மீராவின் பிரம்ம ராக்கதன்
ராக்கதன் – 12
நடுவீதியில் வாயில் தன் கரங்களை பதித்தவாறு அதிர்ந்து போய் நின்றவளின் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றார் மூர்த்தி.
இவ்வளவு நேரமும் சிந்தை செயற்பட மறுத்து வீதியில் உறைந்து நின்றவளுக்கு தந்தை தன்னை வீட்ற்குள் அழைத்துச் செல்வதை உணர்ந்த கணம் சட்டென அவருடைய கரத்தை உதறி விடுவித்தவள் மீண்டும் வீதியை நோக்கி ஓடிச் சென்றாள்.
“குட்டிம்மா என்ன பண்ற நீ…? உள்ளே வா….” என அதட்டினார் மூர்த்தி.
“அப்பா பிரம்மாவ அடிச்சுத் தூக்கிட்டுப் போய்ட்டாங்கப்பா… எப்படியாவது காப்பாத்துங்க பா ப்ளீஸ்… எனக்காகத்தான் அவர் அவங்ககிட்ட மாட்டிகிட்டாரு…. எனக்கு பயமா இருக்குப்பா…” என அழத் தொடங்கினாள் அவள்.
“இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்ல நீ அழாதே… முதல்ல உள்ள வா மீரா…. அப்பா சொல்றதைக் கேளு….” எனக் கூறியவர் வலுக்கட்டாயமாக அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று விட அவளுக்கோ மனம் துடிக்கத் தொடங்கியது.
எனக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தானே யாருக்கும் அடிபணியாதவன் எனக்காக மண்டியிட்டு நடுவீதியில் அமர்ந்து கொண்டான்.. தன்னால் அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என எண்ணியவள்,
“அப்பா அவர் எனக்கு எதுவுமே ஆகக்கூடாதுன்னுதான் அமைதியா இருந்தாரு… ஆனா… அ.. அவரோட தலைல அடிச்சு தூக்கிட்டுப் போயிட்டாங்க ஏதாவது பண்ணுங்க இல்லைன்னா அவரை கொன்னுடுவாங்க…. ஏதாவது பண்ணுங்கப்பா…. எனக்கு ரொம்ப பயமா இருக்கு… என்னால யாரும் சாகக்கூடாது..” என படபடத்தாள் மீரா.
“விடும்மா அவங்க அவங்க என்ன பண்றாங்களோ அதுதான் அவங்களுக்கு திரும்ப கிடைக்கும்…. பிரம்மா ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாது…. அவனுக்கு என்ன முடிவு வருதோ அது அவனா தேடிக்கிட்டதுதான்.. அதனால நீ கவலைப்படாதே….” என்ற தந்தையை அதிர்ந்து பார்த்தாள் மீரா
“பிரம்மா ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாதுன்னா அப்போ எதுக்காக அப்பா என்ன அவருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க….? அவர் கூட பேசும் போது பிரம்மா சார் பிரம்மா சார்னு பேசிட்டு இப்போ செத்தா கூட பரவாயில்லைன்னு சொல்றீங்களே இது என்ன பழக்கம்பா..? இத நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல….” என சற்றே கவலை கலந்த அதிர்ச்சிக் குரலில் கூறினாள் அவள்.
“அவனுக்கு உன்ன கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதுல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமே இல்ல குட்டிம்மா… அப்பா அவன்கிட்ட வாங்கின ஏழு கோடியை திரும்ப கொடுக்க முடியாம போயிடுச்சு… அன்னைக்கே பணம் வேணும்னு சொன்னதால என்ன பண்றதுன்னு தெரியல…. அதுக்கப்புறம்தான் அவனுக்கு உன்னை பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டான்…. பணம் கொடுத்தாலும் கொடுக்கலைன்னாலும் உன்னதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னதால என்னால எதுவுமே பண்ண முடியலடாம்மா…. அவனை எதிர்த்து இங்கே எதுவுமே பண்ண முடியாது…. மன்னிச்சிடும்மா….” என்ற தந்தையை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.
வாங்கிய பணத்திற்கு பதிலாக தன்னைக் கொடுத்து விட்டார்களா என்ற எண்ணம் தோன்றி அவளை வதைக்க இயல்பிலேயே யாரையும் கஷ்டப்படுத்த விரும்பாதவள் தன்னுடைய தந்தையிடம் அதற்கு மேல் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
“பிரம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா உனக்கு விடுதலைதானே குட்டிமா…” என்ற தந்தையின் வார்த்தைகள் நாராசமாய் அவளுடைய காதில் ஒலித்தன.
பிரம்மா கொடூரமாக கொலைகளை செய்பவன்தான் அதற்காக அவன் சாக வேண்டும் என்றெல்லாம் நினைப்பது தவறல்லவா..? அதுவும் தன்னைக் காப்பாற்ற போய் அவன் இறந்து போனால் அவளும் மடிந்தே போவாளே…
அந்தக் குற்ற உணர்ச்சியோடு அவளால் ஒருபோதும் வாழவே முடியாது என்பது புரிய தன்னுடைய கரங்களால் முகத்தை மூடிக்கொண்டவளுக்கு அழுகை பெருகியது.
மெல்ல அவள் அருகே வந்து அமர்ந்தார் கலா.
அவருக்கோ மகளின் மனநிலை புரிந்தது. என்னதான் இருந்தாலும் பிரம்மா மீராவின் கணவனாயிற்றே..
“கவலைப்படாத மீரா மாப்பிள்ளைக்கு எதுவும் ஆகாது…’ என்ற அன்னையை அணைத்துக் கொண்டவள்,
“அவர் சுயநினைவுல இல்லம்மா மயங்கிட்டாரு… அவர எதுவும் பண்ணிடுவாங்களோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு….” என்றவள் உடைந்து போய் அழத் தொடங்கினாள்.
சற்று நேரத்தில் எழுந்து கொண்டவள் “நான் எங்க வீட்டுக்குப் போறேன்… அங்கே போய் அவரோட ஆளுங்ககிட்ட சொன்னா நிச்சயமா பிரம்மாவ காப்பாத்திருவாங்க…. அப்பா ப்ளீஸ்பா என்ன அவரோட வீட்ல விடுங்களேன்….” என்ற மகளை இயலாமையுடன் பார்த்தார் அவர்.
“மீரா அவன் திரும்பி வந்தா நீதான் கஷ்டப்படுவ…. உனக்கும் அவனுக்கும் கொஞ்சம் கூட பொருந்தாது…” என்ற தந்தையைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்,
“அவர் யார்கிட்ட கோபப்பட்டாலும் என்கிட்ட அன்பாதான் நடந்துகிட்டாரு. எனக்கு பிடிக்கலைன்னா நான் டிவோர்ஸ் பண்ணிக்கிறேன்…. அதுக்காக அவர் சாக வேணாம் ப்ளீஸ்… என்னைக் கொண்டு போய் அவர் வீட்டில விடுங்க….” என கெஞ்சினாள் மீரா.
“என்னங்க அவளைக் கொண்டு போய் அவளோட வீட்டுல விட்டுட்டு வாங்க..” என்ற கலாவை கோபத்தோடு பார்த்தார் மூர்த்தி.
“என்ன பேசுறன்னு யோசிச்சுதான் பேசுறியா…?” என்ற கணவரை முறைத்தவள்,
“இந்த மாப்பிள்ளை வேணாம்னா நீங்க அப்பவே வேணாம்னு போராடியிருக்கணும்…. கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாளே அவளோட மனசுல பிரம்மா இடம் பிடிச்சிட்டாரு… இவ இந்த அளவுக்கு அவருக்காக அழுறான்னா இதுக்கு மேல நாம பிடிவாதமா இருக்கக் கூடாது…. முதல்ல அவ சொல்றத செய்ங்க….” எனக் கூற அப்போதுதான் மகளின் மனம் புரிந்தது.
ஒரே நாளில் தன் மகளுக்கு அதன்க் கொலைகாரனை பிடித்துப் போய் விட்டதா என அதிர்ச்சியாக இருந்தது அவருக்கு.
அதே அதிர்ச்சியில் தான் மீராவும் இருந்தாள்.
‘பிரம்மாவை எனக்குப் பிடித்திருக்கிறதா…? சே… இல்லவே இல்லை என்னுடைய உயிரை காப்பாற்றப் போய் அவருடைய உயிர் போகக்கூடாது என நினைக்கிறேன் அவ்வளவுதான்..’ என தன் மனதிற்குள் கூறி சமாதானம் செய்து கொண்டவள் வேகமாக சென்று அவர்களுடைய காரில் அமர்ந்து கொள்ள மூர்த்தியும் அவள் கேட்டுக் கொண்டதை போலவே பிரம்மாவின் வீட்டில் அவளை விட்டார்.
‘மீரா பேசிட்டு சீக்கிரமா வாம்மா…”
“இல்லப்பா நீங்க போங்க…. நான் அப்புறமா வரேன்…” என பிடிவாதமாக தந்தையை அனுப்பிவிட்டு அந்த வீட்டிற்குள் ஓடி வந்தவள் தன் முன்னே நடந்து வந்து கொண்டிருந்த மதனைக் கண்டதும் அழுகையோடு நின்றாள்.
“என்னாச்சு அண்ணி எதுக்காக இப்படி அழுறீங்க…? பிரம்மா எங்கே..?” எனப் பதற்றத்தோடு கேட்டான் மதன்.
அவளோ அழுதவாறே நடந்த அனைத்தையும் கூறி முடித்தவள் “எப்படியாவது பிரம்மாவை காப்பாத்திடுங்க ப்ளீஸ்….” என கைகளை கூப்ப சட்டென அவளுடைய கரங்களைப் பிடித்து கீழே இறக்கியவன்,
“ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது அண்ணி…. பிரம்மாவ யாராலையும் அவ்வளவு சீக்கிரமாக இப்படி கடத்திட்டுல்லாம் போக முடியாது… என்னோட கெஸ் சரியா இருந்தா அவனே தான் போய் இருப்பான்…. அவன் விரிச்ச வலையிலதான் அவனுங்க மாட்டி இருப்பானுங்க…” என்றான் மதன்.
“இ…. இல்ல அவரோட தலையில என் கண்ணு முன்னாடியேதான் பலமா அடிச்சாங்க… அவரை காப்பாத்துங்க…. ப்ளீஸ்ணா…..” என்றவளுக்கோ கண்ணீர் பெருக, மதனுக்கோ பாவமாகிப் போனது.
“சரி அண்ணி நீங்க இங்கேயே பத்திரமா இருங்க…. என்ன நடந்தாலும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க… இங்க உங்களோட பாதுகாப்புக்கு நிறைய பேர் இருக்காங்க… நான் போய் பிரம்மாவை கூட்டிட்டு வரேன்…” என்றவன் அங்கிருந்து சென்றுவிட அந்த வீட்டில் பூஜை அறை எங்கேயாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தவள் அதை கண்டுபிடித்து அதனுள் சென்று கைகளை கூப்பியவாறு அமர்ந்து கொண்டாள்.
அவளுடைய பிரார்த்தனைகள் யாவும் பிரம்மா நலமாக திரும்ப வேண்டும் என்பதிலேயே நிலைத்து இருந்தன.
********
“ஏதோ பெரிய டான் யாராலயுமே இவன பிடிக்க முடியாதுன்னுல்லாம் சொன்னாங்க…. இப்படி ஒரே அடியில சாஞ்சுட்டானே….” என காரில் இருந்தவர்களிடம் அந்த முகமூடிக்காரன் கூறிச் சிரிக்க அடுத்த நொடியே ஏளனமான சிரிப்பு அங்கே பெருகியது.
மயங்கிக் கிடந்த பிரம்மாவின் தலையில் ஒருவன் துப்பாக்கியை அழுத்தியவாறு இருந்தான்.
எங்கே அவன் எழுந்தால் தங்களுடைய கட்டுப்பாட்டை மீறி தங்களைக் கொன்று விடுவானோ என்ற அச்சம் அங்கு இருந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்தது.
இருந்தும் அதை வெளியே காட்டாது அவனைக் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுடைய சிரிப்புக்கு மத்தியில் அட்டகாசமான இன்னொரு சிரிப்பு சத்தம் கேட்க அங்கே இருந்தவர்களின் ஏளனச் சிரிப்பு சுவிட்ச் போட்டோற் போல நின்று போனது.
“ஹா…. ஹா…. இப்படிக் கொத்தா வந்து மாட்டிக்கிட்டீங்களேடா செல்லக் குட்டிகளா…..” எனச் சிரித்தவாறு கூறிய பிரம்மா ஒரு நொடியில் தன்னுடைய கரத்தை உயர்த்தி பின்தலையில் பதித்திருந்த துப்பாக்கி பிடித்த கரத்தை மடக்கி உடைத்து விட, அவனுடைய கரத்தில் இருந்து துப்பாக்கியோ கீழே விழுந்தது.
கரம் உடைந்து போனதால் வலியில் அலறினான் அவன்.
அடுத்த இரண்டு நொடிகளுக்குள் அந்த துப்பாக்கியைக் கைப்பற்றியவன் எழுந்து காரில் சாய்ந்து அமர காருக்குள் இருந்த மற்றைய மூவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் ஸ்தம்பித்தனர்.
“நீ…. நீ எப்படி…? உன் தலையில தானே இரத்தம் வந்துச்சு…?” என படபடப்போடு கேட்டான் அந்த முகமூடிக்காரன்.
பிரம்மாவோ அவனுடைய கேள்வியை அலட்சியப்படுத்தியவாறு கார் கதவோடு சாய்ந்து அமர்ந்து தன்னுடைய தொடையின் மீது மற்றைய காலைப் போட்டவன், “சிகரெட் வேணும்…” என்றான் கர்ஜனையாக.
அடுத்த கணம் அவனுடைய வாயில் சிகரெட் வைக்கப்பட்டதோடு இல்லாமல் அதை அவர்கள் பற்ற வைத்தும் விட, அவனுடைய இதழ்களில் வெளிப்பட்டது கேலிப் புன்னகை.
“இல்ல எனக்குப் புரியல… என்ன பாத்தா ஒரு அடியோட சாய்ற மாதிரியா தெரியுது…?” என்றவன் அடுத்த கணம் தன்னுடைய கரத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து மீராவைப் பிடித்து அவளுடைய கழுத்தில் கத்தியை பதித்திருந்த முகமூடிக்காரனுடைய வெற்றியிலேயே சுட்டுவிட ஒரு நொடியில் தன்னுடைய உயிர் பிரியும் என்பதை எதிர்பாராதவன் சடலமாக காருக்குள் சரிந்தான்
சட்டென காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் வண்டியை நிறுத்தி விட,
“நான் செம்ம கோவத்துல இருக்கேன் தங்கங்களா…. உங்க யார்கிட்டயும் எதுக்கு பண்ணீங்கன்னு கேட்க கூட எனக்குப் பிடிக்கல…. என் பொண்டாட்டி மேலயே கை வெச்சுட்ட்டான்ல….” என கர்ஜனையாகக் கேட்டவன் தன்னை அடிக்கப் பாய்ந்தவனின் நெற்றியில் அடுத்த புல்லட்டை இறக்கினான்.
ட்ரைவர் சீட்டில் இருந்தவனொ வேகமாக காரை விட்டு இறங்கி ஓடத் தொடங்க பெருமூச்சோடு பின்னால் இருந்து காரின் முன் பக்கத்திற்கு தாவியவன் கார் கண்ணாடியை இறக்கி ஓடிக்கொண்டிருந்தவனின் பின்னந் தலையை குறிவைத்து அவனுடைய கதையையும் முடித்துவிட்டு அந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
காருக்குள் இறந்து கிடந்த அந்த முகமூடிக் காரனைப் பார்த்தவன் “உனக்கும் எனக்கும் பிரச்சனைன்னா நீ என்னதானே டார்கெட் பண்ணனும்…? எதுக்கு என்னோட பொண்டாட்டி மேல கை வச்ச…? அவ குழந்தை மாதிரி.. நான் பாசமா பேசினாலே மிரண்டு போயிருவா…. நீ வேற மிரட்டித் தொலைச்சுட்ட இன்னும் ரெண்டு நாளைக்கு எப்படி சமாளிக்க போறேனோ தெரியலையே…” என புலம்பியவாறு காரை ஓட்டத் தொடங்கினான் பிரம்மா.
💜💜💜💜
