புயல் – 30
அவள் எழுதிக் கொடுத்த ஒப்பந்தக் கடிதத்தை மீண்டும் கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டவன், அருகே இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து மடமடவென அருந்தினான்.
அவளை வதைக்கிறேன் என நினைத்து தன்னைத்தான் அதிகம் வதைத்துக் கொள்கிறோமோ என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு.
அவள் இறுதியாகக் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் வேறு அவனுடைய இதயத்தைக் கொத்தாக இழுத்து எறிந்ததைப் போன்ற வலியை உணர வைத்திருக்க அவளைத் தேடிச் சென்றவன், அறைக்கதவுப் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்ததும் பதறிப் போனான்.
சற்றும் தாமதிக்காமல் படபடவென அவன் கதவைத் தட்ட சில நொடிகளிலேயே வந்து கதவைத் திறந்தவளின் முகமோ அழுததன் காரணத்தால் வீங்கிச் சிவந்து போய் இருந்தது.
அவளுடைய கரத்தைப் பற்றியவன் எதுவும் பேசாது அவளை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல அவளோ அமைதியாக அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவளைக் காரின் உள்ளே அமர வைத்தவன், வீட்டினைப் பூட்டிவிட்டு தானும் வந்து காரில் அமர்ந்து கொண்டான்.
எங்கே போகிறோம் என அவளும் கேட்கவில்லை.
எங்கே அழைத்துச் செல்கிறேன் என அவனும் கூறவில்லை.
அவனுடைய காரோ காற்றைக் கழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இடையில் அவன் எங்கேயும் தன்னுடைய காரை நிறுத்தவே இல்லை.
நெடுந்தூரப் பயணம் செல்வது போல பயணித்துக் கொண்டே இருந்தவனை, ஒரு நொடி புரியாமல் பார்த்தவள், பின் வீதியை வெறித்த வண்ணம் அந்த பயணத்தில் மூழ்கிப் போனாள்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுடைய பயணம் நீண்டு கொண்டே போக, இப்போது மிருதனின் கரமோ அவளுடைய மணிக்கட்டை மென்மையாக வருடிவிட்டது.
ஏதோ கோபத்தில் அவளை நோகச் செய்துவிட்டு தனக்குள் மருகிக் கொண்டிருந்தான் அவன்.
“உனக்கு ஏதாவது வேணும்னா கேளு..” என்றான் மிருதன்.
“எதுவும் வேண்டாம்..” எனக் கூறிவிட்டு மீண்டும் வீதியை வெறிக்கத் தொடங்கினாள் அவள்.
“இந்த மாதிரி நேரத்துல மாங்காய் சாப்பிட பிடிக்கும்னு சொல்லுவாங்களே உனக்கு வேணுமா..” எனத் திணறியவாறே கேட்டு முடித்தான் அவன்.
சட்டென அவனுடைய முகத்தை கூர்ந்து பார்த்தவள், தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.
அவளுடைய கோபமோ சற்றே குறைந்தது. தன்னைக் காயப்படுத்தி விட்டு எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் அவன் திணறிக் கொண்டிருப்பது புரிய, தன்னுடைய கரத்தை வருடிக் கொண்டிருந்த மிருதனின் கரத்தினை இறுகப் பற்றிக் கொண்டாள் அவள்.
அவன் கேட்டக் கேள்விக்கு எந்தவிதமான பதிலும் கூறாது, அவனுடைய தோளில் தன்னுடைய முகத்தைப் புதைத்துக் கொண்டாள் அவள்.
அவள் தன் தோளில் முகம் புதைத்ததும் அதிர்ந்தவன், சட்டெனக் காரை நிறுத்தினான்.
அவளோ அவன் மீது சாய்ந்தவாறு விழிகளை மூடிக்கொள்ள அவனுடைய கரமோ அவளின் தோளைச் சுற்றி வளைத்து தன்னோடு இறுகணைத்துக் கொண்டது.
இருவருக்கும் இடையே மீண்டும் மௌனம்.
சாலை ஓரமாக மரங்களின் நிழலில் வண்டியை நிறுத்தியவன் தன் தோளில் முகம் வைத்திருந்தவளின் கூந்தலை ஒதுக்கி அவளுடைய நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்தான்.
இம்முறை அவனுடைய முத்தத்திற்கு பதில் முத்தமாக அவளும் அவனுடைய தாடி அடர்ந்த கன்னத்தில் தன்னுடைய இதழ்களைப் பதித்து விட, அவனுக்கோ திகைப்பு மேலிட்டது.
கூடலில் கூட தன்னை மறந்து இதுவரை முத்தம் வைத்து விடாதவள், இன்று தானாகவே தன்னை அணைத்து முத்தம் வைத்ததும் அனைத்தையும் மறந்து போனான் மிருதன்.
தித்திப்பான உணர்வு..!!
கன்னம் குறுகுறுத்தது..
இன்னொன்று கிடைத்தால் நன்றாக இருக்குமே என ஏங்கத் தொடங்கியது அவனுடைய மனம்.
அவனுடைய கரமோ அவளை மேலும் தன்னோடு புதைத்துக் கொள்ள முயல, அவளுக்கோ முகம் சிவந்து போனது.
சிவந்த முகத்தை அவன் பார்த்து விடக்கூடாது என எண்ணியவள், மறுபக்கம் திரும்ப அவனுடைய கரங்களோ அவளின் கன்னங்களைப் பற்றி தன் முகத்தைப் பார்க்கச் செய்தது.
சிவந்து போயிருந்த அவளுடைய முகத்தையும், அந்த முகத்தில் மலர்ந்து விரிந்திருந்த ரோஜா இதழ்களையும் கண்டு தன்னை முற்றிலும் அவளுடைய முக பாவனைகளில் தொலைத்தவன், நொடியும் தாமதிக்காது அவளுடைய இதழ்களைச் சிறை செய்யக் குனிந்தான்..
இதழ்கள் உரசி விடும் இடைவெளியில் தயக்கம் பிறந்தது அவனுக்கு.
அவளுடைய விழியோடு தன் விழி கலந்தான். அவள் இமைகள் வெட்கம் எனும் வெண் கொற்றைக் குடையை குத்தகைக்கு எடுத்ததைப் போல அழகில் அவனை ஈர்த்து இழுக்க, அடுத்த நொடியே அவளுடைய இதழ்களைக் கவ்விக் கொண்டான் அவன்.
அவனுடைய முத்தத்தில் அவளுடைய உடலில் ஊடுருவியது இன்ப நடுக்கம்.
இதழோடு இதழ் சேர்ந்ததும் அவளோ அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள், பின்னர் அவன் செய்த மாயத்தில் நேத்திரங்களை மூடித் தளர்ந்து போக, அவனுக்கோ அவளுடைய இதழ்களை சுவைப்பது இன்னும் வசதியாகிப் போனது.
பல நாட்கள் அவளை விட்டு பிரிந்து இருந்தவனுக்கு இன்று கிடைத்த இதழ் முத்தம் சொர்க்கத்தில் சுரக்கும் அமுதம்போல தித்திக்க, அதை இழக்க மனம் இல்லாதவன் அவளுடைய கூந்தல் காட்டிற்குள் தன் கரம் நுழைத்து தன் முகத்தோடு அவளுடைய வதனத்தை நெருக்கிக்கொண்டான்.
அவனுடைய அதிரடியில் அவளுக்குத்தான் மூச்செடுக்கவும் சிரமமாகிப் போனது.
அவளுடைய மென்மையான கரங்களோ அவனுடைய மார்புச் சட்டையை இறுகப்பற்றிக் கொள்ள, முத்தம் என்ற பெயரில் அவளுடைய இதழ்கள் முழுவதும் அவனுடைய அதரங்களுக்குள் முழுவதுமாய் மாட்டிக் கொண்டன.
தற்காலிகச் சிறைதான் அது.. இருந்தும் அந்த இதழ்ச் சிறையில் இருந்து விடுதலை பெறும் எண்ணம் இருவருக்குமே இல்லை.
நீண்டு கொண்டே போன முத்த யுத்தத்தில் வீரன் அவனோ அவள் இதழ்களை பல்படக் கடித்து விட, அவளோ சட்டென அவனை தள்ளிவிட்டு வேகமாக மூச்சை எடுத்து, தன்னை சமாதனப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
அவள் தள்ளியதும் அவளுடைய இதழ்களை விடுவித்தவன், அவளுடைய சங்குக் கழுத்தடியில் புதையல் எடுக்கத் தொடங்கினான்.
முதல் முறையாக வெட்கம் கொண்டாள் கீதா.
இதற்கு முன்னர் எல்லாம் அவன் தன்னைத் தொடும் போது சீற்றமும், வெறுப்பும் மேலோங்க அமைதியாக அசைவற்று கிடப்பவளுக்கு இன்று மனதுக்குள் அவன் நுழைந்த பின், நெருங்கும் முதல் நெருக்கம் ஆதலினால் உணர்வுகள் வெடித்துக் கிளம்பின.
அவனுடைய கரங்களோ அவளுடைய மேடிட்ட வயிற்றுக்கும், மார்புக்கும் இடைப்பட்ட பகுதியில் மெல்ல வருடிக் கொடுத்து, அணைத்துக்கொள்ள விழிகளை மூடி இருக்கையில் நன்றாகச் சாய்ந்து கொண்டாள் அவள்.
அவள் இருக்கையில் சாய்ந்ததும் அவளுடைய வயிற்றினை அழுத்தாது அவள் மீது மெல்லப் படர்ந்தவன் மீண்டும் அவளின் சிவந்த செவ்விதழ்களை கவ்விக்கொண்டான்.
உமிழ் நீர் அழகியலாய் அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
அவனோ உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, அவளுடைய கழுத்தின் கீழே, தன்னுடைய முத்த வேட்டையைத் தொடர ஆரம்பிக்க நடுவீதியில் காருக்குள் இருந்து அவன் செய்யும் வேலையில் செங்கொழுந்தாகிப் போனவள், அவனை எப்படி நிறுத்துவது எனத் தெரியாது திணறித்தான் போனாள்.
மிருதனோ அவளுடைய மணிக்கட்டைப் பற்றி அதிலும் அழுத்தமாக முத்தங்களை பதிக்க அவளுக்கோ விழிகள் கலங்கிப் போயின.
அவனுடைய மார்பில் மீண்டும் கரத்தைப் பதித்து அவனைத் தன்னில் இருந்தும் விலக்கியவள் அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
“ஆர் யு ஓகே..?” என மெல்லிய குரலில் கேட்டான் அவன்.
அவனுடைய நேரடிக் கேள்வியில் மறுப்பாக தலையசைத்தாள் அவள்.
“எனக்கு வலிக்கல.. நீங்க பீல் பண்ணாதீங்க..” என அவனுடைய மனதிற்குள் குழப்பிக் கொண்டிருக்கும் விடயத்தை அறிந்து கூறினாள் அவள்.
உண்மைதான் அவளை மிகவும் வலிக்கச் செய்து விட்டோம் எனத் தனக்குள் மருகிக் கொண்டிருந்தான் மிருதன்.
இரு உயிராய் இருப்பவளைத் தன் கோபத்தில் கொடுமைப்படுத்துகிறோமோ.. என்று கூட அவனுக்கு தோன்றத் தொடங்கியிருந்தது.
அவளுடைய மனமோ பாதிக்கப்படக்கூடாது என எண்ணியவன், அதன் காரணத்தினாலேயே அவளை அழைத்துக் கொண்டு வெகு தூரம் வெளியே வந்திருந்தான்.
அவனுடைய செயல்களின் பின்னே இருக்கும் அர்த்தம் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
அக்கணம் அவனுக்கு தன் மேல் இன்னும் காதல் இருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்து கொண்டவள், அவனை மையல் ததும்பும் வண்ணம் பார்த்தாள்.
“ஏதாவது வேணுமா.?” எனக் கேட்டவன், அவளிடம் இருந்து விலகி இருக்கையில் சரியாக அமர்ந்து கொண்டான்.
“ஐஸ்கிரீம் சாப்பிடனும் போல இருக்கு வாங்கி தர்றீங்களா..” எனக் கேட்டவளை மெல்லியப் புன்னகையோடு பார்த்தவன், அடுத்த சில நொடிகளில் அவளுக்கு தேவையான ஃபிளேவரை கேட்டறிந்து வாங்கிக் கொடுத்திருந்தான்.
அதனைச் சுவைத்தவாறு மீதிப் பயணத்தை கழிக்கத் தொடங்கினாள் கீதா.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காரிலேயே பயணித்துக் கொண்டிருந்தவர்கள், கிட்டத்தட்ட மாலை நெருங்கியதும் தான் வீட்டுக்கு வந்தார்கள்.
வீட்டினுள் நுழைந்ததும் அவளோ சோர்வோடு சோபாவில் அமர்ந்து கொண்டவள், “குளிக்கணும்..” என மெல்ல முனகினாள்.
“ஓகே இங்கேயோ வெயிட் பண்ணு.. நான் ஹீட்டர் ஆன் பண்ணிட்டு வர்றேன்..” என்றவன் அவள் குளிப்பதற்கு தேவையான ஆடையையும் எடுத்து வைத்துவிட்டு வெளியே வர, கீதாவுக்கோ மகிழ்ச்சி உள்ளுக்குள் நீரூற்றாய் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
அவனுடைய கோபம் இப்போது காணாமல் போய்விட்டதை உணர்ந்தவள், அந்த நிம்மதியோடு உள்ளே சென்று குளித்து முடித்து வெளியே வந்தாள்.
மிருதனின் மனமோ ஆழமாகக் காயம் கண்டது.
ஐந்து மாதங்களாக அவன் அனுபவித்த வலியை ஒரு நொடி நேரத்தில் அவளுடைய வலியை கண்டதும் மறந்து போனத் தன்னுடைய மடத்தனத்தை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டான் அவன்.
தன்னை ஆண்மையற்றவன் எனக் கூறியவளை முத்தமிட்டு இருக்கிறான் என்ற நினைவு அவனை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்க கீதாவிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்ற அவசர முடிவை அக்கணமே எடுத்துக் கொண்டான் அவன்.
அவனுடைய காயம் கண்ட மனமோ உள்ளுக்குள் கதறிக் கொண்டிருக்க, காதல் கொண்ட மனமோ அவள் வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருந்தது.
அதே நேரம் கீதாவோ குளித்து முடித்து அவன் அருகே வந்தவள், “நைட்டுக்கு என்ன சாப்பாடு பண்ணட்டும்..” எனக் கேட்டாள்.
“விஷம் இருந்தா கொடு.. நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்..” எனச் சட்டென அவன் எரிந்து விழ, அவளோ வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
கண்களில் இருந்து நில்லாமல் வழியத் தொடங்கியது கண்ணீர்.
💜💙💙💜
