காமம்
உயிருடன் உயிர் கலந்து
உயிர் படைக்கும்
உன்னதக் கலை.
அழகியலின்
முப்பரிமாண
ஓவியம்.
கட்டற்ற
உணர்ச்சிப்பிரளயத்தில்
ஈருடல்களின்
எதிர் நீச்சல்.
இலக்கற்ற
தேடலின்
இன்பச் சுற்றுலா.
விதிமுறைகள் கடந்த
விசித்திர விளையாட்டு
மீறப்படுவதால்
மட்டிலுமே
ரசிக்கப்படும்
எல்லைகள்.
திட்டமிடாத வரை
திகட்டாப் பெருவிருந்து.
நான்’ மறுவி
நாம்’ ஆகும்
துரிதகாலம்.
அன்பின் பிரவாகத்தில்
ஆசைகளின் கொண்டாட்டம்.
மானுட ஆதித் தேவைகளில்
பழுதின்றிப் பின் தொடரும்
பசி.
///
காமம்
தன்னளவில்
புனிதமானது;
வக்கிர மனங்களால்
விகாரப்படுவது.
ஹார்மோன்கள் எழுதும்
அடல்ஸ் ஒன்லி’ கவிதை.
நான்கு சுவர்களுக்குள்
என்பது புராண விதி;
மறை சுழல் காமிரா இன்றி’
என்பது புதுவிதி.
முதலில் காட்டாறு;
பின் சலனமற்ற நீரோடை.
கற்பிதங்கள் கலைந்து
பெறப்படும்
செயல்முறைச் சுயவிளக்கம்.
நாட்பட்ட சந்தேகங்கள்
நிவர்த்திக்கப்படும்
நவீன ஆய்வுக்கூடம்
ம(று)றைக்கப்பட்ட
உண்மைகளைத்
துப்பறியும் அனுமதி.
புதிர்களுடனான
முற்றும் திறந்த
அதிரடி நேர்காணல்.
இருவர் மட்டுக்குமேயான
நள்ளிரவு நேரலை.
மூடிய விழிகள்
காணும்
முழு நீள(ல)த் திரைக்காவியம்.
இணங்க மறுத்தலில்
கூடும் ஈர்ப்புவிசை.
விலகல்களில்
வேகமெடுக்கும் வேட்கை(டை)
தாமதங்களும்
அவசிய அஸ்திரங்கள்தாம்.
சொற்களுக்கு ஈங்கு
வேலையில்லை;
அனுமதிக்கப்படலாம்
அடக்கிவாசிக்கப்பட்ட சில
மென்முனகல்கள் மட்டிலும்.
(தொடரும்)
சேஷ ஜெயராமன்
