புயலோடு மோதும் தாழம்பூ
புயல் – 34
மிருதனின் மார்பில் சாய்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தவள், அப்படியே சரிந்து விழத்தொடங்க அவளை மெல்லத் தன் கரத்தில் ஏந்திப் படுக்கையில் படுக்க வைத்தான்.
இரவு வெகு நேரம் கழித்து அவள் உறக்கத்தைத் தழுவியதால் அவளைத் தொந்தரவு செய்யாமல் மிதமான குளிரில் ஏசியை ஆன் செய்துவிட்டு அறையின் கதவைப் பூட்டுவிட்டு வெளியே வந்தவன் இன்று மதிய நேர உணவைத் தானே சமைக்கத் தொடங்கினான்.
அவளுக்கு பிடித்த உணவுகளாக செய்யலாம் என முடிவெடுத்தவன், மள மளவென சமையல் வேலைகளில் மூழ்கிப் போனான்.
*********
படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து கொண்டாள் கீதா.
அவளின் முன்னே இருந்த மேஜையின் மீது ஒரு கடிதம் இருப்பதைக் கண்டவள் மிருதன்தான் தனக்காக ஏதாவது எழுதி வைத்திருக்கக்கூடும் என்ற ஆவலில் சற்றே வேகமாக நடந்து அதனை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்.
ஆனால் அந்த கடிதத்தைப் படிக்கத் தொடங்கியவளின் முகமோ சட்டென வாடிய தாமரை மலராகக் கூம்பிப் போனது.
அந்தக் கடிதம், தான் அவனுக்கு குழந்தையை ஒப்படைப்பதாக எழுதிக் கொடுத்த கடிதம் என்பதைப் படித்த அடுத்த நொடியே உணர்ந்து கொண்டவள் விக்கித்துப் போனாள்.
குழந்தை பிறந்தவுடன் தன்னிடமிருந்து குழந்தையை எடுப்பதற்காக இந்த கடிதத்தை எடுத்து வைத்திருக்கிறான் என்பதை புரிந்ததும் அருவி போல அவளுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
தாங்க முடியாத மனக் கவலை அவளை சூழ்ந்து கொள்ள, விம்மி வெடித்து அழத்தொடங்கினாள் அவள்.
அதே கணம் மிருதன் அறைக்குள் நுழைய அவனிடம் வேகமாகச் சென்றவள்,
“ப்ளீஸ் மிருதா.. என்கிட்ட இருந்து குழந்தையை பிரிச்சிடாதீங்க.. என்னால அதைத் தாங்கவே முடியாது. எனக்கு நீங்களும், குழந்தையும் வேணும்..” எனக் கதறியவளை அணைத்துக் கொண்டான் அவன்.
“சாரி கீத்து.. என்னால நீ பண்ணத மறக்கவே முடியலடி.. எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன்.. உன் கூட வாழ முடியும்னு எனக்கு தோணவே இல்ல.. நானும் குழந்தையும் இங்கிருந்து போறோம்..” எனச் சற்றும் இரக்கமில்லாமல் அவன் கூறிவிட சட்டென அவனைத் தன்னில் இருந்தும் தள்ளிவிட்டாள் கீதா.
உடல் வியர்த்துப் போனது.
இதயமோ அதிக வேகத்தில் துடிக்கத் தொடங்கியது.
தலை சுற்றுவதைப் போல இருக்க, அவனை அடிபட்டப் பார்வை பார்த்தாள் அவள்.
“நான் உங்கள காதலிக்கிறேன் மிருதா.. எப்போ எப்படி உங்க மேல இந்தக் காதல் வந்துச்சுன்னு தெரியல.. பட் உங்கள உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். என்னோட வாழ்க்கை முழுக்க நீங்க என் கூடவே இருக்கணும்னு விரும்புறேன். ப்ளீஸ் என்ன விட்டுட்டு போயிடாதீங்க..” என உடைந்து அழுதவளைப் பார்த்து அவனோ விழிகள் கலங்கி நின்றான்.
“எனக்கும் உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும்டி. பட் என்னால உன் கூட வாழ முடியாது.. அப்படி உன் கூட ஒன்னா சேர்ந்து வாழ்ந்தா.. அது எனக்குத்தான் கஷ்டமா இருக்கும். என்னால உன் கூட மனசு விரும்பி வாழ முடியும்னு தோணல..” என்றவன் சட்டென அந்த அறையை விட்டு வெளியேறிவிட, அவளுக்கோ அனைத்தும் அசையாமல் உறைந்து போனதைப் போல தோன்றத் தொடங்கியது.
வாய்விட்டு கதறி அழுதாள் காரிகை.
மன அழுத்தம் அதிகரித்துப் போக, தன்னை விட்டு விலகிச் செல்லும் அவனைப் பிடித்து விடும் வேகத்தில் அவளோ அவனை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்க, அந்த நொடி தன் மீது ஈரத்தை உணர்ந்தவள், திகைத்துப் போனாள்.
அக்கணமே அவளுடைய விழிகள் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டன.
இவ்வளவு நேரமும் அவள் கண்டு பதறிய காட்சிகள் அனைத்தும் கனவு எனப் புரியாது பதறிப் போயிருந்தவளுக்கு, ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் அதிகரித்து இருந்தது.
அக்கணமே படுக்கையில் துடித்தவாறு எழுந்து கொண்டவளுக்கு உடல் முழுவதும் வியர்த்து போயிருந்தது.
விட்டுவிட்டு வலிப்பதைப் போல இருக்க பிரசவ வலி தான் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டவள், கனவுக்கும், நினைவுக்கும் இடையில் தடுமாறிப் போனாள்.
அடிவயிற்றில் சுருக்கென வலி தோன்றி அவளை நிலைகுலையச் செய்ய, வலி ஏற்படும் போது மருத்துவர் செய்யச் சொன்ன மூச்சுப் பயிற்சியைப் பதற்றத்தோடு செய்யத் தொடங்கினாள் கீதா.
கர்ப்ப காலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்கு தயாராகும் காரணத்தினால் கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் தசைச்சுருக்கங்கள் அடிக்கடி நிகழும்.
இந்த தசைச் சுருக்கங்கள் ஆரம்ப காலத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்பட்டாலும் ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி அடிக்கடி வலி வரத் தொடங்கும்.
கீதாவுக்கு முதற்கட்ட வலி ஆரம்பித்து விரைவிலேயே முடிந்திருந்தது.
அதற்குள் மிருதனை அழைத்து விட வேண்டும் என மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் அவள்.
அக்கணம் அவள் எழுந்து இரண்டு அடி வைத்த அடுத்த நொடியே பனிக்குடம் உடைந்து தாரை தாரையாக கீழே நீர் வெளியேறத் தொடங்க, அவளுக்கோ பதற்றம் கூடிப்போனது.
அறைக் கதவு பூட்டி இருப்பதைக் கண்டவள் சோர்ந்து போனாள்.
அடுத்த வலி வருவதற்கு முன்பே மிருதனிடம் சென்று விட வேண்டும் என மெல்ல மெல்ல நடந்து கதவைத் திறந்தவளுக்கோ மூச்சு வாங்கத் தொடங்கியது.
இதற்கு மேலும் தன்னால் முடியாது என தன்னாயவள் மிகுந்த வலியோடு “மிருதாஆஆஆஆ….” என அலறினாள்.
அங்கே அவளுக்காக சமையலறையில் உணவை தயாரித்துக் கொண்டிருந்தவனோ அவளுடைய அலறலில் பதறிப் போனான்.
அடுத்த கணமே கையில் இருந்தவற்றை அப்படியே தரையில் போட்டவன், அறையை நோக்கி வேகமாக ஓடி வர அங்கிருந்த மேசையைப் பற்றியவாறே நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்த கீதாவைக் கண்டதும் அவனுக்கோ தலை சுற்றிப் போனது.
அவளுடைய நிலையைப் பார்த்தவனுக்கு பிரசவ வலி வந்து விட்டதோ என எண்ணி திகைத்துப் போனான்.
அதே கணம் தரையில் இருந்த நீர்க்கசிவை பார்த்தவன் குழந்தையைச் சுற்றியுள்ள அம்னோடிக் திரவத்தின் சாக்கான பனிக்குடம் உடைந்து விட்டது என்பதை புரிந்து கொண்டான்.
இப்படித்தான் நடக்கும் என முன்னரே அனைத்தும் தெரிந்து வைத்தியரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மனப்பாடம் செய்யாத குறையாகத் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டவன், துடிக்கும் தன்னவளைக் கண்டதும் நிலை குலைந்து போனான்.
மேசையை இறுக்கப்பற்றியவாறே நின்றவளைச் சட்டென நெருங்கியவன், அவளைத் தன் கரத்தில் தூக்கிக்கொண்டு காரை நோக்கி வேகமாகச் சென்றான்.
எதற்கும் இருக்கட்டும் என அனைத்து பொருட்களையும் அவன் காரின் டிக்கியில் எடுத்து வைத்திருந்தது அந்நொடியில் அவனுக்கு இலகுவாகிப் போனது.
“தங்கம் பயப்படாதடி.. கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் போயிரலாம். கொஞ்சம் பொறுத்துக்கோம்மா..” என அவளுடைய கரத்தைப் பற்றி ஆறுதல் கூறியவன், அவளைச் சாய்த்து இருக்கையில் இருத்திவிட்டு தன்னுடைய அலைபேசியை எடுத்து மருத்துவமனைக்கு அழைத்து “இன்னும் சற்று நேரத்தில் அங்கே வந்து விடுவோம்..” எனக் கூறியவன் அடுத்த நொடியே தாமதிக்காமல் காரை ஓட்டத் தொடங்கியிருந்தான்.
சற்று நேரத்திலேயே அவளுக்கு வலி குறைந்து போனது.
பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து விட்டவாறே அவனை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கீதா.
அவளைத் திரும்பித் திரும்பி பார்த்தவாறே காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் கூடியிருந்தது.
“இன்னும் கொஞ்ச நேரம் தான் கீதா போயிடலாம்..” என அவளிடம் கூறியவன், மருத்துவமனையை அடுத்த சில நிமிடங்களிலேயே வந்து சேர்ந்திருந்தான்.
அவளைத் தூக்க முயன்றவனை வேண்டாம் எனத் தலையசைத்து மறுத்தவள், “எ… என்னால் நடக்க முடியும்..” எனக் கூறிவிட்டு காரில் இருந்து இறங்க, இரண்டாம் கட்ட வலி தொடங்கி இருந்தது அவளுக்கு.
அக்கணம் கருப்பையின் தசைச் சுருக்கம் அதிகமாகிவிட அடிவயிற்றில் சுண்டி இழுப்பதைப் போன்ற அதீதமான வலியில் கால் மடங்கி தரையிலே விழப்போனவளை சட்டெனத் தாவி பிடித்துக் கொண்டான் மிருதன்.
அவளோ வலி தாங்காமல் வீறிட்டு அழத் தொடங்க உள்ளம் துடி துடிக்க அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன், மருத்துவமனைக்குள் வேகமாக நுழைய அதற்குள்ளேயே அங்கே வந்த தாதியர்கள் அவளை லேபர் அறைக்குள் வேகமாக அழைத்துச் சென்றனர்.
தாதியர்களின் பின்னே தானும் வேகமாக நுழைந்து கொண்டவனுக்கோ உடல் தன் கட்டுப்பாட்டை மீறி நடுங்குவதைத் தடுக்க முடியவில்லை.
அதே கணம் அவளுடைய கால்களுக்கு இடையே உதிரம் கசிவதை பார்த்தவனுக்கோ மூளை விறைத்துப் போனது.
பதறித் துடித்தவனாய் அங்கே நின்ற வைத்தியரை நெருங்கியவன் “டா…. டாக்டர் ப்ளீடிங் ஆகுது டாக்டர்..” எனப் பதறிப் போக, அவனைப் பார்த்து புன்னகைத்தார் மருத்துவர்.
“டோன்ட் வொரி மிருதன்.. உங்க மனைவியோட கர்ப்பப்பை பேபியை வெளியே அனுப்ப தகுந்த மாதிரி விரிந்து கொடுக்கும்போது அந்தப் பகுதியில் இருக்க நுண்ணிய ரத்த நாளங்கள் தூண்டப்பட்டு இரத்தப்போக்கு ஏற்படும்.. இட்ஸ் மீன்ஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பேபி வெளியே வரப் போகுது.. டென்ஷனா இருந்தா நீங்க கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணுங்க..” என்றவர் தன்னுடைய சிகிச்சையை ஆரம்பிக்கத் தொடங்கினார்.
பல பிரசவங்களைப் பார்த்து பழக்கப்பட்ட வைத்தியருக்கு அது சாதாரணமாகவே தெரிந்தாலும் கூட, மிருதனுக்கோ அவளுடைய துடிப்பும், கதறலும் தன் உயிரை வேரோடு பிடுங்கி எறிந்தாற் போன்ற வலியைக் கொடுத்தது.
அவளை விட்டு வெளியே செல்லவும் முடியாது, அவளின் அருகே நின்று அவளுடைய கதறலைக் காணவும் முடியாது செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தான் மிருதன்.
ஒரு புதிய உயிரை பெற்றெடுக்கும் போது உண்டாகும் அந்த பிரசவ வலி பல எலும்பு முறிவுக்கு சமானம் என்பதை அறிந்து வைத்திருந்தவன், அக்கணம் அந்த வலியைத் தான் வாங்கிக் கொண்டால் நன்றாக இருக்குமே என ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டான்.
கீதாவின் முகமோ அழுது வீங்கிச் சிவந்து போயிருந்தது.
இதழ்களைக் கடித்து வலியை அடக்கி கொண்டிருந்தவளைப் பார்த்ததும் அவனுக்கோ கண்ணீர் வழிந்து விடச் சட்டென அவளை நெருங்கி அவளுடைய கரத்தினால் தன் கரத்தைக் கோர்த்துக் கொண்டான் மிருதன்.
💜💙💙💜
