கண்ணாலே மேளம் கொட்டிட்டா
கண்ணாலே மேளம் கொட்டிட்டா – 4
சோமு குனிந்து நின்று கொண்டிருந்ததால் அவனை பார்த்து விட்டாள் சுப்பு. படியில் அமர்ந்திருந்த ராகவ்வை அந்த பெரிய கைப்பிடி சுவர் மறைத்து விட அவளுக்கு அவன் தெரியவில்லை. அவள் குரல் கேட்டவுடன் சிலிர்த்து அடங்கியது ராகவ்வின் உடல் மொத்தமும்.
ராகவ் அவனை விட, நிமிர்ந்த சோமு பக்கத்து மாடி பால்கனியில் நின்ற அவளிடம்,
“படியில் இடிச்சுகிட்டேன் சுப்பு. வேற ஒன்னுமில்லை. இன்னைக்கு என்ன உனக்கு அதிசயமா விடிஞ்சுருச்சு?” என்று பேச்சை மாற்றினான்.
“தூக்கத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தி இருந்தா முன்னாடியே சரி ஆயிருக்கும். நான் தான் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன். இப்போ ரெண்டு நாளா நான் இந்தியா டைமுக்கு ஓக்கே” என்றாள்.
“ஓ! சரி” என்ற சோமு மாடி அறையை திறக்க போக,
“உன் ஜோடி இல்லாம என்ன வேலை உனக்கு இந்த ரூமில்? பிரிக்க முடியாம சுத்துவீங்க ரெண்டு பேரும்! இப்போ ஊருக்கே வர்றதில்லையாமே? உன் பிரண்ட் என்ன தப்பே செய்யாத நல்லவனா? நீ உன் பிரண்டை எதுவும் கேட்க மாட்டியா?” என்றாள் சுப்பு படப்பட பட்டாசாக.
“என் ஜோடியா? ம்ம்…. இருக்கட்டும்…..வேணும்னா நீ கேள்வி கேளு அவனை! என்னை ஏன் சொல்றே?”
“அவனை முதல்ல ஊருக்கு வர சொல்லு, அப்போ நல்லா நறுக்னு அவனுக்கு உறைக்கிற மாதிரி கண்டிப்பா கேட்பேன்!” என்றாள் சீரியஸாக.
“அப்படியா? இந்தா கேளு….” என்று ராகவ் தடுக்க தடுக்க அவன் சட்டையை பிடித்து அவனை மேலே இழுத்தான் சோமு.
ஒரு அளவிற்கு மேல் சமாளிக்க முடியாமல் ராகவ் எழுந்து நிற்க, அவனை கண்டு ஸ்தம்பித்து விட்டாள் சுப்பு. கொஞ்சம் கூட அவனை எதிர்பார்க்காதவள் முகத்தில் திகைப்பு, ஆச்சர்யம், வந்து விட்டானா என்ற ஆசுவாசம், என ஜாலம் காட்டினாள்.இங்கு வந்ததில் இருந்து அவன் முகம் பார்க்க முடியாமல் அவள் தவித்தது அவளுக்கு மட்டுமே தெரியும்! முகம் காட்டும் உணர்வுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் அவள் மனதில் பெரிய போராட்டமே நடந்தது. இப்போதே அவனிடம் ஓடி விடு என்று துடித்தது அவள் மனது. கணங்கள் உறைந்தது போல் அவள் கண்களை அவன் முகத்திலேயே நிலைக்கவிட்டு நின்றாள் சுப்பு.
அவளுக்கு குறையாத உணர்ச்சி கொந்தளிப்பு அவனுக்கும் இருந்தது. ஆனால் அவள் குரல் கேட்ட போதே தவிக்க தொடங்கி இருந்த அவன் மனதை நிலைப்படுத்தி விட்டான் ராகவ். அதனால் எழுந்து நின்று அவளை பார்க்கும் போது எந்த உணர்வும் இன்றி அவளை பார்த்தான் ராகவ்.
அவன் கீழே அமர்ந்து இருக்கும் போது அவள் பேசியதை கேட்டு இருந்தவனுக்கு இப்போது அவளை பார்க்கும் போது சிரிப்பு வந்தது ஆனாலும் அடக்கி கொண்டான் ராகவ்.
இத்தனை வருடம் வராத அவன் வந்ததற்கு முக்கிய காரணம், அவன் பலகாலமாக மனதில் சுமந்து கொண்டு திரியும் ஏக்கத்திற்கு ஒரு முடிவு எடுக்க தான்.
சோமு இவர்களுக்கு தனிமை கொடுத்து கதவை திறந்து கொண்டு எப்போவோ அறைக்குள் சென்றிருந்தான். தெருவில் செல்லும் நாய் ஒன்று விடாமல் குரைக்க அவர்களின் மோனநிலை கலைந்து இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்.
“ஏதோ கேட்கணும் சொல்லிட்டு இருந்தியே என்கிட்ட…. கேளு!” என்றான் ராகவ் கிண்டலாக.
“கேட்பேன், கண்டிப்பா கேட்பேன்…. வரேன் அப்புறமா!”
“வா வா நானும் உன்கிட்ட நிறைய கேட்கணும்!” என்றான்.
“ம்ம்….” என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள். வெகுநாட்கள் கழித்து அவன் மனம் உற்சாகமானது அவனுக்கு நன்றாக தெரிந்தது. அதற்கு காரணமும் தான் அவனுக்கு தெரியுமே. எப்போதும் அவள் இருந்தாலே அவன் உற்சாகமாக மாறி விடுவானே. வாழ்க்கை முழுவதற்கும் இந்த உணர்வு அவனுக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை.
உள்ளே சென்ற அவளும், இப்போது அவன் மனதில் என்ன தான் இருக்கிறது அவளை குறித்து என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றிருந்தாள். அது வரை அவளாக எதையும் உளறி விடாமல் இருக்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டாள்.
உள்ளே சென்றவனிடம்,
“என்ன சொல்லுது மணி குட்டி?” என்றான் கிண்டலாக சோமு.
“நீ சோமேஷா? சிரித்தவன், “பரவாயில்லை டா, பழசை மறக்காம இன்னும் உன் ஆசையை நிறைவேத்த அதே மாதிரி கூப்பிடுறா….” என்றான். மனதினில் அப்போ என் மனசும் நியாபகம் இருக்கும்ல்ல என்று நினைத்தான்.
“அதெல்லாம் மறக்கிற மாதிரியா நாம பழகி இருக்கோம்!” நண்பனின் மனதில் ஓடும் கேள்விக்கும் சேர்த்து சொல்வது போல் பதில் சொன்னான் சோமு.
“ம்ம்….” என்ற ராகவ் களைப்பில் எதையும் எடுத்து கூட வைக்காமல் அப்படியே கட்டிலில் சாய்ந்தான். மனதினுள் அவளை கண்டு, அவளுடன் பேசியது எல்லாம் ஒரு சின்ன நிறைவை தர நன்றாக தூங்கி விட்டான் ராகவ்.
அவன் உறங்கி விட்டான் என்று உணர்ந்த சோமு வீட்டிற்கு கிளம்பினான். கீழே இறங்கி வரும் போது பக்கத்து வீட்டில், கேட்டில் இருந்த பையில் இருந்து பால் பாக்கெட்களை எடுத்து கொண்டு இருந்தாள் சுப்பு.
அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்தே, “பை மணி குட்டி! அப்புறம் பார்ப்போம்” என்று சொல்லி கொண்டே தெருவில் இறங்கி நடந்தான் சோமு.
“இப்படி சொல்லாதே சொல்லி இருக்கேன்ல….” கத்தினாள் சுப்பு பின்னிருந்து.
அவன் திரும்பி பார்த்து சிரிக்கவும், “டேய், சோன்பப்டி இருக்கு டா உனக்கு” என்று இன்னும் கத்தினாள்.
முதன் முதலில் எட்டு வயதில் அமெரிக்காவில் இருந்து ஒன்றும் தெரியாமல் வந்த இந்த பிள்ளையை கண்ட மேனிக்கு கிண்டல் செய்து, அவளுக்கு தமிழில் ஆதியில் இருந்து அடுத்தவரை திட்ட உபயோகப்படுத்தும் கெட்ட வார்த்தை வரை சொல்லி கொடுத்த பெருமை இந்த இரண்டு இளைஞர்களை சாறும்!
முதன் முதலில் அவளை பார்த்ததை நினைத்து சிரித்துக் கொண்டே வீடு நோக்கி போனான் சோமு. அவன் அவளை அழைக்கும் சுப்பிரமணி, மணி குட்டி என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் வரலாற்று காரணம் சுப்புவிற்கு இருக்கும் விலங்குகளின் மீதான பிரியம். நாய், பூனை, பன்னி என்று தெருவில் ஒன்றை விட மாட்டாள்.
அப்போது தான் ஏழாம் வகுப்பு ஆரம்பித்து இருந்தது ராகவ்விற்கும், சோமுவிற்கும். ஜூன் மாத விடுமுறைக்கு அமெரிக்காவில் இருந்து பக்கத்து வீட்டிற்கு வந்திருந்தாள் சுப்புலக்ஷ்மி. அது அவள் அப்பா வழி தாத்தா பாட்டி வீடு. அம்மாவின் ஊர் மதுரை. பக்கத்து தாத்தா பாட்டி வீட்டிற்கு அமெரிக்காவில் இருந்து விருந்தாளி வந்து இருக்கிறார்கள் என்று மட்டும் தெரியும். யார் யார் என்று தெரியாது இவர்களுக்கு.
ஒரு வாரம் செல்ல, பள்ளியில் இருந்து வீடு வந்தவர்கள் மாடியில் இருந்த அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பக்கத்து மாடியில் இருந்து இவர்கள் அறையை ஒட்டி இருந்த இடத்தில் பேச்சு குரல் கேட்டது. இரண்டு மாடிக்கும் கொஞ்சம் ஒரு சந்து அளவு தான் இடைவெளி.
“உன் அம்மா எங்கே? மிஸ் பண்ணிட்டியா? சம் டைம்ஸ் இட் ஹேப்பன்ஸ்…. பராவயில்லை…. நீ சீக்கிரம் வளர்ந்துடுவே, கவலைப்படக் கூடாது! பயப்பட கூடாது! என்ன? நான் இங்க டு மன்த்ஸ் இருப்பேன்…. உன்கூட இருக்கேன்…. சாப்பாடு தரேன்…. என்ன? என்னை பிடிச்சு இருக்கா? நாம இனிமே பிரண்ட்ஸ்? ஓக்கே டோனி?” என்ற குரல் கேட்டது.
ராகவ்விற்கு, ஆங்கிலத்தில் பேசிய அந்த குரல் சொல்வது முழுவதும் புரியாவிட்டாலும் சில வார்த்தைகள் அவனுக்கே சொல்ல பட்டது போல் இருந்தது.
“யார் டா? குரல் குழந்தை மாதிரி இருக்கு! இப்படி ஸ்டைலா இங்கிலீஷ் பேசுறது?” என்ற சோமு,
“ஹலோ, ஹு இஸ் தட் சைட்?” என்று குரல் கொடுத்தான் சோமு.
மெதுவாக கையில் ஒரு நாய்குட்டியோடு எழுந்த உருவத்தை பார்த்து சோமு திகைத்தான் என்றால், அவளின் கண்களில் பொங்கி வழிந்த காருண்யத்தில் ராகவ் மனம் கனிந்தான். அவள் சும்மா பேசவில்லை, அந்த ஜீவனின் மேல் உண்மையான அக்கறையில் தான் பேசி இருக்கிறாள் என்று தெரிந்தது.
சோமு திகைத்ததுக்கு காரணம் குழந்தை என்று இருவரும் நினைத்தது சரி தான். ஆனால் உருவம் தான் மேட்ச் ஆகவில்லை. நன்றாக உருண்டு திரண்டு இருந்தாள் அவள்.
“ஹாய்!” என்றான் ராகவ். அவனாக சென்று ஒரு ஆளிடம் பேசினான் என்றால் அது இன்று வரை சுப்பு மட்டும் தான்.
ராகவ்விற்கு திரும்ப ஹாய் சொல்லாமல் அவனை ஆராயும் விதமாக அவளின் பெரிய கண்களை உருட்டி உருட்டி பார்த்தாள் சுப்பு. அவள் அம்மா அவளிடம் இந்தியாவில் நீ யாரிடமும் உன் இஷ்டத்துக்கு பேச கூடாது என்று சொல்லி இருந்ததால், கொஞ்சம் யோசித்தாள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்ததால் மனதில் இருப்பவற்றை வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கம் உண்டு சுப்புவிற்கு.
அவளின் பார்வையில், அவள் கண்ணை உருட்டும் அழகில் ஏன் என்று தெரியாமலே அவளை மிகவும் பிடித்தது ராகவ்விற்கு. அவளையே சின்ன புன்னகையுடன் பார்த்திருந்தான்.
அவள் அவர்களையே அளவிடுவது போல் பார்க்க, அவள் பேச போவதில்லை என்று புரிந்த ராகவ் அவளிடம்,
“யுவர் டாக்?” என்றான். நிச்சயம் நாயை பற்றி பேசினால் அவள் பேசுவாள் என்று நம்பினான்.
அவன் நம்பியது போலவே, “நோ!” என்றவள், அமெரிக்கன் ஆங்கிலத்தில் கடகடவென்று அந்த நாய்குட்டி பாவம், யாரும் இல்லை, எங்கு இருந்து வந்ததோ தெரியவில்லை. அதன் அம்மா இல்லை என்று பல கதை சொன்னாள்.
நாயை பற்றி பேசுகிறாள் என்று புரிந்ததே தவிர மற்ற எதுவும் இருவருக்கும் புரியவில்லை. முதலில் நாய்க்குட்டியிடம் மெதுவாக பேசியதால் கொஞ்சம் புரிந்தது, இப்போது அவளின் வேகமான வித்தியாசமான உச்சரிப்பில் ஒன்றும் புரியவில்லை.
“சே ஸ்லோலி…” என்றான் ராகவ். ஆங்கில வழி கல்வி தானே, அதனால் அவள் மெதுவாக பேசினால் அவளுடன் பேசி விடலாம் என்று அப்படி சொன்னான்.
அவளும் நிறுத்தி நிறுத்தி மெதுவாக பேசி விஷயத்தை சொன்னாள். அப்போதும் சில உச்சரிப்பு புரிந்து கொள்ள முடியதாதால்,
“யு டோன்ட் நோ தமிழ்?” என்றான் ராகவ்.
“ஐ அண்ட்ர்ஸ்டாண்ட், பட் கேன் டாக் ஒன்லி பியூ வேர்ட்ஸ்….” என்றாள்.
அவள் அம்மா அவளிடம் தமிழில் தான் பேசுவார் என்றும் சொல்ல, இவர்கள் அப்பாடா என்று அவளிடம் தமிழில் பேசினார்கள். அவளையும் முயற்சி பண்ண சொல்ல, அவளும் தட்டு தடுமாறி அந்த நாய்குட்டி பாவம், அவள் பாட்டி திட்டுவார் அதனால் அவர்களால் அந்த குட்டியை பார்த்து கொள்ள முடியுமா என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து கேட்டாள்.
நாய் என்றால் சுத்தமாக பிடிக்காத சோமு, வேகமாக பந்தா காட்டுறேன் என்று ஆங்கிலத்தில், “ஐ காண்ட் சீ!” என்றான் வேகமாக.
அது வரை அவன் அவளுடன் பேசாமல் இருந்ததாலும் அவன் நான் பார்க்க முடியாது என்ற அர்த்தத்தில் சொல்ல,
“ஓ! நீ கண் தெரியாதவனா?” என்று கேட்டு விட்டாள் சுப்பு.
அவள் அப்படி கேட்க, விழுந்து விழுந்து சிரித்தான் ராகவ். ராகவ் அப்படி சிரித்து சோமு பார்த்ததே இல்லை! வலிய போய் அவன் பேசியதே ஆச்சர்யம் என்றால் இப்படி சத்தமாக சிரிப்பது எல்லாம் அதிசயம். நண்பனை வித்தியாசமாக பார்த்தான் சோமு. அதே நேரம் சுப்பு சொன்னது கோபம் வர,
“இந்த அரிசி மூட்டைக்கு கொழுப்பை பாரேன்!” என்றான் நண்பனிடம்.
“டேய், சின்ன பொண்ணு டா. அப்படி சொல்லாதே. நீ சொன்ன வார்த்தையோட அர்த்தத்தை வைச்சு அப்படி கேட்குது. ஐ காண்ட் டேக் கேர்னு சொல்லணும் டா. பாவம் டா!” என்றான் ராகவ்.
“நீ எப்போ இருந்து டா இவ்ளோ கெட்டவன் ஆனே? பிரண்ட்க்கு கண் தெரியாதானு கேட்குது, அதை திட்டுனா நீ பாவம், புண்ணியம் சொல்றே?” என்றான்.
ராகவ் “ம்ப்ச்” என்க,
கோபமான சோமு, “ஹே, யூ சுப்பிரமணி, வி காண்ட் டேக் கேர் திஸ் டாக்” என்றான். சுமதியோடு சேர்ந்து பழைய படம் நிறைய பார்த்து அவள் செய்கையை கண்டு மூன்றாம் பிறை படத்தில் வரும் நாய்க்குட்டி பேரை இவளுக்கு வைத்தான் சோமு.
“ஐயம் நாட் சுப்பிரமணி, ஐயம் சுப்புலக்ஷ்மி” என்றதும் இம்முறை சோமுவிற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் பெயரை அவன் தவறாக சொல்வதாக நினைத்து கொண்டு அவள் திருத்த, அவளின் பெயரும் சோமு கிண்டல் செய்ததை போலவே வர, இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
தன்னை, தன் பெயரை தான் கிண்டல் செய்கிறார்கள் இருவரும் என்று அவர்களை முறைத்தாள் சுப்பு. சற்று முன் வரை நன்றாக பேசி விட்டு இப்போது ராகவ்வும் அவள் பெயரை கிண்டல் செய்து சிரிக்க அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. வேகமாக மாடி பால்கனி கதவை சாத்தி கொண்டு உள்ளே சென்றாள் சுப்பு. அமெரிக்காவில் எப்போது எங்கு அவள் பெயர் சொன்னாலும் உடனே அனைவரும் பழைய பெயர் என்றோ இல்லை டிபரண்ட் நேம் என்று சிரித்தோ விடுவார்கள். இவர்களும் இது போல் செய்ய ஒரு மாதிரி ஆகி விட்டது அவளுக்கு. சுப்புவின் குடும்பத்தில் மூன்று தலைமுறைக்கு முன் ஒரு பெண் பிறந்து சிறுவயதில் அவர் இறந்ததாகவும் அதன் பின் அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காமல் இருந்து அவருக்கு பேத்தி பிறந்தவுடன் இந்த பெயரை வைத்து விட்டார் அவள் தாத்தா. லக்ஷ்மி கடாக்ஷத்துடன் பெண் பிறந்து இருக்கிறாள் என்று சுப்பும்மாள் எனும் அந்த மூத்த தலை முறை பெயரை சேர்த்து வைத்தார்.
அவள் சென்றதும் “அச்சோ, நாம ரொம்ப சிரிச்சிட்டோம்…. பாவம் டா…. பீல் பண்ணிட்டா போல். முகமே மாறிடுச்சு.” பதறி தவித்தான் ராகவ். யாரையும் சட்டை செய்யாத நண்பன் இந்த குட்டி பொண்ணை ஏன் இவ்ளோ கேர் பண்றான் என்று அதிசயமாக பார்த்தான் சோமு.
