மழை நின்ற பின்பும் மனம் நனையுதே
அத்தியாயம் 23
ராகுல் திவ்யதர்ஷினி குறித்து அப்படி சொன்னாலும் வருண் அதை பெரிது படுத்தவில்லை..
“அவள் தொழில் நடிப்பது, நமக்கு இதில் என்ன வந்தது. நாம் நம் வேலையை பார்ப்போம்டா” என்றான் வருண்..
“சரி டா, அவளால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் போதும்” என்ற ராகுல் வழியில் அவன் பிளாட்டில் இறங்கி கொண்டான்..
வருண் வீட்டிற்கு சென்றதும் வர்ஷினி ஆர்வமாக அவனை வரவேற்றாள்.. “விழா எப்படி நடந்தது வருண், உங்களை பற்றி என்ன சொன்னார்கள்” என்றாள் ஆர்வமான குரலில்..
“ம் எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது வர்ஷி.. அப்புறம் இந்த படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?” என்றான் வருண்..
“யார்” என்றாள் வர்ஷினி அதே ஆர்வத்துடன்..
“உன் சகோதரி திவ்யதர்ஷினி தான்” என்றான் வருண்
அதிர்ந்து போனாள் வர்ஷினி.. “என்ன அவள் மீண்டும் உங்களை எதுக்கு பார்க்க வந்தாள், நீங்க ஏன் அவளுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க? முதலில் அவளை அந்த படத்திலிருந்து நீக்குங்க” என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள் வர்ஷினி..
“வர்ஷி” என்றான் வருண் அதட்டல் குரலில்.. அந்த குரலில் சற்றே அமைதியாக வருணை பார்த்தாள்..
“இந்த படதயாரிப்பாளர் அவரோட சொந்த செலவில் ஏற்கனவே நாயகன் நாயகியை தேர்ந்தெடுத்து சூட்டிங் பாதி முடிந்திருந்தது.. அதற்கு மேல் பண பற்றாகுறை ஏற்படவே, என்னை அணுகினார்கள்.. அந்த படத்தில் யார் நடிக்கிறாங்க என்று கூட கேட்கவில்லை..
இயக்குநர் எனக்கு தெரிந்தவர், அவருக்கும் இது முதல்படம் என்பதால் நான் உதவி செய்தேன்.. தர்ஷினி மேடைக்கு வரும் வரை அவள் இந்த படத்தில் தான் நடித்திருக்கிறாள் என்று எனக்கும் தெரியாது..முழுபடம் எடுத்து முடித்தாயிற்று.. நான் சென்றது பட வெளியீட்டு விழா, இனி எப்படி என்னால் தடுத்து நிறுத்த முடியும்..
அது மட்டுமில்லாமல் படத்தில் நடிப்பது அவளின் சொந்த விஷயம், அது அவளின் திறமைக்கு கிடைத்தது… அதை நாம கெடுப்பது தப்பில்லையா?” என்றான் வருண் சிறு பிள்ளைக்கு விளக்குவது போல..
வருணின் பேச்சில் சற்று அமைதியானவள், “அவள் எப்படியோ நடித்துவிட்டு போகட்டும், நீங்க அவளிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள்” என்றாள் வர்ஷினி..
“இதை நீ எனக்கு சொல்லணுமா வர்ஷி.. அவளை பற்றி எனக்கு தெரியாதா?” என்றான் வருண்..
அதன்பிறகு வர்ஷினியும் அவனிடம் வம்பை வளர்க்காமல் அமைதியாகி விட்டாள்..
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க, வருண் ஆபிஸ் செல்ல தயாராகி கொண்டிருந்தான்.. வர்ஷினியும் காலை உணவை தயாரித்து அதை சாப்பாட்டு மேஐையில் வைத்துவிட்டு வருணிற்காக காத்துக் கொண்டிருந்தாள்..
அவன் வரும்வரை தொலைகாட்சியை பார்க்கலாம் என்று அதை இயக்கினாள்..
அன்று வருண் சென்று வந்த படவெளியீட்டு விழாவின் நிகழ்ச்சிதான் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது..
வருணை அந்த தொகுப்பாளினி அழைக்கவும், ஆர்வத்துடன் அதை பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவனை அறிமுகம் செய்த சில நிமிடங்களில் திவ்யதர்ஷினி மேடையேறுவதை பார்த்தும் வர்ஷினிக்கு உடல் இறுகியது..
தொலைக்காட்சியையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.. வருண் வந்ததையோ, தட்டில் சாப்பாடு பறிமாறும்படி சொன்னதையோ அவள் கவனிக்கவே இல்லை..
என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று வருண் தொலைக்காட்சியை பார்த்தான்.. அதில் வருண் திவ்யதர்ஷினியை பார்த்து சிரிப்பதும், அவள் அவனை அணைப்பதும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது..
வர்ஷினி மெல்ல அவனை திரும்பி பார்த்து தீப்பார்வை பார்த்தாள்..
“என்ன வர்ஷி” என்றான் வருண் எதுவும் புரியாமல்..
“இத்தனை பேர் முன்னாடி அவள் உங்களை கட்டிபிடிக்கிறா, நீங்களும் வெட்கமே இல்லாமல் சிரிச்சிட்டு நிக்கறீங்க? அவள் செய்தது எல்லாம் மறந்து போச்சா?” என்றாள் வர்ஷினி ஆத்திரமாக..
“வர்ஷி என்ன பேச்சு இதெல்லாம்” என்றான் வருண் அதட்டலாக..
“மேடை நாகரீகம்னு ஒண்ணு இருக்கு, அவள் மரியாதை நிமித்தமாக என்னை கட்டிபிடிக்கும் போது, நான் எப்படி அவளை விலக்க முடியும்” என்றான் வருண்..
“என்ன பெரிய மேடை நாகரீகம், வணக்கம் சொன்னால் போதாதா, கட்டிதான் பிடிக்கணுமா?” என்றாள் வர்ஷினி அதே ஆத்திரத்துடன்..
“வர்ஷினி…இது ஒண்ணும் திருவையாறு இல்ல.. மும்பையில் அப்படி தான் மாடர்னா நடந்துக்கவாங்க” என்றான் வருண் ஒரு மாதிரி குரலில்..
“எது கட்டி பிடிப்பது தான் உங்க ஊரில் மாடர்னா? அதுவும் தொலைகாட்சியில் வரும், எல்லாரும் பார்ப்பாங்க என்று தெரிந்தும் இப்படி செய்வது தான் நாகரீகமா?” என்றாள் வர்ஷினி கோபத்துடன்..
அயர்ந்து போய் அவளை பார்த்தான் வருண்.. என்ன இப்படி பத்தாம்பசலி மாதிரி பேசுகிறாள்..இனி மேலும் பேசி கொண்டே போனால் இருவருக்கும் சண்டை வலுக்கும் என்று புரிந்துவிட எதுவும் பேசாமல் கிளம்பினான்..
ஆபிசிற்கு வந்தும் வருண் முகம் உர்ரென்று இருக்கவும், ராகுல் வந்து விசாரித்தான்..
“என்ன மச்சி, காலையில் தங்கச்சி காரமாக எதாவது கொடுத்துச்சா? இப்படி உர்னு இருக்கே” என்றான் ராகுல்
“அட போடா.. கொஞ்சம் கூட மெச்சுரிட்டி இல்லாமல் பேசறா டா” என்றான் வருண்..
“அப்படி என்ன பேசிட்டா என் தங்கச்சி” என்றான் ராகுல்..
வருண் காலையில் நடந்த சம்பாஷனையை கூறினான். அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த ராகுல், “வர்ஷினி மேல் கோபபடாதேடா.. அவள் நிலையில் இருந்து யோசித்து பாரு. அந்த திவ்யதர்ஷினி தன் உடன் பிறந்தவளையே கடத்தியதோட இல்லாமல் அவளோட தாலி வரைக்கும் கழட்டி அவள் இடத்தை பிடிக்க துணிஞ்சவள்..
அன்றைக்கே அவள் எப்படி கோபபட்டாள், அவள் புருஷனான உன்னை அவள் யாருக்கும் விட்டு தரமாட்டாள்.. அது அவள் கூட பிறந்தவளாக இருந்தாலும் சரி.
எல்லாம் முடிந்து நிம்மதியாக வாழ ஆரம்பிக்கும் போது மறுபடியும் இந்த திவ்யதர்ஷினி வந்து நின்றால் நமக்கே அதிர்ச்சியாக இருக்கும்போது வர்ஷினிக்கு எப்படி இருக்கும்? அதனால வர்ஷினி மேல் கோபப்படாம மென்மையாக சொல்லி அவளுக்கு புரிய வை” என்றான் ராகுல்.
“நீ சொல்றதும் சரிதான், நான் வர்ஷினிகிட்ட பேசறேன்” என்றான் வருண்..
அதன் பின் மாலை வீட்டிற்கு சென்றதும் வர்ஷினியை அழைத்தான்..
“வர்ஷினி, நாம் எங்காவது வெளியே போயிட்டு வரலாமா?” என்றான்..
அவளுக்கும் சற்று வெளியே சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற சரி என்று அவனுடன் கிளம்பி சென்றாள்..
இருவரும் கடற்கரையில் சற்று நேரம் இருந்து விட்டு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ண சென்றனர்.. வருண் வர்ஷினியை அணைத்தபடி அழைத்து சென்றான்..
அதை அங்கே வந்திருந்த மீடியா நபர் ஒருவர் அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து விட்டார்.. இதை அறியாத இருவரும் பேசி சிரித்தபடி உணவை உண்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்..
இரவு தூங்குவதற்கு தாமதமானதால் மறுநாள் காலையில் எழுவதற்கும் தாமதமாகி இருந்தது..
அதற்குள் கீதாராணி வர்ஷினியை போனில் அழைத்தாள்.. “வர்ஷினி நீ எப்படி இருக்கே?” என்றாள் பதட்டமாக..
“தினமும் பேசிட்டு தானே இருக்கோம், என்ன திடீர்னு எப்படி இருக்கனு கேட்கிற கீது.. ராகுல் அண்ணா கிளம்பிட்டரா? இன்னைக்கு எழுவதற்கு லேட்டாயிடுச்சு, வருண் கிளம்புவதற்குள் காலை உணவு தயாரிக்கணும் “என்றாள் வர்ஷினி..
“அப்போ உனக்கு விஷயமே தெரியாதா? ராகுல் அங்கே உங்க வீட்டிற்கு தான் வந்து கொண்டு இருக்கிறார்” என்றாள் கீதா
“நீ என்ன சொல்ற? எனக்கு ஒண்ணும் புரியலை” என்றாள் வர்ஷினி..
“தொலைக்காட்சியை ஆன் செய்து பாரு முதல்ல.. அப்போ தான் புரியும்.. பதட்டபடாதே.. எல்லாம் சரி செய்திட முடியும், புரியுதா?” என்றாள் கீதா..
எதற்காக சொல்கிறாள் என்று புரியாவிட்டாலும் சரி என்று கூறி போனை அணைத்தவள் அவசரமாக தொலைகாட்சியை ஆன் செய்தான்.. அதில் பிரேக்கிங் நியூஸ் போய் கொண்டிருந்தது..
“பிரபல ஷர்மா குரூப்பின் முதலாளியும், விளம்பர கம்பெனியின் முதலாளியுமான திரு. வருண் ஷர்மா அவர்கள், புதிதாக தயாரிப்பாளாராக அறிமுகமாகியிருக்கிறார்..
அவர் தயாரித்த முதல் படத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகை திவ்யதர்ஷினியுடன் காதல் வயப்பட்டு இருக்கிறார்.. இருவரும் கடற்கரை, ஹோட்டல் என்று சுற்றி திரிவதை இந்த காணொளியில் பார்க்கலாம்.. மேலும் அவர்கள் இருவரும் அங்கிருந்த ஹோட்டல் அறையிலேயே தங்கியிருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து எங்களுக்கு செய்தி வந்துள்ளது” என்று அந்த செய்தி நொடிக்கொருதரம் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது..
அந்த செய்தியை பார்த்து ஆடி போனாள் வர்ஷினி… “வருண்” என்று அவள் கத்திய சத்தத்தில் என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு வந்தான் வருண்..
அவள் தொலைக்காட்சியையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவனும் அந்த செய்தியை கவனித்தான்.. அதை கேட்டதும் அவன் முகமும் இறுகி போய் இருந்தது..
இருவரும் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தனர்.. நிமிடங்கள் மணிகளாக கரைந்தது.. ராகுல் வந்திருந்தான்..
“வருண், நாம் மும்பை வந்ததும் உனக்கும் வர்ஷினிக்கும் திருமணம் ஆனதை பற்றி செய்தி கொடுத்து இருக்கணும்.. தப்பு செய்துட்டோம்.. இந்த திவ்யதர்ஷினி இப்படி ஓவர் நைட்ல பிரபலம் ஆவாள்னு நினைச்சு கூட பார்க்கலையேடா” என்றான் ராகுல்..
“முதல்ல அந்த நியூஸ் சேனலுக்கு போன் செய்து அதை நிறுத்த சொல்லுடா..அந்த வீடியோவில் இருக்கிறது என் மனைவி வேதவர்ஷினி என்று சொல்லி எங்களோட திருமண போட்டாவை சேனலுக்கு கொடு” என்றான் வருண்..
வர்ஷினி இறுக்கமான முகத்துடன் காணப்படவும் வருண் அவளை தேற்றினான்..
“வர்ஷி, இதெல்லாம் பெரிய பிரச்சனையே இல்லை.. நாம உடனடியாக எல்லா நியூஸ் சேனலுக்கும் நமக்கு திருமணம் ஆனதை சொல்லிட்டா பிரச்சனை முடிந்துவிடும், நீ இந்த நேரத்தில் டென்சன் ஆகாமல் இரு” என்றான்..
“எப்படி வருண், இப்போது நாங்க இரண்டு பேரும் வேறு வேறு நபர்கள். நான் தான் உங்க மனைவி என்று சொன்னாலும் அவர்கள் உருவ ஒற்றுமையை பத்தி கேட்பாங்களே.. அவள் என் கூட பிறந்தவள், உங்களுக்கு மைத்துனி என்று சொல்ல வேண்டியிருக்குமே” என்றாள் வர்ஷினி..
“ஆமா வர்ஷினி சொல்லி தானே ஆகணும்.. அவள் நல்லவளாே கெட்டவளோ, அவள் உன் கூட பிறந்தவள் என்பதை மாற்ற முடியாது தானே” என்றான் வருண்..
“அவளை என் சகோதரி என்று சொல்ல கூட எனக்கு விருப்பமில்லை.. நீங்க இந்த மாதிரி திரைபடத்துறையில் பிரபலமாக இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு இந்த பிரச்சனையே வந்திருக்காது” என்றாள் வர்ஷினி ஆதங்கத்துடன்
“இல்லமா, அவன் திரைபடத்துறையில் இல்லை என்றாலும் தொழிலதிபர் என்ற முறையில் பிரசித்தி பெற்றவன் தான்.. அப்போதும் இதே பிரச்சனை வரக்கூடும்.. நீ கவலை படாதே.. நாங்க இதே நியூசை மாற்றி வாசிக்க வைக்கிறோம்” என்று கூறினான் ராகுல்..
அதன்பின் வருண் ராகுலடன் கிளம்பி ஆபிசிற்கு சென்று அந்த நியூஸ் சேனலுக்கு அழைத்து விவரம் சொல்லி அவனுக்கும் வேதவர்ஷினிக்கும் திருமணம் நடந்த போது எடுத்த போட்டோக்களை கொடுத்து சேனலில் போடுமாறு கேட்டு கொண்டான்…
அதன்படி அவர்களும் செய்தியை மாற்றி கூறினர்.. அதற்குள் அந்த செய்தி பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் என்று பரவி விட அனைவரும் கருத்து கூற ஆரம்பித்து விட்டனர்..
கையும் களவுமாக பிடிபட்டபின் வருண் பொய்யாக வேறு ஒரு நபர் இருப்பதாக சொல்வதாக ஒரு சிலர் கூறினர்..
படதயாரிப்பாளராக இருப்பதால் படவாய்ப்பு தருவதாக வேதவர்ஷினியை மணந்து கொண்டு திவ்யதர்ஷினி என்ற பெயரில் அவளை தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மிஸ்டர் வருண்.. இப்போதே படம் நடிக்க தொடங்கியுள்ள திவ்யதர்ஷினிக்கு மார்க்கெட் போக கூடாது என்று வேதவர்ஷினி என்று வேறொரு நபர் இருப்பதாக பொய் உரைக்கிறார்..
அப்படி அவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள் என்றால் இருவரையும் ஒன்றாக வைத்துக் கொண்டு ஒரு பேட்டி கொடுக்கலாமே” என்று அவரவர் இஷ்டத்திற்கு அவன் வாழ்வில் முடிவு சொல்லி கொண்டிருந்தனர்.
இதை எல்லாம் தன் மொபைலில் பார்த்த வருணிற்கு உள்ளம் கொதித்தது.. “சே இவர்கள் வாயை மூட, அந்த தர்ஷினியுடன் அமர்ந்து எல்லாம் பேட்டி தர முடியாது என்று அவன் உள்ளம் உலையென கொதித்தது..
அப்படியே இரு நாட்கள் கடந்திருக்க, ஒரு பெரிய பிரபல நிறுவனத்தின் மிக பெரிய இயக்குநர் வருணிற்கு போனில் அழைத்தார்..
“வருண், நீங்களும் அந்த அறிமுக நடிகை திவ்யதர்ஷினியும் தான் இப்போ ஹாட் டாபிக்.. விஷயம் நேர்மறையோ எதிர்மறையோ எதுவாக இருந்தாலும் நீங்க தான் இப்போது டிரெண்டிங்கில் இருக்கீங்க..இந்த சமயத்தில் நீங்க இருவரும் ஜோடியாக சேர்ந்து எங்களோட பேனருக்கு ஒரு படம் நடித்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இதுபற்றி நான் ஏற்கனவே திவ்யதர்ஷினியுடன் பேசி விட்டேன்.. அவர்களுக்கு டபுள் ஓகே.. நீங்க என்ன சொல்றீங்க?” என்றார் அந்த பெரிய இயக்குநர்..
“வாட்” என்று இருக்கையிலிருந்து எழுந்தே விட்டான் வருண்..
(மழை வரும்)
