நிறங்கள்

மனிதர்களில் சில நிறங்கள்  —-சிறுகதை .

                  அதிகாலை ஆறு மணிக்கு எல்லாம் சந்திரன் டீ கடை வாசலில் கூட்டம் சேர ஆரம்பித்துவிடும்.தினந்தந்தியின் முதல் பக்கத்துல இருந்து கடைசி எழுந்துவரையில் வாசித்து விவாதித்து முடித்துவிடுவார்கள் சிலர்.நிறைய பேர் கடன் சொல்லி தான் டீ குடித்து கொள்வார்கள் .எட்டு மணிக்கு எல்லாம் கட்டிட மேஸ்திரிகள் வர ஆரம்பித்துவிடுவார்கள் .அவர்களை பார்த்தவுடன் கூட்டம் அவர்களிடம் போய் நின்றுவிடும் .அவர்களும் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆட்களை வரச்சொல்லிட்டு போய்விடுவார்கள்.கொத்தனார்,சித்தாள்,மம்முட்டியாள் போக சில வயதானவர்கள் மட்டுமே மிஞ்சி போவார்கள் .அவர்களுக்கு மணல் சலிப்பு,சுத்தம் செய்தல் போன்ற சின்ன வேலைகள் செய்யமுடியும் என்பதால் அதிகம் வேலை கிடைக்காது .வாரத்துல நாலு நாள் வேலை கிடைப்பதே கடினம்.

                எட்டு மணிக்கு எல்லாம் கையில் சாப்பாட்டு கூடையுடன் அனைவரும் தங்களுக்கான கூட்டத்துடன் கலந்துவிடுவார்கள்.அவரவர் டெம்போ வந்தவுடன் ஏறி புறப்பட்டுவிடுவார்கள்.ஒன்பது மணிக்கு வேலை ஆரம்பித்துவிடும் .ஒவ்வொரு கட்டிடத்திற்குள்ளும் எத்தனையோ மனிதர்களின் உழைப்பு விதைப்படுகிறது .அத்தனை வேர்வையிலும் வேதனையிலும் களங்கமற்ற அவர்களின் சிரிப்பலைகள் அந்த கட்டிடத்தின் ஒவ்வோரு மூலையிலும்  எதிரோலிக்கும்.எவ்வளவு கழுவினாலும் சிமெண்ட் அவர்கள் கால்கள் ,கைகளை விட்டு விலகாது.மறுபடியும் சந்திரன் கடையில் இறங்கி டீ சாப்பிட்டுவிட்டு காலையில் குடித்த கடனை அடைத்துவிட்டு குழந்தைகளுக்கும் ஒரு பார்சல் வாங்கி கொண்டு நாட்ராயன் கடையில் ராத்திரி சாப்பாட்டுக்கு அரிசியோடு வீடு திரும்புவார்கள்.சேமிப்புக்கு  என்று எதுவுமே இல்லை என்றாலும் பசி இல்லாத  வாழ்க்கை போதும் என்ற கூட்டம் அது.

              அந்த குடிசை பகுதி முழுவதும் கூலியாட்கள் கிடைப்பார்கள்.அந்த குடிசை பகுதியில் இருந்த கருத்தபாண்டியை தேடி லிங்கம் என்பவர் வந்தார் .கருத்தபாண்டியை பார்த்த உடன் கண்கள் கலங்கி போனார் .கருத்தபாண்டி”எதுக்குடா அழுகுற ?நான் என்ன செத்தா போயிட்டேன் .ஊர விட்டு வந்துட்டா உறவு விட்டு போயிருமா ?அந்த ஊர்ல இப்போ என்ன கிடக்கு?பளபளன்னு நாலு ரோட்ட தவிர.மழை பெஞ்சு ஒத்த வாரத்துல நல்ல தண்ணி குளம் காஞ்சு போயிருது .அப்புறம் எதை வச்சு விவசாயம் பண்றது ?ஊர்ல விவசாயக்கூலின்னு ஒருத்தன் இருக்கனா சொல்லு?நீ தான் புடிவாதமா கிடந்த.மூணு பொட்டைங்க கிடக்கு அதுகளுக்கு எதாவது செய்ய வேண்டாமா ?புள்ளைங்க எங்க?”என்றதும் “உன்கிட்ட பேசிட்டு வர சொல்லணும்னு வந்தேன் “என்றதும் “நாலு வீடு தள்ளி ஒரு குடிசை இருக்கு.நான் வீட்டுகாரிகிட்ட பேசி விடுறேன் .வந்து தங்கி பொழப்ப பாரு .எது வேணும்னாலும் நான் செஞ்சு தாரேன்”என்றதும் லிங்கம் ஊருக்கு போன் பண்ணி குடும்பத்தை கிளம்பி வரச்சொன்னார் .இரண்டு நாளில் குடும்பம் குடிசைக்குள் குடி வந்தது.மாதம் ஆயிரம் வாடகை .இரண்டாயிரம் அட்வான்ஸ் பேசியிருந்தார்கள்.

                முதலில் லிங்கத்தை தன்னோடு வேலைக்கு அழைத்து சென்றார் கருத்தபாண்டி.அவரது ஒருவரது வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாய் இல்லை.அவரது மனைவி மல்லிகா,மூத்த மகள் கனகா,இரண்டாவது மகள் கவிதா ஆகியோரும் வேலைக்கு சென்றார்கள் .கடைக்குட்டி திலகா மட்டும் அங்குள்ள பள்ளிக்கூடத்துல ஆறாவது படித்து கொண்டு இருந்தாள் .வயல்களுக்குள் வேலை செய்த மனிதர்கள் இந்த செங்கல் மேடுகளுக்குள் தங்களை இணைத்து கொள்வது சற்று கடினமானதாக இருந்தது.மேகம் கருக்கும் போது எல்லாம் லிங்கம் அன்னாந்து பார்த்து மேகம் கூட மலடாடி போச்சு இந்த மண்ண போல என்று வெறுத்து போவார் .சேற்று மண் பூசிய கால்களில் சிமெண்ட் கலவை படும் போது வேதனை படரதானே செய்யும் .ராத்திரி சாப்பாடு முடிஞ்சு லிங்கம் படுத்தா கடைக்குட்டி திலகா காலு மிதிக்கும்.லிங்கம் தன்னுடைய மகள்களின் பொத்து போன கைய தொட்டு பாத்து “முள்ளு பட்டா தங்காத கையில இப்போ பாரு எப்படி கிடக்குன்னு”என்பார் மனைவியிடம் “விடுங்க நம்ம எழுத்து அப்படி இருக்கு போல.சரியா போயிரும் “என்றபடி மகள்களிடம்”எண்ணேய் தேய்ச்சுக்கங்க அப்போ தான் சரியாகும்”என்றபடி இருள்வதற்குள் முடங்கி போய் தூங்கிவிடுவார்கள்.

                 ஓரளவுக்கு காசு பணம் சேர ஆரம்பித்தது .மகள்களுக்காக பேங்கில் பணம் சேர்க்க துவங்கினார் .எவ்ளோ கஷ்டப்பட்டாலும் தனது மகள்களின் சிரிப்பில் எல்லாம் மறந்துவிடுவார் லிங்கம் .நிலா வெளிச்சம் இருந்தா வாசல்ல உக்காந்து எல்லோரும் ஒண்ணா சாப்பிடும் போது பக்கத்து குடிசை ஆளுங்க எல்லாம் “என்ன லிங்கம் இன்னும் ஊர் பழக்கம் மாறல போல நிலா சோறு சாப்பிடுவீங்க போல?”என்றதும் “இன்னும் இந்த நிலா ஒண்ணு தான் ஊர் பேர சொல்லா ஒட்டி கிடக்கு .எந்த திசை போனாலும் ஒட்டு உறவா வருது.மாசத்துல ஒரு நா அது கூட சேந்து சாப்பிட்ட மாதிரி இருக்கும் .விதைச்சவனுக்கு வானும் மண்ணும் உறவு போல தான்”என்றதும் அவர்”மண்ணும்,மழையும் கைவிட்டா இப்படி நாடோடி பொழப்பு தான் போல”என்றதும் லிங்கம் தலையசைத்தார் .வேலை செய்து கொண்டிருந்த அவர் மனைவி மயங்கி விழுந்தார் .ஆனால் இது முதல் தடவையல்ல.கருத்தபாண்டி கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார் .ஒரு மாசத்துக்கு அப்புறம் புற்றுநோய் என்பது தெரிந்தது .உயிர காப்பாத்த முடியாது ஆனா தள்ளி போடலாம்னு சொன்னதும் ஒரு வருஷத்துக்கு மேல ஆஸ்பத்திரியே வாழ்க்கைன்னு ஆகியிருச்சு.கையில கிடந்த சேமிப்பும் முடிஞ்சு போச்சு .ஒரு நாள் மல்லிகா இறந்து போனார் .லிங்கத்தோட உடம்புல இருந்த தெம்பு குறைஞ்சு போச்சு .இதுவரையில் தனக்குன்னு எதுவுமே கேக்க தெரியாத மனுஷிய இழந்த சோகம் வாட்டி எடுத்தது .திலகா அம்மா முகம் வரும் போது எல்லாம் அக்கா தாவணிக்குள் வாழ பழகினாள் .இழப்புகள் அன்றாட உழைப்பவர்களை தேக்கி வைத்துவிடுவது கிடையாது.பசி இழப்புகளை கடத்த பழக்கிவிடும்.

                 மேஸ்திரி மயில்சாமி எதிர்பாராத விதமாக மாரடைப்புல இறந்துவிட அவரது மூத்த மகன் ரவி குடும்பத்திற்காக அப்பாவோட வேலைக்கு வந்தான் .காலேஜ் படிப்பு பாதியில் நின்னு போச்சு அவனுக்கு.அவனோட தம்பியும் ,தங்கச்சியும் படித்து கொண்டு இருந்தார்கள் .அவர்களுக்காக அவன் இந்த வாழ்க்கையை ஏற்று கொண்டான் .அவன் அப்பாவிடம் வேலைபார்த்தவர்கள் இவனிடம் வேலைக்கு வந்தார்கள் .எல்லா வேலையும் விரைவில் பழகிக்கொண்டான்.லிங்கத்தின் குடும்பம் இவனிடம் தான் வேலை பார்த்து வந்தார்கள் .அவனுக்கு கவிதாவை மிகவும் பிடித்து போனது .அவளை கண் விலகாமல் பார்த்துக்கொண்டே இருப்பான் .இதை அவளும் கவனித்துவிட்டாள்.ஆரம்பகாலத்தில் விலகினாலும் பின்பு அவனுடைய பார்வைக்காக அவளும் தவித்தாள்.யாரும் பார்க்காத நேரங்களில் அவளது விரல்களை மெதுவாய் தொடுவான்.அவள் நெருப்பு பட்டதாய் விலகி போவாள்.அவளது தலைமுடி அடர்ந்து சுருள் சுருளாய் இருக்கும் .அவள் தலையில் விழுந்த தூசிகளை அவனே எடுத்துவிடுவான்.அவன் தீண்டும் போது அவளுக்குள் ஒருவித வெட்கம் வெள்ளமாய் பாய்ந்து ஓடும் .அவன் அவளிடம் அதிகம் பேசியது கிடையாது.ஒரு நாள் அவளுடைய அக்காவும் ,அப்பாவும் வேற கட்டிடத்துக்கு வேலை போயிருந்தார்கள் .மதிய வேளையில் அவள் சாப்பிட போகும் போது அவன் வாசலில் நின்றிருந்தான் .அவள் அவனை தாண்டும் போது “சாப்பிடலயா?”என்றதும் அவன் திகைத்து போய் “எனக்கு ஏது மதிய சாப்பாடு?”என்றதும் “நான் தந்தா சாப்பிடுவீங்களா?”என்றதும் “அவன் மெளனமாக நின்றான் .அவள் எல்லா பக்கமும் திரும்பி பார்த்துக்கொண்டே தனது சாப்பாட்டில் பாதியை அவனுக்கு தந்தாள் .அவள் வேகமாய் போனதும் அவன் அதை ரசித்து சாப்பிட்டான் .முட்டை குழம்பு சாதம் .அம்மியில் அரைத்து மசாலா திரட்டிய கிராமத்து சமையல் தனிசுவையாய் இருந்தது.பாத்திரத்த அங்கேயே வைத்துவிட்டு சென்றான் .திரும்பி வந்த அவள் அதில் கிடந்த சில பருக்கைகளை எடுத்து சாப்பிட்டாள்.அதை அவளது உரிமையாய் கருதினாள் போல இருந்தது.அவள் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் இருந்தது.

                அவனுக்கு அவளது மெல்லிய சிரிப்பு போதுமானதாய் இருந்தது.எத்தனையோ மனிதர்கள் இருந்தாலும் காதல் இருவருக்குமான  ஒரு வட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது.அவளுடைய குடும்பம் பற்றி அவனுக்கு தெரியும் .அவளுடைய அக்கா கல்யாணத்திற்கு பிறகு கவிதாவை  பெண் கேட்டு போக நினைத்தான் .அதற்குள் அவனுடைய உடன்பிறப்புகளும் படித்துமுடித்துவிடுவார்கள் என்று நினைத்திருந்தான்.சுற்றி இருக்கும் யாருக்கும் தெரியாமல் அவர்களால் தங்களது காதலை பரிமாறி கொள்ள முடிந்தது .மூத்த மகள் கனகா அம்மா நிலையில இருந்து குடும்பத்தை நிர்வகித்தாள்.

                    ரவியின் தம்பி படித்து விட்டு  வேலைக்கு போனான் .தங்கச்சிக்கும் நல்ல இடத்துல திருமணம் முடித்தாகிவிட்டது.ரவி அம்மாவிடம் தனது காதலை சொல்லி பெண் கேட்டு சென்றான் .அவன் பெண் கேட்டு வந்ததை சற்றும் எதிர்பாராத லிங்கம் அமைதியா யோசித்தபடி இருந்தார் .கவிதாவும்,கனகாவும் மறைந்து நின்றனர் .அப்போது லிங்கம்”எனக்கு என்ன பேசுறதுன்னு கூட தெரியல தம்பி.என் புள்ளைகளுக்கு நல்லது நடக்கணும்னு அவுங்க ஆத்தா புலம்பதா நாள் இல்ல .அவ மனசு போல தான் நடக்குது .நேத்து தான் சின்ன இன்ஜினியர் குமார் என்கிட்ட பேசுனாரு தம்பி.நம்ம கவிதா புள்ளைய புடிச்சிருக்கு கட்டி வையுங்கன்னு கேட்டாரு.இப்ப நீங்க  பெரியவள கேட்டு வந்திருக்கீங்க .இரண்டு கல்யாணத்த சேத்து பண்ற அளவுக்கு கூலிக்காரன் கையில என்னங்க இருக்கு.”என்றதும் கவிதாவும் ,ரவியும் அதிர்ந்து போனார்கள் .ரவி லிங்கத்திடம் ஏதோ சொல்ல போக உள்ளிருந்து கவிதா தனது பார்வையில் அவனை தடுத்தாள்.அவள் தனது பார்வையில் தனது அக்காவை காட்டினாள் .அவள் வெட்கத்துடன் இருந்தாள் .அவளது இந்த சந்தோஷம் நீண்ட நாட்களுக்கு பிறகானது.எதிர்பாராத இந்த முடிச்சை ஏற்க தயார் ஆனாள் .அவனையும் தயார் படுத்தினாள்.திசை மாறி போன தென்றல் திரும்பாது என்பதை உணர்ந்திருந்தார்கள்.

                 விரும்பியதை ஏற்பதை விட விரும்பியதை விட்டு தரும் நிலைக்கு வந்தாள் .அவனிடம் கடைசியாய் “என் அக்கா அவ வாழ்க்கையில் எதுக்குமே சட்டுனு ஆசைப்பட்டது இல்ல இப்போ அவ கண்ணுல ஆசைய பாக்குறேன் .அவளுக்கும் உங்கள புடிச்சிருக்கு போல.புடிக்காம எப்படி போகும் ?கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்க இந்த காலத்துல எவன் இருக்கான் ?நீங்களும் மனசார  ஏத்துக்கணும் .மனசு மாறாது ஆனா வாழ்க்கை மாறும் .பெத்தவ பாசத்த  அப்படியே சிதறாம  என் அக்கா தருவா .அவ கூட நீங்க நல்லா வாழணும் .எனக்கு அது போதும்.”என்றதும் அவன் “இப்பவும் நான் கட்டுப்பட்டு தான் கிடக்கேன் .நான் ஆசைப்பட்டு எனக்குன்னு எது கிடச்சது .கிடச்சத வச்சு வாழ பழகணும்”என்றவன் அவளோடு இன்று அதிகமா பேசியதாய் உணர்ந்தான் .

               லிங்கம் ஊரில் இருந்த பூர்வீக நிலத்தையும் விற்றுவிட்டு ஊர் திரும்பினார் .ஒரு விவசாயின் கடைசி உறவான ஒரு பிடி மண்ணையும் கைவிட்டு போனது .மனசு நிறைஞ்ச பாரத்தோட ஊர் வந்து சேர்ந்தார் .இருப்பதை வைத்து கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார் .இரு வீட்டிலும் எல்லா உறவுகளும் திருமணத்திற்கு வர ஆரம்பித்தார்கள் .

                கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு இரண்டு வீட்டாரையும் லிங்கம் சந்தித்து “எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க சாமி.கிராமத்தான் புத்தி எதுவுமே மட்டுபடாம பண்ணிட்டேன் .ஆனாலும் இரண்டு உசிரும் என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்னுச்சு பாரு.அதை விட எனக்கு என்ன வேணும் சொல்லுங்க ?ரவியும் கவிதாவும் பழகுன விஷயம் எனக்கு தெரியாது சாமி.என் கடைசி புள்ள தெரிஞ்சு சொல்ற வரையில .தெரிஞ்சதில் இருந்து கொஞ்சம் கூட நிம்மதியில்ல.அவசரபட்டுட்டோம்னு தோணுச்சு .ஆசைப்பட்டதுகல சேத்து வச்சிடணும்.”என்றதும் குமார் “எனக்கு எந்த வருத்தமும் இல்லைங்க .எனக்கு கவிதாவை பிடிச்சிருந்தது அவ்ளோ தான்.காதல் எல்லாம் இல்லைங்க .கவிதா இடத்துல கனகா வந்தாலும் எனக்கு வருத்தம் கிடையாது.அவுங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும்”என்றதும் கனகா “நான் ஆத்தாவா இருந்தேன்னு நினைச்சேன் ஆனா அக்காவா தான் இருந்திருக்கேன்னு நல்லா புரிஞ்சது இப்போ.மனசுல இருந்தது பத்தி என் கூட பொறந்ததுக்கு சொல்ல தோணலையே?பின்னால தெரிஞ்சிருந்தா என் உசுரே போயிருக்கும்னு தெரியாம போயிருச்சே”என்று கண் கலங்க கவிதா அக்காவை வாரி அணைத்தாள் .அனைவரின் கண்ணிலும் நீர் தேங்கி இருந்தது.

                 மறுநாள் கவிதாவும் ரவியும் மற்றும் குமாரும் கனகாவும் தம்பதிகளாக லிங்கத்தின் காலில் விழுந்து வணங்கினர் .

(புலம் பெயர் தொழிலாளர்களின் உணர்வுகளில் சில பதிவிடும் முயற்சி)

                     (முற்றும்)

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
         உங்கள் 
                       கதிரவன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *