தேங்காய்ப் பால் பாயசம், சின்ன வயதில் பிடித்துப் போனதற்கு அதில் இடையில் திடப்பொருள்கள் இல்லாமல் நீராக இருந்ததும், முழுங்க சுலபமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தேவையான பொருள்கள்:
முற்றிய பெரிய தேங்காய் – 2
அரிசி – 2 டீஸ்பூன்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய் – 8
பச்சைக் கற்பூரம்.
thengaai paal 2
செய்முறை:
தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.
அரிசி, துருவிய தேங்காயை கிரைண்டரில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, பாலை வடிகட்டவும்.
மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, தேங்காயை அரைத்து, ஒட்ட பாலை வடிகட்டவும்.
இரண்டு பாலையும் கலந்து அடுப்பில் வைத்துக் கரண்டியால் கிளறவும்.
நல்ல சூடு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து, கொதிவரும் சமயத்தில் இறக்கி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும்.
* கொதித்துவிட்டால் பால் முறிந்து போகும். சரியாகக் காயாவிட்டால் பச்சை வாசனை வரும். எனவே சரியாக, கொதிவரும் சமயத்தில் இறக்கவேண்டும்.
* ஏலப்பொடி தயாராக இல்லாவிட்டால் ஏலக்காயை தேங்காயோடு சேர்த்தே அரைக்கலாம்.
* மிக்ஸியில் அரைத்தும் பால் எடுக்கலாம். ஆனால் கிரைண்டரில் எடுப்பது போல் கொஞ்சமாய் நீர் சேர்த்து கெட்டியான பாலாக எடுக்க முடியாது. தேங்காயின் முழு வாசனையும் குணமும் வருவதற்கு கிரைண்டரில் அரைப்பதே நல்லது.
