ஸ்ருதிவினோவின் ரன்வே – 01

This entry is part 1 of 5 in the series ஸ்ருதிவினோவின் ரன்வே

ஸ்ருதிவினோவின் ரன்வே

ஸ்ருதிவினோவின் ரன்வே – 01

ஸ்ருதிவினோவின் ரன்வே – 01

ஸ்ருதிவினோவின் ரன்வே – 02

ஸ்ருதிவினோவின் ரன்வே – 02

ஸ்ருதிவினோவின் ரன்வே – 03

ஸ்ருதிவினோவின் ரன்வே – 03

ஸ்ருதிவினோவின் ரன்வே – 04

ஸ்ருதிவினோவின் ரன்வே – 04

ஸ்ருதிவினோவின் ரன்வே – 08

ஸ்ருதிவினோவின் ரன்வே – 08

ரன்வே – 01

ஆகாய நீலத்தின் ஊடே அடர் மேகமாய் வெண்முகில் கூட்டம். போர் முடிந்து போன களமாக ஆங்காங்கே சிதறிக் கிடந்தாலும், ரசனைக்காரன் வரைந்த ஓவியமாய் அழகும் பொலிவுமாகக் காட்சியளித்தது.

கையில் காபி கோப்பையுடன் பால்கனிக்கு வந்து அமர்ந்தார் ஸ்ரீநிவாஸ். காலை ஐந்து மணிக்கு எழுந்து கொள்ளும் பழக்கமுடையவர். வழக்கமான உடற்பயிற்சிகள் முடித்து பால்கனிக்கு வந்து அமரும் நேரம் சரியாக ஆறு முப்பதாகி விடும்.

இன்று இன்னும் அவரது மனைவி எழுந்து கொள்ளாத நிலையில் அவரே காபி தயாரித்து எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்திருந்தார். ஒரு மிடரு அருந்திய பிறகு நிமிர்ந்து வானை நோக்கினார். அவரது கழுகுக்கண் பார்வைக்கு வானம் நல்ல காலநிலையாக இருந்தது. திருப்தியாகத் தலையசைத்துக் கொண்டார்.

இன்று மாலை ஆறு முப்பத்தெட்டிற்கு இவரது விமான நேரம். குறைந்தபட்சம் எட்டு மணிநேர ஓய்வுக்கு நேரமிருக்கிறது. காலிக் கோப்பையுடன் எழுந்து உள்ளே சென்ற போது கலைந்த கூந்தலும் நழுங்கிய உடையுமாக படுக்கையறையிலிருந்து வந்தாள் அவரது மனைவி வசுந்தரா.

தலைசாய்த்துப் பார்த்து மனைவியை ரசித்தவர் இரு கைகளையும் விரித்து, “ஹக் மீ டியர்..” என்றதும் வெட்கமும் புன்னகையுமாக வந்து அவரது மார்பில் சாய்ந்தவள், “ஸாரி டார்லிங்.. உங்க கூடவே எழுந்துக்க முடியலை..” என்றாள்.

மனைவியின் உச்சியில் முத்தமிட்டு, “இட்ஸ் ஓகே..” என்றவர், “உனக்கும் காபி தயார் பண்ணி வச்சிட்டேன்..” என்றுக் கூறி மனைவியைத் தோளோடு அணைத்துச் சென்று சோபாவில் அமர வைத்து விட்டு சமையலைறை சென்று காபி எடுத்து வந்து கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து கொண்டார்.

இரு கைகளாலும் காபி கோப்பையைப் பிடித்துக் கொண்டு அருந்தும் அழகை ரசித்தவர், “வயசு ஏற ஏற உன் அழகு கூடிப் போச்சு வசு..” என்றபடி காபி கோப்பையை வாங்கி டீபாயில் வைத்து விட்டு மனைவியின் இதழ்களை நோக்கிக் குனிந்தார்.

இதழ்கள் முத்தச் சண்டையில் இருக்க, அவரது விரல்கள் வசுந்தராவின் மேடிட்டிருந்த வயிற்றை வருடியது. இதழ்களில் இருந்து இறங்கி கழுத்தில் முத்தமிட்டு பிறகு வயிற்றுக்கு வந்தார். தரையில் மண்டியிட்டு உருண்டு திரண்டிருந்த வயிற்றை இரு கரங்களாலும் பற்றி முத்தமிட்டு நிமிர்ந்தவர், “இவங்க ரொம்ப ஸ்பெஷல் வசு.. நம்ம லவ்வோட கிப்ட்..” என்றவரின் தலை கேசத்தைக் கலைத்து விளையாடினாள் வசுந்தரா.

அவர்களின் இருபத்தியிரண்டு வருட தாம்பத்தியத்தில் காதல் இல்லாத நாளில்லை. கல்லூரிக் காலத்தில் காதலிக்க ஆரம்பித்து தனது விமானப் படிப்பு முடித்து உள்ளூர் விமான சேவையில் பணியாற்றத் துவங்கியதுமே பெற்றோரின் சம்மதத்தோடு வசுந்தராவை மணந்தவர்.

ஸ்ரீநிவாஸ் வயது நாற்பத்தியேழு, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உள்ளூர் வெளியூர் என விமான சேவைகளை நடத்தி வரும் “ஸ்கை விங்ஸ்” நிறுவனத்தின் கேப்டன் பொறுப்பில் இருக்கும் இன்ஸ்ட்ரக்டர்.

வசுந்தரா, வயது நாற்பத்தியிரண்டு. ஸ்ரீநிவாஸின் காதல் மனைவி. தனியார் வங்கியின் மேலாளராகப் பணிபுரிந்து தற்போது தான் வாலண்டரி ரிட்டயர்மெண்ட் எழுதிக் கொடுத்து விட்டு பெறப் போகும் குழந்தையின் வரவுக்காக காத்திருக்கும் அழகுப் பெண்மணி.

மனைவியை எழுப்பி, “நீ போய் ஷவர் முடிச்சு ரெடியாகு வசு.. நான் ப்ரேக்ஃபாஸ்ட் தயார் செய்றேன்..” என்றுக் கூறி அவளை அறைப் பக்கமாகத் திருப்பினார்.

“நோ நோ.. நானும் ஹெல்ப் பண்றேன் ஸ்ரீ.. ப்ளீஸ் ஸ்ரீ..” என்றுக் கொஞ்சிய மனைவியை அணைத்து மீண்டும் முத்தமிட்ட போது வசுந்தராவின் கைப்பேசி ஒலித்தது. விலகிச் சென்று டீபாயிலிருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தவரின் முகம் மலர்ந்தது.

ஆன் செய்து, “மை டார்லிங்.. என்னடா இவ்வளவு காலைல கால் பண்ணிருக்க..?” என்றுக் கேட்டார்.

“ஓ காட்.. இன்னும் வீட்லயா இருக்கீங்க.?” என்று எதிர்முனையில் வியந்து கேட்டது ஒரு இளம் பெண் குரல்.

“யெஸ் பேபி.. இன்னைக்கு ஈவினிங் ப்ளைட் தான். அதான் வசுக்கூட லவ்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்..” என்று சிரிப்பும் மகிழ்வுமாகக் கூறினார்.

பின்னால் வந்து, “பேச்சைப் பாரு..?” என்றபடி அவரது தலையில் தட்டிய வசுந்தரா அவரிடமிருந்து கைப்பேசியை வாங்கி, “பேபி டார்லிங்.. எப்படிடா இருக்கே..?” என்றுக் கேட்டார்.

“ஐ ஆம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் மம்மி.. நீங்க எப்படியிருக்கீங்க மம்மி..? என் குட்டி சிஸ்டர் என்ன சொல்றாங்க..?”

முகத்தில் வெட்கம் படர, “நோ சிஸ்டர்.. எனக்கு உன் அப்பா மாதிரி ஹாண்ட்ஸம் பாய் பேபி தான் வேணும்..” என்றாள் வசுந்தரா.

“நோ மம்மி.. உங்களைப் போல அழகா தேவதை மாதிரி ஒரு குட்டி பாப்பா.. ப்ளீஸ் மம்மி..” என்றுக் கெஞ்சினாள் மகள்.

இவர்களின் சம்பாஷனைகளைக் கேட்டு ரசித்தவாறு ஃப்ரிட்ஜில் இருந்து இட்லி மாவை எடுத்து வெளியே வைத்த ஸ்ரீநிவாஸ், “எனக்குக் கூட பெண் குழந்தை தான் வேணும் வசு..” என்றுக் குரல் கொடுத்தார்.

அப்பாவின் குரல் கேட்டு எதிர்முனையில் சிரித்த மகள், “டாடியும் என் கட்சி தான்..” என்றுக் கூறி விட்டு, “மம்மி.. ரெடியாகிட்டீங்களா..? டாடி இல்லாதப்போ கால் பண்ணுங்க.. இப்போ வச்சிடுறேன்..” என்று ரகசியமாகக் கூறிவிட்டு இணைப்பிலிருந்து விலகினாள்.

கைப்பேசியை வைத்து விட்டு கணவனிடம் வந்தவள், “கிச்சனுக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கனும் ஸ்ரீ.. ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு சூப்பர் மார்கெட் போய்ட்டு வாங்களேன்..” என்றாள்.

“உத்தரவு தேவி..” என்று சிரித்தவர், “நீ போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்..” என்று மனைவியை அனுப்பி வைத்தார்.

இந்தக் காதல் தம்பதியருக்கு திருமணம் முடிந்த கையோடு பிறந்தவள் தான் மான்சி, வயது இருபத்தொன்று. பள்ளிப்படிப்பு முடித்த கையோடு ஏரோநாட்டிக்ஸ் இஞ்சினியரிங் முடித்து தனது தகப்பனைப் போன்று ஆகாயத்தில் பறக்கும் ஆசையோடு க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த தெர்மி நகரில் இருக்கும் மெஜெஸ்டிக் ஏவியேஷன் அக்காடமி ப்ளைட் ஸ்கூலில் படித்து வரும் முதலாமாண்டு மாணவி.

படிப்பு வியாபாரமாகி விட்ட இந்நாளில் மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சேமிப்புகளையும் வைப்புநிதிகளை உடைத்தும் செலவளித்து அவளுக்குப் பிடித்த படிப்பில் சேர்த்து விட்டிருந்தார்.

கடந்த இருபது வருடங்களாக இன்னொரு குழந்தைக்கு ஆசைப்படாத தம்பதியருக்கு கடவுளின் வரமாக, மற்றுமொரு பரிசாக இந்த சிசு உருவாகியிருந்தது.

பருவ வயதை அடைந்து விட்ட மகளை வைத்துக் கொண்டு இந்த வயதில் குழந்தையா என்று சங்கடப்பட்டவளை மகளும் கணவனும் பேசி சமாதானம் செய்து குழந்தையை சுமக்க வைத்தனர்.

மான்சியின் முதலாமாண்டு நிறைவடைந்த நிலையில் எல்லாவற்றிலும் முதல் மாணவியாக தேறியிருந்தவளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டும் பட்டயமும் வழங்க மிகப் பெரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராட்டு சான்றிதழ் பெறும் போது தனது பெற்றோர் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு ஏமாற்றம் தரும் செய்தியாக எப்படி முயன்றும் விடுமுறை கிடைக்கவில்லை என்றுக் கூறி விட்டார் ஸ்ரீநிவாஸ்.

மகளின் ஆசையை நிறைவேற்ற, கணவன் அறியாமல் புறப்பட்டு வருவதாக மகளுக்கு வாக்களித்தாள் வசுந்தரா. தனது முப்பதியிரண்டு வார கர்ப்பத்தோடு பயணம் மேற்கொள்ளலாம் என்ற மருத்துவ சான்றிதழோடு அன்று மாலை ஸ்ரீநிவாஸ் கேப்டனாக பயணிக்கும் விமானத்திலேயே டிக்கெட் வாங்கியிருந்தாள், கணவன் அறியாமலேயே.

அவர் வெளியே சென்ற நேரத்தில் தனது உடைகளையும் உட்கொள்ள வேண்டிய மருந்துகளையும் எடுத்து பெட்டியில் வைத்து கட்டிலுக்கு கீழே வைத்தாள்.

அன்று மதியம் மூன்று மணிவாக்கில் விமான சேவை மையத்திலிருந்து அனுப்பப்பட்ட காரில் தனது வெந்நிற யூனிஃபார்முடன் புறப்பட்டுச் சென்றவருக்கு கையசைத்து வழியனுப்பி விட்டு வீட்டிற்குள் வந்தாள் வசுந்தரா.

காரில் ஏறியவர், “கோ பைலட் வரலையா?” என்று டிரைவரிடம் கேட்டார்.

“நோ சார்.. நியூ எம்ப்ளாயி.. நேரா ஏர்போர்ட் வந்து விட்டதாக கால் பண்ணிட்டார்..” என்றார் டிரைவர்.

“ஓ..” என்றவர் தனது கைப்பையைத் திறந்து அதிலிருந்த ஃபைலினை படிக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீநிவாஸ் அயல்நாட்டு விமான சேவையில் பணிபுரிந்தாலும் இன்ஸ்ட்ரக்டராகப் பதவி உயர்வு பெற்ற காரணத்தால் விமான சேவையில் பணிசெய்யும் கோ பைலட்களுக்கு இன்ஸ்ட்ரக்டராகவும் விமான கேப்டனாகவும் உடன் செல்ல வேண்டும்.

விமான நிலையம் வந்தவர் அலுவலகம் சென்று கையெழுத்திட்டு விட்டு அவர்கள் கொடுத்த நோட்புக்கை எடுத்துக் கொண்டு ஓய்வுப் பகுதிக்கு வந்து அமர்ந்து தன்னுடன் பயணிக்கப் போகும் கோ பைலட்டின் பெயர் மற்றும் விபரங்களைப் படித்தார்.

பெயர் சத்யன் மெய்யப்பன், சொந்த ஊர் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமம். நாக்பூர் பைலட் ஸ்கூலில் பைலட் படிப்பை முடித்து நான்கு ஆண்டுகளாக பெங்களூர் ஸ்கை விங்ஸின் உள்ளூர் விமான சேவையில் பணிபுரிந்து வந்தவன் முதன் முறையாக அயல்நாட்டு விமான சேவைக்காக இன்று இவருடன் பயணிக்கப் போகிறான்.

படித்த காலத்திலும் அதன் பிறகு லோக்கல் பைலட்டாக பணிபுரிந்த காலத்திலும் முதல் வகுப்பில் தேறியவனாக நல்ல மதிப்பெண்களுடன் இருந்தான்.

படித்து முடித்து நிமிர்ந்தவரின் முன்பு வந்து நின்ற இளைஞன் விரைப்பாக சல்யூட் அடித்து, “சல்யூட் கேப்டன்.. ஐ ஆம் சத்யன் மெய்யப்பன்.. யுவர் கோ பைலட் சார்..” என்றுத் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

எதிரே நின்றவனை ஆராய்தலுடன் பார்த்தார் ஸ்ரீநிவாஸ். இருபத்தியேழு வயது இளைஞன். ட்ரிம் செய்யப்பட்ட மீசையும் மளமளவென ஷேவ் செய்யப்பட்ட தாடையுமாக சிவந்த நிறத்தில் நல்ல உயரத்தில் அளவான உடற்கட்டுடன் கம்பீரமாக இருந்தான்.

முகத்தில் தெளிவும் கண்களில் தீட்சண்யமும் இருந்தது. படிந்து வாரப்பட்ட தலைக் கேசத்தில் அவனது ஒழுக்கம் தெரிந்தது. பார்த்தவுடன் பிடித்துப் போகும் ரகமாக இருந்தான் சத்யன்.

எழுந்து நின்று அவனை நோக்கி கையை நீட்டி, “ஐ ஆம் ஸ்ரீநிவாஸ்.. உங்க இன்ஸ்ட்ரக்டர்..” என்றுத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

அவரது கைப் பற்றி குலுக்கி, “தாங்க்யூ சார்.. என்னோட ரோல் மாடல் நீங்க தான்.. ப்ளீஸ் டேக் கேர் ஆப் மீ ” என்ற அவனது பணிவான வார்த்தைகள் ஸ்ரீநிவாஸை கவர்ந்தது.

“யெஸ் அஃப்கோர்ஸ்..” என்றுக் கூறிச் சிரித்தவர், “என்னோட பூர்வீகமும் தமிழ்நாடு தான்.. வேலூர்..” என்றுக் கூறினார்.

அப்போது இருவருக்கும் அழைப்பு வர, “ஆல்கஹால் டெஸ்ட்..” என்றவர், “போகலாம்..” என்றுக் கூறி முன்னால் நடக்க அவரை பின் தொடர்ந்தான் சத்யன்.

இருவருக்கும் ஆல்கஹால் டெஸ்ட் முடித்து அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அது முடிந்ததும் அங்கிருந்து வெளியேறி மீட்டிங் ஹால் வந்தனர்.

அவர்களுக்கான பணி விபரங்கள் கூறப்பட்டது. இங்கிருந்து விமானம் பறக்கும் நேரம், சென்று சேரும் நேரம், ஏதென்ஸ் விமான நிலையம் சென்ற பிறகு எங்கே தங்க வேண்டும், எத்தனை நாட்கள் ஓய்வு, பிறகு எப்போது விமானம் புறப்படும் என்று அனைத்து விபரங்களும் கூறப்பட்டிருந்தது.

அனுமதிக் கடிதம் பெற்றுக் கொண்டு விபரங்கள் அடங்கிய ஃபைலோடு அங்கிருந்து வந்தவர்கள் தங்களது பெட்டிகளுடன் எஸ்கலேட்டரில் மேலே செல்லும் போது பக்கத்து எஸ்கலேட்டரில் மேலேறிக் கொண்டிருந்த விமானப் பணிப்பெண்கள் அடங்கிய குழு மரியாதை நிமித்தமாக இவர்களை வணங்கியது.

ஸ்ரீநிவாஸின் பின்னால் சென்ற சத்யன் அந்தக் குழுவிலிருந்த ஒரு பெண்ணைக் கண்டதும் கண்சிமிட்டி உதட்டை முத்தமிடுவது போல் குவித்துக் காட்ட, அந்தப் பெண்ணும் அவசரமாக உதடுகளை குவித்து முத்தத்தைப் பறக்க விட்டாள்.

எதையோ கூறுவதற்காக திரும்பிய ஸ்ரீநிவாஸ் சத்யனின் செயல் கண்டு சிரித்து, “என்ன சத்யன்.. லவ்வரா..?” என்றுக் கேட்டார்.

“யெஸ் சார்.. பட்.. காக்பிட் ரூல்ஸை மதித்து நடப்பேன்..” என்றான்.

“குட்..” என்றதோடு மேற்கொண்டு எதுவும் பேசாமல் சென்றார்.

சத்யன் கோ பைலட்க்கான தனது முழு வெந்நிற சீருடை அணிந்து அவனது சட்டையின் தோள்பகுதியில் குத்தப்பட்ட முன்று தங்கநிற நட்சத்திரங்களோடு தொப்பி அணிந்து கம்பீரமாக நடந்து செல்ல, அதே உடையில் ஐந்து தங்கநிற நட்சத்திரங்கள் கொண்ட பேட்ச் அணிந்து ஸ்ரீநிவாஸ் அவனுக்கு முன்னால் சென்றார்.

விமானத்தின் உள்ளே நுழைந்ததும், முதல் வழக்கமாக இருவரும் அங்கிருந்த ஃப்ளைட் அட்டண்டர்களிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். கேப்டன் ஸ்ரீநிவாஸ் தன்னுடன் பயணியாற்றப் போகும் கோ பைலட் சத்யனையும் விமான பணிப்பெண்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் ஆஷாவையும் பணியாளர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

சத்யன் தனது காதலி என்றுக் கூறிய அனுஷா என்ற அந்தப் பெண்ணும் அதே விமானத்தில் பணிப்பெண்ணாக வந்திருந்தாள். இவனைக் கண்டதும் மீண்டும் ஒரு கண்சிமிட்டல். உதடு குவித்து உதட்டின் மேல் விரல் வைத்து எச்சரித்து விட்டு தனது நோட்புக்கில் கேப்டன் கூறுவதை குறிப்பெடுக்க ஆரம்பித்தான்.

அடுத்ததாக பயண நேரம், இன்றைய காலநிலை, பயணிக்கும் பாதை, எத்தனை அடி உயரத்தில் பறக்கப் போகிறோம் என்பதை அனைவருக்கும் தெளிவுப்படுத்தினார். பின்னர் இருவருமாக தங்களது பணிக்கு ஒத்துழைக்குமாறு பொதுவாகக் கேட்டுக் கொண்டனர்.

ஸ்ரீநிவாஸ் கையெழுத்திட்ட பயணிகள் பட்டியல் மற்றும் விமான சேவையில் பொறுப்பேற்றதற்கான முதற்கட்ட தகவல் முதலியவற்றை வாயிலில் இருந்த ஆபிஸரிடம் அளித்தார்.

இருவருமாக காக்பிட் நோக்கி சென்றனர். வரும் வழியில் எதிர்ப்பட்டாள் அனுஷா. விமான பைலட்களுக்கான நியதிப்படி அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தனது கேப்டனுடன் காக்பிட் வந்தவன் ஒருமுறைக்கு இருமுறையாக எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு, “எவ்ரி திங் இஸ் குட்.. காங்க்ராட்ஸ்..” என்ற முதல் வார்த்தையுடன் தனது இருக்கையில் அமர்ந்தான்.

இவர்கள் தங்களுக்கான வரை படத்தைப் பார்த்து விமானத்தை இயக்கும் சுவிட்ச்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.

அதே வேளை விமான கேட் அருகே காத்திருந்த ஃப்ளைட் அட்டன்டன்ட் பேசத் துவங்கினார். “குட் ஈவினிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்.. இது பெங்களூரிலிருந்து ஏதென்ஸ் நோக்கிச் செல்லும் விமான சேவை SW506 ஏர்பஸ் A380க்கான ஃப்ரீ-போர்டிங் அறிவிப்பு. இப்போது சிறு குழந்தைகளுடன் வந்திருப்பவர்கள், விமானப் பணியாளர்களின் உதவி தேவையானவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மட்டும் விமானத்தின் உள்ளே செல்லத் தயாராக இருங்கள். ஏனைய பயணிகளுக்கான அறிவிப்பு குறைந்தது பத்து நிமிடங்களில் வரும். தயவுசெய்து காத்திருக்கவும். ஃபர்ஸ்ட் க்ளாஸ் மற்றும் பிஸ்னஸ் க்ளாஸில் பயணிப்பவர்கள் அவர்கள் வசதிப்படி இணைந்து கொள்ளலாம்.. நன்றி..”

சற்று நேரத்தில் தனது செக்கின், செக்யூரிட்டி செக் என அனைத்தும் முடித்து மற்றப் பயணிகளோடு ஜெட்வே பிரிட்ஜ் மூலமாக விமானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தாள் வசுந்தரா.

வாயிலில் நின்று வருவோரை கைக்கூப்பி வணங்கி வரவேற்றுக் கொண்டிருந்தனர் அனுஷாவும் மற்றுமொரு பெண்ணும்.

அப்போது பிரபல சினிமா நடிகனான நரேஷ் அதே விமானத்தில் பயணம் மேற்கொள்ள நுழைந்த போது பணிப்பெண்கள் வியந்து, “நரேஷ்.. நரேஷ்..” என்று தங்களுக்குள் முனுமுனுத்துக் கொண்டனர்.

அனுஷாவைக் கண்டதும் புருவம் உயர்த்திச் சிரித்து, “வாட் எ பியூட்டி..” என்றவாறு கன்னத்தை வருடி விட்டு உள்ளே சென்றுத் தனது இருக்கையில் அமர்ந்தான் நரேஷ்.

சற்று நேரத்தில் அனைத்துப் பயணிகளும் ஏறி விட்டார்களா என்று சரி பார்த்து தலைமைப் பணிப்பெண் அங்கிருந்த தொலைபேசி வாயிலாக காக்பிட்டில் இருக்கும் துணை கேப்டனுக்குக் கூறினாள்.

விமானத்தின் கதவுகள் மூடி லாக் செய்யப்பட்டதும், சீஃப் ஃப்ளைட் அட்டன்டன்ட்டிடமிருந்து, “கேபின் க்ரூ.. கேட் டிப்பார்ச்சருக்கு தயாராகவும்..” என க்ரூ மெம்பர்ஸ்க்கான அறிவிப்பு வந்தது.

அதே வேளை, “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்.. நான் ஸ்ரீநிவாஸ் இன்றைய விமான சேவையின் கேப்டன். இன்று சேவையில் நம்முடன் பயணிக்கும் அனைத்து க்ரூ மெம்பர்ஸ் சார்பிலும் அனைவரையும் ஸ்கை விங்க்ஸ் ஏர்லைனின் ப்ளைட் SW506 பெங்களூரிலிருந்து ஏதென்ஸ் இடையேயான நான்-ஸ்டாப் விமான சேவைக்கு அன்புடன் வரவேற்கிறேன்..” என்று பேசத் துவங்கியவர் அவருடைய சேவைக் காலம் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு தனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பதையும் பேச்சில் குறிப்பிட்டவர் பின்னர் சத்யனைப் பேசும்படிக் கூறினார்.

“யெஸ் கேப்டன்..” என்றவன், “ஐ ஆம் சத்யன்.. கோ பைலட் ஆஃப் திஸ் சர்வீஸ்..” என ஆரம்பித்து பயண நேரம், செல்லும் பாதை, வேகம் என்பவற்றை சுருக்கமாகக் கூறி பயணிகளின் ஒத்துழைப்பினையும் வேண்டிக் கொண்டு தனது அறிவிப்பினை முடித்துக் கொண்டான்.

டவர் கோபுரத்திலிருந்தும் சிக்னல் பெறப்பட்டது. கண்ட்ரோல் ரூமிலிருந்தும் தகவல் பெறப்பட்டது. விமானம் தளத்தை விட்டு அசைந்து க்ரவுண்டு பணியாளர்களால் வழி காட்டப்பட்டு சரியான பாதைக்குத் திருப்பப்பட்டு ஓடு பாதையில் ஓடத் துவங்கியது

தனது இருக்கைக்கு அருகே இருந்த தொலைப்பேசியை எடுத்து மீண்டும் அறிவிக்க ஆரம்பித்தார் ஸ்ரீநிவாஸ். “லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்.. பெங்களூரிலிருந்து ஏதென்ஸ்க்கான விமான சேவை SW506 க்கு மீண்டும் உங்களை வரவேற்கிறேன். விமானம் கிளம்பும் வரிசையில் நாம் மூன்றாம் இடத்தில் உள்ளோம். இன்னும் ஏழு நிமிடங்களில் விமானம் பறக்க ஆரம்பிக்கும். அனைவரும் சீட்-பெல்ட் சைன் சுவிட்ச் ஆப் ஆகும் வரை சீட்-பெல்ட் அணிந்திருக்கவும்.”

“தயவு செய்து உங்கள் உடமைகளை உங்கள் இருக்கையின் கீழோ, அல்லது ஓவர்ஹெட் கம்பார்ட்மென்டிலோ கவனமாக வைக்கவும். உங்கள் இருக்கையை நேராக நிமிர்த்தி வைக்கவும். அதே போல இருக்கையின் முன்னிருக்கும் டேபிள் ட்ரேயையும் மூடி வைக்கவும். லாப்டாப், போன் உட்பட பர்சனல் எலெக்ட்ரானிக் டிவைஸ் அத்தனையும் சுவிட்ச் ஆப் செய்து வையுங்கள். அல்லது ஃப்ளைட் மோடில் போட்டு வைக்கவும்.”

“புகைத்தல் இந்த விமானத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்திற்கு ஸ்கை விங்க்ஸ் விமான சேவையினை தெரிவு செய்தமைக்கு நன்றி. உங்கள் பயணம் இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள்..” என்றுக் கூறியவர், “ஃப்ளைட் அட்டன்டர்ஸ், டேக்-ஆஃப் க்கு தயாராகவும்.. கேபின் க்ரூ, டேக்-ஆப் க்கு தயாராக உங்கள் இருக்கைகளில் அமரவும்” என அறிவுறுத்தி விட்டு ரிசீவரை வைத்தார்.

கவனம் முழுவதும் ஓடு பாதையில் இருக்க, “சத்யன்.. யூ டூ த டேக் ஆஃப்..” என்றார்.

வியப்புடன் அவரைத் திரும்பிப் பார்த்து, “கேப்டன்..?” என்றான்.

“யெஸ்.. யூ கேன் டூ இட்..”

வியந்த பார்வையோடு நம்ப முடியாதவனாக, “யூ மீன்..?” என்றான்.

அவனை தீர்க்கமாகப் பார்த்து, “மற்ற கோ கேப்டன்களை முதல் விமானம் டேக் ஆஃப் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு சத்யன்.. கோ அகெட்..” என்ற போது சத்யனின் கண்களுக்கு அவர் குருவாகத் தெரிந்தார்.

“ம்ம்.. ஃபர்ஸ்ட் ஒன்.. கியர் அப்.. யூ ஹேவ்..” என்று மீண்டும் கூறினார்.

“யெஸ் சார்.. ஐ ஹேவ்..” என்று உற்சாகமாகக் கூறிவிட்டு டேக் ஆஃப் பண்ண ஆரம்பித்தான்.

அவனது முதல் அயல்நாட்டு விமானம். அவனே டேக் ஆஃப் செய்கிறான். சந்தோஷத்தில், “வாவ்..” என்றபடி தலைக்கு மேலேயிருந்த சுவிட்ச்களை ஆன் செய்து கியரை முன்னோக்கி அழுத்த விமானம் உயரத் துவங்கியது.

“ரொட்டேட்..” என்று வழி நடத்திக் கூறியவர் அவனை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டி, “குட் சத்யன்.. சிறந்த விமானிக்கான தகுதி உள்ளவர் நீங்கள்..” என்றுக் கூற, சந்தோஷத்துடன், “தாங்க்யூ சார்..” என்றான்.

விமானத்தை பைலட் கவனமாக செலுத்த வேண்டிய நிமிடங்கள் தாண்டியதும், மறுபடியும் கேப்டனிடமிருந்து அறிவிப்பு வந்தது.

“குட் ஈவினிங் லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்.. நான் மறுபடியும் உங்கள் கேப்டன் பேசுகிறேன். ஸ்கை விங்ஸ் விமான சேவை இலக்கம் SW506 க்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இந்திய நேரப்படி தற்போது மணி ஏழு ஐந்து. இப்போது 33,000 அடி உயரத்தில் 400 மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். காலநிலை மிதமாக உள்ளது.”

” ஏதென்ஸ்க்கு நாளை காலை ஐந்தரை மணிக்கு சென்றடைவோம். கால நிலை ஒத்துழைத்தால் குறிப்பிட்ட நேரத்தின்படி நமது பயணம் அமையும். அதே போல் காலநிலை சீராக இருந்தால் பறக்கும் போதே ஏதென்ஸின் அதிகாலை அழகினை பார்க்கும் வாய்ப்பும், மத்திய ஆசிய நாடுகளைக் கடக்கும் போது சூரிய உதயத்தை ரசிக்கும் வாய்ப்பும் நமக்கு அமையும்..” என்று இனிமையான குரலில் கூறினார்.

“இன்னும் இருபது நிமிடங்களில் க்ரூ மெம்பர்ஸ் லைட் ரிப்ரெஷ்மென்ட்ஸ் உடன் வருவார்கள். இன் ஃப்ளைட் என்டர்டெய்ன்மெண்ட் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கும். ஏதேனும் உதவி தேவையென்றால் உடனடியாக க்ரூ மெம்பரை அணுகவும். அவர்கள் தேவையானவற்றை செய்து உங்களுக்கு உதவுவார்கள். ஏதென்ஸ் நாட்டினை நெருங்கும் போது மறுபடியும் அறிவிப்புகளுடன் வருவேன். அதுவரை இருக்கையில் ரிலாக்ஸ் ஆக அமர்ந்து, இந்தப் பயணத்தை அனுபவியுங்கள். நன்றி..” என்றுத் தனது பேச்சை முடித்தார்.

விமானம் உயர உயர, சில பயணிகள் தங்களது இருக்கையின் பிடிகளை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள சிலர் சாதாரணமாக அமர்ந்திருந்தனர். பயணிகளின் இருக்கைகளுக்கு முன்னால் இருந்த மானிட்டரில் எச்சரிக்கை வீடியோ ஓடத் துவங்கியது.

அதே சமயம் விமானத்தில் வழக்கமாக ஒலிபரப்பும் ரெக்கார்ட் ஓடியது. “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்.. இன்றைய சேவையில் இருக்கும் அனைத்து க்ரூ மெம்பர்ஸ் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.. தயவு செய்து உங்கள் முன்னே இருக்கும் மானிட்டரில் உங்கள் கவனத்தைப் பதிக்கவும். அதில் எமர்ஜென்சி ப்ரசீஜர்ஸ் சொல்லப்படுகிறது. ஒரு நிமிடம் கவனித்து உங்கள் அருகே இருக்கும் எமர்ஜென்சி வாயில்களை அனுமானித்துக் கொள்ளவும். எமர்ஜென்சி வாயில் உங்கள் பின்னே கூட இருக்கலாம். எத்தனை இருக்கை வரிகளைக் கடந்து இந்த வாயிலை அடைய வேண்டும் என்பதை கவனித்து ஞாபகத்தில் வைக்கவும். ”

” விமானத்தில் ப்ரெஷர் குறைந்தால் உடனே கேப்டனால் அறிவுறுத்தப்படுவீர்கள். பதட்டமடையாமல் கேபின் க்ரூவின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும். ஆக்சிஜன் மாஸ்க் உங்கள் இருக்கைக்கு மேலிருந்து வரும். அதனை உங்கள் வாயையும் மூக்கையும் மூடுவது போல பொருத்தி விட்டு ஸ்ட்ராப்ஸ் இறுக்கமாக இழுத்து விட்டு சுவாசிக்க ஆரம்பிக்கவும். உங்களுடன் சிறுவர்கள் பயணித்தால் முதலில் உங்களுக்கு பொருத்தி விட்டே அவர்களைக் கவனிக்கவும்”.

“எமர்ஜென்சியாக தரையிறக்கம் அவசியமாயின் உங்கள் உடமைகளை விட்டுவிட்டு செல்லவும். உயிர்காப்புப் பட்டைகள் உங்கள் இருக்கையின் கீழ் பொருத்தப் பட்டுள்ளன. எமர்ஜென்சியின் போது அவற்றினை அணிந்து கொள்ளவும். உங்கள் இருக்கையின் அருகே எமர்ஜென்சி லைட் எரிய ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து வந்தால் எமர்ஜென்சி வாயிலுக்கு செல்ல முடியும்.”

” உங்கள் உடமைகள் கையில் எடுத்து வந்த பேக்கேஜ் என அனைத்தும் அதற்கான இடங்களில் வைத்து மூடவும். அவை உங்களுக்கோ ஏனைய பயணிகளுக்கோ எந்த வகையிலும் தடங்கலாக இருக்கக் கூடாது. உங்கள் இருக்கையின் முன் இருக்கும் சேஃப்டி டேட்டா கார்ட் இந்த ஏர்பஸ் A380க்கானது. கவனமாக படித்து முக்கிய விடயங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும். நன்றி. வணக்கம்.” என்று நீண்ட உரையோடு கூடிய ரெக்கார்ட் ஒலிபரப்பு முடிந்தது .

தனது இருக்கையின் முன் இருந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவுக்கு மெல்லியப் புன்னகை. கணவன் கேப்டனாக பணி செய்யும் விமானத்தில் அவருக்கே தெரியாமல் வருவது த்ரிலிங்காக இருந்தது.

புறப்படும் முன் மகளிடம் பேசிய போது இருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய சிறிய ரக க்ளைடர் விமானத்தை வெற்றிகரமாக ஓட்டியதாக அவள் கூறியதுக் கேட்டு பெருமை கொண்டது மனம்.

கணவனைப் போலவே மகளும் ஒரு கேப்டனாக செய்படும் போது இதே போல் அவளுக்குத் தெரியாமல் அவளது விமானத்திலேயே பயணம் செய்ய வேண்டும் என்று எண்ணிய போது மேலும் புன்னகை விரிந்தது.

அப்போது, “லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்.. கேப்டன் இப்போ சீட் பெல்ட் சைன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணியுள்ளார். மறுபடி ஆன் செய்யப்படும் வரை சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. உங்கள் விருப்பத்திற்கு நீக்கி விடலாம். கேபின் உள்ளேயே நடக்கலாம். தூங்குவதனால் உங்கள் ப்ளாங்கட் மேலே சீட் பெல்ட் தெரிவது போலே சீட் பெல்ட் அணிந்து கொண்டு தூங்கவும். உங்கள் லேப்டாப், போன் போன்ற எலெக்ட்ரானிக் கருவிகள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். விமானத்தில் பயணித்துக் கொண்டே உங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள விரும்பினால் கேபின் க்ரூவிடம் அதற்கான சேவை மற்றும் விலை விபரம் விசாரிக்கவும். நன்றி.” என்று ஃப்ளைட் அட்டன்டரின் அறிவிப்பு ஒலிபரப்பானது.

பணிப்பெண் அனுஷா, வசுந்தரா அருகே வந்து, “மே ஐ ஹெல்ப் யூ மேம்?” என்றுக் கேட்க, “யெஸ்.. சீட் பெல்ட் ரிமூவ் பண்ணி விடுங்க..” என்றாள் வசு.

சீட் பெல்ட் விடுவிக்கப்பட்டு, “ஏதாவது சாப்பிடுறீங்களா மேம்..?” என்றுக் கேட்டாள்.

“ஸாப்ட் ட்ரிங்க் வேணும்..” என்றுக் கேட்ட போது வசுந்தராவின் நெற்றியில் பொடிப் பொடியாக வியர்க்க ஆரம்பித்தது.

“மேம்.. ஆர் யூ ஓகே…” என அனுஷா கேட்டாள்.

அவளைப் பார்த்துச் சிரித்து, “ஐ ஆம் ஓகே.. என் பேபி கொஞ்சம் பிக் சைஸ்..” என்றாள் வசுந்தரா.

பதிலுக்குச் சிரித்து விட்டு சென்றவள் சற்று நேரத்தில் குளிர்பானம் எடுத்து வந்து கொடுத்தாள். குடித்து முடித்ததும், “தூங்கப் போறீங்களா..?” என்றுக் கேட்டாள்.

வசுந்தரா, ‘ஆம்’ என்று சொன்னதும் ப்ளாங்கட் கொண்டு கழுத்து வரை மூடி, “தூங்குங்க மேம்..” என்றுக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தவளை நடிகர் நரேஷ் அழைத்தான்.

கருப்புக் கண்ணாடியின் வழியாக யாரைப் பார்க்கிறான் என்று தங்களுக்குள் புலம்பித் தீர்த்த பணிப்பெண்களில் அவளை மட்டும் குறிப்பிட்டு அழைத்ததில் அனுஷாவுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.

“டிஸ்யூ பேப்பர்ஸ் வேண்டும்..” என்று அவன் கேட்டதும், “யெஸ் சார்..” என்று ஏவியேஷன் கிச்சன் நோக்கி ஓடிச் சென்று எடுத்து வந்துக் கொடுத்தாள்.

கண்ணாடியை இறக்கி விட்டு அவளைப் பார்த்து கண் சிமிட்டியபடி வாங்கிக் கொண்டான்.

விமானத்தில் சிலர் உறங்கினார்கள், சிலர் டிவி பார்த்தார்கள். மேலும் சிலர் தங்களுக்குத் தேவையான உணவுகளை வாங்கி உண்டு கொண்டிருந்தனர்.

வசுந்தராவோ உணவு எதுவும் உண்ணப் பிடிக்காமல் அடிக்கடி குளிர்பானம் எடுத்து வரச் சொல்லி அருந்தினாள்.

ஏதென்ஸை சென்றடைய இரண்டு மணி நேரமே இருக்க, காக்பிட்டில் ஆட்டோ ஃப்ளைட் மோட் ஆனில் இருந்தது. “வாஷ்ரூம் போய்ட்டு வர்றேன் சத்யன்..” என்றுக் கூறி விட்டு ஸ்ரீநிவாஸ் சென்று விட, உற்சாகமாய் தனது இருக்கையில் அமர்ந்திருந்தான் சத்யன்.

தனது குளிர் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு மேகக் கூட்டத்தை ரசித்தான்.

அடிக்கடி குளிர்பானம் அருந்தியதன் விளைவு சிறுநீர்காக வயிறு முட்டியது வசுந்தராவுக்கு. வயிற்றின் மேலே வருடியபடி சற்றுத் தள்ளி நின்றிருந்த அனுஷாவை மறு கையசைத்து அழைத்தாள்.

உடனே வந்தவள், “யெஸ் மேம்..” என்றதும், “எனக்கு பாத்ரூம் போக ஹெல்ப் பண்ணுங்க..” என்று வசுந்தரா கூறினாள்.

புன்னகையுடன் தலையசைத்து விட்டு வசுந்தரா எழுந்திருக்க உதவியவளை அடுத்த வரிசையில் இருந்த நரேஷ் அழைத்தான். உடனே இவளை அப்படியே விட்டு விட்டு அவனிடம் வேகமாக சென்று விட்டாள்.

சிறுநீர் கழிக்க வயிறு உந்திய நிலையில் அனுஷாவைத் திரும்பி ஒரு பார்வைப் பார்த்து விட்டு தாமாகவே மெதுவாக நடந்து கழிவறைக்குச் சென்று கதவடைத்தாள்.

பயணிகள் அனைவருக்கும் விருப்ப உணவுகளை எடுத்து வந்து கொடுத்தபடி மற்ற பணிப்பெண்கள் நடமாடிக் கொண்டிருக்க, அனுஷா நரேஷின் தேவைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

உயரத்தில் பறப்பதை அனுபவித்துக் கொண்டிருந்தவன் கையில் வைத்திருந்த பேனாவைத் தவற விட்டதால் அதை எடுக்க குனிந்த வேலையில் இவனது முழங்கைத் தட்டி ஸ்டேரிங் மூவ் ஆனது. அதிர்ந்து போனவனாக சட்டென உள்வாங்கிய ஸ்டேரிங்கை இழுத்துப் பிடிக்க முயன்றான்.

கழிவறைக்குள் சென்றுத் தனது கையுறையைக் கழட்டிக் கொண்டிருந்த ஸ்ரீநிவாஸ் விமானம் தடுமாறுவதை உணர்ந்து பதட்டமாக காக்பிட் நோக்கி ஓடி வந்தார்.

அவரைக் கண்டதும், “கேப்டன்.. ஆட்டோ ஃப்ளைட் மோட் ரிலீஸ் ஆகிடுச்சு.. ஸ்பீட் இன்க்ரீஸ் ஆகுது” என்று பதற்றமாகக் கூறும் போதே விமானம் மிக மோசமாகத் தடுமாற ஆரம்பித்தது.

பயணிகளிடையே கூச்சலும் குழப்பமும். சிலர் தடுமாறி தரையில் விழுந்தனர். சிலர் எதிர் இருக்கையில் மோதிக் கொண்டனர். கிச்சனில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தது.

கழிவறை சென்றிருந்த வசுந்தரா சிறுநீர் கழித்து விட்டு குழாய் திறந்து முகம் கழுவிய வேளை விமானம் சட்டென பக்கவாட்டில் சரிய, வயிறு சுவற்றில் மோதியது. தடுமாறியபடி பக்கவாட்டு கம்பியைப் பிடிக்க முயன்றாள். மீண்டும் விமானம் சரிவில் இருந்து நிமிர்ந்தது. கத்தியழக் கூட முடியாதபடி வலி மயக்கத்தைக் கொடுக்க, தரையில் மடிந்து விழுந்தவள் கழிவறை சுவர்களில் மோதி மோதி தரையில் கிடந்தாள்.

விமானத்தை கட்டுக்குள் கொண்டுவர சத்யன் பெரும்பாடு பட, அவனுக்குப் பின்னால் இருந்து கவிழ்ந்தபடி, “பிட்ச் அப்.. பிட்ச் அப்..” என்றுக் கத்தினார் ஸ்ரீநிவாஸ்.

“அப்.. அப்..” என்று மனதுக்குள் கூறியபடி இறுக்கிப் பிடித்து உயர்த்திய போது விமானம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் வந்தது.

ஸ்டேரிங்கைப் பற்றியிருந்த சத்யனின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தது. “ரிலாக்ஸ்..” அவனது தோளில் தட்டி விட்டு தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.

பதட்டம் தெளியாதவனைக் கண்டு, “இதெல்லாம் நடப்பது தான்.. இது உங்களுக்கு ஒரு அனுபவம் சத்யன்..” என்றுக் கூறி விட்டு அருகிலிருந்த தொலைபேசி எடுத்து, “யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லையே..?” என்றுக் கேட்டார்.

தலைமை பணிப்பெண் அனைவரின் நலத்தை உறுதி செய்த பிறகு ரிசீவரை வைத்தவர், “எதுவும் பிரச்சனையில்லை.. ரிலாக்ஸ்டா இருங்க..”என்று அவனுக்குக் கூறினார்.

கிச்சனிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள் அனுஷா. வசுந்தராவின் இருக்கை காலியாக இருந்தது. பதற்றம் தொற்றிக் கொள்ள கழிவறைக்கு வந்து, “மேம்..” என்று அழைத்துக் கதவைத் தட்டினாள்.

தட்டுத் தடுமாறி எழுந்து கதவைத் திறந்தவளை தாங்கிப் பிடித்த அனுஷா, “ஆர் யூ ஓகே மேம்..?” என்றுக் கேட்க, சிரமப்பட்டுப் புன்னகைத்து விட்டு, “என்னோட சீட்க்கு கூட்டிப் போங்க” என்றாள் வசுந்தரா.

கைத்தாங்கலாக அழைத்து வந்து இருக்கையில் உட்கார வைத்து ப்ளாங்கட் எடுத்து மூடி விடும் போது தான் அனுஷா கவனித்தாள். வசுந்தரா அணிந்திருந்த நீலநிற சல்வாரின் பின் பகுதி உதிரத்தால் நனைந்து போயிருந்தது.

அதிர்ந்து போனவள் ப்ளாங்கட்டை அப்படியே போட்டு விட்டு ஏவியேஷன் கிச்சன் நோக்கி ஓடி திரைக்குப் பின்னால் மறைந்து நின்றவளுக்கு பதற்றம் தணியவில்லை. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாதபடி மூளை ஸ்தம்பித்தது.

மனம் பதைக்க மீண்டும் வந்து வசுந்தராவின் போர்வையை விலக்கி விட்டு பார்த்தாள். உதிரம் கால் வழியாக வழிந்து விமானத்தின் கார்பெட்டில் தேங்கியது. அலறிப் போனவளாக வசுந்தராவை எழுப்ப முயன்றாள். அவளோ வியர்வையால் நனைந்து போய் மயக்கத்தில் பக்கவாட்டில் தலை சாய்த்திருந்தாள்.

“மேம்.. ஆர் யூ ஓகே.. மேம்.. மேம்..” என்றுக் கத்தியவள், வசுந்தராவின் முகத்தை தன் மார்பில் சாய்தபடி ஏவியேஷன் கிச்சனை நோக்கி, “மேனேஜர்.. மேனேஜர்..” என்றுக் கத்தி அழைத்தாள்.

அடுத்த நிமிடம் அந்த இடம் பரபரப்பானது. ஓடி வந்த தலைமைப் பணிப்பெண் ஆஷா, “எமர்ஜென்சி பெட் ரெடி பண்ணுங்க.. பாசஞ்சர்ல யாராவது டாக்டர்ஸ் இருக்காங்களா செக் பண்ணுங்க.. குயிக்..” என்று உத்தரவிட்டவள் அனுஷாவைப் பார்த்து முறைத்து, “இவங்களை கவனிக்காமல் என்ன பண்ணிக்கிட்டு இருந்த..?” என்றுக் கோபமாகக் கேட்டு விட்டு, “ம்ம்.. தூக்கு..” என்றதும் இரண்டு பேராக வசுந்தராவைத் தூக்கிக் கொண்டு எமர்ஜென்சி படுக்கைக்குக் கொண்டு வந்துக் கிடத்தினர்.

உதிரம் கட்டுக்கடங்காமல் வழிந்தோடியது. படுக்கையைச் சுற்றிலும் கனத்தத் திரை மூடப்பட்டது.

“நமது விமானத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு உங்களது உதவித் தேவைப்படுகிறது. யாராவது டாக்டர்ஸ் இருந்தால் சொல்லுங்கள்.. ப்ளீஸ்..” என்று மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

விமானத்தில் மருத்துவர்கள் யாருமற்ற நிலையில் மேனேஜர் பெண் தொலைபேசி வாயிலாக கேப்டனைத் தொடர்பு கொண்டாள்.

“யெஸ்.. ஐ ஆம் கேப்டன் ஸ்ரீநிவாஸ்..”

“கேப்டன்.. சீட் நம்பர் டி 10.. பிரக்னன்ட் வுமன் எமர்ஜென்சி பெட்டுக்கு கொண்டு வந்திருக்கோம். அவங்களுக்கு ஓவர் ப்ளீட் ஆகுது கேப்டன்.” என்றுத் தகவல் கூறினாள்.

“இப்போ தானே.. எவ்ரி திங் இஸ் ஆல்ரைட்.. என்று சொன்னீங்க?”

“ஸாரி கேப்டன்.. இது எதிர்பாராமல் நடந்து விட்டது..”

“ஓகே புரியுது.. உதவி செய்ங்க..”

“யெஸ் கேப்டன்..”

ரிசீவரை வைத்து விட்டு சத்யனைத் திரும்பிப் பார்த்தார்.

“கேப்டன்..?”

“டோன்ட் ஒர்ரி.. இட்ஸ் ப்ரோபப்லி நத்திங் சீரியஸ்” என்றார்.

எமர்ஜென்சி படுக்கையில் நான்-வாஷபில் ஷீட் விரிக்கப்பட்டு அதன் மீது கிடத்தப்பட்டிருந்த வசுந்தரா வலியால் முனங்க ஆரம்பிக்க உதிரத்தோடு நீரும் வழிய ஆரம்பித்தது.

வயிற்றுக்கு மேலே உடையை சுருட்டி வைத்து விட்டு வயிற்றின் மீது தடவிப் பார்த்தாள் ஆஷா. வசுந்தராவின் பெண்ணுறுப்பு சற்று விரிவடைந்ததைக் கண்டு, “இனி வெயிட் பண்ண முடியாது. பேபி அன்ட் மதர் இருவருக்குமே டேஞ்சர். வீ வில் ப்ராஸஸ் அன் எமர்ஜென்ஸி ட்ரீட்மெண்ட்..” என்று மற்றப் பெண்களுக்குக் கூறி விட்டு அனுஷாவிடம் திரும்பி, “கோ.. கோ.. சிசர்ஸ் அன்ட் நைஃப் சேர்த்து எமர்ஜென்சி கிட் எடுத்துட்டு வா..” என்று உத்தரவிட்டாள்.

அங்கிருந்து ஓடி வாஷ்பேசினில் தனது கையிலிருந்த உதிரத்தைக் கழுவும் போது கண்ணீர் பெருகியது. “நான் என்ன பண்ணுவேன் கடவுளே..?” என்று திரும்பத் திரும்ப கூறியபடி முகத்தையும் கழுவிக் கொண்டு கிச்சனுக்கு வந்து அலமாரியில் இருந்த எமர்ஜென்சி கிட்டை எடுத்தாள்.

பதற்றத்தில் தவறி விழுந்து அதிலிருந்த பொருட்கள் சிதறியது. “அய்யோ..” என்று அலறியபடி எல்லாவற்றையும் எடுத்து ஒரு ட்ரேயில் வைத்துக் கொண்டு ஓடினாள்.

அதே சமயம் கேப்டனின் அறைக்கு போன்கால் வந்தது. ஸ்பீக்கரை ஆன் செய்தார். “தற்சமயம் அந்தப் பெண்ணுக்கு லேபர் பெயின் வந்திருக்கு சார்.. பட் தி வுமன்’ஸ் ப்ரீத்திங் இஸ்ன்ட் வெரி ஸ்டேபிள்..” என்று தலைமைப் பெண் கூறினார்.

“புரிகிறது.. ப்ளீஸ் ரிப்போர்ட் ட்டூ மீ ..வென் தேர் இஸ் ஆன் அப்டேட்..”

“யெஸ் கேப்டன்..”

ரிசீவரை வைத்து விட்டு சத்யனிடம் திரும்பியவர், “ஏதென்ஸ் ஏர்போர்ட் கான்ட்க்ட் பண்ணி எமர்ஜென்சி மெடிக்கல் டீமை ரெடியாக இருக்க சொல்லுங்க சத்யன்..” என்றார்.

“யெஸ் கேப்டன்..” என்றவன் வாயருகே இருந்த மைக்கைப் பிடித்து, “டவர்.. டவர்.. டவர்.. ஏர் பஸ் SW506 அலார்ட்.. எமர்ஜென்சி மெடிக்கல் டீம்.. எமர்ஜென்சி.. ரிக்வெஸ்டிங் மெடிக்கல் டீம் ப்ளீஸ்..” என்று அறிவித்தான்.

அங்கே உயிருக்காகப் போராடுவது தன் மனைவி என்று தெரியாமலேயே அந்த கர்ப்பிணி பெண்ணுக்காக மனதில் பிரார்த்தித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாஸ் பக்கமாகத் திரும்பிய சத்யன், “கேப்டன் பக்கமாக இருக்கும் வேறு ஏதாவது ஏர்போர்ட்டில் எமர்ஜென்சி லேண்டிங் பண்ண முடியுமா..? கண்ட்ரோல் ரூமில் பர்மிஷன் கேட்கவா..?” என்றுக் கேட்டான்.

“நோ வே.. இன்னும் தர்ட்டி மினிட்ஸ்ல ஏதென்ஸ் ஏர்போர்ட் வந்துடும்.. இது பெரிய ப்ளைட்.. போகும் வழியில் எங்கும் லேண்ட் பண்ணும் வசதியில்லை..” என்றார்.

“ப்ளீஸ் கேப்டன்… கண்ட்ரோல் ரூமில் கேட்கலாமே..? பக்கத்தில் ஒரு ராணுவ விமானதளம் இருப்பதாக வரைபடத்தில் காட்டுகிறது..” என கெஞ்சினான் சத்யன்.

அவனை கடுமையாகப் பார்த்தவர், “அந்த ஒரு பெண்ணுக்காக ஐநூற்றி பத்து பேரோட உயிரை பணயமாக வைக்க முடியாது சத்யன்.. இது பெரிய விமானம்.. சிறிய ஓடுதளத்தில் தரையிறக்க முடியாது. ஏர்போர்ட் எமர்ஜென்சி டீம் காப்பாற்றுவாங்க..” என்று அதட்டலாகக் கூறினார்.

இங்கே எமர்ஜென்சி படுக்கையில் முக்கிப் பார்த்தும் முடியாமல் சோர்ந்து போனவளாக மயக்கமடையும் தருவாயில், “ப்ளீஸ் மேம்.. புஷ் பண்ணுங்க.. இன்னும் கொஞ்சம் தான்..” என்று கெஞ்சினாள் ஆஷா.

உடலில் உள்ள உதிரம் அதிகமாக வெளியேறிய நிலையில் மூச்சு விட போராடியவளாக கடைசியாகத் தனது பிள்ளையை பெற்று விடும் முயற்சியில் பலம் கொண்டவரை அழுத்தமாக முக்கினாள் வசுந்தரா.

‘ப்ளோக்’ என்ற சப்தத்துடன் தாயின் கர்ப்பத்திலிருந்து அவசர கதியில் வெளியே வந்தது வசுந்தராவின் குழந்தை.

“தாங்க் காட்..” என்றபடி, “சிஸர் கொடு..” என்று அனுஷாவை நோக்கி கை நீட்டினாள். கைகள் நடுங்க கத்தரிக்கோலைக் கொடுக்கும் போது, “ஸ்ட்டேரிலைஸ் பண்ணிட்டியா..?” என்று ஆஷா அதட்டலாகக் கேட்க, மெதுவாகத் தலையசைத்தாள் அனுஷா.

கீழே விழுந்தப் பொருட்களை சுத்தம் செய்யாது அப்படியே அள்ளிப் போட்டு எடுத்து வந்த ஞாபகத்தில் மேலும் உடல் நடுங்க ஆரம்பித்தது.

குழந்தையின் தொப்புள்கொடியை கட் செய்து முடிச்சுப் போட்டு அருகிலிருந்த பணிப்பெண்ணிடம் கொடுத்து, “ஹாட் வாட்டரால் துடைச்சுட்டு பேபியை கவர் பண்ணி வை..” என்று உத்தரவிட்டு விட்டு வசுந்தராவிடம் திரும்பி, “பாய் பேபி மேம்..” என்றாள்.

அரை மயக்கத்தில் மெல்லிய புன்னகை முகத்தில் விரிய, “தாங்க்ஸ்..” என்றவள் அருகிலிருந்த அனுஷாவை உற்றுப் பார்க்க, அனுஷாவின் சர்வாங்கமும் ஒடுங்கிப் போனது.

குழந்தை பிறந்த பிறகும் உதிரப்போக்கு கட்டுக்கடங்காமல் கட்டிலிலிருந்து வழிந்து ஓடையாக ஓடியது கண்டு அதிர்ந்து போனாள் ஆஷா. வசுந்தராவின் வலக்கை அனுஷாவை நோக்கி நீண்டது. ஆதரவுத் தேடி, நீட்டியவளின் கையைப் பற்றாமல் நடுக்கத்துடன் பின்னால் நகர்ந்தவளைப் பார்த்தபடியே மயக்கத்தில் கண்மூடினாள் வசுந்தரா.

கேப்டனின் அறைக்குத் தகவல் கூறிய ஆஷா, “ப்ளீடிங் கண்ட்ரோல் ஆகலை கேப்டன்..” என்று வேதனையுடன் கூறினாள்.

காக்பிட்டில் இருந்த இரு ஆண்களும் மவுனமாக அமர்ந்திருந்தனர். பிரார்த்தனையைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலை.

விமானம் தரையிறங்கும் நேரம். அதற்கான அறிவிப்புகளோடு கண்ட்ரோல் ரூமில் அனுமதிப் பெற்று டவர் கோபரம் வழிகாட்ட, ஏதென்ஸ் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது விமானம்.

தயாராக இருந்த ஆம்புலன்ஸில் இருந்த இன்குபேட்டர் கருவியில் குழந்தையை வைத்து விட்டு வசுந்தராவை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு முன் ஸ்டெர்ச்சரில் பரிசோதித்த டாக்டர் அவள் இறந்து விட்டதை வருத்தத்துடன் கூறி உறுதி செய்தார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *