காதல் கிரிக்கெட் 3

This entry is part 3 of 5 in the series காதல் கிரிக்கெட்

காதல் கிரிக்கெட்

காதல்    கிரிக்கெட் …!

காதல் கிரிக்கெட் …!

காதல்    கிரிக்கெட் 2

காதல் கிரிக்கெட் 2

காதல்    கிரிக்கெட் 3

காதல் கிரிக்கெட் 3

காதல்    கிரிக்கெட் 4

காதல் கிரிக்கெட் 4

காதல்    கிரிக்கெட் 5

காதல் கிரிக்கெட் 5

அத்தியாயம் – 9

அன்றைய சம்பவத்துடன் அவன் முகத்திலிருந்த இறுக்கம், விரக்தி என்பவை அடியோடு இல்லாமல் போய், நிசப்தியாவுடன் சகஜமாகப் பழகவாரம்பித்தான் அபிமன்யு .
நிசப்தியாவுக்குமே அபிமன்யுவின் புதிய அவதாரத்தைக் கண்டு தலை கால் புரியவில்லை. அன்றைய ஆற்றங்கரைச் சம்பவத்தையும், மர நடுகை விழாச் சம்பவத்தையும் வைத்து அவன் ஒரு வகை அமைதி பேண் பறவையோ என்று எண்ணினாள் நிசப்தியா.

மாறாக இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அபிமன்யுவின் இறுக்கம் தளரவே, இத்தனை காலமாக அவன் நெஞ்சை அடைத்திருந்த சோகம் தான் அத்தனைக்கும் காரணம் என்று புரிந்தது அவளுக்கு .

அபிமன்யுவுக்கும் தாயின் இழப்பும், சுமித்ராவின் துரோகமும், கூடவே தந்தையின் செயலும் அவனை மன ரீதியாக மழுங்கடித்திருந்தது.

இக்கட்டான சூழ்நிலையிலும் ஆண்கள் அழக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்த்த சமுதாயத்தினால், அவனுடைய கவலைகளைப் பங்கிடக் கூட முடியவில்லை. அப்படிப் பங்கிடவென, அவன் யோசித்த வரையிலும், நம்பிக்கையான யாரும் அவனிருந்த மனநிலையில் சிந்தனைக்கு வரவுமில்லை.
ஆனால் இன்று அவனுக்கு அவனது விநோதப் பெண் நிசப்தியா இருக்கிறாள். தான் யாரென்று அறிந்து, நாக்கை தொங்க விட்டுக் கொண்டு வந்த பெண்களுக்கு மத்தியில், தான் யார்? ஊர் எது? தொழில் எது? என்று எதுவுமே அறியாமல் பழகும் நிசப்தியா , அவன் கண்களுக்கு கருநீல வானத்திடை பௌர்ணமி போல தோன்றினாள்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு சுமித்ராவைத் திட்டியதற்கு பதிலாக, அன்றே அவளை நாலு வார்த்தை நன்றாகத் திட்டியிருக்கலாமோ? என்று தோன்றியது அவனுக்கு.
அப்பொழுதிருந்த சூழ்நிலை, அவனை வெளியில் தலை காட்ட முடியாதபடி ஒரு வித அவமானத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆயினும் சரியாகப் பார்த்தால், அவள் தான் அவமானப்பட்டிருக்க வேண்டும் என்று தற்போது தோன்றலாயிற்று அவனுக்கு .
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நிசப்தியாவுக்கு அந்நிலவையே தொட்டு விட்ட மகிழ்ச்சி. இத்தனை நாளும் சோகத்தையெல்லாம் உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த “நண்பனின்”…. அதுவும் “நல்ல நண்பனின்” சோகத்தை தன்னால் நீக்க முடிந்தமை பற்றி அவளுக்கு அளவு கடந்த சந்தோஷமே.
ஆனால் இப்பொழுதெல்லாம் நிசப்தி, தன்னுயிர்த் தோழி திவ்யாவைக் கழட்டி விட்டு விட்டு, அபிலாஷூடன் பூங்கா, ஷாப்பிங் மால் எனச் சுற்றலானாள்.
தற்போதெல்லாம் நிசப்தி அவனிடம் ஓர் மிகப் பெரும் மாற்றத்தைக் கண்டாள். பேசும் பொழுது கண்ணையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பவன், பேசி முடித்த பின்னும் அவள்க் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாத நிசப்தி, அவனுடைய பார்வையின் கதிர் வீச்சினை சந்திக்க சிரமப்பட்டு தன் செல்லுக்குள் பார்வையைப் புதைத்துக் கொள்வாள்.

அன்றொரு நாள் நடந்த சம்பவம் அபிமன்யுவின் உள்ளத்தையே தூக்கிப் போட்டது. தனக்குள் இத்தனை நாளாய் மறைந்திருந்த விளையாட்டு வீரனை, பழைய அபிமன்யு ராகவ் குமாரை அவனுள் வரச் செய்தது.
வாழ்வே ஒளி குன்றிப் போயிருக்க இந்தப் பேர் , புகழ் எல்லாம் யாருக்காக? என்று அவன் நினைத்திருந்த வேளை, அவனை மீளெழச் செய்த சம்பவம் அது.
ஐந்து வருடங்களில் தன்னை எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று எண்ணியிருந்த வேளையில், தனக்காக தன் ஆட்டத்தை மீண்டும் காண வேண்டும் என்பதற்காக, ஏன் தன்னையே ஆயுளில் ஒரு நாளாவது பார்த்து விட வேண்டும் என்பதற்காக ஒரு ஜீவன் காத்திருப்பதை அறிந்ததும், அவன் வாழ்க்கைப் பாதை தடம் புரண்டது.

“தம்பதிவனம்” என்பது ஒரு பக்கம் நன்கு வளர்ச்சியடைந்த கட்டிடத் தொகுதிகள், ஷாப்பிங் மால், ஹோட்டல்கள், மருத்துவ மனைகள், பாடசாலைகள், வயோதிபர் மடங்கள், சிறுவர் இல்லங்கள், பூங்காக்கள் என்பவற்றைக் கொண்டிருக்க, ஊரின் மற்ற பகுதி ஆறு, காடு, மலைகள் என மனித வாசனையே அற்றிருக்கும்.

அப்படி வளர்ச்சியடைந்த கட்டிடத் தொகுதியில் அமைந்திருந்த “சாருமதி ஹோட்டல்” என்ற தனியார் விடுதி, அந்தப் பகுதியிலேயே மிகவும் பிரசித்தமான விடுதி.

அங்கு வந்து தங்குபவர்கள் எல்லாம் பெரும்பாலும் மிகவும் வசதி படைத்தவர்கள். அந்த விடுதியின் பின்னால் மகாவலி கங்கை நெளிந்து, வளைந்து ஓடிக் கொண்டிருந்தது.
மாலை நேரங்களில், அந்த கங்கையின் சலசலப்போடு, இசைக் கச்சேரி ஆகியவையும் நடந்தேறும் . அத்துடன் சிற்சில உணவுக் கடைகளும் முளைத்து விடும்.

நிசப்தியாவும் குடும்பத்தோடு இங்கு ஓரிரு தினங்கள் தங்குவதற்காக வந்ததுண்டு. இந்த சாருமதி விடுதியில் தான் அபிமன்யுவும் தங்கியிருந்தான்.
அறையில் தன் மஞ்சத்தில் அமர்ந்து, தன் செல்லில் செல்ஃபி பிடித்துக் கொண்டிருந்தாள் நிசப்தி. அங்கணம் அங்கு வந்த தாய், நிசப்தியாவிடம், “நிசப்தி… அப்பா இன்னைக்கு அவருடைய முக்கியமான பென்ட்ரைவ்வை வச்சிட்டு போய்ட்டாராம்…. சாருமதி ஹோட்டல்ல தான் இருக்காராம்…. போய் கொடுத்துட்டு வர்றியாமா?” என்று கனிவுடன் கேட்க, நிசப்தியாவுக்கு தலைகால் புரியவில்லை.

சாருமதி ஹோட்டலுக்கா? சுவர்க்கலோகத்துக்கே செல்வது போன்ற மகிழ்ச்சி அவளுள். சாருமதி ஹோட்டலின் மாபிள் தரையிலேயே முகம் பார்க்கலாம். அந்தளவுக்கு பளபளவென்றிருக்கும். பென்ட்ரைவ்வை கொடுக்கும் சாக்கில், அப்படியே சாருமதி ஹோட்டல் வளாகத்தையே பின்னணியாகக் கொண்டு செல்ஃபி பிடிக்கலாம். அத்துடன் தான் வழமையாக செல்லும் ஓரிடத்திற்கும் சென்று விட்டு வரலாம் என்ற எண்ணம் தோன்ற , பக்கத்து வீட்டு ஆரோஹினியிடம், ஸ்கூட்டியை இரவலுக்கு எடுத்துக் கொண்டு சென்றாள் நிசப்தியா.

ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், விடயத்தைக் கூறியதும், தந்தை இருந்த அறைக்கு அழைப்பெடுத்து விடயத்தைக் கேட்டு, ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, அவளை அவ்வறைக்கு போகச் சொன்னாள் ரிசப்ஷனில் இருந்த பெண் .
வந்த காரியம் முடிந்து திரும்பி வந்து, செல்ஃபி பிடிப்பதற்காக, நல்ல இடமாகத் தேடிக் கொண்டிருந்த போது , அந்த ஹோட்டலில் இருந்த ரிசப்ஷன் மேசையில், தன் இடது கையை ஊன்றி, வலது கையை காற்சட்டைப் பைக்குள் விட்டபடி, மேசையோடு சற்றே சாய்ந்த வண்ணம், சுவரில் பொருத்தப்பட்டிருந்த, நவீன ரக தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.
தூரத்திலேயே அவனைக் கண்டு விட்டவளுக்குள், இனம் புரியாத மகிழ்ச்சி. கூடவே அதிர்ச்சி.

நேற்று வரை பார்த்த அபிலாஷே இல்லை இது. தொண்ணூறாம் ஆண்டுகளில் முரளி,கார்த்திக், பிரபு போன்ற நடிகர்கள் அணிந்த காற்சட்டையும், தொளதொளவென சொக்காவும் போட்டுக் கொண்டிருந்தவனா இது? அவளால் நம்பவே முடியவில்லை.
தொடையை இறுக்கிப் பிடித்திருந்த கரண்டைக் கால் வரையிலான நீண்ட டெனிமும், அவனுடைய வனப்பு மிக்க திருமேனியைக் காட்டத்தக்க வகையில் டீஷேர்ட்டையும் அணிந்து, ஒரு கையை மேசையிலும், இன்னொரு கையை தன்னுடைய டெனிம் பையிலும் இட்டபடி, கண்களில் அதி நவீன கவர்ச்சிகரமான கண்ணாடி ஒன்றையும் அணிந்து, அவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது அவளுக்கு ஏனோ விளம்பரத்தில் வந்த ஆணழகனைப் பார்ப்பது போல ஒரு பிரம்மை.
இருப்பினும் இந்தக் கரடு முரடான தாடியைத் தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. நண்பனின் மாற்றம் பற்றி உள்ளுக்குள்ளே பெருமையாக எண்ணினாள் நிசப்தியா.

நேரே அவளிடம் சென்று, “ஹாய் அபிலாஷ்”என்ற வண்ணம் தன் கையை அவனை நோக்கி அசைக்க, அவளை நோக்கிய திரும்பியவனின் உதடுகள் விரிந்தன.
அவனிடமிருந்து என்றுமேயில்லாதவாறு திரவிய வாசனை வீசிக் கொண்டிருந்தது. அப்படியானால் அவன் பர்ஃபியூம் போட்டிருக்கிறானா? அபிமன்யுவைப் பார்த்ததும், பதிலுக்கு நிசப்தியின் உதடுகளும் விரிந்தன.

“இங்க என்ன பண்ற நிசப்தி?” என்று அவன் மேசையிலிருந்து, கையை எடுத்து அதையும் டெனிம் பையில் விட்டபடி, ஆச்சர்யத்துடன் கேட்க, நிசப்தி அவனிடம் தந்தையின் கதையை கூறுமுகமாக, “அப்பா பென்ட்ரைவ்வ வீட்லயே வச்சிட்டு போய்ட்டாரு… அது தான் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றாள்.
பிறகு அவனிடம், “ஆமா… அபிலாஷ் இங்க தான் இருக்கீங்களா?” என்று விழியகல அவள் கேட்க, அவனும் உற்சாகமான கம்பீரக் குரலில், “ஆமா.. ரூம் நம்பர் நோட் நோட் செவன்” என்று கூற, நிசப்தி தன் கையினால் வாயை மறைத்துக் கொண்டு சிரித்தாள்.

“ஏன் சிரிக்குற நிசப்தி?” என்று அவன் புரியாமல் கேட்க, “ரூம் நம்பர கேட்டா.. படம் பேரு சொன்னீங்கள்ள…. அது தான் சிரிப்பு வந்திருச்சி” என்று ஆங்கிலப் படமான “ஜேம்ஸ்பாண்ட் நோட் நோட் செவன்” என்பதனை நினைவுறுத்தி அவள் சிரிக்கையில், அபிமன்யுவும் இணைந்து நகைத்தான்.

“ஆமா அபிலாஷ் இப்போ ஃப்ரீயா?”என்று முத்துப் பற்கள் பளீரிட, தலையாடிய வண்ணமே கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்கிறாள் என்றால், எங்கேயோ அவனை அழைத்துச் செல்லப் போகிறாள் என்பது அபிமன்யுவுக்கு அவளுடன் பழகிய சொற்ப நாட்களிலேயே புரிந்து விட்டது.
அவளுடன் அவன் பழகிய நாட்கள் கொஞ்சம் தான். இருப்பினும் நிசப்தியாவைப் பற்றி அவனறிந்து கொண்ட விடயங்களோ பல. அவளுடன் செல்வது என்றால், அவளுக்கும் இஷ்டம் தான்.
எனவே ஏதும் சொல்லாது, அவன் அவளை நோக்கி “எங்க போகப் போறோம் நிசப்தி?” என்று உறுதியான குரலில் கேட்க, நிசப்தியாவும் உடனேயே பதிலளிக்கவில்லை.

“இப்போ வரத்தானே போறீங்க… அப்போ பார்த்துக்குங்க…”என்று கிண்டல் குரலில் விடை பகர்ந்து விட்டு, அவனை இரவல் வண்டியில் அழைத்துச் சென்றாள்.

ஸ்கூட்டியில், அவள் பின்னமர்ந்து வர, அவளுடைய கூந்தல், எதிர்க்காற்றின் விளைவினால் தன் முகத்தில் மோத, பயணிப்பது அவனுக்கொரு புது அவஸ்தையாக இருந்தது.

அவள் அவனை அழைத்துச் சென்றது தம்பதிவனத்தின் “சிறுவர் இல்லத்திற்கு”. இன்று திங்கள்கிழமை. திங்கள்கிழமையானாலேயே இந்த ஆசிரமத்திற்கு நிசப்தி வருவது வழமை.
அந்த ஆசிரமத்தின் முகப்புத் தோற்றமே கண்ணுக்கு இதமளிக்கக் கூடியது. ஆசிரமத்தின் மதில் சுவரைத் தாண்டினால், வாகனங்கள் செல்வதற்காக நடுவிலே ஓர் பாதை. பாதையின் இருமருங்கிலும் விரிந்து சென்ற புல்வெளி.இடது பக்க புல்வெளியின் நடுவில் எந்நேரமும் மேலெழும்பி விசிறிக் கொண்டிருந்த, செயற்கை நீரூற்று.
வலது பக்க புல்வெளியுடன் ஓர் சிறுவர் பூங்கா.அப்பூங்காவில் பல சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் சாயலை, அந்தக் கட்டிடம் ஏறத்தாழ கொண்டிருந்தது.

பாராளுமன்றக் கட்டிடம் போலவே, நுழைவாயிலுக்கு செல்ல சில நீண்ட படிகள்.
ஸ்கூட்டியில் பயணித்துக் கொண்டே அவ்விடத்தை ஆராய்ந்தான் அபிமன்யு. அவர்களின் ஸ்கூட்டியும் அந்த இல்லத்தின் முன், தரிப்பிடத்தில் நின்றது . நிசப்தி இறங்கிக் கொள்வதற்கு ஆயத்தமாக ஸ்டான்டினைப் போட, அபிமன்யுவும் இறங்கிக் கொண்டான்.

அவளுக்கு அவள் என்ன செய்யப் போகிறாள் என்பது புரியவேயில்லை. ஆனால் அவள் செய்கை ஒவ்வொன்றிற்கும் நிச்சயம் காரணமில்லாமல் அமையாது என்று உறுதியாக நம்பினான் அபிமன்யு.
அதனால் அவளாகவே கூறட்டும் என அவன் வாளாவிருந்தான் அபி . ஆனால் நிசப்தியா அவனிடம் ஒன்றுமே சொல்லாமல், அவ்வாசிரமத்தின் படிகளை ஏறிச் செல்லவும், அவனும் ஏதும் பேசாது பின் தொடர்ந்தாள்.
அவன் அங்கு நுழைந்ததும் அந்த இடம் முழுவதும் சுத்தமாய், தெய்வக் கலையாம்சத்துடன் இருப்பதைக் கவனித்தான் அபிமன்யு. கூடவே அங்கே பணிபுரியும் மங்கையர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இளநீல நிறத்தில், சிங்களப் பாணியில் “ஒஸரி” முறையில் சேலைக் கட்டியிருப்பதையும் கவனித்தான் அபிமன்யு.

அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் ஏதோ ஓர் விதத்தில் மாற்றுத் திறனாளிகளாக இருப்பதையும் கவனித்தான் அவன் . ஆனால் அவர்கள் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி.
நிசப்தியா வழமையாக வருபவள் ஆதலால், இவைகளைக் கண்டு அவளுக்கு எவ்வித முகமாறுதலும் ஏற்படவில்லை. ஆனால் அபிமன்யு தான் மனதளவில் குன்றிப் போயிருந்தான். அவனுடைய முகமெல்லாம் வெளிறிப் போய், ஒரு வித முக இறுக்கத்துடனேயே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.
அவளைக் கண்டதும் இளநீல நிறத்தில் “ஒஸரி” அணிந்திருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியொருவர், சிரித்த முகமாகவே அவர்களை நாடி வந்தார்.
அவர் பேசிய தோரணை அவர் தான் இவ்வாசிரமத்தின் உயரதிகாரி என எண்ண வைத்தது.

அவரைக் கண்டதும் “ஆயுபோவன் மேடம்”என்று தனது இரு கரங்களைக் கூப்பி வணக்கம் சொன்னாள் நிசப்தியா.
ஓ.. அப்படியானால் இந்தப் பெண்மணி சிங்களப் பெண்மணியா? என்று நிசப்தி வணக்கம் தெரிவித்த முறையைக் கண்டு உள்ளுக்குள் எண்ணிக் கொண்டான் அபிமன்யு.
“ஆயுபோவன்” என்பது சிங்களவர்கள், ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ள உபயோகிக்கும் வாக்கியம். “ஆயுள் பெருகட்டும்” என்பது அதன் அர்த்தம்.
இப்படியவள் வாழ்த்த, அவரும் பதிலுக்கு “ஆயுபோவன்” என்று இன்முகமாய்க் கூறி விட்டு, பார்வையை அபிமன்யு மீது நிலைக்க விட, நிசப்தியாவும் அறிமுகம் செய்து வைக்குமுகமாக, “இது என்னோட ஃப்ரண்ட் அபிலாஷ்” என்று தமிழிலேயே அறிமுகப் படுத்தி வைக்க, அவன் அதிர்ந்து போனான்.

என்ன தமிழில் உரையாடுகிறாள்? அப்படியானால் இவருக்கும் தமிழ் தெரியுமா? ஆம். அவருக்கும் தமிழ் தெரிந்து தான் இருந்தது.
அதைப் புரிந்து கொண்டவன், பதிலுக்கு அவனும், இரு கரம் கூப்பி “ஆயுபோவன் மேடம்”என்று கூற, அவரும் இன்முகமாகவே அதைப் பெற்றுக் கொண்டார்.
அவளிடம் திரும்பிய அவ்வுயர் அதிகாரி “என்ன வழக்கம் போல ரோஹித்த பார்க்க வந்தியா நிசப்தி?” என்று கண்களில் கனிவுடன், தமிழில் சரளமாக பேசிய படி கேட்ப, அவளும் சிரித்துக் கொண்டே “யெஸ் மேடம்” என்ற போது, “அவன் பார்க்ல இருப்பான்.. போய்ப்பாரு” என்று கூற, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, பார்க் பக்கம் போனாள் நிசப்தியா.
அப்படியானால் நிசப்தியா “ரோஹித்” என்ற சிறுவனைப் பார்க்கவா வந்திருக்கிறாள்? அதுவம் அப்பெண்மணி பேசியதைக் கேட்டால் , இவள் வழமையாக வருவதுண்டு போலும் என்று நினைத்தான் அபிமன்யு.
திரும்பவும் அவளுடன் நுழைவாயிலை நோக்கி நடந்தான் அபிமன்யு. இதுவரை ஏதும் அவனிடம் விளக்கம் கூறாத நிசப்தி, அவன் பக்கம் திரும்பி “இப்போ நாம பார்க்க போறோம்ல ரோஹித்… அவன் ஒரு சிங்கள பையன்… பத்து வயசு தான் ஆகுது…”என்று கூறியவள், பிறகு இலேசாக கண்கள் கலங்க “இருந்தாலும் அவனுக்கு “ப்ளட் கேன்சர்”” என்று கூறிய போது, அவள் முகத்தில் தெரிந்த வலி, அவனை ரொம்பவும் பாதித்தது.

அவள் மிகுதி விளக்கங்களை கூறிய போது அவள் குரல் வெகுவாய் தளதளத்தது. “டாக்டர் கூட இ… இ.. இன்னும் மூ….. ணு மாசம் தான்..” எனறவளுக்கு அதற்கு மேலும் பேசக் கஷ்டமாய்ப் போய் விட்டது.
அபிமன்யுவுக்கோ அவளை தன்னுடைய பரந்த மார்பில் அணைத்த வண்ணம் ஆறுதல் கூற வேண்டும் என்று ஏற்பட்ட ஆசையை சிரமப்பட்டு அடக்க வேண்டியதாய்ப் போயிற்று.
இடது உள்ளங்கையை வாயின் மீது அழுந்த அழுத்தி, வரவிருந்த அழுகையை தொண்டைக் குழிக்குள் கடினப்பட்டு அடக்கிக் கொண்டு, “எ.. எத்தனையோ பாவிங்க இருக்குற.. இந்த உலகத்துல…. அவங்களயெல்லாம் விட்டுட்டு…. ஒண்ணுமே தெரியாத பச்சக் குழந்தைகளுக்கு இந்த ஊனம், நோய்….. ஏன் தான் வருதோனு.. தெரியல” என்றாள் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடியே.
அபிமன்யுவுக்கோ தனக்கு துரோகமிழைத்த ராகேஷையும், சுமித்ராவையும், தந்தையையும் ஒருங்கே நினைவுக்கு வந்தது. பாவம் செய்தவர்கள் எல்லாம் வெளியே ஆரோக்கியமாக. பாவமென்றால் என்ன என்பதை அறியாத இவர்கள் , இங்கே நோயாளிகளாக…
உணர்வுகள் மறுத்துப் போய் நின்றவன் மீண்டும் உணர்ச்சி பெற்ற போது அவளும் இயல்பு நிலைக்கு திரும்பி, “சரி வாங்க அபிலாஷ்.. நாம ரோஹித்த பார்க்க போலாம்” என்ற படி அவனை பூங்காவிற்கு அழைத்துச் சென்றாள்.
பூங்காவில் பிற குழந்தைகளுடன் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ரோஹித், தன்னுடல் நிலையறியாமல், அதாவது தான் இன்னும் மூன்று மாதங்கள் தான் உயிருடன் இருக்கப் போகிறோம் என்பதறியாமல், நிசப்தியாவைக் கண்டதும் ஓடி வந்து, அவள் முழங்கால்களைக் கட்டிக் கொண்டான் .
அவனாக விலகும் வரை, அவன் அணைப்பிலேயே நின்று கொண்டிருந்தாள் நிசப்தியா. அவனாக இறுதியில் விலகிக் கொண்டதும், அவன் கேசத்தைச் செல்லமாகக் களைத்து, “இனிமேல் இப்படி ஓடி வரக் கூடாது ரோஹித்… பாரு எப்படி மூச்சு வாங்குதுனு” என்று கருணையுடன் கூறியவள், அவனை அழைத்துக் கொண்டு போய், பூங்காவின் ஓரமாயுள்ள பெஞ்ச்சில் அமர வைத்தாள்.

தானும் அபிமன்யுவுடன் அமர்ந்து கொண்ட நிசப்தியாவை நோக்கி, ரோஹித் , “யாருக்கா இவரு?” என்று கேட்டான்.
ரோஹித் சிங்களப் பையனாக இருந்தாலும், அவனுக்கு தமிழ் நன்றாகப் பேசமுடியும். அவன் தமிழ் பேசுவதைப் பார்த்து முதலில் நிசப்திக்கு தோன்றிய ஆச்சர்யமே அபிலாஷூக்கும் தோன்றிற்று.
இருப்பினும் சிங்களப் பையன் தமிழ் பேசுவது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று எண்ணியவன், அச்சிறுவனைக் கவனிக்கத் தொடங்கினான்.

அவளும் இவனை அறிமுகப்படுத்தி வைக்க , சிறுவன் “ஹாய் அண்ணா..”என்றான் சிரித்த முகமாகவே. அவனும் சிரித்துக் கொண்டே “ஹாய் ரோஹித் எப்படியிருக்க?”என்று சாதாரணமாக கேட்க, சிறுவன் “எனக்கென்ன நா…. நல்லாருக்கேனே…. ”என்ற போது அவன் முகத்தில் ஆயிரம் வால்ட் மின்குமிழ் ஒளிர்ந்தது.

தந்தையும், தாயும் ஓர் விபத்தில் இறந்து விட, தெய்வாதீனாமாக இவ்வாசிரமத்தில் வந்து சேர்ந்த ரோஹித், நிசப்தியாவுக்கு அறிமுகமானது அவளது பத்தொன்பதாம் வயதில்.
உயர்தரம் முடித்து விட்டு, வீட்டில் இருக்காமல் சமூகச் சேவை செய்யப் போனவளுக்கு ஐந்து வயதில் கன்னத்தில் குழிவிழ சிரிக்கும் ரோஹித்தைக் கண்டதும் பிடித்துப் போயிற்று. அதுவும் அவனுக்கு இரத்தப் புற்று நோய் என்று தெரிய வரவும், நிசப்தியின் நெருக்கம் அதிகமாயிற்று.

நிசப்தியா தன்னுடைய கைப்பையிலிருந்து, டேரி மில்க் சாக்லேட்டை எடுத்து நீட்ட, சிறுவனின் மலர்ந்திருந்த முகம் நொடியில் வாடியது. சாக்லேட்டைக் கண்டதும் மகிழாத சிறுவனா? அபிமன்யு ஆச்சர்யப் பட்டுப் போனாள்.

“போக்கா.. நா சாக்லேட் கேட்டேனா? நா கேட்காதது எல்லாம் வாங்கித் தர… ஆனா நா கேட்டது மட்டும் கிடைக்கவேயாதில்ல?”என்று கூற, அவ்விடத்திற்கு புதியவனான அபிமன்யு, வேறு நினைத்தான்.
ஏதேனும் விலை கூடிய பொருளாக இருக்க வேண்டும். அது அவளுக்கு கட்டுப் படியாகவில்லை போலும். பரவாயில்லை எவ்வளவு செலவானாலும் சிறுவன் கேட்கும் பொருளை வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று எண்ணியவன், அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க வாய்திறக்கப் போனான்.
ஆனால் நிசப்தியா திடீரென தன் பெயரை உச்சரிக்க, அவன் இதயம் ஒருகணம் நின்று துடித்தது.
“நா என்னடா பண்ண? அபிமன்யு ராகவ்குமார் சாருக்கு நேத்து கூட மெய்ல் பண்ணேன்.. அவரோட ஹாலிடேய முடிச்சிட்டு.. உன்ன பார்க்க வராறாம்” என்று நிசப்தி, அவனுடைய தோளை ஆதரவாகப் பற்றிக் கூற, அபிமன்யு கற்சிலையாகி நின்றான்.
அப்படியானால் சிறுவன் கேட்பது தன்னையா? அவனது தலைமறைவுச் செய்தியை சிறுவனிடம் கூற மனமற்று, “ஹாலிடே” என்று கூறி சமாளிக்கிறாளோ? என்று எண்ணினான் அபிமன்யு.
அந்த கணம் தான் தான் நீ காணத் துடிக்கும் அபிமன்யு ராகவ்குமார் என்று கூற எழுந்த நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாளாவிருந்தான் அபிமன்யு.
“போங்க அக்கா… இதே தான் டாக்டரும் சொல்றாங்க… அவருக்கு அப்படி என்ன தான் ஹாலிடே?..” என்று ரோஹித், ஒவ்வொரு நாளும் தன்னை பரிசோதிக்க வரும் டாக்டர் தன் உடல் நலத்தை பரிசோதிக்க வருகிறார் என்று எண்ணிக் கொண்டு சலித்தபடிக் கூறினான்.
அதற்கு நிசப்தி “அடுத்த வீக் அவரோட ஹாலிடே அநேகமா முடிஞ்சிடுமாம்.. அப்போ கட்டாயமா உன்ன பார்க்க வர்றதா சொல்லியிருக்காரு”என்று கூற, சிறுவனும் “உண்மையா, ப்ராமிஸா? “எத்தென்த?” என்று இறுதியில் தன் தாய் மொழியிலும் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டதன் பின்பு தான் அவன் முகம் மலர்ந்தது.
பிறகு நண்பர்களுடன் ஊஞ்சலாடுவதை பாதியில் விட்டு விட்டு வந்ததால், சாக்லேட்டைப் பெற்றுக் கொண்டு, இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான் ரோஹித்.

அவன் சென்ற பிறகு அவள் முகத்தைப் பார்த்தால், அது கோபத்தினால் சிவந்திருந்தது. எப்பொழுதுமே சிரித்த முகமாகவே இருக்கும் நிசப்தியாவின் கோபம் அவனை திகைக்க வைத்தது.
அந்தக் கோபத்தின் உண்மைக் காரணம் அவளது பேச்சிலிருந்தே அவனுக்கு புலப்பட்டது.

அவனைத் திரும்பிப் பாராமேலேயே, விட்டத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் நிசப்தி “மனிஷங்க ஒண்ணு தனக்காக வாழணும்…. இல்ல மத்தவங்களுக்காகவாவது வாழணும்.. அப்படி வாழ்றதுக்கு பேரு தான் வாழ்க்க…” என்றாள் வெறுப்புத் தோய்ந்த குரலில்.

அவள் பேச்சின் முழு அர்த்தம் புரியாவிட்டாலும், அவள் வார்த்தைகள் அவன் மனதை ஏனோ சுட்டது.
“அபிமன்யு” என்று அவள் தன் பெயரை உச்சரிக்க, அவளுக்கு உண்மை தெரிய வந்துவிட்டதோ என ஒருகணம் ஆடித் தான் போனான் அபிமன்யு.
ஆனால் அவள், தன் பற்களைக் கடித்துக் கொண்டு “அபிமன்யு… பெரிய இவன்…”என்று கூற புரியாமல் விழித்தான் அபி.
அவன் அருகில் இருக்கும் போதே, மூன்றாம் நபராக திட்டு வாங்குவது இது தான் முதல் தடவை அவனுக்கு.

“லவ் ஃபேலியர் னா உலகமே அழிஞ்சிடுமா? தான் காதலி துரோகம் பண்ணிட்டு போய்ட்டா… கோழைங்க மாதிரி தலை மறைவாகிட்றதா?”என்று கோபங் கொண்ட குரலில் கதைத்தவள், அவனைத் திரும்பி நோக்கி “ “என் வாழ்க்கைய ஃபுல்லா பாழடிக்காம பாதியிலேயே போய்ட்டேல்ல…. ரொம்ப சந்தோஷம்…. உன் முன்னாடி வாழ்ந்து காட்டுறேன் பாரு” னு சபதம் போட்டு முன்னுக்கு வந்திருந்தா அது வீரம்…” என்றாள் அதே கோபம் மாறாது.

அவனோ ஏதும் பேசாமல் அமைதியாக அவளையே ஆழ ஊடுருவி நோக்கிக் கொண்டிருந்தான்.
“இப்போ நீங்களே பார்த்தீங்கள்ள? மூணுமாசத்தில இவன் நம்மளோட இருக்கப் போறதில்ல” என்றவளுக்கு மீண்டும் நா தளதளத்தது.
“ஆனா.. இவனோட ஒரே ஆச.. “த பெஸ்ட் கிரிக்கெட் பிளேயர் அபிமன்யு ராகவ்குமார்” ர பார்க்கணும்”என்ற போது அவள்க் குரலில் அப்பட்டமாக இழிவுச் சிறப்பு வெளிப்பட்டது.

“இதுவே இவனோட கடைசி ஆசையாகவும் இருக்கலாம்.. ஆனா அந்தக் “கோழைக்கு” ஃபேன்ஸ்ஸ பத்தி என்ன கவல? ஒருவேளை “கோழைத்தனமா””ஸூ ஸைட் பண்ணிக்கிட்டானோ என்னவோ?””என்று அவள் குறிப்பிட்ட ஒவ்வொரு””கோழை””என்கிற வார்த்தையிலும் அவள் கொடுத்த அழுத்தம், அவன் இதயத்தைக் குத்திக் கிழித்தது.
அவனா? தற்கொலையா? அந்தளவுக்கு தான் ஒன்றும் கோழையல்ல என்று கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
இருப்பினும் அவன் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா அபிலாஷ்?” என்றவள் அவனுடைய பதிலையும் எதிர் பாராது, “கோழையோட ஃபேன்ஸ்ஸூம் கோழையா தானே இருப்பாங்க… அந்த ஃபூலுக்காக.. இன்னொரு ஃபூல்.. ஸூ ஸைட் பண்ணிக்கிச்சு”என்று கூறியதும், இவ்வளவு நேரம் குனிந்திருந்த தலை சட்டென நிமிர்ந்தது.
அவனுக்கு இந்த விடயம் தெரியாதே? முதலில் அவன் இலங்கையில் இருந்தால் தானே தெரியும்?
மேற்கொண்டு எதுவும் பேசாமல், தன் செல்லை எடுத்து, முகப்புத்தகத்திற்கு சென்றவள், அவனுடைய உள்ளங்கையில் பலவந்தமாக தன் செல்லைத் திணித்தாள்.

“பாருங்க அபிலாஷ்…. இந்த இடியட்கு.. எத்தன பேஜஸ்.. அனுதாபம் தெரிவிச்சு உருவாகியிருக்குனு… எத்தன லேடீஸ் ப்ரபோஸ் பண்ணியிருக்காங்கன்னு… அவனோட டைம்லைன்ல எத்தன போஸ்ட்?”என்று கூறிய போது அபிமன்யு திகைத்து நின்றான்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் அவனுக்கு அனுதாபம் தெரிவித்து உருவாகியிருந்தன. அதிலும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மண வேண்டுதல்கள் அவன் டைம்லைனில்.

சுமித்ரா சென்றதன் பின்பு வாழ்வே வேண்டாத நிலை. எதிர் மறைவான விமர்சனங்களுக்குப் பயந்து, முகப்புத்கம், டுவிட்டர் என வரவேயில்லை அவன் . அப்படியானால் அவன் கோழை தானோ அவனுக்கே அந்நொடி சந்தேகமாக இருந்தது.

“ஒண்ணு நமக்காக வாழணும்.. இல்ல மத்தவங்களுக்காகவாவது வாழணும்” என்று அதையே மீண்டும் தாரக மந்திரம் போல கூறினாள் நிசப்தியா.
“சரி அதுவும் வேணாம்… நாட்டுக்காக வாழலாமே? நாட்டோட.. பிறந்த மண்ணோட பேர், புகழ காப்பாத்த வாழலாமே… இதெல்லாம் அவனுக்கு எங்க தெரியப் போகுது? தேவதாஸ் மாதிரி ஒரு கையில பாட்டிலும், மறு கையில பீஸுன்னும் சுத்திகிட்டு இருக்கானோ…. யாருக்கு தெரியும்…. முட்டாள்.. தனக்கு கிடைச்ச லைஃப சரியா வாழத் தெரியாத முட்டாள்…..”எனச் சீற்றத்துடன் விட்டத்தை வெறித்த படி திட்டி விட்டு , அபிலாஷைப் பார்த்தாள் நிசப்தியா. அவனை அங்கு காணவில்லை. அவன் அமர்ந்திருந்த இடத்தில் அவளது கைப்பேசி மட்டும் இருந்தது.

அத்தியாயம் – 10

தன்னுடைய ஹோட்டல் அறைக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு விறுவிறு என்று வேக நடையுடன் வந்தான் அபிமன்யு. தன்னுடைய அறையின் கதவைத் திறக்கும் வரையிலும் அவன், கண்கள் சிவந்து, நாசித் துவாரம் விடைத்து, முகம் கன்றிப் போய் நின்று கொண்டிருந்தான் .

கதவின் சாவித்துவாரத்தில் சாவியை உட்செலுத்தி, கதவைத்திறந்தவன், திரும்பாமலேயே கதவைத் தன் கால்களாலேயே மூடி விட்டு, கை முஷ்டியை இறுக்கிய படி அப்படியே நின்று கொண்டிருந்தானாயினும், அவனுடைய கண்கள் மாத்திரம் மௌனமாய்க் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன.

அவனுடைய பற்கள், கீழுதட்டினைக் கவ்விப் பிடித்திருந்த அழுத்தத்தில், இலேசாய் இரத்தம் கூட எட்டிப் பார்த்தது.

அவனுள்ளே பல்லாயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன. அவ்வளவு மோசமானவனா அவன்? அவ்வளவு கோழையானவனா அவன்? எப்படி அவனால் இவ்வளவு காலமும் தன் இரசிகர்களைப் பற்றி நினைக்காமல் இருக்க முடிந்தது? எப்படி அவனால் தன் தாய் நாட்டைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடிந்தது?
எது தன்னை இவ்வளவு கோழையாக்கியது? எது தன்னை பிரச்சினைகளை விட்டு ஓடச் செய்தது? எது காரணம்?

இவையெல்லாவற்றுக்கும் தன் வாழ்வின் ஊன்று கோலாயிருந்த தன் தாயின் இழப்பு தான் காரணமா? இல்லை… காதல் தோல்வியினால் ஏற்பட்ட விமர்சனங்களுக்குத் தான் பயந்தது தான் காரணமா? இல்லை…. நல்லது, கெட்டது சொல்லித் தர வேண்டிய தந்தையின் சீர்கேடு தான் காரணமா? அதுவும் இல்லையாயின்… தன்னுயிர் நண்பனின் துரோகத்தைத் தாங்க முடியாதது தான் காரணமா?
அவன் தனக்குத் தானே கேட்டுப் பார்த்தும் பதிலில்லை. அவனுக்கு யார் மீதும் குற்றம் சொல்ல முடியாமல் போயிற்று.

இந்த ஐந்து வருடங்களில் உலகமே தன்னை மறந்து விட்டிருக்கும் என்றல்லவா நினைத்திருந்தான்? அவள் தன் கையில் திணித்த செல்லின் முகப்புத்தகத்தில், அவன் கண்ட அனுதாப அலைகள் அவனை சிந்திக்க வைத்தது .

எத்தனை, எத்தனை பக்கங்கள்? “அண்ணா… நீங்க எங்கண்ணா இருக்கீங்க?…”, “வீ நீட் யோர் சேன்ஜபிள் ஷாட்”, “நீங்க இல்லாம க்ரிக்கெட்டே போர்” , “நீங்க எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும்”, “அவ போனா என்ன நா இருக்கேன்… திஸ் இஸ் மை நம்பர்….” என்று எத்தனை உருக்கமான போஸ்ட்டுக்கள்?மணவேண்டுதல்கள்?
இவர்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் யோசியாமல், எப்படி அவனால் தலை மறைவாகி, பிரச்சினைகளுக்கு பயந்து ஓட முடிந்தது?

ஒரு மனித உயிர்… சாவதற்குக் காரணமாக அமைந்து விட்டானே? அதை நினைக்கையில் அவனுக்கு அவன் மீதே வெறுப்பு வந்தது.

“அக்கா.. நா அபிமன்யு ராகவ்குமார பார்க்கணும்” என்ற சிறுவனின் குரல் அவன் காதுக்குள், ஒலித்து ஓய்ந்த மறுகணம், அவன் முன்பெல்லாம் மைதானத்திற்குள் நுழையும் போதெல்லாம், இரசிகர்கள் தந்த உற்சாக வரவேற்பு அவன் காதுக்குள் ஒலித்து ஓய்ந்தது.
“அபி… மன்.. யு… அபி.. மன்.. யு”என்று முழு மைதானமுமே இணைந்து எழுப்பும் கோரஸ் அவன் செவியினை நிரப்பியது.

அவையெல்லாம் இணைந்து அவன் உடலையும், மனதையும் பலவீனப்படுத்த, கால்கள் வலுவிழந்தவனாய் அப்படியே தரையில் முழந்தாளிட்டு அமர்ந்தான்.
உள்ளத்தின் இயலாமை வாய் வழியாக புலப்பட, அண்ணார்ந்து பார்த்து, அவ்வறையே அலற, “ஆ” என்று கத்தினான் அபிமன்யு.

கண்களை மெல்ல மூடிக் கொண்டவனின் காதுக்குள் ஓர் இனிய குரல், “ஒண்ணு தனக்காக வாழணும்..இல்ல மத்தவங்களுக்காகவாவது வாழணும்” என்று கூற, சட்டென கண்களைத் திறந்து கொண்டான் அபிமன்யு .

கண்களைத் திறந்தவனின் நெஞ்சம் முழுதும் அவள் முகம். அவள் தன்னைப் பார்த்து சிரிப்பது போல ஓர் பிரம்மை. அவன் நாடி நரம்பெங்கும், இனம் புரியாத அமைதி பரவுவதை உணர்ந்தான் அபிமன்யு.

கடினப்பட்டுக் கொண்டு எழுந்தவன் நேரே குளியலைறைக்குச் சென்றான். அங்கிருந்த ஷவரில் தன் உடைகளைக் களையாமலேயே, குளியலறையின் கதவுக்கு, புறமுதுகிட்டு நின்ற படி, தன் இடது கையினால் சுவரைத் தள்ளுவது போல பிடித்த படி நின்று கொண்டான் அபிமன்யு.

அவன் உடம்பு முழுவதையும், தண்ணீர்த் திவலைகள் பட, தன்னைச் சுற்றிலும் குளிர்மையாக உணர்ந்தவனுக்கு, அன்றையை ஆற்றுச் சம்பவம் நினைவுக்கு வந்தது.
யாரைப் பற்றியும் கவலைப்படாமல், பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த அவள் குழந்தைத் தனமான முகம் அவன் நினைவலையில் விரிந்தது.

ஒரு சில நிமிடங்கள் அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், தன் மனதை கடினப்பட்டு அவளை விட்டும் திருப்பிக் கொண்டு நீராடினான் .

ஏற்கனவே ஓர் பெண்ணினால் ஏற்பட்ட முதல்ச் சறுக்கலை எண்ணியவனுக்கு, பிற பெண்களை நிமிர்ந்து பார்க்கவே அச்சமாயிருந்தது .
அன்று அவள் “அண்ணா” என்ற போது, அவள் மனதுக்குள் இனம்புரியாத நெருடல். என்ன அவளுக்குத் தான் அண்ணாவா? என்று ஓர் சிறிய கோபம்.

அவள், அவளது பந்தைத் தவற விட்டதற்காக, அவனுடன் வாய்ச் சண்டையில் ஈடுபட்ட போது, உள்ளுக்குள்ளே சுவாரஸ்யமாகத் தான் இருந்தது அவனுக்கும்.

ஆனால் அந்தப் பந்து?? அதை நினைக்கும் போது, அந்தச் சோகத்திலும் அவனிதழ்கள் இலேசாக விரிந்தது.
பள்ளிக் கூடத்தில் மரநடுகை விழாவின் போது, அவளை மறுபடியும் சந்திப்போம் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. உள்ளுக்குள்ளே சிறு சந்தோஷம் எட்டிப் பார்த்தாலும், திரும்பவும் வம்பெதற்கு என்று எண்ணியே, அவள் பக்கம் பார்வையை திருப்பாதிருந்தான் அபிமன்யு.

தன் வாழ்வின் சோகம் தாளாமல் குடித்தவன், அவள் வண்டியிலேயே வந்து விழுவான் என்று இருவருமே எதிர் பார்த்திருக்கவில்லை.
வெகு நாள்க் கழித்து , தன் தாயின் கைப் பக்குவத்தை அவளால், நினைவு கூற முடிந்த போது தான், முதன் முறையாக அவன் மனம் நெகிழத் தொடங்கியது.
அவள் திடீரென்று “நந்தகுமார்” என்று சொன்னதும் தன் மனதில் தன்னையறியாமலேயே பதைபதைப்பு தோன்றியது ஏன்? நந்தகுமார் அவள் காதலன் அல்ல என்று தெரிய வந்ததும், தனக்குள் சந்தோஷம் பரவியதும் ஏன்?
அந்த விடைக்கான காரணம் தற்போது புரிந்தது அவனுக்கு. அவன் நிசப்தியா மீது காதல் வயப்பட்டிருக்கிறானா?
அவன் தனக்குத் தானே கேட்டுப் பார்த்துக் கொண்டான். ஒரு வேளை இதுவும் முதல் மயக்கமோ? முதலில் சறுக்கி எழுந்தவனுக்கு, இரண்டாவது முறையாக சறுக்கவும் பயமாக இருந்தது.

ஷவரை நிறுத்தி விட்டு ஈர உடைகளைக் களைந்து, டவலை இடுப்பில் சுற்றிக் கொண்டு வெளியே வந்தான் அபிமன்யு.

அவனுடைய குழம்பிப் போன மனதினை, சுவரில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியில் இருந்த பொன்மொழி, தெளிய வைத்தது.

“எது உன்னை தெளிய வைக்கிறதோ? எது உன்னைப் பற்றி உனக்கே புரிய வைக்கிறதோ? அது தான் காதல்” என்றிருந்த சிங்களப் பொன்மொழி அவனைச் சிந்திக்க வைத்தது.
அப்படியானால் இவனுக்கு முதலில் வந்தது காதலே அல்ல. வெறும் மயக்கம். சுமித்ராவின் மிருதுவான தேகத்திற்கு பார்த்து வந்த மயக்கம்.
தற்போது நினைக்கையில் அவனுக்கு ஏற்பட்டது காதல் தோல்வியாகத் தோன்றவில்லை. மாறாக மனித மிருகங்களின் விமர்சனங்களுக்கு அஞ்சியதால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவாக எண்ணத் தோன்றியது அவனுக்கு.
அந்த கணம் நிசப்தியாவின் கள்ளங்கபடமற்ற முகம் நினைவுக்கு வர, அவளை தற்போதே கண்டு, அவளை தன்னணைப்புக்குள் நிறுத்த வேண்டும் என்ற ஆவல் எழுந்தது அவனுக்குள்.

அவளை காலம் பூராவும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே, தன்னலுமாரிப் பக்கம் விரைந்தவனுக்குள், அவள் சொன்ன விடயம் மீண்டும் நினைவுக்கு வந்தது.

“ஒண்ணு தனக்காக வாழணும்.. இல்ல மத்தவங்களுக்காகவாவது வாழணும்”

ஆடையை எடுக்கப் போனவனின் கைகள் அப்படியே நின்றது. அவனுள் உதித்த யோசனை அது. தன் இரசிகர்களின் ஆசைப் படி மறுபடி தான் கிரிக்கெட் உலகில் நுழைந்தால் என்ன?
அது தான் சரியெனத் தீர்மானித்தவன், அதற்கு முன் தன் காதலைத் தெரியப் படுத்தி விட வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தான் .

இடது புறம் திரும்பி சுவரிலுள்ள நேரத்தைப் பார்த்தான் அவன் . நேரம் இரவு ஏழு மணியைக் காட்டியது. அலுமாரியில் இருந்து, உடையை எடுத்தவன், அதை தன் கட்டிலில் இருந்தவாறே அமர்ந்து கொண்டே அணிந்தான்.

அவனுடைய முகம் சிந்தனை பாவத்தைக் காட்டியது. இப்பொழுதே அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. எப்படி? என்று அவனது யோசனை செய்ய , திடீரென்று அவனுக்கு அவள் தந்த பழைய நோக்கியா கைப்பேசி நினைவுக்கு வந்தது.

அன்று அவள் , திருமதி. நந்தகுமாரின் பிறந்த நாளைக் கொண்டாட, அவர் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதற்காகத் தந்தது. அதன் பிறகு கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு, அவளும் அது பற்றி கேட்காமல் விட்டமையால், அப்படியே மறந்து போய் விட்டிருந்தது .
இது நாள் வரை அந்தக் கைப்பேசி பற்றிய நினைவே இருவருக்கும் வந்ததில்லை . இதுவரை நிகழ்ந்த சந்திப்புக்கள் எல்லாம் தற்செயலாகவும், அதே சமயம் நாளை இத்தனை மணிக்கு அங்கு சந்திக்கலாம் என்று இருவரும் திட்டமிட்டதாகவும் அமைந்தமையால், கைப்பேசியைப் பற்றிய நினைவே இருவருக்கும் வரவில்லை.
இங்கணம் திடீரென்று அவனுக்கு அதைப் பற்றி நினைவு வரவே , அவனுடைய டிராயரினை இழுத்து செல்லைத் தேடினான். கடைசி டிராயரில், அந்த செல் மட்டும் தனியாக இருந்தது.
கண்களில் ஒளியுடன் கைப்பேசியை எடுத்தான் அபிமன்யு. அதன் “பட்டன்களை” அழுத்திப் பார்த்த போது, அது செயலிழக்கப்பட்டிருப்பது புரிந்தது.
பழைய நோக்கியா கைப்பேசியாயிற்றே. அதிலிருந்த சிவப்பு நிற வண்ணத்தில் இருந்த பட்டனை நீண்ட நேரம் அழுத்திப் பார்த்தும், அதுசெயல் படாததைக் கண்டவனுக்கு, அதன் “பேட்டரி லோவ்”ஆக இருக்குமோ? என்று தோன்றியது.

அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன், அவசர அவசரமாக சென்று, தன்னுடைய பர்ஸை எடுத்து சில நூறு ரூபாய்களை எடுத்து, அங்குள்ள ரூம் போயிடம் கொடுத்து, அந்தப் பழைய நோக்கியாவைக் காட்டி, இதற்கேற்ற “சார்ஜர்” ஒன்றை சீக்கிரம் வாங்கி வருமாறு கூறி அனுப்பி வைத்தான்.

அவனிடம் ஏது இவ்வளவு பணம்? அது தான் அவன் கிரிக்கெட்டில் சம்பாதித்த அமெரிக்க டாலர்கள் நிறையவே இருக்கின்றனவே.
வீட்டை விட்டு வெளியில் வந்தவன், செய்த முதல் வேலை, தன்னை அடையாளப்படுத்தக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் அழித்தது தான்.
தன்னுடைய பாஸ் போட் மற்றும் வங்கிக் கணக்கு அனைத்தையும், “அபிலாஷ் மூர்த்தி”என்ற பெயரிற்கு, இந்த மாதிரி விடயங்களில் கை தேர்ந்த கில்லாடி ஒருவனைப் பிடித்து மாற்றிக் கொண்டான்.
தான் செய்யும் செயல் சட்ட விரோதமானது என அவனுள்ளம் நன்கு அறிந்தாலும், அப்போதிருந்த சூழ்நிலையில் அது அவனுக்கு அவசியமாய்ப் பட்டது.
ஆனால் அவன் செலவளித்ததில் ஒரு ரூபாய்க் கூட தந்தையின் காசு கிடையாது. அவரும் தேவையில்லை. அவருடைய “எயார் மொபைல்”கம்பனியும் தேவையில்லை என்று அந்தத் தருவாயிலும் எண்ணினான் அபிமன்யு.

அந்தப் பையன் சென்று விட்ட பிறகு இன்னொரு பணி அவனுக்காக காத்திருந்தது. அது அவன் சிறிது நேரத்திற்கு முன் தான் யோசித்து வைத்த விடயம்.
தான் எடுத்த முடிவைப் பற்றிக் கூற, யார் இருக்கிறார் என்று சிந்தித்த போது தான் அவனுக்கு , இலங்கை அணியின் சிறந்த வீரரான “தினேஷ் சந்திமாலை” நினைவுக்கு வந்தது.

தன்னோடு விளையாடிய சக விளையாட்டு வீரனான “தினேஷ் சந்திமால்”லிற்கு அழைப்பெடுத்து, தன்னைப் பற்றியும், தன் இரகசியத்தைப் பற்றியும் கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் அபிமன்யு.

விளையாட்டிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி இருவருமே சிறிது நெருக்கத்துடனேயே பழகவாரம்பித்திருந்த கால கட்டம் அது.
இலங்கை அணியின் “சங்கா-மஹேல”கூட்டமைப்பு எப்படி பரவலாக பேசப்பட்டதோ? அதே போல, மேற்குறிப்பிட்ட இருவரும் ஓய்வு பெற்று சென்று விட, “சந்திமால் – அபிமன்யு” கூட்டமைப்பு பரவலாகப் பேசப்பட்டதோடு, அவர்களின் கூட்டமைப்பு அணிக்கு ரொம்பவே கை கொடுத்தது.
அவன், அபிமன்யு வீட்டுக்கு வருவான். அபிமன்யு அவன் வீட்டுக்கு செல்வான். இருவர் வீட்டிலும் விருந்து, விழா, உத்சவம் என்று எது வந்தாலும் இருவர் வருகையும் இருக்கும்.
அபிமன்யு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டால், “தேங்ஸ் ஃபோர் ஸப்போர்ட்டிங் மீ சந்தி” என சந்திமாலுக்கும் சேர்த்தே நன்றி கூறுவான் அபி. அவனும் அப்படியே.
இருவரின் நெருக்கம் இரசிகர் மத்தியிலும் பெரிய வரவேற்பைத் தந்தது. அவர்களிருவரும் இணைந்து நடித்த விளம்பரங்கள் சூப்பர் ஹிட்டாகின. அந்தளவுக்கு நெருக்கமானது அவர்கள் நட்பு.

சந்திமாலிடம் எப்பொழுதுமே ஓர் தனி செல் இலக்கம் உண்டு. ஐந்து வருடங்களுக்கு முதல் தந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் கூப்பிடு, என்னால் இயன்ற உதவி செய்கிறேன் என்று கூறிய தினேஷின் குரல் அவன் காதில் ஒலித்தது.

மீண்டும் தன் அலுமாரிப் பக்கம் விரைந்தவன், அலுமாரியில் இருந்த டிராயரைத் திறந்து, தன்னுடைய ஐந்து வருடங்களுக்கு முந்திய பழைய டயரியை எடுத்தான். சரியாகக் கடைசிப் பக்கத்தைத் திருப்பியவனுக்கு, அன்று சந்திமாலே அவன் கைப்பட எழுதிய இலக்கங்கள் கண்ணில் பட்டது.
அன்று அந்த இலக்கங்களைத் தந்த சந்திமாலின் நினைவு, அன்றே வந்திருந்தால், நிச்சயம் தனக்கு உதவியிருப்பான் என்று தற்போது எண்ணலானான் அவன்.
டயரியை எடுத்துக் கொண்டு, தன்னறையிலிருந்த தொலைபேசியை நோக்கி விரைந்தவன், இலக்கங்களை அழுத்த முற்பட்ட போது அவன் கை தானாகவே தடைப்பட்டு நின்றது.

ஐந்து வருடங்களுக்கு முதல் தந்த இலக்கம் தற்போதும் வேலை செய்யும் என்பதில் என்ன நிச்சயம்? இருப்பினும் அவனுள் சிறிய நம்பிக்கை துளிர் விட, நூற்றிலொரு வாய்ப்பாக வேலை செய்தால்… என்ற எண்ணம் தோன்ற , இலக்கங்களை அழுத்தினான்.
ரிசீவரைப் பிடித்துக் கொண்டே இருந்தவனுக்கு, லைன் போகும் சத்தம் கேட்டதும் தான் நிம்மதியாக இருந்தது .
மறுமுனையில் “ஹலோ” என்று சொன்னதும் சந்திமாலே தான். அவன் குரல் கேட்டதும் உடலில் ஓர் மின்னல் பாய்ந்தது. தன்னை சுதாரித்துக் கொண்டவன், “ஹலோ ஐம்….” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விளைந்த நேரம், அவன் சிங்களத்தில் தாருமாறாகத் திட்டுவது புரிந்தது.

“தமுஸ்ஸே… கொஹெத மகபேவுனே பங்?” என்று அவன், முதலிலேயே அபிமன்யுவின் குரலைக் கண்டுபிடித்து, “நீ எங்கே போய்த் தொலைந்தாயடா?” என்று கேட்க, அபிமன்யுவுக்கு ஆனந்த அதிர்ச்சி.
ஐந்து வருடங்களுக்குப் பிறகும் கூட, அபியின் குரலை சரியாக இனங்கண்டு கொண்டு விட்டானே என்று ஆனந்தத்தில், அவனுக்கு சந்திமால் திட்டுவது ஒன்றும் பெரிதாய்ப் படவேயில்லை.
மறுமுனையில் இருந்தவன், இவனது ஆனந்தத்தைப் பற்றி அறியாது , திட்டிக் கொண்டே போனான்.

“ஏ கேனி கியாம நும்பட ஒக்கோம நெதி வெலா கியாத பங்? தமுஸ்ஸே இக்மன்ட மெஹாட வரெங்” என்று திட்டிய சந்திமாலின் கோபம் தணிய நீண்ட நேரம் எடுத்தது.
“அந்தப் பெண் போய் விட்டால் என்றால், எல்லாம் போய்விட்டதாடா? சீக்கிரமே கிளம்பி வாடா?”என்று ஏகப்பட்ட “டா” போட்டு கதைத்தான் அபிமன்யுவின் நண்பன்.
ஐந்து வருடங்களாகியும், அந்த இலக்கத்தை மாற்றாமல் இருந்ததற்குக் காரணமே, அபிமன்யு என்றேனும் ஒருநாள் தனக்கு அழைப்பெடுப்பான் என்ற நம்பிக்கையில் தான். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

அபி தற்போது தெளிந்த குரலில் பேசவாரம்பித்தான். அதுவும் சிங்களத்தில். “ஹேய் சந்தி… . இங்க கேளு”என்று சந்திமாலைக் கேட்குமாறு அபிமன்யு பணிக்க, மறுமுனையில் நிசப்தம் நிலவியது.
நண்பன் கேட்க ஆயத்தமாகி விட்டான் என்பதை நிசப்தம் காட்டிக் கொடுக்க, தன் திட்டத்தைக் கூறவாரம்பித்தான்.

“நா திரும்பவும் க்ரிக்கெட்ல ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்…” என்று அபிமன்யு கூற, சந்திமாலின் சந்தோஷம், மறுமுனையில் இருந்தாலும் நேரில் பார்ப்பது போல புலப்பட்டது அபிமன்யுவுக்கு.

“ஹேய் வெரி குட் மேன்… தெட்ஸ் த ஸ்பிரிட்.. கமொன் லெட்ஸ் ப்ளே வித் அஸ்” என்று சந்திமால் அவனைப் பாராட்டியது மட்டுமல்லாமல், இணைந்து விளையாட வருமாறும் அழைத்தான்.
ஆனால் அவனோ அதை மறுத்து , “இல்ல நொட் நவ்…. எனக்கு ஒரு சின்ன வேல இருக்கு… அத முடிச்சிட்டு நெக்ஸ்ட் வீக் நா அங்க இருப்பேன்…” என்று கூறிவிட்டு, சந்திமாலின் பதிலை எதிர்பார்த்தால், அங்கே மௌனம் நிலவியது.
அம்மௌனம் சந்திமாலின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது.
அது அபிக்கு புரிய “ஹேய் ட்ரஸ் மீ டா” என்று குரலைக் கடினமாக்கிக் கொண்டு கூற, சந்திமாலும் ,சற்றே தணிந்த குரலில் “ஐ ஓல்வேய்ஸ் ட்ரஸ் யூ டா” என்று எப்பொழுதும் நம்புவதாகக் கூற, அபிமன்யுவின் முகம் மலர்ந்தது.

அதே மலர்ச்சி மாறாது, “நா திரும்பி வர்றதுக்கான எல்லா வேலையையும் முடிச்சிடு…. நா வந்ததும், எனக்கு கிரிக்கெட் ல விளையாட தகுதி இருக்கானு செக் பண்ணுவாங்க… ஐ நோவ்.. … அந்த டெஸ்ட்ல எப்படியும் பாஸ் பண்ணிடுவேன் டியூட்… அதுக்கப்புறம்.. ஒரு ப்ரஸ் மீட்டிங்க்குக்கு அரேஞ்ச் பண்ணிடு.. அப்பறம்… . அது வரைக்கும் யாருக்கும் இந்த மேட்டர் லீக்காகாம பார்த்துக்கணும்” என்று முழுத் திட்டத்தையும் கூற, தினேஷிற்கும் நண்பனின் முடிவில் அளவில்லாத ஆனந்தமே.

“ஓகேடா… இப்பயாச்சும் ஃபேன்ஸ்ஸைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சியே? அதே பெரிசு…. .. நீ என்ன ஏமாத்த மாட்டாய்ன்ற நம்பிக்கையில… .. எல்லாத்துக்கும் நா ஏற்பாடு பண்ணிட்றேன் அபி..தேங்ஸ் மச்சான்…. வச்சிட்றேன்…”என்று சந்தோஷ மிகுதியில் இவன் பதிலையும் எதிர்பாராது சந்திமால் அழைப்பைத் துண்டிக்க, அபி அதற்குப் பிறகும் சிறிது நேரம் ரிசீவரைப் பிடித்துக் கொண்டேயிருந்தான்.

நண்பன் சொன்ன “இப்பயாச்சும் ஃபேன்ஸ்ஸைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சியே?” என்பதற்கு யார் காரணம்? நிசப்தி தானே?
அவள் நினைவு முளைத்தவுடனேயே, அவன் மனம் புத்துணர்ச்சி பெற்றதைப் போல உணர்ந்தான் அபிமன்யு.
அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்பார்கள். ஆனால் அபி ஆபத்தையேற்படுத்திய நண்பனையும் அறிந்தான். ஆபத்தில் உதவிய நண்பனையும் அறிந்தான்.
ரூம் போய் சார்ஜருடன் வர, செல்லை சார்ஜரில் போட்டுக் கொண்டே, செல்லை செயல்படுத்தியதும் தான் தாமதம், திரையில் வந்து குவிந்த நூற்றிப் பதினாறு மிஸ்ட் கோல்களைப் பார்த்து மிரண்டு போனான் அவன் .
எடுத்திருந்தது நிசப்தியாவே தான். சார்ஜ் ஏறும் வரைக் காத்திருக்க, அவனுக்குப் பொறுமையே இருக்கவில்லை.சார்ஜில் போட்டுக் கொண்டே அழைப்பெடுத்தான்.
அதிலிருந்து வரும் அலைக்கற்றைகள் செவியை, மூளையை இன்னும் ஏன் உயிரைக் கூட பாதிக்கக் கூடும் என்பதையறிந்தும், கவலைப்படவேயில்லை அவன். அவனுக்கு வேண்டியதெல்லாம் அவள்க் குரலைத் தற்போது கேட்க வேண்டும் என்பது தான்.
பேசிக் கொண்டேயிருக்கும் போது, ஆளையே காணோம் என்றதும், பயந்து போய் அழைப்பெடுத்திருப்பாள் போலும்.
மிக நீண்ட நேரமாய் ரிங்க் போய்க் கொண்டேயிருந்தது. பொறுமையுடன் காத்திருந்தவனின் பொறுமை, காற்றில் கரையவே “கட்”செய்ய முனைந்த போது, அவள் அழைப்புக்கு பதிலளித்திருப்பதுணர்ந்து மீண்டும், செல்லை காதில் வைத்தான் அபிமன்யு.
அவள் மூச்சிறைக்க இறைக்க “ஹ.. லோ” என்றது தேனாய்க் காதில் பாய்ந்தது.
செல்லை எடுப்பதற்காக நிசப்தி, மிக தூரத்திலிருந்து ஓடி வந்திருக்க வேண்டும். அதனால் தான் மூச்சு வாங்குகிறது என்பது அவனுக்கு புரிய, அவளை நோவிக்கிறோமே என்றும் அவன் மனம் வேதனைப் பட்டது.
“ஹபிலாஷ்… ஐ… ம் ரிய… லி ஸாரி ஹபிலா.. ஷ்.. நா வேணும்னே உங்… கள ஹர்ட் பண்ற.. துக்காக… நா அப்டி பேசல”என்று நிசப்தி மூச்சு விடக் கூட சிரமப்பட்டுக் கொண்டே கதைக்க, அவனுக்கு அது மிகவும் வேதனையை ஏற்படுத்திய அதே கணம் குழப்பமாகவும் இருந்தது .

எதற்கு ஸாரி கேட்கிறாள்? அவள் அப்படி என்னதான் கூற வருகிறாள் என்பதறியாமல், மறுபதில் பேச முடியாதாதலால், அவள் கூற வருவதைக் கேட்க எண்ணி வாளாவிருந்தான் அபிமன்யு.
“நா அப்பவே யோசிச்சிருக்கணும்… நா உண்மையிலேயே அந்த இடியட் அபிமன்யுவத் தான் திட்டினேன்… திரும்பி திடீர்னு உங்களப் பார்த்தா…. உங்கள காணோம்… அப்போ தான் யோசிச்சுப் பார்த்தேன்… அபிமன்யுவும் லவ் ஃபேலியர், நீங்களும் லவ் ஃபேலியர்…. அவனுக்கு திட்றத… நீங்க உங்களக் குத்திக் காட்றதா நினைச்சிகிட்டு….” என்று அவள் வசனத்தை இழுத்து, முடிக்க முடியாமல் திணறி, “ஐம் ரியலி ஸாரி அபிலாஷ்” என்று அவள் கூறிய போது, அவனது சிரிப்புச் சத்தம் காதைப் பிளந்தது.

அவள் திட்டினதே அவளைத் தானே? இது அறியாமல் மன்னிப்பு வேறு கேட்கிறாளாமா? அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவளோ இவன் சிரிப்பதன் காரணம் புரியாமல், “ஏன் சிரிக்குறீங்க அபிலாஷ்?” என்று கேட்க, அவனோ, அவள் மட்டும் தற்போது நேரில் இருந்தாளேயானால், அவளை தன் நெஞ்சோடு அணைத்து, “அடி.. என் அசட்டுத் தேவதையே! அபிமன்யுவும், அபிலாஷும் இருவர் அல்ல ஒருவன் தான்” என்று கூறியிருப்பான்.

தன்னுள் எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டு பதில் சொல்லவாரம்பித்தான் அபிமன்யு. “ஐயோ நிசப்தி….. உன்னோட பேசிட்டிருக்கும் போது தான்… எனக்கு.. நா பாதியில விட்டுட்டு வந்த முக்கியமான வேல நினைவு வந்திச்சு… அது தான் ஓடி வந்துட்டேன்.. . ஸாரி மா” என்று இளகிய குரலில் கூற, அவ் இளக்கம் நிசப்திக்கு பிடித்திருந்தது.

“சரி விடுங்க அபிலாஷ்…” என்று அவளே அந்தக் கதையை மாற்ற, அபிமன்யு உறுதியான குரலில் “நிசப்தியா.. நா ஒண்ணு கேட்டா உண்மையா பதில் சொல்லுவியா?” என்றான்.

அபிமன்யு தன் காதலை சொல்லப் போகிறானாமா? அப்படி எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லக் கூடிய சமாச்சாரமா அது? அவன் காதலை சொல்லவில்லை. அப்படியானால் அவள் வேறு யாராவது காதலிக்கிறாயா? என்று கேட்கப் போகிறானா? அதுவும் இல்லை.
“என்ன சொல்லணும்?” என்று புரியாதவளாய் அவள் கேட்க, அபிமன்யுவும் புன்னகைத்துக் கொண்டே, “உனக்கு… சின்ன வயசுல இருந்து… நிறைவேறாத ஆசைனு ஏதாவது இருக்கா? அப்படியிருந்தா சொல்லு… அது எதுவா இருந்தாலும் நா நெறவேத்தி வைக்கிறேன்” என்றான்.

அப்படி அவள்க் கூறின் அதை நிறைவேற்றி வைத்த மறுகணமே, “ஐ லவ் யூ நிசப்தியா” என்று ஒரேயடியாகத் தன் காதலைத் தெரிவிக்க எண்ணினான் அபிமன்யு.
ஆனால் அவளோ அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, “ஏன் அபிலாஷ் திடீர்னு கேட்குறீங்க? நா செத்தப்பறம் அந்த நிறைவேறாத ஆசைகளால… ஆவியா வந்துருவேன்னு பயமா?”என்று நகைக்க, அபிமன்யுவுக்கும் ஏனோ அவள்ப் பேச்சில் நகைப்பு வந்தது.

பிறகு சிரிப்பை நிறுத்திக் கொண்டு, “இல்ல நிசப்தி… நா சீரியஸா கேட்குறேன்”என்றான் அவன்.
அவன் இவ்வாறு கூறியதும் அவள் உள்ளே ஒரே யோசனை. நிலாவைக் காட்டி தாய் சிறு வயதில் சோறூட்டும் போது, நிலாவுக்கே சென்று சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.
அதைக் கூறலாமா? அதைக் கூறினால் அவனால் நிறைவேற்றி வைக்கத் தான் முடியுமா? சிறிய ஏளன நகை மௌனமாய் அவள் முகத்தில் பரவியது.
அவள் கூறியிருந்தால் நிச்சயம் செய்திருப்பான். அந்தளவு பணம் அவனிடம் உண்டு. மறுநாளே விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவுக்கு தொடர்பு கொண்டு, இரு டிக்கெட்டுகள் பதிவு செய்திருப்பான் நிலாவுக்கு.
இப்பொழுது தான் நிலாவில் திருமணமே நடக்கிறதே? அதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டு, அங்கு செல்ல வேண்டியது தான். அங்கு அவள் விரும்பினால் பீட்ஸா கூட சாப்பிடலாம்.

ஆனால் அவளோ அது அறியாமல், சக்திக்கு மீறினச் செயல் எனக் கொண்டு, அதை விடுத்து, “என்ன சொன்னாலும் நெறவேத்தி வைப்பீங்கள்ள? பேச்சு மாற மாட்டீங்களே?”என்று உறுதிப் படுத்திக் கொள்ளும் குரலில் கேட்க , அவன் முகத்தில் இளநகைப் பூத்தது.
“நிச்சயமா”என்று அவன் உறுதி மொழி கொடுத்ததும், “நம்மூர்ல நரிமலைக்காடு இருக்கு தெரியுமா?”என்று கேட்க, அவனும் “ஆமா”என்றான் எளிமையாக.

“அந்த நரிமலைக்காட்டோட உச்சி ரொம்பவும் அழகா இருக்கும்… நா இதுவரைக்கும் போனதே இல்ல”என்று அவள் ஏக்கத்துடன் கூற, அபிமன்யுவுக்கு விடயம் புரிந்தது.
அவள் அங்கே உச்சிக்கு செல்ல ஆசைப்படுகிறாள் என்று நொடியில் புரிந்து விட, “நாளைக்கு நீ ஃப்ரீயா?” என்று அவள் பாணியிலேயே அங்கு செல்வதற்கு அனுமதி கேட்க,அவன் பேச்சில், மறுமுனையில் இருந்தவள் தன் முப்பத்திரண்டு பற்களைக் காட்டிக் கொண்டு மௌனமாய் நகைத்துக் கொண்டிருந்தாள்.

“ஆமா ஈவ்னிங் போலாமா? சூப்பரா இருக்கும்” என்றாள் நிசப்தி. அதுவும் நல்ல யோசனையாகவே தோன்றிற்று அபிமன்யுவுக்கு. அவள் விருப்பம் எதுவோ அதை நிறைவேற்றி வைத்து விட்டு, தன் காதலை அவளுக்குக் கூற வேண்டும். அதன் பிறகு தான் யாரென்ற உண்மையைக் கூற வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டான் அவன் .

அவன், அவளுள்ளும் நிச்சயம் காதல் உண்டு என்று உறுதியாக நம்பினான் . குடித்து விட்டு வந்து வண்டியில் விழுந்தால், ஓரமாகப் போட்டு விட்டு போக வேண்டியது தானே? அவள் வீட்டுக்கு எதற்கு அழைத்துச் செல்ல வேண்டும்? ஒரு நாள் கூட சரியாக பழகாதவனை அழைத்துக் கொண்டு, நடுநிசியில் எதற்கு பயணப்பட வேண்டும்? அவன் சோகம் களைய எதற்கு சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்? என்று அவனுள் உதித்த கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் அவளும் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதே.
அந்தக் காதலைத் தெளிய வைத்ததன் பின்பு, தான் யாரென்று சொன்னால் மிகவும் சந்தோஷப் படுவாள் நிசப்தி என்று நினைத்தான் அவன் , தான் யாரென்று தெரிந்தால் தன்னை விட்டும் அகன்று விடுவாள் என்பது புரியாமல்.

அத்தியாயம் – 11

மாலையானதும் வீட்டில் பரபரப்பாக தயராகிக் கொண்டிருந்தாள் நிசப்தியா. கடும்பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து, மஞ்சள் நிறத்தில் துப்பட்டாவை தன் மார்புக்கு மேலாக “வீ” வடிவில் அணிந்து, “நரிமலைக்காட்டுக்குச்” செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் அவள்.

வழமையாக தன்னுடைய கூந்தலை, ஒரு பக்க மார் மேல் மட்டும் போடுபவள், இன்று வித்தியாசமாய் இரு பக்கமாகப் போட்டுக் கொண்டாள்.
இன்று அவளுடைய நீண்ட நாள் ஆசையொன்று நிறைவேறப் போகிறது என்று நினைக்கையிலேயே, அவளுதட்டில் தானாகப் புன்னகைப் படர்ந்தது.
அபிலாஷ் போன்ற ஓர் நல்ல நண்பன் கிடைக்க, உண்மையிலேயே அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் பழகினாலே “காதல்” என்று சொல்லி பூங்கொத்தை நீட்டி விடும் இந்தக் காலத்துப் பையன்கள் மத்தியில், அபிலாஷ் ஒரு படி மேலாகவே தோன்றினாள் அவள்க் கண்களுக்கு.
தாயிடம் ஏற்கனவே விடயத்தைக் கூறிவிட்டாள் நிசப்தியா . அப்படியானால் அவள் நரிமலைக்காட்டுக்கு, அன்று விருந்துக்கு வந்த தாடிக்காரனோடு செல்லப் போகும் உண்மை விடயமல்ல.

மாறாக, தான் திவ்யா வீட்டுக்கு செல்லப் போவதாகப் பொய் கூறிய விடயம். அதை உண்மையென்று நம்பி ஒத்துக் கொண்ட தாய், “சரி… அப்படீனா… கிச்சென்ல… “அச்சாறு”… செஞ்சு வச்சிருக்கேன்…. திவ்யாக்கு “அச்சாறு”ன்னா.. ரொம்ப பிடிக்கும் நிசப்தி… கொஞ்சம் எடுத்துட்டுப் போய் குடுத்துர்றியா?” என்று கேட்க, நிசப்தியாவின் “மைன்ட் வாய்ஸ்”, “கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்று கேட்டுக் குதூகலித்தது.

“அச்சாறு” என்றால், உன் மருமகளுக்கு மட்டுமாம்மா பிடிக்கும். எனக்கும் தான்” என்று உள்ளுக்குள் எண்ணியவள், அன்னையிடம், சிரித்துக் கொண்டே, “சரிம்மா”என்றாள்.

அங்கே சமையலறையில் பிளாஸ்டிக் பாத்திரமொன்றில், அம்மா செய்து வைத்த “அச்சாறு” இருந்தது. “அச்சாறு” சில வகைப் பழங்களையிட்டு, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு சீனி என்பவற்றை இட்டு செய்யும் ஒருவகை கலவை. அதற்கு வினாகிரியும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வதுமுண்டு.
அதில் சேர்க்கப்படும் பழங்களாக “மாங்காயை” பிரதானமாகக் குறிப்பிடலாம். இலங்கையிற்கே உரித்தான “அம்பரெல்லா”எனப்படும் காய் வகையும், ஆங்கிலத்தில் “ரோஸ் ஆப்பிள்” என்று அழைக்கப்படும் “ஜம்பு”எனப்படும் காய் வகையும், கூடவே ஒரு வகை புளிப்பு நெல்லியும் சேர்க்கப்படுவதுண்டு.
இக்காய்கள் அனைத்தும் உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு சீனி கலந்தவுடன் ஒருவகை இனிப்பு கலந்த புளிப்புச்சுவையுடன் சுவை வரும். “ஆஹா” அதை எழுத்தில் எழுத முடியாது.
அன்னைக்கு மானசீகமாக நன்றிக் கூறிக் கொண்டே, அதிலிருந்து சிலதை, வேறொரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு, அதைக் காற்றுப் புகா வண்ணம் மூடி, கையில் எடுத்துக் கொண்டாள் நிசப்தியா, அங்கு உச்சிக்கு சென்றதும் சாப்பிடும் நோக்கில்.

“அங்க போய் சாப்பிட்டுட்டு இருக்கும் போது தண்ணி தாகம் அடிச்சா?” என்று தோன்ற, மறக்காமல் கையோடு தண்ணீர்ப் போத்தலையும் எடுத்துக் கொண்டாள் நிசப்தியா.

தாயிடம் சொல்லிக் கொண்டு அவள் விடை பெற நாடிய நேரம், அவள்க் கையில் இருந்த தண்ணீர்ப் போத்தலைக் கண்ட தாய், “ஹேய் நிசப்தி… திவ்யா வீட்டுக்குத் தானே போற?” என்று திடீரெனக் கேட்க, அவளுக்கு உள்ளே பகீர் என்று இருந்தது.
ஆஹா! தாய்க் கண்டு பிடித்து விட்டாளோ? இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல், அவள் விழிக்க , அவளது தாயோ, “அப்போ எதுக்கு நிசப்தி கையில வாட்டர் பாட்டில்? ” என்று கேட்கத் தான் அவளுக்கு சீராக மூச்சு கூட விட முடிந்தது.

“அ… து…. அது… வந்துமா… ஆ…. தண்ணி.. எதுக்குனா… போற வழியில தாகம் அடிச்சதுனா… குடி.. குடிக்க… குடிக்க” என்று பதற்றத்துடன் கூறியவள், தன் பெருவிரலை மட்டும் விரித்து வாயில் வைத்து , பிற விரல்களையெல்லாம் மடித்து, குடிப்பது போல பாவனை செய்து காண்பித்தாள் நிசப்தி.

“சரி போய்ட்டு வா” என்று வழியனுப்பிய தாயிற்குள் ஒரே யோசனை. “நாந் தண்ணி எதுக்குனு தானே கேட்டேன்… அதுக்கு, எதற்கு இந்தப் பதறு பதர்றா?” என்று எண்ணிக் கொண்டார் தாய்.
போகும் முன் மறக்காமல் தன் செல்லை எடுத்து ,அதனோடு தொங்கிக் கொண்டிருந்த பட்டியைக் கழுத்தில் மாட்டிக் கொண்டாள் நிசப்தியா.

வீட்டைத் தாண்டியதும், நிசப்திக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. நீண்ட நாள்க் கனவு இன்று நிறைவேறப் போகிறது என்று ரொம்பவே சந்தோஷப் பட்டாள் நிசப்தி .

அபிமன்யு அவளுக்காக ஏற்கனவே, காட்டிற்கு செல்லும் பாதையில் காத்திருந்தான். என்னடா இவள்? இந்த நேரத்துக்கு எல்லாம் வந்து விடுகிறேன் என்று சொன்னாள்? ஆயினும் ஆளைக் காணவில்லையே? ஒருவேளை வீட்டில் அகப்பட்டுக் கொண்டாளோ? என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த வேளை, நிசப்தியாவும் வந்தாள்.

அவன் நின்று கொண்டிருந்த இடம் கொஞ்சம் மேடானது. ஆனால் நிசப்தியா வந்து கொண்டிருப்பது சற்று பள்ளமான பாதை. அவள் அம்மேட்டுக்கு ஏறிய போது, முதலில் அவனுக்குத் தென்பட்டது அவளுடைய வகிட்டுடன் கூடிய பிறை நெற்றி.

சினிமாவில் தான் இந்த மாதிரி ஹீரோயினைக் காட்டுவார்கள் என்று அவன் எண்ணியிருந்த வேளை, அந்த மேடான பாதையும், அவன் ஹீரோயினை அழகாகக் காட்டியது.

தூரத்திலிருந்தே தன் கேமராக் கண்களால் அவளை மெல்ல மெல்லக் காதலுடன் உள் வாங்கினான் அபிமன்யு.

அவளது சீராக்கப்படாத அடர்ந்த புருவங்களைப் பார்க்கையில்,அதுவும் அவளுக்கு அழகாக இருப்பதாகவேத் தோன்றிற்று. அவளது நயனங்கள், கூர்வேலோ என்று அஞ்சத்தக்கதாய் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவளுடைய சற்றே நீண்ட சீரான மூக்கிலும், அதற்குக் கீழே தேனூறிக் கொண்டிருந்த அதரங்களிலும் , சற்றே பித்தங் கொண்டான் காண்டீபனின் புத்திரன்.
அவளுடைய வெண்மைக் கழுத்துக்குக் கீழே பார்ப்பது அநாகரீகமாகத் தோன்ற மீண்டும் கண்களை, அவள் நயனங்களுக்கே ஓட விட்டான் .
மெல்ல மெல்ல அவள் மேடேறி வந்ததும் தான் அபிமன்யு, அவளது சுடிதார் நிறத்திற்கேற்பவே தான் ஷேர்ட்டும, அதற்கு மேலால் அவளைப் போலவே மஞ்சள் நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருப்பதைக் கண்டு, இதழ் விரிய, வாய் திறந்து அதைக் கூற முற்பட முன்னர், அவளே, கண்களில் மகிழ்ச்சியுடன், “ஹேய் அபிலாஷ்…. கிவ் மி அ ஹைஃபைவ்.. நானும் இதே கலர் சுடி தான்” என்றாள், தன் வலது கையை சற்று உயர்த்திய படி.

தான் பேச நினைத்ததையே அவளும் பேசியதில், தாடிக்கும், மீசைக்கும் இடையில் சிக்குண்ட அவனது அதரங்கள் அளவுக்கு அதிகமாகவே விரிந்தன.
அவளது கையில், தன் முரட்டுக் கைகளை மெல்ல அடித்து விட்டு எடுத்த அபிமன்யுவுக்கு, அவள் உள்ளங்கையின் மென்மை உள்ளே ஏதோ செய்தது.
ஆனால் அவளோ, தலையாட்டிய வண்ணம், “போலாமா?என்று கூற, அவனும் தலையாட்டிய வண்ணமே, அவளுடன் இணைந்து நடக்கத் தொடங்கினான்.

அவளுடைய கை விரல்களின் இடுக்குகளோடு, தன் விரல்களை இட்டு பிணைத்த வண்ணம் நடக்க வேண்டும் என்று எழுந்த அற்ப ஆசையை, தன்னோடு அடக்கிக் கொண்டு, கடைக்கண்ணால், அவளின் கைகளைப் பார்த்த போது தான், அவளிரு கைகளிலுமே பொருட்கள் இருப்பதைக் கவனித்தான் அபிமன்யு.
“இது என்ன கையில?”என்று அவைகளைப் பார்த்துக் கேட்க, அவள் பாத்திரத்தை அவன் பக்கம் நீட்டி ஆட்டிய படி “அச்சாறு… மேல போனதும் உட்கார்ந்து சாப்பிட்றதுக்கு”என்றாள், மலையுச்சியைக் கைகளால் காட்டிய படி . மற்ற கையில் இருந்தது தண்ணீர்ப் போத்தல். அது எதற்கு என்று நிசப்தி சொல்லாமலே புரிந்தது அவனுக்கு.

இருவருமாய் இணைந்து நடக்கவாரம்பித்தனர். அது சற்றே கரடு முரடான பாதை. பென்னாம்பெரிய கருங்கற் பாறைகளைத் தாண்டித் தான் நரிமலைக் காட்டின் உச்சிக்கு செல்ல வேண்டும்.
அவள் தன்னோடு இணைந்து நடந்து வருவதைக் காட்டிலும் அவளது பாதுகாப்பே அவனுக்கு முக்கியமாய்ப் பட்டதாகையால்,அபிமன்யு அவளைக் காட்டிலும் கொஞ்சம் வேக நடையெடுத்து முன்னே நடந்தான்.
வழியில் பள்ளங்கள் இருப்பின் தன்னவள், சறுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவன் முன்னே நடக்க, இவனுக்கு என்னவாயிற்று என்று புரியாமல் நிசப்தி, அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், சற்று பின்னே தான் நடந்து வந்தாள்.
முன்னே நடந்து கொண்டிருந்தவனுக்கு, இவள் வீட்டில் என்ன கூறி விட்டு வந்திருப்பாள் என்பதை அறிய ஆவல் ஏற்பட, கேட்டு விட எண்ணி திடீரெனத் திரும்பினான் அபிமன்யு.

அவனது எதிர் பாராத திரும்பலினால் , அவன் உடல் அவளுடலில் மோத, சமநிலையற்று விழப் போனவளை, சட்டெனத் தன் கரம் கொண்டு தாங்கிப் பிடித்துக் கொண்டான் அவன் .

அவள் முன்னழகு, தன் பரந்த மார்பில் மோத,அவள் மென்மையில், அந்த ஸ்பரிசத்தில், திகைப்பூண்டை மிதித்தது போல இருந்தது அவனுக்கு.
அவள் சுதாரித்து நின்று கொண்டதும், ஒருவர் நடக்கவே கடினப்படும் இந்தக் காட்டுப் பாதையில், தான் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி திரும்பியது தவறு எனத் தோன்ற, “ஸாரி நிசப்தியா…. நா வேணும்னே இதெல்லாம் பண்ணல”என்று வருந்தி மன்னிப்புக் கேட்டான்.
ஆனால் நிசப்தியாவுக்கோ, அவன் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றியது. ஏனெனில், அவன் மேல் அவளுக்கு அப்படியொரு நம்பிக்கையிருந்தது. அவன் கூட இருந்தால், ஆயிரம் அரண் அமைத்து, அதற்குள் தானிருப்பது போன்ற பாதுகாப்பை அவனிடம் ஏன் நிசப்தி உணர்கிறாள்?
உண்மையைச் சொல்லப் போனால், அவளது தந்தை, அண்ணன் என யாரிடமும் இப்படியொரு பாதுகாப்பை அவள் உணர்ந்ததேயில்லை.
அதிலும் தெரியாமல் நடந்த மோதலுக்கு வேறு மன்னிப்புக் கேட்கிறானே? ஒரு பெண் வேற்றாடவனோடு பயப்படாமல் பயணம் செய்கிறாள் என்றால், அவன் நல்லவனாகத் தான் இருக்க வேண்டும். நிச்சயம் அபிலாஷும் நல்லவன் என்று மனதினுள் எண்ணியபடி, பதில் கூறாமல் புன்னகைத்தாள் நிசப்தியா.
மோதலுக்கு பரவாயில்லை என்று அவள் சொல்லாமல் சொல்லிய விதத்தை விட, முத்துப் பற்கள் மின்னல் மின்னுவதைப் போலப் பளீரிட அவள் சிரிக்கும் பொழுது, அவன் நெஞ்சம் தடதடவென்று அடித்துக் கொண்டது.

அதற்கு மேல் அவள் விழிகளைப் பார்க்க முடியாமல், அவன் திணறி நிற்கையில், அவனுக்கு தாய் சொல்லிக் கொடுத்த உபாயம் நினைவுக்கு வந்தது.

“ஒருத்தரோட கண்ணப் பார்த்து பேச முடியலைனா… மூக்கப் பார்த்து பேசணும்…. நாம தான் மூக்க பார்க்குறோம்… ஆனா நம்மள பார்க்குறவங்களுக்கு கண்ணப் பார்த்து பேசுறது போலவே இருக்கும்” என்று தாய் கூறியது நினைவு வர, நிசப்தியாவின் மூக்கைப் பார்க்கலானான் அபிமன்யு.
ஐயோடா… மூக்கும் கூட என்னே அழகு. அவளது மூக்கின் நுனியை, அப்படியே ஒரே தாவாகத் தாவிக் கடிக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு .

“என்னம்மா நீங்க? மூக்கப் பார்த்து பேச முடியலைனா… எதப் பார்த்து பேசணும்னு சொல்லவே இல்லையே” என்று மனதினுள் தாயுடன் கதைத்து விட்டு, ஒருவாறு தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“வீட்ல என்ன சொல்லிட்டு வந்த நிசப்தி?” என்று அவன், அவள் இங்கு வர வீட்டில் என்ன பொய் சொன்னாய் என்று மறைமுகமாக கேட்டான்.
அவன் நினைத்தது நூறு வீதம் சரி. அவள் பொய் கூறி விட்டே தான் வந்திருக்கிறாள். “நா திவ்யா வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வந்தேன்… அப்படியே திவ்யாக்கும் கோல் பண்ணி விஷயத்த சொல்லிட்டேன்… வீட்ல இருந்து கோல் பண்ணாங்கன்னா…. சமாளினும் சொல்லிட்டேன்… இனி அவ பார்த்துப்பா” என்று கூற அபிமன்யுவும், புன்னகை சிந்திக் கொண்டே, மேற்கொண்டு ஏதும் பேசாது திரும்பி நடக்கவாரம்பித்தான்.

பல வித காட்டு மரங்கள் வானை நோக்கி உயர்ந்து வளர்ந்திருந்தன. இடையிடையே பதர்கள் இருக்க, பாதைகள் என்று ஒன்றுமே இருக்கவில்லை. போகப் போக கருங்கற் பாறைகள் தான் இருந்தன.
அந்தக் கருங்கற் பாறைகளைத் தான் இருவரும் ஏறத் தயராகியிருந்தனர். நிசப்தி அவளது பேருக்கு எதிர் மாற்றமாய், வழமை போலவே, பேசிக் கொண்டே வர, அபிமன்யு ஏதும் குறுக்கிடாமல், அவள் சொல்வதற்கு, செவி சாய்த்துக் கொண்டே வந்தான்.

“இந்த மலைக் காட்டோட உச்சிக்கு வரணும்னு எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆச தெரியுமா? ஆனா அப்பா இரண்டாவது உச்சி வரைக்கும், கூட்டிட்டுப் போய்ட்டு…. வா போலாம்னு திரும்ப அழைச்சிட்டு போய்டுவாரு”என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போது, அவனோ தரையில் கிடந்த ஒடிந்த கிளைகளைத் தேடிக் கொண்டு வந்தான்.
பிறகு ஒரு பச்சை மரக் கிளையொன்றைத் தரையில், இருந்து தேடி எடுத்தவன், அதை கையில் எடுத்து ஆராய்ந்து பார்த்தான்.
நாலடி உயரம் கொண்டதாய் இருந்தது அந்தக் கிளை. அதை தரையில் செங்குத்தாக நிறுத்தி, அதன் சிறிய கொப்புக்களை உடைத்தான் அபிமன்யு.
ஏன் இவன் இப்படி செய்கிறான்? என்பது புரியாமல் நின்ற நிசப்தி, தன் வலக்கை விரல்களை காற்றில் விரித்து, “ஹேய் என்ன பண்றீங்க அபிலாஷ்?”என்று கேட்க, அவனும் அவள் மேல் பார்வையைச் செலுத்தாமல், கிளையிலேயே பார்வையைப் பதித்து, “அதுவா.. ஸ்டிக் ஒண்ணு செய்றேன்”என்று பதிலிறுத்தவன், தடியொன்றை ஆக்கி முடித்திருந்தான்.

“எதுக்கு?” என்று சிறு பிள்ளை போல மீண்டும் புரியாமல் கேட்டவளிடம், சலிக்காமல் விடை சொல்லலானான் அபிமன்யு.

“அதுவா… இந்தக் காட்டுல பாம்பு, பூரான், பூச்சி பட்டைன்னு இருக்குதானு யாருக்குத் தெரியும்? தரையப் பார்த்தேல்ல.. புல்லும் காய்ஞ்ச்ச இலைகளும்…. இதுகளுக்கு அடியில பாம்பு ஏதாவது இருக்க, நாம அத மிதிக்க… நம்மள அது கடிக்க….. எதுக்கு வம்பு? அதனால இந்த ஸ்டிக்க யூஸ் பண்ணி தட்டித் தட்டிப் போனோம்னா… அதுகளும் வழிய விட்டு ஓடிடும்… நாமளும் சேஃப்பா இருக்கலாம்”என்று கூற நிசப்தி அதையும் வைத்து ஏளனம் செய்தாள்.

“இது பெரிய அமேசான் காடு… அனகொன்டாஸ் எல்லாம் இருக்கப் போகுது….. பார்த்து சார்…. என்ன ஒண்ணும் பண்ணாது.. புதிய ஆளு வந்திருக்கார்னு உங்களத் தான் விழுங்கிடப் போகுது”என்று கூறி நகைக்க, அபிமன்யு அதில் பங்கு கொள்ளவில்லை.
அவன் சுற்றுப் புறத்தை அலசுவதிலேயே குறியாக இருந்தான். அந்தளவு அவள் பாதுகாப்பு பற்றி சிந்திக்கிறானாமா?
கற்பாறைகளைத் தட்டி, தட்டி பெரிய மெய்க்காப்பாளன் போல அவன் முன்னே செல்ல, கைகளில் பொருட்களுடன் அவனைப் பின் தொடர்ந்தாள் நிசப்தி.

ஏற முடியாத பாறைகளை, அவன் அவளுக்கு கை கொடுத்து ஏற்றி விட்டான். தாண்ட முடியாத பாறைகள் வந்த போது, ஒரு கையில் தடியையும் வைத்துக் கொண்டு, அநாயசமாக அவளைக் குனிந்து தூக்கிக் கொண்டான்.
நிசப்தியா அவன் தன்னைத் தூக்கிக் கொண்ட மகிழ்ச்சியில், வானை அண்ணார்ந்து பார்த்து சில்லறைகளை சிதற விட்டது போல நகைத்தாள்.
அவளுக்கோ அவளைத் தூக்கிக் கொண்டிருக்கும் இந்த நொடி அப்படியே கரையாதா என்றிருந்தது. அவனருகில் அவள் முகம், அதில் ரோஜா இதழ் மேல் பனித்துளி போல, அவள் கன்னத்தில் ஒன்றிரண்டு முகப்பருக்கள் இருப்பதைக் கவனித்தனுக்கு, அதுவும் அழகாகவே தோன்றிற்று.
ஆழமாக அதே சமயம் அழுத்தமாக காமங் கலந்த காதல் முத்தம் அவள் கன்னத்தில் பதிக்க, கிடந்து ஏங்கியது அவன் மனம். கூடவே அவளது ராகம் போன்ற சிரிப்பும், அவன் சிந்தனையைக் குலைத்தது. அவள் விழிகளையே, உலகிலுள்ள அனைத்தையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவளோ ஒரு ஆடவன், தன்னை அநாயசமாகத் தூக்கி, தன் கை வளைவுக்குள் நிறுத்தி, தன்னையே உற்று நோக்குவதைக் குறித்து, கோபங் கொள்ளாமல், சிறு பிள்ளைத் தனமாய், கைக்கு மிக மிக அருகாமையில் அவனது அடர்ந்த தாடியைக் கண்டவளுக்கு, அதை இழுத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்ற, சிறிதும் தாமதியாமல் இழுத்தாள் நிசப்தி.

உயிர் போவது போல் வலிக்க, “ஆ”என்று அலறிய அபிமன்யுவைப் பார்த்து, நகைத்துக் கொண்டே “ஸாரி அபிலாஷ்” என்றாள் நிசப்தி சாந்தமாக. அவளது விளையாட்டு அவனுக்கும் உள்ளுக்குள் பிடித்தாலும், வலியின் காரணமாக வாயிற்குள் முணுமுணுப்பதைப் போல நடித்தான்.

அவளுக்கோ பயணம் சுவாரஸ்யமாக அமைந்திருக்க, அபிமன்யுவுக்கோ, நெஞ்சுக்குள் காதல் சாரல் அடித்துக் கொண்டிருந்தது.
இப்படியெல்லாம் வளர்ந்த பெண்ணைத் தூக்கிக் கொண்டு, போக முடியாது என்றா தந்தை மலையுச்சிக்கு அழைத்துச் செல்லவில்லை?
ஒருவாறாக மலையுச்சிக்கு வந்தடைந்ததும் இயற்கையின் எழிலில் சொக்கித் தான் நின்றாள் நிசப்தியா. தொட்டு விடும் தூரத்தில் வானம் இருப்பதைப் போல ஒரு பிரம்மை.

பூமித்தாய் அவளைப் போலவே பச்சை நிறத்தில் சேலைக் கட்டினாற் போன்று, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை படர்ந்திருந்தது. இம்மலையில் இருந்து பார்க்கும் பொழுது, அடுத்தடுத்த மலைகளும், அலைஅலையாய் தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தது.
இந்த மலையில் இருந்து கத்தினால், அந்த மலைக்குக் கேட்குமா? நிச்சயம் கேட்காது. ஏனெனில், மலையுச்சிக்கு சற்றே அருகாமையில், “கபானா” நீர்வீழ்ச்சி ஊற்றெடுத்து, ஓடும் பெரும் இரைச்சலினால், அவள்க் குரலின் எதிரொலி கேட்கப் போவதேயில்லை.
அவள் பார்க்க ஆசைப்பட்ட தரிசனம் இதோ அவள்க் கண் முன். மாலை மங்கும் நேரத்தில் திரு. பரிதி அவர்கள் தன் கடமையை செவ்வனே செய்து விட்டு, தன் திருமதியான உஷையைக் காண மெல்ல மெல்ல வீட்டுக்கு செல்வது போல மலைகளுக்கிடையில் மறைந்து கொண்டிருந்தான்.

பரிதியின் செம்மைக் கதிர்களால், நீல வானமும், ஆரஞ்சு வண்ணம் பூசிக் கொள்ள, அந்த வர்ணத்திற்கிடையாக, காக்கைக் கூட்டங்களும் தன் கூடு நோக்கி பறந்து செல்ல, மனோரம்மியமாக இருந்த அக்காட்சியை, தனக்கு மட்டும் ஓவியம் வரையத் தெரிந்திருந்தால் வரைந்திருக்கலாமே என்று எண்ணிக் கொண்டாள் நிசப்தியா.

கூடவே குளிர்க்காற்று வீச, நீர்வீழ்ச்சியின் ஒலிக்கு பிரத்தியேகமாக, காட்டு மரங்களின் சலசலப்பும் செவியை நிறைக்க, தன்னிரு கைகளையும், காற்றில் அகல நீட்டி, அந்தத் தென்றலின் ஸ்பரிசத்தை, ஆழ உள் நோக்கி மூச்செடுத்த வண்ணம் அனுபவித்தாள் நிசப்தி.
மனித வாடையே இன்றி, முற்றிலும் இயற்கையின் வாடையை சந்தோஷமாக நுகர்ந்தாள் நிசப்தியா. அந்த இயற்கையின் எழிலில் தன்னை அழைத்து வந்தவனையும் மறந்து தான் போனாள் .
அருகிலிருந்த கற்பாறையில் பாத்திரத்தையும், தண்ணீர்ப் போத்தலையும் வைத்தவள் , தான் கையோடு எடுத்து வந்திருந்த தன் செல்பேசியை எடுத்து, இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிக்கலானாள் அபிலாஷின் ஒரு தலைக் காதலி.
அந்நீர்வீழ்ச்சியிலிருந்து ஊற்றெடுத்து பாம்பு போல வளைந்து, நெளிந்து ஓடும் ஆற்றைப் படம் பிடித்தவள், பிறகு அவள் வருகையைக் கண்டு ,வெட்கப்பட்டு பருவதங்களுக்கிடையில் மறைந்து கொண்ட ஆதவனின் பாதி முகத்தை செல்லில் படம்பிடித்தாள் நிசப்தி.
என்ன தான் தொழில் நுட்பம் வளர்ந்திருந்தாலும், கண்ணுக்குப் புலப்படுவதை விட, சிறியதாகவே செல்லின் விழித்திரையில் பதிவானான் ஆதவன்.
அவனும் அந்த இதமான காலநிலையை, காற்சட்டைப் பையினுள், தன் கைகளை இட்டுக் கொண்டு அனுபவித்துக் கொண்டே, தன்னவளை கண்களாலேயே பருகிக் கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரம் இயற்கையை இரசித்துக் கொண்டிருந்தவள், அபியின் நினைவு வந்து, அவனை நோக்கி திரும்பியவள், ஒரு கையில் செல்லைப் பிடித்துக் கொண்டு, தன் கண்களை மறைத்துக் கொண்டு விழுந்த கூந்தலை, மறுகையால் காதுக்குப் பின் செருகியவள், அதே கையால், “கம்.. கம் அபிலாஷ்… நாம ரெண்டு பேரும் இந்த வாட்டர் ஃபோல பேக்ரவுன்டா வச்சி செல்ஃபி பிடிக்கலாம்”என்று அழைக்க, அவனும் சிரித்துக் கொண்டே அவளுடன் இணைந்து நின்றாள்.
செல்ஃபியின் போது அவன் கேமராக் கண்களைப் பார்த்தானோ இல்லையோ? அருகாமையில் இருந்த அவள் அழகு வதனத்தையே பார்த்த படியிருந்தான்.
அவளுடைய குறும்பும் , அழகும் ஒருங்கே மிளிர அவள் கொடுத்த போஸ்கள் ஒவ்வொன்றும் அவனை ரொம்பவே கவர்ந்தன.
இதழ்களைக் குவித்து, வாயை அகலத் திறந்து, இரண்டு விரல் மட்டும் காண்பித்து, பற்களை “ஈ” என்று காண்பித்து என அவள் எந்தக் கோணத்தில் புகைப்படம் எடுத்தாலும், அழகாகவே இருந்தாள் நிசப்தியா.
அபிமன்யுவோ, அவளுடைய அருகாமையிலும், அழகிலும் சிறிதே சொக்கிப் போய், கண்கள் இரண்டும் சுருங்க நின்று கொண்டிருந்தான்.
எடுக்கப்பட்ட செல்ஃபிக்கள் அவளுக்கு போதுமாக அமைய, மெல்ல அவனுடன் நடந்து வந்து கற்பாறையில் அமர்ந்து கொண்டாள் நிசப்தியா.
அவன் காதோரம் அவளது இரசனை மிகுந்த குரல். “ரொம்ப அழகா இருக்குல்ல? இந்தப்பக்கம் வாட்டர் ஃபோல், அதுக்குக் கீழ ஆறு, அந்தப் பக்கம் மலை.. எவ்ளோ சூப்பரா இருக்கு?”என்று கூறியபடியே,அபிலாஷூடன் அச்சாறை சுவை பார்க்க ஆயத்தமானாள் நிசப்தியா.
அவன் முகமெங்கிலும் ஓர் அமைதி மற்றும் இதமான புன்முறுவல் பூத்திருந்தது. அவளுடனான ஒவ்வொரு நொடியையும் அபிமன்யு இரசித்துக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டுக் கொண்டே, இடது பக்கம் கை காட்டி, “இந்தப்பக்கமா… அப்படியே….”என்று சிறு குழந்தைகள் போல இழுத்தவள், பிறகு “நூத்தியம்பது கிலோ மீட்டர் போனா… சிவனொளி பாதமலை வருமாம்”என்று நிசப்தி கூற, அவனும் அவள் கை காட்டிய இடத்தை நோக்கினான்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று வளர்ந்திருந்த காட்டு மரங்களே அவனுக்கு கண்ணில் பட்டது.
அவள் காட்டியது போலவே கை காட்டி, அவளைப் போலவே இழுத்து “இந்தப்பக்கமா அப்படியே….. நூத்தியம்பது கிலோ மீட்டர் போனா…சிவனொளி பாதமலை வராது…. கால் வலி தான் வரும்….. கூடவே சிங்கம், புலியும் வரும்” என்று ஏளனமாய்க் கூற, நிசப்தியாவுக்கு சட்டென வேறொன்று ஞாபகம் வந்தது.

“சிங்கம், புலி இல்ல அபிலாஷ்… நரி… நரி வரும்”என்று கண்களை அகலத் திறந்து, அவள்க் கூறிய தினுசில், அவன் நெஞ்சம் அவனிடம் இல்லை.
அவன் நெஞ்சத்தைப் பூவினும் மென்மையாய்க் கொய்தவளோ இதை அறியாது, “இந்தக் காட்டில நரிகள் இருக்குதாம்.. அதனால தான் இந்தக் காட்டுக்கு “நரிமலைக்காடு” னு பெயர் வந்திச்சாம்…. நைய்ட்டானா வெளிய வருமாம் அபிலாஷ்… அப்பா சொல்வாரு”என்று விழிகளை உருட்டி உருட்டி கூறிக் கொண்டிருந்தாள்.

எவனோ இவளது தந்தையின் காதிலும், இவளது காதிலும் பூ சுற்றியிருக்கிறான் போலும் என்று நினைத்துக் கொண்டான் அபி.

நிசப்தியாவுக்கு சாப்பிட்ட அச்சாற்றின் சுவையில் தாகமடிக்க, தண்ணீர்ப்போத்தலை எடுத்து, தண்ணீரை மடமட வென குடித்து விட்டு வைத்த போது பாதி போத்தல் காலியாகியிருந்தது.
இதமாய் வீசிக் கொண்டிருந்த தென்றல்க் காற்றினால் உலர்ந்த நாவை ஈரமாக்கிக் கொள்ள மீதி தண்ணீர் முழுவதையும் பருகி முடித்தான் அபிமன்யு.
சிறிது நேரத்தில் சூரியன் மேற்கு வானில் மறையவாரம்பித்தது. முதன் முதலாக நிசப்தி உயரமான மலையுச்சியிலிருந்து, சூரியன் மறையும் காட்சியைப் பூரணமாக பார்த்து மகிழ்ந்தாள்.
இது அவனால் தானே முடிந்தது? அவனுக்கு நன்றி கூற எண்ணிய நிசப்தி, “தேங்ஸ் அபி…” என்று அவன் பக்கம் திரும்பிக் கொண்டு செல்ல முயன்ற போது அவளுக்கு விக்கியது. கூடவே புரையும் ஏறத் தொடங்கியது அவளுக்கு.
சாப்பிடும் போது பேசக்கூடாது என்று நம் பெரியவர்கள் சொல்வதற்குக் காரணம் இது தான். உணவுக் கால்வாயும், சுவாசக் கால்வாயும் ஒரே நேரத்தில் திறந்து கொள்ளும் பட்சத்தில் தான் இப்படிப் புரையேறுவதுண்டு.
கூடவே பிராணவாயு இல்லாததால் விக்கல் வேறு. அவன் பதறிய படி, மெய் கலங்கி அவளது உச்சந் தலையைத் தட்ட, அவள்க் கைகள் தானாகவே தண்ணீர்ப் போத்தலைத் தேடின.
புரையேற்றத்தால் அவள்க் கண்கள் கலங்கிய தினுசில், அவனுக்கு உள்ளே வலித்தது. தனக்கு புரையேறியதை விடவும் அதிகமான வலியை உணர்ந்தான் அபி.

சற்றே பதற்றமான குரலில் “என்ன பண்ணுது நிசப்தி…. தண்ணி குடி..”என்ற வண்ணம் அவன், அவளுடைய பின் முதுகைத் தடவியபடி, தண்ணீர்ப்போத்தலை எடுக்கப் போனான்.

தண்ணீர்ப் போத்தலில் தண்ணீர் இல்லையென்பதை கண்டு கொண்ட அபி, அவள் எடுக்கு முன் அதை எடுத்துக் கொண்டு அவசரமாக எழுந்தான்.

“எ… எங்.. க போறீங்க அபிலாஷ்?”என்று அவள் விக்கலுக்கு இடையில், புரையைக் கட்டுப் படுத்த முயன்றதனால், கலங்கிச் சிவந்த விழிகளுடன், அவனைப் பார்த்து பேசக் கடினப்பட்டக் குரலில் கேட்டாள்.
அதற்கு அவனோ, “கொஞ்சம் வெய்ட் பண்ணு வந்துட்றேன்”என்றவன் அவளது பதிலையும் எதிர்பாராது, விரைந்து சென்று விட்டான்.
“அதெல்லா.. ம்…. தே…. வை.. யில்ல”என்று அவள் கூறியது அவன் செவிகளுக்கு விழவேயில்லை.
தொண்டை எரிய, அதைப் பொருட்படுத்தாது, செல்லை எடுத்து மணி பார்த்தாள் நிசப்தி. மணி ஆறு ஐந்தைக் காட்டியது. அதே சமயம் பேட்டரி குறைவாக இருப்பதையும் கவனித்தவளுக்கு உள்ளே பகீர் என்று இருந்தது.

“ஓ ஷிட்…. இது வேற?” என்று அவள் ஆத்திரத்தில் மொழிந்த போது விக்கல் முற்றிலும் நின்றிருந்தது. புரையேறியதன் கடைசி விளைவாக தொண்டை மட்டும் கொஞ்சம் எரிந்து கொண்டிருந்தது.
முட்டாள்.. அவனுக்கு இப்போதே தண்ணீர் எடுக்க போக வேண்டுமா? விக்கலும், புரையும் தானாய் அடங்கி விடப் போகிறது. கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டாம். இப்பொழுதே பாதி இருட்டத் தொடங்கி விட்டது.
செல்லில் பேட்டரி வேறு தீரும் நிலை. இன்னும் சற்று நேரத்தில் ஒருவர் முகம் இன்னொருவருக்கு தெரியாத கும்மிருட்டு பரவி விடும். இப்பொழுது கீழே இறங்கத் தொடங்கினால் தான் இருட்டுவதற்குள் போய் சேர்ந்து விட முடியும்.
அவன் சீக்கிரமே வர வேண்டும் என்று மனதுக்குள்ளேயே கடவுளை வேண்டிக் கொண்னவள், அவன் வந்ததும் ஆத்திரத்தைக் கொட்ட தீர்மானித்திருந்தாள்.

சரியான மண்டூகம்… என்று அவள் மனதுக்குள் திட்டிய அதே வேளை, அவள் மனசாட்சியோ “நிசப்தி.. இப்போ ஏன் அவன திட்ற? உனக்கு புரையேர்றத பார்க்க முடியாமத் தானே.. எடுத்துட்டு போனான்”என்று கூற அதற்கு மேலும் அவளால் அவனைத் திட்ட முடியவில்லை.
ஆனால் நேரம் தான் இருவருக்கும் காத்திருக்காமல் போய்க் கொண்டேயிருந்தது. இத்தனை நேரமும் அவள் வந்தவுடன் ஆத்திரத்தைக் கொட்டி விட தீர்மானித்திருந்தவளுக்கு இருள் மெல்ல மெல்ல சூழத் தொடங்க அவன் வராதது உளத்தை உலுக்கி எடுத்தது.
அபிலாஷ் கட்டாயம் வருவான். தண்ணீரை சீக்கிரமே எடுத்துக் கொண்டு, சீக்கிரமே தன்னைத் தேடி வருவான் என்று முதலில் எண்ணியிருந்தவளுக்கு, அந்தக் காட்டின் மயான அமைதி பீதியைக் கிளப்ப, அதற்கு மேலும் அவளால் நேர் மறையாக சிந்திக்க முடியவில்லை. மாறாக எதிர் மறை எண்ணங்களே சிந்தைக்கு வர ஆரம்பித்தது.
அவனுக்கு ஏதும் ஆகியிருக்குமோ? ஒரு வேளை தந்தை அன்று கூறியதைப் போல, தனியாய் இருக்கும் மனிதனை நரிக் கொண்டு போவது போல ஏதோ கூறினாரே…. அது போல் ஏதாவது நடந்திருக்குமோ? நினைக்கும் போதே உடல் விறைத்தது அவளுக்கு.

தானும் தனியாகத் தானே இருக்கிறோம்? தன்னை நரி ஒன்றும் செய்யாது ? என்று அவளுக்கு அப்போதிருந்த சூழ்நிலையில் சிந்திக்கத் தோன்றவேயில்லை.
மாறாக, உள்ளுக்குள்ளே நாடி நரம்பெங்கும் ஓர் பதற்றம் ஓட, இப்பொழுதே அபிலாஷைக் காண வேண்டும் என்ற வெறி அவளுள் தோற்றம் பெறவாரம்பித்தது.

அவளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. இப்பொழுதே அவள் அபிலாஷைப் பார்த்தாக வேண்டும். அவனுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாது. ஒருவேளை வழி தவறிப் போயிருப்பானோ? என்ற எண்ணம் மேலிட நிசப்தியாவால் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க முடியவில்லை.

வானத்தில் சூரியன் முற்றாக மறைந்து பதினைந்தாம் நாளைய அரைப் பௌர்ணமி நிலா வானை அலங்கரிக்கவாரம்பித்தது.
அங்கங்கே அசைந்த மரங்களின் கொப்புக்கள் கூட, அவ்விருட்டில் அவளை பயமுறுத்தின. அவளால் அவனைக் காணாமல், நேரம் செல்ல செல்ல அடிவயிற்றில் ஏதோ உருள்வது போல “கூஸ் பம்ப்” உணர்வினைத் தோற்றுவித்தது .
அவள் மூளையில் அனைத்து செல்களும், “அவனுக்கு ஏதும் ஆகியிருக்குமோ?”என்றே யோசித்துக் கொண்டிருந்தது.
பதற்றத்தில் அவள் இதயத் துடிப்பு ஓசையை, அவள்க் காதுகளே நன்கு கேட்கும் படியாயிற்று. அந்த இதமான கால நிலையிலும், அவள் நெற்றி, கழுத்து, முதுகு எங்கும் வியர்வை ஊற்றெடுத்தது. பயத்தில் குரல் கூட ஒழுங்காக எழவில்லை.

நிலா வெளிச்சத்தினையே , துணையாகக் கொண்டு, அவள் நின்றிருந்த பென்னாம்பெரிய பாறாங்கல்லில், நாலா புறத்திற்கும், மூச்சிறைக்க இறைக்க, ஓடி ஓடியோடிச் சென்று, “அபிலாஷ்! அபிலாஷ்! அபிலாஷ்!”என்று அடி வயிற்றிலிருந்து கத்தினாள் நிசப்தியா. உயிரையே கடைந்தெடுத்த கத்தல் அது.
அந்த நீர்வீழ்ச்சியின் ஒலியை வந்ததிலிருந்து கேட்டு இரசித்த நிசப்திக்கு, தற்போது தன் ஒலியை முடங்கச் செய்யும் அதே ஒலியின் மீது ஒரு வகையான கோபம் கூட உதித்தது.
அவளுக்கு அந்தக் கத்தலுக்கான பிரதிபலிப்பு வராமல் போகவே நின்ற இடத்திலேயே இருப்பது பிடிக்கவில்லை. ஓர் உயிருக்கு என்னானதோ? ஏதானதோ என்று தெரியாமல், எப்படி அவளால் சும்மாயிருக்க முடியும்?
அவன் தண்ணீர் எடுப்பதற்காக விரைந்த திசையை நோக்கி ஓடினாள் நிசப்தியா.
இத்தனைக்கும் அவளுக்குத் துணையாய் இருந்தது நிலாவொளி மாத்திரமே. அவளது கைகள் நடுநடுங்கின. கண்கள் அவளையறியாமலேயே பணித்தன.
“அபிலாஷ்! அபிலாஷ்!”என்று அடி வயிற்றிலிருந்து மீண்டும் மீண்டும் கத்திய படியே அந்த இருளில் துலாவினாள் அவள்.

அவள் சுற்றிய சுற்றலில், அலைந்த அலைச்சலில் அவளுக்கு எங்குமே அவன் கண்ணில் படவில்லை. மாறாக அவள் எங்கே இருக்கிறாள் என்பது கூட அவளுக்கு தெரியவில்லை.

“கடவுளே! அபிலாஷ காப்பாத்து.. அபிலாஷ காப்பாத்து”என்று அந்தக் கும்மிருட்டிலும், இரு கண்கள் மூடி பிரார்த்தித்து விட்டு, கண்களில் கண்ணீர் மல்க, கண்களைத் திறந்தவளுக்கு, நேரம் செல்வதைப் பற்றியோ? வீட்டுக்குப் போக முடியாததையிட்டு ஒரு துளி கூட வருத்தமோ? வீட்டில் தெரியவந்தால் ஏற்படும் விளைவைக் குறித்து கவலையோ இருக்கவில்லை.

மாறாக அவனைத் தேடுவதிலேயே குறியாக இருந்தாள் அவள் .
நீர்வீழ்ச்சி பக்கம் சென்ற போது, நிசப்தி கண்மண் தெரியாத அந்தக் கும்மிருட்டில், ஏதோ ஒரு பள்ளத்தில் கால் வைக்க, கால் இடறியது. தன்னிடக்காலின் கரண்டைப் பகுதி, அந்த இருகற்பாறைகளுக்கு இடையில் இருந்த பள்ளத்தாக்கில்,சற்றே சரிய, அவள், சறு சறு வென சறுகிக் கொண்டே கீழே செல்ல, அவளுடைய கை கூட, அருகில் இருந்த கல்லில் சிராய்ந்தது.
சிறிய எரிச்சல் தோன்றினாலும், சமாளித்துக் கொண்டு எழுந்து மீண்டும் அவனைத் தேடலானாள் நிசப்தி.

அவள் நம்பிக்கை மெல்ல மெல்ல கரைந்தது. தன்னை அழைத்து வந்தவனுக்கு என்னானதோ, ஏதானதோ என்ற அச்சம் இறுதியில், தான் காட்டில் அகப்பட்டுக் கொண்டதாகப்பட, மூச்சிறைக்க இறைக்க, குனிந்து தன் முட்டுக்கால்களைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
கத்திக் கதறி அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு. திடீரென தன் செல்லின் நினைவு வந்து பார்த்தவளுக்கு, அது பேட்டரி தீர்ந்து, செயலிழக்கப்பட்டிருப்பதை அறிந்ததும், இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் அகன்றது.

தனக்கு இப்படியொரு விபரீத ஆசை தேவை தானா? என்று அவள் மீதே அவளுக்கு, வெறுப்பும், கோபமும் மிகுந்தது.

உள்ளிருந்து மனது திரும்பவும், ஒரேயொரு முறை கத்து நிசப்தி என்று கூற, “அபிலாஷ்! அபி…… ” என்று அவள் இறுதியாக கத்த முற்பட்ட போது, ஒரு வலிய கரம் பின்னேயிருந்து அவள் வாயைப் பொத்தியது.
அவளது கண்களில் நின்றும் வழிந்த கண்ணீர் அவள் அந்த வலிய கரத்தையும் ஈரமாக்கியிருக்க வேண்டும். அந்தக் கரம் சட்டென பின்வாங்க, நிசப்தியாவும் சட்டென திரும்பிப் பார்த்தாள்.
அது அவனே தான். நிலாவொளியிலும் அவனுடல் பளபளத்தது. ஏதோ இத்தனை நேரமாய் தேடிய புதையல் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், உள்ளே ஓர் நடுக்கமும் பரவ, அவனை மேலிருந்து கீழ்வரைக் கண்களாலேயே அலசியவள், மறுகணம் அவன் கூட எதிர் பாராத சமயத்தில், அவன் மீது பாய்ந்து, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இறுக்கமாய், தன் மேனி பலங் கொண்ட மட்டும் இறுக்கமாய்க் கட்டிக் கொண்டாள் .
அந்நொடி அவளது மரியாதையெல்லாம் காற்றோடு போனது.
“Fool, idiot.. லூசு… இந்த நேரத்துல.. போ சொல்லி நா சொன்னேனா? நா எப்டி துடிச்சி போயிட்டேன் தெரியுமா? இன்… னொரு தரம் இப்படி.. என்ன… விட்டு… ட்டு போன நா இனிமேல் உங்…. கூட பேச… வே மாட்டேன்” என்று கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தன் ஆத்திரத்தையெல்லாம், அழுது கரைந்த குரலில் கொட்டியவள், அவனை அதன் பிறகும் விடவே இல்லை. இனிமேல் நான் உன்னை எங்கும் செல்ல விட மாட்டேன் என்பது போல் அவனை வெகு நேரமாய் அணைத்துக் கொண்டேயிருந்தாள்.

மெல்ல அவளது அதிவேகமாக துடித்த இதயத்துடிப்பு அடங்கியது. இத்தனை நேரமாய், அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்ட அவளது நடுக்கமும் மெல்ல மெல்ல மறையலாயிற்று.
அவனோ மறு பதில் பேச முடியாமல் கல்லாக நின்றிருந்தான். அவனிடமிருந்து மூச்சு கூட அரிதாகத் தான் வந்தது. தண்ணீர் எடுக்க ஆற்றுப் பள்ளத்தாக்கை நோக்கி ஓடி, போத்தலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு பழைய இடத்துக்கே வந்தால் அவளில்லை.

மனது கிடந்து அடித்துக் கொள்ள, அவள்க் கத்திய திசையை நோக்கி ஓடி வந்த அபிமன்யுவுக்கு ஆனந்த அதிர்ச்சி. ஆனால் அந்த ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
அவள் அணைப்பினால் தூண்டி விடப்பட்ட அவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த, கல்லாய் சமைந்து நின்றான் அபிமன்யு.

அவள் அணைக்க அணைக்க, கல்லாகி விறைத்து நின்ற அவனுடலை கண்டதும் தான் நிசப்தி சுயநினைவு அடைந்து விலகி நின்றாள். அவளுக்கு ஒரு ஸாரி கேட்கக் கூட தோன்றவில்லை.
அவள் உடைந்த குரலில், அங்கிருந்த வெளியேற வழி கிடைக்காதா என்ற நப்பாசையில், “இப்போ நாம எப்படி வீட்டுக்கு போறது அபிலாஷ்?”என்று அவனிடமே கேட்க, அவனோ தெளிவான குரலில், “இப்போ நாம இந்தக் காட்டுல எங்கிருக்கோம்னே தெரியல? மேற்கொண்டு நடந்தா… வழி தவறி தான் போவோம்…. அதனால இங்கேயே இருப்போம்… எப்படியும் உன்ன தேடி உன் வீட்டாக்கள் வருவாங்கல.. அப்போ போலாம்… இல்ல ஒரு வேளை வரலைனா.. காலையில போலாம்”என்று கூற அவளுக்கு உள்ளே கலங்கியது.

அவள் வீட்டாக்கள் வந்தால் நடப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தந்தையின் கேள்விக் கணைகளும், பாலாவின் சீற்றமும் தன் மேல் பாய்ந்தால் பரவாயில்லை. அவன் மேலும் பாய்ந்தால்….. நினைக்கும் போதே திரும்பவும் நெஞ்சைப் பிசைந்தது.

அங்கேயே இருவரும் அமர்ந்து கொள்ள, அபிமன்யு விரைந்து செயல்பட்டான். அருகிலிருந்த ஒல்லிய மரக்கிளைகள், காய்ந்த சறுகுகளை அந்த நிலா வெளிச்சத்தில் பொறுக்கி எடுத்து, வந்து குவியலாக அடுக்கி, தன்னுடைய காற்சட்டைப் பையில் இருந்த “லைட்டரை”எடுத்து பற்ற வைத்தான்.
சறுகுகளுடன் இணைந்து, தீ மரம் வளர்ந்து, அவர்களுக்கு சற்று இதத்தைக் கொடுத்தது .

நெருப்பின் ஒளியில் அவள் முகம் பளபளத்தது. இரசிக்க வேண்டியதை இரசிக்க முடியாமல் தடம் புரண்டு கொண்டிருந்தது அவன் மனம். அதனால் தலையைக் குனித்துக் கொண்டேயிருந்தான்.
ஆனால் யாருமே அறியாத இன்னொரு விடயம். நிசப்தியா ஒரு பயந்தாங்கொள்ளி. வீட்டில் மின்வெட்டினாலே “அம்மா” என்று வீடே அலறும் படி கத்துபவள், எப்படி இந்தக் கும்மிருட்டில் எந்த தைரியத்தில் அவனைத் தேடினாள் என்று அவளுக்கு யோசிக்கத் தோன்றவேயில்லை.
அவளுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கமுண்டு. ஏதாவது பேய்ப்படங்கள் பார்த்தால் நிசப்தி, அந்தப் படத்தில் வரும் பேய் முன்னால் வந்து நின்றால், தன்னுடன் வந்து உறங்கினால் என்று கற்பனை செய்து பார்த்து இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்ட படி, தந்தையின் அறைக்குச் சென்று, தந்தையின் மாரில் அணில்க் குஞ்சு போல சுருண்டு படுத்துக் கொள்வாள்.
அதே போல இன்றும் அவள் மனம் கற்பனை செய்யவாரம்பித்தது. இது நரிகள் உள்ள காடாமே. அவளுக்கு அந்நரிகளில் ஒன்று, அவளது இடது புறத்தில் இருந்த பதரில் வந்து நின்றால் என்று தோன்ற, நிசப்திக்கு கைகள் நடுங்கவாரம்பித்தது.
தன்னிடத்தை விட்டும் மெல்ல எழுந்தவள், அபிலாஷின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள். அவனுக்கு ஒரு மாதிரியாகியது. சும்மாவே அவள் அணைத்ததில் தூண்டி விடப்பட்ட அவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அவன் முயற்சி செய்து கொண்டிருக்கையில் அவள் நெருக்கம் அவனைப் பாடாய்ப் படுத்தியது.

எனவே கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தான் அபி. அவளும் அவனுடன் மீண்டும் நெருக்கமாக அமர, மீண்டும் நகர்ந்து அமர்ந்தான் அபி.
மூன்றாவது முறையும் இதே தொடர்ந்து நடக்க, நகர்ந்து உட்காருவதை விடுத்து, “என்னமா?”என்று தாழ்ந்த குரலில் கேட்டான்.
அவளுக்கு நடந்ததை சொல்ல மனம் வரவில்லை. அப்படியே சொன்னால் அபிமன்யுவை வார்த்தைக்கு வார்த்தை கோழை என்றாயே? இப்பொழுது யார் கோழை என்று கேட்டு விட்டால் என்று எண்ணியவள் அதை மறைத்து, தன் தேகத்தை அணைத்துப் பிடித்துக் கொண்டு, “குளிருது” என்றாள்.
இன்னும் கொஞ்சம் பயம் அதிகமாக, குளிரை சாக்காக வைத்த படி, அவனது இடது கையை அவனது அனுமதியில்லாமல் எடுத்து தன் தோளில் போட்ட பின்பு தான் அவளுக்கு சற்று பயம் தணிந்தது.
அவன் சிறிது நேரம் வாளாவிருந்து விட்டு, “நிசப்தி “ என்று அவளை மெல்லிய குரலில் அவளை அழைக்க, அவளும் அவனிலிருந்து விலகி “என்ன?” என்று கேட்டாள்.

“குளிருதுனா… வா” என்று ஜேக்கட்டை பிரித்த படி அழைத்தான்.
அவளுக்கு எந்தவித தப்பெண்ணமும் தோன்றவில்லை. அவனை அவன் மாரில் தலை வைத்த வண்ணம் அணைத்துக் கொண்டாள்.
அவளுக்கு தற்போது முற்றிலும் பயம் தணிந்தது. எந்தவித தீய சக்திகளினாலும் எதுவும் செய்ய முடியாத ஓர் இடத்தில் வைத்ததாக பாதுகாப்பாக உணர்ந்தாள் நிசப்தி. அப்படியே அவள் உறங்கியும் போனாள்.
ஆனால் அபிமன்யுவுக்குத் தான் அவசரப்பட்டு செய்த செயல் தப்போ என்று தோன்றலாயிற்று.
அவள் கண் விழித்த போது விடிந்திருந்தது. அவன் மாரிலிருந்து தலை தூக்கி அவனைப் பார்த்த போது அவன் கண்கள் நேற்று முழுதும் அவன் தூங்கவில்லை என்பதைக் காட்டும் முகமாக சிவந்து வீங்கியிருந்தன. அவளுக்கு அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

“அபிலாஷ்.. நய்ட் தூங்கலயா?”என்று கவலையுடன் அவள் விசாரிக்க, அவனோ “இல்லை”என்று ஒற்றை வார்த்தையை மட்டும் உணர்வு மறுத்துப் போனவன் போல கூறியவன், “சரி வா.. கீழ போலாம்” என்ற படி இறங்கி கீழே செல்ல ஆயத்தமானான் .

என்னவாயிற்று இவனுக்கு? நேற்றிரவு முழுவதும் உன்னால் தான் தூங்கக் கிடைக்கவில்லை என்று மறைமுகமாக கோபப்படுகிறானா? என்று தோன்றியது அவளுக்கு.
அவனுக்கோ நேற்றிரவு முழுவதும் ஏன் தான் அவளை அணைத்துக் கொண்டோம் என்றானது. அவன் மாருடன் அவள் முன்னழகு படுகையில் அவன் பட்ட துன்பம் சொல்லுந் தரமன்று.
இனிப்பை அருகிலேயே வைத்துக் கொண்டு, சுவைக்க முடியாத நீரிழிவு நோய்க்காரன் போல ரொம்பவே அவதிப்பட்டான்.
ஆணாய்ப் பிறந்தது எவ்வளவு பாவம்? இந்த ஆண்களுக்கு உணர்ச்சியை ஏன் கட்டுப்படுத்தவே முடியவில்லை? என்று தன் ஆண்மையைக் கடிந்து கொண்டு, தூங்கினால் தூக்கத்தில் ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அவன் இரவு பூராவும் விழித்திருந்தான்.
கீழே கொண்டு வந்து விட்டவன், “போய்டுவாய்ல?”என்று அவளைப் பாராமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு கேட்க, அவளுக்கு உள்ளே சுட்டது.
அவளும் ஏதும் பேசாமல் “ஆமா”என்று தலையாட்டி விட்டு நடக்கவாரம்பித்தாள்.
பாதி தூரம் சென்றவளை அழைத்து, “நரிகள் ஒரு இடத்துல இருந்தா சும்மாயிருக்காது… அட்லீஸ்ட் ஊளையாவது இடும்…. உன் வீட்டுக்கு அப்படி ஏதாவது காட்டில் இருந்து கேட்குமா?” என்று அவளைப் பாராமல் வேறு எங்கேயோ பார்த்த படி கேட்க, அவளும், இல்லை என்னும் முகமாக தலையாட்டினாள்.

“அப்போ தெரிஞ்சுக்க.. அந்த காட்டில நரி கிடையாது.. யாரோ உன் அப்பா காதுல நல்லா பூ சுத்தியிருக்காங்க”என்று அவளைப் பாராமலேயே விளக்கங் கொடுத்தான் அபிமன்யு.
அவள் என்ன தவறு செய்து விட்டாள் என்று இப்படி அவமதிக்கிறான்? தன்னைப் பார்த்து பேசக் கூட முடியாதளவு அவள் என்ன செய்தாள் ? என்று தோன்ற அதை மறைத்துக் கொண்டு, அவனையே பார்க்க,அவனோ ஒரு “பை” கூட சொல்லாமல், விடுவிடு வென நடந்தே சென்று விட்டான் .
அவளும் இவனுக்கு என்னவாயிற்று என்று யோசித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடக்கவாரம்பித்தாள். அவள் வருவதை உள்ளிருந்து பார்த்து விட்டு ஓடி வந்த தாய், “என்னாச்சுமா? இப்போ தலைவலி எப்படியிருக்குமா?” என்று பதறியவளாய் தலையைத் தொட்டு விசாரித்தாள் தாய்.

“தலைவலியா?”என்று ஏதுமறியாமல் கேட்டாள் மகள். தாயோ ஆச்சர்யப்பட்ட படி, “என்னமா நீ? திவ்யா தான் கோல் பண்ணி…. நிசப்திக்கு தலைவலியாம்.. இங்கேயே படுத்துக்குறாளாம்… காலையில வந்துடுவா னு சொன்னாளே” என்று கூற, அப்பொழுது தான் திவ்யாவின் மதிநுட்பமும், கூடவே நேற்றிரவு வீட்டில் யாரும் தேடி வராமைக்கான காரணமும் விளங்கியது.

தாயே எல்லாவற்றையும் கூறிவிட்டதால் சமாளிக்க எண்ணி, “ஆமாம்மா…. இப்போ தலைவலி இல்லையா? அது தான் தலைவலியான்னு கேட்டேன்”என்ற படி பொய் கூறி விட்டு உள்ளே வந்தாள்.
வந்ததும் முதல் வேலையாக செல்லை சார்ஜரில் போட்டு விட்டு நிசப்தி மணியைப் பார்த்தாள். காலை ஏழு மணி டவலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள் நிசப்தியா.
நீர்த்திவலைகள் ஷவரிலிருந்து ஊற்றெடுத்து மேனியெங்கிலும் தடவிச் சென்ற போது தான், அவள் வலது முழங்கை காந்துவதை அறிந்தாள் நிசப்தி.

ஷவரை நிறுத்தி விட்டு, கையை மடக்கிப் பார்த்தால், கையில் நேற்றிரவு கண்மண் தெரியாமல் ஓடி விழுந்து கல்லில் உராய்ந்ததால் ஏற்பட்ட வடுவின் வலி இது என்று புரிந்தது.
குளித்து முடித்து விட்டு வந்தவள், கைக்கு முதல் பணியாக மருந்திட்டாள்.

நேற்று இவளுக்கு இது பற்றி விளங்கவேயில்லையே. இப்பொழுது இப்படி எரிகிறதே? ஏன் இந்த எரிவு, காந்தல் எல்லாம் ஏன், அந்நொடி விளங்கவில்லை. அந்தளவுக்கு மும்முரமாக அவனை தேடியிருக்கிறாளா? . ஆனால் அவனோ அவளை நிமிர்ந்தும் பாராமல் ஓடி விட்டானே? அவனை சரியாக புரிந்து கொள்ளவே முடியவில்லையே.
ஆனால் நிசப்திக்கு சின்ன வயதிலிருந்தே அப்படித்தான். ஒன்றில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அவளுக்கு என்ன ஆனாலும் விளங்குவதில்லை. மும்முரம் எல்லாம் ஓய்ந்த பின்னர் தான், நிசப்திக்கு என்ன ஆகியுள்ளது என்று புரிய வரும்.
செல்லை எடுத்து திவ்யாவுக்கு அழைப்பெடுத்து, சமயத்தில் பொய் கூறி சமாளித்ததற்கு நன்றி கூறப் போனவளுக்கு, திவ்யாவிடமிருந்து மாறாகத் திட்டு தான் விழுந்தது. நிசப்தி திவ்யாவிடமிருந்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
நிசப்தியின் குரல் கேட்டதும், விடாமல் திட்டிக் கொண்டே போனாள் திவ்யா. “உன் மனசுல அப்படி என்ன தான் நினைச்சிட்டு இருக்க? நீ…. பொண்ணு.. அத மனசுல வச்சுக்க….. கண்டகண்டவனோட நீ சுத்தறத என்னால அனுமதிக்க முடியாது…. எப்படியோ நீ திரும்பி வந்ததால ஓகே…. உனக்கு அவனால ஏதாச்சும் ஆகியிருந்தா…”என்று அவள் திட்டிக் கொண்டே போன போது, இதுவரை அமைதியாய் இருந்த நிசப்தி, அவனுக்கு தோழி திட்டுவதைப் பொறுக்க முடியாமல், சட்டென இடையிட்டு, “அவரு அப்படிபட்டவரல்ல”என்றாள் .

இதைக் கேட்ட தோழியின் குரலோ இன்னும் கொஞ்சம் கணத்தது. “ஆமா…. பெரிய சொக்கத்தங்கம்…. எல்லா ஆம்பளகளும்… ஒரே குட்டையில ஊறின மட்டைக தான்… சந்தர்ப்பம் வந்தா வேலய சாதிச்சிப்பாங்க…. சரி அத விடு… உனக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா…. நா எப்டி உன் அண்ணன் முகத்தைப் பார்க்க முடியும் சொல்லு…. கடவுள் புண்ணியத்துல எப்படியோ வந்துட்ட…. நய்ட் பூரா விழிச்சிருந்து… நீ ஏதும் ஆகாம திரும்பி வரணும்னு ப்ரே பண்ணேன் பாரு என்ன சொல்லணும்”என்று அவள் கூற, நிசப்தியாவின் மனம் சட்டென இளகியது.

தோழி தனக்காக விழித்திருந்து, பிரார்த்தித்திருக்கிறாள் என்பது புரிய நிசப்தி சட்டென, மனம் வாட “ஸாரி டி” என்றாள்.
“சரி அத விடு… இனிமேல் இப்டி ஊர் சுத்தறத நிறுத்து”என்று தாழ்ந்த குரலில் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் திவ்யா .

திவ்யா சொன்ன ஆண்கள் யாவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற வாக்கியம் அவள் சிந்தைக்கு வந்தது. அப்படியானால் தன் தந்தையும், அவள் தந்தையும், இன்னும் ஏன் பாலாவும் கூட சந்தர்ப்பத்திற்காக காத்தருப்பவர்களா? ஏன் அவள் அவ்வாறு சொன்னாள்?
தோழி பொதுவாகக் கூறியிருக்க வேண்டும் என்று எண்ணியவள், அபிலாஷும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவனா? என்றும் எண்ணலானாள்.
ச்சேச்சே… என்ன முட்டாள்தனமான சிந்தனை இது. அப்படி பார்த்தால் நேற்றிரவும் கூட ஒரு சந்தர்ப்பம் தானே? அதை அவன் உபயோகப்படுத்தியிருக்க வேண்டாமா? சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அவள் அபிலாஷ் சொக்கத்தங்கம். அதுவும் இருபத்திநான்கு கேரட்டாகத் தோன்றிற்று.

அத்தியாயம் – 12

திவ்யாவின் பேச்சை இந்தக் காதால் வாங்கி அந்தக் காதால் விட்டாள் நிசப்தியா. அபிலாஷை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், அவளுக்கு அவன் சந்தர்ப்ப வாதியாக விளங்கவேயில்லை.
நேற்று அவன் நெஞ்சாங் கூட்டுக்குள் தலை வைத்த போது, ஒரு குழந்தை, தாயின் கருவறைக்குள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்குமோ? அவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்தாள் நிசப்தி.
அவளுக்காக இரவு வரை கண் விழித்து இருந்தானே. அப்படிப்பட்டவனை திவ்யா கூறிய “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்ற வர்க்கத்துக்குள் உள்ளடக்கவே முடியவில்லை.

அவளது அணைப்பை அவன் தவறாக எடுத்துக் கொள்ளாத விதம், அவனை ஒரு படி மேலாகவே எண்ண வைத்தது. அப்படி அவன் தவறாக எடுத்துக் கொண்டிருப்பின், இந்நேரம் அவளால் பழைய நிசப்தியாவாய் கலகல என்று பேசிக் கொண்டிருக்க முடியுமோ? என்னவோ?

ஓர் இரவு முழுவதும் விழித்திருப்பது என்றால் சும்மாவா? ஒரு மனிதனுக்கு ஓர் நாளில் எட்டு மணித்தியாலத் தூக்கம் கட்டாயம் தேவை எனும் பட்சத்தில், தனக்காகத் தானே, அந்தத் தூக்கத்தைக் கூட பாழ் செய்து, கண்ணை இமை காப்பது போல காத்தான் அவன் .
அவனின் நட்பு கிடைத்ததையிட்டு பெரு மகிழ்ச்சி கொண்டாள் நிசப்தியா.
காலை அவன் விடைபெற்றுச் சென்ற போது, அவனது சோர்ந்த தொய்ந்த முகம், அவள்க் கண்ணுக்குள் நிழலாடியது.
இரத்தச்சிவப்பேறியிருந்த கண்களை பார்க்கையில், உள்ளே வருத்தமாக இருந்தது அவளுக்கு. அவன் அவளை விட்டும் நகர்ந்த போது, தன்னுடைய கைகள் இரண்டையும் காற்றில் சுழற்றிக் கொண்டு, கழுத்தை நாலாபுறமும் சுற்றி வளைத்துக் கொண்டு, தோள்பட்டையை பிசைந்து விட்ட படி சிற்சில உடற்பயிற்சிகளை செய்து கொண்டே தானே சென்றான்.
அப்படியானால் அவனுக்கும் மெய் வருத்தமாகத் தான் இருக்க வேண்டும். அவனுக்கு தற்போது எப்படியிருக்கிறதோ? என்று தோன்ற, பகலானதும் அவனிருப்பிடம் நாடிச் செல்லத் தீர்மானித்தாள் நிசப்தி .

தாயிடம் நூலகத்திற்கு செல்கிறேன் என்று பொய் கூறி விட்டு, அவனைப் பார்க்கவென சாருமதி ஹோட்டலுக்கு விரைந்தாள் நிசப்தி.
சாருமதி ஹோட்டல் வளாகத்திற்கென்று ஓர் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு மாதமும், இலங்கையில் கொண்டாடப்படும் அல்லது அனுஷ்டிக்கப்படும் பண்டிகைகளை அடிப்படையாகக் கொண்டு, அந்த ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
ஜனவரி மாதமானால், வருடப்பிறப்பு கொண்டாட்டத்திற்கேற்ப அலங்கரிக்கப்பட்டிருக்கும். பெப்ரவரி மாதமானால், காதலர் தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். மார்ச் மாதமானால் மகளிர் தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஏப்ரல் மாதமானால் சிங்கள, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
இந்த மாதம் மே என்பதனால் இலங்கையில் விசேஷமாக கொண்டாடப்படும் “வெசாக்”எனும் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
புத்தர் பிறந்த நாளைக் கொண்டாடும் முகமாக அந்த ஹோட்டலே விழாக் கோலம் பூண்டிருந்தது.
ஹோட்டலின் சீலிங்கையெல்லாம் “வெசாக் கூடுகள்” எனப்படும் வண்ணக் கடதாசிகளாலான ஒரு வகை கூடுகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. அவை காற்றில் ஆடும் போது அவைகளின் அழகே தனி.
இரவு நேரங்களில், அந்தக் கூட்டிற்குள் மின் விளக்குகளால் ஒளியேற்றப்படும். இரவு நேரத்தில் இந்தக் கூடுகள் இன்னும் கொஞ்சம் அழகாய் காட்சியளிக்கும்.

ஹோட்டலின் வெளிப்புற வளாகத்தில் தொண்ணூறடி உயரத்தில், புத்தரின் வாழ்க்கைச் சரிதம் அடங்கிய தோரணை பிரமாண்டமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
அதுவும் இரவு நேரத்தில் தான் பார்க்க அழகாய் இருக்கும். இவற்றையெல்லாம் இரசித்துக் கொண்டே உள் நுழைந்தாள் நிசப்தி.

அவனது அறை இலக்கங்களை அவ்வளவு எளிதாக அவள் மறந்துவிட்டிருக்கவில்லை. அறை இலக்கம் “நோட் நோட் செவன்”.
ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், அனுமதி பெற்றுக் கொண்டு, அவனறையை நோக்கி விரைந்தாள் நிசப்தி. அவனறைக் கதவைத் தட்டி விட்டு, அவனுக்காகக் காத்திருந்தாள் நிசப்தி.

அவளை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் வந்து கதவைத் திறந்தவன், ஆங்கே நிசப்தி நின்றிருக்கக் காணவும், அவன் முகத்தில் மின்னல் மின்னி மறைந்தது.

அதன் பிறகு அந்த மின்னலொளிப் பிரகாசம் பொய் தானோ? என்று அவள் சந்தேகப்படுமளவுக்கு, சோகமாய் தன் முகத்தை வைத்துக் கொண்டு, “வா நிசப்தி” என்றான் அவன்.
இவனுக்கு என்னவாயிற்று? சற்று நேரத்திற்கு முன் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சி, சூரியன் முன் பனித்துளி போல ஏன் காணாமல் போய் விட்டது? என்று உள்ளுக்குள் சிந்தித்துக் கொண்டே, அவன் பாதி திறந்த கதவினூடாக உள் நுழைந்தாள்.

அவள் உள்ளே வந்ததும், கதவை மூடி விட்டு உள்ளே வந்தவன், “உட்கார் நிசப்தி”என்று அருகிலிருந்த சோபாவைக் காட்டினான். உடனேயே அமராமல் அவனிருந்த அறையின் அமைவிடத்தை பார்வையாலேயே அலசினாள் நிசப்தி.

அவனது அறை இரு பகுதிகளாக இருந்தது. முதல் பகுதியில் சோபா செட்டும், டீ போயும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூ வாஸ்களும், தொலைபேசியும், சுவரில் மாட்டப்பட்டிருந்த அலங்கார ஓவியங்களும் இருந்தன.
இரண்டாவது பகுதியில் மஞ்சத்தின் ஒரு பகுதி விளங்க அது படுக்கையறை போலும் எண்ணிக் கொண்டாள் நிசப்தியா. கொஞ்சம் பிரமாண்டமாக, கொஞ்சம் அழகாகவே இருந்தது அவ்வறை.
இவன் ஒருவனுக்கு மாத்திரம் இவ்வறை என்பது கொஞ்சம் அதிகப்படி தான் என்று எண்ணிக் கொண்டு, சோபாவில் அமர்ந்தாள் அவள்.

சோபாவின் மென்மையில், அவளுக்கு அதிலேயே படுக்கலாம் போல தோன்றிற்று.

அவன் நேரே அறைக்கு வந்ததும் குட்டித் தூக்கம் ஒன்றை போட்டு விட்டு எழுந்து, குளித்து, உடை மாற்றி விட்டு வந்ததும் தான் நிசப்தி வந்திருக்கிறாள்.
ஆகையால் நிசப்திக்கு, அவன் முகத்தில் முன்பிருந்த சோர்வு, களைப்பு எல்லாம் தற்போது தெரியாமல் போகவும் தான் நிம்மதியாக இருந்தது.
அவள் உட்கார்ந்ததும் தான் அவள் வலது முழங்கையிலிருந்த கட்டைப் பார்த்தான் அபிமன்யு.

உள்ளுக்குள்ளே வருத்தமும், பதற்றமும் நொடியில் தோன்றிவிட, தனக்கே அந்தக் காயம் ஏற்பட்டது போல வருந்தி, தன்னையறியாமலேயே அவள் பக்கமாய் இரண்டெட்டில் விரைந்து வந்து, அவள் அமர்ந்திருந்த சோபா பக்கமாக முழந்தாளிட்டு அமர்ந்து, அவள் வலது கையை மெல்ல பற்றி, “என்னாச்சுமா கைக்கு?” என்று கேட்டான்.
நிசப்தியாவுக்கு முதன் முதலாக அவனது கரிசனம் உள்ளே ஏதோ செய்ய, தன்னருகில் மண்டியிட்டமர்ந்திருந்த அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிசப்தி.
தாய், தந்தை, பாலாவிடம் கூட கண்டிராத ஓர் அக்கறையை அவனிடம் கண்டாள் நிசப்தி.
அவள் கையிலிருந்த கட்டை, அவள் குளித்து முடித்து விட்டு வந்த போது கண்ட அவளது தாய், “ஹேய் நிசப்தி எங்க போய் விழுந்த?”என்றதோடு அகன்று விட்டார்.
காலையுணவை சாப்பிடும் போது கட்டைக் கண்ட தந்தை, “வர வர உனக்கு இன்னும் சின்னபுள்ளத்தனம் அதிகமாகி கிட்டே வருதே ஒழிய குறையுதில்ல… இனிமே.. பார்த்து… கேயார் ஃபுல்லா நடந்துக்கணும்” என்று தாழ்மையாக எச்சரித்து விட்டு சாப்பிடத் தொடங்கினார்.

வேலைக்கு, வண்டியில் செல்ல தயாராகிக் கொண்டிருந்த அண்ணனிடம், அவன் மறந்து விட்ட ஹெல்மட்டை கொண்டு வந்து நீட்டிய தங்கையைப் பார்த்து பாலா, “கைல கட்டுனு சொல்லி வீட்டு வேலகள செய்யாம “கட்” அடிக்கலாம்னு தானே இந்த ஏக்டிங்க்?” என்று ஏளனமாய் மொழிந்து விட்டு அகன்றான்.
ஆனால் யாருக்குமே இவனைப் போல அக்கறையாய் விசாரிக்கத் தோன்றவேயில்லையே ஏன்? வேற்றாள் ஒருவனுக்கு இருக்கும் அக்கறையில் ஒரு துளியளவு கூட அவர்களிடம் இருந்ததாக தெரியவில்லையே ஏன்? அவளுள் விடையில்லை. அந்நொடி அவளுள் தோன்றிய உணர்வுக்கு என்ன பெயர் வைப்பது என்றும் தெரியவுமில்லை.
தனக்கேற்பட்டிருக்கும் சின்ன காயத்திற்கு இந்தப் பதறு பதறுகிறானே? என்று வியந்தவள், தன் மடியருகே இருக்கும் அவனது கேசத்தை வருட, அனிச்சையாக எழுந்த தன் இடக்கையை கடினப்பட்டு அடக்கிக் கொண்டு, “அது வந்து அபிலாஷ்…. நேத்து உங்கள தேடி ஓடினதுல கொஞ்சம் சிலிப்பாகி விழுந்துட்டேன்” என்றாள்.
அதைக் கேட்டவன், அவள் விழிகளை நேராக நிமிர்ந்து நோக்கி, “என்னத் தேடி இப்படித் தான் ஓடணுமா? காயம் பட்டது கூட தெரியாம அப்படி என்ன தேடல்?” என்று அவன் திட்ட, அதுவும் அவனது அக்கறைக்கு சான்றாகவே தோன்றிற்று அவளுக்கு.
அவளது பார்வையிலிருந்த மாற்றம், தன்னுயிர் வரை தீண்டுவதைக் கண்ட அபி, அதனை சமாளிக்க முடியாமல், அவளை விட்டும் எழுந்து சென்று, அங்கிருந்த தொலைபேசியை எடுத்து ரூம் போயிடம், “இரண்டு எஸ்ப்ரஸோ” அனுப்பச் சொல்லி விட்டு, அவள் பக்கத்திலிருந்த இடத்தில் வந்து அமர்ந்த போது, அவன் முகம் சோர்ந்திருந்தது.

இவனுக்கு என்னவாயிற்று என்று அனுமானிக்க முடியாமல் திண்டாடியவள், அவனிடமே அதைக் கேட்டு விட எண்ணி, “என்ன அபிலாஷ்? ஏன் முகம் வாடியிருக்கு?” என்று கேட்டாள்.
அவனும் அவளிடம் எதுவும் மறைக்கவில்லை. விட்டத்தை வெறித்த படியே, “நாளைக்கு அம்மாவுடைய பிறந்த நாள்”என்றான் தன் கலக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்ற குரலில்.

சிறிது நேரம் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. அவன் தன் சோகங் காரணமாக பேசாதிருக்க, இவள் அவனது சோகத்தை எப்படி ஆற்றுவது என்று தெரியாமல் பேசாதிருந்தாள்.
சிறிது நேரம் அமைதியாக டைல்ஸ் தரையையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளை நோக்கி கலங்கிய விழிகளுடன், “நாளைக்கு அம்மாவ பார்க்க…. அவங்க சமாதியப் பார்க்க… கொழும்புக்கு போலாம்னு இருக்கேன்”என்று உடைந்த குரலில் கூற, நிசப்தியாவுக்கு முகத்தில் புன்முறுவல் பூத்தது.
“நல்ல ஐடியாவே அபிலாஷ்”என்று அவனை மெல்லப் பாராட்ட, அபிமன்யு அவளை நோக்கி , “நீயும் எங்கூட வர்றியா “நிசப்திமா?”…. நீ வந்தா எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்” என்று இளகிய குரலில் , வித்தியாசமாக “நிசப்திமா” என்று அழைத்த வண்ணம் கூற, அவள் அவ்வழைப்பில் கரைந்து தான் போனாள்.

ஆயினும் அவனுடன் செல்வதற்கு அவளது மனம் ஏனோ முரண்டியது. முடியாது என்று அவனது முகத்துக்கு நேராய் சொல்லவும் அவளால் முடியவில்லை.
வீட்டில் தந்தையும், பாலாவும் சம்மதிப்பார்களா? என்று உள்ளுக்குள் சந்தேகம் வேறு தோன்றிற்று.
அவளது மௌனம், அவளது சம்மதமின்மையைத் தெரிவிக்க, அவள் எதிர்பாராத நேரத்தில் அவளது பஞ்சன்ன கையை மெல்ல பற்றி, “ப்ளீஸ் முடியாதுனு மட்டும் சொல்லிடாதேமா… காலையில போனா… ஈவ்னிங் வந்துடலாம்… நானே வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்றேன்”என்று மனம் உருக்கும் குரலில் கூறினான் .
ஆனால் நிசப்தியா அப்பொழுதும் மௌனமாகவே இருப்பதைக் கண்டு, அப்படியே விட்டு விடாமல், இறுதியாக, “என் மேல நம்பிக்கையில்லயா நிசப்தி?”என்று அபி ஒரு வார்த்தை கூற, அவள் விழிகள் சட்டென அவன் முகம் நோக்கித் திரும்பியது.

என்ன கேள்வி கேட்டு விட்டான் ? அவன் மேல் நம்பிக்கையில்லாவிட்டால் இன்று இவ்வளவு தூரம் அவனைப் பார்க்க அவள் வந்திருப்பாளா?
அவள் பதில் கூறு முன்னர், அவன் ஆர்டர் செய்த எஸ்ப்ரஸோ வந்து விட, அதை எடுத்து அவளிடம் நீட்டியவனை நோக்கிய நிசப்தி, “தேங்ஸ் அபிலாஷ்”என்ற படி பெற்றுக் கொண்டு , விட்டு “ஓகே அபிலாஷ்… நா உங்க கூட வரேன்.. நாளைக்கு ரெண்டு பேருமே போலாம்”என்றாள்.
அவனது காரிருள் மறைத்த முழுமதி போன்று இத்தனை நேரமும் இருண்டிருந்த முகம், அவள் தானும் வருகிறேன் என்றதும், கார் மேகம் அகன்ற முழுமதி போல பிரகாசித்தது.
சீரான முன் வரிசைப் பற்களை மட்டும் காட்டி இலேசாக புன்னகைத்துக் கொண்டே, “தேங்ஸ் நிசப்தி”என்றான்.

எஸ்ப்ரஸோவை பருகி விட்டு அங்கிருந்து சென்றவளுக்குள்ளே ஒரே யோசனை. மீண்டும் தன் வீட்டில் அவனுக்காக, அவனுடன் செல்வதற்காக, தந்தையிடம் பொய் சொல்ல வேண்டிய நிலை.
உண்மையைக் கூறியே அனுமதி கேட்கலாமா? அப்படி கேட்டால் அனுமதி கிடைக்குமா என்ன? வழி நெடுகிலும் அவளுக்கு ஒரே யோசனையாகவே இருந்தது.

வீட்டுக்கு வந்த போது தந்தை வீட்டில் தான் இருக்கிறாள் என்பதை புலப்படுத்தும் முகமாக, அவருடைய அலுவலக அறையில், போடப்பட்டிருந்த மின்விசிறி காரணமாக, அவ்வறையின் திரைச்சீலை காற்றில் அசைந்தாடிக் கொண்டிருப்பதிலேயே புரிந்தது.
இப்பொழுதே போய்க் கேட்டால் என்ன என்று அவள் மனதுக்குத் தோன்ற, அவளும் அதற்கு இசைந்து, முதலில் தன்னறைக்குச் சென்று உடைகளைக் களைந்தாள்.
வீட்டிற்கென்றிருக்கும் ஓர் சாதாராண டொப் ஒன்றையும், பாட்டம் ஒன்றையும் அணிந்து கொண்டவள், உள்ளுக்குள் ஏதேதோ எண்ணிய படியே, சமையலறையினுள் நுழைந்தவள் , தன்னருமைத் தந்தைக்காக காபி போட ஆரம்பித்தாள்.

சமையலறையில் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த தாய், உலகத்தில் எட்டாவது அதிசயமாக தன் மகள் சமையலறைக்குள் வந்து காபி போடுவதைக் கண்டதும், ஆச்சர்யத்துடன், “என்ன இன்னைக்கு மகாராணியம்மா.. இந்தப் பக்கம் வந்திருக்கீங்க?”என்று கேலியாய் கேட்க, அவள் மறுவார்த்தை பேசாமல், மௌனமாக சிரித்துக் கொண்டே, காபி போடுவதிலேயே குறியாக இருந்தாள்.
காபியை முழுதாகப் போட்டு முடித்து விட்டு, தந்தைக்கென்றே இருக்கும் பிரத்தியேகமான குவளையில் அதை ஊற்றியெடுத்துக் கொண்டு, திரும்பிய மகளையே ஆச்சரியமாகப் பார்த்த தாயை நோக்கி, “வெங்காயம் என்ன என் முகத்திலயா இருக்கு? .. வெங்காயத்த பார்த்து வெட்டுமா…. அப்புறம் கை வெட்டிக்கப் போகுது”என்று புன்னகைத்துக் கொண்டே, மொழிந்து விட்டு சென்ற மகளை விழி விரியப் பார்த்தார் தாய் .
தந்தையின் அறைப்பக்கம் விரைந்த போது இலேசாக அவளுக்கு கை நடுங்கவாரம்பித்தது. தந்தையிடம் அவளுக்கு சென்று பொய் கூறி அனுமதி கேட்கவே பயமாக இருந்தது.
நீதிமன்றத்தில் எதிர்த் தரப்பு வாதியின் பொய்யையே கண்டு பிடித்து, அக்கு வேறாய் ஆணி வேறாய் பெயர்த்து வாதாடுபவர், தன் மகளின் பொய்யையா கண்டு பிடிக்காமல் போய் விடுவார்?
ஆழ மூச்செடுத்து வெளியேற்றிக் கொண்டே, அறைக்குள், “எக்ஸ்கியூஸ் மீ பா”என்ற வண்ணம் அனுமதி கேட்டு, உள் நுழைந்த மகளைப் பாராமேலேயே, மடிகணனியில் ஏதோ செய்து கொண்டிருந்த தந்தை, “என்ன?”என்று கேட்க, மகளும் தொண்டையில் அடைத்ததை விழுங்கிக் கொண்டு, தைரியத்துடன், “காபி பா”என்ற படி, அதை வழமையாக வைக்கும் இடத்தில் வைத்தாள்.
மடிகணனியில் தாளமிட்ட, கைகளின் அசைவை நிறுத்தி, பார்வையை மகள் மேல் செலுத்திய தந்தை, “நா கேட்கவேயில்லையே….”என்ற படி, மகளை ஆழ ஊடுருவி நோக்கினார்.

மகள் கேட்காததையெல்லாம் உவந்து செய்கிறாள் என்றால், தன்னால் ஆக வேண்டிய ஏதோவொரு காரியம் இருக்கிறது என்று புரிபட, நெற்றியை இலேசாக சொறிந்து கொண்டே, “என்ன விஷயம்?”என்று கேட்க, இது தான் சந்தர்ப்பம் என்று தான் ஏற்கனவே உருவாக்கியிருந்த பொய்யை அவிழ்த்து விடத் தொடங்கினாள்.

அந்த மின்விசிறியின் சுழல்க்காற்றிலும் வியர்த்திருந்த தன் நெற்றியை, தந்தைப் பார்ப்பதால் துடைக்க சங்கடப்பட்டுக் கொண்டே, “என்… னோட.. ப்ரொஃபஸர் தெரியும்ல பா…?பாலிடிகல் ஸயின்ஸ் ஸ்பெஷலிஸ்ட்…. ப்ரொஃபஸர் மூர்த்தி…”என்று தந்தைக்கு தன் பேராசிரியரை நினைவுறுத்த, அவரும் சட்டென நினைவு படுத்திக் கொண்டு, “ஆமா… மூர்த்தி சாருக்கு.. இப்போ என்ன?” என்று கேட்டார்.

தந்தை இவ்வாறு கூறவும் முகத்தை, சோகமாய் வைத்துக் கொண்டு,நிசப்தி “அது…. அதுவாப்பா… அவரு…. செத்துட்டாருப்பா” என்று நன்றாக இருக்கும் பேராசிரியர் மூர்த்தியை இறந்தவர் பட்டியலில் சேர்த்தாள்.

தன் மூக்குக் கண்ணாடியை கழற்றியவர், நாடியை தடவிய வண்ணம், “ஓ ஐ சீ” என்று பேராசிரியருக்காக துக்கம் அனுஷ்டிக்க, அவளும் “அதனால நாளைக்கு காலையில கொழும்புக்கு போலாம்னு இருக்கேன்… ஃபியூனரல்ல கலந்துக்கலாம்னு இருக்கேன்”என்று மறைமுகமாக செல்வதற்கு அனுமதி வேண்டினாள் மகள்.

இதைக் கேட்டதும் தந்தை, “அப்படியா? யாரோட போகப் போற? எதுல போகப் போற நிசப்தி ?” என்று கேட்டு, மகளின் நலங்கருதி அனைத்தையும் விசாரிக்கத் தலைப்பட்டார்.
ஆனால் மகளோ யாருடன் போகப் போகிறாய் என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், இரண்டாவது கே‌ட்ட, எதில் போகப் போகிறாய்? என்பதற்கு பதிலிறுத்தாள்.

“பஸ்ல தான்பா”என்று கூறிய மகளை நோக்கிய தந்தை, மறுபடியும் தான் முதல் கேட்ட கேள்வியையே கேட்டார்.
“சரிமா… யாரோட போகப் போற?” என்று இரண்டாவது முறையாகவும் அதே கேள்வியைக் கேட்க, நிசப்தியா திருதிருவென விழிக்க ஆரம்பித்தாள்.
எல்லாவற்றிற்கும் தயாராகி வந்தவள் இது பற்றி யோசித்திருக்கவில்லை. என்ன சொல்லலாம் என்று அடிக்கொருதரம் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி சிந்தித்தவள், பிறகு சமாளித்துக் கொண்டு, “அபி…. அபிலாஷினினு ஒரு ஃப்ரண்டுப்பா…. அடுத்த ஊர்ல இருக்காப்பா…அவ…ளோட தான் போகப் போறேன்” என்று அபிலாஷை, அபிலாஷினி என்று பெண் நண்பியாக்கிக் கண் சிமிட்டுவதை நிறுத்தாமல் கூறிக் கொண்டே செல்ல, தந்தை அவள்க் கண்களையேப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார்.

ஒருவர் பேசும் போது கண் சிமிட்டினால், அவர் பொய் சொல்கிறார் என்பது கூடவா அவருக்கு தெரியாது. தந்தை சரியாகக் கண்டு பிடித்தது மட்டுமல்லாமல், அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் .
குற்றமுள்ள நெஞ்சாயிற்றே. எனவே குறுகுறுத்தது. தந்தையின் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்க அவளால் முடியாமல் போகவே, “ஸாரிப்பா.. ப்ரொஃபஸர் மூர்த்தி ஒண்ணும் சாகல…?”என்று குற்ற உணர்வு பொதிந்த குரலில் தொடங்கியவள், அவள் அபிலாஷ் எனும் நல்ல நண்பனின் தாயின் நினைவு தினத்துக்கு செல்லவிருப்பது வரை கூறினாள்.

ஆயினும் அவள் அபிலாஷை தான் வீட்டுக்கு அழைத்து வந்தது பற்றியோ, நேற்று நரிமலைக்காட்டுக்குச் சென்றது பற்றியோ ஒரு வார்த்தை விடவில்லை.
தந்தையின் முகமோ யோசனை பாவத்தைக் காட்ட, அவள் மனமோ திக்திக் என்று அடித்துக் கொண்டது.
அந்தப் பையனுக்காக மகள் பொய் சொல்லுமளவு சென்றிருக்கிறாள்.அதுவும் அவனுடன் தைரியத்துடன் தனியாக செல்லுமளவுக்கு.
தன்னெதிரே நின்று கொண்டிருந்த மகளை நிமிர்ந்து நோக்கியவர், “அந்தப் பையன் மேல அவ்வளவு நம்பிக்கையாமா?” என்று மட்டும் தான் கேட்டார். அவளும் மௌனமாய் ஆமாம் என்பது போல் தலையாட்டவே, “சரிம்மா.. நீ அப்பாக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து சொன்னேல்ல… அதுக்கு நானும் மதிப்பு தரணும்… சரி போய்ட்டு வா”என்று தந்தை அவள் எதிர் பார்த்திராத நேரம், அனுமதி தர, நிசப்தி சந்தோஷத்தில் தன் தந்தையை நோக்கி, “தேங்ஸ்பா” என்றாள் முத்துப் பற்கள் பளீரிட சிரித்துக் கொண்டே .
திரும்பி செல்ல முற்பட்ட மகளை அழைத்தவர், “நீ பஸ்ல எல்லாம் போகத் தேவையில்ல… என் கார எடுத்துட்டுப் போ…. பட் வன் கன்டிஷன்… ஈவ்னிங் ஃபைவ்க்கு முதல் நீ வீட்ல இருக்கணும்…. என்ன ஒகேயா?”என்று தந்தை சற்றே கறார்க் குரலில் கேட்க, அவளும் கார் கிடைக்கப் போகின்றது என்ற சந்தோஷத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, வெளியே மௌனமாய்த் தலையாட்டினாள்.

தந்தையின் அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு உள்ளே ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. அதே நேரத்தில் இன்னொரு பக்கம் குற்ற உணர்வாகவும் இருந்தது.

நம்பிக்கையுடன் போய் வா என்று சொன்ன தந்தையிடம் இதற்கு முன்பு உண்மையைக் கூறாமல் விட்டு விட்டோமே என்று தோன்றியது அவளுக்கு.
தந்தை தன்னை நம்பி அவர்க் காரை எடுத்துப் போ என்ற ஒரே காரணத்துக்காக,தந்தை கூறியது போலவே மாலை ஐந்து மணிக்கு முன்னர் தம்பதிவனத்தில் இருக்க முடிவு செய்தாள் நிசப்தி.
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

மறுநாள்க் காலை நிசப்தி, அவனிருக்கும் ஹோட்டல் வளாகத்தின் முன்பாக, தன் காரை தரித்து விட்டு, காரின் மீதே ஒயிலாக சாய்ந்து கொண்டு, அவன் வருகைக்காக காத்திருக்கலானாள் .
அவள் வந்திருப்பது அறிந்து அவளை நோக்கி வந்தவனின் முகத்தில், என்றுமேயில்லாதவாறு சோகம் குடி கொண்டிருந்தது. அதை பார்க்கும் பொழுது அவளுக்கும் கவலைத் தொற்றிக் கொண்டது.
அவளருகே வந்தவன், “சரி வா நிசப்தி… பஸ்ஸூக்கு டைமாச்சு”என்று இரங்கிய குரலிலேயே அவளை அழைக்க, அவள் ஆச்சர்யம் தாளாமல் விழித்தாள்.

என்ன பேருந்தில் செல்வதா? அவள், அவளது காரில் ஒயிலாக சாய்ந்து கொண்டிருப்பதை அவன் கவனிக்கவில்லை போலும். கவனித்திருந்தால், இவ்வாறு கூறியிருக்க மாட்டான். பிற நாட்களாய் இருந்தால், கவனித்திருந்திருப்பான். இன்று தான் அவள் சோகக் கடலில் மூழ்கி விட்டானே?என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டாள் நிசப்தியா.
“பஸ் எல்லாம் தேவையில்ல அபிலாஷ்”என்று புன்னகைத்துக் கொண்டே கூற, அவன் குழம்பியவனாய், அப்படியானால் அவள் தன்னுடன் வரவில்லையா? என்று எண்ணிய படியே அவளைப் பார்த்தான்.

“பஸ் எல்லாம் தேவையில்ல அபிலாஷ்.. நாம கார்லயே போகலாம்”என்று நிசப்தி தன் பின்னேயிருந்த காரைக் கண்களாலேயே காட்டிக் கூற, அப்பொழுது தான் அபிமன்யு அவளது காரைப் பார்த்தான்.
அவன் முகம் சற்றே சற்று மலர்ந்தது. “சரி வா நிசப்தி கெளம்பலாம்”என்று அவன் திரும்பவும் இறுகிய முகத்துடன் கூற, அவளும் அதனைக் காண சங்கடப்பட்டுக் கொண்டே, வண்டியில் அவனுடன் ஏறினாள்.

கொழும்பு போய் சேரும் வரை அபிலாஷ் வாய் திறக்கவேயில்லை.
அவன் நிலைமையைப் பார்த்த போது, அவளுக்குமே இலேசாகக் கண்ணைக் கரித்தது. எவ்வளவு நன்றாக கவனிக்கும் தாயாய் அவன் தாய் இருந்திருந்திருக்க வேண்டும். இறந்த பின்னும் அவன் நினைவுகளுடன் வாழும் தாய்.
அது போல தாய்க் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அவர்கள் கிளம்பும் போது அதிகாலை ஏழு மணி. கொழும்பை வந்தடைந்த போது முற்பகல் பத்தைத் தாண்டியிருந்தது.

இலங்கையில் மிகவும் பிரசித்தமான மையவாடி தான் “பொரெள்ளை” பொது மையவாடி.
அங்கே பிரதானமாக கிறிஸ்தவர்கள் தான் அடக்கம் செய்யப்படுபவர்களாக இருந்தாலும், பிற மதத்தினரும் அங்கு அடக்கம் செய்யப்படுவதுண்டு. பௌத்தர்களுக்கு வேறாகவும், ஹிந்துக்களுக்கு வேறாகவும் அங்கே இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

அந்தப் பிரதான மையவாடியில் தான் மிகப் பெரும் எழுத்தாளரான “ஆர்தர். சீ.கிளார்க்” அவர்களும் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
அவ்விடம் பார்ப்பதற்கே இரம்மியமாய் காட்சியளிக்கும். அங்கு அடக்கம் செய்யப்பட்ட ஆத்மாக்கள் எல்லாம் அமைதியுடன் உறங்குவது போன்ற ஓர் பிரம்மையை நம்முள் அச்சூழல் தோற்றுவிக்கும்.

பக்கத்தில் தளைத்தோங்கி வளர்ந்திருந்த வாகை மரத்தின் பூக்கள், மே மாதமாகையால் தன்னுடைய ஆரஞ்சு நிற பூக்களைப் பூக்கச்செய்திருந்ததன. உதிர்ந்த பூக்கள், தரையில் வெல்வட்டில் சிவப்புக் கம்பளத்தை விரித்தாற் போல அழகாகக் காட்சியளித்தது.
தூரத்தில் தெரிந்த “கொட்டாங்காய்” எனப்படும் ஒரு வகை மரத்தில் இருந்து இரட்டை வால்க் குருவிகள் அமைதியாய் வந்து மௌன அஞ்சலி செலுத்துபவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன.
அம்மரத்தின் உச்சியில் வௌவால்கள், தலை கீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.

தன் காரைத் தரித்து விட்டு, அவனைப் பின் தொடர்ந்தாள் நிசப்தி. வெளியில் விற்பன்னர்களிடம் மலர்ச் செண்டு வாங்கிக் கொள்ளவும் அவள் தவறவில்லை.

மௌனமாய் தன் தாய் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த சமாதியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அபிமன்யு.

தாயின் சமாதியைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, ஒரு கட்டத்தின் மேல் முடியாமல் போகவே அப்படியே அங்கேயே கால்கள் வலுவிழக்க, முழங்காலிட்டு அமர்ந்து கொண்டவனின் கண்கள் வெகுவாகக் கலங்கியிருந்தன.
கையோடு எடுத்து வந்திருந்த மலர்ச் செண்டை சமாதி மேல் வைத்து விட்டு சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தவளுக்குமே, அவனது செய்கை உள்ளூற வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

தன் முன்னே முழங்காலில் விழுந்து கிடப்பவனின் தோளை, பின்னேயிருந்து பற்றிய நிசப்தி, “அபிலாஷ்”என்றாள் தானும் கலங்கிப் போன குரலில்.
அவனுடைய சோகம் கதிர் வீச்சு போல அவளையும் தாக்கியது. அவனது மௌனம் கூட அவள் உள் நெஞ்சில் சிறிய வலியை ஏற்படுத்தியது.

அவளுடைய கையினை தான் இருந்த நிலையிலேயே நின்று, அபிமன்யு தன் கரம் கொண்டு அழுந்தப் பற்றிக் கொண்டான்.
நேரம் போய்க் கொண்டேயிருந்தது. அவளும், அவனும் மௌனமாகவே நிமிடத்தைக் கடத்தினர்.
அவனது தோள் மேல் இருந்த அவளுடைய கையைப் பற்றியவன், இறுதி வரை விடவேயில்லை.

தனக்கிருக்கும் ஒரே சொந்தம் நீ தான் என்றும், தன்னை விட்டும் எப்பொழுதும் அகலாதே என்றும் உள்ளே, மானசீகமாக எண்ணிக் கொண்டு, அவள்க் கைகளையேப் பற்றிக் கொண்டிருந்தான் அபிமன்யு.
அவன் திரும்பி அவளை அண்ணாந்து பார்த்த போது தான் அவன் மௌனமாய் அழுது கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது.
தன்னையறியாமலேயே அவனது கண்ணீரை அவளது கைக் குட்டைத் துடைத்து விட்டது.
மெல்ல எழுந்தவன் அவளை நோக்கி, முதன் முறையாக வாய் திறந்தான்.

“என் மனசுக்குள்ள… எவ்வளவு பெரிய சோகம் அடைஞ்சிருக்குனு… உனக்கு தெரியுமா நிசப்திமா…. சுமித்ரா… மை பெஸ்ட் ஃப்ரண்ட் ராகேஷ்…. என்னோட அப்பானு… எல்லாருமே என்ன ஏமாத்திட்டாங்க தெரியுமா?”என்று அவன் உடைந்து போன குரலில் கூறிய போது, நிசப்திக்கு அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.
அந்த கணம் அவன் தாயின் சமாதியை நோக்கி, உயரமான வாட்டசாட்டமான, ஐம்பது வயது மதிக்கத்தக்க, கோர்ட், சூட் அணிந்த ஒரு பெரியவரும், கூடவே அவர் பின்னால் வயோதிபப் பெண்மணியும், கையில் பூமாலையுடன் வந்து கொண்டிருந்ததை, முதலிலேயே கண்டு கொண்ட நிசப்திக்கு, அவர்கள் யாரென்று தான் அடையாளம் தெரியவில்லை.
நிசப்தியா தன்னுருக்கமான பேச்சைக் கவனியாமல், குழப்பத்துடன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபிமன்யுவும் அவள் நோக்கிய பக்கமே நோக்க, அதற்குள் அந்த வயோதிப ஜோடி , சமாதியை வந்தடைந்திருந்தனர்.

அபிமன்யுவைக் கண்டதும் பெரியவரின் இருண்டு தளர்ந்திருந்த முகம் பூவாய் மலர்ந்தது. ஆனால் அபிமன்யுவின் முகமோ அதற்கு நேர் மாற்றமாக எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
நடுவில் நிசப்தியாவோ என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அந்தப் பெரியவரோ மிகப் பெரும் ஏக்கத்துடன் உருக்கமான குரலில் “அபி… “ என்று அழைத்ததும் தான் தாமதம், அபிமன்யுவோ, சட்டென அவள்க் கைகளை விட்டு விட்டு, “வா நிசப்தி” என்று அவசரமாக மொழிந்து விட்டு, விடு விடு என்று வேக நடை நடந்து, அவ்விடத்தை விட்டே சென்று விட்டான்.
அவளோ ஏதும் பேசாமல்,தன்னை விட்டும் நிமிடத்தில் சென்றவனின் புற முதுகையே பார்த்த படி “அபிலாஷ்… அபிலாஷ்”என்று இரண்டெட்டு முன்னே அடி வைத்து கத்த, அவன் திரும்பிப் பாராமல் சென்று கொண்டேயிருப்பதைக் கண்டவள், தானும் அவ்விடத்தை விட்டு நகர, ஒரு அடி எடித்து வைத்தவள், பெரியவரின் குரல் கேட்டதும், அப்படியே நின்றாள்.
“நில்லுமா”என்று அப்பெரியவர் கூற, நிசப்தி அந்தப் பெரியவரின் வயதுக்கு மரியாதை கொடுத்து அப்படியே நின்றாள்.
தன்னை நிறுத்தியது இலங்கையின் முதல் தர “சிம் நெட்வர்க்” கம்பனியான “எயார் மொபைல்” நிறுவனத்தின் ஸ்தாபகர் என்று தெரிந்திருந்தால் நிசப்தி தலைசுற்றியே விழுந்திருப்பாள்.
ஆனால் அவர், மகனை இந்தப் பெண் அபிலாஷ் என்று அழைத்ததிலிருந்து, மகன் தான் யாரென்று அப்பெண்ணிடம் கூறாமல் மறைத்திருக்கிறான் என்பது புரிய அவர் யாரென்றோ? அபி யாரென்றோ கூறாமல் அபிலாஷின் தந்தை என்ற அடிப்படையிலேயே அவருடன் பேசவாரம்பித்தார்.
அவனோ திரும்பிப் போய் கோபத்துடன் வண்டியில் அமர்ந்தான். பின்னாலேயே அவள் வருகிறாள் என்று நினைத்துக் கொண்டு சிறிது நேரம் வண்டியிலேயே அமர்ந்திருந்தவன், அவள் வராததால் கண்ணாடி வழியாக தலையை மாத்திரம் குனித்து அவளை நோக்கினான்.
அவளுடன் தந்தை கதைத்துக் கொண்டிருப்பதையும், அவளோ தரை பார்த்து குனிந்து கொண்டிருப்பதையும் கண்டான் அபி.

தந்தையைக் காணும் போது கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. அப்படியே அவர் அவளுடன் என்ன பேசியிருக்கக் கூடும் என்று மனம் சென்றது.
அவன் யாரென்று அவளுக்கு கூறியிருக்கக் கூடுமோ? இல்லாவிடில் வேறு என்ன கூறியிருக்கக் கூடும் என்று எண்ணியவனுக்கு மனம் திக்திக் என்றது. அவளை தன்னுடன் பழக வேண்டாம் என்று எச்சரிக்கிறாரோ? அப்படித்தான் தோன்றியது அவனுக்கு .
காரை விட்டு இறங்கி, அவளை அவரிடமிருந்து அழைத்து வரும் நோக்கில், அவளை நோக்கி அவன் நடக்கவாரம்பித்த போது, நிசப்தி பேசி முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருப்பது புரிந்தது.
அவள் முகத்தைக் கவனித்தவனுக்கு, அதில் எவ்வித சஞ்சலமும் தென்படவில்லை. அப்படியானால் அவள் நடந்ததை மறைக்கப் பார்க்கிறாள். அவள் அவனிடமிருந்து தந்தை தன்னை திட்டியதை அதனால் ஏற்பட்ட வலியை மறைக்கப் பார்க்கிறாள் என்றே தோன்றிற்று.
அவன் அருகில் வந்தவள், அவன் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “என்ன அபிலாஷ்? போய் வண்டியில ஏறுங்க?”என்றாள் சாந்தமான குரலில்.
என்ன சொன்னாள்? அபிலாஷா? அப்படியானால் தன் மகன் அபிலாஷ் அல்ல அபிமன்யு என்று நிசப்தியிடம் கூறவில்லையா? அன்றேல் அவள் அபிலாஷ் என்று அழைத்ததை அவரது வயதான மூளைக்கு கிரகிக்க முடியவில்லையா?
அது அறியாமல் “அபி அபி”என்று கூப்பிட்ட பழக்க தோஷத்திலேயே இவளுடன் கதைத்திருப்பார் போலும் என்று எண்ணிக் கொண்டான் அபிமன்யு.
நிசப்தியா, அவன் மரம் போல நின்று கொண்டிருப்பதைக் கண்டு, மறுபடியும் ஒரு முறை வண்டியில் ஏறுமாறு பணித்தாள்.
அவனும் அவளே கூறுவாள் என்ற நம்பிக்கையில் ஏதும் பேசாமல் வண்டியில் ஏற, நிசப்தியாவும் வண்டியைக் கிளப்பினாள்.
அவர் உங்கள் தந்தையா? நீங்கள் கூறவேயில்லையே? அவர் சொன்னார் தெரியுமா? என்று பலதும், பத்தும் கேட்பாள் என்று எதிர் பார்த்து ஏமாந்து தான் போனான் அபிமன்யு.
அவளாகவே சொல்லும் வரை பொறுமையில்லாதவனாய் அவன், “என்ன சொன்னாரு அந்த ஆளு?”என்று அங்கு நிலவிய அமைதியை உடைத்த வண்ணம், பற்களைக் கடித்துக் கொண்டு, கோபத் தொனியில் கேட்டான்.

பிறகு தொடர்ந்து, “என்னோட பழகுறத நிறுத்துனு சொல்லியிருப்பாரு…. நீ ஆசைப்படுறது கிடைக்காதுனு சொல்லியிருப்பாரு”என்று தந்தையை அந்தாள், இந்தாள் என்று தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல், சொல்லாதை எல்லாம் சொன்னதாக என்னமா கற்பனை பண்ணுகிறான்? என்று எண்ணினாள் நிசப்தியா.
காரை ஓட்டிக் கொண்டே அவன் பக்கமாய் திரும்பி, “அபிலாஷ்… நீங்க டப்பிங் ஆர்டிஸ்டா?”என்று அரு புருவங்களை சுருக்கிய வண்ணம் கேட்டாள் நிசப்தி.
பின்னே தூரத்தில் நடந்த உரையாடலை, எப்படி அவ்வளவு பிழையாக அனுமாதித்தது மட்டுமல்லாமல் , இப்படி கற்பனை வேறு செய்து கூறுகிறானே என்றது மனம்.

ஆனால் அவனோ முகத்தில் குழப்பம் தெளியாமல், “ஏன் அப்படி கேட்குற நிசப்தி?”என்று கேட்க, அவளும் “இல்ல தூரத்துல நடந்தத கிட்ட இருந்து பார்த்த மாதிரி பில்டப் பண்றீங்களே அதான் கேட்டேன்”என்று கூறியவள் மேலும் அவனை குழப்பி விட்ட படி வண்டியை ஓட்டினாள்.
அவன் கண்கள் யோசனையில் சுருங்கியது அப்படியானால் அவர் தான் எண்ணியதைக் கூறவில்லையா? தந்தை அப்படி என்ன தான் கூறினார்? இவன் தான் அபிமன்யு என்று கூறவில்லை. அவளைப் பழக வேண்டாம் என்றும் கூறவில்லை. வேறு என்ன தான் கூறியிருப்பார்? அவனுக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும் என்பது போல் இருந்தது.

இம்முறை அவன் கேட்ட போது, அவன் குரல் தணிந்திருந்தது மட்டுமல்லாமல் கெஞ்சுவது போலவும் இருந்தது.
“ப்ளீஸ் நிசப்தி… அப்படி அவரு உன்கிட்ட என்ன தான் சொன்னாரு.. சொல்லேன்.. ப்ளீஸ்”என்று கெஞ்சிய படி கேட்க, அவள் மனம் சட்டென இளகியது.
ஆனால் அவள் ஒன்றும் நேரடியாக கூறி விடவில்லை. மாறாக சுற்றி வளைத்தே கூறினாள்.

“நா சொல்றத நம்புவீங்களா “அபி”” என்று இறுதியில் அவன் பெயரை முடிக்காமல் பாதியில் விட்டவள், அன்று அவள் முதன் முறையாக அவன் பெயரைப் பாதியாய் சுருக்கியதற்கு அவன் முகம் சுருங்கியது நினைவு வந்து, அவசரமாக “லாஷ்”என்று மீதியையும் சேர்த்துக் கொண்டாள்.
அனைவர் மத்தியிலும் “அபி… அபி”என்று அழைத்து, அதில் சில புத்திசாலிகள் , தாடியை எடுத்து விட்ட அவன் உருவத்தோடு, அபியையும் ஒப்பிட்டுப் பார்த்து, அவன் தான் ஓடி ஒளியும் கிரிக்கெட் வீரர் என்று கண்டு பிடித்து விட்டால்? என்று தோன்றவே தான் அன்று அவள் முதன் முறையாக “அபி”என்ற போது அவன் முகம் மாறியது.
இப்பொழுது தான் அவள் அவனில் பாதியாயிற்றே. எனவே பெயர் பாதியெல்லாம் கணக்கில் எடுக்காது, “பரவாயில்லை அபி ன்னே கூப்பிடு”என்று கூற, அவள் முகத்தில் மென்னகை பூத்தது. அவனும் அவள் கேட்ட கேள்விக்கு, “ஆமா நீ என்ன சொன்னாலும் நம்புவேன் நிசப்தி ”என்று கூறி, அவளை விடயத்தைச் சொல்லுமாறு உந்தினான்.
ஆனால் அவள் சொல்லவில்லை. இடையில் பாதையோரமாய் வண்டியை நிறுத்தி, சாப்பிட உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றாள்.
ஆர்டர் கொடுத்த உணவு வந்தும் சாப்பிடாமல், கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு, அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான் அவன்.
அவளோ சாப்பிடத் தொடங்கினாள். இடையில் நிமிர்ந்து பார்த்த போது , அவன் சாப்பிடாமல் இருப்பது புரிய, “சாப்பிடலையா அபி?” என்று கேட்டாள் நிசப்தி. எப்படி சாப்பிட முடியும்? அவனுக்கு தந்தை என்ன சொன்னார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றே ஒரே நோக்கமாக இருந்தது.
இந்த விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலினால், அபிமன்யுவுக்கு தன் தாயின் நினைவு அந்நொடி மறந்திருந்தது என்பது தான் உண்மை.
ஆயினும் அவள் சாப்பிடுவதை குறுக்கிட்டு பேசி தடுக்கவும் மனமற்று வாளாவிருந்தான் அபிமன்யு.
அவளோ, அவனை நோக்கி “நீங்க சாப்பிட்டா தான் அது என்ன விஷயம்னு சொல்வேன்”என்று கூற, அவனும் அந்த விடயத்தை அறிந்து கொள்வதற்காக வேண்டி, அடுத்த கணமே சாப்பிட ஆயத்தமானான்.
அவன் அவள் கூறிய படி சாப்பிட்டு முடித்தால் நிச்சயம் விடயத்தைக் கூறுவாள் என்ற நம்பிக்கையில் சாப்பிட்டு முடித்தான் அபிமன்யு.

அவனுக்கு சாப்பிடும் பொழுதும், தந்தை அப்படி என்ன கூறியிருக்கக் கூடும் என்பதிலேயே நினைவு சென்றது.
ஒரு வேளை “நீ தான் என் மருமகள்”என்று விட்டாரோ? ச்சேச்சே அப்படியிருக்கவே முடியாது. கை கழுவி விட்டு கட்டணத்தை செலுத்திய அபி, நிசப்தியா காரை நோக்கி நடப்பதைக் கண்டு அவனும் நடந்தான்.

இந்தப் பெண்களுக்கு ஒரு விடயம் இரகசியமாய்ச் சொன்னால் கூட, அதனை இன்னொருவருக்கு சொல்லாமல் உறங்க மாட்டார்கள். ஆயினும் இவள் தன்னை இவ்வளவு நேரமாய் அலைக்கழிக்கிறாளே என்று அலுத்துக் கொண்டான் அபிமன்யு. கூடவே கொஞ்சம் கோபமும் எட்டிப்பார்த்தது அவனுக்கு.
அதன் பிறகு எதுவானாலும் அவளே சொல்லட்டும் என்று அவன் வாளாவிருந்ந சமயம், நிசப்திக்கு உள்ளே அவனை ரொம்பவே அலைக்கழித்து விட்டோமோ என்று தோன்ற அவளாகவே இம்முறை பேசத் தொடங்கினாள்.
“அபி… “என்று அவனது சினந்த முகத்தைப் பார்த்து உள்ளுக்குள் எழுந்த ஆவலை அடக்கிய வண்ணம், “ஒரு மனிஷன்… ஏதாவது ஒரு செயல் செய்றான்னா… அதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்” என்று நிதானமான குரலில் கூற, பொறுமையிழந்த அபி, “ச்ப்…அதுக்கும், அப்பா சொன்னதுக்கும் என்ன சம்மதம் நிசப்திமா?”என்று தணிந்த குரலிலேயே கேட்டான்.
இப்பொழுதேனும் அவரை “அப்பா” என்றானே? என்று இருந்தது நிசப்தியாவுக்கு. அதை விடுத்து அவன் கேட்டதுக்கு பதில் சொல்லவாரம்பித்தாள் அவள்.
“இருக்கு அபிலாஷ்”என்று அவள் கூற, அவன் உன்னிப்பாக கவனிக்கலானான்.
அவன் தன்னை செவிமடுக்கிறான் என்ற உற்சாகத்துடனும், அதே வேளை பாதையில் ஒரு கவனத்துடனும் வண்டியை ஓட்டிக் கொண்டே, பேச ஆயத்தமானாள் நிசப்தியா.

“ஒரு மனிஷன்.. ஒண்ணு சுயநலத்துக்காக செய்வான்… இல்ல தன்ன சுத்தி இருக்கிறவங்க நலத்துக்காக செய்வான்”என்று அவள் கூற, அவனோ இவள் என்ன கூற வருகிறாள்? அதில் உன் தந்தை முதலாவது ரகம் என்கிறாளா? அது தான் தெரிந்த விடயமாயிற்றே.

அவனுக்கு வேண்டியதெல்லாம் தந்தை அவளிடம் என்ன சொன்னார் என்பது தான். ஆயினும் அவன் இடையிட்டு ஏதும் பேசாமல் மௌனமாகவே வந்தான்.

“யோசிச்சு பாருங்க அபிலாஷ்… அவர் சொன்னத வச்சு பார்த்தா.. அவரோட சொத்துக்கு ஏக வாரிசு நீங்க ன்னு புரிது”என்று அவள் கூறிக் கொண்டிருக்க, இடையே புகுந்த மகன், கோபத் தொனியில் “சொத்துக்காக.. அவரோட அநாச்சார்யத்தை எல்லாம் பொறுத்துக்க சொல்றியா?”என்றான் அபிமன்யு.
ஆயினும் அவள் கோபப்படவில்லை. அவள் அன்பு கனியப் பார்க்க, அவனுக்கு மனம் இரங்கியது. அவன் பேச முன் இடையிட்டவள், “அபி நா இன்னும் பேசி முடிக்கல?”என்று கூற அவள் அமைதியானான்.

அவனது அமைதியைப் பயன்படுத்திக் கொண்டு, “யோசிச்சு பாருங்க அபி… அவர்கிட்ட சுயநலம் இருந்திருந்தால்… உங்களுக்காக சொத்து சேர்க்க நினைப்பாரா? …. ஐ மீன்… என் பையன் நல்லா வாழணும்னு நினைப்பாரா? அவர் கிட்ட சுயநலம் இருந்திருந்தா…. அம்மா வயசுல இருக்க ஒரு அம்மாவ கல்யாணம் பண்ணிப்பாரா?”என்று அவள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளாலும் குழம்பிப் போனான் அபிமன்யு.

“அவரு வேணும்னா.. எத்தனையோ அழகான யங் லேடீஸ வச்சிகிட்டு இருக்கலாம்”என்று அவள் கூறியதைக் கேட்கவும், அபிமன்யுவின் உடல் சிலிர்த்தது.
ஆனால் அதைக் கூற அவள் உடல் சிலிர்க்கவில்லை. மனம் வெட்கப்படவில்லை. சொல்ல வேண்டியதை நண்பனுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டாள்.
“இல்ல அதே மாதிரி யங் லேடீஸ் யாராவது ஒருத்திய கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம்… ஆனா அவரு உங்கம்மா வயசுல ஒரு லேடிய… நாகரிகமா சொல்றதா இருந்தா.. தன்னால வாரிசொன்ன தர முடியாத ஒரு அம்மாவொன்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்?”என்று கேட்க, ஏற்கனவே குழம்பிப் போயிருந்த அபிமன்யு இன்னும் குழம்பிப் போனான்.
அவன் குழப்பத்திற்கான விடையறிந்தும் நிசப்தியா வாய் திறக்கவேயில்லை. மாறாக அவள் கூறியதெல்லாம் இவைகளே.
“காரணம் நிச்சயமா இருக்கு அபிலாஷ்.. அத உங்கப்பா சட்டைய உலுக்கி கேட்குறதும், இல்ல கால்ல விழுந்து கெஞ்சி கேட்குறதும் உங்க இஷ்டம்”என்றவள் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை அவனிடமே விட்டு விட்டாள்.
அதன் பிறகு இருவரும் தம்பதிவனம் சென்றடையும் வரை எதுவும் மேற்கொண்டு பேசிக் கொள்ளவில்லை.ரியர் வியூவ் கண்ணாடி வழியாக அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்த நிசப்திக்கு, அவன் யோசிக்கறான் என்பது புரிந்தது.

யோசிக்கட்டும்… அப்பொழுதேனும் அவனைச் சுற்றியுள்ள குழப்ப ரேகைகள் அகலட்டும் என்று எண்ணியபடி, நிசப்தி அமைதியாகவே வந்தாள்.

சாருமதி ஹோட்டல் வந்த போது, நிசப்தி அவனிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொண்டாள்.
“அபி உங்கப்பா நிரபராதி… கடைசியா அபி ஒரு சான்ஸ் கூட தரலையேன்னு ரொம்பவே ஃபீல் பண்ணாரு அபி…. தன்ன சுத்தி இருக்குறவங்க ஏமாத்திட்டாங்க… அதே போல என் அப்பாவும் ஏமாத்திட்டாருனு பார்க்குறீங்களே அபி… இப்பயாச்சும் கண்ணத் திறங்க அபி… திருடனுக்கு கூட இன்னொரு வாய்ப்பு கொடுக்கும் போது அப்பா பாவமில்லையா?” என்று அவள் மென்மையான குரலில் கூற, அவன் ஏதும் பேசாமல் வண்டியை விட்டு இறங்கிச் சென்று விட்டான்.
அவள் வீடு போய் சேர்ந்த போது மணி நான்கரை. மகள் வாக்குறுதியை காப்பாற்றியதை எண்ணி அகமிழ்ந்து போனார் தந்தை.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *