என்னுள் தொலைவாயோ என்னுயிரே
அத்தியாயம் ஏழு
ஸ்டீவ் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து எமியின் அழகை ரசித்தவன் குனிந்து கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்து கொண்டான்.
யாரும் வருவதாக தெரியவில்லை எமி தனியாக இந்த அழகை ரசிக்க வந்தாளோ என்றும் எண்ணம் உதித்தது. அது மாதிரியான எண்ணம் தோன்றிய மறு கணமே அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இவனும் நடக்க ஆரம்பிக்க எமி திடீரென எழுந்து இவனை நோக்கி ஓடி வந்தாள். ஸ்டீவுக்கு ஒரே குழப்பம். என்ன நடந்தது இவளுக்கு? தன்னை நோக்கி இவளோ புன்னகையுடன் ஓடி வருவாள் என அவன் கொஞ்சமும் இதற்கு முன்னம் நினைத்தும் பார்த்து இல்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாது அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
அவள் இவனை நெருங்க நெருங்க இவனின் இதயம் நெஞ்சாங்கூட்டை விட்டு வெளியே துள்ளி ஓட எத்தனித்தது. ஆனால் ஏதோ ஒரு எதிர் பார்ப்பு அவனினுள் கூடிக்கொண்டே சென்றது.. ஒரு கட்டத்தில் தன்னை கட்டி பிடித்து விடுவாள் எமி எனவும் தோன்றியது.
இவளோ எதிர் பார்ப்புடன் ஸ்டீவ் நிக்க சற்றும் சட்டை செய்யாது அவனையும் கடந்து கொண்டு ஓடிச் சென்று அவன் இவ்வளோ நேரமும் மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்த மரத்தின் பின்னால் நின்று தூரத்தில் வரும் ஒருவரை உடல் முழுதும் ஒரு உற்சாகத்துடன் எட்டி எட்டி பார்த்தாள்.
ஸ்டீவுக்கு ஏதும் புரியவில்லை. அந்த இடத்தில் கதாநாயகனாக தன்னை தானே நினைத்து கொண்டு இருந்தவன் வெறும் பார்வையாளனாக மட்டும் நின்று கொண்டிருந்தான். எமிக்கு இது எதுவுமே அவள் கண்ணில் படவில்லை. அவளின் சந்தோசத்தால் நிரம்பிய கண்கள் முழுதும் அந்த தூரத்தில் வரும் ஹென்றியில் மட்டுமே குத்தி நின்றன.
ஹென்றி அந்த இடத்திற்கு வந்ததும் தான் ஸ்டீவ்க்கு அவன் ஹென்றி என்பது தெரிந்தது. சற்று ஆச்சர்யமாக இருந்தாலும் இவர்களுக்குள் என்ன இருக்கும் என்பது பற்றி எந்த நிலையான முடிவுக்கும் வர முடியவில்லை. ஹென்றி வந்ததும் நிகழ்ந்த நிகழ்வுகள் ஸ்டீவ்க்கு, எமி ஹென்றிக்கு என்ன உறவு என்பதை தெளிவாகவே கூறி சென்றன.
ஸ்டீவால் அதற்குமேல் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை. அவன் கையில் கொண்டுவந்த பூங்கொத்து அருகில் இருந்த கல் இருக்கையில் பட்டு சிதைந்ததை வைத்து ஸ்டீவின் மனோநிலை தெளிவாக தெரிந்தது. இவனின் கோவம் இந்த பூங்கொத்துடன் மட்டும் முடிந்திருக்கலாம் அப்படி அல்லாமல் ஹென்றி மற்றும் எமியின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தப்போகுதோ தெரியவில்லை.
ஸ்டீவ் வேகமாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்தாலும் அவன் வீட்டுக்கு செல்லும் மட்டும் எமி ஹென்றியை கட்டிப்பிடித்து நின்றதுதான் அவன் கண் முன்னே வந்து வந்து சென்றது. வேகமாக வீட்டுக்கு சென்றவன் அவனின் கோவம் மறைந்து போதை மட்டுமே அறிவுக்கு தெரியும் மட்டும் குடிக்க நினைத்து பிரிட்ஜில் இருந்த பாட்டிலை எடுத்து மேசையில் வைத்து விட்டு ஒரு ரவுண்டை வேகமாக வாயில் ஊற்றினான். அப்போது தான் அவனுக்கு கோவத்தின் பின்னிருந்த எமி தனக்கு இல்லை என்ற ஏமாற்றம் எட்டி பார்த்து சிரிப்பதை உணர்ந்தான்…
கொஞ்ச நேரத்தில் பாட்டில் முழுதாக காலியானதும் அதிலேயே படுத்து விட்டான். இப்போது அவன் மனதில் ஹென்றி மீது கோவம் இல்லை. ஓரளவு நிலைமையை புரிந்து இருந்தது அவன் மனம். ஆனால் அவர்கள் காதல் மீது பொறாமை மலையளவு இருந்தது. சரி ஸ்டீவ் தூங்கட்டும் நாம் எமி என்ன செய்கிறாள் என்று பார்த்து விட்டு வருவோம்.
எமி அன்று இரவு அவ்வளவு சந்தோசத்துடன் அவளது பிறந்த நாளை ஹென்றியுடன் கழித்து விட்டு அவனின் ஆராய்ச்சி பற்றி மனம் முழுதும் ஆச்சர்யப்பட்டு கொண்டே அம்மாவை ஹென்றி எப்படியும் காப்பாற்றிவிடுவான் என்ற நம்பிக்கையுடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை நோக்கி நடக்கும் போது ஹென்றியின் நினைப்பு மட்டும் தான் அவள் மனதில் இருந்தது. அவனின் முத்தம் இன்னும் அவள் உதட்டில் இனித்து கொண்டே இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் நீண்டிருக்கலாம் என்றும் தோன்றியது. எங்கு போய்விடுவான் கல்யாணத்துக்கு பிறகு ஒரு வழி பண்ணிவிடலாம் என்று மனதில் எண்ணி கொண்டே வீட்டினை அடைந்து கதவினை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றதும் அம்மாவின் கட்டிலை பார்த்து “என்னம்மா இண்டைக்கு என்னுடன் கதைக்காம தூங்கிட்டயா” என்று கேட்டாள். இருவரும் இரவில் கதைத்து கொண்டிருப்பது வழமை. எமியின் கதையின் சுவாரஷ்யத்தில் தனது வலிகளை மறந்து தூங்குவது அம்மாவின் இரவுகளில் பெரும்பாலும் நடக்கும். சில சமயங்களில் மட்டும் வேளைக்கு தூங்கி விடுவாள். ஆனால் எமி அருகில் சில மணி நேரம் அமர்ந்திருந்து அவளின் தலையை தடவி விட்டு தான் தூக்கத்துக்கு செல்வாள்.
இன்றும் அம்மாவிடம் இருந்து பதில் வராததால் உடை எல்லாம் மாற்றிவிட்டு அருகில் வந்து அமைதியாக அமர்ந்து அவள் முகத்தை பார்த்தாள். மெதுவாக கைகளை அவள் தலையில் வைத்து பொறுமையாக தடவி விட்டாள். இவளின் ஸ்பரிசம் உணர்ந்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்து “வந்துட்டயாம்மா?” என்று கேட்டுக்கொண்டு உட்கார முயற்சித்தாள்.
எமி அவளது ஒரு கையை தாயின் கைக்கு கீழாக பிடித்து எழும்பி இருக்க உதவி செய்தாள். தாய் எழுந்ததும் “சாப்டியா அம்மா?” என்றாள். அவளும் “இன்னும் இல்ல எமி… உன்ன விட்டுட்டு எப்படி சாப்பிடுவன்..” என்றாள். உடனே எமி சிரித்து விட்டு “நேரத்துக்கு சாப்பிடுங்கன்ன கேக்கறீங்களா….” என்று கூறி சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தாள்.
சாப்பாடு எடுத்து வந்த எமியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் அவளது தாய். வழமைக்கு மாறாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எமியின் முகம். வழமையாக எமியின் முகத்தில் தாயை பற்றிய சோகம் எப்போதும் தோற்றிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று அவளின் முகம் முழுதும் சிரிப்புடன் உணவு பரிமாறி அவளும் உண்டு முடித்தாள்.
எமியின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை பற்றி எதுவும் கேட்கவில்லை அவளது தாய். அவளுக்கு எமி சந்தோசமாக இருந்தால் மட்டும் போதும். அதோடு எமி எதுவாக இருந்தாலும் தூங்க செல்லும் போது சொல்வதுதானே அதனால் அதை கேட்க வேண்டும் என்று தோன்றவும் இல்லை.
எமியும் தாயும் உணவருந்திவிட்டு தூங்குவதற்கு தயாரானார்கள். தாயை கட்டிலில் தூங்க விட்டு பக்கத்தில் எமி அமர்ந்து அவள் தலையை கோதி கொண்டே “இண்டைக்கு ஹென்றி எண்ட பிறந்தநாளை ரொம்ப சந்தோசமானதா மாற்றிட்டான்” என்றாள். “உன் முகத்தை பார்க்கும் போதே தெரியுதுடா செல்லம், என்னால தான் உனக்கு ஏதுமே சந்தோஷப்படுத்த முடியல…. பாரமா தான் இருக்கிறன்…” என்று தான் மனகுமிறலையும் சேர்த்து எமியின் தாய் பதிலாக வழங்கினாள்.
எமி அவளின் பதிலை கேட்டு அதே சிரித்த முகத்துடன் ” நீ எனக்காக செய்ததுகளோட ஒப்பிட்டு பார்த்தா இதெல்லாம் ஒண்ணுமே இல்லம்மா… அதோட உன்னோட கஷ்டம் எல்லாத்துக்கும் ஹென்றி வழி கண்டுபிடிச்சிட்டாரு. இன்னும் கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாகிடும்” என்றவளை ஏதும் புரியாமல் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவளின் அம்மா.
அதற்கு எமி “என்னம்மா புரியலயா.. எனக்கும்தா அம்மா ஆரம்பத்துல புரியல… பிறகு அவர் தெளிவா சொன்ன பிறகு தான் நம்பிக்கையே வந்துச்சு… அவரோட அடுத்த கண்டுபிடிப்பு உன்னோட வருத்தத்த குணப்படுத்திடும் அம்மா. சுருக்கமா சொல்லறதா இருந்தா கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்க போரார்.”
அத கேட்டுட்டு இருந்த அம்மா “ஏதோ சொல்ற அவரோட முயற்சி வெற்றியடைந்தா எனக்கும் சந்தோசம் தான்… ஆனால் இதுக்கு பிறகு நான் வாழ்ந்து என்னத்த சாதிக்க போறன். வாழவேண்டிய நீ சந்தோசமா இருந்தா அதான் என்னோட பெரிய சந்தோசமே…. என்ன இருந்தாலும் இப்போவே என் மனசு நிறைவா இருக்கு… தன்னோட காதலிட ஆசைய நிறைவேத்த கஷ்டப்படற காதலன் கிடைக்க அதிஷ்டம் வேணும். அது என் பொண்ணுக்கு கிடைச்சிருக்கு… நீ ஹென்றியோட சந்தோசமா வாழ்றதுதான் என்னோட கடைசியானதும் பெரியதுமான ஆசை…” என்று தாய்க்கேயுரிய அன்புடன் மகளுக்காக கதைத்தாள்.
தாயின் பதிலுக்கு என்ன கதைப்பது என்று எமிக்கு தெரியவில்லை. “எனக்கு முதல்ல நீ பழையபடி வேணும்.. நீயும் ஹென்றியும் எண்ட வாழ்க்கைல சந்தோசமா என்கூட இருந்தா போதும்.” என்று சொல்லி விட்டு அவளை படுக்க வைத்து போர்வையை போர்த்தி தலையில் முத்தம் கொடுத்து விட்டு எழுந்தபோது எமி தாயாகவும் அவளின் அம்மா மகளாகவும் தெரிந்தாள். அப்படியே எமியும் சென்று ஏதோ கொஞ்சம் நிம்மதியுடன் ஹென்றி எப்படியும் அம்மாவை காப்பாற்றி விடுவான் என்ற நினைப்புடனேயே தூங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலை வழமையாக எழும்பும் நேரத்தை விட வேளைக்கு எழும்பிவிட்டாள் எமி. எழும்பியதும் அவளின் காலைக்கடன்களை முடித்து அவளது யூனிபோர்மும் அணிந்து கொண்டு வெளியே வந்தாள். வந்ததும் அம்மா படுத்திருந்த கட்டிலை பார்த்தாள் அம்மா இன்னும் எழும்பவில்லை என்பது தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் தூங்கட்டும் என்று நினைத்து கொண்டு சமையல் அறைக்கு சென்று அன்று தேவையான காலை உணவு மற்றும் மதிய உணவினை தயார் செய்தாள். அவற்றை முடித்து விட்டு வெந்நீர் வைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அம்மா படுத்திருந்த இடத்தை நோக்கி போனாள். அங்கே பக்கத்தில் பாத்திரத்தை வைத்துவிட்டு அம்மாவை எழுப்பினாள்.
அம்மா ரெண்டு மூன்று முறை அசைத்தும் எழும்பவில்லை. எமி பதறிப்போய்விட்டாள்… முகத்தில் கொஞ்சம் நீர் தெளித்து துடைத்து விட்டாள். அப்போதுதான் அவளிடம் இருந்து சிறிது அசைவு தெரிந்தது. ஆனால் அவளில் உடலில் பலம் இல்லாததுபோல் சோர்ந்து காணப்பட்டாள். உடம்பு சூடாக காணப்பட்டது. ஒருமாதிரி எழுந்து உட்கார உதவினாள் எமி. எழுந்ததும் வயிற்றில் கையை வைத்து கொண்டு வலிப்பது போல் உள்ளது என்று அம்மா சொன்னதும் எமிக்கு இன்னும் பயம் கூடிக்கொண்டு செல்ல துவங்கியது. கொண்டுவந்த வெந்நீரில் துணி ஒன்றை போட்டு அதனால் அம்மாவின் உடலை துடைத்து சுத்தம் செய்து விட்டு ஹாஸ்பிட்டல் செல்வது தான் சரியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அதற்குரிய வேலைகளை பார்த்தாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹாஸ்பிட்டல் கொண்டு சென்றுவிட்டாள். அங்கு முதற்கட்டமாக பரிசோதித்த வைத்தியர்கள் உடனடியாக அவசரசிகிச்சை பிரிவுக்கு மாற்றிவிட்டனர். அங்கு நடப்பதை எல்லாம் பார்க்க எமிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. அவள் வைத்தியர் பரிசோதித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் எந்த பாரதூரமான பிரச்சினையும் இருக்காது என்று நம்பிக்கொண்டிருந்தாள். அவசரசிகிச்சை பிரிவுக்கு மாற்றியதும் அவளால் தாங்கி கொள்ளமுடியவில்லை.
அந்த நிமிடம் எமி ஹென்றிக்கு அழைப்பை ஏட்படுத்தி விடயத்தை கூறி கொஞ்சம் அவனிடம் தனது பாரத்தை இறக்கி வைக்க ஆசைப்பட்டாள். உடனே அவனுக்கு அழைப்பும் எடுத்தாள் ஆனால் அவளால் இவள் நிலையை கூறி அவனின் பலவருட ஆராட்சியை குழப்பிவிட மனது வரவில்லை சாதாரணமாக ஓரிரு வார்த்தை கதைத்து விட்டு வைத்து விட்டு வைத்தியாரின் பதிலுக்காக காத்திருக்க தொடங்கினாள். அப்போது அவளுக்கு தெரியவில்லை அவனிடம் விடயத்தை சொல்ல கிடைத்த வாய்ப்பை வீணாக்கியது எவ்வளோ பெரிய தவறு என்று.
இரண்டு மணி நேர காத்திருப்பின் பின்னர் வைத்தியர் எமியை அவரது அறைக்கு அழைத்தார். எமி என்ன சொல்ல போகிறாரோ என்ற எண்ணத்துடன். ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிடவேணும் என்ற வேண்டுதல்களுடனும் அவர் அறையை நோக்கி நடந்தாள்.
வைத்தியர் என்ன சொல்ல போகிறார். எமியின் தாய்க்கு என்ன நடக்கும் என்பதையும் எமியின் பாதையில் எப்படி மாற்றம் ஏற்பட போகிறது என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
