பெண் மனம்
சென்னை பேருந்தில் இருந்து விழுப்புரத்தில் இறங்கிய சண்முகத்திற்கு விக்ரவாண்டி பேருந்தை கண்டதும் நடுக்கம் வந்தது. வேறு வழி இல்லை, அவன் விக்ரவாண்டி போய்த்தான் ஆக வேண்டும்.
அவனுடைய பெரியப்பா மகன் வேலு விற்கு திருமணம். பெண் வீடு விக்ரவாண்டி என்பதால், அங்கேயே திருமணத்தை வைத்துக் கொண்டு விட்டார்கள்.
இதை தவிர்த்திருக்கலாம் தான் ஆனால் வேலு, சண்முகம் சென்னை வந்த புதிதில் செய்த உதவிகளை நினைத்துப் பார்த்து தவிர்க்க மனமில்லாமல், தற்பொழுது விக்ரவாண்டி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான் . அப்போதெல்லாம் வேலு விற்கு சொற்ப வருமானம் தான். மாதக்கடைசியில் வேலு தான் சண்முகத்திற்கு படி அளப்பான். ஒருமுறை சைட்டில் அடிபட்டு, வைத்திய செலவிற்கு பணம் இல்லாமல் தவித்த போது வேலு தான் ஓடி வந்து உதவினான்.
கண்களை இருக்க மூடிக்கொண்டு வசதியாக சாய்ந்து கைகளையும் இருக்கமாய் கட்டி கொண்டு அமர்ந்தான். பேருந்தில் அமர்ந்தவுடன் அவன் மனதில் ஏதோ..சலனம் .
“சூடான சுக்கு மல்லி…. காபி சூடான சுக்கு மல்லி காபி “அவன் கவனத்தை கலைத்தது.
மீண்டும் இருக்க கண்களை மூடிக்கொண்டான்.
“ஹேமா குட்டி நில்லுடி ” ஹேமா என்ற பெயரைக் கேட்டதும் துணுக்குற்று எழுந்தான்.
“ஹேமா ….ஹேமா …..” அவன் ஓசையின்றி முணுமுணுத்தான்.
விழுப்புரம் தான் சண்முகத்திற்கு சொந்த ஊர். அவன் கல்லூரி முடித்துவிட்டு இதோ இதே பேருந்து நிலையத்தில் தான் வெட்டியாக சுற்றிக் கொண்டிருப்பான். அவன் கூட ஜோடி சேர்ந்து சுத்த நான்கைந்து கல்லூரி நண்பர்கள்.
“வேலைக்கு போற யோசனையே இல்லையாடா அறிவு கெட்டவனே “
அவன் அப்பா திட்டியதோ
“ஏன்டா டெய்லி அப்பாகிட்ட திட்டு வாங்குற ஏதாச்சும் ஒரு வேலைக்கு போயண்டா? “
அம்மாக் கொஞ்சுவதோ அவன் மனதில் ஏறவே இல்லை. எதிர்காலத்தைப் பற்றி பெரிதாக ஏதும் திட்டமிடாத மனநிலை.
ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு பெயருக்கு ஏதோ ஒரு கம்ப்யூட்டர் கிளாஸ் போய்க் கொண்டிருந்தான்.
அழகான மாலை நேரத்து மழை நாள். சண்முகம் அன்றுதான் முதன் முதலில் அவளை சந்தித்தான் .
அவள், காட்டன் புடவையும் தலை நிறைய மல்லிகை பூவுமமாய் மங்களகரமாய் இருந்தாள் .
சண்முகம் மழைக்காக ஒரு டீக்கடை வாசலில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தான். சரியாக அவளும் அதே டீக்கடையை நோக்கி ஓடிவந்து ஒதுங்கினாள்.
அவளுக்கு குளுறியதோ என்னவோ முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.அவள் மாநிறம்தான் ஒல்லியான தேகம் தான் இருந்தும் பருவத்திற்கேற்ற கவர்ச்சி அவளிடம் நிறையவே இருந்தது.
சண்முகம் டீக்கடை மாஸ்டரை நோக்கி
“அண்ணே ஒரு டீ” என்றான் .அவள் திரும்பி தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காகவே.
அவள் லேசாய் திரும்பி சண்முகத்தை பார்த்தாள்.
“திடீர்னு மழை வந்திருச்சு இல்ல “.
என்று அவளைப் பார்த்தபடியே சொன்னான்.
அவளும் ஆம் என்பது போல் தலையை அசைத்தாள்.
டீக்கடை மாஸ்டர் டீயை சண்முகத்திடம் நீட்டவே,
சண்முகம் அவளை பார்த்து
” டீ சாப்பிடுறீங்களா?” என்று கேட்டான் .
“வேண்டாங்க பழக்கமில்லை”.
என்றாள்.
அவள் திடீரென்று மழையில் இறங்கி ஓடி ஏதோ ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
சண்முகம் இரண்டு மூன்று நாட்கள் அந்தப் பெண்ணையே நினைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் தவம் கிடந்தான் . அதுவும் குறிப்பாக மாலை நேரங்களில் அதிகமாக .
அவன் தவம் கெடவில்லை அவள் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு சண்முகத்தின் கண்ணில் பட்டாள்.
பார்வை பரிமாற்றம், புன்சிரிப்பு, ஓரக் கண் ஜாடை இப்படியே அவர்கள் காதல் வளர, சண்முகத்திற்கு அவள் யார் என்பதும் அவளுக்கு சண்முகம் யார் என்பதும் கூட தெரியவில்லை.
ஒரு நாள் கணினி வகுப்பில் எதேச்சையாய் வந்தாள். புதிதாய் வகுப்பில் சேர்ந்து இருக்கிறாளாம் அவளே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
இதன்பிறகு இருவரும் பெயர், ஊர், தொலைபேசி எண்கள் என்று சகலமும் பரிமாறிக்கொண்டனர்.இருவரின் மனங்களும் பரிமாறப்பட்டன.
பிறகென்ன ஓராண்டிற்கு காதல் புறாக்கள் உல்லாசமாய் காதல் வானில் பறந்து திரிந்தன.
அப்படி இப்படி என்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு விஷயம் தெரியவர, அவள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டாள்.அவளுடைய தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.
அவள் விக்கிரவாண்டி என்பதைத் தவிர சண்முகத்திற்கு வேறு எந்த தகவலும் அவளைப்பற்றி தெரியாது. காதல் மயக்கத்தில் அவன் தொலைபேசி எண்களை தவிர வேறு எதையும் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை.
ஆனால் பெண்ணின் வீட்டில் சண்முகத்தை பற்றி விசாரித்துக் கொண்டு அவன் வீட்டிற்கே வர, விஷயம் அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, மாமா ,அத்தை என்று எல்லோருக்கும் தெரிந்து வேறு வழி இல்லாமல் அவன் பெரியப்பா பையன் வேலுடன் சென்னைக்கு கிளம்பி போனான்.
வேலு உடன் சண்முகம் சென்னையில் தங்கி கொண்டு ஏதேதோ வேலைகள் செய்து இப்போது தான் நல்ல வேலையில் அமர்ந்து இருக்கிறான்.இந்த மூன்று ஆண்டுகளில் சண்முகம் ஒரு நாள் கூட அந்த பெண்ணை மறந்ததில்லை. சண்முகம் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்களை தினமும் ஒரு முறை முயற்சி செய்து பார்ப்பான்.
உபயோகத்தில் இல்லை என்று தான் வரும். சண்முகமும் தன்னுடைய தொலைபேசி எண்களை மாற்றாமல் வைத்திருக்கிறான். அவள் என்றைக்கேனும் ஒருநாள் தொலைபேசியில் அழைப்பாள் என்ற காரணம்தான் .
கண்டக்டரின் விசில் சத்தம் மீண்டும் அவன் கவனத்தை சிதைத்தது. அவன் கண் விழித்ததும் யாரோ ஒரு பெண் பருமனாக கண்ணுக்கு கீழ் கருவளையங்கள், கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள் .
அந்தப் பெண்ணின் முகம் சண்முகத்துக்கு யாரையோ நினைவூட்டியது.சண்முகத்திற்கு அந்த நினைவும் அந்தப் பெண்ணின் முகமும் ஈட்டியை போல் மனதில் குத்தியது.
“என்னதான் நம்ம ஆசையா காதலித்தாலும் விதி நம்ப வாழ்க்கையில வேற மாதிரி யோசிக்குது….. கல்யாணம் ஆனதுக்கப்புறம் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் வாழ்ந்து தீர வேண்டி இருக்கு…… அந்தப் பெண் தன்னுடைய அருகில் நின்றிருந்த வேறொரு பெண்ணிடம் கூற
” என்னடி சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு இருக்க…..? “என்று அந்தப் பெண் இவளை வினோதமாய் பார்த்தாள் .
சண்முகம் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.
விக்கிரவாண்டி க்கு இன்னும் 15 நிமிடங்களே உள்ளன. ஆனால் சண்முகத்திற்கு அந்தப் பதினைந்து நிமிடங்கள் திக் திக் என்று இருந்தது.
விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைந்ததுமே அந்தப் பெண் தன்னுடைய குழந்தையுடன் பஸ் கம்பியை மெதுவாக பிடித்துக்கொண்டு கீழே இறங்கினாள்.
அவள், இறங்கி ஒரு ஓரமாய் நின்று கொண்டு, சண்முகத்தை இரண்டு மூன்று தரம் உற்று நோக்கினாள். தன்னுடைய புடவைத் தலைப்பால் முகத்தை துடைத்துக்கொண்டு திரும்பி நடந்தாள்.
சண்முகம் பேருந்திலிருந்து இறங்கும் ஸ்மரணை கூட இல்லாமல் அப்படியே கைகளைக் கட்டியபடி அந்தப்பெண் போவதையே பார்த்தபடி, அமர்ந்திருந்தான்.
“டேய் மாப்ள எப்படா வந்த? “
என்ற பாலிய நண்பரின் கேள்விக்கு கூட பதில் சொல்லாமல், சண்முகம் தன்னுடைய கைபேசியில் முன்னாள் காதலியின் எண்களை டெலிட் செய்தான்.
