இதழோடு உறவாட வா… 23

இதழ்… 23!!



ரிஷி பிரிந்து சென்று இந்த இரண்டு மாதங்களில் எதுவும் மாறவில்லை!! அவளது அதே முந்தைய பழக்கவழக்கங்கள் தான் இப்பொழுதும் தொடர்கின்றன..!!

அப்பொழுது சிறகடித்து பறக்கும் வண்ணத்துப்பூச்சியாய் சிரித்து மகிழ்ந்து உயிர்ப்போடு செய்த வேலைகளை எல்லாம்.. இப்பொழுது கடமையென செய்து கொண்டு இருக்கிறாள் பெண்ணவள்!!

காதல் ஒரு மாயை என்பது எவ்வளவு உண்மை?

ஆனால் அந்த மாயை ரிஷியையும் விட்டு வைத்திருக்குமா என்ன?

விட்டு வைத்திருந்தால் அது உண்மை காதலே இல்லையே!! வெறும் உடல் தேவைக்காக கொண்ட சபலம் மட்டுமே!!

இப்பொழுதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மதில் ஏறி எகிரி குதித்து வருவதில்லை அதிதி!! துள்ளித் திரிந்து ஓடியாடி கொண்டிருந்த சிறு பெண் மறைந்து அங்கே அமைதியும் அழுத்தமும் கொண்ட பெண்ணாய் உருமாறி இருந்தாள் அதிதி இரண்டே மாதத்தில்!

அதிதி நீலகண்டனாக இருந்த பொழுது இருந்த அந்த மகிழ்ச்சியை வாரி துடைத்துக் கொண்டு சென்று விட்டான் ரிஷி தனஞ்ஜயன், அவனது பெயரை இவளிடம் விட்டுவிட்டு…

கொல்லென்று அடிக்கடி சிரிப்பு சத்தம் இப்போதெல்லாம் மாமியின் மாடி வீட்டில் கேட்பதில்லை!!

“என்ன எப்ப பாத்தாலும் க்ளுக்கு க்ளுக்கென்று சிரிப்பு!” என்று கடுகடுத்து பேசும் அனுசுயாவின் வார்த்தைகள் இப்பொழுதெல்லாம் அந்த கேபினில் கேட்பதில்லை!!

“உனக்கெல்லாம் கால் இருக்கிறது நடக்கிறதுக்கா இல்ல ஓடுறதுக்கா? நடந்து போமா!” என்று அக்கறையாக சொல்லும் பியூனின் வார்த்தைகள் இப்போதெல்லாம் அந்த வளாகத்தில் கேட்பதில்லை!!

“அட அதிதி!! இது ஆன்லைன் கிளாஸ்!! ஒரு இடத்தில் உட்கார்ந்து நடத்துமா.. என்னமா நீ பாட்டு காலேஜ் ஃபுல்லா நடந்து நடந்து நடத்துற.. போர்டை காட்டி நடத்த சொன்னா நீ காலேஜ் காட்டி நிறுத்துவ போலயே?” என்று அலுத்துக் கொள்ளும் பரமேஸ்வரன் வார்த்தைகளை எல்லாம் இப்போது யாரும் கேட்டால் தானே? சிரிப்பதற்கு!!

லஞ்ச் பாக்ஸில் திவ்யா கொண்டு வந்திருப்பதை அடித்து பிடித்து உண்டு “நீ போடி” “நீ போடி” என்று சண்டையிட்டுக் கொள்ளும் செல்ல சண்டைகள் அங்கே இப்பொழுது நிகழ்வதில்லை!!

எந்த விழாவிலும் உற்சாகத்தோடு கூடிய ப்ரொப்ஸரின் நடனம் இப்பொழுதெல்லாம் அந்த காலேஜில் நடைபெறுவதில்லை!!

இப்படியாக வானவில்லாக வலைய வந்தவளின் வாழ்க்கையில் வண்ணங்களை திருடிக் கொண்டு தனஞ்ஜயன் சென்றுவிட.. இங்கே வண்ணமற்ற நிலவாய் பெண் தேய்ந்து கொண்டிருந்தாள்!!

ஒரு மனமோ “எல்லாமே பிளான் போட்டு தான் செய்து நம்மை இப்படி ஆட்டிவித்து இருக்கிறான்” என்று அவனை குற்றம் கூறினாலும்..

மறுமனமோ அவன் காட்டிய அன்பில்.. நேசத்தில்.. அவளோடு இருந்த தாம்பத்தியத்தில் எதிலுமே ஒரு சிறு நடிப்பையோ பாசாங்கையோ அவள் பார்த்ததில்லை! பின் எங்கனம் மற்றொரு மனம் அவனை நிந்திக்கும்? 

இப்போதெல்லாம் அவளுமே ரிஷியை நிந்திப்பதில்லை!!
எல்லாம் தனக்குத்தானே.. 
தான் தான் தப்பு என்று நமக்கு நாமே திட்டம் போல தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

இரண்டு மாதத்தில் பத்து ஆண்டுகள் மூப்பு வருமா என்ன? வந்திருந்ததே காயத்ரிக்கு! பெண்ணின் வாழ்க்கையை நினைத்து!!

ஏதோ ஒரு காமூகன் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து சென்று இருந்தால்.. அவனை வெட்டி விட்டோ இல்லை அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்து விட்டோ பெண்ணின் வாழ்க்கையை சரி செய்து இருப்பார் காயத்ரி!

ஆனால் அவள் வாழ்க்கை சீரற்றறு இருப்பது காமூகனால் அல்லவே! காதல் கொண்ட கணவனால் அல்லவா??

முதல் ஒரு மாதம் அதிதியோடு ஊட்டியிலேயே மாமி வீட்டின் மாடியிலேயே தங்கி இருந்து அவளை தேற்ற அவர் பெரும் பாடுபட்டார். ஆனால் அதற்குப்பின் தன்னை பார்த்தே மருகும் அன்னையை கண்டவளுக்கு அவன் ஒருவனுக்காக தன்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரையும் வருத்த அவளுக்கு பிடிக்கவில்லை.

அவ்வப்போது திவ்யாவும் வந்து இவர்களோடு தங்கி விட்டு ஆறுதல் சொல்லி செல்ல.. திலீபன் பார்க்கும்போது அவளை பாவமாய் பார்க்க.. இந்த பார்வைகள் அவளுக்கு பிடிக்கவில்லை.. சுத்தமாக பிடிக்கவில்லை! 

தன்னைத்தானே அதற்காகவே மாற்றிக் கொண்டவள், முதலில் அன்னையை கொண்டு வந்து ஊரில் விட்டு அவரது வேலையை திருப்பி பார்க்க செய்தாள். அப்படியாவது அவர் மனது திசை திரும்பட்டும் என்று!!

அதேபோல மீண்டும் அவளுடைய வேலையை அவள் தொடங்க இப்பொழுது மனம் சமன்பட்டு இருந்தாலும் உள்ளே உள்ள ரணம் ஆறவில்லை!! மாறா வடுவாய் அவன் காதலும் அதன் துரோகமும்!!

இப்படியாக அன்னையை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு இவள் தன்னுடைய வேலைகளில் மூழ்கி அவனை மறக்க நினைத்து.. அதனை மறந்து கொண்டு இருந்தாள்!

அன்று வெள்ளிக்கிழமை.. முன்பு போல மதிலேறி குதித்து செல்லும் நினைவுகள் ஏதோ போன ஜென்மமாய் தோன்ற.. அந்த மதிலை பார்த்து விரக்தியாய் சிரித்தவள், பின் ‘பழையதை நினையாதே மனமே!’ என்று தனக்குத்தானே உரு போட்டுக் கொண்டு வேகமாக காலேஜ் கேம்பஸ் விட்டு வெளியே வந்தாள். வழக்கம் போல ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து தங்கள் கிராமத்திற்கு பேருந்து ஏறினாள்.

ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு இளையராஜாவின் இன்னிசையில் எஸ்பிபி அவளை சுகமாக தாலாட்ட.. அந்த லயத்தில் தன்னை மறந்து பாட்டின் வரிகளிலும் இசையிலும் உருகி உறைந்து இருந்தாள்.

இவளை அறிந்தவர் தானே அந்த நடத்துனரும், வழக்கம் போல சத்தமாகவே அவளை கூப்பிட்டு அவள் நிறுத்தம் வந்ததும் சொல்ல.. முன்ன எல்லாம் அட்டகாசமான சிரிப்போடு “நன்றி! வணக்கம் ணா!” எல்லாம் சொல்லி செல்பவள், இப்போது அமர்த்தலான சிரிப்போடு அமைதியான தலையசைப்போடு இறங்கி செல்வதை பார்த்து நடத்துனருக்கும் அவளது வித்தியாசம் புரிவதாய்..!!

வீட்டுக்குள் வந்தவளை செல்லியும் காயத்ரியும் தான் அத்தனை பேசி அவளை நார்மலாக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். இவளோ மெல்லிய சிரிப்போடு.. கேட்ட கேள்விக்கு பதிலை மட்டுமே உதிர்த்துக் கொண்டிருந்தாள் முத்தை போல.. உண்டு விட்டு உறங்கும் மகளை மனதில் வலியோடு ரணத்தோடு பார்த்திருந்தார் காயத்ரி.

 மறுநாள் அன்னைக்கு முன்னே எழுந்து இவள் அடுப்படியில் நிற்க.. இப்போது எல்லாம் இதுபோல் அதிசயங்கள் சாதாரணமாக நிகழ்வதால், அதிர்ந்து விடவில்லை காயத்ரி!

பெண்ணோடு சாதாரணமாக உரையாடிக்கொண்டு அன்றைய உணவை சமைக்க.. உண்டு விட்டு இவள் மலைவாழ் கிராமத்திற்கு பாடம் எடுக்க சென்று விட்டாள்.

“மீ.. மத்தியானம் வரமாட்டேன்! நீ எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிடு நான் சாயந்திரம் போலவே வரேன்” என்று கூறி சென்றாள்.

இன்னும் அந்த கிராமத்தில் ரிஷி இவளை விட்டு பிரிந்து சென்றது யாருக்கும் தெரியாது. முதலில் இரண்டு வாருங்கள் வந்தவன் அதன்பின் வரவில்லையா என்று கேட்க அவர் ஆராய்ச்சிக்காக வெளிநாடு சென்று இருப்பதாக காயத்ரி கூறியிருந்தார்.

அவன் இந்த கிராமத்திற்கு வரும்போதே ஆராய்ச்சி செய்ய என்று தானே தர்மனிடம் சொல்லி இருந்தான். அதனால் மற்றவர்களுக்கு அது பெரிய வித்தியாசமாய் தெரியவில்லை.

அந்த கிராமத்தைப் பொறுத்தவரை துள்ளித் திரிந்த அதிதி கல்யாணத்திற்கு பின் பொறுப்பாய் மாறிவிட்டாள் என்பதே! 

“டீச்சரின் வளர்ப்பு அப்படி! என்னதான் சின்ன புள்ள மாதிரி சுத்திக்கிட்டு திரிஞ்சாலும் கல்யாணத்துக்கு அப்புறம் பொறுப்பு வந்துருச்சு பாத்தியா?” என்று சிலாகித்துக் கொண்டனர்.

அவள் ரணங்கள் தெரியாது! அவள் மன வலிகள் புரியாது.. அங்கே உள்ளவர்களுக்கு!

இப்படியாக இவள் கல்யாணத்தை தெரிந்தவர்களும்.. இவர்களை தெரிந்தவர்களும்.. இரு வேறு விதமாய் நினைத்துக் கொண்டிருக்க.. அந்த நினைப்பு எல்லாம் பொய்யாக்கி இந்தியாவுக்கு திரும்பி இருந்தான் ரிஷி தனஞ்ஜயன்!


அன்று மலைவாழ் பிள்ளைகளுக்கு இவள் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஊசியாய் குத்தும் பார்வை அவள் முதுகை துளைக்க.. அந்த கணத்தை உணர்ந்தவளின் மனதில் மெல்லிய நடுக்கம், அவள் நினைத்தது சரிதானா என்று!

மெல்ல திரும்பி அந்த குடிலின் உள்ள சாளரத்தின் வழியே வெளியே பார்க்க.. 

அவள் எண்ணத்தை பொய் ஆக்காமல் அந்த சாளரத்தில் ஒரு பக்க தோளை சாய்த்துக் கொண்டு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளைத் தான் பார்த்தவாறு நின்றிருந்தான்..
ரிஷி தனஞ்ஜயன்!

அவனா? அவனே தானா? வந்து விட்டானா? இல்லை காட்சிப்பிழையா? அவன் கானல் நீரா? என்று புரியாமல் கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்க..
அங்கே அவன் இல்லை!

“ச்சே.. என் நினைவே நிஜமாய் தெரிகிறது!” தனக்குத்தானே தலையில் அடித்துக் கொண்டு அவள் பாடத்தை தொடர்ந்தாள்.

மீண்டும் முதுகுத்தண்டில் ஜில்லிடும் குளிர்ச்சியான ஓர் உணர்ச்சி… “என்னது இது புதுவித தாக்கம்? என்னாது எனக்கு?” என்று மீண்டும் வாசல் அருகே பார்க்க..

அங்கே வசீகர புன்னகையோடு கண் சிமிட்டலோடு நின்றிருந்த ரிஷி, அவள் கண்ணை மூடி திறந்து பார்ப்பதற்குள் மறைந்து விட்டிருந்தான்.

“அதிதி.. லூசி! உனக்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது! அவன் வரல.. வரவே இல்லை! இது எல்லாம் காட்சிப் பிழை.. அதை கண்டு ஏமாறாதே!” என்று அறிவு அதட்ட..

“அதானே பார்த்தேன்! அவனாவது வரதாவது? கட்டம் கட்டி தூக்கி வேண்டியதை அடைந்து விட்டான் அல்லவா? இனி நான் எதற்கு தேவைப்பட போகிறேன்! எச்சில் இலையாகி விட்டேன்.. தூக்கி எறிந்து விட்டான்!” என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு துளி நீர் அவள் இடது கண்களில் இருந்து சர்ரென்று கன்னத்தில் வழிய… அது அவளது தாடையை தாண்டும் முன் தடித்த நீண்ட விரல் அவற்றை துடைத்து விட..

அந்த விரலின் ஸ்பரிசமும்.. அது கொடுக்கும் வெம்மையும்.. அவன் யார் என்று அதிதிக்கு உணர்த்த, விசுக்கென்று திரும்பியவள் முன்னே மீண்டும் மாய சிரிப்போடு நின்றிருந்தான் மாயவன்!!

அவனைக் கண்டு மற்ற பிள்ளைகள் எல்லாம் சந்தோஷ கூச்சலோடு “மாமா வந்துட்டாங்க அதிதி கா..!” என்று கூச்சல் போட்டு அவனை சுற்றிக்கொள்ள..

அவனோ “டேய் கொஞ்சம் விடுங்கடா மலையேறி இருக்கும் மாரியாத்தாவ இறக்கிவிட்டு வருகிறேன்” என்று மனதுக்குள் நினைத்தாலும் அந்த பிள்ளைகளின் பாசத்தைக் கண்டு 
மனதினுள் உவகை தான்!

தன் கையில் அவர்களுக்கு என்று வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை கொடுத்தவன் “இன்னைக்கு உங்களுக்கு கிளாஸ் கிடையாது! இதை போய் உங்க மூத்தார் கிட்ட கொடுத்து எல்லாருக்கும் பங்கு பிரிச்சுக்கணும்! சரியா?” என்று அவனின் ஆளுமையான குரல் அவளின் அகத்தினை நிறைக்க…

“இல்லை! இல்லை! இது வெறும் கனவு! அவன் வரவில்லை.. இது வேற யாரோ!” என்று கண்களை மூடி அக்குரலினை விரட்ட அவள் பாடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அதி மென்மையாக அவளது காதில் அவனின் சுவாசக் காற்றின் சூட்டோடு வந்து மோதியது அந்த ஆளுமையான குரல்.. “அதி..” என்று!

கண்களை இறுக்க மூடியிருந்தவள் காதுகளையும் இறுக்க பொத்திக் கொண்டு நிற்க.. அவளை தொடாமல் சுற்றி வந்தவன் கண்களுக்கு.. செழுமை வற்றி ஏனோதானோ என்று இருக்கும் மனைவியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை! கண்களை இறுக்க மூடி திறந்தவன், பின் பெருமூச்சு விட்டு சமாதானப்படுத்தி மீண்டும் “அதி..” என்று அழைக்க…

மதுரை எரித்த கண்ணகியாய் கண்களில் கனல் கொண்டு கணவனை பார்த்தாள் அதிதி!!

“அச்சோ.. பயமா இருக்கே! இவ்வளவு ஹாட் என் உடம்பை தாங்காதே அதிமா!” என்று உரைத்தவன் இரு கைகளாலும் அவள் தாடையை தாங்கி நெற்றியோடு நெற்றி முட்டி சிறிது நேரம் அப்படியே இருந்தான்.

அவனுக்கே உண்டான அந்த ஆண்மை வாசமும், அவன் கைகளின் வெம்மையும்.. அந்த சுடு ஸ்பரிசமும்.. இரண்டு மாதங்களாய் அவள் தவித்த தவிப்பிற்கு மயிலிறகாய் மருந்திட… 

ஒரு கணம் அவளையும் அறியாமல் அதில் லயித்து இருந்தாள். மறுகணம் அவனை தள்ளிவிட்டு வேகமாக குடிலை விட்டு வெளியேறினாள்.

ஆழ்ந்த மூச்சுவிட்டு தன்னை சமன்ப்படுத்தியவன், அவளை பின்தொடர்ந்தான். வெகு வேக வேகமாக சென்றவள் பாதையை கவனிக்காமல் செல்ல அங்கிருந்து சிறு சிறு செடிகளும் முட்களும் அவள் கால்களை கிழிக்க…

“ஏ அதி பார்த்து போ டி! முள்ளு கிழிக்குது வலிக்கும் டி!” என்று இவன் பின்னே கத்திக்கொண்டே செல்ல…

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள், “நீ குத்தி கிழிச்சதை விட இது ஒன்னும் பெருசா கிழிக்கல.. நீ கொடுத்த காயத்த விட இதுவொன்னும் பெருசா என்னை காயப்படுத்தல.. அந்த வலிக்கு முன்னாடி இதெல்லாம் வலியெல்லாம் வெறும் தூசு!” என்று ஆத்திரமாக மொழிந்தவள் விறுவிறுவென்று வேகமாக நடைபோட்டாள்.

இடவலமாக தலையாட்டிக் கொண்டவன் மீண்டும் அவள் பின்னே ஓடினான்.

ஏற்கனவே அவர்கள் விழுந்த அந்தப் பள்ளம் வர அதை பார்த்தவன் “ஏய்.. திரும்பவும் பள்ளத்துக்குள்ள விழுந்து தொலைச்சுராதடி!” என்று அவள் கையை பிடித்து நிறுத்தினான். 

அந்த அளவிற்கு வேகமாக கண்முன்னே இருப்பது எதுவும் தெரியாமல் சென்றாள். அவளது கண்ணீர் அவற்றை மறைக்க வெகு வேகமாக சென்று இருந்தவள் கண்டிப்பாக அந்த குழியில் விழுந்திருப்பாள்.

தீச்சுட்டார் போல அவன் கையை அவள் விடுவித்துக் கொள்ள போராட இன்னும் அழுத்தமாக இறுக்கிக் கொண்டான் அவளது கைகளை.

“அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு நீ போக முடியாது!” என்றவனின் குரல் இப்பொழுது முற்றிலுமாக மாறி இருந்தது. சிறிது நேரத்துக்கு முன் அவன் குரலில் இருந்த தவிப்போ கொஞ்சலோ கெஞ்சலோ இப்போது இல்லை! வெறும் இறையை தவிர விடக்கூடாது என்று பிடித்திருக்கும் அரிமாவாய் உறுமினான்.

‘நீ ஆண் அரிமா என்றால் நான் பெண் அரிமா டா! இந்த சலசலப்புக்கு எல்லாம் காட்டு விலங்குகள் வேண்டும் என்றால் பயம் கொள்ளும்! ஆனால் காட்டு ராணி.. நான் பயம் கொள்ள மாட்டேன்!’ என்று நிமிர்வாய் அவன் கண்களை அவள் பார்க்க ஆணவன் கண்களிலோ மெச்சுதலாக ஒரு பாவனை!!

சட்டென்று அந்த பாவனையை மாற்றிக் கொண்டவன் “திரும்பவும் இந்த குழிக்குள்ள நீ விழுந்து.. உன்னை காப்பாற்ற நானும் விழுந்து.. நம்மள காணும்னு இவங்க எல்லாம் மறுபடியும் தேடி இந்த குழிக்குள்ள நம்மள கண்டுபிடிச்சு திரும்பவும் ஒரு பஞ்சாயத்து வைக்க போறானுங்கடி..” என்று இவன் கண்ணடித்து சிரிக்க…

“அப்படியே பஞ்சாயத்து வச்சாலும் உன்ன கட்டிக்க மாட்டேன் நானு!” என்று அவன் கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு அவள் முன்னேற…

“நீ கட்டிக்கலைன்னா பரவால்ல.. நான் கட்டிப்பேன்!” என்றவன் அவள் எதிர்பாராத தருணத்தில் இடையோடு இழுத்து தன்னோடு அணைத்திருந்தான், வெறும் இடையை மட்டுமல்ல இதழ்களையும் தான்!!

பட்டப் பகலில் நட்ட நடு காட்டில் இதழ் அமுதம் விழுங்கிக் கொண்டிருந்தான் ரிஷி!

கணவனின் இதழ் சமரில் தன்னை தொலைத்து அவளும் சிறிது மயங்கி முயங்கி நிற்க.. அடுத்த நிமிடம் அவனை தள்ளிவிட்டவள், கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேகமாய் ஓடினாள்.
அவளின் வேக ஓட்டம் நின்றது அவள் வீட்டில் சென்று தான்.

மூச்சு இறைக்க இறைக்க வந்து நின்ற மகளை கண்டு பயந்துவிட்டார் காயத்ரி! மதியம் சாப்பிட வரமாட்டேன் என்றவள் இப்படி வந்து நின்றால் என்ன நினைப்பது? அதுவும் அவளின் சுடிதார் டாப்ஸ் ஆங்காங்கே முள்ளில் கிழித்திருக்க தலை எல்லாம் பறந்து ஒருவித பதட்டத்தோடு நின்ற மகளை கண்டவருக்கு மனம் பதைபதைத்தது!

“என்னாச்சும்மா? என்னாச்சு அதி?” என்று அவளை தாங்கிக் கொண்டார்.

“மீ.. மீ..!” என்றவளுக்கு அதுக்கு மேல் ஒரு வார்த்தை கூட வரவில்லை கையை மட்டும் வாசல் பக்கம் காட்ட.. அங்கே அழுத்தமான நடையோடு கூர் விழியோடு அவர்களை நோக்கி தான் வந்து கொண்டு இருந்தான் ரிஷி தனஞ்ஜயன்.

வாங்க என்று அழைக்க முடியாமல் வந்தவனை கண்டு சற்று திகைத்தவர், பின்பு கோபம் கொண்டு மகளை விடுத்து அவனின் சட்டையை பற்றி விட்டார்.

“எவ்வளவு தைரியமா இருந்தா இப்படி பண்ணி இருப்ப? சொல்லாம கொள்ளாம நீ பாட்டுக்கு போய்ட்ட இங்கே என் மகள் பட்ட துன்பம் தெரியுமா? வலி தெரியுமா? வேதனை தெரியுமா உனக்கு? காதல் கல்யாணம் இதெல்லாம் உனக்கு சும்மா போச்சா? பத்து நாள் குடும்பம் நடத்திட்டு இப்படி ரெண்டு மாசம் சொல்லாம கொள்ளாம போனா அவளோட மனநிலை யோசித்தாயா நீ? உடலாலேயும் மனதாலேயும் அவ எவ்வளவு வேதனை பட்டு இருப்பா தெரியுமா?” கண்களால் மகள் பட்ட வேதனையை நேரில் பார்த்தவர் அல்லவா? அதன் தாக்கம் பெரும் ஆத்திரமாய் வெடிக்க அவற்றை ரிஷியின் மீது கொட்டிக் கொண்டிருந்தார் காயத்ரி.

“காதல் கொடுத்த காயம் எல்லாம் அவளுக்கு மட்டும் தானா? வேற யாருக்கும் இல்லையா?” என்றவனின் அழுத்தமான குரல் ஒரு கணம் அவரை யோசிக்க வைக்க.. நெற்றி சுருங்க அவனைப் பார்த்தார்

“உங்க மக பட்ட வலி ரணத்திற்கு என் சட்டையை புடிச்சு கேள்வி கேட்டுடீங்க? நீங்க கொடுத்த ரணத்திற்கு நான் யாரிடம் சென்று கேள்வி கேட்பது?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கேட்ட நியாயத்தில் விக்கத்து நின்றவர் சட்டென அவனது சட்டையிலிருந்து கைகளை எடுத்தார். அவரது கால்கள் தள்ளாடி தள்ளாடி பின்னே சென்றது.

கால்கள் மட்டுமல்ல காலங்களும் பின்னே செல்ல.. அவர் முன்னே புன்னகை முகமாக ஆண்மை ததும்பும் ஒரு முகம்!!

“என் அப்பா.. இந்தர்.. இந்திரேந்திரன்! அவருக்கு யார் நியாயம் செய்வது?” என்றதும் முற்றும் முழுதாக… உடைந்து நின்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் மெல்ல மெல்ல உடைப்பெடுத்து பெரும் மழையானது!

“நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?” என்று அதுவரை தன் துக்கத்தில் உழன்றவள் ரிஷியின் பேச்சைக் கேட்டு தவித்தாள். இவன் சொல்வது போல்.. நடந்தால்.. அப்படி என்றால் உறவு முறையே மாறுகிறது அல்லவா?

“நான் தெளிவா தான் சொல்றேன்! என்றவன் “நான் இந்திரனுடைய மகன் தனஞ்ஜயன்.. ரிஷி தனஞ்ஜயன்!” என்றான்.

“மீ.. அவர் என்ன லூசு மாதிரி உளறிட்டு இருக்காரு! நீங்க சொல்லுங்க.. அவர் சொல்றதெல்லாம் பொய் என்று சொல்லுங்க.. மீ சொல்லுங்க..” என்று தவிப்பு பதட்டம் அத்தனையும் காட்டி காயத்ரியிடம் கெஞ்சினாள் அதிதி.

“உறவுமுறை தப்பு தான்! என்ன செய்வது?” என்று அசலாட்டாக கூறி தோளை உலுக்கியவன் “என் அப்பாவை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்க மகளை நானும் ஏற்றுக்கொள்கிறேன்!” என்றதும் இரு காதுகளையும் பொத்திக்கொண்டு “ரிஷி..!” என்று கத்தினாள் அதிதி.

“உறவுமுறை தப்புன்னு தான் சொன்னேன். அது எங்க உறவு முறை அல்ல.. உன்னுடைய உறவை தான்! அவங்க எனக்கு தான் அம்மா முறை.. உனக்கு இல்லை! அதனால் தான் அவங்களை கூப்பிடும்போது அத்தையினு கூப்பிடாம ஆன்ட்டின்னு கூப்பிட்டேன்!” என்றான் ரிஷி.

“என்ன அம்மா நான் சொன்னது சரி தானே? இவ்வளோ அதிர்ச்சி எதுக்கு? இந்த டிவிஸ்ட்டை நீங்க எதிர்பார்க்கலையா??” என்று இதழ்களில் நெளிந்த இகழ்ச்சி புன்னகையோடு கேட்டான் ரிஷி!

சத்தியமாக காயத்ரி இப்படி ஒரு அதிர்ச்சியை அதிர்ச்சியான தகவலை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை! அவளுக்கே இவ்வளவு அதிர்ச்சி என்றால்.. அதிதிக்கு??

 “காயத்ரி தன் அம்மா இல்லை!” என்று கேட்டுக் கொண்டிருந்த அதிதியின் மனநிலையோ இன்னும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.

“இவங்க என் அம்மா இல்லை என்றால்.. அப்போ என் அம்மா யாரு? அப்பா யாரு ?” கண்களில் கண்ணீர் வழிய ரிஷியையும் காயத்ரியையும் மாறி மாறி பார்த்திருந்தவள் இந்த அதிர்ச்சி தாள முடியாமல் மயங்கி சரிந்தாள்!

காயத்ரிக்கு முன் அவளை எட்டிப் பிடித்திருந்தான் ரிஷி!!


இதழோடு உறவாட வருவான்…








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *