சுகவதையா காதல்
அத்தியாயம் – 02
தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் தியாவின் மொத்த உலகாகவும் இருந்தது அவளது தந்தை ரவிதாஸ்தான். ஆனால் அவளது கழுத்தில் தாலி ஏறும் பொழுது அதனை தன் கண் கொண்டு காண முடியவில்லையே என அந்த தந்தை உள்ளம் அனுபவித்த வேதனையோ வாய் திறந்து கூற முடியாமல் தியாவை பார்த்த படி நின்றார் ரவிதாஸ்.
தந்தையை தேடி பார்த்து காணவில்லை என்றும் அருகிலிருந்தவர்கள் கட்டாயப்படுத்தி கொண்டதால் குறித்த நேரத்தில் அஷ்வினின் தாலியை தன் கழுத்தில் சுமந்து கொண்டாள் தியா.
தந்தையை பார்த்தவுடன் அவளது கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் பதிலாக வந்தது திவ்யாவுக்கு,
“எங்கே அப்பா போனீங்க…?, உங்களை எவ்வளவு நேரமா நான் தேடினேன் தெரியுமா…?” மணமேடையில் இருந்தே கேட்டாள் தியா.
“அது ஒன்னும் இல்லம்மா முக்கியமான வேலை ஒன்னு அதான் அவசரமா போக வேண்டிய தேவை இருந்துச்சு அதான் வெளியே போயிட்டேன் சாரி மா” என தனது மகளை சமாதானப்படுத்த முயன்றார் ரவிதாஸ்.
“பரவாயில்லை இப்பதான் அப்பா வந்துட்டார்ல மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு பேரும் அப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்குங்க” என்று அங்கிருந்த புரோகிதர் கூற கீழே இருந்த தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக செல்ல எத்தனித்து ஒரு காலை முன்னோக்கி நகர்த்த தியாவின் கை ஒன்றை எட்டி பிடித்தான் அஷ்வின்.
அஷ்வின் தன்னை தந்தையிடம் செல்ல விடாது தடுப்பது ஏன் என அறியாமல் தன்னை பற்றி பிடித்து கொண்டிருக்கும் கையையும் அவனின் வதனத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் தியா.
ஆனால் அஸ்வின் எதுவுமே நடைபெறாதது போல் அங்கு நின்ற படி வந்தவர்களை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான். ஆனால் அவனின் கையோ தியாவை விடவில்லை.
அஷ்வினின் பிடியிலிருந்து தனது கையை எடுக்க முயன்ற மாது தோற்றுத்தான் போனாள்.
மணமேடையில் நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ரவிதாஸ் அஷ்வின் தன்னிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க விருப்பமில்லாது தியாவையும் தடுக்கின்றான் என நினைத்து,
“ஆசிர்வாதம்லாம் வேணாம் புரோகிதரே என்னோட பொண்ணும் மாப்பிள்ளையும் எப்பவுமே நல்லா இருப்பாங்க” எனக்கூறி இருவருக்கும் அருகில் சென்று கட்டியணைத்தான் ரவிதாஸ்.
ஆனால் அஷ்வினோ ரவிதாஸ் கட்டியணைத்ததுக்கு எவ்விதமான மறுமொழியும் இன்றி விறைப்பாகவே நின்றான்.
பின்னர் ரவிதாஸ் அங்கிருந்து சற்று விலக தனது பிடியில் இருந்த தியாவின் கைகளை விடுவித்தான் அஷ்வின்.
“ஓகே டைம் ஆகிட்டு எல்லாரும் சாப்பிட வாங்க” என்று அங்கிருந்த அனைவரையும் ரவிதாஸின் தங்கையான சாந்தி கூறினாள்.
அனைவரும் திருமண மண்டபத்தில் இருந்து மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஒவ்வொருவராக அங்கிருந்து விருந்து நடைபெறும் இடத்திற்குச் சென்றனர்.
சிறிது நேரத்தில் விழாவிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்த நேரத்தில் அஷ்வினோ ரவிதாஸை அழைத்து கொண்டு தனியாக பேச சென்றான்.
“நான் கேட்ட பத்திரம் எங்கே…?”
“மாப்ள எல்லாமே முடிஞ்சுது நீங்க ஒரு சைன் வெச்சா போதும் அந்த காம்ப்ளக்ஸ் உங்க பேருக்கு வந்திடும்” என தனது கையில் இருந்த பத்திரத்தை அஷ்வினிடம் கொடுத்தார் ரவிதாஸ்.
அந்தப் பத்திரத்தை வாங்கி பார்த்த பின் அங்கிருந்து சென்ற அஷ்வினின் பின்னால் ரவிதாஸ் சென்றார்.
நேரமோ செல்லச் செல்ல மதிய நேரம் கடந்து மாலை வேளையும் வந்தது.
ரவிதாஸ் அஷ்வினின் அருகில் வந்து “மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு போவோமா..?” என கேட்டார்.
“வீட்டுக்குன்னா எங்கே…?”
“என்னோட வீட்டுக்கு தான் மாப்பிள்ளை” என கூறினார்.
“உங்களோட வீட்டுக்குலாம் என்னால வர முடியாது” என்று பதிலளித்தான் அஷ்வின்.
அவனது பதிலில் குழம்பிப் போன ரவிதாஸ், “மாப்பிள்ளை அது வந்து என்னன்னா மறு வீட்டுக்கு போகும் வரைக்கும் பொண்ணு வீட்டில தான் இரண்டு பேரும் இருக்கனும்ன்னு ஒரு சடங்கு இருக்கு அதான் உங்களை என்னோட வீட்டுக்கு கூப்பிட்டேன்” என பொறுமையாக கூறினார் ரவிதாஸ்.
“உங்களோட சடங்கு பத்தி எனக்கு தெரியாது. பட் என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது, வேணும்னா உங்க பொண்ணை கூட்டிட்டு நீங்க போங்க” என கூறினான் அஷ்வின்.
மண்டபத்திலிருந்து வீட்டுக்கு செல்ல தயாரான அஷ்வினை பார்த்து தியாவை இங்கேயை விட்டு சென்று விடுவானோ என எண்ணிய ரவிதாஸ் தியாவின் அருகே சென்று,
“தியா நீ மாப்பிள்ளையோட அவரோட வீட்டுக்கு போ, நான் நாளைக்கு உன்னை வந்து பார்க்கிறேன்” என கூறினார்.
“என்னப்பா சொல்றீங்க இன்னைக்கு ஏன் அவரோட வீட்டுக்கு போகனும். இங்கே என்ன தான் நடக்குதுன்னு ஒன்னுமே புரியலையே…?” என தியா கேட்க,
“மாப்பிள்ளைக்கு நம்ம வீட்டில இருக்க பிடிக்கலை சோ நீயும் அவரோட இருக்கிறதான் நல்லது” என கூறி தியாவை அவளது விருப்பமின்றியே அஷ்வினின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார் ரவிதாஸ்.
திருமணமான முதல் நாளே தன்னை அவனது கட்டிப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை போல உணர்ந்த தியா காரின் பின்னால் இருக்க அஷ்வின் முன்னால் அமர்ந்து ஓட்ட தொடங்கினான்.
“ஏன் இன்னைக்கு உங்க வீட்டுக்கு போறீங்க…?, வழமையா கல்யாணம் முடிஞ்சு மறு வீட்டுக்கு போகும் வரைக்கும் எங்களோட வீட்டுலதானே இருக்கனும், ஏன் எங்க வீட்டில இருக்க மாட்டேன்னு சொன்னீங்க…?” என கேட்டாள் தியா.
அஷ்வின் அவளது பேச்சை சற்றும் கவனிக்காமல் காரிலிலுள்ள மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து பாடல்களை கேட்டு கொண்டு வந்தான்.
“கொஞ்சம் இந்த பாட்டை ஆஃப் பண்ணுங்க, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வைத்தாள் தியா.
இம்முறையும் அஷ்வினிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
‘இவன் ஊமையும் கிடையாது ஏன்னா நல்லா பேசுவான், காதும் நல்லா கேட்கும் அப்புறம் ஏன் நான் என்ன கேட்டாலும் அமைதியா வர்றான்’ என தனக்குள் நினைத்து கொண்டு மீண்டும் அஷ்வினை பார்த்து,
“ப்ளீஸ் கொஞ்சம் நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க” என கேட்க செவிடனின் காதில் ஊதிய சங்கு போல அமைதி காத்தான் அஷ்வின்.
பெரிய ஹோட்டல் ஒன்றை அடைந்து விட்டோம் என எண்ணி நிறுத்தப்பட்ட காரிலிருந்து தியா இறங்க மறுபக்கம் இறங்கிய அஷ்வினுக்கு அருகில் ஓடி வந்து நின்றான் காவலாளி.
“சார் வண்டி கீ….” என மெதுவாக கேட்க “எஸ்….” என்றவாறு தன் காரின் திறப்பை அவனை நோக்கி எறிந்தான்.
காவலாளி மெதுவாக கேட்டது விளங்கிய அஷ்வினுக்கு செவிப்பறை கிழியும் படி பின்னால் இருந்து கத்திய தியாவின் குரல்தான் கேட்கவில்லையா…?, இல்லை தான் பேசியதை வேண்டுமென அஷ்வின் புறக்கணிக்கின்றான் என தெரிந்து கொண்டாள் தியா.
அவன் நடந்து செல்ல அவனின் பின்னே செல்லும் போது தான் புரிந்தது இருவரும் இப்போது வந்திருப்பது ஹோட்டல் அல்ல இதுதான் அஷ்வினின் வீடு என்று.
நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவு உயரத்தில் இருந்த வீடு இல்லை இல்லை மாளிகை என்று தான் கூற முடியும். பணத்தை வாரி இறைத்து ஆடம்பரத்தை அழகெனக் கொண்டு அந்த வீட்டை பிரம்மாண்டமான முறையில் கட்டியிருந்தான் அஸ்வின்.
அந்த பெரிய மாளிகையில் வேறு எவரும் இருப்பதை போல தெரியவில்லை.
உள்ளே வந்த அஷ்வினோ எதுவுமே பேசாமல் ஓர் அறைக்குள் செல்ல வனத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்று குட்டி போல அப்படியே நின்றாள் தியா.
அவள் தங்குவதற்கான அறையும் இல்லை மாற்றி கொள்ள ஆடையும் இல்லாமல் இருக்க முதல் நாளே தான் தனியாக தவிப்பது போல உணர்ந்தவள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
ரவிதாஸூக்கு ஃபோன் செய்து நடந்தவற்றை அனைத்தையும் கூறினாள் தியா.
“அப்பா என்னால இங்கே இருக்க முடியாது, இவர் என்கூட பேசக் கூட இல்லை” என புலம்ப தொடங்கினாள்.
“நீ அப்படி ஒன்னும் பண்ண வேணாம் தியா, மாப்பிள்ளை போக போக ஓகே ஆகிடுவார் நான் உனக்கு தேவையான எல்லாத்தையும் அத்தைகிட்ட கொடுத்து விடுறேன்” என கூறி தியாவை சமாளித்து போகும் படியும் அங்கிருந்து வர வேண்டாம் எனவும் சில அறிவுரைகளை வழங்கினார் ரவிதாஸ்.
ரவிதாஸ் கூறுவதை கேட்டு அமைதி காத்தவாறு தன் ஃபோனை வைத்தாள் தியா. என்னதான் அமைதி காத்தாலும் அவளுடைய மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது.
ஏன் இந்த அலட்சியம்.?
எதற்காக இந்த புறக்கணிப்பு.?
நான் என்ன இவர் வீட்டு வேலைக்காரியா.? என்றெல்லாம் எண்ணியவள் அந்த சோபாவிலேயே பிடித்து வைத்த பிள்ளையார் சிலை போல அப்படியே அமர்ந்திருந்தாள்.
ரவிதாஸ் தனது தங்கையான சாந்தியை அழைத்து தியா அஷ்வினுடன் சென்றதாகவும் அவளுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து செல்லுமாறும் கூறினார். மேலும்,
“சாந்தி மாப்பிள்ளை என்னோட காம்ப்ளக்ஸ்ஸை அவரோட பேருக்கு எழுதி தர சொன்னார்” என கூற,
“நீ அப்படிலாம் எழுதி கொடுக்க வேணாம் அண்ணா, நீ என்ன சொன்ன..?” என கேட்டாள்.
“இல்லை சாந்தி நான் அதை மாப்பிள்ளையோட பேருக்கு மாத்தி பத்திரத்தை அவர்கிட்டேயே கொடுத்துட்டேன்” என்றார் ரவிதாஸ்.
“ஐயோ ஏன் இப்படி பண்ணிண அண்ணா…?,”
“அவரோட பேருக்கு சொத்து வந்தாதான் தாலி கட்டுவேன்னு சொன்னார் அதான் பண்ணினேன் ஆனால் அந்த காம்ப்ளக்ஸ் மட்டும் ஏன் கேட்டேர்ன்னு தான் புரியலை” என ரவிதாஸ் கூற அலட்சியமாக,
“நீ அவசரப்பட்டு பண்ணிட்ட. நம்ம சொத்தை ஏன் அவனோட பேருக்கு எழுதி வைச்ச..?, தியாவோட பேருக்கு எழுதியிருந்தா கூட பரவாயில்லை” என்றாள் சாந்தி.
“உன்னோட அண்ணன் அவ்வளவு முட்டாள்னு நினைச்சியா சாந்தி,
தானாகவே தேடி வந்த சம்மந்தம் மாப்பிள்ளை ஒரு கோடிஸ்வரன் இந்த ஒரு காம்ப்ளக்ஸ்ஸை பணயமா வைச்சு மொத்த சொத்தையும் எடுக்க போறேன் பார்” என்றார் ரவிதாஸ்.
“என்ன சொல்ற அண்ணா எப்படி பண்ணப்போற…?”
“ஆமா, தியாவோட பேர்ல மாப்பிள்ளையோட எல்லா சொத்தையும் எழுதி எடுக்க வைச்சிட்டு அதை அப்படியே நான் எடுப்பேன்” என்றான்.
ஆம் ரவிதாஸ் நினைத்து கொண்டு இருப்பது இவ்வாறு தான், எவ்வாறாவது அஷ்வினின் அனைத்து சொத்தையும் அடைய வேண்டும் என்ற திட்டத்தில் ஒவ்வொன்றாக திட்டம் போடத் தொடங்கினான்.
இதில் ரவிதாஸ் பணயம் வைத்தது காம்ப்ளக்ஸை அல்ல தன் மகளின் வாழ்க்கையை என்பது அவருக்குப் புரியாது போனது.
இவருக்கும் மேலாக அஸ்வின் போடும் திட்டங்களை அறிந்தால் ரவிதாஸின் நிலை என்னவாகுமோ.?
