புயலோடு மோதும் தாழம்பூ..!! 22 23

புயல் – 22

 

கீதாவின் வார்த்தைகள் மிருதனை மிகவும் காயப்படுத்தி விட, தன்னுடைய மனதில் இருந்த அனைத்தையும் ஒரு கடிதமாய் எழுதி அவளுக்கு அனுப்பி விட்டு, எங்காவது தனிமையில் சென்று விட வேண்டும் என எண்ணிக் கொண்டவன் ஊர் ஊராய் நாடோடி போல அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.

இதோ அவன் அவளை விட்டு வந்து ஐந்து மாதங்கள் முடிந்து போயிற்று.

தன்னை யாரும் தொடர்பு கொள்ளாததைப் போலத் தன்னுடைய அலைபேசி எண் தொடக்கம் அனைத்தையும் மாற்றி இருந்தவன், உருவத்தில் கூட மாறிப் போயிருந்தான்.

அவனுடைய முகத்தில் பாதியை அவனுடைய தாடியே மறைத்திருந்தது.

ஏதாவது ஒரு ஊரில் சென்று ஏழு நாட்களோ, ஐந்து நாட்களோ தங்கிக் கொள்பவன், மீண்டும் வேறு எங்காவது தன்னுடையப் பயணத்தை தொடர்ந்து விடுவான்.

அன்றும் அப்படித்தான் தான் இருந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்காக புகையிரதத்தில் ஏறி அமர்ந்தவன் தன்னுடைய பாக்கட்டில் இருந்த அலைபேசியை எடுத்து அதில் இருந்த கீதாவின் புகைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினான்.

அவனுக்கோ அவளைப் பற்றிய ஆயிரம் கேள்விகள் மனதுக்குள் தோன்றின.

அவள் இப்போது எப்படி இருக்கிறாள்…?

ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் செய்திருப்பாளோ..?

தன்னைப் பற்றி ஏதாவது நினைத்திருப்பாளா..? 

ஒருவேளை தனக்காக காத்திருப்பாளோ..? என பல கேள்விகள் அவனுக்குள் எழுந்து அவனை வாட்டியது.

அக்கணமே மீண்டும் அவளுடைய வீட்டிற்குச் சென்று அவளை மறைந்திருந்தாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் கொண்டது அவனுடைய வெட்கம் கெட்ட மனம்.

அவளைப் பற்றிய தகவல்களை எப்படியாவது அறிந்து விட வேண்டும் என எண்ணியவன், ஒருவேளை அவளைப் பார்த்தால் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டையும் இழந்து மீண்டும் அவள் முன்னே மண்டியிட்டு விடுவானோ..? என எண்ணியே அவளைப் பற்றி எந்த தகவல்களையும் திரட்டாது ஒதுங்கிப் போயிருந்தான்.

இனி அவளுடைய வாழ்க்கையில் தொல்லையாக இருக்கவே மாட்டேன் எனக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு இப்போது அந்த வாக்கை மீறி அவளின் முன்னே சென்று எப்படி நிற்பது..?

ஒரு மனமோ இக்கணமே அவளிடம் சென்று நேரில் சந்தித்து விடு என வற்புறுத்த மற்றைய மனமோ வேணாம் மீண்டும் ஆண்மையற்றவன் என்ற முத்திரை குத்தப்பட்டு அவமானப்பட்டுப் போவாய் என எச்சரித்தது.

இறுதியாக அவள் அவனைப் பார்த்து ஆம்பளையா..?  என்றல்லவா கேட்டாள்.

உஷ்ணப் பெருமூச்சை வெளி விட்டான் மிருதன். 

அவளிடத்தில் வேறு எந்தப் பெண் இருந்திருந்தாலும் இப்படித்தான் கேட்பாள் என எண்ணி தன்னுடைய மனதை சமாதானப்படுத்திக் கொண்டவன், மீண்டும் அவளுடைய புகைப்படத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.

 எங்கே சென்றாலும் விடாது துரத்தும் அவளுடைய நினைவுகளோ அவனுக்கு சுவாசக் காற்றைப் போல மாறிப்போனது.

சில நேரங்களில் இது என்ன முட்டாள்தனம் என்று கூட அவனுக்குத் தோன்றும்.

என்னதான் காதல் என்றாலும் தன்மானம் இழந்து நிற்கும் அளவுக்கு தன் காதலில் விழுந்து விட்டோமா என எண்ணி தன்னையே நொந்து கொள்வான் அவன்.

அடுத்த கணமே அவனுடைய மனம் குத்துக்கரணம் போட்டு அவளின் காலடியில் சென்று விழத் துடிக்கும். 

இருவேறுபட்ட மனங்களுக்கு இடையில் அல்லாடித் தவித்தான் அவன்.

தன்னுடைய குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டவன், வைத்தியரைச் சென்று பார்க்க வேண்டும் என முடிவெடுத்தான்.

அதே கணமே அவனுக்கு நேர் இருக்கையில் வந்து அமர்ந்தார் வைத்தியர் மாலதி.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததைப் போல தன்னைப் பரிசோதித்த வைத்தியரே தன் முன்னே வந்து அமர்ந்ததும் அவனுக்கோ விழிகள் விரிந்தன.

அதே கணம் தனக்கு எதிரே இருந்த மிருதனைக் கண்டு அதிர்ந்து போனாள் மாலதி.

“ஹாய் டாக்டர் என்ன சொந்த ஊருக்கு போறீங்க போல..”  எனச் சாதாரணமாக கேட்டவனைச் சற்று முறைப்போடு பார்த்தார் அவர்.

அவருடைய பார்வை தன்னைப் பார்த்ததும் மாறிப்போனதை உணர்ந்து கொண்டவன் அவரை கூர்மையாகப் பார்த்தவாறு தன்னுடைய புருவத்தை ஏற்றி இறக்கினான்.

“வாட்…? ஏதாவது ப்ராப்ளமா டாக்டர்..?” என அவருடைய முக மாற்றத்தை வைத்து அவன் கேட்க, 

“இவ்வளவு நாளா நீ எங்கப்பா போன..” எனக் கேட்டார் அவர்.

“ஏன் என்னாச்சு..” என அவருக்கு பதில் கூறாது கேள்வியைத் தொடுத்தான் அவன்.

 தன்னுடைய முடிவுகளுக்கான காரணங்களை அவரிடம் கூற விருப்பம் இல்லாததால் அவருடைய கேள்வியைத் திசை திருப்பினான் மிருதன்.

“முன்னாடி தான் அவள தனியா விட்டுட்டுப் போன, இப்போ கீதா பிரக்னண்டா இருக்கா.. இப்பவாவது அவகூட இருக்கலாம்ல.. இப்படியா யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஊர விட்டுப் போறது..?” எனக் கடிந்து கொண்டார் அவர்.

அவருடைய வார்த்தைகளில் மிருதனின் விழிகளோ சிவந்தன.

‘கீதா ஐவிஎஃப் முறையில் டிரீட்மெண்ட் செய்து இப்போது கர்ப்பமாக இருக்கிறாள் போலும்..’ என எண்ணிக்கொண்டவனின் மனமோ வலி கொண்டது.

அதே கணம் அவனுடைய இதயத்தின் ஒரு ஓரத்தில் மகிழ்ச்சியும் பொங்கியது. 

அவளுடைய குழந்தை என்றால் அது தனக்கும் குழந்தை தானே என எண்ணிக் கொண்டவன், அந்த சிறு மகிழ்ச்சியின் விளைவால் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

“ஓஹ்.. தேங்க்ஸ் டாக்டர்.. எனக்கு இது தெரியாது.. ட்ரீட்மென்ட் நல்லபடியா முடிஞ்சுதா.. கீதாவுக்கு எந்த பிராப்ளமும் இல்லையே.. பேபி சேஃப் தானா..”  என அவன் கேட்,க அவனுடைய கேள்வியில் அவருக்கோ புருவங்கள் சுருங்கிப் போயின.

“புரியல மிருதன்.  நீ என்ன ட்ரீட்மெண்ட் பத்தி பேசுற..?”  எனக் கேட்டார் அவர்.

“ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் பத்திதான் பேசுறேன். இதனால தான்  இப்போ கீதா பிரக்னண்டா இருக்கா..”  எனக் கேட்டவனை அதிர்ந்து பார்த்தார் அவர். 

அவருக்கோ சில கணங்கள் எதுவுமே புரியவில்லை.

“என்ன மிருதன் சொல்ற..? அவளுக்கு எதுக்கு ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் பண்ணனும்..? அவதான் ஆல்ரெடி கன்சீவ் ஆயிட்டாலே..” என்றதும் மிருதனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“வாட்…? நீங்க என்ன சொல்றீங்க..? எனக்கு புரியல… டிரீட்மென்ட் பண்ணாம எப்படி அவளால கன்சீவ் ஆக முடியும்..” எனக் கேட்க ஒரு கணம் மிரண்டு போனார் வைத்தியர்.

“ஓஹ்.. நோ…  அப்படி இருக்கக் கூடாது அப்படி இருக்கவே கூடாது..” என வாய்விட்டு புலம்பிய வைத்தியரை அழுத்தமாகப் பார்த்தான் அவன்.

அவனுடைய மனதுக்கு ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பது புரிய தன்னுடைய முடியை அழந்தக் கோதிக் கொண்டவன்,  தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு அவரைக் கேள்வியாகப் பார்த்தான். 

அவனுடைய பார்வை அவரை துளைத்தெடுப்பதைப் போல இருந்தது. 

விட்டால் பார்வையாலேயே வதம் செய்து விடுவான் போல இருந்த, அவனுடைய தோற்றத்தில் மாலதிக்கோ வியர்த்துப் போனது.

கீதா அவனிடம் எதுவுமே கூறவில்லையா..? என எண்ணிப் பயந்து போனார் அவர்.

இன்ப அதிர்ச்சி கொடுக்கிறேன் என்றல்லவா.. தன்னிடம் சொல்லி இருந்தாள். 

அவளின் வேண்டுகோளுக்கு இணங்க நடந்து கொண்டதன் விளைவால்,  இறுதியில் தான் மாரடைப்பில் சென்று சேர்ந்து விடுவோமோ..? என்ற அச்சம் உண்டானது மாலதிக்கு.

மிருதனின் பார்வையோ அவரை விட்டு சற்றும் அகலவில்லை.

என்ன நடந்தது எனக் கேட்கும் வண்ணம் இருந்த அவனுடைய கூர்மையான பார்வையில் தடுமாறிப் போனார் அவர்.

“ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் பண்ணாம கீதா கன்சீவ் ஆகி இருக்கா..? ஆம் ஐ ரைட்…?”

மாலதியோ திகைத்து விழித்தவாறே,  

“ஆம்..” எனத் தலையசைக்க, அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், 

“ஐ நீட் யுவர் ஆன்ஸர்..‌ உங்க வாயைத் திறந்து பதில் சொல்லுங்க..” என்றான் அவன்.

எப்போதும் தன்னிடம் மரியாதையாக பேசுபவன் இன்று மிரட்டும் தொனியில் பேச அவருக்கோ வியர்த்துப் போனது.

அந்த மிரட்டும் தொனியைப் புறக்கணிக்க முடியாது, தன்னுடைய வாயைத் திறந்து அவன் கேட்ட கேள்விக்குப் பதிலை வழங்கினார் மாலதி.

“எ… எஸ்.” 

“ஓஹ்… ஃபென்டாஸ்டிக்..” என்றவனுடைய முகத்தில் இன்னும் அழுத்தம் கூடிப்போனது.

தன்னுடைய கரங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டவன், சற்று முன்னால் குனிந்து அவருடைய முகத்தை நெருங்கியவன், அடுத்த கேள்வியை கர்ஜனைக் குரலில் கேட்டான்.

“ஹவ்..?” 

ஒரே ஒரு வார்த்தை தான் ஆனால் அந்த ஒற்றை வார்த்தையில் மொத்தமாய் பயந்து போனார் அவர்.

“ஏன் இப்படி மிரட்டுற மிருதன். ரிலாக்ஸ்ஸா பேசு. படபடப்பா இருக்கு..” என்றவரைப் பார்த்து அவனுக்கு பொறுமைப் பறந்து போனது.

அவனுடைய முகமோ மேலும் இறுகுவதை உணர்ந்தவர் அதற்கு மேலும் தாமதிப்பது தனக்கு நல்லதல்ல என்பதைப் புரிந்து கொண்டு, “அவளோட வயிற்றில் உள்ள  குழந்தை உன்னோடது தான்..”  எனக் கூறி முடித்தார்.

“வ்வாஆஆட்…? அப்போ அந்த ரிப்போர்ட்..” என அதிர்ச்சி மேலிட கிட்டத்தட்ட கத்தியவனுக்கோ மூளை மரத்துப் போனதைப் போல இருந்தது.

“அது வந்து அது எல்லாமே பொய்….‌பொய் தான் உன்ன சப்ரைஸ் பண்ணனும்னு அப்படி எல்லாம் பண்ண சொன்னா… அவ அன்னைக்கு ஹாஸ்பிடல் வரும்போது பிரக்னண்டா தான் இருந்தா.. அவ ரொம்ப கெஞ்சிக் கேட்டதாலதான் நான் இப்படி பண்…. பணினேன். 

பட், உ.. உனக்கு இந்த விஷயம் இன்னும் தெரியாதுன்னு எ .. எனக்கு சத்தியமா தெரியாது.

கீதாவே உன்கிட்ட எல்லாம் உண்மையும் சொல்லி இருப்பான்னு நி.. நினைச்சேன்.

ஐ அம் சாரி நா.. வேணும்னே இப்படிப் பண்ண..” என அவர் பதற்றத்தோடு கூற வந்ததை கூறி முடிக்கும் முன்னரே அவருடைய கழுத்தை இறுக்கமாகப் பற்றி நெரிக்கத் தொடங்கி இருந்தான் மிருதன்.. 

அவன் உள்ளமோ எரிமலைக்கு நிகராக கொதித்துக் கொண்டிருந்தது.

 

புயல் – 23 

 

சில நொடிகளில் தன்னுடைய நிதானத்தை முற்றிலுமாக இழந்திருந்தான் மிருதன். 

எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டு எப்படியெல்லாம் தன்னிடமே கேள்வி கேட்டு இருக்கிறாள், என அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

சொல்லில் வடிக்க முடியாத அளவுக்கு அவன் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

இந்த ஐந்து மாதங்களும் அவன் எத்தனை எத்தனை துயரங்களை அனுபவித்து விட்டான்.

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஒரு ஆண் தன்னுடைய மனைவியை தாய்மை அடையச் செய்வதிலேயே அவனுடைய கௌரவம் தங்கி இருக்கிறது.

அப்படி இருக்க, எப்படிப்பட்டக் காரியத்தை தனக்கு செய்து விட்டாள், என எண்ணியவன் சீற்றத்தை அடக்க முடியாது வைத்தியரின் கழுத்தை இறுகப்பற்றி இருந்தான்.

கோபம் வந்தால் மிருகமாகிப் போகும் மிருதனுக்கு அக்கணம் தன்னை அடக்கவே முடியாது போனது. 

வைத்தியரோ மிரண்டு போனவர், உரத்த குரலில் கத்தத் தொடங்க, அவன் இறுகப்பற்றி இருந்ததால் அவரால் கத்தக்கூட முடியாது போனது.

அவர் திமிறுவதை உணர்ந்தவன், அக்கணமே தான் செய்து கொண்டிருந்த செயலின் வீரியத்தை உணர்ந்து சட்டென தன் கரத்தை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டான்.

அவரோ இருக்கையோடு அச்சத்தில் ஒன்றிக் கொண்டவர், இருமியவாறே அவனைப் பார்க்கச் சட்டென அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றிருந்தான் மிருதன். 

அவனுக்குள் உணர்வுகள் அலைகடலாய் தத்தளித்துக் கொண்டிருந்தன.

தான் தற்போது தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதை உணர்ந்தவன், இன்னும் சற்று நேரம் அங்கே இருந்தாலும் கூட வைத்தியரை காயப்படுத்தி விடுவோமோ.. என்ற எண்ணத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து  வெளியே வந்து நின்று கொண்டான்.

அந்தப் புகையிரதமோ வேகமாகச் செல்ல வாயிலில் நின்ற அவனுடைய முகத்தில் பலமாக மோதியது காற்று.

வெறுத்துப் போனது அவனுக்கு.

எப்படி அவளால் இதைச் செய்ய முடிந்தது..? 

தன்மீது கோபம் இருந்தால் தன்னை அடிக்கக் கூட செய்திருக்கலாமே.. அதை விட்டு ரிப்போர்ட்டை பொய்யாகக் கூற வைத்து, தன்னை ஆண்மை அற்றவனாக இழிவு படுத்தி என் மனதை அல்லவா சிதைத்து விட்டாள்.

உயிருடனேயே என்னை கொன்று புதைத்து விட்டாளே பாவி..!!

தன்னுடைய கரத்தை மடக்கியவன், கோபம் தாங்காது தன் கரத்தை ஓங்கி தொடையில் குத்தினான்.

தலை வெடிப்பதைப் போல இருந்தது.

உள்ளுக்குள் குடையும் அவளுடைய நினைவுகளுடன் சேர்த்து தன்னுடைய தலையையும் அந்தப் புகையிரதப்பெட்டியில் மோதி உடைத்து விடலாமா.. என்று கூட எண்ணினான் அவன்.

இந்த ஐந்து மாதங்களும் தன்னால் தன்னுடைய மனைவிக்கு குழந்தை கொடுக்க கூட முடியாது என எண்ணி, எப்படி எல்லாம் அவன் வேதனை கொண்டான்.

 கீதா முதல் முறையாக தன்னிடம் கேட்டதை அவளிடம் கொடுக்க முடியவில்லை என எப்படி எல்லாம் துடித்துப் போனான்.

 அதை எல்லாம் இப்போது நினைத்தவனுக்கு கசந்து வழிந்தது.

அனைத்துமே பொய்..!! 

அத்தனையும் பொய்..!! 

திட்டமிட்டு அனைத்தையும் செய்து முடித்திருக்கிறாள்…

தன்னுடனேயே இருந்து தனக்கு தேவையான குழந்தையை பெற்றுக் கொண்டதும், குழந்தை உருவாகவே இல்லை என அவனை ஏமாற்றி அவன் ஆண்மை அற்றவன் என வைத்தியர் மூலம் சொல்ல வைத்து தன்னைப் பித்து பிடித்தவன் போல வீட்டை விட்டு துரத்தி விட்டவளை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என வெகுண்டு எழுந்தான் மிருதன்.

அரை மணி நேரம் வெளியே நின்றவன், அதன் பின்னர் மீண்டும் தன்னுடைய இருக்கையை நோக்கிச் சென்றான்.

இப்போது அவனுக்கும் உணர்வுகள் சற்றே மட்டுப்பட்டிருந்தது.

தன்னுடைய சினம், ஆத்திரம், வஞ்சம் அனைத்தையும் தனக்குள் போட்டு பூட்டி வைத்தவன், உள்ளே பயத்தோடு அமர்ந்திருந்த மாலதியைப் பார்த்தான்.

அவன் உள்ளே வந்ததும், “சாரி..” என்றார் அவர். அவனோ பெருமூச்சோடு அவரைப் பார்த்தான். அம்பை எய்தவன் இருக்க, அம்பை நொந்து என்ன பயன் எனத் தோன்றியது அவனுக்கு. 

நிதானமாக அவர் முன்னே வந்து அமர்ந்தவன், “டாக்டர் தானே அறிவு இருக்கா இல்லையா..?”  என அழுத்தமாகக் கேட்டான்.

அவருக்கோ பதில் பேசுவதற்கு வார்த்தைகள் எழவில்லை.

“எந்த விஷயத்துல பொய் சொல்றது எந்த விஷயத்தை சப்ரைஸ் பண்றதுன்னு வரைமுறை இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதா..? கோடி ரூபாய் கொடுத்தா கூட ஒருத்தரோட ரிப்போர்ட்ட பொய்யா கொடுக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா..? நான் நினைச்சா உங்க மேல லீகலா ஆக்ஷன் எடுக்க முடியும். கோர்ட்ல வச்சு உங்க வேலையை இல்லாம பண்ண முடியும்..” எனக் கூற ஆடிப்போனார் மாலதி.

“பட், உங்கள சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரியும். அந்த ஒரே ஒரு காரணத்துக்காக உங்களை இதோட விடுறேன்..‌” என்றவன் அடுத்த கணமே அங்கிருந்து வெளியேறி, அடுத்த ஸ்டேஷனிலேயே இறங்கி இருந்தான்.

இனி அவன் ஊர் ஊராக சென்று நாடோடி போலப் பயணிக்கப் போவதில்லை.

கீதாவை நேரிலேயே சென்று அவளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டவன், தன்னுடைய சொந்த ஊரை நோக்கித் தன் பயணத்தை தொடர்ந்தான்.

******* 

மிருதன் உருகி உருகி எழுதியிருந்த கடிதத்தைப் படித்து நெகிழ்ந்து போயிருந்தாள் அவள்.

மிருதன் தன்னைக் காதலித்திருக்க கூடும் என அவள் சற்றும் எதிர்பார்த்து இருக்க வில்லை.

மனமோ தாமரை மலராய் மலர்ந்து போனது.

அவன் எழுதிக் கொடுத்த கடிதத்தையே கிட்டத்தட்ட முப்பது முறைக்கு மேல் திரும்பத் திரும்ப படித்தாள் அவள். 

அன்று அவன் அனுப்பிய போது அதனை திறந்து பார்க்கக் கூட விருப்பமற்று மூடி வைத்தவள், இன்றோ படித்தக் கடிதத்தையே மீண்டும் மீண்டும் படித்து தன் மனதை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அக்கணமே அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

 அவன் கொடுத்த அந்த பொற் கடிதத்தை பத்திரப்படுத்தி விட்டு அறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள் கீதா. 

தான் இப்படியே அமைதியாக இருந்தால் மிருதனை மீண்டும் சந்திக்கவே முடியாது போகும்.

ஏதாவது அதிரடியான முடிவை எடுத்து அவனை எப்படியாவது தன்னைத் தேடி வர வைக்க வேண்டும் என எண்ணியவள், சிலத் திட்டங்களை சடுதியில் உருவாக்கிக் கொண்டாள்.

மிருதனின் தந்தையை அழைத்து தன்னுடைய திட்டத்தை இன்றே செயல்படுத்தி விட்டால், எப்படியாவது தன்னைத் தேடி மிருதன் வந்து விடுவான் என எண்ணியவளுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது.

எப்படியாவது பத்திரிகையிலோ, அல்லது தொலைக்காட்சியிலோ மிருதனின் வாரிசு தன்னுடைய வயிற்றில் வளர்கிறது என்னும் செய்தியை ஒளிபரப்பி விட்டால் போதும். 

அவன் எந்த மூலையில் இருந்தாலும் தன்னைத் தேடி வந்து விடுவான் என நம்பியவள் ருத்ர பிரசாத்தின் உதவியுடன் எப்படியாவது இதனைச் செய்து விட வேண்டும் என உறுதி பூண்டாள். 

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை மிருதன் மீண்டும் தன்னிடம் வந்தால் மட்டும் போதும் என எண்ணிக்கொண்டவள், அதனை நிறைவேற்றும் பொருட்டு மிருதனின் தந்தை உறங்கிக் கொண்டிருந்த அறையின் அருகே சென்று கதவைத் தட்ட முயன்றாள்.

அதே கணம் அவளுடைய வீட்டு வாயிலின் ஹாலிங் பெல்லோ அலறியது.

சலிப்போடு கதவை நெருங்கிச் சென்றவள், கதவில் கை வைத்ததும் அவள் மனமோ எதையோ உணர்ந்தது போலப் படபடக்கத் தொடங்க, அதிர்ந்து போனாள் அவள்.

என்ன விதமான உணர்வு இது..? ஏன் திடீரெனத் தனக்கு இப்படி எல்லாம் உணர்வுகள் எழுகின்றன என்பதை புரியாமல் தவித்தவள், வெளியே வந்திருப்பது யார் என அறிய அக்கணமே ஆவல் கொண்டாள்.

அவளுடைய மனமோ அது மிருதன் தான் என உறுதியாகக் கூற அவளுக்கோ சுவாசம் தடைப்பட்டதைப் போல இருந்தது.

‘ஏன் எனக்கு இப்படி எல்லாம் ஃபீல் ஆகுது…? நிஜமாவே மிருதன் வந்துட்டானா..? என்னோட மனசு அவன் வந்துட்டான்னு சொல்லுதே..

ஓஹ்…. கமான் கீதா இன்னும் எதுக்காக லேட் பண்ற..? சீக்கிரமா கதவைத் திற..” என தனக்குத்தானே அவசர அவசரமாகக் கட்டளையிட்டாள் அவள்.

ஆனால் அவளுடைய மனமும், மூளையும் செயல்பட்ட வேகத்திற்கு ஏற்ப அவளுடைய உடல் செயற்பட மறுத்தது.

அதுவும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட சிரமப்பட்டு தன்னுடைய கரங்களை உயர்த்தி அந்தக் கதவை திறந்தவள், அங்கே நின்ற மிருதனைக் கண்டதும் தொய்ந்து போனாள்.

 எங்கே இனி அவனைப் பார்க்கவே சந்தர்ப்பம் அமையாது போய்விடுமோ..? எனத் தவித்து துடித்துப் போயிருந்தவளின் முன்னே, அவன் முழு உருவமாய் கம்பீரத்தோடு நிற்க, அனைத்தையும் மறந்து பேச்சு மூச்சின்றி  நின்றாள் அவள். 

அவளுடைய மூளையோ உறைந்து நின்ற அவளுடைய உடலுக்கு அடுத்தடுத்த கட்டளைகளை வேகமாக பிறப்பிக்க, தொலைந்த உணர்வுகள் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டன.

விழிகளில் கண்ணீர் வழிய அவனை நெருங்கியவள், அவன் தன்னை நோக்கி கரத்தை ஓங்கிய வேகத்தில் பதறிப் போனாள்.

மிருதன் அவளைப் பார்த்த கணமே கட்டுக்கடங்காத சீற்றத்தில் கரத்தை ஓங்கியவன், அவளுடைய மேடிட்ட வயிற்றைக் கண்டதும் அப்படியே தன்னுடைய கரத்தை இறக்கிக் கொண்டான்.

அவளை அக்கணமே அடித்துக் கொல்ல வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆனால் அவள் இருக்கும் நிலையில் அவளை துன்பப்படுத்த முடியாது தன் சீற்றத்தைக் கட்டுப்படுத்தியவன், அவளுடைய முகத்தைப் பார்த்து,  “ச்சீஈஈ….” எனக் கூற நொறுங்கிப் போனாள் அவள்.

 💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *