தேவதை வந்தாள்—-சிறுகதை.
ஆளில்லாத கடற்கரையில் அலைகள் மட்டுமே யாராவது வருவார்கள் என்று எண்ணி கரை வந்து செல்கிறது .கடலில் விழுத்து குளுமை கொள்ள அக்னி சூரியன் வானில் தொங்கி கொண்டு இருப்பதாக இருந்தது.பெயர் தெரிந்த சில பறவைகளுடன் சில பெயர் தெரியாத அந்நிய விருந்தினர் பறவைகளும் கடற்கரையில் கலந்துகிடந்தது .மாலைக்கும் இரவுக்கும் இன்னும் ஒரு மணிநேர இடைவேளை இருந்தது.
அப்போது ஒரு மனிதநிழல் மட்டும் அந்த அமைதிக்குள் வந்து சேர்ந்தது .பறவைகள் மரங்களை தேடி சென்றன .அவருடைய கால்கள் நுரை கக்கும் அலைகளில் நிலை கொண்டது . அவரது,காலுக்கு அடியில் மணல் கொள்ளை செய்தது அலைகள் .அவருக்குள் ஒரு மழலையின் கூச்சம் பரவி கிடந்தது .இந்த கடல் அவருக்கு புதிதல்ல .அடிக்கடி வந்து போகும் இடம் தான். இந்த அடர்ந்த மரங்களை கடந்து மனிதர்கள் வருவதில்லை .இந்த தனி மனிதர்க்கு அதனால தானோ என்னவோ இந்த கடற்கரை பிடித்துபோய்விட்டது .
மீண்டும் கரைக்கு வந்தவர் கையில் பேனாவையும்,பேப்பரையும் எடுத்தவர்.சில நிமிடம் மறையும் சூரியனை பார்த்தவர் எழுத ஆரம்பித்தார் .காற்றோடு கலந்து எழுத்துக்களும் காகிதம் நிறைத்தன.எழுத்தாளனது தனிமை சிறப்பானது.தனக்குள் ஒரு உலகம் வந்து செல்ல அமைதி வழி கொடுக்கும் .தான் படைக்கும் கதாபாத்திரங்களுடன் எழுத்தாளன் முதலில் வாழ்ந்து பார்க்க வேண்டும்.இல்லை என்றால் தன்னோடு கலந்ததை எழுத வேண்டும்.எதற்கும் ஒரு தனிமை வாய்த்தாக வேண்டும்.எழுத்தாளர் எழிலன் ஒரு தனிமை விரும்பி எழுத்தாளர்.முழுமையான இரவு வரும் வரையில் எழுதிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிடுவார்.
எழிலன் தனக்காக ஒரு சின்ன அறையில் தங்கி இருந்தார் .ஒரு படுக்கையறை ,சமையல் அறை,வரவேற்பு அறை அவ்ளோ தான்.அனைத்து அறையிலும் புத்தகங்கள் பரவிக்கிடக்கும்.திரும்பும் திசையில் புத்தகம் வேண்டும் அவருக்கு .அவர் யாரோடும் அதிகமாக பேசுவது கிடையாது.யாருடைய எழுத்து அவரை தன்வசப்படுத்தினால் உடனே அந்த எழுத்தாளரை தேடி புறப்பட்டுவிடுவார்.அவர் எழுதும் புத்தகங்கள் அந்த அறையில் இருக்காது .அதை அவர் சேகரிப்பதில்லை.எழிலன் தனக்கான ஒரு உலகம் அமைத்து கொண்டு அதற்குள் வாழ்ந்துவந்தார்.
எழிலனின் செல்போன் அதிர்ந்தது .அவருடைய நம்பர் யாருக்கும் தர மாட்டார் .யாரோடும் முகம் பார்த்து பேச விரும்புவார்.அனுமதிக்காக மட்டுமே சிலர் அவரை செல்போனில் தொடர்பு கொள்வார்கள் .ஆனால் அன்று வந்தது பதிவு செய்யப்படாத நம்பர் .எழிலன் அதிர்வுக்கு உயிர் தந்து “வணக்கம்”என்றதும் மறுமுனை அமைதியில் கிடந்தது மீண்டும் “சார் என் பெயர் அனிதா”என்றதும் எழிலன் காதுகளில் இருந்து செல்போனை பிரித்தார்.சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் செவியில் சாய்த்தார்”சார் உங்க “அவளின் நிறம்”நாவல் சூப்பரா இருந்தது.நாலு தடவை படிச்சிட்டேன் .உங்க எல்லா புத்தகமும் வாங்கிட்டேன்.ஒரு வாரமா முயற்சி பண்ணித்தான் நம்பர் கிடச்சது .சூப்பரா எழுதுறீங்க சார்”என்றதும் அவர் பதில் முனையில் எந்த அசைவும் இன்றி “நன்றிகள் “என்று துண்டித்தார்.மீண்டும் அவர் “வெண்ணிற இரவுகள் “புத்தகத்தை இருபதாம் முறையாக வாசிக்க துவங்கினார் .இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே நம்பரில் இருந்து போன் வந்தது.அவர் எடுக்கவில்லை.தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.வாட்ஸ்அப்பில் அவளுடைய குரல் பதிவுகள் வந்து கொண்டே இருந்தது.
சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் அவருடைய வீட்டிற்கு வந்து விட்டாள் .நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வழக்கமான சூழ்நிலை மாறி இருந்தது.அவர் முன்பு நிற்பவள் அவருடைய சில எல்லைகளை மீறி இருந்தாள் .அவள் ஒரு இளம் பெண்.வசீகர தோற்றம் .செயற்கை இல்லாத அழகி .ஒரு நடிகனை நாடி செல்லாமல் இப்படி ஒரு தனித்த எழுத்தாளனை பார்க்க ஏன் இப்படி முயல்கிறாள்?அவர் விலகுவது கூடவா உணராதிருப்பாள் அவள் .அவர்” யார் நீங்க ?”என்றார் அறிந்தும் அறியாது போல.அவள் “சார் நான் அனிதா.போன்ல பேசினேன் .மறுபடியும் கூப்பிட்டேன் எடுக்கல .வாட்ஸ்அப் கூட பாக்கல நீங்க .அதனால தான் முட்டி மேதி அட்ரஸ் கண்டுபுடுச்சேன் “என்றதும் அவர் அமைதியாகி இருந்தார் .வரும் வார்த்தைகளை நிறுத்தி தேவைப்படும் வார்த்தைகளை தேடி பிடித்து “எதுக்கும்மா இவ்ளோ சிரமம் .என்னை பார்ப்பதற்கு .நான் யாரிடமும் அதிகமா பேச விரும்புவதில்லை .அதனால் தான் போன் எடுக்கல “என்றதும் அவள் “அது உங்க குணம் .ஆனா நான் அப்படி இல்ல எனக்கு பிடிச்சா உடனே பாத்து பேசி ஆகணும் அவ்ளோ தான்.உங்க எழுத்து அவ்ளோ புடிக்குது சார்.மனசுக்குள்ள என்னமோ பண்ணுது .அப்படியே தேங்கி நிக்குது .இப்போ உங்கள நேர்ல பாக்கும் போது கிடைக்குற பீல் போன்ல எப்படி கிடைக்கும் ?”என்றதும் அவர் மெளனமாக யோசித்தார் .எழிலனுக்கு பெண் வேடம் இட்டது போன்று உணர்ந்தார் .அவர் “சரிங்க டீ போட்டு தர்றேன் சாப்பிடலாம் “என்று கிளம்ப அவள் நாஞ்சில் நாடான் சிறுகதையை கையில் எடுத்தாள்.அவர் திரும்பும் போது புத்தகத்திற்குள் தன்னை உட்புகுத்தியிருந்தாள்.அவள் வேறு உலகம் தாவியிருந்தாள்.சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டே இருந்தார்.பின்பு டீயை வைத்தவுடன் அவள் “செமையா இருக்கு சும்மா நச்சுன்னு இருக்கு.நான் எடுத்துட்டு போறேன் .தடுக்கக்கூடாது.”என்றாள் சிரித்தப்படியே.அவரிடம் இருந்து முதன்முறையாக ஒரு புத்தகம் கைமாறுகிறது உரிய அனுமதியுடன் .டீயை குடித்துவிட்டு “உண்மையில டீ ரொம்ப சுமார் தான்.நீங்க புத்தகம் எழுதத்தான் சரியா வருவீங்க”என்று கிளம்பி போனாள் .அவர் சிரித்தப்படியே மீண்டும் டால்ஸ்டாய் உலகத்திற்குள் சென்றார் .
மீண்டும் அவளுடைய நம்பரில் போன் வந்தது .இந்த முறை உயிர் தந்தார் .அவள் “சார் உங்கள பாக்கணுமே?”என்றதும் அவர் யோசித்து”வெளியில கிளம்புறேன் “என்றதும் “பரவாயில்லைங்க சார் .வீட்டு சாவிய பக்கத்து வீட்ல கொடுத்திட்டு போங்க .எனக்கு புத்தகங்கள் தான் வேணும்.”என்றதும் “அவர் “நான் என்ன கடையா வச்சிருக்கேன் “என்றதும் “புத்தகங்கள் ஒருவரின் கைகளில் தேங்கிவிடக்கூடாது .வாசிப்ப நேசிப்போர் கைக்குள் கடந்தாக வேண்டும்”என்றதும் அவளுடைய அத்துமீறல்களில் அவர் நிலைகுலைந்தார்.அவளுக்காக காத்திருந்தார் .அவள் வந்ததும் “நீங்க போகலையா?”என்றபடி தி.ஜானகிராமனின் மரப்பசுவை எடுத்தாள் .அவர் “எவ்வளவு வேண்டுமானாலும் மொத்தமா எடுத்திட்டு போம்மா “என்றதும் “நானும் நாலு பேர் கூட தான் தங்கி இருக்கேன் .அவுங்க எதாவது நினைப்பாங்க சார் . ரூம் ரொம்ப சின்னது”என்றவள் சமையல்அறையில் புகுந்து டீ போட்டுகிட்டு வந்தாள் .இருவரும் சாப்பிடும் போது “நான் தொல்லை தர்றேன்னு தெரியும் .ஆனா எனக்கும் உங்கள விட்டா வேற வழி இல்ல .அவ்ளோ புத்தகம் உங்ககிட்ட இருக்கு.என்னோட சம்பளத்துல இவ்ளோ விலைக்குடுத்து வாங்கி படிக்க முடியாது.ராத்திரி மட்டும் ரூம்க்கு வர்ற நான் லைப்ரேரி போக முடியாது .மொபைல்ல படிக்க புடிக்காது .அதைவிட முக்கியமான விஷயம் உங்கள அவ்ளோ பிடிச்சிருக்கு .அவ்ளோ நம்பிக்கையா இருக்கு”என்றதும் அவர் எழுந்து போய் இன்னோரு சாவியுடன் வந்து “இது உனக்கு.எப்போ வேணும்னாலும் வந்து போங்க .எடுத்துட்டு போங்க.என்கிட்ட இருக்குற அதிகபட்ச சொத்து புத்தகங்கள் மட்டும் தான் “என்றதும் அவள் சிரித்தபடியே வெளியேறினாள் .இத்தனை ஆண்டுகால வாழ்வில் மென்மையாய் ஒரு சலனம் அவர் மனதில் .
இதுவரையில் அவர் உறுதி செய்த உலகம் மட்டுமே இயங்கிவந்தது.ஆனால் தற்போது ஒரு பெண் அத்துமீறுகிறாள் அதையும் ஏற்க வேண்டியுள்ளது .அன்று மாலையும் தன்னுடைய கடற்கரை நாடி சென்றிருந்தார்.அன்று அவரோடு கருமேகமும் மழை சுமந்து வந்திருந்தது .நிறைசூழியாய் மழை சுமந்த வானம்.பிடிவாதமான அவர் சிந்தனைக்குள் புகுந்து எழுதி கொண்டு இருக்க அவரிடம் இருந்து சற்று தொலைவில் ஒரு பெண் உருவம் தெரிந்தது .அவள் அனிதா.காற்றில் சிறகடிக்கும் அடர்ந்த கூந்தலோடு போராடிட்டு இருந்தாள் .இன்னோரு புறம் அவளுடைய ஆடைகளும் காற்றில் அலைமோதியது.அவளை பார்த்த அவர் சிரித்துவிட்டார்.அவள் கடற்கரை காற்றை வெறுத்திருப்பாள் என்று உணர்ந்தார் .கொஞ்சம் சத்தமாக அவர் “என் வீட்டில் நுழைந்தது போல் அல்ல என்னுடைய கடற்கரை.”என்றதும் “பரவாயில்லைங்க இதுவும் பழகி போயிரும் .”என்றதும் அவள் அவரிடம் நெருங்கி “எவ்ளோ அழகான தனிமை .ஆணாய் இருப்பதினால் மட்டுமே கிடைத்துவிடுகிறது”என்றதும் உண்மை என்பதாய் தலையசைத்தார் .அவள் இங்கு வந்ததற்கு அவர் கோபத்தை காட்டி இருக்க வேண்டும் ஆனால் அவளை தனக்குள் வரவேற்று கொண்டார் .பெரும் துளிகளாய் மழை உடலை தொட்டதும் இருவரும் பாழடைந்த மீனவர் குடிலில் தஞ்சம் புகுந்தனர் .அந்த குடில்கள் பேரலையில் அழிந்து எஞ்சி நிற்கும் வெற்று சுவர்கள் .அவர் அவளிடம் “நான் இந்த பக்கம் வரவேமாட்டேன்.நிறைய பேரோட கதறல் கேட்டுகிட்டே இருக்கும் .கடைசியா எது பதிவாகுமோ அது தான் மிஞ்சி நிற்கும் “என்றதும் அவள் ” ஒவ்வோரு கடற்கரையிலும் ஒவ்வோரு அடையாளம் இருக்கு.சில விஷயங்கள் அழகா இருக்கும் .பல விஷயங்கள் இது போல மறக்க பழக வேண்டி இருக்கும்”என்றதும் அவர் அமைதியானார் .மழை வலுத்தது.கடற்கரை மணலில் சிறு ஓடைகளை மழைத்துளிகள் உருவாக்கி உப்பு நீரில் கலந்தது .ஈசலை விட குறுகிய கால வாழ்க்கை கடற்கரையில் பெய்யும் மழை.
தன்னை சுற்றிலும் ஒரு அழகான நிழல் சூழ்ந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது அவருக்குள் .இருவருக்குமான நெருக்கத்தை புத்தகங்கள் ஏற்படுத்தி இருந்தது.அவருடைய உலகத்திற்குள் அந்த பெண் வலுவான உறவை ஏற்படுத்தி இருந்தாள் .அவருடைய தனிமை விலகி இருந்தது.தனிமையிலும் அவள் படர்ந்திருந்தாள் நினைவுகளில் .இளமையின் முடிவில் இருந்த எழிலனுக்கு மீண்டும் இளமைக்குள் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது .அவளோடு கழிந்த ஒவ்வோரு நொடியும் ஆழமான பதிவுகளாய் விதையிட்டது அவருக்குள் .கருமையாய் இருந்த முடிகளில் தலை தூக்கி பார்த்த நரை முடிகள் அவரை சுயபரிசோதனைக்கு உட்படுத்தியது.ஆனால் அவள் அவரை முழுவதுமாக வென்றிருந்தாள்.
அவர் முதன்முறையாக அவளை செல்போனில் அழைக்க நினைத்தார் தொடர்ந்து அழைப்பு சென்றும் அவள் ஏற்கவில்லை மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார் .அவளுடைய குரல் வரும் என்ற காத்திருப்பு வீணாய் போனது .அவருக்குள் எந்த கேள்விகளும் இல்லை அவள் வருவாள் என்பது முழுநம்பிக்கையாக இருந்தது.ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய காத்திருப்பு ஏதோ ஒரு விதமான தவிப்பை ஏற்படுத்தியது .அவர் தன்னுடைய தனிமையை உணர்ந்தார் .இனி காத்திருப்பதில் பலன் இல்லை என அவள் தந்த முகவரியை தேடி புறப்பட்டார் .
அவள் இவருக்கு தந்தது எல்லாம் பொய்யான தகவல்கள் .எதிலும் உண்மையில்லை .தனக்குள் இருந்த தெளிவான எழுத்தாளன் தற்போது இல்லை என்பதை உணர்ந்தார் .கடற்கரையில் அவளுக்காக காத்திருந்தார் .அவளிடம் அவருக்கு சிறிதும் கோபம் இல்லை.அவள் மீது தேடல் மட்டுமே இருந்தது.சாலையில் எத்தனையோ பெண்களுக்குள் அவளை மட்டுமே தேடினார் .கொஞ்சம் கொஞ்சமாக அவர் சிதைந்து கொண்டு இருந்தார் .தனக்கு மட்டுமே பிடித்தமான ஒரு வாழ்க்கையில் அவள் வந்த காரணத்தால் அவரால் செயல்பட முடியாமல் போனது .இப்போது தனிமை கொடுமையானது .இந்த தனிமை அவரை சில வருடங்களுக்கு முன்பு கடத்தி சென்றது .அவர் திரும்பி பார்க்க விரும்பாத நினைவுகளுக்குள் .
கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு சென்று தங்களுக்கு ஏதாவது சம்பாரித்து தருவான் என்ற எண்ணிய பெற்றவர்களுக்கு எழிலன் ஏமாற்றம் தந்தார் .எழிலன் எழுத்தாளர் ஆக விரும்பினார் .தொடர்ந்து எழுதி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பினார் .ஆரம்பகாலத்தில் எந்த எழுந்தாளருக்கும் உடனே அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை.சென்ற வேகத்தில் திரும்பியது கதைகள் .எந்த பதிபகத்திலும் வெளியிட தயாராக இல்லை.மகனின் கனவுகள் பெற்றவருக்கு வருத்தத்தையும் மகனது எதிர்காலம் மீது கவலையும் வர தொடங்கியது .எழிலனின் அப்பா “இது எல்லாம் வேண்டாம்.எதாவது வேலைக்கு முயற்சி செய்”என்று கண்டித்தார்.எழிலனின் கனவுகள் வலுவான நிலையில் இருந்தது.தொடர்ந்து முயற்சி செய்தார் .நாட்கள் கடந்தது .பொறுமையற்ற அவர் தந்தை அவர் எழுதியவை மற்றும் புத்தகங்களை வீசி எறிந்தார் .மகன் மீது கொண்ட கோபத்தில் “வேலைக்கு போற எண்ணம் இருந்தா இரு.இல்லைன்னா கிளம்பு”என்றதும் எழிலன் சிறிதும் மறுக்காமல் வெறும் புத்தகங்களோடு வெளியேறினார் .தன்னையே உணராத எழிலன் சென்னையில் வறுமையில் வாடினார்.சின்ன சின்ன பத்திரிக்கைகளில் வேலை செய்து தன்னை காத்து கொண்டார் .நாளடைவில் தனக்கான தனித்துவமான எழுத்தை கண்டறிந்தார் .அதற்கு பின்பு எல்லா பதிப்பகமும் அவரை தேடி வந்தது.தனக்கு தேவையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.பெற்றோர்க்கு மாதம் தவறாமல் பணம் மட்டுமே அனுப்பி வைப்பார் .அவருக்கு அவர்களை பார்க்க பிடிக்கவில்லை .எழிலனுக்கு ஒரு அக்காவும் ,தங்கையும் உண்டு.தங்கையின் திருமணத்திற்கு கூட செல்லவில்லை .உறவுகளை துறந்து வாழ பழகினார் .ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது .தன்னுடைய நெருங்கிய நண்பரின் மூலமாக மனநல மருத்துவரை சந்திக்க வேண்டி இருந்தது.
எழிலனின் நிலையை பரிசோதிக்கப்பட்ட பின்பு அவர்”சார் இனி நீங்க தனியா இருக்க கூடாது .உங்க மனநிலை இப்போ அவ்ளோ சீர்நிலையில் இல்லை.கொஞ்ச நாள் உங்களுக்கு ஒரு மாறுதல் தர்ற இடத்துக்கு போங்க .மருந்து எல்லாம் வேண்டாம்”என்றதும் அவர் தன்நிலை உணர்ந்து கொண்டார் .தன்னுடைய உறவுகளை தேடி புறப்பட்டார் .அம்மாவின் முகம் இடைவிடாமல் தோன்றி மறைந்தது .அப்பாவின் பரிதவிப்பை உணர முடிந்தது .இதுவரையில் உணராத போன உணர்வுகள் அவரை மீண்டும் அழைத்து சென்றது .தயக்கம் ஏதுமின்றி தன்னுடைய உறவுகளை தேடி போனார் .
வீட்டு வாசல் வரையில் சென்றவர் சற்று தயங்கி நின்றார் .வீட்டிற்குள் இருந்து யாரேனும் வருவார்களா?என்ற எதிர்பார்ப்பு எழும் போது உள்ளிருந்து ஒரு பெண் வேகமாய் வந்தாள் .அவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார் .அவள் அனிதா தான்.தயங்கி நின்றவரின் கைகளை பிடித்து வீட்டுக்குள்ள அழைத்து போனவளை அவர் குழந்தை போல் பின்தொடர்ந்தார்.அவள் சத்தமாக “அம்மாச்சி வந்து பாருங்க மாமா வந்துட்டாங்க “என்றதும் உள்ளிருந்து அவருடைய உறவுகள் அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள் .அவருடைய தாயும் ,தந்தையும் உறைந்து நின்றார்கள் .மற்ற உறவுகளை அவரே யூகித்து கொண்டார் .ஆனால் அனிதா இன்னும் கேள்வியாகவே இருந்தாள் .அவர் பக்கம் திரும்பிய அனிதா “என்ன மாமா நான் யார்னு தெரியலையா ?உங்க அக்கா பொண்ணு தான்.நீங்க இங்கிருந்து போகும் போது எட்டு வயசுல காயத்ரியா இருந்தேன் .உங்களுக்கு என்னை அடையாளம் தெரியல அதை நான் பயன்படுத்திகிட்டேன்.இத்தனை பேரு உங்களுக்காக காத்திருக்கும் போது நீங்க தனிமையில் இருந்தது சரியா?சொல்லுங்க .அதனால தான் தேடி வந்தேன் .”என்றதும் அமைதியாகி போனார் .
எழிலனின் கரம்பிடித்து ஒரு அறைக்குள் அழைத்து சென்றாள் அது அவருடைய அறை தான்.ஆனால் இப்போது அது புத்தக கண்காட்சி போல காட்சியளித்தது.அவர் விரும்பும் அத்தனை புத்தகங்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது.அவர் எழுதிய புத்தகங்களுக்கு தனி வரிசை.அவர் பத்திரிக்கைகளுக்கு எழுதிய கட்டுரைகள் ,சிறுகதைகள் ,தொடர்கதைகள் எல்லாமே சேமிக்கப்பட்டிருந்தது.அவர் கண் இமைக்காது நின்ற சமயம் அவள் “இதை எல்லாம் வாங்கி வச்சது யார் தெரியுமா ?உங்க அப்பா.உங்கள நினைச்சு அவ்ளோ பெருமை அவருக்கு.தினமும் இந்த அறையை சுத்தம் பண்றது உங்க அம்மா தான்.இந்த பாசம் தான் உங்கள தேடி வர வச்சது “என்றதும் அவர் அந்த படுக்கையில் உக்காந்து கொண்டார் .இத்தனை ஆண்டுகளாய் இன்னும் மாறாது வாழும் மனங்கள் அவரை இறுக்கிபிடித்தது போன்று உணர்ந்தார் .அவர் அருகில் சென்ற அவள் “நீங்க விட்டுட்டு போய்ட்டீங்க மாமா.இவுங்க உங்கள தேடி வரல .நீங்க விரும்பி தான் போனீங்க அதனால விலகியே இருந்துட்டாங்க.ஆனா உங்கள பத்தி பேசாத ஆட்களும் இல்லை நாட்களும் இல்ல.ஆரம்பகாலத்தில் உங்க மேல சரியான கோபம் வரும்.எதுக்கெடுத்தாலும் உங்க மாமா எப்படி படிப்பான் தெரியுமா?எவ்ளோ அறிவு தெரியுமான்னு பேசிக்கிட்டே இருப்பாங்க .ஆனா ஒரு கட்டத்துக்கு மேல கண்ணு முன்னாடி இல்லாத மாமா மேல ஒரு ஆசையே வந்திருச்சு .நேர்ல பாத்து கூப்புட்டா வரவா போறீங்க ?அதனால தான் உங்க உலகத்திற்குள் நான் வந்தேன் .நீங்க விரும்புன தனிமைய அழிச்சேன்.உங்கள சரியா புரிஞ்சுகிட்டேன் .”என்றதும் அவர் சிரித்துகொண்டே “உண்மையில ஜெயிச்சுட்ட .நான் பார்த்த பார்வை தப்புன்னு வலிக்குற மாதிரி காட்டிட்ட.இதுவரையில் இழந்த சந்தோஷத்த எப்படி நிரப்ப போறேன்னு தான் தெரியல”என்றதும் அவள் “எதுக்கு நிரப்பணும் மறுபடியும் வாழ்ந்துட்டு போயிரலாம் “என்றபடி மார்பில் சாய்ந்து கொண்டாள் .அவள் உச்சியில் முத்தமிட்டார்.ஒதுங்கி நின்ற அப்பாவின் காலில் விழுந்தார் .அப்பா வாரி அணைத்தார் .தாயும் கட்டியணைத்தார் .உறவுகள் சூழ்ந்து கொண்டனர் .எழிலன் கண்ணீர் வழியும் விழிகளில் பார்க்கும் போது அவருடைய அனிதா சிறகு விரித்த வெண்ணிற தேவதையாய் தெரிந்தாள்.
அன்று இரவு “தேவதை வந்தாள் “என்ற கதை எழுத தொடங்கினார் .
(முற்றும்)
நன்றிகள் !
வணக்கங்களுடன் !
நான்
உங்கள்
கதிரவன்!
