீவேன்ச் எடுக்க வேற விஷயமே கிடைக்கலையா டா..
அப்படியே கிடைச்சாலும் கடைசியா பொண்டாட்டியை தூக்கிட்டு போறது தானடா நியாயம்! அது தானடா ஒரு ஆன்டி ஹீரோவுக்கான தகுதி.. நீ என்னடா எங்க அம்மாவ தூக்கி கொண்டு போய் உங்க அப்பா கிட்ட கொடுக்கணும்னு சொல்ற?” என்று அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர வாய் விட்டு நகைத்தான் இரு மாதத்துக்கு பின்..
“சிரிக்கிறியா நல்லா சிரி.. ஆனா இந்த அதிதி சாதாரண பொண்ணு கிடையாது! அதை உனக்கு புரிய வைக்கிறேன் பாரு!!” என்றாள். அவன் சட்டென அவளது அதரங்களோடு தன் அதரங்களைப் பொருத்திக் கொண்டான், அவள் மன அழுத்தத்தில் ஏதேதோ பிணாத்தி கொண்டிருக்கிறாள் என்று எண்ணி!
அவளது வெல்வெட் உதடுகள் அவனின் அழுத்தமான உதடுகளில் பொருந்தி அழுந்தியது. அவளோ விடுபட திமிற.. அவளது உதடுகள் இரண்டையும் தன் வாய்க்குள் இழுத்து உறிஞ்சத் தொடங்கினான்.
அவ்வளவுதான்.. அதற்கு மேலும் அவனால் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை!!
அவளை அள்ளிக் கொண்டவன், மஞ்சத்தில் கிடத்தி.. அவளை முழுமையாக தன் மார்பில் படர்த்தி.. அவளது கால்களை தன் கால்களோடு பின்னி பிணைத்துக் கொண்டான்.
அவளது மெல்லிய இதழ்நீரை உறிஞ்சி சுவைத்துக் கொண்டே தன்னவள் இடையை நெறித்தான் இரு கைகளால்…
அதிதியும் அந்நேரம் அவன் மீது இருந்த கோபம் மறந்து கிறங்கியபடி அவனின் இதழணைப்பில் மூழ்கினாள். அவளின் சிறு அசைவு கூட அவனைப் பெருதாய் பாதிக்க.. அவளை அசைய விடாமல் பிடித்துக்கொண்டு அவளது உதட்டு அமுதம் அருந்தினான் ரிஷி!! இருவரும் சிறிது நேரம் தங்களை மறந்து அம்முத்தத்தில் கரைந்து கிறங்க.. மூச்சு முட்டி மெல்ல தன் உதடுகளை பிரித்தாள் அதிதி!
அவனது கண்களில் அவள் மீதான மயக்கம். அதுவும் இரண்டு மாதங்கள் கழித்து அல்லவா? இவளோ அதை உடல் தேவை என்று குறிப்பால் உணர்த்த… “எதுவோ இருந்துட்டு போகட்டும் டி..!” என்று அவளை தன்னுள் அமிழ்த்துக் கொள்ளவில்லை.. அவளுள் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான்.
அன்று இரவு அவன் அருகில் படுத்திருந்தாலும் அவள் நினைவுகள் முழுவதும் காயத்ரியில் மட்டும் தான்!
இரண்டு மாதம் கூட தன்னால் இவனை பிரிந்து இருக்க முடியவில்லை. அதுவும் அவன் காட்டிய.. கூட்டி சென்ற.. அந்த மாய உலகின் மோக உணர்வுகள் அவளை ஆட்டிப் படைத்திற்க..
“அம்மாவால் எப்படி முடிந்தது? தன் உணர்வுகளை அடக்கி இத்தனை ஆண்டுகள் என்னை மட்டும் மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க?” என்று அத்தனை யோசனைகள் அத்தனையிலும் காயத்ரியின் தன்னலம் இல்லாத அன்பும் அதே நேரம் இந்திரனின் ஆழ்ந்த காதலும் மட்டுமே கண்ணுக்கு புலப்பட.. முடிவு எடுத்து விட்டாள், காயத்ரியை இந்திரனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று!!
காதல் மாயம் செய்து கொண்டிருந்தது அவளிடமும்..
மறுநாளே காயத்ரி அருகில் அமர்ந்தவள் அவரது கைகளை தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு அமைதியாக இருக்க.. பெண்ணின் இந்த அமைதி எதனால் என்று அவருக்கு புரியாதா?
தன் அம்மா அப்பா பற்றி அவள் எதுவுமே இது வரை காயத்ரியிடம் விசாரிக்கவில்லை. அதுவே அவள் கொண்ட அன்பை காட்ட…
“நான் அம்மா அப்பா எங்க அண்ணன் நீலகண்டன் உங்க அப்பா சின்ன குடும்பம். அவன் வில்லேஜ் ஆபீஸரா வேலை செய்த இடத்தில உங்க அம்மாவை பாத்துட்டு விரும்பினான். அண்ணி பெயரும் காயத்ரி தான்! எங்க வீட்ல பெரிய எதிர்ப்போ எதிர்பார்ப்போ இல்லை. ஆனால் அண்ணி வீட்டில் பயங்கர எதிர்ப்பு ஜாதி.. சமுகம்னு.. அண்ணன் ட்ரான்ஸ்பர் வாங்குன சமயத்துல உங்க அம்மாவை கூட்டிட்டு வந்துட்டான். இவங்க யாருக்குமே தெரியாத வேறு ஒரு இடத்தில தான் அவங்க வாழ்ந்தது. நான் ஹாஸ்டல்ல தங்கி அப்போ படிச்சிட்டு இருந்த சமயம்”
“எங்க அண்ணன் காதல ஏத்திக்கிட்டது போல.. என் காதலையும் எங்க வீட்டுல ஏத்துபாங்கனு ஒரு தைரியம் வந்தது. அதுவே இந்திரனோடு என் பழக்கத்தையும் காதலையும் அன்பையும் அதிகரித்தது. நீ பிறந்த இப்போது எங்க அண்ணன் போன் பண்ணிச் சொன்னான். எங்க அம்மா பார்த்துட்டு நீ என்னை மாதிரியே இருக்கிறனு சொன்னாங்க..” என்றவர் முகத்தில் அன்றைய நாளின் சந்தோஷம் மின்னியது.
“அப்புறம் அடிக்கடி எங்க அண்ணன் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டே போனான். முதல்ல எனக்கு அது ஏன்னு சரியா புரியல கேட்டா.. ஏதாவது ஒரு காரணத்தை சொன்னான். கூட எங்க அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டுதான்! நான் ஹாஸ்டல்ல இருந்ததினால் ஒண்ணுமே எனக்கு அப்போ சரியா தெரிய விடலை அவன். உனக்கு ஒரு வயசு இருக்கும்போது குலதெய்வ கோயிலுக்கு போய் மொட்டை போடணும் காது குத்தனும்னு சொன்னாங்க… நீங்க போங்க நான் நேரடியா வந்துடுறேன் சொன்னேன். மொட்டை போட்டு காது குத்திட்டு திரும்பி வரும்போது தான்… அண்ணி வீட்டு ஆளுங்க எங்களை வளைத்து பிடித்தது. என்னையும் உன்னையும் அவங்க கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்த எங்க அண்ணன் உடம்பில் அத்தனை வெட்டுகள்.. பிழைக்கவேயில்ல யாரும்!” என்றவர் கண்களில் அத்தனை கண்ணீர்.
‘அவனுங்க விட மாட்டாங்க காயு.. எப்படியாவது என் பொண்ண அவங்க கண்ணுல படாம பாத்துக்கோ.. நீயும் இந்த ஊர்ல எங்கேயும் இருக்காது. சரியான ஜாதி வெறி பிடிச்ச மிருகமுங்க.. ஆணவக் கொலை செய்ய தயங்க மாட்டாங்க ஓடிடு!’ அது தான் அவர் கடைசியா சொன்னது. அப்போதுதான் எங்க அண்ணா ஊர் ஊரா மாறுனதுக்கான காரணம் எனக்கு புரிந்தது”
“ரிஷி சொன்ன மாதிரி நான் இந்திரன் கிட்ட போயிருந்தா கண்டிப்பா என்னால் அவர் உயிருக்கும் ஆபத்து வந்து இருக்கும்! செமஸ்டர் முடிக்கிற வரை நான் காலேஜுக்கு போல.. எக்ஸாம்க்கு மட்டும் எங்க ப்ரொபசர் வீட்டில் இருந்து தெரியாம வந்து எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு, சர்டிபிகேட் வந்த உடனே என் பிரண்ட் அட்ரசுக்கு அனுப்புங்கன்னு சொல்லிட்டு உன்னை தூக்கிட்டு நான் ஊர் ஊரா அவங்க கண்ணுல படாம இருந்து சுத்துனேன். கடைசியா இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்துட்டேன். இங்கிருந்து வெளியேறுனது கிடையாது. வெளி ஆட்களும் டக்குனு இங்க வந்துட மாட்டாங்க.. அதனால இத்தனை வருடமா அவங்க கண்ணுல நான் படல.. இந்நேரம் அவங்க இருக்காங்களா இல்லையானு தெரியல” என்று பெருமூச்சு விட்டார்.
கண்முன்னே தன் அம்மா அப்பா அண்ணன் அண்ணி அனைவரும் வெட்டுண்டதை பார்த்து எப்படி தாங்கிக் கொண்டார் என்று நினைக்கவே அவளுக்கு அழுகை வர.. அன்னையின் புஜத்தில் தலையை முட்டிக்கொண்டு அவள் அழுக.. அவளது முதுகை தடவி சமாதானப்படுத்தியவர் “விடுடா அதெல்லாம் முடிஞ்சது! நீ நல்லா இருக்க இல்லையா எனக்கு அது போதும்” என்றார்.
இப்படிப்பட்டவரின் அன்பை என்னவென்று சொல்ல? அதற்குத் தான் என்ன செய்ய? என்று விழித்தவளின் கண்களில் ரிஷி விழ.. அவனும் அவளைத்தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்! அந்தப் பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிவதாய்…
“சரி கிளம்புங்க நாம ஊட்டி போகலாம்!” என்றாள்.
அவளை காயத்ரி அதிர்ச்சியாக பார்க்க.. ரிஷியோ “தட்ஸ் மை கேர்ள்! மை குட்டி கேர்ள்!” என்று முணுமுணுத்தான். காயத்ரி என்ன சொல்லியும் அதிதி விடவே இல்லை கையோடு கிளப்பி விட்டாள்.
“ஆமா உங்க அப்பா ஊட்டியில் இருக்காங்களா?” என்று ரிஷியிடம் கேட்க..
“இல்லை… கேரளாவுல ஒரு ஆயுர்வேதிக் ஆசிரமத்துல இருக்காங்க.. நான் அமெரிக்கா போவதற்கு முன்னே அவரை அங்கு சேர்த்துட்டு தான் நான் போனேன்” என்றான்.
“அப்போ ஊட்டி கேன்சல் பண்ணட்டு கேரளாவுக்கு போடுங்க டிக்கெட்ட” என்றாள் சிரிப்போடு.
அன்று மாலையே அவர்கள் அந்த ஆயுர்வேதிக் ஆசிரம வாயிலில் இருக்க.. காயத்ரிக்கோ படபடப்பு அதிகமானது. அவர் கையை தட்டிக் கொடுத்து “மீ ரிலாக்ஸ்! நீங்க இதுவரை எங்களுக்காக பார்த்தது போதும்! இனி உங்களுக்கான வாழ்வை பாருங்க.. நீங்கள் எனக்கு உறவுல அத்தையா இருந்தாலும் எனக்கு எப்பவுமே என் அம்மா காயத்ரி தான்!” என்றவளின் குரல் தழுதழுக்க…
அவளை அணைத்துக் கொண்டு கதறிவிட்டார் காயத்ரி.
வீல்சேரில் ஒடுங்கிய உருவமாய் வந்த இந்திரனை பார்க்க தாளவில்லை அவருக்கு. ஓடி சென்று அவரது மடியில் முகம் பதித்து அவர் அழுக.. அவரது வலது கை காயத்ரியின் மீது அணைவாக பதிந்தது.
அங்கே மீண்டும் ஒரு காதல் 23 ஆண்டுகளுக்குப் பிறகு…
அங்குள்ள சம்பிரதாயத்துப்படி காயத்ரிக்கும் இந்திரனுக்கும் திருமணம் நடந்தது. இப்பொழுது அவரால் இடது கையை லேசாக அசைக்க முடிந்தது.
“அவரது ட்ரீட்மென்ட் முடியும் வரை நானும் அவர் கூட இங்கேயே இருக்கேன்” மகள் ஏதேனும் நினைத்துக் கொள்வாளோ என்று கொஞ்சம் தயங்கிப்படியே தான் அவர் கூறினார். ஆனால் அதிதி முகத்திலோ அத்தனை பிரகாசம்!
“என்ன பத்தி நீங்க கவலைப்படாம நீங்க டாடியை பாருங்க மீ..” என்றாள்.
“வாட் டாடியா??” என்று ரிஷி அலற… “எஸ்!” என்று கெத்தாய் சொன்ன அதிதியை ஆதூரமாய் அணைத்துக் கொண்டார் இந்திரன்! அத்தனை கண்டிப்பு கண்களில் மகனைப் பார்த்து…
அன்றே இருவரும் ஊட்டி திரும்பி விட்டனர்.
இவன் வழக்கம் போல மாமி வீட்டில் வண்டியை நிறுத்த.. அவளோ “நான் பிஜியில் தங்கி இருக்கேன்!” என்றவள்,
“அம்மாவுக்காக நீங்க எடுத்த எஃபோர்ட்டுக்கு உங்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கேன்! அதுக்காக நீங்க செய்ததெல்லாம் என்னால மன்னிக்க முடியாது” என்று அவனுக்கு டாட்டா காட்டி சென்று விட்டாள்.
“ஓஹ் காட்….!” என்று அவனது அந்தத் தார் ஜீப்பின் ஸ்டேரிங்கில் தலையைக் கவிழ்ந்து விட்டான் ரிஷி.
“எப்படி இந்த பொடுச.. வழிக்கு கொண்டு வர?” என்று தெரியாமல்…
இதழோடு உறவாட வருவான்…
