வீரம்

சலசலத்து கொண்டிருந்த அரசவை ஔரங்கசீப்பின் வருகையால் ஆழ்ந்த அமைதிக்கு போனது.தனது சிம்மாசனத்தில் அமர்ந்த ஔரங்கசீப்பின் முகம் இறுகியிருந்தது.இந்துஸ்தானத்தின் பெரும்பகுதியை தன் காலடியில் வைத்திருந்த ஔரங்கசீப் குரானை படியெடுத்தும், குல்லாய்களை தைத்து விற்றும் வரும் சொற்ப வருமானத்தில் தன் தேவைகளை கவனித்து கொள்பவன்.தனக்கென தனி சமையலைக்கூட ஔரங்கசீப் செய்து கொள்வதுண்டு.சாப்பாட்டில் விசம் வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் மன்னர் இதை செய்து கொண்டிருப்பதாக ஒரு வதந்தி கால்கள் இன்றி நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறது.எந்த நேரத்தில் என்ன மாதிரியான முடிவை அவன் எடுப்பான் என்பது அவனை படைத்த அல்லாவிற்கே தெரியாத ரகசியம்.தன் கூர்த்த பார்வையை அவையில் செலுத்திய ஔரங்கசீப் “அஸ்வமேதயாகம் என்றால் என்ன? “என்றான்.

அரசவையில் கல் எரியப்பட்ட குளமாய் ஒரு சலசலப்பு தோன்றி மறைந்தது.துணிந்த ஒருவர் தன் நடுக்கத்தை மறைத்து கொண்டவராக “மாமன்னர்கள் நடத்தும் ஒரு யாகம் மன்னா! “என்றார்.

பதில் சொன்னவரை கூர்ந்து பார்த்த ஔரங்கசீப் “நேற்றிரவு ஒரு தோல்பாவை கலைஞன் ராமாயணத்தை கூத்தாக நடத்தினான்.எனக்கு அதை காண விருப்பமில்லை.என் மனைவிகளுக்காக சற்று நேரம் காண நேர்ந்தது.எனக்கு அதிலிருந்து ஒரு யோசனை தோன்றியது! “

“சொல்லுங்கள் மன்னரே? “

“நானும் அது போல் ஒரு விசயத்தை செய்ய நினைக்கிறேன்.”

“யாகம் வளர்ப்பது இஸ்லாத்திற்கு எதிரானது மன்னா! “

“அதை நான் அறிவேன்.இது வேறு மாதிரியானது.நன்கு அலங்கரிக்கப்பட்ட யானையை நான் அனுப்பப் போகிறேன்.!”

“யாகத்தில் குதிரைகளைத்தான் பயன்படுத்துவார்கள்! “

“நான் சற்று வித்தியாசமாக யானையை பயன்படுத்துகிறேன்.அதில் என் ஒரு காலணியை வைத்து நாடுநாடாக அனுப்பப் போகிறேன்.எனக்கு கப்பம் கட்டும் என் அதிகாரத்திற்குட்பட்ட குறுநில மன்னர்கள் தங்களின் சிம்மாசனத்தில் என் பாதுகையை வைத்து வழிபட்டு மரியாதை செய்ய வேண்டும்! “

“மன்னா! இது முறையல்ல! “

“ராமனின் பாதுகைகள் ஆண்டதாக உங்களின் புராணங்கள் சொல்கின்றன.சற்று மாறுதலாக என் பாதுகைகள் நாட்டை ஆளட்டுமே? மேலும் என்னை எதிர்க்கும் ஒரு வீரனையும் நான் இதுவரை காணவில்லை.அப்படி ஒருவனை நான் கண்டு விட்டால் இந்த பவனி நிறுத்தப்படும்.!”

“நீங்கள் இந்துஸ்தானத்தின் மன்னர்களை அவமானப்படுத்துகிறீர்கள்? “

“இல்லை! அடிமைகளில் சுயமரியாதையுள்ள ஒரு வீரனாவது இருக்கிறானா என்று கண்டு பிடிக்க நினைக்கிறேன்.!”

மறுநாள் தளபதி ஜீல்பிர்கான் தலைமையில் ஒரு படைபிரிவு செருப்பை சுமந்து கொண்டீருந்த யானையுடன் கிளம்பியது.இதென்ன அக்கிரமம், அநியாயம் என்று நினைத்தாலும் குறுநில மன்னர்களுக்கு ஔரங்கசீப்பின் பெரும் சைன்யம் கண்முன் வந்து நின்று பீதி கிளப்பியது.யானைக்கு கோட்டை கதவுகள் அகல திறந்தன.ஔரங்கசீப்பின் முகத்தில் ஒரு சிறு புன்னகை தோன்றியது.வீரத்தின் விளை நிலமான ராஜபுதனம் பணிந்த போது ஔரங்கசீப்பின் சிரிப்பு உச்சத்தை எட்டியிருந்தது.என்னை எதிர்க்க இனி எவன்? இறுமாப்பில் நெஞ்சு விரிந்தது ஔரங்கசீப்பிற்கு.

தக்காணம் தாண்டி ஜீல்பிர்கான் காவேரிகரையை அடைந்தான்.அடுத்தது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை.தன் நாட்டின் எல்லையில் யானையோடு காத்திருக்கும் ஜீல்பிர்கானை நினைத்து கும்பி எரிந்தது நாயக்க மன்னனான முத்து வீரப்பனுக்கு.என்ன ஆணவம் ஔரங்க சீப்பிற்கு.? அடக்குகிறேன் அவன் திமிரை என்று கரம் வைத்து காத்திருந்தான் நாயக்கன்.

வந்து சேர்ந்தது ஓலை.திறந்தன கோட்டை கதவுகள்.ராஜ மரியாதைகளை மட்டுமே சந்தித்திருந்த ஜீல்பிர்கான் அரசவையில் ஆணவத்தோடு நின்றான்.கை தட்டியவுடன் நாயக்கனுக்கு எதிரே தாம்பாளத்தில் வைக்கப்பட்டது ஔரங்க சீப்பின் ஒற்றை செருப்பு.
சிம்மாசனத்திலிருந்து சடசடவென்று இறங்கி வந்த நாயக்கன் தன் காலை செருப்பில் நுழைத்தான்.”அடேய் முட்டாளே! உன் மன்னன் ஒரு செருப்பைத்தான் அனுப்பியிருக்கிறான்.இன்னொன்று எங்கே? “இடியாய் இறங்கியது மன்னனின் குரல்.எட்டி உதைத்ததில் எகிறி உருண்டது தாம்பாளம்.தாம்பாளம் மட்டுமா உருண்டது? டெல்லியின் மானமும் சேர்த்தே உருண்டது.

எதிர்பாராத இந்த அவமானத்தால் திகைத்து நின்றான் ஜீல்பிர்கான்.”அவமானம்! “என்று கைகளை பிசைந்தவனை பார்த்து எக்காளமாக சிரித்தான் முத்து வீரப்பன்.செய்வதறியாது வெளியேறியவனிடமிருந்து பாதுஷாவிற்கு ஓலை பறந்தது.டெல்லியிலிருந்து படை உதவி தேவை என!
வாய் விட்டு சிரித்து கொண்டிருந்த ஔரங்கசீப்பின் சிரிப்பை நிறுத்தியது ஓலை.”வடக்கு முழுவதையும் வென்று விட்டதாக நினைத்தேன்.தெற்கு என்னை எதிர்த்து நிற்கிறது.என்னை எதிர்க்கும் ஒரு வீரனை நான் பார்த்து விட்டேன்.போதும் செருப்பு பவனி. திரும்பி வா ஜீல்பிர்கான்.தெற்கு தனித்துவமானது.வெல்ல முடியாதது.யாருக்கும் அடி பணியாதது.அதன் மீதான படையெடுப்பு தோல்வியில் முடியுமென என் அனுபவம் சொல்கிறது! “

ஔரங்கசீப்பின் செருப்பு பவனி முத்து வீரப்ப நாயக்கனால் முடிவுக்கு வந்தது.

#ஔரங்கசீப்பின் படைகளை முத்து வீரப்பநாயக்கன் தோற்கடித்து விரட்டியதாக சரித்திரம் சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *