1-என் மழை மேகமாய் நீ ஆகினாய்..

1-என் மழை மேகமாய் நீ ஆகினாய்

1-என் மழை மேகமாய் நீ ஆகினாய்..

1-என் மழை மேகமாய் நீ ஆகினாய்..


 1-என் மழை மேகமாய் நீ ஆகினாய்..

 

நம் உடம்பில் மட்டுமல்ல மனதிலும் பலவித ரசாயன  வேதியியல் மாற்றங்கள் நிகழும் பருவம், எதிர் பாலினத்தை காந்தம் போல ஈர்க்கும் பருவம், அழகும் அறிவும் ஒருங்கே போட்டி போடும் பருவம்,  உடலும் மனதும் இளமையை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் பருவம் டீன் ஏஜ் பருவம்…

 எதிர்காலத்தைப் பற்றி எந்த கவலையும் படாமல் மகிழ்ச்சியை மட்டும் மனதில் வைத்து துள்ளித்திரியும் காலம் இது… 

 பள்ளிப் பருவம் வரை  நமது எண்ணங்கள் வேறு விதம், கல்லூரிப் பருவத்தில் நமது எண்ணங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதோடு அல்லாமல்  மனம் வானில் சிறகடித்துப் பறக்கும் காலம்….

 ஆடை அலங்காரம் முதல் எதிர் பாலினத்தை சைட் அடிப்பது வரை கவனத்தோடும் நேர்த்தியாகவும் ரசனையோடு செய்யும் பருவமிது…

 இந்த பட்டாம்பூச்சி பருவத்திலிருந்து தான் நம் நாயகர்களின் வாழ்க்கையும் ஆரம்பிக்கிறது..

இரண்டாம்  வருட இங்கிலீஷ் லிட்டரேச்சர் வகுப்பில்…

 பிரின்ஸ்பலின் அட்டெண்டர் வந்து, ஆவ்யா மானசா  யாரும்மா பிரின்ஸ்பல் கூப்பிடுறாங்க வாங்க என்று அழைத்தார்..

இதோ வரேன் அண்ணா என்று எழுந்து செல்லும் நம் நாயகியை பற்றி சில வரிகள், இவ்வளவு உயரம் இவ்வளவு அழகு என்றெல்லாம் அதிகப்படியான வர்ணனை எதுவும் தேவையில்லை இவளுக்கு…

 சாதாரண குடும்பத்து பெண்…

 சற்று சிவந்த நிறம், இயற்கையாகவே அனைத்தும் திருத்தமாக இருக்கும் முக வடிவமைப்பு, சற்று பூசின உடல் வாகு கொழுக்மொழுக்கென்று ,  உயரம் கூட சற்று குறைவுதான் …

மொத்தத்தில் நம்மை போன்ற சாதாரண குடும்ப பெண்..

அதனால்தான்,  என்னவோ ஏதோவென்று நினைத்து நடுங்க  முகத்தில் பயரேகை அப்படியே தெரிந்தது..

பிரின்ஸ்பல் கூப்பிட்டார் என்றால் ஏதாவது பிரச்சினையா நான் அப்படி பிரச்சினையாகுமளவு  எதுவும் பண்ணலையே??..

  பலவித எண்ணங்கள் மனதில்  தோன்ற, ஓட்டமும் நடையுமாக  பிரின்ஸ்பல் ரூமை நெருங்கும் பொழுது சித்தியும் தந்தையும் பேசும் குரல் கேட்டது…

அய்யய்யோ இவங்க  எதுக்கு இங்க வந்துருக்காங்க அதுவும் குரல் உயர்த்தி பேசிட்டு இருக்காங்களே என்னன்னு தெரியலையே? கடவுளே விநாயகா காப்பாத்து என்று வேண்டியபடியே,

 ” மே ஐ கம் இன் சார்”

“உள்ள வாங்க மா”

 “வந்துருக்கா பாருங்க அமுக்குனி ஒன்னும் தெரியாத  பச்சை புள்ளை மாதிரி இருந்துட்டு எவ்வளவு பெரிய வேலை பண்ணிருக்கா”??

“இவலயெல்லாம் தோல உரிச்சு உப்புக்கண்டம் போடணும் அப்பத்தான் இவ ஆட்டமெல்லாம் அடங்கும்” என்று சரமாரியாக சித்தி திட்டி தீர்த்தாள்..

எதற்கும் மறு மொழி பேசாது இவளையே முறைத்துக் கொண்டு நின்றார் தந்தை…

ஏதும் புரியாமல் விழி பிதுங்கிய நிலையில் மகள்!!

“என்னமா இது? இப்படி எல்லாம் போட்டோ எடுத்ததோட இல்லாம அதை உங்க வீட்டுக்கும் அனுப்பிவச்சிருக்கீங்க, நல்ல பொண்ணு  என்று நினைச்சிருந்தேன் இவ்வளவு கேவலமாகவா பிஹேவ் பண்ணுவீங்க??.. 

உங்கள இப்ப காலேஜ்லருந்து சஸ்பெண்ட் பண்ணுகிறேன்.. இந்த விஷயத்தை சுமூகமாக முடிச்சதுக்கப்புறம் நீங்க காலேஜ்ல திரும்ப சேருவதை பற்றி பின்னர் மேனேஜ்மென்ட் முடிவுசெய்யும்..

 இப்ப நீங்க உங்க அம்மா அப்பா கூட போங்க இந்தாங்க உங்களோட போட்டோஸ்” என்று கோபமாகவும் கறாராகப் பேசிய பிரின்ஸ்பல்  “மாரியப்பன் இவங்களை என்ன பிரச்சனை என்றாலும் காலேஜ் கேம்பஸ் வெளியில வச்சுக்க சொல்லுங்க இப்போ நேரா அவங்கள கேட்டுக்கு வெளிய  போய் விட்டுடுவாங்க இடையில் யார்கிட்டயும் பேச கூடாது ” என்றும் உத்தரவிட்டார்..

அப்படி என்ன அந்த போட்டோவில் இருக்கிறது?? எல்லாரும் இந்த சீன் போடறாங்க  என்று ஆர்வம் கொப்பளிக்க சுற்றுப்புறம் மறந்து அதை எடுத்துப்பார்த்தாள் வியா…

 அருவெறுப்பு தாங்காமல் அப்படியே கீழே விட்டு விட்டாள் தலை சுற்ற தொடங்கியது…..

“இந்த நடிப்பெல்லாம்  நம்புவதற்கு வேற ஆள பாரு டி… குடும்ப மானத்தையே கூறு போட்டு வித்துட்டு இப்போதும் நடிக்காத…

 இப்ப  நேராக நாங்க போலீஸ் ஸ்டேஷன் தான் போக போறோம் வா போலாம்” என்றபடி அவளை புழுவைப்போல  பார்த்த படி கூறினார் சித்தி..

கண்கள் குளமாகி விட்டது வியாவிற்கு ..

 “இதை நான் பண்ணவில்லை அப்பா…எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை போலீஸ் ஸ்டேஷன் என்ன எங்க வேணாலும் சொல்றதுக்கு நான் தயார் வாங்க போகலாம்”… என்று தைரியமாக இவர்களுடன் செல்லும் வியாவின் வாழ்க்கையும் அங்கிருந்து பெரிய  யு டர்ன் எடுத்து மாறப்போகிறது என்பது பாவம் அவளுக்கு தெரியாது..

தெரிந்திருந்தால் சென்றிருக்க  மாட்டாளோ என்னவோ? ஆனால் என்றுமே  விதி வலியது தானே… 

 போலீஸ் ஸ்டேஷனில்,

“இத பாருங்கம்மா இது பெண்கள் விஷயம் சாம்பந்தமான புகார் என்பதால்,  இதை பக்குவமாக டீல் பண்ணனும் என்று கமிஷனரே பாத்துக்கரதா சொல்லி அங்க வரச்சொல்லியிருக்காரு…

இப்ப எல்லாரும்  கமிஷனர் ஆபீஸ் போலாம் வாங்க” என்று இன்ஸ்பெக்டர் இவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்…

எக்கச்சக்கமான கூட்டம் அங்கு ஏதோ அரசியல் கட்சி  மீட்டிங் போல வெள்ளையும் சொள்ளையுமா பல பேர் அங்கு நின்றிருந்தனர் அனைவரையும் தாண்டி ஜீப் பில்டிங் பின்வாசல் சென்றது…

” வாங்கம்மா” என்றபடி ஒரு அறைக்கு அழைத்துச் சென்று வியா வை மட்டும் மட்டும் ஒரு தனி அறையில் அமரச் சொல்லி இருந்தனர்..

கமிஷனர் அறையில் பலவித பேச்சுக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன…

அங்கு கமிஷனர் போக ஒரு நாலைந்து பேர் அப்புறம்   முக்கியமாக ஒரு நபர் அமர்ந்திருந்தார்…

பல விவாதங்களுக்கு பின் வியாவியின் பெற்றோர்களை  வரவழைத்து பேசினார்கள், அதுவும் சரி வராததால் வியாவை அழைத்து வரச் சொன்னார் கமிஷனர்..

 வந்தவளை அவர் அருகில் இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னார்   எந்த பயமும் இல்லாமல் சென்று அமர்ந்தவள் அனைவரையும் நோக்கி தன் பார்வையைச் சுழல விட்டாள் ஆராய்ச்சியாய்…

ஒரு ஜோடி கண்கள் மட்டும் இவளை பார்த்து எந்த ரியாக்சனும் கொடுக்காமல் அசால்டாக இருந்தது..

கமிஷனர் பேச ஆரம்பித்தார்,

“இங்க பாரும்மா இந்த போட்டோல இருக்கிறது நீயும் அந்த தம்பியும் தானே”??

“ஆமாம் சார்”..

“உங்க வீட்டுக்கும் அவருடைய வீட்டுக்கும்,மேலும் உங்க கல்லூரிக்கு  அது மட்டும் இல்லாம இங்க கமிஷனர் ஆபிசுக்கும் என்று எல்லா இடங்களுக்கும் இந்த படங்கள் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டுருக்கு.. இதை செய்தது யாருன்னு தெரியுமா”??

“தெரியாது சார்”….

” இத சும்மா விட முடியாது  மா, யார் அனுப்பினா எதுக்கு அனுப்பினா  என்பது மட்டும் தெரிந்தால் அவன் நிலைமை என்ன வென்று தெரியுமா”??

“தெரியாது சார்”….

” ஒருவேளை யாராவது உங்களை பழிவாங்கும் நோக்கத்தில் இப்படி  அனுப்பினார்களா” ?

“தெரியாது சார்”..

“பல  சந்தேகங்கள் பல கேள்விகள் எங்களுக்கு இருக்கு ஆனா அவரை விசாரிச்சதுல அவருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றாரு…

 நீயும் அது போல தான் சொல்லுவ உன்னை யாருன்னே தெரியாது என்றும் சொல்கிறார், நீ என்ன சொல்ற?

 உங்க அம்மா அப்பா முறையா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க,மேலும்  இங்க சரியான நியாயம் கிடைக்கலன்னா மீடியாவுக்கு போவேன்னு சொல்றாங்க..

 இந்த விஷயத்தை பெருசு பண்ண  இங்கே யாரும் விரும்பல இப்ப நீ என்ன சொல்ற உன் தரப்பு விளக்கம் என்ன?? இது  இங்கு ரொம்ப முக்கியம், தைரியமா யாருக்கும் பயப்படாமல் சொல்லு உனக்கு பாதுகாப்புக்கு நாங்க இருக்கிறோம் சொல்லு மா”.. 

“எனக்கு இதுல பயமெல்லாம்  இல்ல சார், அந்த போட்டோவில் இருப்பது அனைத்தும் உண்மை…

 நானும் அவரும் லவ் பண்றோம் சார், இதெல்லாம் நாங்க எடுத்த செல்ஃபி போட்டோஸ்  தான்…

ஆனா அதை நான் அனுப்பல அவர் மொபைலில் தான் இந்த போட்டோவை எல்லாமே எடுத்தோம் அதெல்லாம் எப்படி  வெளியே வந்தது என்று தான் தெரியல சார்”…..

வியா கூறியதுதான் தாமதம் அவளை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு ஒரு பக்கம் குற்றம் சாட்டப்பட்ட அவன் வர, அவள் தந்தையின் கை ஏற்கனவே இறங்கி இருந்தது அவன் கன்னத்தில்..

“சார் என்ன பண்றீங்க? இதெல்லாம் இங்க ஸ்டேஷனில் வைத்து பண்ண கூடாது நாங்க தான் விசாரிக்கிறோம் இல்லையா அதுக்குள்ள நீங்க ஏன் அவசரப் படுறீங்க முதல்ல உட்காருங்க”..

ஒருவழியாக வியாவின் தந்தையை சமாதானம் செய்து, கையில் ஓங்கிக் கொண்டு வந்த அவனிடமும் சமாதானம் பேச அவர் திரும்ப அதற்குள் அவன் அடியும் இடியாய் இறங்கியது இவளது மற்றொரு கண்ணத்தில்..

அடி வாங்கியும்  அழாமல் அவனை ஒரு நேர் பார்வை மட்டும் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டாள் வியா..

(வாய்கிழிய ஓயாம தகர டப்பா மாதிரி  பேசுவா இப்ப எதுக்கு இப்படி அமுக்கு னி   மாதிரி கமுக்கமா இருக்கான்னு தெரியலையே..

 என் உசுர வாங்க வந்திருப்பாளோ என்னை கேவலப்படுத்தவே  இப்படி ஒரு திட்டம் போட்டாலான்னும் புரியலையே ?? என்னைய வே  மண்டைய பிச்சிக்கிற அளவுக்கு அலைய விட்டுட்டாளே இது எல்லாத்துக்கும் சேர்த்து இருக்குடி உனக்கு, என மனதில் கருவினான்..)

” தம்பி நீங்கள் உக்காருங்க எதுவா இருந்தாலும் பேசி தீர்க்கலாம்.. அதை விட்டுட்டு யாரும் என் முன்னாடி இந்த மாதிரி பண்ணாதீங்க நானும் தேவையில்லாம  கோபப்பட வேண்டியதிருக்கும் என் பேச்சுக்கு மதிப்பு தருவதாக இருந்தால் உட்காருங்க” என்று காட்டமாக மொழிந்தார் கமிஷனர்..

“ஏம்மா நீ உண்மையாகத்தான் சொல்றியா”?

“ஆமா சார்!!  சாமி சத்தியமா உண்மை சார் அவரு அவங்க குடும்பத்துக்கு பயந்து உண்மைய ஒத்துக்க மாட்டேன் என்கிறார் சார்..

 ஒரு ரெண்டு மூணு நாளைக்கு எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க சார்” என்று கேட்டவளின் குரலில்    எந்த நடுக்கமும் இல்லை தீர்க்கமாகவும் தீர்மானமாகவும் கூறினாள்..

 அவளின் உடல் மொழிகளையும் பிசிறில்லாத  குரலையும் நேர்கொண்ட பார்வையும் பார்த்தவர், “சரிம்மா நீ மறுபடியும் அதே ரூம்ல வெயிட் பண்ணு ஒரு முடிவு பண்ணிட்டு உன்னை  கூப்பிடுகிறோம்” என்றவாறு அவளை அனுப்பிய பின் அவளது பெற்றோரையும் அது போலவே அனுப்பிவிட்டு அங்கு அமர்ந்திருந்தவர்களோடு விவாதத்தில் ஈடுபட்டார்..

இறுதியில்,” இந்த பொண்ண கூட்டிட்டு போயி எங்க ஊர்ல கல்யாணம் வச்சிக்கிறோம் சார் இதோட இந்த பிரச்சினையை முடித்துக்கலாம்” என்று அவனின் அப்பா சொல்லிவிட்டார்..

“அப்பா நான்  உங்களை எதிர்த்துப்பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க பா எனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..

 ஏன் இந்த பொண்ணு இப்படி பொய் சொல்றதுன்னு எனக்கு தெரியல தயவு செய்து கொஞ்சம் முறையாக   விசாரிக்கச் சொல்லுங்கள் பா..

 அவளும் வந்து எனக்கும் இந்த போட்டோக்கும் சம்பந்தமில்லைனு சொல்லுவான்னு   நம்பித்தான் நான் அமைதியாக இருந்தேன் இந்த மாதிரி திரிச்சு பேசுவான்னு நான் என் கனவுல கூட எதிர்பார்க்கலை.. உங்க வளர்ப்பு என்னைக்கும் தப்பாகாதுங்கப்பா என்ன நம்புங்க”..

எவ்வளவு மன்றாடியும் அவனது பேச்சு அங்கு எடுபடவில்லை.. மேலும் அவன் தந்தையும் அவனிடம்  பேசுவதாய் இல்லை…

நொந்துபோய் மனதில் இது மிகப் பெரிய ரணமாக மாறி இப்பொழுது அவளை பழிவாங்க துடித்தது…

“சரி சார் நல்ல முடிவு எடுதுருக்கீங்க  அப்படியே பண்ணுங்க, ஆனா அந்த பொண்ணு வாய்விட்டு கேட்டதனால் அது வரைக்கும் அந்த பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுத்துதான் ஆகணும் இப்போ என்ன பண்ணலாம் சொல்லுங்க”?

“இரண்டு போலீஸ்காரர்கள் கூட  அந்த பொண்ணை எங்க கூட அனுப்பி வைங்க சார் கல்யாணம் முடிஞ்சப்புறம் அவங்க திரும்பி வரட்டும் ஆகும் செலவை  நான் பாத்துக்குறேன்” என்று அவன் தந்தை தன்மையாய் கேட்டார்..

 சரி என்று முடிவு செய்து  வியாவின் பெற்றவர்களிடம் கேட்க,” எப்ப இப்படி ஒரு செயல் அவ செஞ்சதா ஒத்துகிட்டாளா அப்பவே நான் அவளை தலைமுழுகியாச்சு சார்…

 இனிமேல் எந்த காரணம் கொண்டும் எங்க வீட்டு பக்கம் அவள்  தலை வைத்து கூட படுக்க கூடாது எங்களுக்கும் அவளுக்கு இனி துளியும்  சம்பந்தம் கிடையாது..

 நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க வெச்சுப் பொழப்பு நடத்துங்க இல்ல வெட்டி போடுங்க அது உங்க இஷ்டம்…

 இந்த நிமிஷத்திலிருந்து எங்களுக்கு அவளுக்கு எந்த சம்பந்தம் இல்லை நாங்க கிளம்புறோம்”  என்றவாறு அவளை முழுதாய் வெட்டிவிட்டு சென்றுவிட்டனர்…

 அனைத்து வழிகளும் அடைபட்டதால்  அவளை அழைத்துக்கொண்டு செல்வதே சிறந்தது என்று முடிவு செய்து வியாவை அழைத்துவந்து அவளிடம் முடிவினை கூற, அவளும் சரி என தலையாட்ட போலீசார் புடைசூழ அனைவரும் கிளம்பினர் அவனின் ஊருக்கு..

(வாடி வா  உன்ன அங்கேயே  வெச்சு கொன்னு புதைக்கிறேன் என்  நடத்தையை மோசமா பேசி என்னை கேவலப்படுத்திட்டே இல்ல உன்னை சும்மா விட மாட்டேன் டி…

நீயும் ஒரு பெண்ணா? இப்படி கூட  நாக்கில் நரம்பில்லாமல் பொய் சொல்ல முடியுமா??

 நீ எக்கேடோ கெட்டுப் போ  ஆனா நான் என்னடி பண்ணினேன் எதுக்கு டி  என்னை பழி வாங்கினாய் நீ??

 உன்னை சும்மா விடமாட்டேன் டி துரோகி என்று மனதில் நினைத்த வண்ணம் பயணிக்க ஆரம்பித்தான் அவன்…)

அங்கு ஊருக்கு தகவல் சென்றிருக்க ஊரே கூடியிருந்தது அவன் வீட்டின் முன்…

தந்தையின் முகம் கண்டு  பேசமுடியாமல் தவித்து தத்தளிக்கும் மகன்…

ஒரு வாய் தண்ணீர் கூட அவன் தொண்டையில் இறங்க மறுத்தது..

வியாவோ பசிக்குது என்று கூறி  ஒரு சாம்பார் சாதம் ஒரு தயிர் சாதம் ஒரு ஜிகர்தண்டா என்று வயிறார சாப்பிட்டு விட்டு,  வழியில் கொறிப்பதற்கு சிப்ஸ் வகையறாக்களும் வாங்கியதோடல்லாமல் ஒரு ஜூஸ் பார்சலும் வாங்கிக்கொண்டு வந்தாள் …

எப்பேர்பட்ட விஷயம் நடந்திருக்கிறது..இங்க எல்லாரும் நெஞ்சம் முழுக்க வேதனையை சுமந்து திரியுறாங்க..

 இவ என்னடான்னா  கொஞ்சம் கூட கவலை இல்லாம அரிசி மூட்டை மாதிரி  அண்டா அண்டாவாக தின்னுட்டு, மேதீனிக்கு ஸ்னாக்ஸ் வேற வாங்கறா…

 உன்னை பட்டினி போட்டே ஒரு வழி  ஆக்குகிறேன் வாடி என்று ஆத்திரத்தில் மனதுள் பொங்கினான்.. 

உண்மையில் நடந்தது என்ன??

 யார் அவன்??

 தன் பெற்றவர்களை  விட அவன் தான் முக்கியம் என வியா கூறுவதற்கு என்ன காரணம்??

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *