என்னருகில் தேன் நிலா
நிலா – 08
சற்று நேரத்தில் தூக்கம் நீங்கி எழுந்து கொண்ட அருணோ சோபாவில் அமர்ந்திருந்தவளைத் திரும்பிக் கூடப் பார்க்காது நேரே குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் வழக்கம் போல காலை உணவை உண்பதற்காக கீழே செல்ல, அங்கே பாட்டியும் தன்னுடைய அம்மாவும் ரோஜாவைப் புகழ்வதைக் கண்டு அவனுக்கோ சினம் துளிர் விட்டது.
“கல்யாணம் வேணாம்னு சொன்னியே… நீ பார்த்து இருந்தா இப்படி ஒரு நல்ல பொண்ணு உனக்கு மனைவியா அமைஞ்சிருக்குமா..? இப்போ பாரு ரோஜா எவ்வளவு தங்கமான பொண்ணு… நேரத்துக்கே எழுந்து எல்லா வேலையுமே பண்ணி வச்சுட்டா… ரொம்ப பணிவா இருக்கா… இப்படி ஒரு மருமகள் கிடைக்க நாங்க எல்லாரும் கொடுத்து வச்சிருக்கணும்…” என்ற ராதிகாவை அழுத்தமாகப் பார்த்தவன்,
“நீங்களே உங்க மருமகளை மெச்சிக்கோங்க…” என்றான்.
“இப்படி ஒரு மருமகளை மெச்சாம இருந்தா தான்டா தப்பு…” என்றார் பாட்டி.
அருணுடைய முகமோ சட்டென மாறிப்போனது. வேகமாக எழுந்து அறைக்குள் சென்றவன் கோபத்தோடு ரோஜாவை அழைத்தான்.
“ஏய்ய் பட்டிக்காடு……” என பல்லைக் கடித்துக் கொண்டு ரோஜாவை அவன் அழைக்க, ஆதர்ஷனாவின் அலைபேசி ஊடாக கனடாவில் உள்ள தன்னுடைய அம்மாவுடன் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த ரோஜாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. சட்டென அழைப்பைத் துண்டித்தவள் எழுந்து நின்றாள்.
“என்…னங்க டீ… டீ எதுவும் வேணுமாங்க..?” திக்கித் திணறி கேட்டாள் ரோஜா.
“என்னது டீயா???? இடியட்… உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க..? உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா…? என்னைக் கேட்காம எதுவும் பண்ண வேணாம்னு சொன்னேன்ல… எல்லா ரூல்ஸுக்கும் சரினு சொல்லித்தானே சைன் போட்ட… இப்போ உன் இஷ்டத்துக்கு இங்க வந்து ஆடுறியா..? உங்க அம்மா குணமாகி திரும்பி வரணும்னா வாய மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் கேளு..” என கர்ஜிக்கும் குரலில் கூறினான் அருண்.
விக்கித்துப் போனாள் ரோஜா.
“நா..நான் என்னங்க பண்ணினேன்..? நான் எதுவுமே பண்ணலையே… காலைல எழுந்து நான் என் வேலையை பார்த்துட்டு பேசாமதானே இருக்கேன்.”
“அது….. அதைத்தான் செய்ய வேணாம்னு சொல்றேன்… உன் வேலையையும் நீ செய்யக் கூடாது… வீட்ல இருக்கவங்களுக்கும் நீ வேலை செஞ்சு கொடுக்கக் கூடாது…” எனக் கூறினான் அருண்.
“எனக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு தெளிவா புரியலை… கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.” எனக் கூறினாள் ரோஜா.
“டாமிட்…. உனக்கு எப்படி புரியும்? நீ தான் படிப்பறிவு இல்லாத பட்டிக்காடாச்சே… உனக்கு ஒன்னும் புரியாதுதான்… சின்ன குழந்தைக்கு சொல்ற மாதிரி சொன்னா தானே புரியும்.” என வார்த்தைக்கு வார்த்தை பட்டிக்காடு பட்டிக்காடு என்று கூறி அவளை மேலும் மேலும் நோகடித்தான் அருண்.
அருணின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை வாட்டி வதைத்து.
என்ன நடந்தது… எதற்காக தன்னைத் திட்டுகின்றான் என்பது கூடத் தெரியாமல் தலை குனிந்து நின்றாள் அவள். அவன் முகம் காண அவள் உள்ளம் இடம் கொடுக்கவில்லை.
“லுக்.. ஏய் என்னைப் பாரு… தரையில என்ன தெரியுதுன்னு அங்கேயே பார்த்துகிட்டு இருக்க…?” என அவன் அதட்டியதும் தன்னுடைய பார்வையை மெல்ல உயர்த்தி அவனுடைய முகத்தை தவிப்போடு பார்த்தாள் ரோஜா.
“என்னடி எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லவன்னு பேர் வாங்கலாம்னு ட்ரை பண்றியா..? நீ என்ன பண்ணாலும் நீ எனக்கு வேண்டாத மனைவிதான்… நான் சொல்றத மட்டும் கேட்டு நடக்கிற வழிய பாரு… காலையிலேயே நேரத்துக்கு எழுந்து கோலம் போடுறது.. பூஜை பண்றது… வீட்ல இருக்கிற பெரியவங்களுக்கு கொடி பிடிக்கிறது இந்த வேலை எல்லாம் இங்க வச்சுக்காத..”
“இதுல என்னங்க தப்பு இருக்கு..? நான் செஞ்ச பிரேக் பாஸ்ட்ல எதுவும் குறை இருக்காங்க..? இல்ல நான் செஞ்ச பூஜைல ஏதும் குறை இருக்கா..? ஏதும் குறை இருந்தா சொல்லுங்க.. நான் திருத்திக்கிறேன்.” என அவன் கூறுவதை சற்றும் புரிந்து கொள்ளாமல் வெகுளித்தனமாக ரோஜா கேட்டாள்.
“ம்ம்ம்….. நீ செஞ்சதே குறைதான்.. ஏன்டி உன்னோட மரமண்டைக்கு நான் சொல்றது புரியலையா..? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா..? உன்ன நான் எந்த வேலையும் செய்ய வேண்டாம்னு தானே சொல்லி இருக்கேன். இப்படிலாம் வேலை செஞ்சு நல்ல பெயர் எடுக்க பார்க்கிறியா? ஓஹோ…. சொத்துல பங்கு போட பாக்குறியா?” எனக் கேட்டான் அருண்.
அவனுடைய கேள்வியில் அவளுக்கோ உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.
“முருகா முருகா முருகா….. ஏங்க இப்படி தப்பா பேசுறீங்க… எனக்கு உங்க சொத்தெல்லாம் வேண்டாம்… வழமையா நான் எங்க வீட்டுல எல்லா வேலையுமே செஞ்சிடுவேன்… அதே மாதிரி தான் இப்பவும் செஞ்சேன்… எனக்கு சொத்து மேல எல்லாம் ஆசை இல்லைங்க….” எனக் கூறினாள் ரோஜா.
“ரொம்ப நல்லாவே பேசுற… அது எப்படி ஒரு பொண்ணு காசு பணத்துக்கு ஆசைப்படாம இருப்பா..? ஓகே பைன் எனக்கு இதெல்லாம் முக்கியமில்லை. இனி நீ இந்த வீட்ல ஒரு வேலையும் செய்யக்கூடாது. நான் சொல்லும் போது மட்டும்தான் இந்த அறைல இருந்து வெளியே வரனும். மத்தபடி அறையை விட்டு வெளியே வரக்கூடாது..” எனக் கூறினான் அருண்.
“அது….அது… எப்படிங்க..?” எனக் கேட்டவளுக்கு தொண்டை அடைத்தது. தன்னை மகள் போல பாசமாக பார்த்துக் கொள்ளும் குடும்பத்திடம் கெட்ட பெயரை வாங்க வைப்பதற்காக இப்படி எல்லாம் கூறுகிறான் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு உள்ளம் தவியாய் தவித்தது.
“ஓஓஓஓஓ மேடமுக்கு நான் சொல்லுற மாதிரி இருக்க முடியாது போல…? ரைட்.. ரைட்…. இப்பவே உங்க அம்மாக்கு ட்ரீட்மெண்ட் பாக்குற டாக்டர்கிட்ட சொல்லி ட்ரீட்மெண்ட்டை ஸ்டாப் பண்ண சொல்றேன்.” எனக் கூறினான் அருண்.
“ஐயோ வேணாங்க… வேணாங்க… இனி நீங்க சொல்ற மாதிரியே நான் நடந்துக்கிறேன்.. இனி எந்த வேலையும் செய்ய மாட்டேன்.” எனப் பதறிப்போய் கூறினாள் ரோஜா.
“தட்ஸ் குட் இப்படித்தான் இருக்கணும்… நாளைக்கு மார்னிங்ல இருந்து நான் சொன்ன எல்லாத்தையும் ஃபாலோ பண்ணு…” எனக் கூறியவன் அந்த அறையில் இருந்து வெளியே சென்றான்.
பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் ரோஜா. விழிகள் கலங்கிப் போயிருந்தன.
“இவன் என்ன இந்த அளவுக்கு மோசமாக நடந்துக்கிறான்…? சொத்து வேணுங்கிறதுக்காக எந்த அளவுக்கும் போவான் போலயே… கடவுளே இந்த வாழ்க்கைல இருந்து கூடிய சீக்கிரம் என்ன நீதான் காப்பாத்தணும்…” என இறைவனிடம் வேண்டிக் கொண்டாள் அந்த அப்பாவிப் பெண்.
**********
மறுநாள் அதிகாலை 6 மணி.
சமையலறையில் பாட்டியும் ராதிகாவும் சமைத்துக் கொண்டு இருந்தார்கள்.
“என்னம்மா ராதிகா உன் மருமக முதல் நாள் மட்டும் நேரத்துக்கே எழுந்து எல்லா வேலையும் பண்ணினா… இன்னைக்கு ஆளையே காணோமே…?”
“இல்ல அத்த… நான்தான் அவளை நேரத்துக்கே எழுந்து எல்லா வேலையும் பண்ணாதன்னு சொன்னேன்.. ஏற்கனவே அவ வீட்ல அவதான் எல்லா வேலையும் செய்வாளாம்.. இங்கேயாவது கொஞ்ச நாள் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்…” எனக் கூறினாள் ராதிகா.
“மருமகளை விட்டுக் கொடுக்காத மாமியார்… சரி சரி சின்னஞ்சிறுசுங்க தானே… இப்பவே நம்ம அவங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது. கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கட்டும்.. அதுக்கு அப்புறம் நம்ம குடும்ப பழக்க வழக்கத்தை அவளுக்கு சொல்லிக் கொடுத்திரு ராதிகா.” என்றார் பாட்டி.
“சரிங்க அத்த.” என்ற ராதிகாவின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
*******
அறைக்குள் அமர்ந்திருந்த ரோஜாவுக்கோ மனம் அலைபாய்ந்தது.
அதிகாலையில் நேரத்திற்கு எழுந்தும் கூட எந்தவித வேலையும் செய்யாது அறைக்குள் சும்மாவே அமர்ந்திருப்பது அவளுக்குள் ஒரு விதமான குற்ற உணர்ச்சியைக் கிளப்பியது.
தன்னை பற்றி பாட்டியும் அத்தையும் தவறாக எண்ணுவார்களோ என்றெண்ணியே தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவருடைய சிந்தனையை குழப்பும் வண்ணம் குறட்டை விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் அருண்.
‘இவன் நல்லா தூங்குகுறானே… இப்போதைக்கு எழுந்துக்க மாட்டான் போல… இவனுக்கு தெரியாம நாம கீழே போய் அத்தை பாட்டிக்கு ஏதாவது உதவி பண்ணிட்டு வருவோம்.’ என மனதில் நினைத்தவள் சத்தமின்றி எழுந்து அறையின் கதவருகே சென்றாள்.
அக்கணம் சடாரென படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து அவளை அழுத்தமாகப் பார்த்தான் அருண்.
“ஏய்…. சீட்டர் பட்டிக்காடு… எங்கடி போற…? என்னையே ஏமாற்ற பார்க்கிறியா…?” என்ற அருணின் கர்ஜனையில் சட்டென கதவில் இருந்த தூசியை துடைப்பது போல பாவனை செய்தவள் மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
“நான் தூசியைத்தான் தொடைச்சேன்..” என்றவளை நம்பாமல் பார்த்தவன் பத்திரம் என்பது போல தன்னுடைய ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டி எச்சரித்துவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
தன்னுடைய நிலையை எண்ணி அவளுக்கோ அதீத வருத்தம் உள்ளுக்குள் பரவிப் படர்ந்தது.
குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த அருணோ ரோஜாவின் அருகே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான்.
அவன் தன்னருகே அமர்ந்ததும் விலகிச் செல்ல முயன்றவளின் இடையில் அழுத்தமாக கரத்தை பதித்து வருடியவன்,
“இப்போ நான் வெளியே போகப் போறேன்.. ஆதர்ஷனாவ ஃபோன் பண்ணி உனக்கு பிரேக்பாஸ்ட் எடுத்துட்டு வர சொல்லு.. நீயா கீழே போகக்கூடாது.. உனக்கு எது தேவையோ அதை போன் பண்ணி இங்க வர வை.. என்ன மீறி நீ வெளியே போனேன்னு தெரிஞ்சது தொலைச்சு கட்டிடுவேன்..” என எச்சரித்தவன் திருப்திப் புன்னகையோடு அவளுடைய கன்னத்தை கிள்ளிவிட்டு எழுந்து அந்த அறைக்குள்ளேயே இருந்த கண்ணாடி மேஜையின் அருகே சென்றுவிட வெறுத்துப் போனவளாய் தன் கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் அவள்.
எவ்வளவு மன்றாடினாலும் அருண் எனும் அரக்கன் மனம் இரங்கப் போவதில்லை என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருந்தவள் எந்த வாக்குவாதமும் செய்யாது அந்த அறையில் இருந்த அலைபேசியை எடுத்து ஆதர்ஷனாவுக்கு அழைத்தாள்.
“ஹ… ஹலோ…”
“ஹலோ அண்ணியா…? சொல்லுங்க அண்ணி… என்ன வேணும்..?”
“பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணியாச்சா..?” எனக் கேட்டவளுக்கோ குரல் தடுமாறியது.
“ஆமா அண்ணி… நான் வேணும்னா எடுத்துட்டு வரவா உங்க ரூமுக்கு..?” எனக் கேட்டாள் ஆதர்சனா.
ஆதர்சனாவின் வார்த்தையை கேட்டு கலங்கிப் போனாள் அவள். அந்த சிறு பெண்ணின் அன்புக்கு தான் நிகரானவள் தானா என எண்ணிக்கொண்ட ரோஜாவால் அவளுக்கு கட்டளை இடக் கூட வாய் வரவில்லை. ஆனால் வேறு வழியில்லாமல் அருண் கூறியதை அப்படியே கூறினாள் ரோஜா.
“ஆமா… எனக்கு பிரேக்பாஸ்ட் ரூமுக்கு எடுத்துட்டு வாங்க.” எனக் கூறியவளுக்கு அடுத்த வார்த்தையை பேசுவதற்குக் கூட மனம் எழவில்லை. உடனே அழைப்பைத் துண்டித்தாள்.
“வெரி குட் இதே மாதிரி தான் நான் சொல்ற ஒவ்வொன்னையும் நீ செய்யணும்.. என்ன மீறி இந்த வீட்ல நீ எதையுமே செய்யக் கூடாது… ஓகே நான் வெளியில போயிட்டு வர்றேன்.. அதுவரைக்கும் நீ இந்த ரூமை விட்டு வெளிய வரக்கூடாது.” எனக் கூறிச் சென்றான் அருண்.
சற்று நேரத்தில் ஆதர்ஷனாவோ காலை உணவை எடுத்துக்கொண்டு ரோஜாவின் அறைக்குள் நுழைந்தாள்.
தர்ம சங்கடத்துடன் அவள் கொடுத்த உணவை வாங்கிக் கொண்டாள் ரோஜா. அதன் பின்னர் சற்று நேரம் ரோஜாவுடன் உரையாடிய ஆதர்ஷனாவோ காலேஜ் செல்வதற்கு நேரம் ஆகிறது எனக் கூறிவிட்டு சென்றுவிட மீண்டும் ரோஜாவை தனிமை சூழ்ந்து கொண்டது.
மதிய நேரம் தாண்டியும் ரோஜா வெளியே வராததை உணர்ந்த பாட்டியின் முகமோ வெகுவாக மாறிப்போனது.
“ராதிகா ரோஜா இன்னும் வெளியே வரலையா…? அவளுக்கு ஏதும் உடம்புக்கு முடியலையா..? என்ன ஆச்சு…? நீ போய் பார்த்தியா..?” என பாட்டி ராதிகாவிடம் கேட்டார்.
“இல்ல அத்த நானும் போகல… அவ அம்மாவ பத்தி நினைச்சு அந்தக் கவலைல இருக்காளோ தெரியல… அதனால அவளை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு நான் போகல அத்த..” எனக் கூறினாள் ராதிகா.
“சரிம்மா.. நிறைய பாதாம் போட்டு திக்கா பால் ஒரு டம்ளர் போடும்மா…. ரோஜாவுக்கு கொடுத்துட்டு பாத்துட்டு வருவோம். நாமளும் அவளைத் தனியா விடக் கூடாத… புது இடம் தானேம்மா நம்மளோட பழகையும் கூச்சப்படுவா… நம்ம வீட்டுக்கு வந்த பிள்ளைய நாமதான் நல்லா பாத்துக்கணும்.. அதனால பால் போட்டு எடுத்துட்டு வா.” என்றார் பாட்டி.
“சரிங்க அத்த.” என்ற ராதிகாவோ சற்று நேரத்திலேயே பாலை எடுத்துக்கொண்டு பாட்டியுடன் அருண் அறையை நோக்கிச் சென்றார்.
அடுத்த கணம் அந்த அறைக்குள் நுழைந்த இருவருடைய முகமும் அதிர்ச்சியில் மாறிப்போனது.
💜💙💙💜
