மயக்கும் மாய மோகினி
அத்தியாயம் – 1
“அடிப் பாவி….. என்னக் காரியம் டி செஞ்சுருக்க….. நீ இப்படி பண்றதுக்கா….. உன்னை அருமை பெருமையா வளர்த்தேன்….. அய்யோ என் நெஞ்சே ஆற மாட்டேங்குதே… நீ செத்துப் போடி…. செத்துப் போடி…..” எனத் தன் அருகில் ஏதும் அறியாத
பதுமையாக நின்றிருந்த ஸ்வர்ணலதாவை அடிப் பிண்ணி கொண்டிருந்தார் காமாட்சி.
“நீ எப்படிடா இதுக்குள்ள மாட்டுன……. உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சுருந்தேன்……… அதை இப்படி கெடுப்பேன்னு கனவுலகூட நினைக்கலயே…. ஏத்தா….. பணங்காட்டு மாரியாத்தா….. எம்ம மானம் போச்சு….. மருவாத போச்சு….. என்னங்கப் பாருங்கங்க…….. இவன் என்ன காரியம் பண்ணிவச்சுருக்கான்னு….. எம் மவன்…. எம் மவன்னு….. மார்மேலயும் தோள் மேலயும் போட்டு வளர்த்தீங்களே…. வளர்த்த கெடா மார்மேல பாயுதுனு சொல்லுவாங்க…. இவனே இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலயே….” என கதறிக் கொண்டிருந்தார் மகாராணி.
இவர்களின் விஷயம் கேள்விப்பட்டு பதறி ஓடி வந்தனர் ராமகிருஷ்ணனும் அழகேசனும். ராமகிருஷ்ணன் பல்பொருள் அங்காடிகள் பலவற்றுக்கு ஓனராக இருப்பவர். சூர்யதேவின் தந்தை.
அந்த பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்யும் சாதாரண சூப்பர்வைசரின் மகள் தான் ஸ்வர்ணலதா.
‘இப்ப நான் இங்க என்ன பண்ணிட்டேன்னு இவங்க எல்லோரும் என்னைய ரவுண்டு கட்டி அடிக்குறாங்க…..’ என மனதில் நினைத்தவாறு அங்கிருந்த அனைவரையும் மலங்க மலங்கப் பார்த்து கொண்டிருந்த ஸ்வர்ணலதாவை நோக்கிச் சென்றான் சூர்யதேவ்.
“ஏய்…. இங்கப்பாரு….. உனக்கும் எனக்கும் உள்ளே எதுவும் நடக்கலைன்னு இவங்கக்கிட்ட சொல்லு…..” என அவள் கையைப்பிடித்திழுத்தான் அவன்.
வாயைத் திறந்தால் நிற்காமல் பேசும் அவளுக்கு அப்போது பேச வார்த்தைகளேதும் வரவில்லை. கட்டியிருந்த தாவணி கசங்கி தலையெல்லாம் கலைந்திருந்தது. கன்னத்திலும் கழுத்திலும் கடிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. அவளது உதடுகள் வீங்கி தடித்து காணப்பட்டது. இவ்வாறு தோற்றமளிக்கும் படி அங்கு என்ன நடந்தது….??
அவளுக்கு எதுவுமே ஞாபகமில்லை. நேற்று மாலை வழக்கம் போல் சூர்யதேவின் தங்கை மானஷாவிடமிருந்து நோட்ஸ் வாங்குவதற்காக லிஃப்டினுள் சென்றதும் நோட்ஸ் வாக்கியப் பிறகு சூர்யதேவுடன் லிஃப்டினுள் சென்றது மட்டுமே அவளுக்கு நினைவில் இருந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு என்ன நேர்ந்தது…..?? அவளது உடை நலுங்கிப் போயிருக்க காரணமென்ன…?? எதுவுமே அவளுக்குத் தெரியாது….. இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தவள் திடீரென மயங்கிச் சரிந்தாள் அவளை தனது கைகளில் தாங்கிக் கொண்டவன் அவர்கள் வசிக்கின்ற மானஷா அப்பார்ட்மெண்ட்டின் பகுதி நேர டாக்டர் அனாமிகாவிடம் தூக்கிச் சென்றான்.
யாருக்கும் இல்லாத அக்கறை தனக்கேன் வந்தது என அவனறியான். ஏதோ உள்ளுணர்வு தூண்டிவிட இவ்வனைத்தையும் செய்து கொண்டிருந்தான் சூர்யதேவ்.
“டாக்டர்….. இவ மயங்கி விழுந்துட்ட…. என்னன்னு பாருங்க….??” என சூர்யதேவ் கூற
“டாக்டர்….. எம் பொண்ணை இவன் கெடுத்துட்டான்…. அது நடந்துச்சா இல்லையான்னு வர்ஜினாலிட்டி டெஸ்டு பண்ணிடுங்க டாக்டர்….” என காமாட்சி கூற அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ். சூர்யதேவ் எவ்வளவு ஒழுக்கமானவன் என அங்கிருந்த அனைவருக்குமே தெரியும். அப்படியிருக்கும் போது காமாட்சி இப்படி கூறவும் அனைவருமே அதிர்ந்து நின்றிருந்தனர்.
“ஆன்ட்டி….. என்னப் பேசுறீங்க…?? நான் என்ன அப்படிப்பட்ட பையனா….?? எத்தனை வருஷமா நீங்க இங்க இருக்கீங்க…. உங்களுக்கு என்மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லையா….??”
“இங்கப்பாரு சூர்யா…. பாதிக்கப்பட்டு இருக்குறது…… எம் பொண்ணு….. இவளை இந்த நிலையில என்னாலும் பார்க்க முடியல…. அதுவுமில்லாம நடந்தது என்னன்னு எனக்கு தெரியனும்…. ப்ளீஸ் டாக்டர்…..” எனக் கெஞ்சிய காமாட்சியைப் பார்க்க அங்கிருந்த அனைவருக்குமே பாவமாக இருந்தது.
“அவங்க தான் அவ்வளவு தூரம் சொல்றாங்களே…. ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்தா தான் என்ன….??” என கூட்டத்தில் இருந்த ஒருவர் கூற
” நெருப்பில்லாமல் புகையுமா….?? என்ன நடந்துச்சுன்னு டெஸ்ட் பண்ணி தெரிஞ்சாத்தானே நாமளும் மேற்கொண்டு பேச முடியும்….” என மற்றொருவர் கூற
” சூர்யா தங்கமானப் புள்ள……. இவ தான் அவே மனச கெடுத்துருப்பா…. நிக்குறாப் பாரு ஒண்ணும் தெரியாதவ மாதிரி….” என மற்றொரு பெண் கூற
“ஆமா…. ஆமா….. ஊசி இடங்கொடுக்காம நூலு நுழையுமா…..??” என மற்றொரு பெண் கூற அக்கூட்டத்தில் ஸ்வர்ணலதாவின் மானம் ஏலமிடப்பட்டது.
“ஓகே…. நான் டெஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்…..” என சூர்யதேவையும் ஸ்வர்ணலதாவையும் டெஸ்ட் செய்து பார்த்ததில் சூர்யதேவால் தான் ஸ்வர்ணலதா கெடுக்கப்பட்டாள் என்பதை உறுதி செய்தார் அனாமிகா.
“டாக்டர்…. இட்ஸ் நாட் ட்ரூ….. எங்களுக்குள்ள அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை….. அப்படி நடந்தா எனக்கு ஞாபகம் இருக்குமே…. எனக்கு எதுவும் ஞாபகமில்லை….. நா…. நானிருக்கும் நிலையில இதெல்லாம் சாத்தியமேயில்ல….. நீங்கப்…. பொ…. பொய் சொல்றீங்க…..”
“நோ……. நோ…… மை சன்…… இட்ஸ் ட்ரூ…. சயின்ஸ் பொய் சொல்லாது….” எனக் கூறிய டாக்டரை பொறுமையிழந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்.
“நான் அப்பவே நினைச்சேன்….. இழந்தான் என் பொண்ணை கெடுத்துருக்கான்….. இப்போ என் பொண்ணுக்கு என்ன வழி சொல்லப் போறீங்க……??”
“சும்மா சத்தம் போடாதீங்க காமாட்சியம்மா….. மகாம்மா எவ்ளோ பெரிய ஆளு…. இந்த அப்பார்ட்மெண்ட்டே அவங்களோடது தான்….. ஆனா நீங்க சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்….. உங்களுக்கும் அவங்களுக்கும் இருக்குற வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்குற வித்தியாசம் மாதிரி ரொம்ப அதிகம்…..”
“ஆமா…..ஆமா….. அவங்க சொல்றது சரி தான்…. ஒண்ணுந்தெரியாதப் பையனை உங்கள் பொண்ணுதான் மயக்கிருப்பா…..” எனக் அங்கிருந்த அனைவரும் நாலு விதமாகப் பேச
‘ஓ….. இது தான் நாலு பேரு நாலு விதமாகப் பேசுறதோ……….’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் ஸ்வர்ணலதா. அவளுக்கு ஏன் இவர்கள் இப்படி கத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதே தெரியவில்லை.
“இங்கப்பாருங்க….. எம் பொண்ணு ப்ளஸ் டூ படிக்கும் சின்னப் பொண்ணு…. அவளைப் போய் உங்கள் பையன் கெடுத்துருக்கான்…… இது சைல்ட் அப்யூஸ் கேஸ்…… எம் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லாம….. நான் இருந்து போறதாயில்லை….. இங்கயே இந்த அப்பார்ட்மெண்ட் வாசல்ல தர்ணாப் போராட்டம் நடத்துவேன்….. பத்திரிக்கைக்குப் போவேன்….. மீடியாவுக்குப் போவேன்….. எம் பொண்ணுக்கு நீங்க நியாயம் சொல்ற வரைக்கும் விடமாட்டேன்…….” எனக் கூறியபடி தன் மகளோடு அப்பார்ட்மெண்ட் வாசலில் சென்று அமர்ந்தார் காமாட்சி.
“காமாட்சி என்னப் பண்றன்னு தெரிஞ்சுதான் பண்றியா…..?? இது நம்ம பொண்ணோட வாழ்க்கை…. எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு பண்ண முடியாது….. காலைலருந்து இங்கேயே எல்லோரும் நிக்குறாங்க…… வேடிக்கை பார்த்துட்டுருக்காங்க…. நாலு செவத்துக்குள்ள நடந்ததை நானூறு பேருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட்டுருக்க….. எந்திரிச்சு வா….. இவ மட்டுமா நமக்கு புள்ள…. இவள விட மூத்தவளுக இரண்டு பேர் இருக்காளுங்க….. அவளுக வாழ்க்கையையும் நாமம் பார்க்கனும்…..” என அழகேசன் காமாட்சியம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது….?? ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறோம்….?? என குழம்பிப் போய் அங்கிருந்த அனைவரையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் ஸ்வர்ணலதா. அனைவரும் தங்களது கையில் இருந்த மொபைல் போன் கேமரா மூலம் படம்பிடித்துக் கொண்டிருந்தனரே தவிர இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயலவில்லை.
என்ன செய்வது நம் நாட்டிற்கு வரமும் சாபமுமாக அமைந்து விட்டது இந்த மொபைல் போன்.
சிறிது நேரத்தில் அருகில் இருந்த மாதர் சங்கமும் இவர்களுடன் கலந்து கொள்ள மீடியாக்களும் அங்கே குவிந்திருந்தன. ஒரு பெண் நிருபர் தனது கைகளில் பைக்கை ஏந்தியவாறு ஸ்வர்ணலதா வின் முன் வந்து ஏதேதோ கேள்விகள் கேட்டாள். ஆனால் அவள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட ஸ்வர்ணலதாவால் பதிலளிக்க முடியவில்லை. அவளுக்கே தெரியாத ஒன்றைப் பற்றி அவள் எவ்வாறு விளக்க முடியும்.
“மகா…. மீடியாக்காரங்கல்லாம் வந்திட்டாங்க…… பிரச்சனை இன்னும் பெரிசா தான் ஆகுது….. அந்த பொண்ணைப் பார்த்தாலும் பாவமா இருக்கு…. நம்ம வீட்டு மருமகளா ஏத்துக்கிடுவோம்……” எனக் கூறிய ராமக்கிருஷ்ணனை முறைத்தார் மகாராணி.
“என் பையன் அழகென்ன…. அவனோட படிப்பென்ன…. அவனோட தரமென்ன…. அவனோட ஸ்டேட்டஸென்ன…. போயும் போயும் தெருவுலப் போற அன்னக்காவடிய என் மருமகளா ஏத்துக்கச் சொல்றீங்க…. உங்களுக்கு புத்தி என்ன பேதலிச்சுப் போச்சா….. என்னோட அண்ணே பொண்ணு ஐஸ்வர்யா ஐஸ்வர்யத்தோடு காத்துட்டுருக்கும் போது….. ச்சி…ச்சி… போய் உங்க வாயக்கழுவுங்க…..” என ராமகிருஷ்ணனின் வாயையடைத்தார் மகாராணி.
தெருவில் போலீஸ் ஜீப் வந்து நிற்கவும் அரண்டுப் போனார் மகாராணி.
“என்னங்க….. போலீஸ் ஜீப்பில் வந்துருக்காங்க…..”
“பின்ன…. வேறெதுல வருவாங்க…..?? நம்ம பையன் செஞ்ச காரியத்துக்கு ராஜ உபச்சாரம் பண்ண வந்துருக்காங்க….”
போலீஸ் அதிகாரிகள் ராமகிருஷ்ணனிடமும் அழகேசனிடமும் சமரசம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். “மைனர் பொண்ணை கெடுத்துட்டான்னு கம்பளைட்ண் கொடுத்த நூத்தி எண்பத்தெட்டின் கீழ் கைதி செய்ய வேண்டிவரும்…..” என போலீஸ் அதிகாரிகள் கூற தன் மனமிரங்கி வந்தார் மகாராணி. இன்னும் இரண்டு நாட்களில் அவளுக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகிவிடும் என அழகேசன் கூற அக்கூட்டத்தில் முன்னிலையிலேயே ஸ்வர்ணலதா மற்றும் சூர்யதேவின் திருமணம் முடிவு செய்யப்பட்டது. நடக்கும் அத்தனைக்கும் காரணமான அருவம் ஒன்று சூர்யதேவையும் ஸ்வர்ணலதாவையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
அதுவும் வெகுகாலமாக இருவரையும் பின்தொடர்ந்து வருகின்றது. இருவரில் ஒருவரின் கண்ணிற்காவது தெரிய மாட்டோமா என்று. இவையெல்லாம் மனிதத் தொடர்பு இல்லாத, மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்ட, மனித சக்திக்கு மீறிய ஒன்று.
அந்த உருவத்திற்கு உருவமில்லை. ஆனால் உணர்விருக்கிறது. நேற்று நடந்த இருவரின் சங்கத்திற்கும் சாட்சி இந்த அருவமா…….?? இல்லை சங்கமமாக காரணமே இந்த அருவமா……?? யாரால் சொல்ல இயலும்….??
தினமும் நம்மைச் சுற்றி பல அமானுஷ்யங்கள் நடக்கின்றன. ஆனால் அவையனைத்தையும் விபத்துக்கள் என்று நாம் தாண்டிச் சென்று விடுகிறோம். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு உங்களால் சரியான பகுத்தறிவு சார்ந்த விளக்கங்களைத் கூற முடியாது.
அதுபோல் தான் ஸ்வர்ணலதா வின் வாழ்க்கையில் புயலென நிகழ்ந்த விபத்தின் காரணங்களை யாராலும் விளக்கிக் கூற முடியாது. நேற்றிரவு என்ன நடந்தது என்பதை அந்த உருவமில்லா உருவத்திற்கு மட்டுமே தெரியும் ரகசியம்.
மாதர் சங்க தலைவி பானுமதியின் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனில் சூர்யதேவ் மற்றும் ஸ்வர்ணலதா வின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பும் நேரம் ஸ்வர்ணலதாவின் பெற்றோரிடம் வந்த சூர்யதேவ்
“உங்கள் பொண்ணை என் தலைல கட்டி வச்சதோட உங்க கடமை முடிஞ்சுடுச்சு…. இனி அவளைத் தேடி வர்ற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க….. என் பொண்டாட்டிய பார்த்துக்க எனக்குத் தெரியும்…..” எனக் கூறினான். தனதருகில் பயந்து மிரண்டு போய் விழித்தவளின் கையைப் பற்றி தனது வீட்டுக்கு இழுத்துச் சென்றான் சூர்யதேவ்.
போகும் அவர்களோடு அவர்கள் இணையக் காரணமாயிருந்த அருவமும் சென்றது. வீட்டு வாசலில் ஆர்த்தி எடுப்பதற்காக நின்றிருந்தாள் மானஷா. அவளுக்கு தன் தோழியே அண்ணியாக வந்ததில் மிகுந்த சந்தோஷம். ஆனால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இருக்க வேண்டும் அல்லவா….??
ஆர்த்தி எடுக்க நீட்டியத் தட்டை தூக்கி எறிந்துவிட்டு தன்னுடன் வந்தவளை வீட்டு வாசலின் வெளியே விட்டு விட்டு வீட்டின் உள்ளே நுழைந்தவன் நேரே தனதறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
பருவ முதிர்ச்சியடையாத மொட்டொன்று மலருவதற்கு முன்பே பறிக்கப்பட்டு வீதியில் நிற்க வைக்கப்பட்டது. யாருமற்ற அனாதையாக அவ் அப்பார்ட்மெண்ட்டின் வாசலில் நின்றிருந்தாள் ஸ்வர்ணலதா. இதே பத்து மாடி அப்பார்ட்மெண்ட்டின் ஐந்தாவது தளத்தில் தான் தனது பெற்றோரின் வீடும் உள்ளது. யாவரும் இருந்தும் யாருமற்ற நிலையில் இருக்கின்றாள் பெண்ணரசி.
