இது போதும் எனக்கு 5

This entry is part 6 of 7 in the series இது போதும் எனக்கு

இது போதும் எனக்கு

இது போதும் எனக்கு!

இது போதும் எனக்கு!

இது போதும் எனக்கு 2

இது போதும் எனக்கு 2

இது போதும் எனக்கு 2a

இது போதும் எனக்கு 2a

இது போதும் எனக்கு 3

இது போதும் எனக்கு 3

இது போதும் எனக்கு 4

இது போதும் எனக்கு 4

இது போதும் எனக்கு 5

இது போதும் எனக்கு 5

இது போதும் எனக்கு 6

இது போதும் எனக்கு 6

{21}
அன்று தன் ஷெட்டில்.. நெடு நாள் வாடிக்கையாளரின் கார் டயர் பஞ்சர் என்று ஷெட்டிற்கு வந்திருக்க.. அந்த டயரைக் கழற்றி.. பிறிதொரு டயரை மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான் விக்கி.
வீட்டில்.. தன் நகக்கண்ணில் கூட சிறு தூசி தேங்கி நிற்காதளவுக்கு.. ரொம்பவும் சுத்தமாக இருப்பவன்.. வேலையென்று வந்ததும்..
அவன் உடம்பில் தானாகவே ஒட்டிக் கொள்ளும் அழுக்கையும், க்ரீஸ்ஸையும் கொஞ்சம் கூட பொருட்படுத்துவதே இல்லை.
அந்தக் காரின் பஞ்சரான டயரைக் கழற்றி… வேறு நல்ல டயர் மாற்றிக் கொண்டிருந்தவனின் டீஷேர்ட்டிலும் சரி.. தொளதொளவென்றிருந்த பேன்ட்டிலும் சரி..
இலங்கைக்காரனாக இருந்தவன்…கொஞ்சம் ஆபிரிக்கக்காரனாகத் தான் மாறிப் போயிருந்தான்.
அந்த நேரம் தான் சற்றும் எதிர்பார்த்திராத தருணத்தில்.. விக்கி சித்தப்பாவின்.. மெக்கானிக் ஷெட்டை நோக்கி.. புயல் வேகத்தில் வந்திருந்தாள் இந்திரா.
ஆம். ஐஷூவின் தங்கை மற்றும் விக்கியின் முன்னாள் ஒரு தலைக்காதலி இந்துவே தான்.
இந்து வந்ததை கவனிக்காமல்.. டயரின் நட்களை ஃபிட் பண்ணிக் கொண்டிருந்த விக்கியோ, அவன் ஷெட்டில் வேலை பார்க்கும் ‘ஒபாமா’ (அதாங்க ஒட்டிசுட்டான் பாண்டி மாதேவன்) தான் தன் பக்கத்தில் நிற்கிறான் என்று எண்ணிக் கொண்டான் போலும்.
“டேய்.. அந்த நட்ஸ்ஸை எடுடா” என்ற வண்ணம்… திரும்பிப் பார்க்காமல்.. தன் கையை மட்டும், அந்தப் பக்கம் நீட்டினான் விக்கி.
டாக்டருக்குப் படிக்கும் இந்துவுக்கு, ‘எந்த நட்? .. என்ன நட்?’ என்று ஒன்றுமே புரியவில்லை தான். இருப்பினும் அதைப்பற்றி அவ்வளவாக கவனத்தில் கொள்ளாதவள்,
தன் பக்கம் நீண்டிருந்த அவன் கையில்… தான் கையோடு எடுத்து வந்திருந்த ஒரு லெட்டரை வைத்தாள் இந்து.
இரும்புலோகத்தை எதிர்பார்த்திருந்தவன் கையில், மடிக்கப்பட்ட காகிதத் துண்டு.. கையில் வைக்கப்பட ,
இந்து தான் அங்கே திடுதிப்பென வந்து லெட்டர் தந்ததை அறியாதவனோ,
“நான் எதைக் கேட்டா.. நீ எதைத் தர்ற? ” என்று கேட்டுக் கொண்டே திரும்பியவனுக்கு.. அங்கே இந்துவைக் கண்டதும் முகத்தில் ஈயாடவில்லை.
‘இவளா?’ என்பது போல கொஞ்சமே கொஞ்சம் அகல விரிந்தது அவன் கண்கள்!!!
மெக்கானிக் இப்போதாவது தன்னைத் திரும்பிப் பார்த்தானே என்று தோன்ற, ஸ்பெக்ஸ் அணிந்திருந்த அந்த அப்பாவி பெண்முகத்திலோ இலேசாக அரும்பு நகை மெல்ல மெல்ல அரும்பலாயிற்று.
அவள் புன்னகைப்பது… அவனுக்குள் ஓர் பெருஞ்சாரல் மழையை தூவச் செய்தது எந்தளவுக்கு உண்மையோ.. அந்தளவுக்கு உண்மை.. அந்த புன்னகை தான் கொண்ட கொள்கையை தளர்த்தி விடுமோ என்று உள்ளே பயந்து அச்சமுற்றது.
லெட்டருடனேயே எழுந்தவன்.. அவளைப் பார்த்து மீண்டும் புன்னகைக்காமல்.. புருவங்கள் இரண்டும் மெல்ல இடுங்க..
அவளை நோக்கிக் கேட்டான், “என்னாதிது?” என்று.
தான் மனதுக்குள் ஆசை வைத்த தலைவன்.. தன் மேல் வைத்திருந்த நேசம் மறந்து போன கதை அறியாமல், “புரியலை? லெட்டர்.. படிச்சுப்பாருங்க..”என்றாள் அந்த இளம் பெண்.
அந்த லெட்டரையும்.. மூக்குக் கண்ணாடியின் பின் பளபளத்த அவள் விழிகளையும் ஒரு சில கணங்கள் ஏதும் பேசாமல் நோக்கியவன்,
அந்த லெட்டரைப் பிரித்துப் பார்க்க நாடவேயில்லை.
ஏனெனில் மெக்கானிக் சித்தப்பாவோ.. அந்த லெட்டர் இந்துவாக தன் கைப்பட எழுதி வந்திருக்கும் “காதல் லெட்டர்” என்று எண்ணிக் கொண்டான்.
தன்னிடமிருந்த லெட்டரை அவள் கையை ஒப்படைத்தவனாக, “போம்மா அங்கிட்டு.. எனக்கு நிறைய வேலை இருக்கு..” என்றவன் சுற்றிலும் கண்களை ஓட விட்டு சம்பவ இடத்தில் இல்லாத தன் ஊழியன் ‘ஒபாமா’வைத் தேடலானான்.
அவன் நடப்பது அனைத்தையும் ஓர் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது புரிய,
“டேய்.. ஒபாமா.. அங்கே நின்னு.. என்ன பண்ணிட்டிருக்க? சீக்கிரம் வந்து அந்த டயரை எடு..”என்று சித்தப்பா ஓர் குரல் கொடுக்க.. சட்டென தன் முதலாளியை நோக்கி ஓடி வரலானான் ஒபாமா.
விக்கி.. அங்கே இந்து என்றொரு பெண் நின்றிருப்பது அறிந்தும்,அதைக் கண்டும் காணாதது போல.. அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்.. வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பது போல காட்டிக் கொண்டது. ஏனோ மனவலியைக் கொடுத்தது இந்துவுக்கு.
ஒரு சில செக்கன்கள் அமைதியாக நின்றிருந்தவள்.. அந்த இடத்தை விட்டும் அகலவேயில்லை.
அவன் வேலை பார்ப்பதை இவள் தடுக்கவில்லை தான். இருப்பினும் அவள் ஏன் அங்கு வந்திருக்கிறாள்? என்று கேட்டறிந்து அவளுக்காக ஐந்து நிமிஷம் செலவழித்து விட்டு மீண்டும் தன் வேலையைத் தொடரட்டுமே??
அவனது அழுக்கு டீஷேர்ட்டில் கை வைத்து தன்னை நோக்கி படாரென்று இழுத்தவள், அவனது க்ரீஸ் படிந்த கைகளில் அந்த லெட்டரைத் திணித்து,
“முதல்ல இந்த லெட்டரில் என்ன இருக்குன்னு பாருங்க ப்ளீஸ்..??என்று கெஞ்சலானாள்.
அவளது தீர்க்கமான பார்வையும், குரலில் இருந்த கெஞ்சலும் மெக்கானிக்கின் இரும்பு இதயத்தை கொஞ்சம் உருக வைக்க, அவளை நிர்மலமான முகத்துடன் பார்த்த வண்ணமே அந்த லெட்டரைத் திறந்தான் அவன்.
“என்ன?” என்று கேட்ட வண்ணமே லெட்டரில் அவன் பார்வையைப் பதிக்க,
அவனெதிரே கைகட்டி நின்றிருந்தவளோ, அவனையே உற்றுப் பார்த்தபடி, “என்னோட சீனியர் எனக்கு தந்த லவ் லெட்டர்..”என்றாள் அவள்.
என்ன இந்த லெட்டர்.. அவனுக்கானது இல்லையா? இந்துவுக்கு, வந்த லெட்டரா? என்ற ஓர் ஏமாற்றம் உள்ளே நிலவினாலும் வெளியே இரும்புத் திரை அணிந்த முகத்துடன் கறாராகவே நின்றிருந்தான் அவன்.
“உனக்கு பிடிச்சிருந்தால் ஓகே சொல்ல வேண்டியது தானே? இதுக்கு ஏன் என்கிட்ட வரணும்..?”-
ரொம்பவும் நாகரிகமாக தன் காதலை சொல்லியிருந்த டாக்டர் பையனின் லெட்டரை படித்து முடித்து.. அதை மடித்துக் கொண்டே கேட்டான் மெக்கானிக்.
அந்த லெட்டரைப் பார்த்து.. விக்கியின் வாயிலிருந்து அவள் எதிர்பாராத சொற்கள் உதிர்க்கப்பட கொஞ்சம் உள்ளே பதறிப் போனாள் மங்கை.
அவன் முகத்தில் அந்த லெட்டரைக் கண்டு ஆயிரம் உணர்ச்சி பாவங்கள் வெடிக்கக் கூடும் என்று இந்து எதிர்பார்த்திருக்க.. நடந்தது எல்லாம் எதிர்மாறு தான்!!
“நிஜமாலுமே.. இதைப்பார்த்து… உங்களுக்கு.. கோபம், பொஸஸிவ்னெஸ் வரலையா மாமா..?” என்று வாடிய முகத்துடன் கேட்டாள் அவள்.
“நான் எதுக்கு இதைப்பார்த்து கோபப்படணும்??.. டாக்டருக்கு படிக்குற பையன்.. உன் மேல இருக்குற ஆசையை நாகரிகமா லெட்டர்ல வெளிப்படுத்தியிருக்கான்.. உனக்கு இஷ்டம்னா ஓகே சொல்லு..” – கேஷுவலாக மொழிந்தான் சித்தப்பா.
அவனது அலட்சியமான பதிலில்.. மென்மையான இதயம் வாய்க்கப் பெற்றவளுக்கோ.. இலேசாக இதயம் கலங்கி.. கண்களின் ஓரம் கண்ணீர்த்துளி துளிர்க்கவாரம்பித்தது.
ஒடிந்து போன குரலில்,
“அப்படின்னா… நிஜமாவே உங்களுக்கு.. எ.. என்னைப் பார்க்கறப்போலாம்.. ஒண்ணும் தோணலையா?”என்று கேட்டாள்.
“என்ன தோணனும்?”- இடுப்பில் கை வைத்தவனாக குழப்பத்துடன் கேட்டான் மெக்கானிக்.
“ல.. லவ் பீலிங்..??”-தட்டுத் தடுமாறி சங்கோஜத்துடன் சொன்னாள் அவள்.
“ஹேய் லூசா நீ? .. என்ன உளர்ற?.. ஒரு நாள் லிப்ட் கொடுத்தவுடனே மனம் எக்குத்தப்பாக பறக்குதோ?இப்படிலாம் நீ கற்பனை கோட்டை கட்டுவேன்னு தெரிஞ்சிருந்தா.. அன்னைக்கு லிப்ட் கொடுத்திருக்கவே மாட்டேன்”-எகிறிக் கொண்டே போனான் சித்தப்பா.
உள்ளுக்குள் அவளுக்கான காதல் மலையளவுக்கு இருந்தாலும்.. அதைத் தன் கண்களால் கூட வெளிப்படுத்தாது.. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இந்து மேல் சீறிப் பாயவே செய்தான் அவன்.
இத்தனை நாளும் அவன் பேச்சையும்,பார்வையையும் காதல் என்று வரித்து வைத்து கற்பனை கண்டவளாயிற்றே?
அவளுக்கோ..அவன் சொற்களைத் தாங்க முடியாமல் போனது.
“நிஜமாவே… நீங்க என்னை காதலிக்கலை?- சரேலென ஒரு துளிக் கண்ணீர் கண்களில் இருந்து வழிந்தோடக் கேட்டாள் இந்து.
“திரும்பத் திரும்பக் காதல்னா.. அடிச்ச்ச்சு.. பல்லை கில்லை எல்லாம் கழட்டிருவேன்..”என்று அவளை அடிப்பதற்காக கோபத்துடன் சிவந்த கண்களுடன் காற்றில் கை ஓங்கியிருந்தான் அவன்.
அவன் கை ஓங்கியதும் அச்சத்தில் கண்கள் சுருக்கி நின்றாளே ஒழிய.. இந்து அவ்விடத்தை விட்டும் ஒரடி கூட நகரவில்லை.
தான் முதன் முதலாக ஆசை வைத்த ஆண்மகனின் ஒதுக்கம் அவளை ரொம்பவும் பாடாய்ப்படுத்தியது.
“அப்போ நீங்க மாமான்னு கூப்பிட சொன்னது? .. என் மேல ரொம்ப கேர் எடுத்துக்கிட்டது? … எனக்காக மெடிக்கல் டிக்ஷனரி எல்லாம் வாங்கித் தந்தது?… இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?” என்று கண்ணீர்த்துளி… அவன் விம்பத்தை மறைக்க… ஏக்கத்துடன் கேட்டாள் இந்து.
“நீ நல்லா படிக்கணும்னு அர்த்தம்..!!!” பட்டென்று பதில் வந்தது விக்னேஷிடமிருந்து.
அப்படியானால் விக்னேஷூக்கு.. இந்த சோடாபுட்டி மேல் ஒருதுளியளவு கூட காதல் கிடையாதா?
அவன் பேச்சும், பார்வையும்.. அவனுடன் இருக்கும் போது இறக்கையேயின்றி வானத்தில் பறக்கும் உணர்வும் சொல்லியதே.. அவனுக்கும் அவள் மீது காதல் உண்டு என்று??
இந்துவின் கண்கள் கலங்குவது.. உள்ளுக்குள் சுருக் என்று முள் தைத்த வலியைக் கொடுக்க,அவளது அழுகை வேறு காண்டைக் கொடுத்தது அவனுக்கு.
“இதோ பாரும்மா.. நீ ரொம்ப தான் ஓவரா பண்ற? .. இப்படியெல்லாம் நீ நடந்துப்பேன்னு தெரிஞ்சிருந்தால்.. நான் உனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கவே மாட்டேன்.. இங்கே நின்னு கண்ணைக் கசக்கிக்கிட்டு நின்னால்.. ஷெட்டுக்கு வர்ற கஸ்டமர்ஸ்.. என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க..? மரியாதையா போயிரு..” – எரிச்சலுடன் கத்தினான் விக்கி.
“மாட்டேன்… எனக்குத் தெரியும்!! .. நீங்க என்னை லவ் பண்றீங்கன்னு.. எனக்குத்தெரியும்..”என்று அவனைப் பார்த்து முறையிடும் குரலில் சொன்னாள் இந்து.
இவ்வளவு சொல்லியும்.. அதை புரிந்து கொள்ளாமல் மக்கு மாதிரி பேசும் அவள் மேல் கோபம் எகிற,
மீண்டும் அடிக்க கை ஓங்கியவன், “ஒண்ணு உட்டேன்னா… நீ எந்திரிக்கவே மாட்ட.. படிக்குற வயசுல படிப்பை மட்டும் பார்க்காமல்.. லவ்ஸ் கேக்குதா… உனக்கு லவ்ஸ்ஸூ? அப்படியே ஓடிப் போயிரு..”என்று அவன் கத்திய தினுசில்..
அவள் முகம் அவமானத்தில் குன்றிப் போனது.
வயதுக்கு வந்த இளம்பெண்ணொருத்தி.. அதுவும் அழகான இளம் பெண்ணொருத்தி.. ‘என் மேல் உனக்கு காதல் இல்லையா?’ என்று வெட்கத்தை விட்டுக் கேட்கிறாள்.
கொஞ்சம் கூட அவள் மனதுக்கும், இயல்பாக மொழிந்த காதலுக்கும் கண்ணியம் கொடாமல் ரொம்ப தான் பண்றான்!!
கலங்கிய விழித்திரைகளுடன் அவனையே பார்த்திருந்தவளுக்கு.. அவன் தன்னை நோக்கி கை ஓங்கியது இன்னும் கொஞ்சம் கவலையைக் கொடுக்க,
அங்கேயே குலுங்கிக் குலுங்கி அழுது விடுவோமோ என்ற அச்சத்தில், விழிநீரை அடக்கிக் கொண்டு, அங்கிருந்து ஓடி மறைந்தாள் அவள்.
அவளது கண்ணீர் ஏதோ செய்ய.. சட்டென அவளுக்கு புறமுதுகிட்டு நின்று கொண்ட விக்கியின் முகத்திலும், யாருடனும் சொல்லாத ஓர் சோகமொன்று நெஞ்சோடு இழையோடிக் கொண்டிருந்தது.
********
நேற்று நள்ளிரவு.. ஒரு மணி தாண்டிக் கொண்டிருந்த வேளை,
தன் தலைவனுக்காக காத்திருந்தவள், அழைப்பு மணி அடிக்கப்பட்டதும் வந்திருப்பவன் தன் தலைவனே தான் என்று நாடி நரம்பெங்கும் ஓர் சந்தோஷம் சிலிர்த்தோட கதவைத் திறந்தாள் கதையின் கதாநாயகி ஐஷூ.
அங்கே அவள் தலைவன் மட்டும் இருக்கவில்லை. தலைவனோடு அவன் தோழன் விக்கியும் நின்றிருக்க..விக்கி தன் பிடியை கொஞ்சம் விட்டாலும் கூட, ஸ்ரீதர் பிடிமானமேயற்று வாசலிலேயே சரிந்து வீழ்ந்து விடும் நிலையில் இருந்தான்.
தலைவனை அழைத்து வந்திருந்த விக்கிக்கோ.. கண் நிமிர்ந்து ஐஷூவின் முகத்தைப் பார்க்கக் கூட சங்கோஜமாக இருந்தது.
பின்னே.. கர்ப்பிணி பெண்ணின் மனது எந்நேரமும் சந்தோஷமாக இருக்க வேண்டும். சந்தோஷமாக வைத்துக் கொள்வது கணவனின் கடமை!!
அப்படியிருக்கும் போது.. இப்படியான ஓர் நிலையில் வந்து நின்று.. ஐஷூவுக்கு இன்னும் கொஞ்சம் கவலையைக் கொடுக்கிறானே இந்த பரட்டைத்தலையன்???
ஸ்ரீதரின் தொங்கியிருந்த தலை மெல்ல நிமிரவே.. அப்போது தான் தன் தலைவனாக சூரியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் சூரியகாந்தி மலர்.
அவனுடைய உதடு வீங்கி, தொங்கிக் கொண்டிருந்தது மட்டுமில்லாமல், ஆங்காங்கே தோலைக் கிழித்துக் கொண்டு இரத்தம் வந்து கொண்டிருப்பதையும்,
அவனுடைய வெண் சட்டையில் ஆங்காங்கே இரத்தம் திட்டுத் திட்டாக கட்டி நிற்பதையும் கண்ட ஐஷூ.., கணவனுக்கு என்னாதோ, ஏதானதோ என்று பதறிப் போனாள்.
கர்ப்பிணியாக இருப்பவளின் கண்கள்.. தூக்கம் தொலைத்து இத்தனை நேரம் கணவனுக்காக காத்திருந்ததும் இல்லாமல்..
ஸ்ரீதருக்காக கலங்குவதைக் கண்டதும்.. ஐஷூவின் நிலைமை ஒருவித பரிதாபத்தை ஏற்படுத்தியது ஸ்ரீதருக்குள்.
“ஐயோ விக்கி.. குடிச்சிட்டு வண்டியோட்டி எங்கேயும் மோதிட்டாரா..?” – கவலை, பதற்றம், கண்ணீர் ஒருங்கே தோன்ற கேட்டாள் அவள்.
“ச்சேச்சே.. இல்லை ஐஷூ.. குடிக்கப் போன இடத்தில் தான் தகராறே..?” என்ற வண்ணம், ஸ்ரீதரை தாங்கிப் பிடித்துக் கொண்டு அவன் உள்ளே வர,
கணவனின் மற்றொரு கையை தன் தோள் மேல் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்து வர உதவி செய்யலானாள் அவள்.
ஒருவழியாக ஸ்ரீதரை அறையில் மஞ்சத்தில் கொண்டு வந்து விட்டதும், தனக்கு என்ன நடக்கிறது? என்று கூட தெரியாமல்,
கட்டிலில் கை, கால்களை அகல நீட்டிக் கொண்டு படுத்திருந்தவனைக் கண்டதும்.. உள்ளுக்குள் பரிதாபமாக இருந்தது விக்கிக்கு.
“என்ன விக்கி சொல்றீங்க? தகறாரா?ஸ்ரீதர் யார் வம்பு, தும்புக்கும் போற ஆள் இல்லையே விக்கி?” என்று ஆற்றாமையுடன், அவனைப் பார்த்து கேட்டாள் ஐஷூ.
நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்து விட்டுக் கொண்டே விக்கியும்,
“அது எனக்கும் தெரியாதாமா? அவனை எந்த கிரகம் பிடிச்சு ஆட்டுதுன்னு தெரியலையே? .. பார்ல குடிக்க போயிருக்கான்.. குடிக்குறது தப்பு தான்.. அதை சரின்னு சொல்ல வரலை.. ஆனால் குடிச்சிட்டு ஸைலன்ட்டா வரவேண்டியது தானேமா? இவனுக்கு யாரு அங்கே குடிக்க வர்றவங்க கூட வம்பிழுக்க சொன்னா..அதான் நல்லா சாத்து சாத்துன்னு சாத்தியிருக்காங்க… நான் போகும் போது பேவ்மன்ட்ல கிடந்தான்மா.. யாரோ ஒரு புண்ணியவான் கோல் பண்ணி.. “இப்படி தான் உங்களுக்கு வேண்டப்பட்டவரு ரோட்டில் விழுந்து கிடக்காரு..கூட்டிட்டு போங்கண்ணு சொன்னான்” அதான் இது நம்ம ஸ்ரீதர் செல்லாச்சேன்னு அரக்க பறக்க ஓடிப் போய் கூட்டிட்டு வந்தேன்” என்று நடந்த உண்மைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஐஷூவுக்கு மொழிந்தவனுக்கோ,
ஸ்ரீதரை தூக்கி வந்தது ஆயாசத்தைக் கொடுத்திருக்க வேண்டும்!!!
இடுப்பில் கை வைத்து நின்று… பெருமூச்சு விட்டவன், தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் குரலில்,
“இவன் ஏன் தான் இப்படி பண்றான்னு தெரியலையே?” என்றவன் ஐஷூவைத் திரும்பிப் பார்த்தான்.
அவளுக்கும் அதே கேள்வி தான் ஓடிக் கொண்டிருந்தது. விக்கி ஆண்மகன்.. அதேயளவு சோகம் உள்ளே மண்டிக்கிடந்தாலும் கலங்காமல் தேக்குமரம் போல உறுதியாக நின்றான்.
ஆனால் அவள்? அவள் ஓர் பெண். இறைவனின் மென்மையான படைப்பு. கொண்டானின் திடீர் மாற்றங்களை சகிக்க மாட்டாமல் நின்றிருந்தாள் அவள்.
விளைவு? கண்ணீர் அவள் இரு கண்களிலிருந்தும் நில்லாமல் உகுத்துக் கொண்டேயிருந்தது.
பார்வை இடுங்க ஸ்ரீதரின் மனைவியைப் பார்த்தவன், தயங்கிய குரலில்,
“கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஆயிரம் இருக்கும்.. இதை நான் கேட்குறது நாகரிகம் இல்லை.. இருந்தாலும் கேட்டே ஆகணும்.. ஸ்ரீதருக்கும், உனக்கும் ஏதாவது சண்டையாமா?” என்று கேட்டான் அவன்.
“ச்சேச்சே.. அப்படியேதும் இல்லை விக்கி..”- தன் சிவந்த நுனிமூக்கை சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டு மெல்ல உரைத்தாள் அவள்.
“ஓ அப்படியாமா?.. பையன் ஏதோ குழப்பத்துல இருக்கான்னு நினைக்குறேன்.. சீக்கிரம் சரியாகிரும்னு நம்புவோம்..” என்று அவள் கண் பார்க்க திராணியற்று.. தரை பார்த்தே மொழிந்தவனாக அங்கிருந்தும் விக்கி நகர்ந்த பின்பு தலைவனை நோக்கி திரும்பினாள் அம்மாதரசி.
மெல்ல அவனருகில் வந்தவளின் கண்களில் கண்ணீர் உகுக்கிறது.
இப்படி நாலு பேரிடம் வலிய சென்று தகராறு செய்து.. இரத்தக் கசிவுடன் வந்து நிற்கிறானே அவள் தலைவன்?
அழுது அழுது மூக்கை உறிஞ்சுக் கொண்டே சென்று, முதலுதவி பெட்டியை எடுத்து வந்தவள்.. சுயநினைவற்றிருக்கும் கணவனின் காயங்களுக்கு எல்லாம்.. மென்மையாக மருந்திடலானாள் அவள்.
ஸ்ப்ரிட்டின் எரிவில்.. அவன் கொஞ்சமாக கண்கள் திறந்த போதும் கூட.. ஏதோ மயக்கநிலையிலேயே இருந்தான் ஸ்ரீதர்.
ஒருவேளை அவன் சுயநினைவில் இருந்திருந்தால்.. வேண்டாத மனைவி செய்யும் இந்த முதலுதவி சிகிச்சையை எல்லாம் அவன் ஏற்காது புறக்கணித்திருக்கக் கூடும்!!
மறுநாள் காலையில் துயில் களைந்து எழுந்தவனுக்கு காணக்கிடைத்தது… தன் பாதங்களின் அருகிலேயே பள்ளி கொண்டிருக்கும் அவனுடைய அழகு மனைவியின் மென்மையான ரோஜாவைப் போன்ற அழகு வதனம் தான்!!
ஒரு சில செக்கன்களுக்கு அவள் மேல் அவன் கொண்டிருக்கும் ஊடல் முற்றாக மறந்து போய்.. அவளை ஆகர்ஷிக்கும் அன்புக் கணவனாக,
‘என் உயிரின் பாதி.. தரையில் அமர்ந்த நிலையிலேயே துயில்வதா?’ என்ற கேள்வி பிறக்க
அவளை அள்ளி அணைக்க.. காதலுடன் நீண்டது அவனது வலிய திண்மையான கரங்கள்.
ஆனால் பழைய நினைவுகளும், அவளது துரோக கூத்துக்களும் இன்ஸ்டன்ட்டாய் அவன் சிந்தனையில் மின்னல் வெட்டினாற் போன்று ஞாபகம் வரவே, அவன் கைகள் மெல்ல பின்வாங்கிக் கொண்டது.
அவனை எப்போதும் உருகிட வைக்கும் அவளது பால் வண்ண அழகு வதனம்!!
அந்த அழகுக்குள் தான் எத்தனை .. கள்ளங்கபடங்கள், ஒளிவுமறைவுகள், நாடகங்கள்???
நினைக்கும் போதே மயிர்க்கூச்செறிந்து.. உச்சாதி பாதம் வரை.. ஓர் வெறுப்புணர்வு படர்ந்ததது ஸ்ரீதருக்கு.
மஞ்சத்தை விட்டும் எழுந்து கொண்டவனுக்கு நேரெதிரே இருந்த கண்ணாடியில்.. இரத்தத் திட்டும், காயத்திற்கு கட்டும் இருப்பது புரியவே…
மனைவி தான் அதற்கு மருந்திட்டிருக்க வேண்டும் என்பது புரிந்தது.
அவளே வேண்டாமென்கிறான்? அவள் இட்ட கட்டு மட்டும் எம்மாத்திரம்?? என்று தோன்ற இன்னும் சரிவர காயாத இரத்தக்காயங்கள் எரிவைக் கொடுத்தாலும்..
அதை சகித்துக் கொண்டு பேன்டேஜினைத் தூக்கி எறிந்தவன், வழமை போல அலுவகத்துக்கு செல்ல தயாராகியவனாக,
முதன் வேலையாக தாயை நாடித்தான் போனான்.
ஆனால் இத்தனைக்கும் ஐஷூ.. கணவன் எழுந்து.. அலுவலகத்துக்கு தயாராகி கீழே சென்றது கூட தெரியாமல்.. இன்னும் துயின்று கொண்டே தானிருந்தாள்.
மனைவியை அவன் புறக்கணிப்பதும், அவளை நோகடிப்பதாக எண்ணிக் கொண்டு..
அது முடியாமல் தன்னைத் தானே அவன் நோவினை செய்து கொள்வதும் ஒரு பக்கம் ஸ்ரீதரை பாதித்தாலும்..
மனைவிக்கு கை நீட்டியதற்காக தன் மேல் கோபித்துக் கொண்ட தாயின் பாராமுகம் அவனை ரொம்பவே பாதிக்கத்தான் செய்கிறது.
சமையல் கட்டில்.. தன் கணவனுக்காக தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தாயின் பின்னால் சென்று நின்று கொண்டவன்,
குற்றவுணர்வு மேலோங்கிய குரலில்,
“அம்மா..” என்று ஆதுரத்துடன் மெல்ல அழைக்க,
அவன் அழைப்பது கேட்டும், கேட்காதது போலவே தன் வேலையிலேயே கண்ணாக இருந்தார் ராஜேஸ்வரியம்மாள்.
நேற்று காலை..சிசு சுமந்து நிற்கும் மருமகளை அவன் அறைந்தது.. இன்றும் கூட அவர் ஞாபகத்தில் இருந்தும் போகாது.. கண்முன் நிழலாடிக் கொண்டேயிருந்தது.
அந்தக் கோபம் அப்படியே அவருக்குள் பசுமையாக பதிந்து விட.. ஸ்ரீதர் பரிதாபமாக தன்னை அழைப்பது புரிந்தாலும், திரும்பிப் பார்க்கவேயில்லை அவர்.
தன்னை கண்டு கொள்ளாத தாயின் புறமுதுகைக் காணக் காண ஆற்றாமை பொங்கி வழிந்தது அவனுக்கு.
அவளுக்காக தன்னை ஏறெடுத்தும் பாராத தாயை கோபத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டே அவன் வெளியே வந்த போது,
ஹாலில் சோபாவில் அமர்ந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த தந்தையின் குரல் காரசாரமாகவே அவன் காதுக்குள் கேட்டது.
இத்தனைக்கும் தந்தை அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவர் விழிகள் என்னமோ பத்திரிகையில் தான் ஆழ்ந்திருந்தாலும்,
அவர் சொன்னது என்னமோ.. அனைத்தும் ஸ்ரீதருக்கு தான்.
“குடும்பத்திலேயே இல்லாத பழக்கம்.. தன்னை நம்பி வந்த பொண்ணு மேல கை வைக்குறது..” என்று தந்தை கூற, தந்தைக்கும் விஷயம் தெரிந்து விட்டதா? என்ற பக்கென்ற ஓர் உணர்வு தோன்ற.. அமைதியாக தலை குனித்துக் கொண்டான் அவன்.
“எனக்கொண்ணும் தெரியாதுன்னு மட்டும் நினைக்காதே..நீ சொல்லலைன்னா என்ன? .. எனக்கு தான் நடந்ததை சொல்ல ஆள் இல்லையா என்ன?.. என் தம்பி இருக்கான்..” என்று விக்கியைப் பற்றி தந்தை கூற,
நேற்று காலை மடத்தனமாக விக்கியை அவளுடன் இணைத்து வைத்துப் பேசியது ஞாபகம் வந்தது அவனுக்கு.
ஏதோ ஆத்திரத்தில் வார்த்தைகளை வெளிவிட்டிருந்தவனுக்கு.. அவனுக்குமே அந்த சொற்களின் வீரியம் தாங்க முடியவில்லை.
அது தான் உண்மை. அதிலும் வேறு… அவளை அறைந்தது.. ஐஷூவை கை நீட்டி அறைந்தது வேறு அவளை உயிரோடு புதைக்க.. தாங்க மாட்டாமல் தான் குடிக்க சென்றான்.
தெரியாத்தனமாக ஒரு சரக்கு பாட்டில் இவன் கையால் உடைக்கப்பட்டதற்காக தொடங்கியது ஓர் சண்டை. அத்தனை பேரையும் அவனால் எதிர்த்திருக்க முடியும்?
ஆனால் இன்று காலை விக்கியை, அவளுடன் இணைத்து வைத்துப் பேசிய பாவத்துக்கு தண்டனையாக, அந்த மொடா குடியர்களின் அத்தனை அடி, உதைகளையும் தாங்கிக் கொண்டதை இங்கே யார் தான் அறிந்திருக்கக் கூடும்?
ஆனால் பாசக்கார விக்கி… அவனையும், மனைவியையும் இணைத்துப் பேசி வைத்த கதையை மறந்தும் கூட தன் அண்ணனிடம் சொல்லியிருக்கவில்லை.
இது தான் விக்கி. எப்போதும் ஸ்ரீதரின் நலனிலேயே.. தன் சுகம், சந்தோஷம் இருப்பதாக கருதும் வெள்ளந்தி மனசுக்காரன் அவன்.
தொடர்ந்து கேட்டது தந்தையின் குரல்.
“உன் பொண்டாட்டி மேல நீ கை வைச்சது தப்பு!! மன்னிக்க முடியாத குற்றம்!! முதலில் உன் பொண்டாட்டி கிட்ட மன்னிப்புக் கேளு.. அவன் உன்னை ஏத்துக்கிட்டால்.. அம்மாவும் உன்னை மன்னிச்சு ஏத்துக்குவா..” என்று பத்திரிகை புரட்டிய வண்ணம் தந்தை சொல்ல,
அதற்கு மேலும் அதைக் கேட்க அங்கு ஸ்ரீதர் இருக்கவில்லை.
பற்களைக் கடித்துக் கொண்டு, கை முஷ்டி மடக்கி நின்றவன் புயல் வேகத்தில் அங்கிருந்து வெளியேறினான்.
என்ன? தப்பே செய்யாதவன் போய் அவளிடம் மன்னிப்புக் கேட்கணுமா? அவளுடனான வாழ்க்கை அப்போது கசக்கவாரம்பித்தது அவனுக்கு.
‘என் பொண்டாட்டி!! என் பொண்டாட்டி!! என்று அவன் மேல் மலையளவு அன்பைக் கொட்டியவனுக்கு.. ‘ஏன் பொண்டாட்டி?? எதுக்கு பொண்டாட்டி?’ என்ற கேள்வி மனதினுள் நிலைக்கவாரம்பித்தது.
அன்றிலிருந்து அவன் வாழ்வில், சனி பகவான் தன் ஆக்கிரமிப்பை செலுத்திய கஷ்ட காலமோ? அப்படித் தான் போலும்!!
அதற்குப் பிறகு நிகழ்ந்தவை யாவும் அவனுக்கும் சரி, அவன் மனையாளுக்கும் சரி.. அவனைச் சுற்றி இருந்தவர்களுக்கும் சரி.. மனமகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கவேயில்லை என்பது மட்டும் திண்ணம்!!!

{22}

அதற்குப் பின் வந்த நாட்களில் ஸ்ரீதர்.. அவனது அழகு மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதையும் கூட நிறுத்திக் கொண்டான்.
தனக்கு துரோகம் செய்தவள் அவனுக்கு தந்த மனோவலியை… அதை விட பன்மடங்காக.. அவளுக்கு அவன் கொடுத்திருக்க முடியும்.
இருப்பினும் அவனால் தன் வாரிசை சுமந்து நிற்பவளை, ஒரு போதும் துன்புறுத்த முடியாமல் போனது.
ஸ்ரீதர் பெண்மைக்கு எவ்வளவுக்கெவ்வளவு மதிப்பு வைத்திருந்தானோ.. அவ்வளவுக்கு அவ்வளவு தாய்மை மீதும் அவன் மதிப்பு வைத்திருந்தான்.
அதனாலேயே என்னவோ.. தான் உயிருக்குயிராக நேசித்த பெண்ணின் துரோகத்தைத் தாளமாட்டாமல்.. அவன் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் படியாயிற்று.
ஒரு சின்ன வீடியோ கோல் சம்பவம்.. தெளிந்த நீரோடை போன்று சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
அலுவலகம் விட்டதும், இரவு நேரங்களில் வீட்டுக்கு வராமல் சாலைகளின் ஓரத்தில் காரைத் தரித்து.. வண்டியிலேயே துயின்று விட்டு..
காலை விடிந்ததும் வீடு வருபவன்.. யாருடனும் பேசாமல் குளித்து சுத்தமாகி அலுவலகம் கிளம்பலானான்.
மொத்தத்தில் அவன் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்க வழக்க முறைகள் என எல்லாவற்றிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது மனைவியின் துரோகம்!!.
இப்படியாக இரு மாதங்கள் மின்னல் வேகத்தில் நகர்ந்தது. ஒழுங்காக சவரசம் செய்யப்படாத தாடி.. புதர் போல வளர்ந்திருக்க…
எப்போதும் ஒளிசிந்தும் தீர்க்கமான கண்களில்..யாருடனும் நெஞ்சோடு சொல்லப்படாத சோகம் எட்டிப்பார்க்கலாயிற்று.
மனைவியின் கைப்பக்குவத்தில்.. நாக்குக்கு ருசியாக வீட்டு சாப்பாடு உண்டு பழக்கப்பட்டவனுக்கு… ஹோட்டல் சாப்பாடும் உடலில் ஒட்டாமல் போக..
ரொம்பவும் இளைத்துப் போய் தெரியலானான் ஸ்ரீதர்.
ஒருத்தர் மேல் தாம் அளவு கடந்த காதல் வைத்திருக்கும் போது.. திடீரென எதிர்பாராமல் வரும் ஏமாற்றங்கள் தாங்க முடியாதவை. அந்தக் காதலின் ஏமாற்றம் தரும் வலி மிகவும் கொடிது.
அந்தக் கொடிய வலியை அனுபவித்தவனுக்கு… உள்ளே நெஞ்சின் ஆழத்தில் சுருக் சுருக் என்று நெருஞ்சி முள் குத்தினாற் போன்ற ஓர் வலி.. எழுந்து கொண்டேயிருந்தது.
இவன் இவ்வாறிருக்க.. தன் கொண்டவனுக்காக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமையோ ரொம்ப மோசமானதாக இருந்தது.
கணவனின் முகத்தை அவள் சரிவரப்பார்த்தே கிட்டத்தட்ட இரண்டு மூன்று கிழமைகளாகி விட்டிருந்தது.
கொண்டவனின் சேய்மை.. தன் சேய் மேல் அவள் கொண்ட தாய்மையையும் தான் புறந்தள்ள வைத்தது.
அவளும் சரி வர உண்ணாமல், உறங்காமல்.. கழுத்து என்பு உறுத்தி வெளித்தெரிய, கண்களில் குழிவிழுந்து கருவளையம் தோன்றி… பரிதாபகரமான மாறிப் போனாள்.
ஆனால் அந்தப் பேதைப்பெண் ஐஷூவுக்கோ.. ஏன் இப்படியொரு நிலைமை? அவனின் நடத்தைக்கு என்ன காரணம்? என்று தான் ஒன்றும் புரியாமல் போனது.
அன்று, மனதில் புடைத்து எழுந்த சோகம் தாளமாட்டாமல்… வயிறு புடைக்க குடித்து விட்டு.. வழமை போல நள்ளிரவில் வீடு திரும்பலானான் ஸ்ரீதர்.
அவனுக்காகவே, உறங்காமல் காத்திருந்த ஐஷூவும், தன் கணவன் வீடு வந்து சேர்ந்ததும்.. கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள்,
தன்னைத் தாண்டி செல்லும் கணவனின் புறமுதுகை நோக்கி, தீர்க்கமான குரலில்,
“நில்லு ஸ்ரீதர்..” என்றாள்.
படிகளில் கால் வைக்கப்போன பாதங்கள் அப்படியே நின்றனவே ஒழிய.. திரும்பித் தன் மனையாளின் விழிகளை ஏறிட்டும் பார்க்கவேயில்லை அவன்.
“நான் உன் கூட கொஞ்சம் பேசணும்?” ஓரெட்டில் கணவனை அடைந்தவள் சொன்னாள்.
அவனுக்கோ… இந்தக் குரலில் தான் எத்தனை மென்மை? இந்த மென்மையில் தான் எத்தனை உருக்கம்?
ஆனால் இதே மென்மைக் குரல் தானா? , ‘ஏன்னா அவ்வளவு அவசரம்.. அவ்வளவு அவசியம்?’ என்று லஜ்ஜையேயின்றி இன்னொரு ஆடவனைப் பார்த்து மொழிந்தது?
உடல் விறைக்க நின்றவன், மேற்கொண்டு பேசாமல்.. அடுத்த அடி எடுத்து வைக்கப் போக, சட்டென அவனுடைய முன்னங்கையைப் பற்றி தடுத்தி நிறுத்தியவளுக்கு,
கணவனிலிருந்தும் வந்து கொண்டிருந்த சாராய நெடி, குப்பென்று நாசியை நிரடி, நுரையீரலை நிறைக்க, முகம் சுளித்துக் கொண்டே, மூக்கைப் பொத்திக் கொண்டாள் அவள்.
“கு.. குடிச்சிட்டு வந்திருக்கியா?”- கணவனின் பக்கவாட்டு முகம் நோக்கித் தட்டுத் தடுமாறிக் கேட்டாள் அவள்.
அவன் ஏதும் பேசவில்லை. சாவதானமாகத் திரும்பி தன் மனையாளின் முகத்தைப் பார்த்தான்.
அவள் கண்கள் இரண்டும்… கீழிமை துடித்து.. கலங்கிப் போயிருக்க..அவள் மேல் மலையளவு காதல் வைத்திருக்கும் அவன் நெஞ்சமும் கொஞ்சம் பதறிப் போனது.
ஆனால் அந்த நீலிக்கண்ணீரின் பின்னுள்ள நாடக நிதர்சனம் புரிய.. காதல் பூத்த அந்தக் கண்களில், காட்டுமிராண்டித்தனம் முளைத்தது.
அதை அறியாமல் நின்றவள், தழுதழுத்த குரலிலேயே வாய் திறந்தாள். பாவம் ஐஷூ.
“ஏன்.. இப்படியெல்லாம் நீ நடந்துக்குற ஸ்ரீதர்? .. நீ என்னைப் பத்தி… யோசிச்சுப் பார்த்தியா..? நம்ம குழந்தையோட எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?” என்று அவள் பேசுவது எல்லாம் அவன் இரும்பு இதயத்தை அடையவேயில்லை.
அவள் கண்களில் இருந்து.. கண்களை எடுத்து.. அவளது முன்னங்கையில் பதித்து ரொம்பவும் கறாரான குரலில்,
“முதல்ல என்னைத் தொடாதே.. உன் கையை விடு…!!”என்றான் ஸ்ரீதர்.
தன்னைப் பார்த்து “தொடாதே’ என்று மொழிந்தது என் பேபிக்கண்ணா தானா?
அவளுள்ளே இதயத்திலிருந்து ஊற்றெடுத்த ஓர் வலி…உச்சாதி பாதம் வரை எழுந்து அடங்கியது.
தொண்டையில் அடைத்ததை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு,
“முடியாது … கொஞ்ச நாளா நானும் உன்னை கவனிச்சிட்டு தான் வர்றேன்.. நீ நீயாகவே இல்லை!! … எப்போ வீட்டுக்கு வர? எப்போ ஆபிஸூக்கு கிளம்பற? சாப்பிட்றியா? தூங்குறியா? எதுவுமே தெரியாமல்.. இங்கே வீட்ல உனக்காக ஒருத்தி காத்திருக்குறது உனக்குப் புரியலையா? என்னாச்சுடா? என்னாச்சு உனக்கு?? முன்னெல்லாம் என்னைப் “பொண்டாட்டி.. பொண்டாட்டி”ன்னு வாய் நிறைய கூப்பிட்ற என் பேபிக்கண்ணா எங்கே? என்னோட பேபிக்கண்ணா எங்கே?” என்று கேட்டுக் கொண்டே இறுதியில் முடியாமல் வெடித்து அழுதாள் அவள்.
தன் முன்னே தன் ஆருயிர் பெண் அழுததும்.. ஸ்ரீதரினுள் இருக்கும் அந்த மென்மையான உண்மைக்காதலன் எட்டிப் பார்க்க..
அழும் அவளை அணைக்கத் துடித்தது அவனுடைய வலிய கரங்கள்.
ஆனால் ‘நினைவுகள்’ இருக்கிறதே? அது பொல்லாதது. வேண்டாத நினைவுகள் அங்கணம் அவன் மூளையில் உதித்து விட்டு செல்ல,
இது அத்தனையும் நடிப்பு!!உள்ளே அத்தனை குற்றத்தையும் செய்து விட்டு.. அவள் போடும் பத்தினி வேஷம் இது?
அடேங்கப்பா என்னமா நடிக்கிறாள் அவள்?என்றே தோன்றியது அவனுக்கு.
அதிலும் அவள் வேறு ‘பேபிக்கண்ணா’ என்றழைத்ததில் ஓர் கோபம் பொங்கியெழ,
பற்களை நறுநறுவென கடித்துக் கொண்டு, “ப்பேபிக்கண்ணா… ப்பேபிக்கண்ணா.. ப்பேபிக்கண்ணா..” என்றவனாக,
ஆத்திரத்தில் முஷ்டி மடக்கி, அவள் முகத்துக்கு நேராக கையை கொண்டு சென்றவன்,
அச்சத்தில் மருண்டு துடிக்கும் அவளை துன்புறுத்த முடியாமல்.. சுவருக்கு ஓங்கி ஓர் குத்து விட்டான் அவன்.
அவளுக்கோ தன் முகத்தை நோக்கி நீண்ட அவன் கையில்..உடல் கிடுகிடுவென நடுங்கத் தொடங்க,
இவனோ ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல், “இனியொருதரம் பேபிக்கண்ணான்னு நீ சொன்ன?? நான் மனுஷனா இருக்க மாட்டேன்!!..”என்று சுட்டுவிரல் காட்டி எச்சரித்தான் அவன்.
அன்று நிதானம் தவறி இருந்ததாலோ என்னவோ? அவன் உள்ளத்தில் இத்தனை நாளாக குமுறிக் கொண்டிருந்த எரிமலை சீற்றம்.. வெடித்துச் சிதறவாரம்பித்தது.
கண்கள் இரத்த சிவப்பாக மாற, “உன்னைப் பொறுத்த வரைக்கும்… நான் இளிச்ச வாயன்ல? பேபிக்கண்ணான்னு சொன்னதும்.. ஒரு நாய்க்குட்டி மாதிரி.. உன் பின்னாலேயே வாலை ஆட்டிக்கிட்டு வந்து.. உன் காலடியில் சுருண்டு படுத்துப்பேன்னு நினைச்சிட்டேல்ல? அப்போ அஸைன்மன்ட் பண்றதுக்கு நான் தேவைப்பட்டேன்… இப்போ.. சொல்லவே நாக்கூசுதுடீ..!!”என்று கூறிக் கொண்டே போக,
அவன் சொன்னவற்றையெல்லாம் கேட்டு… ஐஷூவுக்கு தாங்க முடியாமல் போக,
“இல்லை பேபிக்கண்..” என்று கூற வரும் போது மீண்டும் இடையிட்டு சீறிப்பாய்ந்தது அவன் குரல்!!
“ஹேய் இன்னொருவாட்டி.. பேபிக்கண்ணா சொன்ன..??”என்று கேட்டவன் விழிகளில் கோபாவேச வெறி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
பக்கத்தில் இருந்த ட்ராயர் மேலிருந்த பூ வாஸ் அவன் கண்ணில் படவே… அவள் மேலுள்ள ஆத்திரம் எல்லாம் அதன் மேல் தாவியது அவனுக்கு.
வாலிபால் அடிப்பது போல.. பூவாஸை ஓங்கி அடிஅடிக்க, சுவரில் போய் மோதி பட்டுத் தெறித்துச் சிதறியது அது.
அந்த ஒலி விஸ்தாரமாகக் கேட்க, துயில் களைந்து எழுந்து வந்த அவன் தாய் ராஜேஸ்வரியம்மாளும் கூட, மகனும், மருமகளும் நின்றிருக்கும் கோலம் கண்டு பதறிப் போய் விழிக்கலானார்.
“முன்னெல்லாம் ..உன்னைப் பார்க்கும் போது .. என் பொண்டாட்டி எவ்வளவு அழகுன்னு தோணும்!!.. ஆனால் இப்போ… பாம்பும் கூட அழகா தான் இருக்கும்..அந்த பாம்புக்கும், உனக்கும் என்ன வித்தியாசம்னு தோணுது..?” என்று மகன்,
தன் கர்ப்பிணி மனைவி அச்சத்தில் வியர்க்க விறுவிறுக்க நிற்பது கூட பொருட்படுத்தாது கூற… மருமகள் மேல் கழிவிரக்கம் மிகலாயிற்று ராஜியம்மாளுக்கு.
“டேய் ஸ்ரீதரா!!.. நானும் பார்த்துட்டிருக்கேன்.. கொஞ்ச நாளா உன் நடத்தையே சரியில்லை.. !!”என்று கத்திக் கொண்டே அவ்விடம் வந்து சேர்ந்தார் அவர்.
திரும்பத் திரும்ப தாய், இந்த ராட்சசிக்காகவே பரிந்து பேசுவதை இம்மியளவும் விரும்பாதவன்,
“அம்மா.. இவளைப் பத்தி.. உங்களுக்கு என்னம்மா தெரியும்? ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி.. தகுதியையும், அழகையும் பார்த்து.. உங்க பையனோட காதலை.. துச்சமா தூக்கியெறிஞ்சுட்டு போனவமா இவ? .. என்னை பைத்தியம் மாதிரி திரிய வைச்சவ மா இந்த ராட்சசி!!! .. இவளுக்கு போய் சப்போர்ட் பண்றீங்க…?”என்று தன் ஆற்றாமையை தாயிடம் கொட்டி தீர்த்தான்.
சும்மாவே தன் மகன் காதலை நிராகரித்த.. முகம் தெரியாத அந்த திமிர் பெண்ணை தாளித்துக் கொட்டும் அத்தைக்கு.. அந்த பெண் இவள் தான் என்று தெரிய வந்ததும் என்ன நடக்கும்??
சட்டென நிமிர்ந்து தன் அத்தையை அப்பாவியான முகத்துடன் பார்த்தாள் அவள்.
ஆனால் அவரோ.. அதை கிஞ்சித்தும் சட்டை செய்யாது,
“இருக்கட்டும்டா.. ஆனால் என் மருமகள் பத்தி எனக்குத் தெரியும்.. என் மருமகள்… நல்லவ தான்..!!”என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக அவளை நம்பிப் பேசினார் அவர்.
“இவளோடது நடிப்பும்மா.. இவளுடைய இன்னொரு பக்கம் உங்களுக்கு தெரியாது..”-தன் தாயே புரிந்து கொள்ளாமல் பேசியதில், அவனுக்குள் ஆத்திரமும், கவலையும் ஒருங்கே எட்டிப்பார்க்கலாயிற்று.
தாயை விடுத்து மனைவியை நோக்கி திரும்பியவன்,
காற்றில் கைகளை பிசைந்து கொண்டு, அடிக்குரலில், “உன்னைப் பார்க்கப் ப்… பார்க்க.. ந்நீ ப்பண்ண துரோகத்துக்கு.. உன்ன்ன்னை!!…” என்று கைகளை அவள் கழுத்தை நெறிக்கக் கொண்டு வந்தவனுக்கு,
தன்னையே ஏதும் செய்யாத அப்பாவி போல பார்த்துக் கொண்டிருக்கும் அவள் விழிகளைப் பார்த்ததும் அவனால் முடியவில்லை.
“இங்கேயிருந்து போயிடு..”- கடினப்பட்டு கைகளை மடக்கியவன், வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னான்.
“ஸ்ரீ.. ஸ்ரீதர்.. நீ ஏதோ தப்பா..”என்று அவள் ஏதோ சொல்ல வர.. அவளை பேச விட்டானா அவன்?
அவளைப் பார்த்து திரும்பியவனின் விழிகள் ஆத்திரத்தில் செம்மை பூக்க, “இன்னும் என் காதில பூ சுத்தலாம்னு நினைச்சிட்டு இருக்கியா??”என்று கேட்டான் அவன்.
“எ.. என்ன?”-தட்டுத் தடுமாறி கேட்டாள் அவள்.
அவளைப் பாராமல் தன் தாயின் முகத்தை மட்டும் கலங்கியவனாகப் பார்த்தவன்,.
“அம்மா.. அன்னைக்கு… சித்திக்கு சுகமில்லைன்னு சொல்லிட்டு.. அவள் எங்கே போனா.. எதுக்கு போனான்னு தெரியுமா? … அர்ஜூன் வீட்டுக்கு..!!! அவள் முறைப்பையன் அர்ஜூன் வீட்டுக்கு!!” என்று தலைவன் கூறியதுகேட்டு அதிர்ந்து விழிக்கும் படியாயிற்று ஐஷூவுக்கு.
அவள்.. அன்று பொய் சொல்லி விட்டு.. அர்ஜுன் வீட்டுக்குப் போனது… கணவனுக்கு எப்படி தெரிந்தது?
சும்மாவே பதற்றத்தில்.. தன் மார்பு ஏற, இறங்க மூச்சு விட்டுக் கொண்டு நின்றவளுக்கு, கணவன் நடந்தது அனைத்தையும் அறிந்திருக்கிறான் என்றானதும் பகீரென்றாகி விட்டது.
அவள் திகைப்பூண்டை மிதித்தாற் போன்று சர்வமும் உறைந்து போய் நிற்க,
இவனோ அவளை நோக்கித் திரும்பி, “எனக்கும், என் காதலுக்கும், என் நம்பிக்கைக்கும்.. நீ துரோகம் பண்ணலைன்னா.. நீ ஏன்.. என்கிட்டேயும், அம்மாக்கிட்டேயும்… பொய் சொல்லணும் ஐஷூ?” என்று தன் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியைக் கேட்டான் அவன்.
அவளுக்கோ.. கணவன் அன்று திருவாய் மலர்ந்தருளிய அன்று தான்.. அத்தையிடம்,
‘சித்தியைப் பார்க்கச் செல்வதாக அவள் சொன்ன பொய்யும்,
இவனிடம் இங்கே தான் உறங்கினேன் என்று அடித்து சொன்ன பொய்யும் அகப்பட்டுக் கொண்டதே.. தெரியும்!!
இவளோ அதிர்ந்து போனவளாக நின்றிருக்க, அவனுக்கோ மனைவி தன்னை ஏமாற்றிய கோபம் இதயமெங்கும் நிறைந்திருந்தது.
“ஏன்னா நான் இளிச்சவாயன்.. கேனெக்கூ.. ன்னு எழுதியிருக்குல?..
இந்த ரெண்டு காதாலேயும் கேட்டேன்… அவன் உனக்கு எவ்வளவு அவசியம்னு… நீ சொன்னதை ரெண்டு காதாலேயும் கேட்டேன்..”என்று ஈனக்குரலில் சொன்னவனுக்கு..
அன்று உலகமே வெறுத்துப் போனது.
ஆனால் அவளுக்கோ… அவன் சொற்களும், தனக்கு பேச இடம் கொடாத அவன் ஆத்திரமும்.. கர்ப்பிணியாக இருந்தவளின் இரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் எகிற வைத்தது.
அவனுக்கு சமமாக எதிர்த்து பேசக் கூட முடியாதளவுக்கு, நெஞ்சில் வந்து சுவாசம் முடிச்சிட்டு நிற்க,
சமய சந்தர்ப்பமே பாராது… அவளுடைய முதுகந்தண்டிலேயே.. எலும்பை உடைக்கும் ஓர் வலி..
“கிடுக்” என்ற வலியுடன் தோன்றி மறைய, கீழுதட்டைக் கடித்து நின்று.. தன் வழியை சமாளித்து நின்றாள் ஐஷூ.
மனைவிக்குள் எழுந்து கொண்டிருக்கும் வலியை அறியாதவனோ, இன்னும் இன்னும் தொடர்ந்து தன் மன ஆத்திரங்களை சொல்லில் கடித்துத் துப்பித் தீர்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“அர்ஜூன் தான் வேணும்னா நான் எதுக்கு? ஊருக்கு நான்.. உள்ளுக்குள்ளே அவனா? அமெரிக்கா போகும் போது.. யம்மா நீ வடிச்சியே ஒரு நீலிக்கண்ணீர்.. நடிகையர் திலகம் சாவித்திரி தோத்துச்சு… எத்துன நாளா காத்திருந்த? இல்லை நான் இல்லாதப்போலாம் அப்போ அப்போ நடக்குறது தானா? ஏழு நாள்.. ஏழு நாள் நான் இல்லைன்னதும்.. உன்னால கன்ட்ரோல் பண்ணிட்டிருக்க முடியலைல? ச்சீ… உன்னைப் பார்க்கவே அருவெறுப்பா இருக்கு…!!
அப்போ கூட என் ஐஷூ எனக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ண மாட்டாள்னு நம்பினேன்…
இந்த உலகத்திலேயே உசத்தியானது நம்பிக்கை.. அந்த நம்பிக்கையை நீ உடைச்சிட்ட.. இனி எப்படி நான் உன்கூட வாழ முடியும்..??” என்று அனைத்தையுமே,
லாரியில் இருந்து கொட்டப்பட்ட கற்களைப் போல தன் மனதிலுள்ள அனைத்தையும் சரசரவென அவளிடம் கொட்டித் தீர்த்தான் அவன்.
அவளுக்கோ… நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் வாய் திறந்து சொல்லி விடும் உத்வேகம் பிறந்தாலும் உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது.
அவனோ, இறுதியாக அவன் விழிகள் பார்த்து “இனி நீ எனக்கு தேவையில்லை..” என்றவனுக்கு.. சீற்றம் எல்லையைக் கடந்திருந்தது.
தாயும் இன்னும் ஏன் அவனும் கூட எதிர்பார்த்திராத சமயம்,
அவளுடைய முன்னங்கையைப் பற்றி.. தரதரவென இழுத்துக் கொண்டே வந்தான்.
இடையில் அவன் தாய் வேறு, “டேய் ஸ்ரீதரா.. இப்போ அவ பிள்ளைத்தாச்சிடா.. நம்ம வீட்டு வாரிசை சுமந்திட்டிருக்கா.. நீ பண்றது தர்மம் இல்லைடா”என்று கத்திக் கொண்டே அவனுடன் வர,
ஸ்ரீதரின் காதுகளுக்கு அவை எல்லாம் அவன் காதுகளில் சென்று விழவேயில்லை.
இல்லை காதுகளில் விழாதவன் போலவே நடந்து கொண்டான் அவன்.
கணவனின் கை தந்த அழுத்தம்!! போதாக்குறைக்கு அடிவயிற்றில் எழுந்து கொண்டிருந்த அதீத வலி!! எல்லாமும் அவளை அலைக்கழிக்க..
காற்றில் அகப்பட்ட பஞ்சு போல.. அவன் இழுத்த இழுப்பில் விருட்டென்று சென்றாள் அவள்.
அந்த நேரம் அங்கே நின்றிருந்த ஸ்ரீதர் கொடுரமனாவன்; குரூரமானவன். மனைவியின் உடல் நிலையோ.. அவள் உள்ளுக்குள் அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருந்த வலியோ அவன் கண்களுக்கு புரியவேயில்லை.
அடைத்து வைக்கப்பட்ட சோடா பாட்டில் திறக்கப்பட்டது போல.. அவன் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த அத்தனை கோபங்களும் பீறிட்டுக் கொண்டு வெளியேறியது அன்று.
தான் தொட்டு தாலி கட்டிய மனைவியை, வாசலிலிருந்து வெளியே தள்ளியவன்,
“வ்வெளியே போடி.. அவன் கூடவே போயிரு!! ..” என்று கத்திய நேரம்…
ஓர் கர்ப்பிணிப் பெண்ணை ஈவிரக்கமேயில்லாமல் நடத்தும் அவன் பால்.. கோபம் கொண்டானோ வருண பகவானும்??
கண்களை பறிக்கும் வண்ணம் மின்னல் மின்னி, இதயம் கிடுகிடுங்கும் பலத்த இடியோசை கேட்டு, சோவெனத் தூறவாரம்பித்தது மழை.
அப்போது பார்த்து.. அந்நள்ளிரவில்.. தன்னுடைய கஸ்டமர் தந்திருந்த வண்டியை இரவிரவாக விழித்திருந்து சரி செய்து கொடுத்து விட்டு,
தன் ரூமுக்கு செல்லாமல்.. நேரே ஸ்ரீதர் வீட்டுக்கு வந்து.. குளித்து சுத்தமாகி… இருக்கும் பழைய சோற்றை உள்ளே தள்ளி விட்டு…
அண்ணன் வேறு.. ஏதோ பால்ய நண்பனின் பேரக்குழந்தைக்கு காதுகுத்து கல்யாணம் என்று வெளியே சென்றிருப்பதால்..
அவர் அறையிலேயே ஓய்வெடுத்து விட்டு காலையில்.. ஷெட்டிற்கு செல்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டே தன் பைக்கில் வந்திருந்தான் சித்தப்பா விக்கி.
அவன் பைக்கில் ஸ்டேன்ட் போட்டு.. இறங்கி வந்த நேரமும், ஸ்ரீதர் முரட்டுத்தனமாக ஐஷூவை வெளியே தள்ளிய நேரமும் ஒன்று.
சமநிலை தடுமாறி.. எக்குத்தப்பாக தண்ணீர் தரையில் வழுக்கி விழப்போனவளை..
உயிரும், உடலும் கலங்க ஓடி வந்து பிடித்துக் கொண்டான் விக்கி.
தன்னையும், ஐஷூவையும் சேர்த்து வைத்து.. ஸ்ரீதரன் பேசும் போது கூட அவ்வளவாக கோபம் பொங்காத அவன் விழிகளில்,
கர்ப்பவதியை.. மனசாட்சியே இல்லாமல் வெளியே தள்ளும் ஸ்ரீதரைக் கண்டதும் கொலை வெறியே மிகுந்தது அவனுக்கு.
அவளை ஒரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டே, வாசற்படி உச்சத்தில் நிற்கும் அவனை நோக்கி,
“டேய்.. டேய் ..என்னடா பண்ற? .. பிள்ளைத்தாச்சியா இருக்குறவளைப் போய்..? ந்நீ எல்லாம் ம்மனுஷனாடா?” என்று விக்கி எகிற,
நடந்தது அறியாமல் தன்னைக் காயும் சித்தப்பன் மேலும் ஸ்ரீதரின் கோபம் தாவியது.
“வ்விக்னேஷ்ஷ்!!! .. இது என் குடும்ப விஷயம்!!.. இதில் நீ தலையிடாதே…!” என்று ஸ்ரீதர் சுட்டு விரல் காட்டி எச்சரிக்க,
சும்மா விடுவானா சித்தப்பனும்??
ஸ்ரீதருக்குள் ஓடிக் கொண்டிருக்கும் அதே இளரத்தம் தானே.. விக்னேஷூக்குள்ளும் ஓடுகிறது?
“ட்டேய்.. எதுடா.. உன் குடும்ப விஷயம்? என் அண்ணா, அண்ணி, நான் எல்லாரும் சேர்ந்து தான் உனக்கிந்த கல்யாணத்தை நடத்தி வைச்சோம்.. அதனால ஒரு பிரச்சினைன்னா தலையிட எங்களுக்கு உரிமையும் இருக்கு…” என்று கத்திக் கொண்டே,
கை முஷ்டி மடக்கிக் கொண்டு முன்னேறியவனை, அதற்கு விடாமல், அவள் சட்டையை பற்றி இழுத்தது ஐஷூவின் மெல்லிய கரம்.
குழந்தை முள்ளந்தண்டில் ஓர் உதை உதைத்து, அடிவயிற்றில் தலையால் முட்டுவது போல கொடூர வலி,
தாங்கவே முடியாமல் எழ , “ப்ளீ..ஸ் வி..க்கி.. எனக்காக ந்நீங்க சண்டை போட்டுக்…காதீங்க..”என்றவள் அப்படியே சரிந்து விழப் போக,
அவளை பதற்றத்துடன் தாவிப் பிடித்துக் கொண்ட விக்னேஷ்,
அவள் கன்னம் தட்டித் தட்டி, “ஐஷூ.. யம்மா.. ஐஷூ.. எழுந்திருமா” என்றழைப்பதெல்லாம், ஏதோ கிணற்றுக்குள் இருந்து அழைப்பது போலத் தான் கேட்டது அவளுக்கு.
*******
கொழும்பின் அதி பிரசித்தமான தனியார் மருத்துவமனை..
முதல் குழந்தையை பிரசவிக்கும் வேதனையை அனுபவித்த கையோடு…
அந்த வேதனையின் வீரியம் தாங்க மாட்டாமல் அப்படியே மயங்கியிருந்தவள்,
திரும்ப சுய உணர்வுக்கு வந்த போது.. தாய்மை சிந்தும் அவள் இதயமும் சரி.. கண்களும் சரி… தன் மழலையே தான் கண்கள் தேடலாயிற்று.
அவள் விழித்த போது.. குழந்தை பக்கத்தில் இல்லை!! அவள் காண நாடும் குழந்தையின் மாசற்ற முகத்தைத் தவிர,
பல முகங்கள் அங்கே இருந்தன.
அத்தை,சித்தப்பா,தந்தை,இந்து..சித்தி..எல்லாவற்றுக்கும் மேலாக.. இடிந்து போன முகபாவனையுடன் அவன்!!
மென்மையாக அனைவரையும் தழுவிக் கொண்டே வந்தவளின் பார்வை.. கணவனிடம் வரவும்.. ஒரு செக்கன் அப்படியே நிலைத்து நின்றது.
மெல்ல வாய் திறந்தவள், அடிவயிற்றில் ஊரும் மெல்லிய வலியைப் பொறுத்துக் கொண்டு,
“எதுக்கு இங்கே வந்த? எ.. என் குழந்தையை.. எ.. என்கிட்ட இருந்து பிரிச்சு எடுத்துட்டுப் போகலாம்னா? அது மட்டும் நடக்கவே நடக்காது?”என்று சொல்ல..
ஸ்ரீதரின் விழிகளில் மௌனமாக வழிந்தது சரேலென ஒரு துளிக் கண்ணீர்!!
காலம் திரும்புகிறது!! இப்போது அவள் நினைத்தால் அது நீலிக்கண்ணீர் என்று!!
யாரும் எதுவும் பேசவில்லை. ஆக மொத்தத்தில், யார் முகத்திலுமே புதுவரவை வரவேற்கும் சந்தோஷம் ஒரு துளியளவும் இல்லை!!
அப்படியானால் அவள் குழந்தைக்கு என்னானது??
இந்துவைப் பற்றிக் கொண்டவள், “இந்து.. என் குழந்தை எங்கே?சொல்லுடீ எங்கே என் குழந்தை!!”என்று கத்திக் கேட்க,
நிர்மலமான முகத்துடன் சொன்னாள் இந்து,
“அக்கா உனக்கு பிறந்த குழந்தை.. ப்ரீமேட்ச்சர் குழந்தை.. ஏழு மாதத்திலேயே பிறந்தது… அதனால மத்த குழந்தைங்க மாதிரி.. பாலூட்டவோ..தூக்கிக் கொஞ்சவோ முடியாதுக்கா.. தாயுடைய கருவறை சூடு, கதகதப்பு.. இது எல்லாம் சிசுக்கு செயற்கையா வேணும்.. அதுக்காக இன்டென்ஸிவ் கேர் நர்ஸரி யுனிட்டில்.. இன்குபேட்டரில் வைச்சிருக்காங்க அக்கா..” என்று சொன்னதும்,
அவளுக்குள்ளே இயல்பாக எழுந்த தாய்மையில்.. குழந்தையை பார்க்க வேண்டும் என்ற வெறி எழுந்தது அவளுக்குள்.
சரியாக ஒன்பது மாதங்களும், பத்து நாட்களிலும் என பிறந்திருக்க வேண்டிய ஐஷூவின் குழந்தை.. அதன் தந்தை, தாய்க்கு ஏற்படுத்த மன அழுத்தங்களினாலும்,
இந்த இரண்டு மாதங்களாக தாய் தன்னைத் தானே வருத்திக் கொண்டு.. தன் உடல் நிலை பற்றியோ, சிசுவின் உடல்நிலை பற்றியோ கவலை கொள்ளாததாலும்,
குறைமாத குழந்தையாக.. சரியான நிறையின்றி.. ஏழு மாதத்திலேயே பிறந்திருந்தது.
என்ன தான்.. தாங்க முடியாத பிரசவ வலியில் அவள் மயங்கி விழுந்திருந்தாலும் கூட, ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்ததும்,
சுயநினைவுக்கு வந்திருந்தவள்.. இயற்கையாக விளையும் வலியுடன் போராடி.. சுகப்பிரசவமாகவே குழந்தையை பெற்றெடுத்தாள்.
எல்லா பெண்ணுக்குமே.. தன் உயிரைக் கொடுத்து.. இந்த உலகத்துக்கு அவள் அழைத்து வரும் மதலையை.. ஆசையோடு மார்பில் கிடத்தி,
அள்ளி அணைக்கவும்,
அதன் செப்பிதழ்கள்.. மாரில் பால் அருந்தும் சுகத்தை அனுபவிக்கவும் ஏங்கும் நெஞ்சம்!!
ஆனால் ஐஷூவுக்கோ.. அந்தோ பரிதாபம்.. அந்த இரு மகத்தான பாக்கியங்கள் கிடைக்கவேயில்லை.
அவள் எங்கே விரைகிறாள்? என்று எதுவுமே புரியாத இந்து, விக்கி, அத்தை என ஒட்டுமொத்த குடும்பமுமே அவள் பின்னால் விரைய,
இவளோ தன் அடிவயிற்றை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு… அந்த மகப்பேறு பிரிவின்.. ஒவ்வொரு அறையாகத் தேடித் தேடி… தன் குழந்தை இருக்கும் அறையைத் தேடித் தான் போனாள்.
ரொம்ப அலைய வேண்டிய அவசியமே இராமல்.. அவள் இருந்த அறை இலக்கத்தையே.. இலக்கமாகக் கொண்டிருந்தது ஐசிஎன் அறை!!
இந்த அறையில் பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருப்பது அவள் குழந்தை தான் என்பதை அறிய முடியாதளவுக்கு அவள் முட்டாள் அல்ல.
ஆம், அந்த அறையில் இருந்தது அவள் குழந்தையே தான்!!
இன்குபேட்டரில்.. ஆங்காங்கே குழாய்கள் சென்றிருக்க.. கண்களையும், கைகளையும் பொத்திக் கொண்டு படுத்திருந்தது ஐஷூவின் மணிவயிற்றில் வாய்த்திருந்த அவள் மகவு!!
குழந்தையை அள்ளி அணைக்க முடியாத நிலையில், ரொம்பவும் இளைத்துப் போன சிசுவாக.. அவள் குழந்தையைக் கண்டதும்,
அப்படியே இரண்டாக மடங்கி அமர்ந்து.. அவள் அழுத அழுகை.. அந்த அழுகையைக் காணும் இரக்கமேயற்ற இதயத்துக்கும் கண்ணீர் சுரக்கும்!!
இப்படியெல்லாமா.. அவள் தன் குழந்தையைக் காண ஆசைப்பட்டாள்?? இப்படியா அவள் குழந்தை இந்த பூமிக்கு வரவேண்டும் என்று ஆசை கொண்டாள்??
உள்ளுக்குள்ளேயே அழுகைத் தேங்கி நிற்க, கம்மிப் போன குரலில், “ஐய்யோ என் குழந்தை.. என் குழந்தை..” என்று அழுதவளைக் காண,
எல்லாரை விடவும் ஒரு படி மேலாக வலித்தது ஸ்ரீதருக்குத் தான்.
அவள் வேண்டாத மனைவியாக இருப்பினும்.. குழந்தைக்கு தந்தை அவன் அல்லவா? அது அவன் வாரிசு அல்லவா?
ஓடி வந்து.. மனைவியின் தோள் பற்றி எழுப்பியவன், “ஐஷூ.. குழந்தை முன்னாடி..இப்படிலாம் நடந்துக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க..”என்று கூறவும்,
கப்பென மூடிக் கொண்டது அவள் இதழ்கள்.
தன் மழலையின் இந்த இக்கட்டான நிலைமைக்கு காரணமானவனின் தொடுகை.. அவள் உடல் முழுவதையும் பற்றி எரிய வைக்கிறது.
இருந்தாலும் இன்குபேட்டர் அறையில்.. எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது, வெளியே வந்தவள்,
அறையை விட்டு வெளியே வந்த அடுத்த நொடி, அவளுள் இருக்கும் மென்மையான ஐஷூ எங்கோ சென்று ஒழிந்து கொண்டாள் போலும்.
இறுதி வரை மென்மைப் பெண், ஐஷூவிலிருந்து வெளியே வரவேயில்லை.
தன் தோளில் பதிந்திருக்கும் அவன் கையை, ஆத்திரத்துடன் தட்டி விட்டவள்,
கண்களில் நெருப்பு கனன்று கொண்டிருந்தன.
அவன் குற்றவுணர்வில் அவளைப் பார்க்க, இவளோ,
“நான் துரோகம் பண்ணி.. நீ பழிவாங்குறதா இருந்தால்.. என்னை பழிவாங்கியிருக்கணும்!! .. என்.. என் குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு உனக்கு???” என்றவள் அவனுடைய சட்டைக்காலரைப் பிடித்து உலுக்கினாள்.
“சொல்லு!! .. என் குழந்தை.. என்ன பாவம்.. பண்ணிச்சு உனக்கு..??” – அவள் நாடி, நரம்பெல்லாம் ஊறிப் போயிருந்தது அந்தக் கேள்வி தான்!!
அவள் உடல் பாரத்தோடு.. மனப்பாரமும் அங்கணம் இறக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
சுற்றி நின்றிருந்த யாருமே, “என்னம்மா.. புருஷனைப் போய் இப்படியெல்லாம் கேட்குற?” ன்னு ஒரு வார்த்தை கேட்கவில்லை அவளைப் பார்த்து.
ஏனெனில் தாயுள்ளம் படும்பாடு.. அவள் வடித்த கண்ணீரில் புலப்பட.. அது அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது.
குரூரமான விழிகளுடன், ஜந்துவைப் பார்ப்பது போல தன் தலைவனைப் பார்த்தவள்,
“என்ன சொன்ன? நான் உன்னை ஏமாத்திட்டேனா? ..நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேனா..?? உன்கிட்ட சொல்லாமல் போனது தப்பு தான்.. ஆனால் அன்னைக்கு நய்ட்.. ஏன் அர்ஜூனை பார்க்க போனேன் தெரியுமா?” என்று அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்க,
புருவங்கள் இரண்டும் இடுங்க மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் ஸ்ரீதர்.
“அர்ஜூனோட கூடப்பிறந்த தம்பி அரவிந்த்..அர்ஜூனை விட பத்து வயசு இளையவன்.. ஆட்டிசத்தோட பிறந்தவன் அவன் ..அவனுக்கு சில சமயங்களில் ஃபிட்ஸ் வரும்.. ஃபிட்ஸ் வர்றதுக்கு முன்னாடி ரொம்ப மூர்க்கத்தனமா நடந்துக்குவான்.. ஒண்ணு அத்தையால் மட்டும் தான் அவனை சமாளிக்க முடியும்.. இல்லைன்னா நான் பக்கத்திலிருந்தால் மட்டும் தான் அவனை சமாளிக்க முடியும்.. அன்னைக்கு நய்ட்.. அத்தை வேறு இல்லன்னு..அர்ஜூன் தான் ஹெல்ப் கேட்டான்.. அதுக்காகத்தான்.. நான் போனேன்..
நான் உனக்கு துரோகம் பண்ணியிருப்பேன்னு நீ நினைக்கலாமா பேபிக்கண்ணா..?” என்று அவள் உண்மை அனைத்தையும் கூற,
ஸ்ரீதர் அந்நேரம்.. நெஞ்சம் கலங்கி நின்றிருந்தான்.
அவள் விழிகளில் பொய் இல்லை. பொய் சொல்பவள் உற்றார், உறவினர் முன் பகிரங்கமாக சொல்லத் தேவையும் இல்லை.
அப்படியானால் அன்றிரவு அர்ஜூனின் வீட்டை நாடிச் சென்றது.. அர்ஜூன் தம்பி அரவிந்த்துக்காகவா?
அவன் யோசித்துக் கொண்டிருந்த போது கேட்டது அவள் குரல்.
அழுது அழுது செர்ரிப் பழம் போல சிவந்திருந்தது அவள் மூக்கு.
மூக்கை உறிஞ்சிக் கொண்டே.. ஏக்கம் மிகுந்த குரலில், “என் பொண்டாட்டி.. அப்படி நடந்திருக்க மாட்டான்னு நீ நம்பியிருக்கணும் பேபிக்கண்ணா!!” என்று சொல்ல,
அந்த நச்சுப்பாம்பு அர்ஜூன் பின்னிய சூழ்ச்சி வலையும், அதில் அவன் சிக்கியதும் அப்போது தான் புலப்பட்டது ஸ்ரீதருக்கு.
அந்த நேரம்.. ஐஷூ குழந்தையை பார்ப்பதற்காகவேனும் அர்ஜூன் அந்த பக்கம் வராமல் போனது அர்ஜூனின் அதிர்ஷ்டம்!!
இல்லை சர்வ நிச்சயமாக அங்கே ஓர் கொலை விழுந்திருக்கும்!!
மனைவியின் தோளை இரு கைளாலும் பற்றிக் கொண்டவன், “நான் நம்பினேன்டி.. சத்தியமா நம்பினேன்.. நீ எனக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு நம்பினேன்..
நீ அர்ஜூன் வீட்டுக்கு போனது.. ஒகே.. ஆனால்.. ஆனால்??
அவன் டீஷேர்ட்டைப் பிடிச்சு.. ‘இந்த விஷயத்துக்கெல்லாம் நான் வெட்கப்பட மாட்டேன்.. ஏன்னா அவ்வளவு அவசியம்.. அவ்வளவு அவசரம்’ னு நீ சொன்னதை.. கேட்டு எப்படித் துடிச்சுப் போனேன் தெரியுமா?
அப்போ கூட.. எந்த தப்பான முடிவுக்கும் வரக்கூடாதுன்னு.. வீட்டுக்கு வந்து கேட்டதும்.. ‘ஏன் என் கால் ஆன்சர் பண்ணலை’ன்னு கேட்டப்போ.. ஏன்.. என்கிட்ட பொய் சொன்ன..??
ஏன் உன் ஷோல்டரில் இருந்த பல் தடத்தை ஏன் ஹூக் தடம்னு சொன்ன..??” என்று தன் மனதில்
ஆணித்தரமாக பதிந்த சந்தேகங்களை தன் மனைவியிடம் கேட்டான் அவன்.
அவளுக்குமே.. எப்படி தான் பேசிய டயலாக்கில் நின்றும் அனைத்தும் அறிந்தான் அவன்? என்ற கேள்வியும், அதற்கான விடையும் அவளுள் உதிர்க்காமல் இல்லை.
இருப்பினும் கணவன் தன்னை நம்பாதது அவளைப் போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றது அவளை.
மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட அரவிந்த்.. ஐஷூ மீதே வாந்தியெடுக்க.. தான் அணிந்து சென்றிருந்த உடைகளைக் களைந்து..
அர்ஜூன் தந்த அவன் தாயின் நைட்டியொன்றை அணிந்து கொண்டாள் அவள்.
அது போக, பணியாளர்களை வேறு, ‘அம்மா இல்லைன்றதால.. வேலைக்கு யாரும் வரத்தேவையில்லை’ என்று கூறி.. அர்ஜூன் வேறு அனைவருக்கும் விடுப்பு கொடுத்திருக்க,
பணியாளர்கள் இல்லாத நாளில்,
அடல்ட்ஸ் டயபர்ஸிலேயே அசிங்கம் செய்து வைத்திருந்த அரவிந்தை.. ஐஷூவால் இழுத்துப் பிடித்து வேறு டயபர்ஸ் மாற்ற முடியாத நிலை தோன்ற,
இருவரும் சேர்ந்து அரவிந்த் டயபர்ஸ் மாற்றுவது என்று முடிவானது.
“இரு ஐஷூ முக்கியமான கால்.. பேசிட்டு வரேன்” என்று அவளை காத்திருக்க செய்து விட்டு சென்றவன் சென்றவனே தான்..
திரும்பவும் அறைக்குத் திரும்பவேயில்லை.
ஆனால் அங்கணம்.. அந்த முக்கியமான அழைப்பு.. தன் கணவன் தான் என்பதே ஐஷூ அப்போது அறிந்திருக்கவேயில்லை.
பொறுமையிழந்து, அறையை விட்டும் வெளியே வந்த ஐஷூ, “அங்கே யார் கூட பேசிட்டிருக்க?” என்று கேட்டதிலும்,
முறைப்பையன் அர்ஜூன் என்பதைக்காட்டிலும் சிறு வயதிலிருந்து சகஜமாகத் தொட்டுப் பேசி பழகிய காரணத்தால்..
அர்ஜூனின் சட்டைக் காலரை உரிமையுடன் பற்றியதிலும் அவள் மனதில் எந்த விகல்பமும் தோன்றவில்லை.
“இதற்கெல்லாம் நான் வெட்கப்பட மாட்டேன்.. ஏன்னா அவ்வளவு அவசரம்.. அவ்வளவு அவசியம்!!” என்று அவள் சொன்னது கூட,
எந்தவித உள்நோக்கமும் இன்றி.. அரவிந்தை சுத்தப்படுத்தி வேறு டயபர்ஸ் மாற்றி விடுவதைத் தான்!!
எல்லாத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவள்,
சீற்றம் துளிர்க்கும்.. விழிகளுடன் அவனை நோக்கி,
“ உனக்கு தான் அர்ஜூன் கூட நான் பேசுறதே பிடிக்காதே.. அதான் பொய் சொன்னே.. ஆமா அது பல் தடம் தான்!! .. ஃபிட்ஸ் வந்தப்போ.. என் மேல் சாய்ந்து நின்றிருந்த அரவிந்த்.. தான் என்ன பண்றோம்னே தெரியாமல்.. சுயநினைவிழந்து.. என் ஷோல்டரைக் கடிச்சப்போ வந்த பல் தடம் தான் அது.. ஆனால் நீ நினைக்குற மாதிரி எதுவுமே இல்லை..” என்று உண்மை அனைத்தையும் தெளிவுபடுத்த ஆடிப்போனான் அவன்.
“மஞ்சள் காமாலை காரன் கண்ணுக்கு.. காண்பதெல்லாம் மஞ்சள்” என்னும் கூற்று.. ஸ்ரீதர் விஷயத்தில் உண்மையானது.
இல்லை.. எல்லாம் அந்த அர்ஜூனால் நேர்ந்த விளைவு!!
இது எல்லாத்துக்கும் காரணம் உன் முறைப்பையன் தான் என்று சொல்ல வாய் திறந்தவன்,
“ஐஷூம்மா.. இது எல்லாத்துக்கும் காரணம்.. அர்ஜூன்..தான்” என்று கூற,
ஞாயப்படி பார்த்தால் அவள் எகிறியிருக்க வேண்டும்?
ஆனால் அவளோ நிதானமான குரலில், “புரியுது பேபிக்கண்ணா.. அர்ஜூன் வேலை தான்னு புரியுது…” என்றாள்.
ஆம், நிஜமாகவே அவளது முறைப்பையன் மெல் அவளுக்கு சொல்லொணா கோபம் வந்தது தான்.
இருப்பினும் கொண்டவன் அதை நம்பியது தான் அவளுக்குள் மிகுந்த கவலையைக் கொடுத்தது.
“ஆனால் உனக்கெங்கே மூளை போச்சு.. என்ன சொன்ன? இந்த உலகத்திலேயே உசத்தியானது நம்பிக்கை… அந்த நம்பிக்கை உன்கிட்ட இருக்கலையே? … அட்லீஸ்ட் என்னை பேசவாவது விட்டிருக்கணும்.. ஆனால் நீ? உன் குழந்தையை நான் சுமந்துட்டிருக்கேன்ற நினைவே இல்லாமல் வெளியே தானே.. என்னைக் கழுத்தைப் பிடித்து தள்ளீத2 குறையா தள்ளின பேபிக்கண்ணா?” என்று கேள்வி கேட்க ஸ்ரீதரிடம் பதில் இல்லை.
ஆனால் அவள் நிதானமாக ஒவ்வோர் வார்த்தையிலும் பிரயோகித்த பேபிக்கண்ணா அவனை உயிருடன் கொன்று கொண்டிருந்தது.
அவள் மேலும் தொடர்ந்தாள்.
“என்ன? .. பேபிக்கண்ணான்னு சொல்லிட்டேனேன்னு பார்க்குறியா? உனக்கு தான் “பேபிக்கண்ணா”. பிடிக்காதே…இது தான் நான் உன்னை கடைசியா கூப்பிட்ற பேபிக்கண்ணா..” என்றவள்,
தன் ஷோல்டரைப் பற்றியிருக்கும் அவன் கைகளை உதறி விட்டாள்.
“என்னை விடு.. என் குழந்தைக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஏன்னா? என் குழந்தைக்கு அப்பா நீ இல்லை…” என்று வேண்டுமென்றே அவன் மனம் நோக சொன்னாள் அவன்.
“பிரிஞ்சிடலாம் ஸ்ரீதர்..நீ எனக்கு வேணாம்…. நீ எங்கே கையெழுத்து போடணும்னு சொல்லு.. போட்றேன்..பிரிஞ்சிடலாம் ஸ்ரீதர்”என்று நிதானமாக.. எரிமலையைக் கக்கிக் கொண்டிருந்தவளின் விழிகளையே அதிர்ந்து போய் பார்த்திருந்தான் சூழ்நிலைக் கைதியான ஸ்ரீதர்.

{23}
அவன் கண்கள் இரண்டும், அவள் செயல் கண்டு வந்த கோபத்தினாலும்,
அவளை இத்தனை நாட்களாக தள்ளியிருந்ததனால் விளைந்த தாபத்தினாலும் சிவந்து போயிருந்தது.
கூடவே அவன் நடையில் போதை தள்ளாட்டம் வேறு!!
நேரே பாரிலிருந்து ஐஷூவின் வீட்டுக்குத் தான் வந்திருந்தான் ஸ்ரீதர். அவன் இதயத்தில் அவள் தந்த மனவலி.. ரணமாக நிலைத்து நின்றிருந்தது.
அவனை விட்டும் போனவள், போனவளே தான்.. இந்த ஒரு வாரமாக.. ஸ்ரீதரின் முகத்தைக் கூட பார்க்க விளையவில்லை அவள்!!
முன்பெல்லாம்.. ஐஷூ.. அவனது அழகு மனைவி ஐஷூ.. அலுவலகம் விட்டு வரும் கணவனிடம்.. தன் ஆபிஸில் நடந்த புதினங்களையெல்லாம்.. ஒன்று விடாமல் செப்புவது வழமை.
அப்படி அவள் நடந்தேறியவைகளை சொல்லும் போது.. தன் முகத்தில் விழி பதித்திருக்கும் கணவன் கொஞ்சம் பார்வையை அவளிலிருந்து திருப்பினாலும் கூட.. குழந்தையாய் சிணுங்குபவள்,
“பேபிக்கண்ணா.. நான் பேசிட்டிருக்கும் போது என் முகத்தைப் பாரேன்..” என்று அவனது முரட்டுக்கன்னம் தொட்டு, அவளை நோக்கித் திருப்பிக் கொள்வாள் ஐஷூ.
அப்போதெல்லாம், மந்தகாசமான புன்னகையுடன், “ஹேய் பொண்டாட்டி.. உன் புருஷனுக்கு தான் அழகான முகமே இல்லையேடி.. ரொம்ப கறுப்பா.. முரட்டு மீசையோட.. பார்க்கவே ரொம்ப ரொம்ப சுமாராதானே இருக்கேன்.. இந்த மூஞ்சியைப் பார்க்கும் போது.. கொஞ்சம் கூட சலிக்கல?” என்று கேட்பதுண்டு.
அங்கணம், அவன் மனைவியின் கண்களில், அவன் தாழ்வுமனப்பான்மை கண்டு கோபமும், மையலும் ஒருங்கே மிகும்.
அவனது முரட்டுக்கன்னம் ஏந்தி, அந்த கருவிழிகளையே குறுகுறுவென பார்த்த வண்ணம் இவள் சொல்வாள்,
“அழகுன்றது தோற்றத்தில் இல்லை பேபிக்கண்ணா.. அதைப் பார்க்குறவங்க கண்ணில் இருக்கு..
எனக்கு என் பேபிக்கண்ணா எப்போவுமே அழகு தான்..
சின்ன வயசுல இருந்து தாய்முகம் பார்க்குற கொடுப்பினை எனக்குல்லையேன்னு ஒரு கவலை இருந்தது..
அது அப்போ.. இப்போ இல்லை.. ஆனால் உன் முகத்தைப் பார்க்கும் போது.. உன் முகத்துல.. அந்த கண்களில் இருக்குற அன்பில்.. நான் தாய்மையை உணர்றேன் பேபிக்கண்ணா..நான் உன்னில் என் தாய்முகம் காண்கிறேன் இப்போ சொல்லு.. உன் முகம் எனக்கு சலிக்குமா?” என்று.
தாய்முகம் காண்கிறேன் என்றவள், தற்போது அவன் முகம் காணவும் பிடிக்காமல் இருக்கிறாள்.
அதை எண்ணும் போது உள்ளே வலிக்கிறது அவனுக்கு.
ஐஷூ வீட்டில் காலடி எடுத்து வைத்தவனுக்கே, ஆரம்பமே சறுக்கத் தொடங்கியது.
வலி தாளாமல், குடித்திருந்தவனின் கால் இடறப் போக, பக்கத்திலேயே நின்றிருந்த விக்கி, தன் ‘மச்சி’யை விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
ஸ்ரீதர் தான் குடித்திருந்தாலும் கூட, விக்கி தெளிவாகவே தான் நின்றிருந்தான்.
“டேய் மச்சி… பார்த்துடா..” என்றவன், கொஞ்சம் சங்கடம் மீதூறிய குரலில்,
“வேணாம்டா வீட்டுக்கு போயிடலாம்டா.. இப்போ நீ குடிச்சிட்டு வேற வந்திருக்க…. வேணும்னா காலையில் வந்து பேசிக்கலாமே?” என்று ஸ்ரீயிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“டேய் விட்றா.. கையை விடு..”- சித்தப்பனின் கையை உதறி விட்டவனாக.. மேலும் முன்னேறினான் ஸ்ரீ.
“வேணாம்டா போயிரலாம்.. நீ குடிச்சிட்டு வேற வந்திருக்கேன்னு தெரிஞ்சா ஐஷூ மனசு கஷ்டப்படும்டா..” – ஸ்ரீயின் பின்னாலேயே நடந்த வண்ணம் திரும்பத் திரும்பக் கெஞ்சலானான் அவன்.
சித்தப்பனின் சொற்களில், வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தவனின் நடை தடைப்பட்டு நிற்க, மெல்ல திரும்பி விக்கியைப் பார்த்தான் ஸ்ரீதர்.
அவன் கண்களில் தெரிந்த வலியில் விக்கியும் அதிர்ச்சிக்குள்ளாகி நிற்க,
இவனோ, “அவ மனசு கஷ்டப்படுறது மட்டும் தான் உனக்குத் தெரியுது..அவள் இல்லாமல்.. நான் செய்த தப்புக்கு தினம் தினம் நான் அவஸ்தைப்படுறது… என் மனசு கஷ்டப்படுறது.. உன் கண்ணுக்குத் தெரியலையா சித்தப்பு…?” என்றான் ஆதங்கமாக.
“இன்னைக்கு நான் அவள் கிட்ட பேசியே ஆகணும்..” என்று தீர்க்கமான விழிகளுடன் மொழிந்தவன், நேரே அவள் வீட்டு வாசற்கதவை அடைந்ததும் தான், தன் நடையை நிறுத்தினான் ஸ்ரீ.
“ஏய் பொண்டாட்டி… வெளியே வாடி.!!” என்று ஸ்ரீதர் கத்தியது.. அந்தத் தெருவில் இருந்த, நான்கைந்து வீடுகளுக்கு கேட்டிருக்கும்!
இருப்பினும் ‘நமக்கெதுக்குடா வம்பு?’ என்று எண்ணினரோ? ஒரு மனித தலை கூட தெருவில் தென்படவில்லை.
அறைக்குள் அமர்ந்திருந்தவளின் காதுகளில், “ஏய் பொண்டாட்டி!!” என்ற தன் துண்ணிய கேளிரின் குரல் கேட்க, உச்சாதி பாதம் வரை.. ஒரு சிலிர்ப்பு எழுந்து பரவியது அவளுக்கு.
அவன் குரல்!! ஸ்ரீதரின் குரல்!!
இருப்பினும் பழைய நினைவுகள் பேதையவள் உள்ளத்தை தீயென வாட்ட, இடித்த புளி போல மஞ்சத்திலேயே அமர்ந்திருந்தாள் அவள்.
உள்ளேயிருந்து யாரும் வரவில்லை அவனது மாமாவைத் தவிர.
துணுக்கம் எய்தும் உடலுடனேயே இறங்கி வந்தவர், “உள்ளே வாங்க மாப்பிள்ளை..” என்று அழைக்க, அவனுள் சிறு கோபம் எட்டிப்பார்த்தது.
உள்ளே சென்றிருந்த சரக்கு வேறு வேலையைக் காட்டவே,
“யாரு? நான்.. நான்.. உங்கழுக்கு மாப்பிழ்ழையா? .. அதான் உங்க மகளுக்கும், எனக்கும் எந்த உறவுமில்லைன்னு சொல்லி ‘டைவர்ஸ் நோட்டிஸ்’ அனுப்பிட்டீங்களே ?? அப்புறம் எப்படி நான் உங்களுக்கு சன் இன் லா ஆவேன் மாமா..?”என்று போதையில் தடுமாறியவனாகக் கேட்டான் அவன்.
மாப்பிள்ளை குடித்திருக்கிறான் என்பதை, அவனிலிருந்து வீசிக் கொண்டிருந்த சாராய நெடியே தெரியப்படுத்த, கொஞ்சம் முகம் சுருங்கத் தான் செய்தது அவருக்கு.
அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் அவன் இருக்கவில்லையாயினும், சித்தப்பா அதை கண்டு கொண்டான்.
ஏதோ சொல்லி நிலைமையை சமாளிக்கும் வண்ணம், அவன், “ஸாரி மாமா.. என்னைக்கும் குடிக்க மாட்டான்… இன்னைக்கு ஏதோ கொஞ்சம்..” என்று சொல்லிக் கொண்டிருந்த கணம் இடையிட்டான் ஸ்ரீதர்.
“கொஞ்சம் இல்லை மாமா.. ஹெவி போதையில் தான் இருக்கேன்..!!” என்று அவன் நிதானம் தவறிய குரலிலேயே கூற,
ஏற்கனவே கணவன் மேல் வெறுப்பில் இருக்கும் மகள், ஸ்ரீதரின் இந்தக் கோபத்தைக் கண்டால் அவ்வளவு தான் என்று தோன்ற,
“நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்.. அவளாகவே தான் நோட்டிஸ் அனுப்பியிருக்கா..அவள் பிடிவாதம் அப்படி.. இப்போ நீங்க நிதானமாக இல்லை…மாப்பிள்ளை காலையில் பேசிக்கலாம்..” என்று எடுத்தியம்பியது எல்லாம் ஸ்ரீதரின் மனதை கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்கவேயில்லை.
அவள், இத்தனை நேரமாக அழைத்த பின்னும் கூட, வெளியே வராத கவலை உடலோடு சிலிர்த்தெழுந்தது அவனுக்கு.
“ஏய்.. பொண்டாட்டி வெளியே வாடி.!. முன்னெல்லாம் “பேபிக்கண்ணாஆ! .. பேபிக்கண்ணாஆ!’ன்னு கொஞ்சுவ.. இப்போ… அந்த பேபிக்கண்ணா வேணா.. பேபிக்கண்ணா தந்த “பேபி” மட்டும் வேணுமா உனக்கு? யாரை கேட்டுடி இப்படியொரு முடிவெடுத்த?..டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்புறாளாம்.. டைவர்ஸ் நோட்டிஸ்..!!” என்றவனின் குரல் அடுத்து பேசும் போது கொஞ்சம் தணிந்திருந்தது.
கண்களும் கொஞ்சம் கலங்கிப் போயிருக்கவே, சற்றே தழுதழுத்த குரலில்,
“ஐஷூ.. நான் பண்ணது தப்பு தான்டீ.. உன்னை சந்தேகப்பட்டிருக்கக் கூடாது.. என் பொண்டாட்டி.. அப்படியெல்லாம் பண்ணியிருக்க மாட்டாள்னு நம்பியிருந்திருக்கணும்..
நான் நம்பினேன்டி.. ‘இல்லை என் ஐஷூ… எனக்கு துரோகம் பண்ணியிருக்க மாட்டாள்’னு நம்பினேன்… ஆனால் நீ… நடந்த உண்மையெல்லாம் பொய் சொல்லி மறைச்சது மட்டும் தப்பில்லையா?
நான் என்ன மத்தவங்களை மாதிரி, ‘ஆயிரம் தானிருந்தாலும் நான் செய்தது தான் சரி’ன்னு என் தப்பை நியாயப்படுத்தினேனா என்ன?? … இல்லையேடி..
‘நான் ஆம்பளை’ன்ற கெத்தையெல்லாம் விட்டுட்டு.. ‘என்னைப் புரிஞ்சுக்க.. புரிஞ்சுக்க’ன்னு.. உன் பின்னாலே தானே லோ லோ ன்னு.. நாய் மாதிரி வரேன்..
‘என்னை மன்னிச்சிரு”ன்னு நான் கேட்கலை.. ‘எனக்கு என்ன தண்டனை வேணா கொடு.. ஆனால் என் கூடவே இரு’ன்னு தானே கேட்கறேன்… அதையேன் புரிஞ்சிக்க மாட்டேங்குற??.. என் கூட வா.. உனக்கு ஒரு குழந்தையென்ன?? பத்து குழந்தை கொடுக்குறேன்… நம்ம முதல் குழந்தைக்கு நடந்த மாதிரி.. நான் திரும்பவும் நடக்க விட மாட்டேன்.. உன்னை கண்ணுக்குள் வைச்சுப் பார்த்துப்பேன்.. ப்ளீஸ் வந்துரு ஐஷூ…!” என்றவன் முகம் ரொம்பவும் இறுகிப் போயிருந்தது.
இந்த இறுகிப் போன முகம்.. ஐந்து வருடங்களுக்கு முதல்.. ‘ஐஷூ அவனை இழிவுபடுத்திய நேரம்’ பார்த்த அதே முகம்!!
ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் கண்டான் சித்தப்பா.
ஸ்ரீதர் மனம் உருகி, மன்னிப்பு வேண்டுவது.. சித்தப்பனின் மனதை உருக்க, ஸ்ரீதரின் தோள் மேல் கையிட்டு,
“சரி விடு மச்சி.. ஏதோ அவசர புத்தியால்.. யோசிக்காமல் டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பியிருப்பாடா.. நாம காலையில் வந்து அமைதியாக பேசிக்கலாம்..” என்று அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட.. அதற்கு கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவேயில்லை மற்றவன்.
அவன் பார்வையோ.. வாசற்கதவைத் தாண்டி.. வீட்டு ஹாலில்,
அழுது அழுது அதைத்துப் போன முகத்துடன் நடந்து வரும், ஐஷூவிலேயே பதிந்திருந்தது.
இருந்ததைப் பார்க்கவும் ரொம்ப ரொம்ப மெலிந்து போயிருந்தாள் ஐஷூ.
சரியாக சாப்பிடுகிறாள் இல்லை போலும்’ என்ற எண்ணம் பிறக்க.. அதற்காகவும் சோர்ந்து போனது ஆண்மனம்.
ஆனால் அவன் விழிகள், தன் மனையாள் முகத்தை விட்டும் அங்குமிங்கும் பார்க்கவேயில்லை அவன்.
நேராக அவனை நாடி வருவதாக, ஸ்ரீ எதிர்பார்த்திருந்த வேளை.. மறந்தும் கூட தன் கணவன் பக்கம் திரும்பவேயில்லை அவள்.
தந்தையிடம் வந்தவள், கறார் குரலில், “அப்பா அங்கேயென்ன பார்வை? கண்ட கண்டவன்லாம் குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்ணிட்டிருக்கான்.. நீங்களும் நின்னு வேடிக்கை பார்த்துட்டிருக்கீங்களா?.. இப்போ நீங்க கதவை மூடிட்டு உள்ளே வரப் போறீங்களா? இல்லையா?” என்று கேட்டவள்,
தந்தை தயங்கி நிற்பது பார்த்து, தானாகவே கதவு பக்கம் வந்தவள், வேண்டுமென்றே கதவை அவன் முகத்தில் அடித்து சாத்தினாள்.
அவள் பேச்சுக்கள் ஒவ்வொன்றும்.. அவன் இதயத்தில் ஈட்டியாக இறங்கியது.
கணவனுக்கு அவள் கொடுத்த பட்டம்.. ‘கண்ட கண்டவன்’?? என்ன தவம் செய்தான் இவன்.. இத்தனை அரிய நாமங்கள் பெற?
“என்ன சித்தப்பா.. கதவை மூஞ்சிலடிச்ச மாதிரி மூடிட்டு உள்ளே போயிட்டா?.” என்று இயலாமையுடன் கூறினான் ஸ்ரீதர்.
“பின்னே.. நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு.. அப்படியே நேரா வந்து ஆரத்தியா எடுப்பா?? நீ அன்னைக்கு அவசரப்பட்டு பேசின பேச்சுக்கு உருட்டுக்கட்டையால் அடிக்காமல்.. விட்டாளேன்னு சந்தோஷப்பட்டுக்கோ மச்சி..” என்றவனாக,
ஸ்ரீதரை தேற்றலானான் டூட் விக்கி.
*****
அடுத்த நாள் காலை, விக்கி வாடகைக்கு தங்கியிருக்கும் அறை.
அகோரமான கனவு கண்டவன் போல பதறியடித்துக் கொண்டு, மஞ்சத்திலிருந்து எழுந்தான் ஸ்ரீதர்.
நேற்றடித்த சரக்கின் வீரியம்,இப்போதும் அவன் மண்டையைக் குடையவே விண்விண்ணென்று வலித்தது தலை.
தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தவனுக்கு, அது தன் அறையல்ல.. இருப்பது விக்கியின் வாடகை அறை என்பது புரிந்தது.
நேற்றிரவு புல் போதையில் இருந்தவனை, அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றால், விக்கியின் அண்ணி ராஜேஷ்வரியம்மாள், ஸ்ரீதரைக் கன்னாபின்னாவென்று திட்டக் கூடும் என்று தோன்ற
தன் அறைக்கு அழைத்து வந்திருந்தான் அவன்.
ஷெட்டிற்கு செல்ல தயாராகும் வண்ணம், கைலிக்கு மேலாக பேன்ட்டைப் போட்டுக் கொண்டிருந்த விக்கியும், “முழிச்சிட்டியாடா? உன் அம்மா வேற எக்கச்சக்க கால் பண்ணிட்டாங்க.. எந்திரிச்சி ஃப்ரஷ் அப் ஆகி.. வேலைக்கு கெளம்புற வழியைப் பாரு?’ என்றான்.
சித்தப்பா கூறியது எல்லாம் அவன் காதில் விழுந்ததோ இல்லையோ.. ஆனால் ஸ்ரீதரின் விழிகள் மட்டும் இன்னும் போதை தெளியாமல் சிவந்து வீங்கிப் போயிருந்தது.
“சித்தப்பா.. எ.. எத்தனை மணியாச்சு?”-இன்னும் அவன் குரலில் தூக்கக் கலக்கம் மாறாதிருந்தது.
“ஒன்பது பத்து மச்சி…” – இது விக்கி.
“ஒன்பது பத்தா??”- அவன் அதிர்ந்து போனவனாக கேட்ட தினுசில்.. ஸ்ரீதரின் முகத்தில் ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச தூக்கமும் அடியோடு காணாமல் போனது.
“ஓ! ரொம்ப நேரமா தூங்கிட்டே போல இருக்கு..” என்று புலம்பிக் கொண்டே, ஸ்ரீ அவசரஅவசரமாக பாத்ரூம் செல்ல, ‘வேலைக்கு செல்ல தாமதமானதால் தான் இந்த அதிர்ச்சியும், அவசரமும்’என்று தவறாக எண்ணிக் கொண்டான் விக்கி.
அதனாலேயோ என்னவோ, “உன் ஆபிஸூக்கு ஆல்ரெடி லேட் தான்.. இட்ஸ் ஓகே.. இன்னைக்கு ஹாஃப் டே சொல்லிடு… மச்சி”என்று ,நண்பனுக்கு ஆறுதல் அளிக்கும் முகமாக சொன்னான்.
ஆனால் ஸ்ரீதரின் அவசரம், ஆபீஸ் செல்ல வேண்டும் என்பதற்காக விழைந்த அவசரம் அல்ல.
அவன் அவசரம்..இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் அவன் குழந்தையை சென்று காண வேண்டும் என்ற உந்துதலில் ஏற்பட்ட அவசரம்!!
ஒவ்வொரு நாளும் அதிகாலையில், மருத்துவமனை சென்று, மனைவி குழந்தையை பார்க்க வருவதற்கு முன்னம், தன் குழந்தையை அவன் பார்த்து விட்டே அலுவலகம் செல்வது வழமை.
அவன், ஐஷூவுடன் இணைந்தே.. தன் மகவை சென்று பார்த்திருக்கலாம் தான். ஆனால் அதற்கு, அவனது மனையாள் தான் ஒத்துழைக்கவேயில்லை.
“அதான்.. நான் இந்தக் குழந்தையை சுமந்திட்டிருக்கப்போ.. பிள்ளைத்தாச்சின்னு கூட பார்க்காமல்… ராத்திரியில.. ஈவிரக்கமே இல்லாமல்.. ‘வெளியே போ’ன்னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறையா தள்ளி விட்டேல்ல? இப்போ எந்த முகத்தை வச்சிட்டு.. என் குழந்தையை நீ பார்க்க வர? உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா ஸ்ரீதர்?நீ பண்ணாலும்.. நீ எனக்கு வ்வேண்டாம்!!” என்று திட்டிய அவள் குரல், அவன் காதோரம் பிரம்மையாக ஒலித்தது.
அவன் செய்தது எத்தகைய தவறு? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டாக இருக்கலாம்.. ஆனாலும் ஈவிரக்கமும் கூடவா மட்டாக இருக்கும்?
கர்ப்பவதியை பிடித்து வெளியே தள்ளிய போதிருந்த அரக்கன் ஸ்ரீதர்.. நடந்த தவறுகளுக்காக காலம் கடந்து வருத்தப்பட்டான்.
வருந்தி என்ன பயன்? அவன் சந்தோஷம், நிம்மதி தான் அவனில் இல்லையே?
அதிலிருந்து… ஐஷூ குழந்தையை பார்க்க வரும் நேரத்தைத் தவிர்த்து, அவளுக்கு தெரியாமல்.. காலையிலேயே குழந்தையை சென்று பார்த்து விட்டு வருவது வழமை.
அன்று கொஞ்சம் காலதாமதமாகவே, அரக்கப்பறக்க தயாராகி, குழந்தையை பார்க்க ஓடோடி வந்திருந்தான் ஸ்ரீதர்.
அமைதியாக.. எந்தவித துணையுமற்று.. இன்குபேட்டரில்.. கண்களை மூடி படுத்திருந்தது குழந்தை.
பிறந்த நேரம் இருந்ததிலும் பார்க்க… கொஞ்சம் நிறைகூடி, வளர்த்தியாக ஆரோக்கியமாகவே இருந்தாலும் கூட.. குழந்தை இன்னும் தன் தாயிடம் பால் அருந்தும் நிலைக்கு வந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.
அமைதியாக குழந்தையை அடைந்தவனுக்கு, குழந்தையை பார்த்ததும் இலேசாக கண்கள் கலங்கத் தொடங்கியது.
இன்குபேட்டர் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டவன், கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் குழந்தையைப் பார்த்து உரையாடவாரம்பித்தான்.
“டேய் கண்ணா.. ஸாரிடா.. அப்பா இன்னைக்கு கொஞ்சம் லேட்.. இருந்தாலும் அப்பாவுக்கு உன்னைப் பார்க்காமல் இருக்க முடியலைடா.. ஆபிஸூக்கு லேட்டானாலும் பரவாயில்லைன்னு இதோ வந்துட்டேன்டா.. நீயும் அப்பாவை புரிஞ்சிக்காமல் என்னை தள்ளி வைக்க மாட்டேல்ல? இல்லை என் கூடவே வந்திருவியாடா?” என்று மென்மையான குரலில் தன் ஆண்மகவுடன் பேசிக் கொண்டிருந்தவனின் குரல் இலேசாக தழுதழுக்கத் தொடங்கியது.
அவன் கைகள் துடிக்கின்றன.. குழந்தையை அள்ளித் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்ள. ஆனால் அது தான் முடியாதே?
எல்லாம் அவன் செய்த பிழை தான் காரணம்!!
அவன் தொடர்ந்து பேசிக் கொண்டே போக,
அந்த வலிய ஆண்மகனின் கண்களில் இருந்தும் சரேலென ஒரு துளிக் கண்ணீர்.. கண் வழியாக வழிந்தோடத் தொடங்கியது.
ஆனால் அவன் பார்வை, தன் மழலையில் தான் நிலைத்திருந்தது.
“எ.. எல்லாம் அ.. அப்பா பண்ண தப்பு… உன் நிலைமையைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காமல்.. அப்படியே உன் அம்மாவை வெளியே தள்ளி..” என்றவனுக்கு அதற்கு மேலும் பேச முடியாமல் நா வறழ, இதழ்களை அழுந்த மூடி நின்றான் ஸ்ரீ.
அவனுள், அன்றைய செயலின் போது.. வலி சுமந்த விழிகளுடன் மயங்கிச் சரிந்த ஐஷூ முகம் வந்து போனது.
அவன் தந்த மனவலியையும், உடல் வலியையும் தாங்கிக் கொண்டு தானே நின்றிருந்தாள் ஐஷூ.
அதே சமயம் டாக்டர், குழந்தையிடம் ‘இனிமையாக பேசச் சொன்னது ஞாபகம் வரவே,
சட்டென தன் விழிகளைத் துடைத்துக் கொண்டான் ஸ்ரீதர்.
பின்னர் கொஞ்சம் தெளிந்த முகத்துடன், “ரொம்ப தனியா இருக்கோம்னு ஃபீல் பண்றியாடா.. நம்ம குடும்பத்துக்கு ஏதோ கஷ்டகாலம் போல இருக்கு.. நீ ஒரு திக்கில், உங்கம்மா ஒரு திக்கில், அப்பா ஒரு திக்கில்..???” என்றவனுக்கு அவனையறியாமலேயே பெருமூச்சு வெளிப்பட்டது.
“சீக்கிரம் அப்பாக்கிட்ட வந்துரு கண்ணா.. அப்பாவுக்கு நீயும், உன் அம்மாவும் இல்லாமல் இருக்க முடியலைடா.. நான் பண்ணது தப்பு தான்.. அதுக்காக அம்மா உன்னையும், என்னையும் நிரந்தரமா பிரிக்க சதி பண்ணுறாடா.. அப்பா விட மாட்டேன்..அப்பாவுக்கு நீயில்லாமல்.. உன் அம்மா இல்லாமல் வாழ்க்கையே இல்லைடா கண்ணா”என்று தன் மனதில் இருப்பவற்றை எல்லாம் ஒன்று விடாமல் குழந்தையிடம் கூறிக் கொண்டே,
எதேர்ச்சையாக திரும்பியவனின் விழிகளில் விழுந்தாள் ஐஷூ.
தன் கணவனின் பேச்சுக்கள் அத்தனையையும், ஆரம்பத்திலிருந்து ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தாலும் கூட, அரவமே எழுப்பாது, உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்தாள் ஐஷூ.
அறைசுவரில் கை கட்டி நின்றிருந்த படியே தன் கணவனிலேயே பார்வையை பதித்திருந்தாள் அவள்.
அவளை நேருக்கு நேர் கண்டதும்.. ஸ்ரீதரின் முகம் மெல்ல மலர்ந்தது. ஆனால் ஐஷூ.. கணவனின் விழிகளையே வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கணவன்.. அத்தனை உருக்கமாக தன் குழந்தையிடம் உரையாடுவதை முதன்முறையாகக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு.. உள்ளே ஏதேதோ செய்கிறது.
ஆயினும், குழந்தையின் இந்த நிலைக்கு காரணமே அவன் தான்! என்று தோன்ற அவள் முகம் இறுகிக் கல்லாகிப் போனது.
மனைவி முகம் இறுகுவதையே வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
அவள், ஸ்ரீதர் இருந்தால், குழந்தையை கொஞ்ச வரமாட்டாள் என்று தெள்ளத் தெளிவாகத் தோன்ற.. அமைதியாக எழுந்து அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான் அவன்.
அவன் அவ்வறையை விட்டும் நகரும் வரை.. மார்புக்கு குறுக்காக கட்டிய கையை கொஞ்சம் கூட எடுக்காமல்.. ஓர் மோகனச்சிலை போலவே நின்றிருந்தாள் அவனது மனையாள்.
மனைவியைக் கடந்து சென்றவனின் நடை அப்படியே தடைப்பட்டு நின்றது.
அவளது அடர்ந்த கண்ணிமைகள் கொண்ட பெரிய நயனங்களையே வைத்த கண் வாங்காமல் ஓரிரு கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
அவளோ கணவன் தன்னை பார்ப்பது உணர்ந்தும், உணராதவள் போலவே அலட்சியமான பாவனையுடன் நின்றிருந்தாள்.
மனைவியின் மௌனம் உள்ளே வேதனையை மூட்டத் தான் செய்தது. ஆனால் தவறு செய்தவன் அவன்.
உப்பு தின்றவன் தண்ணீரை குடித்துத் தானே ஆகவேண்டும்?
அதனால் அமைதியாக, “ஸாரி.. நேத்து ராத்திரி குடிச்சிட்டு வந்து தகராறு பண்ணதுக்கு.. ரியலி ஸாரி..இனி இந்த மாதிரி நடக்காது” என்று விட்டு அங்கிருந்து நகரப்போனவனை, தடுத்து நிறுத்தியது அவளது தெனாவெட்டான குரல்!
அவனை உறுத்து விழித்துக் கொண்டே, “உ.. உனக்கு வெட்கமே இல்லையா?” என்று கேட்க, திட்டுவதற்காகவாவது அவனுடன் பேசினாளே? என்று விழிகளில் பளபளப்புடன் திரும்பி அவளைப் பார்த்தான் ஸ்ரீ.
சந்தோஷத்துடன் திரும்பியவனின் ஆனந்தம் வெகு நேரம் நிலைக்கவில்லை. மாறாக பற்களை நறுநறுவென கடித்துக் கொண்டு நிற்கும் படியானது அவனுக்கு.
ஏனெனில் ஐஷூ பேசி வைத்த வார்த்தைகளின் வீரியம் அப்படி!!
“யாருக்கோ பிறந்த குழந்தைக்கு..கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் நான் தான் அப்பான்னு உரிமை கொண்டாடுற..?” என்று சரியாக தாக்க வேண்டிய இடத்தில் தாக்கினாள் அவள்.
குழந்தைக்கு அவன் அப்பா இல்லை என்று குழந்தையைப் பெற்றெடுத்தவளே சொன்னால்.. எந்த தகப்பனுக்குத் தான் அந்த இனிக்கும்??
வந்த ஆத்திரத்துக்கு..
“ஐஷூ…!!”என்று கத்தியவன், தன் ஆத்திரம் அடக்க மாட்டாமல், அவள் முகத்துக்கு நேராக கையை ஓங்கத் தான் செய்தான்.
எதற்கும் அஞ்சாமல், கணவனின் விழிகளையே ஆத்திரத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
ஐஸ்வர்யா.. அவன் எஞ்ஞான்றும் விரும்பிய தேவதைப் பெண்ணிவள்!!
காலேஜில் அவள் செய்த தவறுக்கே.. அவளை பழிவாங்க மனமற்றவனுக்கு.. அந்த மதிமுகத்தை அடிக்கவா மனம் வரும்?
இருப்பினும் ஆத்திரம் தாளாமல்.. அறை சுவற்றுக்கு ஓங்கி ஓர் குத்து விட்டவன், சொன்னான்,
“உனக்கும் தெரியும்… இந்த ஊருக்கும் தெரியும் .. அந்தக் குழந்தைக்கு அப்பா யார்னு? .. ஏன் உன் கேரக்டரை நீயே கேவலப்படுத்திக்குறே..?” என்று அவன் கேட்ட கேள்வியிலும் கூட பல்லாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது.
பின்னே? ஸ்ரீதரின் மனைவி பெற்றெடுத்த குழந்தைக்கு.. ஸ்ரீதர் தந்தை இல்லையென்றால், ஐஷூவில் தான் ஏதோ பிழையிருப்பதாகத் தானே அர்த்தம்??
நிமிர்வுடன் அவனைப் பார்த்தவள், “யாரு??.. நா.. நான்!!.. என்னை நானே கேவலப்படுத்திக்குறேனா? .. .. என்னை அர்ஜுன் கூட சேர்த்து வைச்சு.. என் கேரக்டரை சந்தேகப்பட்டது நீ.. என்னை கேவலப்படுத்தியது நீ.. என் குழந்தையுடைய இந்த நிலைமைக்கு காரணம்.. நீ!! ஒரு பொண்ணை யார் நம்பலைன்னாலும்.. அவள் புருஷன் நம்பணும்.. என் பொண்டாட்டி அப்படியெல்லாம் நம்பிக்கை துரோகம் பண்ண மாட்டாள்னு நம்பணும்.. ஆனால் நீ? நீ என்ன பண்ண? சீதை மேல சந்தேகப்பட்ட ராமனுக்கும், உனக்கும் என்ன வித்தியாசம் சொல்லு? அந்த சீதை வேணா பொறுமையா வாயை மூடிட்டு இருந்திருக்கலாம்..ஆனால் என்னால முடியாது.. என் மேல சந்தேகப்பட்ட உன் கூட வாழ.. எனக்குப் பிடிக்கலை.. நீ எனக்கு வ்வேண்டாம்..!!”என்று கத்தினாள் அவள்.
“ஏன் இப்படியெல்லாம் பேசுற..?”- அவன் குரல் வருத்தத்தில் ரொம்பவும் ஒடுங்கிப் போயிருந்தது.
அவளுக்கோ.. நீண்ட நேரம் அவன் முகத்தைப் பார்ப்பது பிடிக்கவில்லை.
ஒருவேளை.. அவள் அந்த கடலளவு நேசம் வைத்த மன்னவனின் வருந்தும் முகம் பார்க்க பிடிக்கவில்லையோ? இல்லை குழந்தையின் இந்நிலைக்கு காரணமானவனைப் பார்க்க பிடிக்கவில்லையோ?
எதுவோ ஒன்று ஐஷூ மனதை தீயாக சுட, விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னாள்,
“நீ தானே.. நேத்து குடிச்சுட்டு வந்து… என்ன தண்டனை வேணாம் கொடுன்னு சொன்ன..?”என்று.
“தண்டனை தான் கொடுக்க சொன்னேன்.. உன் லெவலை நீயே தாழ்த்திக்க சொல்லலை..”என்றவன், ஆத்திரத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டே அங்கிருந்த வெளியேறினான்.
****
ஸ்ரீதரும், ஐஷூவும் அங்கே வைத்தியசாலையில் வைத்து இத்தனை வார்த்தைக் கலகங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்க, அதே சமயம் விக்கியின் ஷெட்டிலும் ஓர் பெண், நுழைந்நு கலகம் விளைவித்துக் கொண்டிருந்தாள்.
அந்த பெண், சந்தேகமற ஐஷூ தங்கை ‘இந்து’வே தான்.
அது காலை நேரமாதலால்.. அப்போது தான் ஷெட்டின் ஷட்டரை பாதியளவு திறந்து வைத்துக் கொண்டு.. உள்ளே சூடாக டீ அருந்திக் கொண்டிருந்தான் விக்கி.
இன்னும் ஒபாமாவோ, இதர பல ஊழியர்களோ ஷெட்டிற்கு வராதிருக்க.. அவன் மட்டுமே இருந்த தனிமையான பொழுது அது!!
அந்த கணம் ஷட்டர் சடாரென திறக்கப்பட, அங்கே சற்றும் எதிர்பார்க்காத விதமாக நின்றிருந்தாள் ஸ்பெக்ஸ் அணிந்து தயிர்சாதமாக நின்றிருந்த இந்து!!
காலையிலேயே ஷெட்டிற்கு வந்தவளைப் பார்த்து விக்கி அதிர்ந்து போய் நின்றிருக்க, ஷட்டரை மீண்டும் பாதியாக சாத்தி விட்டு விக்கியை நாடி வந்த இந்து.,
“நான் உன் கூட கொஞ்சம் பேசணும் விக்கி?” என்றாள் சற்றே கறார் குரலில்.
“என்ன பேசணும்..?”- அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, முயன்று வரவழைத்த சாதாரணமான குரலில் கேட்டாள் அவள்.
“ஏன் என்ன அவொய்ட் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும்.. நானும் என் அக்கா.. ஸ்ரீதர் மாமாவை.. தகுதி, அந்தஸ்து பார்த்து வேணாம்னு சொன்ன மாதிரியே உங்களையும் வேணாம்னு சொல்லிருவேன்னு பயப்பட்றீங்க..இல்ல?” என்று கடைசி வரை தன் மனக்குமுறலை வெளிக்காட்டவே கூடாது என்று காட்டமான குரலில் பேசிவளுக்கு,
இறுதியில் அது முடியாமல் போக, கண்களில் இருந்தும் பொளபொளவென கொட்டவாரம்பித்தது கண்ணீர்.
ஸ்ரீதரை, அவள் அக்கா காலேஜிலேயே மறுத்த கதை.. குழந்தை குறைமாதத்தில் பிறந்து.. அவள் அக்காவும், மாமாவும் மனம் வெறுத்து மனஸ்தாபம் வந்து சண்டை பிடித்துக் கொண்டதிலிருந்து.. இரு வீட்டாருக்கும் தெரிந்திருந்தது.
முன்பு இருவர் வைத்திருந்த ரகசியம்.. அதன் பின் பரகசியமாகிப் போனது.
என்ன தான் காதல் இல்லை என்பது போல காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் மருவ மருவக் காதல் கொண்ட ஆண் மனம் அல்லவா? பெண்ணவள் அழுகையை அது எவ்வாறு தாங்கும்??
“இப்போ ஏன் கண்ணை கசக்குற..?” எரிச்சல் மீதூறக் கேட்டான் விக்கி.
சலித்துப் போன குரலில் வாய் திறந்தவன், “நான் தான் அன்னைக்கே சொல்லிட்டேனே.. இந்த மாதிரி லூசுத்தனமா தோட்ஸ்ஸோட என்னைப் பார்க்க வராதேன்னு.. நான் என்னைக்குமே உன்னை காதலிக்கலை… நீ தான்..ஏதோ தப்பா..” என்று பேசிக் கொண்டே வந்தவனை மேற்கொண்டு பேசவிடாமல் இடையிட்டாள் இந்து.
கண்களில் ஜலம் கோர்க்க, “உண்மையை சொல்லு.. நீ என்னை காதலிக்கவேயில்லையா…?” என்று விரக்தியுடன் கேட்டாள் இந்து.
விக்கி மாமா மேல் அவள் வைத்திருந்த மரியாதை எல்லாம் அகன்று.. தற்போது.. அவனை உயிரோடு உயிராக பார்க்கத் துணிந்து விட்டிருந்தவளுக்கு ஏனோ.. மரியாதை பன்மையில் வார்த்தைகள் வரவில்லை.
அவனோ ஆத்திரத்துடன், பெருமூச்சு விட்டுக் கொண்டே கண்களை மூடித் திறந்து, “இந்து.. பேசாம இங்கேயிருந்து போயிடு..” என்று சொல்ல,
அவன் தன் அன்பை புரிந்து கொள்ளாமல் விரட்டுவதும் கூட உச்சபட்ச கவலையை கொடுத்தது அவளுக்கு.
விக்கியே எதிர்பார்த்திராத நேரம்.. அவன் ஷெட்டினுள் இருக்கும்.. உலோகம் அறுக்கும் மெல்லிய கூர்வாளை எடுத்தவள், தன் மணிக்கட்டில் வைத்து,
“நிஜமாவே நீ என்னைக் காதலிக்கலைல?” என்று கேட்டாள் கலங்கிய விழிகளுடன்.
அவள் கூர்வாளை எடுத்ததும் பகீரென்றாக.. எப்போதும் ஜாலியாக இருக்கும் சித்தப்பாவுக்கு கூட கண்கள் கலங்கவாரம்பித்தது.
இருந்தாலும் சுமூகமாக அதை தீர்க்க நாடியவன், சட்டென்று வாய் விட்டு சிரித்துக் கொண்டே,
“இந்து.. என்ன சின்னப்பிள்ளை தனமா விளையாடுறியா? கத்தியை வைச்சதும்.. பயந்து போய் ‘ஆமா நான் காதலிக்குறேன்’ சொல்லிருவேன்னு பார்த்தியா? பேசாமல் அதை கீழே போட்டுட்டு போய் படிக்குற வழியைப் பாரு..”என்றுரைக்க,அதுவும் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அவளுக்கு.
“என் காதல் உனக்கு விளையாட்டா போச்சுல்ல? நான் டாக்டர்க்கு படிக்குற ஸ்டூடண்ட்.. எந்த நரம்பை அறுத்துக்கிட்டால்.. உடனே உயிர் போகும்னு தெரியும்… நான் விளையாடலை.. சத்தியமா நீங்க என்னை காதலிக்கலைல? அப்போ நான் ஏன் உயிரோட இருக்கணும்?” என்றவள்,
கையின் நடுநரம்புக்கு அழுத்தம் கொடுக்க… கொஞ்சம் இரத்தம் எட்டிப் பார்க்க, பயந்து போனான் சித்தப்பா.
நிமிஷத்தில் அவனுடம்பில் இருக்கும் அத்தனை நரம்புகளிலும் இரத்தவோட்டம் நின்று தடைப்பட்டு வந்த உணர்வு அவனுக்கு.
கையில் இருந்த காபி கப்பை கீழே போட்டு விட்டு.. அவள் கையை.. அழுந்தப் பற்றிக் கொண்டவனுக்கு.. இந்துவின் விபரீதம் கண்டதும் கோபமும், ஆத்திரமும், வலியும் ஒருங்கே எட்டிப் பார்த்தது.
“இந்து.. பைத்தியமா உனக்கு.?. ஏன் இப்படியெல்லாம் பண்ற?”என்று அவளை அவன் தடுத்து நிறுத்த முயல,
இவளோ, “என்னை விடு… நான் செத்துப் போறேன்.. நீ தான் என்னைக் காதலிக்கலைன்னு சொல்லிட்டேல்ல? என்னை விடு” என்று அவன் கையை உதற முயல,
இறுதியில் முடியாமல், கத்தியைப் பிடுங்கி வீசி விட்டு, அவள் விழி பார்த்து, “ஆமான்டி… நான் உன்னை காதலிக்குறேன்.. இந்த லோக்கல் மெக்கானிக் சித்தப்பா.. உன்னை உயிருக்குயிரா காதலிக்குறேன்… இப்படிலாம் லூசு மாதிரி பண்ணாதேடீ…” என்றவனுக்கு,
ஏதோ உலகமே இருண்டது போல ஆகி விட.. முன்னேயிருந்த தன்னவளை.. வலிய இழுத்து.. தன் மார்போடு புதைத்துக் கொண்டான் விக்கி.
‘ஆமான்டி… நான் உன்னை காதலிக்குறேன்.. இந்த லோக்கல் மெக்கானிக் சித்தப்பா.. உன்னை உயிருக்குயிரா காதலிக்குறேன்… இப்படிலாம் லூசு மாதிரி பண்ணாதேடீ.’ என்ற அவன் சொற்களே காதில் எதிரொலிக்க.. அவள் திணறல், திமிறல் எல்லாமே அடங்கிப் போயிற்று.
அடம்பிடித்து அழுத குழந்தை.. தாயணைப்பில் அடங்கிப் போவதைப் போல அப்படியே அமைதியானாள் இந்து.
மெக்கானிக் சித்தப்பாவின்.. வேலை நேர அழுக்கு உடையில் பதிந்திருந்த அவன் வியர்வை வாசம், டாக்டர் பெண்ணின் நுரையீரல் வரை தீண்டிச்சென்று கொண்டிருந்தது.
அலுக்கவுமில்லை.அருவெறுப்பைத் தரவும் இல்லை. இன்னும் இன்னும் அவன் அணைப்புக்குள் கட்டுண்டு போனாள் அவள்.
அவளைத் தன்னோடு இன்னும் இன்னும் இறுக்கிக் கொண்டான் விக்கி.
அவள் விழிகளில் இருந்த காதல், வலி எல்லாம் விக்கியின் காதல் மறுப்பு நாடகத்தை அடியோடு தூக்கியெறிய செய்திருந்தது.
அவளைத் தன்னிலிருந்தும் பிரித்து.. இரு கன்னம் ஏந்தி, கண்ணோடு கண் கலக்க விட்டவன் சொன்னான்.
“உன் அக்காவை பெண் பார்க்க வந்த நாளிலிருந்து உன்னை பிடிக்கும் இந்து.. உன்னை மட்டும் தான் பிடிக்கும்!!.. நான் உன்னைக் காதலிச்சது உண்மை தான்.. உன்னை மனைவியா அடையணும்ன்ற எண்ணத்துடன்.. உன்கிட்ட நான் பழகினதும் உண்மை தான்…. அன்னைக்கு..உனக்கு மெடிக்கல் டிக்ஷனரி கொடுத்துட்டு ரிடர்ன் வந்தப்போ.. உங்க ஃப்ரெண்ட்ஸ் இரண்டு பேரு பேசுறதை கேட்டேன்..
‘என்ன இருந்தாலும் இவன் மெக்கானிக்.. அவள் டாக்டர்.. செட்டாகும்னு நினைக்குற?’ன்னு சொன்ன ஒருத்தியுடைய குரல் என் காதில் விழுந்தது.. அப்போ தான்.. காதல் மயக்கத்தில் இருந்த எனக்கு பொட்டுல அறைஞ்ச மாதிரி உண்மை புரிஞ்சுது.. இது சரி வராதுடா விக்கின்னு உங்கிட்ட இருந்து ஒதுங்க ஆரம்பிச்சேன்..அன்னைக்கு உன் சீனியர் லெட்டர் தந்தப்போ கூட.. என் வலியை மறைச்சிக்கிட்டு பொய் சொன்னதும் இதனால தான்மா… ஆனால் உன்னை ரொம்ப பிடிக்கும்டி..” என்றவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள்.
அவனோ, அதற்கு மேலும் தாமதிக்காமல் அவளை அழைத்து வந்து.. அவன் இருக்கையில் நிறுத்தி, அறுபட்ட காயத்துக்கு முதலுதவி செய்ய,
தன் மேல் இத்தனை கருணை காட்டும் அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள்.
“எது சரி வராது?.. நான் சொன்னேனா? உன் கூட வாழப்போறது என் ஃப்ரண்டில்லை..! நான்..!! நான் சொன்னேனா இது சரி வராதுன்னு..??
பிறந்ததிலிருந்து என்னை சுத்தி காசு, பணம் கொட்டி கிடந்ததே ஒழிய.. உண்மையான உறவுகள்னு இருந்தது கம்மி தான்..
எப்போ எல்லாமே எங்களை விட்டு போனதோ.. அப்போ எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது.. காசு, பணம் இருந்தால் தான்.. இந்த பந்தங்களும், உறவுகளும் நம்ம கூட இருக்கும்னு ..
ஆனால் என்னைக்கு நீ வந்து.. உரிமையா ‘மாமா’ன்னு கூப்பிட சொன்னியோ அப்போவே என் மனசுல சின்ன சலனம்.. நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையிலேயே சந்தோஷமா இருந்தது.. உன் கூட வந்த அந்த பதினைஞ்சு நிமிஷ பைக் பயணத்தில் தான்..
இந்த கொஞ்சம் நேரம் இவ்வளவு சந்தோஷமாயிருக்குன்னா.. லைஃப் லோங் உன் கூட பயணம் பண்ணினா.. எப்படியிருக்கும்னு தோணிச்சு.??. அன்னையில இருந்து நான் உன்னை காதலிக்குறேன்.. உயிருக்குயிரா காதலிக்குறேன்” என்று சொன்னவளின் விழிகளையே மையலுடன் பார்த்திருந்தான் அவன்.
“என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா இந்து?” என்று மென்மையான குரலில்.. அவளது கன்னம் ஏந்தியவனாக காதலுடன் கேட்டான் அவன்.
“ம்.. ரொம்ப்ப பிடிக்கும் மாமா!” என்றவளின் விழிகளையே மெர்ஸலாகிப் போய் பார்த்திருந்தான் அவன்.
ஒரு பெண்ணே.. அவனை நாடி வந்து காதல் சொல்லி.. வாழ்வென்பது உன்னோடு தான் என்று சொன்ன பின்பும் கூட, அவனால் இந்துவை ஒதுக்கி வைக்க முடியுமா என்ன?
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. கையை அறுத்துக் கொள்ளப் போனவனின் முகம் வந்து போனது அவனுக்கு. அவள் நுதலோடு தன் நுதல் இடித்தவன்,
“ஹேய்.. லூசு.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் உயிரே போயிருக்கும்டி… ஒண்ணுமே தெரியாத… தயிர்சாதம் மாதிரி இருந்துக்கிட்டு.. லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி வேலையெல்லாம் பார்க்குறேல்ல நீ?”என்று புன்னகைத்தான் அவன்.
மெலிதாக அவளும் புன்னகைக்க, அவன் சட்டையை பிடித்து தன்னோடு இழுத்தவள், “பின்னே.. அந்த சைட்ல இருந்து ஒரு ரியாக்ஷனும் வரலைன்னா.. என்ன பண்றது?? விதி.. நாங்க தான் ஆக்ஷன்ல இறங்கணும் போல இருக்கு”என்று கூற,
அப்பாவியாக பேசும் இந்துவா இது என்று தோன்றியது சித்தப்பாவுக்கு.
“நீ இப்படியெல்லாம் பேசுவியா?” என்று மூக்கின் மேல் கை வைக்காத குறையாக அவன் கேட்க,
“பின்னே வருங்கால சித்தி… இந்த மெக்கானிக் சித்தப்பாவுக்கு ஏத்த மாதிரி கலகலன்னு ஆக வேணாமா? இல்லைன்னா நம்ம ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து.. பையன் சிரிச்ச முகம்.. பொண்ணு உம்மணாம்மூஞ்சின்னு சொல்ல மாட்டாங்க? ” என்று கேட்டாள் இந்து.
அதில் சின்ன சிரிப்பு படர்ந்தாலும் கூட, “வருங்கால சித்தி” என்னும் வாசகம் அவனை சிந்திக்க வைத்தது.
அவள் அக்கா ஐஷூ, ஸ்ரீதரிடம் விவாகரத்து கேட்டிருக்கும் நிலையில்.. இரு வீட்டாரும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று பிரிந்து கொண்டால்,
இவள் தந்தை.. இந்துவை மருமகளாக மீண்டும் ஸ்ரீதர் வீட்டுக்கு அனுப்ப சம்மதிக்க கூடுமோ என்ன?
யோசனையுடன் தாடையை சொறிந்து கொண்டே, இந்துவைப் பார்த்தவன்,
“இருந்தாலும் உன் அக்காவும், மாமாவும் இப்படி சிலிர்த்துட்டு நின்னா.. எப்படி நம்ம ரூட் க்ளியராகும்..?” என்று கேட்டான்.
இவன் முகமோ குழப்பத்தில்.. சுருங்கியிருக்க.. அவள் முகமோ பல்பு போட்டது போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.
‘என்ன?’ என்று அவன் சைகையால் விழியுயர்த்தி கேட்க, இவளோ, “சீ மை டியர் மெக்கானிக்.. உறுப்புக்கள்ல கோளாறை சீர்ப்படுத்த.. ஆபரேஷன் பண்றதில்லையா? அதே போல உறவுகள்ல இருக்க கோளாறை சீர்ப்படுத்த?” என்று பாதியில் நிறுத்தி அவள் கேட்க,
இப்போதும் இவன் முகமும் தெளியவாரம்பித்தது.
“ஆபரேஷன் பண்ணிருவோம்!!” என்று மெக்கானிக் சித்தப்பா கண்ணடிக்க, அதில் சொக்கிப் போனாள் டாக்டர் பெண்.

{24}
ஐஷூ குழந்தை அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை.
“ஐஷூ!!” என்று தன் முதுகுக்குப் பின்னே.. ஈனமாக ஒலித்த, அந்த ஆண் குரலைக் கேட்டு, மெல்ல திரும்பிப் பார்த்தாள் அவள்.
அங்கே, அவள் சற்றும் எதிர்பாராத விதமாக..
இடது கண்ணுக்கு கீழே நீலம் பூத்திருக்க, ஆங்காங்கே முகத் தோல் சிராய்ந்து, கீழுதடு ஆபிரிக்க காரனின் உதடுகள் போல வீங்கித் தொங்க,
தன் வலது கையில் ஒரு பெரிய பேன்டேஜூடன்.. நின்றிருந்தான் ஓர் ஆடவன்.
முதலில் பார்த்ததுமே.. யாரென்று அனுமானித்துக் கொள்ள முடியாமல் நின்றவளுக்கு,
ஒரு சில கணங்கள் தன்னை அழைத்த அந்த ஆடவனை உற்றுப் பார்க்கவும் தான், அங்கே நின்றிருப்பது அர்ஜூன் என்பதே புரிந்தது ஐஷூவுக்கு.
திரும்பவும்.. எந்த வாகனத்தில் போய் மோதினானோ? என்ற கேள்வி அவளுக்குள் எழுந்த போதும், ‘ஐயோ பாவம்!’ என்ற பரிதாபம் தான் அவளுள் இம்முறை மேலோங்கவேயில்லை.
தான் கருவில் சுமந்து பெற்றெடுத்த மகவை.. வழமை போல மாலை நேரத்தில் பார்த்து விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த ஐஷூ,
தன் முன்னே எதிர்ப்பட்ட முறைப்பையனை மேலும், கீழும் ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.
அவள் தன்னை ஆராய்வது புரிந்ததும், இன்னும் கொஞ்சம் அவன் முகம் போலி கலக்கத்தைக் கடன் வாங்கிக் கொள்ளத் தான் செய்தது.
குரலில் அவன் பேசும் போது வலி ஊடுருவித் தெரிய, கொஞ்சம் சாதாரணமான குரலிலேயே, “ஐஷூ.. நான் அன்னைய்க்கே படிச்சு படிச்சு சொன்னேனே.. அவனை நம்பாதேன்னு கேட்டியா? ஹீ இஸ் டூயிங்க் திஸ் ஃபோர் பர்சனல் வென்ஜன்ஸ்னு சொன்னேன்.. என்னை நம்பினியா? .. என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல்.. உன்னையும், உன் குழந்தையயும்..”என்று அவன் பேசிக் கொண்டே போக, அவன் பேசுவதையெல்லாம் நின்று கேட்கும் பொறுமை ஐஷூவுக்கு இல்லை.
தன் முன்னே நிற்பவன், தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருக்கும் அவள் வாழ்வை ஹாஸ்பிட்டலுக்கும், பிறந்த வீட்டுக்கும் என அலையச் செய்தவன் என்பது மட்டுமே அவள் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.
‘நிறுத்து’ என்பது போல சைகை காட்டி, அர்ஜூனின் பேச்சை பாதியிலேயே தடுத்தாள் அவள்.
நிர்மலமான முகத்துடன், தன் முன்னே நின்றிருந்தவளை ஏறிட்டவனுக்கோ,
தன் இந்த நிலைமைக்கு காரணம், ‘உன் புருஷன் தான்’ என்று சொல்லிய பின்னும்,
தன் முன்னாள் காதலியின் முகத்தில் தனக்கான எந்தவிதமான அனுதாப அலையும் எழவில்லையே? என்பதை எண்ணும் போது, முகம் கல்லாக இறுகிப் போனது.
ஆனால் அர்ஜூன், தான் செய்த திருகுத்தாளம் ஐஷூவுக்கு, அவளது கொண்டான் சொல்லி ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்பதை அப்போது தான் அறியும்.. துர்ப்பாக்கிய நிலைக்கு ஆட்பட்டான்.
ஐஷூவின் குரலில் ஏகத்துக்கும் கோபம் ஏறிப் போய்க்கிடந்தாலும் அது மருத்துவமனை என்பதால் தன் கோபத்தை இடம், பொருள், ஏவல் கருதி அடக்கிக் கொண்டவள் கேட்டாள்,
“என்ன? ஆ? என்ன? நடந்தது அத்தனைக்கும் மூலகாரணம் நீ தான்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? இப்போ வந்து நாரதர் வேஷம் போட்றியா?”என்று.
அவள் தன் திருகுத்தாளங்களையெல்லாம் அறிந்திருக்கிறாள் என்றானதும்.. மெலிதாக அதிர்ந்து போனான் அர்ஜூன். சட்டென ஒரு நிமிஷம் இருண்டு பின் பழைய நிலையை அடைந்தது அவன் முகம்.
“ எ.. எ.. என்ன ஐஷூ சொல்ற..?”- ஒன்றுமே தெரியாத அப்பாவி போல இருந்தது அவன் முகபாவமும், அதனுடன் ஒத்துப்பாடிய அவன் குரலும்.
அவளுக்கோ… அர்ஜூன் போடும் ஆக்ஷனில்.. கொஞ்சம் கோபம் அதிகமாக மூளத் தான் செய்தது.
இருப்பினும் மார்புக்கு குறுக்காக கை கட்டி நின்று, கீழுதடு கடித்து பெருமூச்சு விட்டு.. தன் சீற்றத்தைக் கட்டுப்படுத்த ஆவன செய்தாள் அவள்.
பின்பு நேராக நிமிர்ந்து, தன் முறைப்பையனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவள்,
“எங்க ரெண்டு பேருக்கும் இடையில் நாரதர் வேலை பார்த்தது நீ தான்னு எனக்குத் தெரியும்!! ஸ்ரீதர் கையால நீ நல்லா வாங்கியிருக்கேன்னு… உன்னைப் பார்த்தாலே தெரியுது..”என்றவள்,
அடிபட்ட பாம்பாய் நின்றிருந்த அந்த நயவஞ்சகனை மீண்டுமொருமுறை மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை பார்த்தாள்.
அதே நிதானம் தவறாத, பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில், “அதுக்காக உன் மேல.. க்கொஞ்சம் கூட.. ப்பரிதாபம் வரலை.. ஏன்னா.. நீ ப்பண்ணி வைச்ச வேலை அப்டி!!.. எனக்கு.. உன் மேல இருக்குற க்கோவத்துக்கு… ஏதாவது அசிங்கமா சொல்லிடுவேன்.. மரியாதையா போயிரு அர்ஜூன்..” என்றாள் அவள்.
ஆனால் அவனோ.. ‘பிறன் மனை’ என்று பாராமல்.. கொஞ்சம் தரம் தாழ்ந்து.. வெட்கக் கெட்டத்தனமாக அவளுடன் இன்னும் உறவாடத் தான் எண்ணம் கொண்டான் போலும்.
சுட்டு விரலால் தன்னைத் தானே சுட்டிக் காட்டியவன், “யா.. யாரு நான்.. நானா..?? ஐஷூ அகேய்ன் யூ காட் மீ ராங்!! நான் உனக்கு ஆரம்பத்திலிருந்து அவனுடைய உண்மை முகத்தைக் காட்டத் தான் முயற்சி பண்ணிட்டிருக்கேன்..” என்று ஏதேதோ அவன் பினாத்திக் கொண்டிருந்த போது.. மீண்டும் இடையிட்டது ஐஷூவின் சீறும் குரல்.
“உண்மை முகம்????” – தன் ஒற்றைப் புருவம் மாமாத்திரம் மேலுயர, கொஞ்சம் எகத்தாளமாகவே கேட்டாள் ஐஷூ.
அந்த வார்த்தை, ‘உண்மை முகம்’ என்று அவன் மொழிந்த வார்த்தை.. அவளை உள்ளே கொழுந்து விட்டெரிய வைத்தது.
“உன் உண்மை முகத்தைத் தான் தெரிஞ்சிக்கிட்டேனே..? அரவிந்த்க்கு ஹெல்ப் பண்ண வந்த என்னை… உன் கூட படுக்க வந்ததா… கதை ஜோடிச்சு விட்ட உன்னோட உண்மை முகத்தை நான் தெரிஞ்சிக்கிட்டேனே அர்ஜூன்..?” என்று சரியாக அவள், அர்ஜூனின் வார்த்தைகளை வைத்து .. அவனையே தாக்கிப் பேசினாள் .
“ஐஷூ…!!” – அவன் ஜம்பம் வெட்ட வெளிச்சமானதும்.. பல்லு போன பாம்பு போல சீற மட்டும் தான் முடிந்தது அந்தக் கொடியவனுக்கு.
அந்த சீறல் எல்லாம் அவளை இம்மியளவும் பாதிக்கவேயில்லை.
அவனுடைய துரோகத்தையும், அதன் விளைவால் நிகழ்ந்த கணவனின் சந்தேகத்தையும் எண்ணிப் பார்த்தவளுக்கு.. கட்டுப்படுத்தவே முடியாமல் இன்ஸ்டன்ட்டாய் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின.
நாவும் சமயா சந்தர்ப்பமே பாராமல் தழுதழுக்க, “நா.. நா..நான் உனக்கு என்ன தப்பு பண்ணேன் அர்… ஜூன்? .. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்க உன் தம்பிக்கு… ஹெல்ப் பண்ண உன் வீட்டுக்கு வந்தது தப்பா அர்ஜூன்..??
நான் உன்னைக் காதலிச்சேன்… இல்லைன்னு சொல்லைலை..!! ஆனால் எப்போ எங்கப்பாவை.. உன் அம்மா… சொந்த அண்ணன்னு கூட பார்க்காமல்.. அவமானப்படுத்தினாங்களோ ? .. நீயும் ‘அம்மா நான் இவளைத் தான் கட்டிப்பேன்’ னு.. ஒரு வார்த்தை கூட பேசாமல்.. அமைதியா கை கட்டி நின்னு வேடிக்கை பார்த்தியோ..அப்போலயிருந்து.. நான் உன்னை வெறுக்கிறேன்.. இப்போ… என் மனசுல துளியளவு கூட…. நீ இல்லை..!!” என்று தன் உள்மன ஆதங்கத்தை அத்தனையும் கொட்டியவளின் கையை சற்றும் எதிர்பாராத விதமாக பற்றிக் கொண்டான் அர்ஜூன்.
அவன் கண்களில் இலேசாக நீலிக்கண்ணீர் எட்டிப் பார்க்க, “ஐஷூ ப்ளீஸ்.. அப்போ நான் பண்ணது தப்பு தான்..” என்று பழைய குருடி கதவைத்திறடி என்பது போல மீண்டும் பழைய பஞ்சாங்கத்தை அவன் பாட..
தன் முன்னங்கையை அத்துமீறி பற்றியிருக்கும் அவன் கையை உறுத்தும் விழியுடன் பார்த்தாள் ஐஷூ.
பற்களைக் கடித்துக் கொண்டு, சீற்றம் அடக்கும் மென்மையான குரலில், “க்கையை வ்விடு.. உன்னையும் நான் வ்வெறுக்கிறேன்… உன் சதிவலையில் விழுந்து.. பொண்டாட்டி மேல நம்பிக்கையில்லாமல்… சந்தேகப்பட்ட அவனையும் நான் வெறுக்கிறேன்.. என் கையை விடு அர்ஜூன்..” என்று செப்பிய வேளை கேட்டது இன்னுமோர் குரல்.
அது.. அவள் கொண்டானின் குரல்!! ஸ்ரீதரின் காந்தக் குரல்!!
“ஐஷூ!!..” – காற்றில் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டு வந்த குரல் திசை நோக்கி மெல்ல திரும்பினாள் அவள்.
அங்கே, தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் இரு கைகளை விட்ட வண்ணம்.. சீற்றம் துளிர்க்கும் விழிகளுடன் நின்றிருந்தான் ஸ்ரீதர்.
அவனைக் கண்டதும் ஐஷூவின் விழிகள் அகல விரிந்தது. ஆனால் அர்ஜூனுக்கோ ஸ்ரீதரின் அடிகள் ஒவ்வொன்றும் ஞாபகம் வர.. விழிகளில் அச்சத்துடன் நின்றிருந்தான் அவன்.
அன்றொரு நாள் அடியாட்களை அழைத்து வந்து.. அர்ஜூன் ஸ்ரீ மீது கைவைத்த போது அமைதியாக, அத்தனை அடியையும் தாங்கிக் கொண்டு இருந்தவனுக்கு.. அவன் மனைவி விவகாரத்தில், அர்ஜூன் தன்னை சந்தேகப்பட வைத்தது தானும் பிடிக்கவில்லை.
அதனால் தான்… ஓருயிரும் ஈருடல் போல வாழ்ந்த தன்னையும், மனையாளையும் பிரித்த ஆத்திரம் தாளாமல்.. அர்ஜூனின் கால், கையினை பிரித்து மேய்ந்திருந்தான் ஸ்ரீதர்.
தன் கோபத்தை.. நடையில் காட்டி.. அழுத்தமான காலடி பதித்து.. புயலென நடந்து வந்தவன், தன் இல்லாளின் மறுகையை பிடித்துக் கொண்டான்.
தற்போது ஒரு கை ராவணண் வசம் இருக்க, மறு கை கணவனான ராமன் வசம் இருக்க.. இருவருக்குமிடையில் சிக்குண்டு தத்தளித்தாள் நவீன சீதை.
நெற்றிக்கண் திறந்த சிவன் போல கண்களாலேயே, அர்ஜூனை எரித்து விடுவது போல பார்த்து வைத்த அவன் பார்வை அர்ஜூனுக்குள் கூஸ் பம்ப் உணர்வை மிகச் செய்தது.

அவன் கண்ணின் கருமணியில் கோபத்தீ பளபளக்க, அடித்தொண்டையிலிருந்து, “என் ப்பொண்டாட்டி க்கையை வ்விடு..!!” என்று சீறிய கணவன் குரலில் இருந்த உரிமை கலந்த சீற்றம் அவள் மனதையும் துணுக்குறச் செய்ய.. அண்ணாந்து தன் தலைவனின் விழிகளையே மருள மருளப் பார்த்தாள் அவள்.
“மு.. முடியாது..”-கொஞ்சம் படபடப்பு மேலோங்கினாலும், இன்னும் கொஞ்சம் கெட்டியாக ஐஷூவின் கையைப் பற்றிக் கொண்டான் அர்ஜூன்.
“வ்விடுன்னு சொல்றேன்ல??” என்று பற்களைக் கடித்துக் கொண்டு.. ஸ்ரீதர் காட்டமாக கேட்ட தினுசில்.. மற்றவனின் தொடை இலேசாக நடுங்கத் தான் செய்தது.
இருவரும் தன் கையை பிடித்துக் கொண்டு சிலிர்த்துக் கொள்ளும் நொடிகளை அறவோடு வெறுத்தாள் ஐஸ்வர்யா.
கண்களை இறுக மூடி, அடிக்குரலில், “ஐய்யோ!! ரெண்டு பேரும் என் கையை விடுங்க!!.. எனக்கு ரெண்டு பேருமே வேணாம்!!..உங்க ரெண்டுபேருக்கும் இடையில் நானும், என் குழந்தையும் பட்ட பாடு போதும்.. ப்ளீஸ் விட்டுடுங்க..!!” என்று கத்திக் கொண்டே கையை உதறியவளின் கையை ரொம்பவும் பலமாகப் பிடித்திருந்தான் ஸ்ரீதர்.
அவன் விழிகளில் மிளிர்ந்த உறுதி.. அவள் என்றுமே பார்த்திராத ஒன்று.
தனக்கு சொந்தமானதை நான் எப்போதும் பிறருக்கு விட்டுத் தர மாட்டேன் என்னும் வைராக்கியம் அந்த விழிகளில் மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டாள் அவள்.
காற்றைக் கிழித்துக் கொண்டு தீர்க்கமாகவும், உறுதியாகவும் கம்பீரமாக கேட்டது அவன் குரல்.
“முடியாது.. நான் உன்னைத் தொட்டுத் தாலி கட்டின புருஷன்!! என் தாலி உன் கழுத்தில் இருக்கும் வரை எனக்கு எல்லா ரைட்ஸூம் இருக்கு..!!” என்று தன் மனையாளைப் பார்த்து கூறியவள்,
அர்ஜூனை நோக்கி, கோபம் குமிழியிடும் குரலில்,
“அர்ர்ஜ்ஜூன்.. இது தான் லாஸ்ட் வார்னிங்க்.. டேக் யோர் ஹேன்ட் ப்ரோம் ஹர்!!…” என்று கர்ஜித்தான் அவன்.
அர்ஜூனின் கைகள் நடுக்கமுற்று சற்றே தளர்ந்தாலும், அவள் கையை இன்னும் விடாது பிடித்திருந்தான் அவன்.
தன்னுடைய இறுதி எச்சரிக்கையையும் கருத்தில் கொள்ளாது நிற்கும் அர்ஜூன் மேல் கொலைவெறி மிக.. கை முஷ்டி மடக்கி, ஓங்கி ஓர் பஞ்ச்.. அர்ஜூன் மூக்கிற்கே விட்டான் ஸ்ரீதர்.
அந்த அடியில் குபுகுபுவென இரத்தம் எட்டிப் பார்க்க, அந்த வலி வீரியத்தை தாங்க முடியாமல்.. மூக்கைப் பொத்திக் கொண்டே தரையில் சுருண்டு விழுந்து புழுவைப் போல துடித்தான் அர்ஜூன்.
அர்ஜூன் தன் கணவன் கையால் அடி வாங்கியதையும், இரத்தம் வந்ததையும், சுருண்டு விழுந்ததையும் சுரத்தே அற்ற விழிகளுடன் பார்த்தாள் அவள்.
அந்த விழிகளில் அர்ஜுனுக்கான எந்த கழிவிரக்கமும் இல்லை.
ஆனால் ஸ்ரீதர் அங்கு நில்லாமல்.. தன் மனைவியின் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டே போனான் கார் பார்க்கிங் ஏரியாவிற்கு.
குழந்தையை பார்க்க வந்தவனின் மனம்.. அர்ஜூன் ஐஷூவின் கையைப் பற்றியிருப்பதைக் கண்டதும்.. ஒரு நிலையில் நில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
குழந்தையின் பால்முகம் பார்க்காமலேயே மனைவியுடன் கிளம்ப எத்தனித்தான் அவன்.
பின்னே வந்தவளோ… கொஞ்சம் காண்டானவளாக,
அவனில் இருக்கும் தன் கையை உருவியெடுக்க முயன்றவளாக, “ஸ்ரீதர்.. என்னை விடு ஸ்ரீதர்… நீ தானே அன்னைக்கு அவன் கூடவே போக சொன்ன..? இப்போ ஏன் அவன் கிட்டயிருந்து என்னை அழைச்சிட்டு வந்த? என் கையை விடு.. நான் அவன் கூடவே போறேன் ..” என்று எரிகிற தீயில் எண்ணையை ஊற்றினாள் அவள்.
அன்று.. ஐஷூவுக்கு பிரசவ வலி எடுத்திருந்த நேரம், அதை அறியாமல் இவனும், ‘அர்ஜூன் கூடவே போயிரு’ என்று சொல்லி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதை நினைவு கூர்ந்து சொன்னாள் அவள்.
அவள் சொன்னதைக் கேட்டதும், அவனது விரைவு நடை சட்டென தடைப்பட்டு நின்றது.
தன் பின்னே வந்து கொண்டிருந்தவளைத் திரும்பி நோக்கியவனின் சினம் அப்போதும் கூட தணிந்திருக்கவில்லை.
அவளது பெரிய நயனங்களில்.. தன் கோபத்தைக் கக்கியவன், “ஜஸ்ட் ஷட் அப் யோர் மவுத் ஐஷூ..!!” என்று அவளைப் பார்த்து உச்சஸ்தாயியில் கத்த, அந்தக் காட்டுக்கத்தலில் ஒரு கணம் நின்று துடித்தது அவள் மூச்சு.
கணவன் கத்திய அதிர்ச்சியில் மெல்லினம் நின்றிருக்க, தன் கார் கதவைத் திறந்து பலவந்தமாகவே அவளை உள்ளே ஏற்றி விட்டு, வண்டியை கிளப்பினான் அந்த மெல்லினத்துக்கு உரியவனான வலியான்.
ஸ்ரீதர் எந்தளவுக்கு கோபத்தில் இருக்கிறான் என்பதை.. அந்தக் காரின் அதி உச்ச வேகம் காட்டிக் கொண்டிருந்தது.
அவளுக்கும் அந்த வேகம் உள்ளே பயப்பந்துகளை உருண்டோடச் செய்தாலும் கூட, அமைதியாகவே காரினுள் அமர்ந்திருந்தாள் ஐஷூ.
ஆனால் அவள் அமைதி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அந்தக் குறுகலான சாலையில்,
போகும் வாகனங்களை எல்லாம் ஓவர் டேக் செய்தவனாக, அடுத்த ‘வரும் வாகனங்கள்’ வரும், வலது பக்க சாலைக்கு புகுந்து விட்டிருந்தான் அவன்.
எதிரே ஒரு லாரி கூட வந்து கொண்டிருக்க, அந்த சிந்தனையே அற்று.. நேரே மரணத்தின் வாசலை நோக்கி சென்று கொண்டிருக்கும் தன் துண்ணிய கேளிரை அச்சம் மீதூறப் பார்த்தாள் ஐஷூ.
அவனோ ரோபோ போல முகத்தை வைத்துக் கொண்டு, இன்னும் இன்னும் வேகத்தைக் கூட்ட.. உள்ளே அடிவயிறு கலங்கலாயிற்று அவளுக்கு.
‘ஸ்ரீ.. ஸ்ரீ.. ஸ்ரீதர்..!!” என்று எவ்வளவோ அழைத்துப் பார்த்தும் பயனில்லை.
இயலாத மட்டில்… கணவனின் ஷோல்டரைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி, “பேபிக்கண்ணா… என்ன பண்ணிட்டிருக்க…? முன்னாடி லாரி!!” என்ற வண்ணம்.. நடப்பதைக் காண தென்பற்று, கண்களை இறுக மூடிக் கொண்டாள் அவள்.
அவளிடமிருந்து வந்த ‘பேபிக்கண்ணா’ என்ற ஒற்றை பெயர்ச்சொல்லில்.. அந்த சொல்லில்.. சட்டென அந்த மாய உலகத்திலிருந்து வெளியே வந்தவன்,
வண்டியை இடது பக்கம் ஒடித்துத் திருப்பி.. சாலையின் ஓரமாக வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.
இன்னும் கண்களை மூடிக் கொண்டு அச்சத்தில் சர்வமும் உறைந்து போய் நின்றிருந்தவளைக் காணக் காண குற்றவுணர்வு பிடுங்கித் தின்றது அவனை.
பதற்றத்துடனேயே, “ஐஷூ.. ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவளை ஆராய, அப்போது தான் இன்னும் உயிருடன் இருப்பது புரிய.. கொஞ்சம் கொஞ்சமாக அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தவள்,
ஆத்திரம் தாளாமல் கொண்டானை சரமாரியாக தாக்கவாரம்பித்தாள்.
கண்களில் அது பாட்டுக்கு கண்ணீர் வழிய, தழுதழுத்த குரலில், “உன.. க்கு உயி.. ருன்னா விளையாட்டா… ப் போச்சுல்ல? ..விளையாட்டாப் போச்சுல்ல?? அப்போ என் குழந்தை.. இப்போ நான்..!! எங்களை நிம்மதி.. யா இருக்கவே விட மாட்டேல்ல?”என்று அடித்துக் கொண்டே சொன்னவளின் வார்த்தை தாங்க மாட்டாமல்,
அப்படியே மனைவியைத் தன் பரந்த மார்புக்குள் இழுத்து கட்டியணைத்துக் கொண்டான் ஸ்ரீ.
அவள் மேனி இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பது அப்பட்டமாகவே தெரிந்தது அவனுக்கு.
‘அவள் துணுக்கம் அடங்கும் வரை அணைத்தவாறு சமாதானப்படுத்த முயன்றவனின் கண்களும் கலங்கித் தான் இருந்தது.
“ஏன்.. என்னை வார்த்தைகளால் கொல்ற ஐஷூ? நான் உன் உயிரோடேயும், என் குழந்தை உயிரோடேயும் விளையாடுறேனா? ஹாஸ்பிட்டல்ல அர்ஜூன்கிட்ட நீ, ‘என்னை வெறுக்கிறேன்’ னு சொன்னது இன்னும் என் காதில கேட்டிட்டு இருக்கு.. அந்த ஆத்திரத்தில் தான் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்டீ.. ஐ ஏம் ரியலி ஸாரி.. பட் ஐல் கிவ் யூ அ சான்ஸ்..” என்றவன் அவளது கைகளை எடுத்து, கழுத்தில் வைத்து,
“கில் மீ!!.. கில் மீ வித் யோர் பேர் ஹேன்ட்ஸ்.. நாட் வித் யோர் வர்ட்ஸ் ஐஷூ!! .. நான் பண்ணது தப்பு தான் இல்லைன்னு சொல்லலை.. ஆனால் என்னை சந்தேகப்பட வைச்சது நீ!! .. நீ ஏன்.. என் குழந்தையுடைய எதிர்காலத்துக்காகவாவது.. என்னை மன்னிக்கக் கூடாது??” என்று உடைந்து போனவனாக கேட்டான் அவன்.
கணவனின் முகம்.. அவள் கல்நெஞ்சை உருக்கினாலும், அன்று கர்ப்பிணியாக இருந்தவளை வெளியே தள்ளிய ஆத்திரம், கவலை.. அவளை மீண்டும் இறுக வைத்தது.
ஆதங்கம் மீதூறும் விழிகளுடன் கணவனைப் பார்த்தவள், “இப்போ.. குழந்தை உயிரோட இருக்கிறதால இப்படி பேசுற? .. ஒருவேளை…அன்னைக்கு உன்னோட அவசரபுத்தியால. எனக்கோ..என் குழந்தை உயிருக்கோ.. ஏதாவது ஆகியிருந்திச்சுன்னா? ..”என்று கலங்கிய விழித்திரையுடன் அவள் கேட்க,
அந்தக் காரே எதிரொலிக்கக் கேட்டது அவனது குரல்!!
“செத்துருப்பேன்டி.. செத்துருப்பேன்..!!” என்று விழிகள் அகல, கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, ஐஷூவைப் பார்த்துக் கத்தியவனையே, அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் அவள்.
அடுத்து அவன் வாயிலிருந்து வெளி வந்தவை எல்லாம் ஐஷூ கனவிலும் எதிர்பார்த்திருக்காதவை.
அவளோ கணவனின் ஒவ்வொரு எகிறலுக்கும்.. உயிர் நின்று நின்று துடிக்க, தூக்கிவாரிப்போட நிற்க.. இவனோ அது கருத்தில் பதியாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான்.
அவன் முகம் நிமிடத்தில் ஒளியிழந்து போக, “ உனக்கோ, நம்ம குழந்தைக்கோ ஏதாவது ஆச்சுன்னா.. இந்நேரம் ஸ்ரீதர்ன்ற ஒருத்தன் இந்த உலகத்திலேயே இருந்திருக்க மாட்டான்.. செத்துருப்பேன்..!! உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆச்சுன்னா என்னால உயிரோட இருக்க முடியும்னு நினைச்சியா..??” என்று அவன் கூறிய தினுசில்,
அந்த சொற்கள் கேட்டு, இதயத்தில் ஏதோவொன்று நெருஞ்சி முள்ளாக குத்த, அப்படியே கல்லானாள் ஐஷூ.
அவனோ, உணர்ச்சி வசப்பட்டு.. காரினுள் கிடைத்த தனிமையில் தன்னிலையை அவளிடம் விளக்கிக் கொட்டிக் கொண்டிருந்தான்.
“இந்த உலகத்தில் யாரு தப்பு பண்ணல??.. சொல்லு!!.. நீ பண்ணலையா? நான் தப்பு பண்ணலயா? யார் தான் பண்ணலை?.. தப்பு பண்றது தான் மனுஷ இயல்பு ஐஷூ.. அப்படி தப்பே பண்ணாம இருக்கணும்னா.. அதுக்கு எல்லாரும் மகானா தான் பிறந்திருக்கணும்… புரிஞ்சுக்க ஐஷூ..!!
அன்னைய்க்கு.. அஞ்சு வருஷத்துக்கு முதல்.. நீ எல்லார் முன்னாடியும்… என்னை தகுதி, தராதரம் பார்த்து அவமானப்படுத்தியதை, என் காதலை துச்சமா வீசியெறிஞ்சதை நான் மறக்கலைன்னா.. மன்னிக்கலைன்னா… நீயும், நானும் சந்தோஷமா வாழ்ந்திருக்க முடியுமா..?
‘என் குழந்தைக்கு இப்படியாச்சு’ன்னு.. எனக்கு மட்டும் கவலையும், கில்ட்டி ஃபீலிங்கும் இல்லைன்னு நினைக்கிறியா ஐஷூ??.. பட் வீ ஹேவ் டூ மூவ் ஆன்.. நமக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு ஐஷூ.. இந்த கவலையிலேயே இருந்தால்.. எப்படி நாம அடுத்த கட்டத்துக்கு போறது? ஒரு தடவை நடந்த தப்பை திருத்திக்கலாம்.. இனியொரு தரம் அப்படி நடந்துக்காமல் நான் பார்த்துக்கிறேன் ஐஷூ..” என்று அத்தனையையும் அவன் கண்ணீர் மல்க, எடுத்துரைக்க,
அழும் கணவனின் முகத்தையே பார்த்திருந்தாள் அவள்.
அவனது விழிகள்.. அதில் ததும்பும் கண்ணீர் ஏதோ செய்ததை அவளை. இருப்பினும் உள்ளே எழும்பும் மனக்கவலைகளை.. வெளியே இறுக்கமான முகத்திரை அணிந்து மறைத்தாள் அவள்.
தன் துண்ணிய கேளிர் கண்ணீர் விடுவதை.. எந்த மாதரசி தான் தாங்குவாள்? அவன் கண்ணீரைத் துடைத்து விட, அவன் தலையை தன் நெஞ்சுக்குழிக்குள் புதைத்துக் கொள்ள.. அவளையும் மீறி அனிச்சையாய் எழுந்தது அவள் கைகள்.
கடினப்பட்டு தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, ஜன்னலுக்கு வெளியே தலை திருப்பி வெறித்துப் பார்க்கலானாள் அவள்.
அவள் தான் பேசுவதை கேட்க விரும்பாது.. தலை திருப்பிக் கொண்டதுவும்,
இத்தனை இறங்கி வந்து பேசியும் ஒரு வார்த்தை கூட மறுமொழி சொல்லாது, அமைதியாக இருப்பதையும் பார்த்து ஸ்ரீதருக்கு தன் மனையாளின் மனம் அவள் சொல்லாமலேயே புரிவது போல இருந்தது.
அதன் பிறகும் அவளிடம் கெஞ்ச மனமற்று.. தன் வாழ்க்கையை தானே நொந்து கொண்டவன், அதன் பிறகு வீடு போய் சேரும் வரை அவளிடம் பேசவுமில்லை, அவள் பக்கம் திரும்பவுமில்லை.
ஆயினும் புருவம மத்தியில் இருந்த முடிச்சு.. அவன் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் காட்டியது.
இறுதியாக அவள் வீடு வந்ததும், வண்டியை நிறுத்தியவன், அவளைப் பாராமல், கார் கண்ணாடி வழியாக விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே,
உணர்ச்சி முற்றிலும் துடைக்கப்பட்ட குரலில், “சரி.. அப்படி உனக்கு விவாகரத்து தான் வேணும்னா.. அதையும் நான் கொடுக்க தயாரா இருக்கேன்.. உனக்கு அதில் தான் சந்தோஷம்னா.. அதுவும் எனக்கு ஓகே..!”என்றவன், அவளை இறக்கி விட்டு வண்டியில் பறந்தான்.
காரிலிருந்து பதுமை போல இறங்கியவள், புழுதி பரத்திக் கொண்டு கிளம்பும் அவனது காரையே கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதன் பிறகு வந்த ஒரு வாரமாக.. ஸ்ரீதர் ஐஷூவின் கண்களில் விழாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தான்.
எப்போதும் குழந்தையைப் பார்க்க.. கரெக்ட் டைமில் மருத்துவமனை வருபவன்… அந்த கார் சம்பவம் நடந்த ஏழு நாட்களின் பின்பு காணவேயில்லை.
ஒருவேளை அவன் உடம்புக்கு ஏதாகிலுமோ? இப்போது தான் ஆயிரத்தெட்டு காய்ச்சல் வகைகள் வருகின்றனவே? அப்படி ஏதாவது நோய்கள் வந்திருக்கக் கூடுமோ?
பொறுக்க முடியாமல், ஐசிஎன் அறைக்கு பொறுப்பான நர்ஸிடம் கணவனைப் பற்றி விசாரித்த போது.. ஸ்ரீதர் ரொம்ப நேரகாலத்துடனேயே குழந்தையை பார்த்து விட்டு செல்வது புரிந்தது.
உள்ளே யாருக்கும் தெரியாமல்… கணவனைக் காண வேண்டும் என்ற அவா துளிர் விட.. நேரகாலத்துடனேயே குழந்தையை மீட் பண்ணும் சாக்கில்.. அவள் வந்தும் கூட கணவனைப் பார்க்க முடியாது போனது.
அவள் ஏன் வேண்டாத கணவனைக் காண நினைக்கிறாள்? என்ற அவள் மனதின் கேள்விக்கு விடையில்லை. ஆயினும் முறைத்துக் கொண்டு பார்க்கவேனும் கணவன் முகம் அவளுக்கு வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டாள் அவள்.
அதேசமயம்.. இந்த ஒருவாரமாக அவள் தங்கை இந்திராவும் அடியோடு மாறிப் போனதை ஐஷூவும் பார்த்துக் கொண்டு தான் வருகிறாள். .
காலேஜுக்கு செல்லும் போது முன்பெல்லாம் ஒப்பனையற்று செல்பவள், தற்போதெல்லாம் ஒப்பனை அலங்காரத்துடன் செல்வதும், விதம் விதமாக பார்க்கும் போது சுள்ளென்று ஈர்க்கும் நிறத்தில் சுடிதார் அணிந்து செல்வதையும்,
அடிக்கடி ஃபோனையே டொக் டொக் என்று டைப் செய்தவாறு.. யாருடனோ சேட் செய்து கொண்டிருப்பதுவும் புரியவாரம்பித்து அவளுக்கு.
அன்றும் அப்படித்தான்.. நள்ளிரவு பன்னிரண்டுமணியை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க.. இன்னும் படுக்கைக்கு வந்து சேராமல்.. இந்து யாருடனோ சிரித்துச் சிரித்துக் பேசிக் கொண்டிருக்க,
தங்கை தூங்க வரும் வரை காத்திருந்தவள், இந்து வந்ததும் கேட்ட முதல் கேள்வி,
“யார் கூட பேசிட்டிருந்த..?” என்பது தான்.
“ஸ்ரீதர் மாமா கூட..!”- சற்றும் தாமதியாமல் பளிச்சென்று வந்தது பதில் இந்துவிடமிருந்து.
தங்கை இத்தனை நேரம் நள்ளிரவு தாண்டியும் பேசியது தன் கணவனுடன் என்றானதும் நறுக்கென்று உள்ளே ஏதோ தைத்த உணர்வு அவளுக்கு.
“ஸ்ரீதர் கூட.. இந்த நேரத்தில் உனக்கென்ன பேச்சு..?”- காட்டமாகவே கேட்டாள் ஐஷூ.
அதற்கு இந்துவிடமிருந்து வந்த பதிலில் கொஞ்சம் மலைத்துப் போனாள் பெரியவள். எப்போதும் அமைதிப் பேர்வழியாக இருக்கும் தன் தங்கை இந்து தானா இது? என்று கூட தோன்றியது அவளுக்கு.
பிள்ளைப்பூச்சிக்கு வாய் முளைத்த கதையாக சின்னவளும், “அது எனக்கும், அவருக்கும் இடையில் ஆயிரம் இருக்கும்.. அதைப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை.” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல மொழிந்தவள்,
மஞ்சத்தில் அமர்ந்ததும், வாட்ஸ்ஆப் நோட்டிபிகேஷன் ஒலி காதைப் பிளக்க, அதை ஆசையுடன் எடுத்துப் பார்த்த இந்து,
வாயெல்லாம் பல்லாக புன்னகைத்துக் கொண்டே தன் தமக்கையை நோக்கி,
“ஸ்ரீதர் மாமா தான்” என்றவள்,
செல்லை வாய்க்கு அருகில் வைத்து,மென்மையான ஆளை மயக்கும் இழையும் குரலில், “.. குட்நைட்… ஸ்லீப்டைட் மாமா.. காலையில பேசலாம்” என்று வாய்ஸ் மேஸேஜ் அனுப்பியவள், அந்த புன்னகை மாறாமல், தலை வரை பெட்ஷீட்டை இழுத்து மூடிக் கொண்டு தூங்க ஆயத்தமாக,
தூக்கம் தொலைய விதிர் விதிர்த்துப் போய் நின்றிருந்தாள் ஐஷூ.
தூங்கும் தங்கையை எழுப்பி, ‘என் புருஷன் கூட உனக்கென்னடி பேச்சு?’ என்று பிடரிமயிரைப் பிடித்திழுத்து தங்கையுடன் குடுமிப்பிடி சண்டை போட வேண்டும் என்னும் அளவுக்கு கோபம் எழுந்தது அவளுக்கு.
ஆயினும் தங்கை, இவளிடம், ‘ஸோ வாட்? நீ தான் மாமாவை வேணாம்னு டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டேல்ல? அப்புறம் உனக்கெங்கே வலிக்குது?’என்று கேட்டு நோஸ்கட் செய்து விட்டால் என்று தோன்ற,
தன் கைகளை பிசைந்து கொண்டு, தனங்கள் ஏறி இறங்க மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றாள் அவள்.
அந்நொடி… “பொஸஸிவ்னெஸ்” என்றால் என்ன? அது ஒருவருக்குள் என்ன மாதிரியான உணர்வுகளைக் கொடுக்கும்? என்பதை அனுபவித்துக் கொண்டிருந்தாள் ஐஷூ.
அதேசமயம் தன் தலைவனுக்கும், இவள் அர்ஜூன் பற்றிய பேச்சை எடுத்த நேரமெல்லாம் இப்படித்தானே உள்ளுக்குள் ஜிவுஜிவு என்று பற்றி எரிந்திருக்கும் என்று மூளைக்குள் மின்னல் வெட்டினாற் போன்று ஒரு விஷயம் மின்னி மறையலாயிற்று.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *