மஞ்சள் வான் முகில்
1992-ல் கோவை வேளாண் பல்கலையில் இளமறிவியல் தோட்டக்கலை மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். பூ மார்க்கெட் பாபா காம்ப்ளெக்ஸில், தர்சனா திரையரங்கில் “வண்ண வண்ண பூக்கள்” படம் வந்திருந்தது. பாலுவின் படங்கள் எதையும் தவற விடுவதில்லை. ஒருநாள் விடுதியில் இரவுணவு முடித்துவிட்டு, என்னைப் போல் ராஜாவை மனம் முழுதும் நிரப்பிக் கொண்டிருக்கும் சீனியர் அண்ணா சேகர், நண்பன் தாமு, நான், மூவரும் சைக்கிளில் இரவுக் காட்சிக்குச் சென்றோம்.
***
தர்சனா அகலம் குறைவான சிறிய திரையரங்கம். “மல்லிசேரி பீடி” விளம்பரம் திரையில் முடிந்ததும், திரையரங்கில் முற்றிலுமாக விளக்கை அணைத்தார்கள்.
படுக்கை அறையில் சிம்னி விளக்கோடு படம் துவங்கியது. பக்கத்தில் தங்கை உறங்கிக் கொண்டிருக்க, மனோ தூங்காமல், கண்களில் கோர்த்த கண்ணீருடன் உட்கார்ந்திருக்கிறாள். வெளியில் மின்னல் வெட்டி மழை பெய்ய ஆரம்பிக்கிறது. மெதுவாக வெளியில் வந்து முற்றத்தின் அருகில் கட்டிலில் தூங்கும் அப்பாவைப் பார்க்கிறாள். அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை. திரும்ப படுக்கை அறைக்குச் சென்று, சிம்னியை எடுத்து டேபிளில் வைத்துக் கொண்டு கடிதம் எழுத ஆரம்பிக்கிறாள்.
விடிகிறது. அம்மா அடுப்படிக்கு வந்து தண்ணீர் வைத்து விட்டு படுக்கை அறைக்குச் சென்று சின்னப் பெண்ணை எழுப்புகிறாள். மனோ அங்கில்லை. “என்னடி ஆச்சர்யமாருக்கு. இன்னைக்கு சீக்கிரம் எந்திரிச்சுட்டாளா? அவளை இப்பவே குளிக்க வேண்டாம்னு சொல்லுடி. மழை பெஞ்சிருக்குது” கொல்லைக்குச் செல்லும் சின்னப் பெண்ணிடம் சொல்லிக்கொண்டே போர்வையை மடித்துவிட்டு டேபிளின் மேலிருந்த சிம்னியை ஊதி அணைக்கையில் டேபிளின் மேல் மடித்து வைத்த கடிதத்தைப் பார்க்கிறார்.
பதட்டத்துடன் ஓடி வந்து கட்டிலில் படுத்திருக்கும் கணவரை எழுப்புகிறார். கடிதத்தைப் படிக்கும் அப்பா இடிந்து போய் கட்டிலில் உட்காருகிறார். கொல்லையிலிருந்து திரும்பும் சின்னப் பெண் “அம்மா, அக்கா அங்க இல்லையே?” என்கிறார்.
”சுப்ரமண்யா பிலிம்ஸ் அளிக்கும்” என்ற டைட்டில் கார்டு, ராஜாவின் ஆன்மாவில் நுழையும் கீபோர்டு பின்னணி இசையுடன் துவங்குகிறது. திரையில் விநோதினியின் பெயர் வரும்போது கீபோர்டுடன் இணையும் புல்லாங்குழல் இசையில் மனது கரைந்து அப்போது காணாமல் போனதுதான், அடுத்த இரண்டு மணி நேரம் ஒரு மாய/பரவச உலகிலிருந்து திரும்பவில்லை.
***
ராஜாவின் படங்களில், என்னால் மறக்க முடியாத, பின்னணி இசையின் ஒவ்வொரு துணுக்கும் மனதின் ஆழத்தில் பசுமையாய் பதிந்து போன படம் “இதயத்தை திருடாதே”. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இதோ இப்போது அந்த மாயம் மறுபடி நிகழ்ந்தது. யார் இந்த மனிதன்? எது அவன் வழியாக இசை வடிவில் வெளிப்பட்டு உயிரை அசைக்கிறது? ஏன் “நான்” இல்லாமல் போகும் அனுபவம் உண்டாகிறது? துக்கம் போன்று, கீழே பூமி நழுவுவது போன்று, கண்களில் நீர் வரவழைக்கிறதே, இது என்ன?
இடைவேளைக்கு முன்னால், ஒரு காட்சியில், ஆற்றின் நீர்ப்பரப்பிலிருந்து கூட்டமாய் வெண் நாரைகள் மேலெழுந்து பறக்க ஆரம்பிக்கும். கூடவே ராஜாவின் வயலின்களும் மேலெழும். பாலு, இரண்டு நிமிடங்கள் அந்த பறக்கும் பறவைக் கூட்டத்தை கேமராவால் பின் தொடர்வார். ராஜாவின் வயலின்களின் இசையும் இணைந்து பறக்கும். பறவைகள் பறந்து ஓய்ந்து மரத்தின் மேல் அமரும் வரை அந்த வயலின்கள் நடத்தும் மாயாஜாலம்…நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தாமுவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான் கண்ணீர் விட்டதை இருளில் அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
***
ஒகேனகல் அருவிப் பகுதிக்கு முன்பு இரண்டு முறை போயிருக்கிறேன். ஆனால் இத்தனை அழகை இப்போதுதான் பார்க்கிறேன். பாலுவிடம், ”இந்த இடம் எங்கு ஐயா இருக்கிறது? கேமராவில் என்ன மாயாஜாலம் செய்தீர்கள்?” என்று மனசுக்குள் கேட்டுக் கொண்டேன். தி.ஜா-வின் “மோகமுள்” படித்துவிட்டு கும்பகோணத்திற்குப் போக விரும்பியது போல் “வண்ண வண்ண பூக்கள்” பார்த்துவிட்டு, ஒகேனகல் மறுபடி போய் சுற்ற வேண்டுமென்று பேராசை எழுந்தது.
“இளநெஞ்சே வா” பாடல், ஜேசுதாஸ் குரலில், ராஜாவின் புல்லாங்குழலோடு, பாலுவின் கேமராவால் அள்ளிப் பருகிய கவிதை. கவிதைப் பாத்திரங்கள் – பசும் பாறையில் நகரும் மரவட்டை, மண் உருட்டும் வண்டு, வெட்டுக்கிளி இணைகள், முகம் தூக்கிப் பார்க்கும் மான்கள், கண் அகல் விரித்துப் பார்க்கும் குரங்குகள், நகரும் பச்சோந்தி, ஒரு மனிதன் காதுகள் பிடித்து தூக்கிப் போகும் முயல்கள்…ஆஹா…மனது பரவசத்தால் விம்மியது.
“இன்னும் என்னை வெகு தூரம் கூட்டிச் செல்லடி” ராஜாவின் குரலும் அந்தகாரத்தில் எங்கோ வெகுதூரம் கூட்டிச் சென்றது.
***
“டாக்டர் சொன்னத நானுந்தான் கேட்டேன். நான் பொழக்கிறது ரொம்ப கஷ்டம். அது எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும். பாசத்தை விட்டுக் கொடுக்க முடியாம நீங்க பேசறீங்க. நான் எட்டு வயசுலேயே போயிருக்கணும். கொடுத்து வச்சவ, பதினாறு வருஷம் உங்க கூட இருந்துட்டேன், போதாது?” மனோ அழுதுகொண்டே அப்பாவிடம் சொல்கிறாள். அப்பா கலங்கும் குரலில் “அம்மாடி…செல்லம்…வீடு விக்கிறதென்னடா…என் உசிர வித்தாவது உனக்கு ஆபரேஷன் பண்றேன்” என்கிறார்.
ஹாஸ்பிடலில், படுக்கையில் இருக்கும் மனோ, சிவாவின் கை பிடித்துக் கொண்டு “நான் என்னம்மா பண்ணுவேன், எதுக்குமே எனக்கு டைம் இல்லயே சிவா” என்று குரல் உடைந்து அழும் காட்சி… நண்பர்கள் தாமுவும், சேகர் அண்ணாவும், நான் ”மனதளவில் வீக்கான எமோஷனல் டைப்” என்று கேலி செய்தார்கள். பரவாயில்லை. நான் அழுதேன் என்று ஒத்துக் கொள்வதில் எனக்கு வெட்கமேதுமில்லை.
***
”செண்பகத்தின் மார்பில் சாய்ந்து மனம் நொறுங்கி அழும் சிவா” – இந்த இறுதிக் காட்சிக்காகவே மனதில் உங்களை கண்ணீருடன் கட்டிக் கொள்கிறேன் பாலு.
வெங்கி
“Vanna Vanna Pookkal”
“வண்ண வண்ண பூக்கள்”
(1992 Indian – Tamil)
