இதழோடு உறவாட வா… 22

இதழ்… 22!!



பத்து நாட்களாக அவன் காட்டிய அன்பு பொய்யா? 
மயங்கி முயங்கி அவளிடம் கிடந்த அந்த நேசம் பொய்யா?? 
அந்த ஐந்து நாளும்.. அதற்கு பின் இருந்த தாம்பத்தியம் பொய்யா??
ஒவ்வொரு விஷயத்திற்கும் பார்த்து பார்த்து செய்யும் அந்த பாசம் பொய்யா??
நீ இன்றி நான் இல்லை என்று ஓர் உடலாய் ஒருமித்த சங்கமங்கள் கொண்ட காதல் பொய்யா?

இதில் எது பொய்? எது மெய்? என்று தெரியாமல் தெளிய முடியாமல் தலையை இரு கைகளாலும் அழுத்தமாக பிடித்துக் கொண்டு கலங்கி தவித்தாள் அதிதி.

அவளால் நிம்மதியாக கண்களை மூட முடியவில்லை படுக்கையில்!

இளவம் பஞ்சு மெத்தை முள் படுக்கையாய் அவளை குத்தியது!! அவனின்றி…!!

ஊசியாய் உடலை குத்தும் ஊட்டி குளுமை தனலாய் தகித்தது!! அவனின்றி…!!

இரவானால் இமைகள் இரண்டும் ஆலிங்கனம் செய்யும் தூக்கம் தூரம் போனது!! அவனின்றி…!!

அவனின்றி… அவனின்றி… 
எதுவும் சுகிக்கவில்லை..! 
எதிலும் லயிப்பில்லை..!

ஐந்து நாட்களாக அவன் காட்டிய அந்த தாம்பத்திய உணர்வுகள் இப்போது அவனின்றி அவளுள் பேயாய் சுழட்டி அடித்தது!!

அவன் வேண்டும்!
அவன் அருகாமை வேண்டும்!!
அவன் ஸ்பரிசம் வேண்டும்!!
அவன் இதழ் முத்தம் வேண்டும்!!
அவன் திண்ணிய மார்பு சூடு வேண்டும்!!
அவன் திரண்ட புஜங்களின் இறுகிய அணைப்பு வேண்டும்!!
அவன் மார்பு ரோமங்களின் மென் ஸ்பரிசம் வேண்டும்!!
அவன் கற்றை மீசை செய்யும் காயம் வேண்டும்!!
அவன் தாடி காடுகள் செய்யும் மாயம் வேண்டும்!!
அவன் அவளுள் வேண்டும்!!
அவனே அவளாய் வேண்டும்!!

காதல் உணர்வுகளும்..
மோக தவிப்புகளும்..
தாப வேட்கைகளும்..
காம முத்தங்களும்.. 
இருவருக்கும் பொது அல்லவா?
இதில் ஆண் என்ன? பெண் என்ன?

கற்பை மட்டுமல்ல காதலையும் காமத்தையும் இருவருக்கும் நடுவில் தான் வைக்க வேண்டும்!!

சிறு பெண்ணை சலனப்படுத்தி.. ஈர்க்க வைத்து.. மையல் கொண்டு காதலாடி மோக களவாடி… இன்று பிரிந்து சென்றால் அவள் எங்கணம் தாங்குவாள்???

சொல்லி பிரியும் பிரிவு வேறு.. இத்தனை நாட்கள் தானே என்று மனதை தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும்!!

உணர்ச்சி குவியலில் தள்ளி விட்டு திடீரென்று பிரிந்து சென்று, என்று வருவான் என்று தெரியவில்லை என்றால்… அவள் மனதின் நிலை??

விடிய விடிய உறங்காமல் தன்னை தானே நொந்துக் கொண்டு அவன் மீது தான் கொண்ட காதலை ஏற்காமல் சென்றவனை மனதால் தவிர்க்க முடியாமல் தவித்து உருகி தூக்கமின்றி களையிழந்து போனாள் மாது!!

மறுநாள் கல்லூரிக்கு ஏனோ தானோவென்று சென்ற அதிதியை பிடித்த திவ்யா “டி அதி! முக்கியமான விஷயம் பேசணும். ஆனா இப்ப அனுசுயா இருக்கு. நம்மள பாத்துக்கிட்டே இருக்கு. அதனால இப்ப பேச முடியாது அவ கிளாஸ் போனதுக்கு அப்புறம் பேசலாம்!” என்று குசுகுசுத்தாள் திவ்யா.

“சரி!” என்று தலையசைத்தாள் அதிதி.

திவ்யா சென்றதும் மீண்டும் ரிஷியின் நினைவுகள் அதிதியை ஆட்கொள்ள.. தன் காயத்தை தானே நக்கி ரணப்படுத்திக் கொள்ளும் மிருகமாய்.. மீண்டும் மீண்டும் அவனை நினைத்து தன்னை தானே ரணப்படுத்திக் கொண்டிருந்தாள் அதிதி.

அவளுக்கு இன்னுமே ரிஷி தன்னை இப்படி திக்கென்றது விட்டு சென்றதை நினைத்து தாளவே இல்லை! 

“என்னாச்சி இந்த அதிதிக்கு ரெண்டு மூணு நாலு சரியில்லாம இருக்கா? ஒரே டல்லா இருக்கா! கிளாஸையும் சரியா எடுக்கறதுலனு கேள்விப்பட்டேன்! இப்படியே இருந்தா சரி வராது சொல்லிட்டேன்! அப்புறம் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவேன்! புரிஞ்சுதா? வேலைக்குனு வராளுங்களா இவளுங்க.. சும்மா மேக்கப் போட்டுட்டு லாத்த வேண்டியது!” என்று ஹெச்ஓடி ஆகாமலேயே அந்த பொறுப்பை தனதாக்கிக் கொண்டு அனுசுயா பேச…

“அனுசுயா மேம்.. தட்ஸ் யுவர் லிமிட்! அவளுக்கு உடம்பு சரியில்லை! சும்மா நீங்க பேசிட்டு இருக்காதீங்க.. உங்க வேலையும் சேர்த்து செய்யக்கூடிய கெப்பாசிட்டி அவளுக்கு இருக்கு. முடிஞ்சா நீங்க போய் பிரின்ஸ்பல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிக்கோங்க! அதோட முக்கியமான ஒன்னு நீங்க இன்னும் டிபார்ட்மெண்ட் ஹெட் ஆகல! சரியா? அதுக்கு முன்னாடி இவ்வளவு ஆட்டம் எல்லாம் ஆடாதிங்க! அப்புறம் தொபக்கடீர்னு விழுந்திடுவீங்க!” என்று நறுக்குத்தெரித்தாற் போல் நச்சென்று பேசிய திவ்யாவை முறைக்க மட்டுமே முடிந்தது அனுசுயாவால்.

பிரின்ஸ்பாலிடம் அவளால் நிச்சயமாக கம்பளைண்ட் செய்ய முடியாது! அப்படியே செய்தாலும்.. இப்பொழுதுதான் கல்லூரிக்கு நற்பெயரை எடுத்துக் கொடுத்து இருக்கிறாள் அதிதி! அதனால் கண்டிப்பாக நிர்வாகம் அவள் பக்கம் தான் பேசும் என்ற அரசியல் தெரியாத அளவு சின்ன பிள்ளை இல்லையே அனுசுயா? அதனால் அடக்கியே வாசித்தாள்!! ஆனால் பார்வை மட்டும் அவர்கள் இருவரையும் குத்தி கிழித்து கொண்டிருந்தது! அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அதிதி இல்லை.

ஒரு வார்த்தை சொன்னாலே அதை பிடித்துக் கொண்டு பத்து வார்த்தையாக திருப்பி அடிக்கும் குணமுடைய அதிதி அனுசுயா பேசியது எதையுமே கண்டுகொள்ளாமல் தன் போக்கிலேயே உழண்டு கொண்டவளை பார்த்து திவ்யாவுக்கு தான் மனம் கசிந்தது. 

அனுசுயா எப்பொழுது செல்வாள் என்று பார்த்திருக்க.. ஒரு பீரியட் முழுக்க அவள் எழவே இல்லை! இவர்களை ஆராய்ந்துக் கொண்டே இருந்தாள்.

‘நாம் இங்கிருந்தால் இவளும் போக மாட்டா! ஏதாவது இவள் வம்பு இழுப்பா!’ என்று யோசித்த திவ்யா,

“அதி.. எனக்கு இந்த பீரியட் கிளாஸ் இருக்கு! வரேன்” என்று அதிதியிடம் கூறுவது போல பொதுவாக கூறிவிட்டு சென்றாள் திவ்யா!

அன்றைய வகுப்பில் மாணவர்களிடம் சில வேலைகளை ஒப்படைத்துவிட்டு மீண்டும் கேபினை நோக்கி வந்தாள்.

அனுசுயா இருக்கிறாளா என்று பார்க்க அவள் இல்லை என்றவுடன் தான் அவளிடம் தானாய் ஒரு நிம்மதி எழ.. தன் ஃபோனை எடுத்து “சார்.. வாங்க!” என்று கூறிவிட்டு வைத்து விட்டாள்.

சற்று நேரத்தில் திலீபன் அங்கே வந்தான். திலீபனை பார்த்ததும் “வாங்க திலீபன் சார்!” என்று திவ்யா அழைத்ததும் அதிதி மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள். முகத்தில் பழைய விரிந்த புன்னகை இல்லை என்றாலும் மெல்ல விரிந்தது அந்த வறண்ட இதழ்கள்!!

அந்த செழுமை இதழ்களை அவ்வப்போது எச்சில்படுத்தி கொடுமைப்படுத்தும் ஜோடி இதழ்கள் தான் இங்கே இல்லையே??
எங்கே என்று தான் அவள் அறியவில்லையே!!

“சார்.. வந்த விஷயத்தை சொல்லுங்க சார்!” என்றாள் திவ்யா.

 “ஏன் அதிதி மேம் இப்படி இருக்காங்க?” என்று ஆற்றாமையுடன் கேட்டான் திலீபன்.

“அதனால் தான் உங்களை விசாரிக்க சொன்னேன் சார். நீங்க அதை சொல்லுங்க, அப்பவாவது அவ மனசு மாறுறாளானு பார்ப்போம்!” என்று தோழியை வேதனையோடு பார்த்து கூறினாள் திவ்யா.

இவர்கள் இருவரின் சம்பாஷனையை கேட்ட அதிதிக்கு மனதில் மெல்லிய நடுக்கம்!! ‘இன்னும் என்ன பூகம்பம் வரப்போகிறதோ?’ என்று தவிப்போடு திலீபனை பார்த்தாள்.

“அதிதி மேம்…நீங்க டெல்லிக்கு போய்ட்டு ரிட்டன் வந்த நாள் தான் ரிஷி சாரை பார்த்தேன்” என்றான். 

ரிஷி என்ற வார்த்தையில் ஒட்டுமொத்த ரத்தமும் முகத்தில் பாய கண்கள் ஒளியோடு அவனைப் பார்த்தாள் அதிதி.

“நீங்க வாங்குனா மெடல்ஸ் செர்டிபிகேட்ஸ் இதெல்லாம் பற்றி கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாரு. அதுக்கு அப்புறம் கனடா போக போறேன்னு சொன்னார்” என்றான்.

‘இது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தானே!’ என்று முகம் வாடி போனது அதிதிக்கு‌. எப்பொழுதும் சலசலவென்று பேசும் இந்த பெண் இப்படி அமைதியாக இருப்பது ஏனோ அவனுக்கும் ஒரு வித வருத்தத்தை கொடுத்தது.

“ஆனா.. உண்மையிலேயே சார் கனடாவுக்கு போகல அதிதி மேம்!” என்றதும், இவள் அதிர்வோடு அவனை பார்க்க..

“எஸ்! அவர் என்னிடம் சொன்ன விஷயங்களை நான் என் பிரண்டு கிட்ட சொன்னேன். அவனும் அதே லேப்ல தான் ஒர்க் பண்றான். யாரும் புதுசா வந்து ஜாயின் பண்ணலன்னு அவன் அடிச்சு சொல்றான்” என்றான் திலீபன்.

“அப்படி என்றால்?? அப்படி என்றால்?? ரிஷி??” அடுத்து யோசிக்கவே தலையெல்லாம் வலித்தது அதிதிக்கு. மனமெல்லாம் கனத்தது! கண்களை இருட்டிக் கொண்டு வந்தது அதிதிக்கு.

“ரிஷி சார் கனடா போகாம நம்மகிட்ட கனடா போறேன் ஏன் சொல்லணும்? இல்ல அந்த லேப் இல்லாம வேற லேப்ல சேர்த்துட்டாரா?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள் திவ்யா.

“எனக்கும் அதே சந்தேகம் தான் மேம்!” என்றான் பாவமாக திலீபன்!

“ஒருவேள அவர் போற ஊர நாம தெரிஞ்சுக்க கூடாதுனு நினைச்சுகிட்டு நம்மகிட்ட மறைச்சி இருக்கலாம் இல்லேன்னா அவர் வொர்க் பண்ற‌ இடம் நமக்கு தெரியக் கூடாதுனு நினைக்கலாம்! என்ன கேட்டா முதலாவது இருக்க வாய்ப்புகள் அதிகம்! வொர்க் பண்ண போறாங்கன்னா கண்டிப்பா ஜாயின் பண்ணுவாங்க! சார் மாதிரி ஒரு ஃபேக்கல்டி எல்லாம் யாரும் விட்டு விட மாட்டாங்க! அவருக்கு எவ்வளவு சேலரி கேட்டாலும் கண்டிப்பா கொடுப்பாங்க” என்று ரிஷியின் அருமை பெருமைகளை எல்லாம் நேரம் காலம் தெரியாமல் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தான் திலீபன்.

திலீபனும் திவ்யாவும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்ததை கேட்ட அதிதிக்கு தலை எல்லாம் சுழன்றது.

“இப்ப என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்?? ரிஷி கனடா செல்லவில்லை அந்த கம்பெனியில் சேரவில்லை என்றா?? அப்பொழுது எங்கேதான் சென்றிருப்பான்?? கனடா செல்கிறேன் என்று இவர்களிடம் சொன்னதை கூட தன்னிடம் சொல்லவில்லை! இப்பொழுது இதை மட்டும் எப்படி உரைத்திருக்க போறான்?” என்று விரக்தியாக சிரித்துக் கொண்டவளுக்கு சற்றென்று ஏதோ தோன்ற…

“திலீபன் சார்.. ரிஷி சார் ஜாயின் பண்ண போது அட்ரஸ் ஒன்று கொடுத்திருப்பார் இல்ல.. லோக்கல்ல!! அங்க போய் கொஞ்சம் பார்த்துட்டு வாங்களேன்.. ப்ளீஸ்!” கெஞ்சலோடு கேட்டவளின் முகமே சரியில்லாததை கண்டவன் சரி என்றான்.

ஏற்கனவே திவ்யா திலீபன் இடம் பேசியிருக்க இதையும் மறுக்க முடியாமல் செய்தான். 

அவன் சென்றபோது அந்த வீடு பூட்டி இருக்க.. வெளியில் இருந்த வாட்ச்மேனிடம் விசாரித்தான். “சார் இது எங்க முதலாளியோடது. அவர் லண்டன்ல இருக்காரு. அவருடைய பிரண்டு ஒருத்தர் கொஞ்ச நாள் தங்கறதுக்காக வந்தாருங்க! கொஞ்ச நாள் இருந்துட்டு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க சார்” என்றதை அப்படியே அதிதியிடம் அவன் ஒப்புவிக்க…

“அப்போ சிறிது நாட்களுக்கு மட்டுமே தான் வந்திருக்கிறான்! வந்தவன் இதே கல்லூரியில் சேர்ந்தது.. காட்டுக்குள் வந்தது.. என்னை திருமணம் செய்து.. அதன் பின் காதல்.. ஊடல்.. கூடல்.. ஏன்? ஏன் இதெல்லாம்?? இடையில் டெல்லி வேறு…? ஓஹ் காட்!! அந்த பேப்பர் பிரெசன்டேஷன் பத்தி சொன்னவனும் அவன் தானே??” என்று அவள் யோசித்த விதம் விபரீதங்களை அள்ளித் தெளிக்க.. விக்கித்து நின்றாள்.

“அது மட்டுமல்ல!! அன்னைக்கு ஏதோ ஆராய்ச்சி செய்வதற்காக காட்டுக்குள் வந்தேன் என்றான். ஆனால் காட்டுக்குள் எந்த பொருளையும் தாவரத்தையும் அவன் தேடவில்லை! மாறாக நான் பாடம் நடத்திக் கொண்டிருந்ததை தான் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி என்றால்… அப்படியென்றால்… ஹி இஸ் ட்ராக் மீ!!” என்று முணுமுணுத் தவளை கண்ட திவ்யா “என்ன ஆச்சு அதி?” என்று அவளை உலுக்க..

‘தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறான்! திட்டமிட்டு கல்யாணம் செய்து இருக்கிறான்! அனைத்துமே ஏற்கனவே அவனின் திட்டமிடல்!!’ என்று அனைத்தும் கண்டுபிடித்தவளுக்கு, ஏன் செய்தான் என்று காரணம் தெரியவில்லை!

தலை எல்லாம் கிறுகிறுக்க எதிரே நின்று கொண்டிருந்த திவ்யா இரண்டாகத் தெரிய “இட்ஸ் ஆல் வெல் பிளான்ட்..!” என்றாள்.

திவ்யாவுக்குத்தான் இவளுக்கும் ரிஷிக்கும் திருமணம் ஆனதே தெரியாதே! ‘எதை பிளான் என்று சொல்கிறாள்?’ என்று புரியாமல் அவள் பார்த்தாள்.


ரிஷி செய்ததை அவள் நினைக்க நினைக்க தலை சுற்றிவர இரு கைகளாலும் தலையை பிடித்து கொண்டவள் நிற்க முயன்று முடியாமல் தோற்று மயங்கி கீழே சரிந்தாள்!!


மகள் நன்றாக இருக்கிறாள்!

அதுவும் மாப்பிள்ளையோடு சந்தோஷமாக வாழ்கிறாள் என்று நினைத்து மன நிம்மதியோடு இருந்த காயத்ரிக்கு அடுத்த அரை மணி நேரத்தில் விஷயம் தெரிவிக்கப்பட..

அடித்து பிடித்து ஓடி வந்தார் மகளைக் காண!!

மனமுவந்து ஆசை ஆசையாய் கொண்டாடி தீர்த்த ஒருத்தியை
ஒரு காலத்திற்கு பின் அந்த 
வெறுக்கும் நாட்களும் வருமா என்ன? வந்து விட்டதே!!

மகளுக்கான வந்தவர், மகள் இருக்கும் கோலத்தைக் கண்டு மனதுக்குள் பெரும் வலி!

செல்லியையும் இங்கே அழைத்து வர முடியாது. ஏனென்றால் அவர் ஊர் கட்டுப்பாடு அப்படி!! அதனால் தனியாக தான் வந்தார். அவர்கள் வீட்டில் படுக்க அறையில் நினைவிழந்து படுத்திருந்தவளை பார்க்க பார்க்க மனம் ஆறவே இல்லை பெற்ற அன்னையாக காயத்ரிக்கு!!

அதிதிக்கு அருகில் திவ்யா தான் இருந்தாள். “ரொம்ப நன்றி மா!” என்று அவள் கையை பிடித்து கண்கள் கலங்க கூற..

“என்ன ஆன்டி இது? எனக்கு அவ பிரண்ட ஆன்ட்டி!” என்ற அவள் சிறிது நேரம் காயத்ரிக்கு தனிமை கொடுத்துவிட்டு வெளி ஹாலில் அமர்ந்திருந்தாள். திவ்யாவுக்கு காயத்ரியிடம் நிறைய பேச வேண்டி இருந்தது.

மயங்கி விழுந்தவளை எவ்வளவு தட்டி தண்ணீர் தெளித்து எழுப்பியும் எழும்பாமல் இருக்க.. அதன் பின்னே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் திவ்யாவும் திலீபனும். திலீபன் வெளியில் இருக்க மருத்துவர் அழைத்து திவ்யாவிடம் விவரம் கேட்க.. “அவங்க கணவன் பெயர் என்ன? எங்கே?” என்றதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

“இல்லை டாக்டர் அவளுக்கு மேரேஜ் ஆகலையே!” என்றவளை ஒரு மாதிரியாக பார்த்த டாக்டர் “இல்லையே அவங்க கழுத்துல தாலி இருக்கு” என்றதும் தான் இவள் இன்னும் அதிர்ச்சியாகி தோழியை பரிசோதிக்க.. அங்கே ஜம்பமாய் வீற்றிருந்தது ரிஷி கட்டிய பொன் தாலி!

அதன்பின் அதிதியிடம் எதுவும் கேட்கவில்லை திவ்யா. அவளுக்கு சலைன் ஏற்றி சிறிது நேரம் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டதும் திலீபன் சென்றுவிட திவ்யா அவளோடு தங்கி இருந்தாள்.

திவ்யா வெளியில் இருப்பதை அறிந்து வந்த காயத்ரியிடம் “அதிக்கு கொஞ்ச நாள் தான் பிரிண்ட் ஆனாலும் ரொம்ப குளோஸ்னு நெனச்சிருந்தேன் ஆன்ட்டி! ஆனா அவ அப்படி என்ன நினைக்கல போல.. இப்படி என்னை ஏமாத்தியிருக்க கூடாது?” என்றதும் காயத்ரி புரியாமல் பார்க்க “அவளுக்கு கல்யாணம் ஆனத என்னிடம் சொல்லவே இல்ல ஆன்ட்டி!” என்றாள் வருத்தமாக.

“அது அவ தப்பில்லம்மா.. ரிசப்ஷன் வச்சி எல்லாருக்கும் சொல்லிக்கலாம் நான் தான் சொன்னேன். ஆனா இவ்வளவு க்ளோசா இருந்தா கண்டிப்பா உன்கிட்ட சொல்லி இருந்திருக்கலாம்!” என்ற காயத்ரி அவளுக்கு நடந்த திருமணத்தைப் பற்றி கூற..

“ரிஷி சார் தான் அவ புருஷனா?” என்று அதிர்ந்தாள் திவ்யா.

அதன்பின் இங்கே நடந்தவற்றையெல்லாம் திவ்யா கூற ரிஷியின் நம்பிக்கையை தக்ர்த்த முடியாமலும் அதே நேரம் அவனை நம்ப முடியாமலும் தவித்தார் காயத்ரி.

அடுத்த ஒரு வாரம் வெறுத்த பார்வையிலேயே இருந்தவளை தேற்றினார் காயத்ரி.

நல்ல வேளை திருமணம் நடந்தது யாருக்கும் தெரியாது என்று மனதில் நினைத்துக் கொண்டார். ஆனால் ஆண்டவன் அப்படி நினைக்கவில்லையே???

காயத்ரி மாமியிடமும் உண்மையை கூற அவரும் ரிஷியை வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டி தீர்த்தார்.

காதலால் ஒருவனை கை பிடிக்கவில்லை என்றாலும்…
அதன் பின் பூத்த காதலால் கொண்டாடிய நாட்கள் எல்லாம் கண்முன்னே வந்த போக.. அவற்றை வலுக்கட்டாயமாக தலையை உதறி துறந்தாள் மாது!!

அவள் சந்தோஷமாக இருந்த தருணத்தில் இதைப் பற்றி எல்லாம் கூறியிருந்தால்.. கிங்கினியாக சிரித்து மறுத்து இருப்பாள்.

ஆனால்.. அந்த சந்தோஷ நாளை வெறுத்த நாட்களும் வந்தது!

காதல் கொண்டவனை வெறுத்த கனமும் வந்தது!!

ஏன்.. அவனை மறந்துவிட்டேன் என்று இறுமாப்பு கொண்ட காலமும் வந்தது!!

காலம்..

நம் விருப்பங்களை வெறுப்புக்களாக மாற்றிடும் வல்லமை கொண்டது போலும்!

வெறுப்புகளையும் விருப்பங்களாக மாற்றும் கைதேர்ந்தது போலும்!


காலம் சுழன்று இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன… முதல் சிறிது நாட்கள் மட்டுமே அந்தக் கவலை உழண்றவள் அதன்பின் அன்னையை மனதில் நினைத்து தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.

மீண்டும் கல்லூரிக்கு சென்றாள்! வேலை பார்த்தாள்! 
பாடம் நடத்தினாள்! 
திவ்யாவோடு சிரித்து பேசினாள்! அனுசியாவை எதிர்த்து பேசினாள்! திலீபனை கிண்டல் அடித்தாள்! 
வார விடுமுறையில் மறக்காமல் மலைவாழ் கிராம குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவிக்க சென்றாள்.
அவளுடைய எந்த வேலையும் நிற்கவில்லை இயல்பாய் சென்று கொண்டு தான் இருந்தது.

ஆனால் எதிலுமே அந்த பழைய உயிர்ப்பு இல்லை!!

எல்லோரிடமும் ஒரு விதமாக விலகியே இருந்தவள், இறுகிய அதிதியாக வலம் வந்தாள்!!

அன்றும் மலைவாழ் பிள்ளைகளுக்கு வழக்கம் போல பாடம் எடுத்துக் கொண்டிருந்தவள், ஏதோ ஒரு குறுகுறுப்பு உணர்வை முதுகுக்கு பின்னாலும்.. ஊசியாய் துளைக்கும் பார்வையை பின் கழுத்திலும் உணர..

மனதில் மெல்லிய நடுக்கத்தோடு அதே சாளரத்தின் வழியாக அவள் திரும்பிப் பார்க்க.. 

அவள் எண்ணத்தை பொய் ஆக்காமல் அந்த சாளரத்தில் ஒரு பக்க தோளை சாய்த்துக் கொண்டு கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவளைத் தான் பார்த்தவாறு நின்றிருந்தான்..
ரிஷி தனஞ்ஜயன்!


இதழோடு உறவாட வருவான்??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *