பொன் அந்தி சாயல் நீ! 3
வீடு வந்ததும் ஆரத்தி ஆலம் கரைத்து ஊற்றி… அவனுக்கு வெளிநாடு சென்று திரும்பி வந்ததற்கான.. த்ரிஸ்டி கழிக்கும் விதமாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி..
அசைவ உணவுகளை முழுவதும் சமைத்த சுமித்ரை… அன்று முழுவதும் மகனை தன்னை விட்டு அகல ஒரு நிமிடம் கூட அனுமதிக்கவில்லை…
தங்கை உமையாளும் அண்ணனின் அருகிலே அன்று முழுவதும் சுற்றிக்கொண்டு… இருந்தவள் தாய் விரட்டியதும் தனது தோழிகளுடன் வெளியில் சென்று விட்டாள்…!
மாலை மங்கும் நேரம்… பலகார தட்டோடு வந்த சுமித்ரை தன் பெரிய மகனின் அருகில் அமர… இளா எதுவோ பேச தயங்குவது போல் இருந்ததை தாயுள்ளம் கண்டுகொண்டது…
“பெரியவனே.. அம்மை கிட்ட என்ன கேக்கோனும்.. கேளுங்க அப்பு… அம்மைகிட்ட என்ன தயக்கம் உங்களுக்கு…. ?” தன் மகனின் தலை கோதியவாறு கேட்க…
தலை கோதும் அவரது விரல்களை அப்படியே தன் கையால் பிடித்துக்கொண்டு… “இல்ல மோ… அப்படி உன்றகிட்ட தயக்கம் காட்ட எனக்கு என்ன இருக்கப்போவுது… ”
மகனது பேச்சு ஒன்று சொன்னாலும் அவனது கண்கள் வேறு கதை சொல்ல… “சரி அப்பு இந்த அம்மாகிட்ட மறைக்கோணுமின்னு முடிவு பன்னிட்டீய பொறவு நா உருண்டாலும் பொராண்டாலும் உண்மையை சொல்லவா போறீக…
சரி அப்பு நா போறேன் நீங்க பலகாரம் சாப்பிடுங்க…” சொல்லிவிட்டு எழுந்து போக முயற்சிக்கவும்…
தனது வருத்தமான முகம் தாயை கலவரப்படுத்துவது பிடிக்காமல்….
“எம்மோவ் சுமித்ரை… உன்ற மொவன் ஒன்னும் வருந்தலை புரியுதா… வூட்டுக்குள்ளாற.. மொட்டு மொட்டுன்னு உக்காந்துருக்க ஒரு மாதிரி இருக்கு… செத்த காலாற நடந்துட்டு வரலாமின்னு கேக்க தான்மோ கூப்புட்டேன்..
அதுக்குள்ளார நீ பாட்டுக்கு என்னவோ ஏதோணு கற்பனையில் பேசுற… இந்த டிவி ல போடுதானுவொலே நாடகம் அதெல்லாம் பாத்து நீ ரொம்ப சிந்திக்கிற…..
இப்போ நான் செத்த ஊருக்குள்ள போய்ட்டு வாரேன் சரிதானே…. ” சுமித்ரையின் கன்னத்தில் தட்டி விட்டு தன் கேமராவை கையில் எடுத்துக்கொண்டு வேகமாய் துள்ளளோடு வெளியேறிவிட்டான்….
அவனது இந்த துள்ளல் நிலைத்து அவன் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென தன் குலசாமி கருப்புக்கு வேண்டுதல் வைத்தபடி தன் மாமியாருக்கு பலகாரம் கொடுக்க சென்றார் சுமித்ரை…!
வீட்டை விட்டு வெளியேறிய இளாவின் கால்கள் நேரே சென்றது… அந்த ஊரின் ஆற்றங்கரையில் இருக்கும் நாலு கால் மண்டபத்திற்கு…
அவன் படிப்பிற்காக வெளிநாடு சென்று திடும்பிய இந்த பத்து வருடத்தில் அந்த மண்டபம் சிதிலமடைந்து இருக்கும் என்று எண்னும்போதே அவனது மனதில் கலக்கம் உண்டாக….
அவனது நடையின் வேகம் மெதுவாக குறைந்தது… வீட்டில் இருந்த துள்ளல் குறைந்து… சோர்வான மெல்ல நடை நடந்து அந்த மண்டபத்தை நெருங்கியவன் திகைத்தான்….
அந்த மண்டபத்தை சுற்றி அழகுற சுத்தம் செய்யப்பட்டு… சிறிதாக கை வேலி போடப்பட்டு… வேலிகளில் ஓரங்களில் அரளி மலர்கள் விதவிதமாக பூத்து குலுங்கி நின்றன…
அந்த நான்கு தூண்களிலும் மாடங்களில் அழகுற கண்ணாடிக்குள் அகல் விளக்குகள் ஒளி வீசின….மண்டபத்தின் நடுவில் சிறிதாக ஒரு விநாயகர் சிலை மாலையிட்டு… அலங்காரத்தோடு அழகாய் காட்சியளிக்க….
அங்கிருந்த விதவிதமான கோலப்பொடிகள் இவற்றை தினமும் யாரோ ஒரு பெண் பராமரிப்பது குறித்து கட்டியம் கூற… யாராயிருக்கும் என்று சிந்திக்க துவங்கினான் இளா..
அவ்விடம் சென்று நின்ற இளா அந்த மண்டபத்தை சுற்றி சுற்றி விதவிதமாக தனது காமெரா கொண்டு படம் பிடித்து கொண்டிருந்த வேலை… ஜல் ஜல் என்ற கொலுசொலி காற்றில் மிதந்து வந்து அவன் காதுகளை எட்டியது…
யாராய் இருக்கும் என்று சுற்றிலும் பார்வையை படர விட்டவன்… முழுதாய் தன்வசம் இழந்தான்….!
பாதங்களை அழுத்தி நடந்தால் பூமிக்கு நோகுமென.. அண்ணாநடையிட்டு… கால்கொழுசு ஒளி கவிதையாய்.. தாளமிசைக்க… ஜல்.. ஜல்… கொலுசொலியோடு…
முன்னாள் விழும் புடவையின் கொசுவத்தை தன் கைவிரல்கள் கொண்டு பிடித்துக்கொண்டு… பொய்யோ என்னும் அளவு இடை கொண்டு… எலுமிச்சை வண்ண இடை சிறிதாய் விலகிய புடவையால் பளீரிட….
கணித பாரபோலாக்கள் தோற்கும் இடையின் வனப்போடு… பஞ்சமிகு இடத்திற்கு.. மேல்… பஞ்சமில்லா வஞ்சி தனங்களோடு…
அந்த பளீர் சிகப்பு நிற மேலாடையில் குளித்ததற்கு அடையாளமாய் நீரில் சிறிது ஈரம் படர்ந்திருந்த அவளது முதுகு சலவைக்கல் போல மின்ன…!
இளா இந்த இளம் கன்னியின் வதனத்தில் தன் மனதை தொலைத்தான்… அவளது மைஊதா நிற புடவை அவளது நிறத்தை மேலும் எடுத்துக்காட்ட…தேவலோக கன்னி போல ஜொளித்தாள்… அவள்..!
அவன் நின்ற இடத்தில் இருந்து அவளது முகம் தெளிவாக தெரியாமல் போக… மெதுவாய் அங்கிருந்த மரத்தின் பின்னால் நகர்ந்து வந்து நின்றவன் மரம் போல வேரோடி போனான்…
அவளது முகம் பார்த்து…!
வட்ட முகத்தில் வந்து விழுந்த சுருள் கூந்தல் அவளது கன்னங்களின் செழுமையில் நர்த்தனம் ஆட… தலையின் கூந்தலில் கட்டி இருந்த பூந்துவாளை யில் அடங்காமல் அவள் முன் நெற்றியில் வந்து புரண்ட கேசம்…
அவளது இமைக்குடைகளின் மீதில் உலாவ.. அதனை கைகளால் விலக்கி விட்டபடி அந்த வண்ண பொடிகளை வைத்து அழகான கோலம் வரைந்து கொண்டிருந்தாள்…அவள்..!
உன் கார்குழலிடம் கூட.. போர் புரிய தோணுதடி..
உன் பளிங்கு முகம் மறைப்பதால்…!
என் பவழக்கொடியே…!
அவசர கவிதை கூட தோன்றியது அந்த இளம் வாலிபனுக்கு…!
பிறைநிலவு போன்ற நெற்றியில் அவள் வைத்திருந்த வட்ட பொட்டு நிலவின் கறை போல.. வீற்றிருக்க… அந்த கூர்மையான மூக்கின் வெள்ளை மூக்குத்தி வைரம் தோற்கும் பொன்னொளி கொண்டு மின்ன… அவள் இளம் ரோஜா வண்ண சாயமில்லா உதடுகளில் தவழ்ந்த குரும்சிரிப்புக்கு…
தன் குலத்தையே… பட்டயம் எழுதி கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டான்.. இளா…!
திடீரென இளா சாய்ந்திருந்த அந்த மரத்தின் கிளையில் இருந்து எறும்பு ஒன்று அவனது கையில் கடித்துவிட… அவனது ஸ்… என்ற சிறு சத்தம் அவளை எட்டியது போல… சடக்கென்று திரும்பி பார்த்தவளின் மை தீட்டிய அஞ்சனங்கள் மறுண்ட பார்வை பார்க்க…
விழிகள் விரிக்காதே அடி பெண்ணே…
கடலின் ஆழம் நீந்துபவன்…
உன் கண்களின் ஆழத்தில் மூழ்கி போகிறேன்…
என்று அவனது மனம் மீண்டும் கவிதை படிக்க… அவளை தன் காமிராவில் அழகாக படங்கள் பிடிக்க துவங்கிவிட்டான் இளா…
விதவிதமாக அவளுக்கு தெரியாமல் படம்பிடித்துக்கொண்டே இருந்தவன்… கடைசியாக அவள் விநாயகரிடம் கை கூப்பி வேண்டி நிற்பதை படம் பிடிக்க… அவளது கண்களில் இருந்து உருண்டு விழுந்த இரு துளி கண்ணீர் அவனது காமிரா மூலம் தெரிய…
தன் காமெராவை அவள் முகத்திற்கு ஜூம் செய்து பார்க்க.. அவளது கைகளில் இருந்த பொருளை பார்த்தவன்… எப்படி உணர்ந்தான் என்று விவரிக்க முடியா அளவு… விண்ணில் பறந்தான்….
அந்த மகிழ்ச்சியில் தான் நின்ற இடத்தில் இருந்து துள்ளி குதிக்க… தொப்பென்று கேட்ட சத்தத்தில்… அவள் பயந்து.. துள்ளி எழுந்து அவ்விடம் விட்டு வேகமாக ஓட….
அவனது பயங்கரமான நகைப்பொலி அவளுக்கு பின்னால் இருந்து கேட்க… ஆளில்லா இடத்தில் கேட்ட நகைப்பொலியில் அரண்டு போய்.. ஓடினாள் அவள்… அவள் பொன்னு @ மதுரயாழினி….!
இளாவுக்கு இருந்த மகிழ்ச்சியில் அங்கிருந்த மண்டப தூண்கள் முதல் மரம் செடி கொடியை கூட முத்தமிட்டு கட்டி அணைத்து அவ்விடத்தில் முழுவதுமாய் கும்மாளம் அடித்தான்….
அங்கு அவனது நகைபொலியில் எதுவோ காத்து கருப்பு என்று பயந்து ஓடியவள்… தன் வீட்டிற்குள் சென்று தனது அறையில் முடங்கினாள்…
அவளை பார்க்கவென்று வந்த தெய்வானை அவளது வெளிறிய தோற்றம் கண்டு… மகளுக்கு என்னவோ ஏதோ என்று பயந்து… திருநீறு பூசிவிட…. சில மணி நேரத்தில் அவளுக்கு காய்ச்சல் கண்டு உடல் தூக்கி தூக்கி போட்டது…
இவளது திருமணத்திற்கு வேண்டி மொத்த ஜவுளி நகைகளை வாங்க சென்றிந்த குடும்பத்தினர் வேறு இல்லாமல் தெய்வானை மிக பதட்டமாக… வாயில் புறம் வந்து அவர்கள் வருகிறார்களா என்று நொடிக்கொருதரம் வந்து வந்து பாதையை பார்த்துக்கொண்டு இருந்தார்..
வீட்டில் யாருக்கும் உடல்நிலை சரி இல்லாத போது உடனுக்குடன் வேலை ஓடாது சிலருக்கு… அந்த நிலை தான் தெய்வானைக்கு.. என்ன செய்வது என்று திகைத்து … அலைந்து கொண்டிருந்தார்…!
அங்கு தனது கும்மாளம் முழுவதையும் முடித்துவிட்டு.. இரவானதும் வீடு திரும்பலாம் என்று எண்ணிய இளா.. அந்த மச்சு வீட்டை பார்க்கவேண்டும் என ஆவல் எழ… அவள் வீட்டின் வழியாக தனது காரில் வந்து கொண்டிருந்தான்…
அப்படி வரும் வழியில் அவள் எங்காவது தென்படுகிறாளா என்று நோட்டம் விட்டபடி மெதுவாக தனது காரை செலுத்திக்கொண்டிருக்க.. மச்சு வீட்டில் தெய்வானை வாசலுக்கும் உள்ளுக்குள்ளும் அல்லாடுவது தெரிந்தது..
என்ன வென்று கேட்கலாம் என்று எண்ணி.. அவர்கள் வீட்டின் வாயில் அருகே காரை நிறுத்த… தன் வீட்டு ஆட்கள் தான் வந்துவிட்டனரோ என்று வெளியில் ஓடி வந்தார் தெய்வானை….
இவனது காரை பார்த்ததும்.. யாரோ வேறு ஒருவர் என்று.. திரும்ப போக போகும் நேரம்… இளா காரில் இருந்து
“ஐத்தை என்ன இந்நேரம் வூட்டுக்குள்ளாறயும் வாசலுக்கும் அல்லாடுறீய? எதுனா அவசரமோ? ” என்று வினவ….
“இல்லிங்க தம்பி… என்ற மொவளுக்கு காச்சல் அனலா கொதிக்குது… வூட்டாலுக வேற வெளிக்கெளம்பி போயிருக்காவ….. ஆரும் இல்லா சமயம் பிள்ளை காச்சலுல விழுந்துட்டு….. அத்தேன் அவுக வாராகளான்னு தவிக்கிதேன்..”
என்று சொல்லிவிட்டு… “நீங்க ஆரு தம்பி… புதுமொகமா இருக்குரீய… ஆனா பழக்கப்பட்ட ஜாடையா இருக்கிறாப்ல தோணுது… ?” கேட்டதும்
இளா”என்ன ஐத்தை என்ன தெரியலையா? நான் தான் மாதையன் சுலோக்சனம்த்து மூத்த பேரன்.. இன்னிக்கி தான் படிப்பு முடிச்சு ஊருக்கு வந்தேன்… ” என்று தனது தாத்தா பாட்டி பெயரை சொல்ல…
தெய்வா.. “அட சுமித்ரை அண்ணமண்டி மகனா.. எம்புட்டு வழந்துட்டீய அதேன் அடையாளம் தெரியல.. வூட்டுக்கு வந்துட்டு ஒரு வாய் காபி பலகாரம் சாப்பிட்டு போங்க தம்பி என்று அழைக்க…
கரும்பு தின்ன கூலியா என்பதுபோல… ” நம்ம வூட்டுக்கு எண்ணிய நீங்க அழைக்கணுமா ஐத்தை.. இதோ வாரேன் என்று காரில் இருந்து இறங்கி உள் சென்றான்… சென்றவன் கண்கள் அங்கிருக்கும் அனைத்து அறைகளையும் அலசி மீள…
“தம்பி ஆரும் வூட்டுல இல்லப்பு… எல்லாரும் பொன்னு கண்ணாலத்துக்கு ஜாமன் ஜட்டு வாங்க போயிருகாவ… இன்னேரம் பார்த்து இவ காச்சலை இழுத்து வெச்சுருக்கா..” என்று கூறிவிட்டு…
“தம்பி அப்பு ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்திருங்க.. ஐத்தை சூடா காபி பலகாரம் கொண்டு வாரேன் என்று சொல்லிவிட்டு அடுபங்கறைக்கு சென்றுவிட… இவனுக்கு வசதியாக போனது…
காய்ச்சல் கண்டவளை பார்க்க தூண்டிய மனதை தடுக்க இயலாமல்… மெதுவாக “ஐத்தை நான் செத்த வீட்டை சுத்தி பாக்கலாமா.. என்று குரல் கொடுக்க.. ”
தெய்வானை அடுப்படியில் இருந்து அதுக்கென்ன தம்பி… “நம்ம ஊட்ட பாக்கிறதுக்கு ஐத்தைக்கிட்ட கேக்குதீய… போங்க தம்பி நான் அங்கனவே பலகாரம் கொண்டுவாறேன்..” என்று சொல்லிவிட..
மெதுவாக நகர்ந்தவன்.. திறந்திருந்த ஒரே ஒரு அறையை பார்த்தான்… அதுதான் அவளது அறையாக இருக்கும் என்று எண்ணி… மெதுவாக உள்ளே நுழைந்தவனுக்கு ஏகத்துக்கும் சிரிப்பு….
உள்ளுக்குள் கட்டிலில் சாமி கும்பிடும் போஸுல்.. குப்புற முட்டிக்கால் போட்டு படுத்து போர்வைக்குள் சுருண்டு நடுங்கிக்கொண்டிருந்தாள் பொன்னு….
இவன் கொஞ்சம் உரத்து சிரித்துவிட… அந்த மண்டபத்தில் கேட்ட சிரிப்பொலி இங்கும் கேட்கவும் அவள் அடித்து பிடித்து நடுங்கிய வண்ணம் “கருப்பு… கருப்பு.. எண்ணிய காப்பாத்தி உற்று…” என்று தான் குலதெய்வதிடம் வேண்டிக்கொண்டே முணுமுனுபோடு… எழுந்து அமர்ந்தாள்..
எழுந்தவளின் முகம் முழுதும் ரத்தப்பசை இன்றி வெளிறி போய் இருக்க.. அதிர்ந்து விழித்தவள் தனது அறையில் அன்னிய ஆடவனை பார்த்து கத்த வாய் திறக்கும் நேரம்… இவன் பாய்ந்து சென்று அவளது வாயை தன் கையால் மூட…
அவளது கைகளை கொண்டு அவனது கைகளை பிரித்து விட… இவன் தன் கைகளை கொண்டு அவளது கரங்களை சிறைபிடிக்க… இப்போது மீண்டும் அவள் கத்துவதற்கு வாய் திறக்கும் நேரம் தன் முரட்டு இதழ்கள் கொண்டு அவளது வாய் மூடி இருந்தான் இளா…
அதிர்ந்து விரிந்த அவளது விழிகள் இன்னும் இவனை சூழலுக்குள் இழுக்க… இன்னும் இன்னும் வேண்டும் போல் இருந்த இதழ் பூக்களை… முழுதாய் தின்பவன் போல உயிர் உறிஞ்சினான்…
மூச்சுக்கு இடைவெளி விட்டால் கூட அவள் கத்த கூடும் என்று கள்ளசாக்கு வைத்து இடைவிடாமல் முத்தத்தில் திளைத்தவன்….!
அவள் காய்ச்சலினாலும் இந்த அதிர்ச்சியாலும் தொய்ந்து மயங்கியதும் தான் அவளை விட்டான்… அவளை மெதுவாக படுக்கையில் விட்டவன்… அவளது மயக்கத்தை போக்க….
சிறிது தண்ணீர் எடுத்து அவளது முகத்தில் தெளிக்க..! அவள் சிறிதாய் முனங்கினாள்… பின்பு அவள் காதோரம் குனிந்த இளா….
கனிந்த குரலில்.. “நீ அம்புட்டு அழகு டி… உன்ன தூக்க இந்த மதுரைவீரன் வந்துட்டேன் டி என் பொம்மி… ” என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக விலகிச் சென்று பின்கொட்டகை பக்கம் நின்று கொண்டான்….!
அந்தி புலரும்..!
