உன்னை விட இல்லை புதுமையே…1

உன்னை விட இல்லை புதுமையே

உன்னை விட இல்லை புதுமையே…1

உன்னை விட இல்லை புதுமையே…1

உன்னை விட இல்லை புதுமையே…1

உன்னை விட இல்லை புதுமையே…1

உன்னை விட இல்லை புதுமையே…2

உன்னை விட இல்லை புதுமையே…2

உன்னை விட இல்லை புதுமையே…!

உன்னை விட இல்லை புதுமையே…!

உன்னை விட இல்லை புதுமையே…4

உன்னை விட இல்லை புதுமையே…4

உன்னை விட இல்லை புதுமையே…5

உன்னை விட இல்லை புதுமையே…5

உன்னை விட இல்லை புதுமையே..5

உன்னை விட இல்லை புதுமையே..5

உன்னை விட இல்லை புதுமையே..6

உன்னை விட இல்லை புதுமையே..6

உன்னை விட இல்லை புதுமையே…7

உன்னை விட இல்லை புதுமையே…7

அத்தியாயம் – 1

“டேய்… ஏன்டா அவள நீ அடிச்ச?.. மேக்னாவுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்?” என்று ஆதி , வழமையாக தண்ணி அடிக்கும் பாரில், அமர்ந்த படி, தனக்கு எதிரே இருக்கும் தன் ஆருயிர் நண்பன் கிஷோரிடம் , இதே கேள்வியை பதினாறாம் முறையாக கேட்டான்.

நான்கு லார்ஜ்களை உள்ளே தள்ளியிருந்த கிஷோருக்கு, ஐந்தாவது முறையாகவும் போதை இறங்குவது போலிருந்தது. பேரரை அழைத்து, திரும்பவும் குடித்தாலும் நண்பன் இதே கேள்வியை கேட்டு, அடித்த சரக்கையெல்லாம் மீண்டும் இறக்கக் கூடும் என்பதால், தன் முன்னே அமர்ந்திருக்கும் ஆதியை வெறித்துப் பார்த்தான் கிஷோர்.

மேக்னாவை தான் ஏன் அடித்தேன் என்று, அது “ஆதி” எனப்படும் “ஆதிகேஷவனுக்கும்”,அடித்த கிஷோருக்கும், இன்னும் ஏன் ? அடிவாங்கிய மேக்னாவுக்கும் தெரிந்திருக்கும்?

சுமார் ஆறெழு, வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை , இன்றும் நினைவில் வைத்து, நண்பன் “சரக்கு” வாங்கித் தருகிறேன் என்று வழக்கம் போலவே அழைத்து வந்து, அவன் குடிக்காமல், பிறரை குடிக்க வைத்து, இவன் குடித்தவன் போல ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கும் போது, கிஷோருக்கு தலை வலிக்கும்.
ஞாயிற்றுக்கிழமையானால் போதும், ஆதி தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் பாரிற்கு அழைத்து வருவான். தன் சொந்த செலவில் நண்பர்களை மகிழ்விப்பதற்காக.
ஆனால் குடித்தவர்களை விட, குடிக்காமல் பக்கத்திலிருந்து உளரும் ஆதியுடன் குடிக்கப் பிடிக்காமல், கழன்று கொண்ட நண்பர்கள் பலர்.

“டேய் மச்சி…. நீ குடிக்கல?” என்று நண்பர்களுள் யாராவது கேட்டால், “இல்லடா… மேக்னாவுக்கு நா குடிக்குறது பிடிக்காதுடா…பட் யூ என்ஜோய் டா மச்சி”என்பான். அதனால் யாரும் அவனைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்துவதில்லை.

ஆதியின் ரோதனை தாங்க முடியாமல் , ஒவ்வொருவராய் கழன்று கொள்ள, மிஞ்சியது கிஷோர் மட்டுந்தான். ஆருயிர் தோழனின், மனவலியைப் போக்க, ஆறுதலுக்காக, அத்தனை ரோதனைகளையும் தாங்கிக் கொள்வான் கிஷோர்.

இன்றும் அவனுடைய தாங்கலின் எல்லை அளவு கடந்து விட, கிஷோர் தலையை சற்றே குனித்து , கண்கள் இரண்டையும் அகல விரித்து , சந்திரமுகி ஜோதிகா போல, பேய்ப் பார்வை பார்த்தான் ஆதியை.

கிஷோரின் முறைத்தல் பார்வையைக் கூட கணக்கிலெடுக்காது, மேசையில், முழங்கையை ஊன்றி , அக்கையாலேயே கன்னத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, அப்பாவியாக தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ஆதியைக் கண்டவனுக்குள், சட்டென கழிவிரக்கம் பிறந்தது.

கிஷோரால் நண்பனை வெகுநேரம் முறைக்க முடியவில்லை. தன்னையே அப்பாவி பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் ஆதியை கண்களாலேயே அளவெடுத்தான் கிஷோர்.

அதே ஆறேழு வருடங்களுக்கு முன்பு காலேஜில் இருந்த அனைத்துப் பெண்டிரும், வைத்த கண் வாங்காமல் பார்த்த ஆதியா இவன்?? என்று தோன்றியது கிஷோருக்கு.

பரட்டைத் தலையும், கன்னத்தில் ஆங்காங்கே முளைத்திருந்த தாடிமயிரும், கட்டம் போட்ட தொளதொள சொக்காவுமாக ஆடை அணிந்து, கண்கள் சற்று கலங்கிய படி அமர்ந்திருந்த, நண்பனை காண்கையில், கிஷோருள்ளும் வலியெடுத்தது.

இன்றும் ஆதி நடந்த எதையும் மறக்கவில்லை. சகுந்தலாவை மறந்த துஷ்யந்த மகாராஜா அல்ல . கிஷோரின் நண்பன்.
எதையுமே மறக்காது, இறுதிவரை மேக்னாவைத் தன் நெஞ்சில் சுமப்பவன் கிஷோரின் நண்பன்.

ஒவ்வொரு அசைவிலும் மேக்னாவை நினைவுகூறும் நண்பனை நினைத்து , கிஷோருக்கு ஒரு கணம் கோபமாக இருக்கும்.
அவளே அவனை விட்டுச் சென்று விட்டதன் பின்பு, இன்னும் மேக்னாவையே நினைத்து ஏங்கி, தன் வாலிபத்தைப் பாழாக்கிக் கொள்கிறானே? என்று தோன்றும் போது கோபம் கிஷோருள் தோன்றும்.
அதே கணம், அவளையே நினைத்து ஏங்கித் தவிக்கும் நண்பனின் நிலையை நினைத்து கவலையாகவும் இருக்கும்.

கிஷோரின் மனக்கண் முன், ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவம் அழகாய் விரிந்தது. அவன் கண்களுக்குள் , ஏழு வருடங்களுக்கு முதல், காலேஜில் கவர்ச்சிகரமாக வளையவந்த ஆதி வந்தான்.
கைத்தசைகளையும், மார்த்தசைகளையும் இறுக்கிப் பிடித்திருந்த டீஷேர்ட்டும், ஜீன்ஸூம், கால்களுக்கு “ஸ்போர்ட் ஷூவும்” அணிந்து, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, ஆண்மைக் கர்வத்துடன் வளையவரும், காலேஜே பார்த்து அலறும் “தி க்ரேட் ஆதிகேஷவ்”.

ஜூனியர் மாணவர்களாக இருந்தாலும் சரி.அவனுடன் படிக்கும் சக சீனியர் மாணவர்களாக இருந்தாலும் சரி. கொழும்பு பல்கலைக்கழகத்தில் , இயந்திரப் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் ஆதியிடம் எப்போதும் ஓர் தனிப்பயம் உண்டு. அதற்கு அவன் செய்யும் அடாவடித்தனமும், ரௌடித்தனமும் தான் காரணம்.

அவனுக்குமே பயப்படாத ஒருத்தி இருந்தாள் என்றால், அது, அதே கல்லூரியில் வர்த்தகப்பிரிவில் படித்த இரண்டாமாண்டு மாணவி, “விஷ்வமேக்னா” தான்.

அளவான நெற்றியின் கீழ், காதலர்களின் கோர்த்த கைகள் போல அடர்ந்த ஒட்டிய புருவங்கள், கண்களுக்கு மஸ்காராவோ, ஐ-லைனரோ, வேறு எந்தவித செயற்கை மெருகூட்டிகளும் உபயோகிக்காமல், இயற்கையாகவே அமைந்த அடர்ந்த மயிர் கொண்ட இமைகள்.
பெரும்பாலும் மேலிமை தான் அடர்ந்த மயிரினைக் கொண்டிருக்கும். கீழிமை சுமாரான மயிர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.
ஆனால் விஷ்வமேக்னாவுக்கு, இயற்கையிலேயே, கீழிமை கூட அடர்ந்து வளர்ந்திருந்தது.
அவள் தரை பார்த்துக் குனிந்திருக்கும் போது, அந்த அடர்ந்த இமைகளின் வரிசை, பெண்கள் மனதையும் பித்தங்கொள்ளச் செய்யும்.
அந்தக் கருவண்டு விழிகளுக்கு இடையில் நேர்த்தியான நாசி, அதற்குக் கீழே கொவ்வைப் பழ இதழ்கள், அந்த இதழ்கள் இரண்டும் பிரியும் போது, மூடிய சிப்பி திறந்து அதற்குள்ளிருந்து ஒளி வீசும் முத்து போன்ற மூரல்கள்.
ஆனால் என்ன? சிப்பிக்குள் மறைந்திருப்பது ஒரு முத்து. இவள் இதழ்கள் பின்னால் மறைந்திருப்பது முப்பத்திரண்டு முத்துக்கள். ரூஜ் தடவாமலேயே, ஆதியைக் கண்டதும் சிவப்பேறும் கன்னங்கள், இடுப்பைத் தாண்டி வளர்ந்திருந்த கூந்தல் என அவள் பெருக்கேற்றாற் போல “விஷ்வமேக்னாவாகவே” திகழ்ந்தாள்.

அன்று முழுதும் இளங்கபில நிறத்தினாலான சல்வாரில், காலேஜ் வந்திருந்தவளை, தூரத்திலிருந்தே பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான் ஆதிகேஷவ்.

உடைகளின் அழகு தரிசனம் மட்டும் கிடைத்தவனுக்கு, அவளுடைய மதி வதனத்தின் தரிசனம் தான் கிடைக்கவில்லை. மாறாக பக்கவாட்டுத் தோற்றம் தான் காணக்கிடைத்தது.

வந்தவுடன் அவனது அழகு தேவதை, அவனை அவனுடைய வழமையான இடத்தில் கண்களாலேயே தேடுவாள்.
அந்தத் தேடலை , அவள் அறியாமல் இரசிக்கவென, அவளது நாயகனும், அவனுடைய வழமையான இடமான வாகை மரத்தின் பின்னே, ஒளிந்து கொள்வான்.

நயனங்களால் தன் பாண்டி மன்னனைத் தேடித் தேடிக் களைத்து, உடலும், அகமும் ஒருங்கே சோர்ந்து அவள் கலங்கி நிற்கையில், மறைந்திருந்த இடத்திலிருந்து அனைத்தையும் இரசித்து விட்டு, தலையை தன் விரல்களால் கோதிக் கொண்டே, ஸ்டைலாக மறைவிடத்தை விட்டும் வெளியே வருவான் ஆதி.

அவளும் அவனைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில், கண்களாலேயே புன்னகைப்பாள்.
அவனும் அந்தப் புன்னகையின் காதல் ஸ்பரிசத்தை , மூச்சை ஆழ உள்ளெடுத்து, சுவாசித்துக் கொண்டே , தன் ஜீன்ஸ் பாக்கட்டினுள் இடது கையை விட்டுக் கொள்வான். வலது முழங்கையை எடுத்து, அருகே நின்று கொண்டிருக்கும், நண்பன் கிஷோரின் தோளில் பதித்து, அதே வலது கையால், முகத்தைத் துடைப்பது போல, அவனைச் சுற்றியிருக்கும் பாங்கற் கூட்டம் அறியாமல், அவள் மட்டும் அறியும் வகையில், அவளை நோக்கி சட்டென கண்ணடிப்பான் ஆதி.

அந்தக் கண்ணடிப்பில், அவளுடைய அன்னநடை ஒரு நிமிடம் பிரேக் போட்டது போல, தடுமாறித்தான் நிற்கும். பிறகு தன் தடுமாற்றத்தை யாராவது கவனித்து விட்டார்களா? சுற்று முற்றும் பார்த்து விட்டு, தலையைக் குனித்துக் கொண்டே, சிற்றுண்டிச் சாலையை நோக்கிச் செல்வாள்.
ஆனால் இன்று அவள் கண்டும், காணாததைப் போல செல்வது , அவனுள் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளை பெரும்வலியையும் கொடுத்தது.

என்ன இவள்? தன் முகத்தைக் கூட பாராமல் செல்கிறாளே? என்று தோன்ற அதற்கு மேலும் நண்பர்களுடன் அரட்டையடிக்க விரும்பாமல் , வழமை போல நண்பர்களுடன் அமர்ந்திருக்கும், அந்த வாகை மரத்தின் தாழ்ந்த மற்றும் தடித்த கிளையிலிருந்து, தாவிக் குதித்து இறங்கினான் ஆதி .

அவன் நண்பர் குழாத்தில் அவனுடன் சேர்த்து மொத்தம் எட்டு பேர். கிஷோர், கதிர், அமுதன், பாலா, பிரகாஷ், அபிஷேக், மதி மற்றும் அவன்.
என்றுமில்லாமல் நண்பன், தம்மை விட்டு அகல்வதைக் கண்ட கதிர், மரக்கிளையில் இருந்து கொண்டே, ஆதியின் புறமுதுகைப் பார்த்து , “டேய் மச்சி… எங்கடா போற?” என்று அனைவர் சார்பாகவும் கேள்வி கேட்டான்.

ஆதியோ, கேள்வி கேட்ட கதிரையோ, மற்ற நண்பர்களையோ திரும்பிக் கூட பார்த்தானில்லை. ஆனால் ஆதியின் உள்ளே இதயம், அவளைக் காண வேண்டும் என்ற வெறியில் “லப்டப்” என்று வேக வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.

நண்பர்களைத் திரும்பிப் பாராமேலேயே , “லைப்ரரிக்கு போறேன்டா!” என்றான் எரிச்சலையும், அவசரத்தையும் அடக்கிய குரலில்.

பிறகு யாருடைய பதிலையும் எதிர்பாராது, முன்னே இரண்டெட்டு நடந்தான் ஆதி.

ஆதியின் பதிலை அங்கிருந்த யாருமே நம்புவதாயில்லை. ஆதி “நூலகம்” செல்கிறானாமா? தன் நம்பிக்கையின்மையை வாய் விட்டே கூறினான் கிஷோர்.

“மச்சி… ஏதாவது நம்புற மாதிரி சொல்லு…” என்று சற்றே உரத்த குரலில் கூறிய கிஷோரை, முன்பு போலவே புறமுதுகு காட்டிய படி, “நம்பலேன்னா.. போடா!” என்று விட்டேற்றியாக பதில் சொல்லி விட்டு நகர்ந்தான்.
அவனுடைய அசிரத்தையான பேச்சைக் கேட்ட கிஷோருக்கும் சரி, கதிருக்கும் சரி, பிறருக்கும் சரி, உண்மையாகவே ஆதி நூலகத்திற்குத் தான் செல்கிறானோ என்ற எண்ணம் எழலாயிற்று.

ஆதியாவது, நூலகம் செல்வதாவது…. அவன் கால்கள் அனிச்சை செயல் போல தானாகவே அவனுடைய தேவதையைத் தேடி நகர்ந்தன.
அவனுடைய விழிகளில் குழப்பமும், கலக்கமும், சோர்வும் ஒருங்கே குடி கொண்டிருந்தன.
அவளும் வழமை போலவே வந்ததும், கல்லூரி சிற்றுண்டிச்சாலையில் தான் அமர்ந்திருந்தாள். அவள் வழமை போலவே, ஜன்னலோர இருக்கையிலேயே அமர்ந்திருந்தாள்.
நண்பர்களிடம் , “கேன்டீனுக்கு போறேன்டா” என்று உண்மையைக் கூறியிருந்தால், முழுப் பட்டாளமுமே அவனுடன் கிளம்பியிருக்கும்.

பிறகு எப்படி அவளுடன் உரையாடுவது? என்றே தான் நூலகம் செல்கிறேன் என்று பொய்யுரைத்து விட்டு, நண்பர்களை கழற்றிவிட்ட மகிழ்ச்சியில், சிற்றுண்டிச்சாலைக்கு வந்தான் ஆதி.
அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, மேசை மீது புத்தகத்தை விரித்து வைத்து, தலை குனித்துப் படித்துக் கொண்டிருந்தவளின், பக்கவாட்டுத் தோற்றம் தான், அப்போதும் ஆதிக்கு காணக் கிடைத்தது.

என்ன இவள்? என்றுமில்லாமல் படித்துக் கொண்டிருக்கிறாள்?? ஒரு வேளை பரீட்சையோ? அப்படியிருப்பதாகவும் அவளுக்குத் தோன்றவில்லை.

ஏன் தன்னவள் இப்படி தன்னையொதுக்கி நடந்து கொள்கிறாள் ? என்று தெரிந்து கொள்ள நாடியவன், வேகவேகமாக எட்டுக்கள் எடுத்து வைத்து, முன்னேறிப் போனான்.

அவளோ தன்னவன் தன்னை நோக்கி வருவது அறிந்தும், அறியாதவள் போலவே அமர்ந்திருந்தாள். அவனுடைய காலடியோசை கேட்ட போதெல்லாம், அவளுடைய மனம் உள்ளே அதிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் எதையுமே வெளிக்காட்டாது அமர்ந்திருக்கத் தலைப்பட்டாள் விஷ்வமேக்னா.

வேக நடையெடுத்து வைத்து, தன்னவள் அருகே நடந்து வந்தவன், அவள் முன்னே இருந்த கதிரையை, தன்னிரும்புக் கரங்கொண்டு, இழுத்துப் போட்டு அமர்ந்து, சற்று முன்னே சாய்ந்து, கைகளை மேசையில் ஊன்றி, அவளையே கூர்ந்து கவனித்தான்.

அவளோ, அவனுடைய பார்வையை உணர்ந்து, சட்டென கதிரையின் வலப்புறமாகத் திரும்பி அமர்ந்து , மறுபடியும் அவனுக்கு அவளது இடது பக்கவாட்டுத் தோற்றத்தையே காட்டி நின்றாள்.

இவளுக்கு என்னவாயிற்று? ஏன் தான் வந்ததும் இப்படித் திருப்பிக் கொள்கிறாள்? என்று புரியாமல் விழித்தவனுக்கு, அவளது ஒதுக்கம் மனதினுள் சிறு வலியை ஏற்படுத்தியது.
மேசை மீதிருந்த , அவளது பட்டு போன்ற மென்மையான கையினை எடுத்து, தன் கையினுள் சிறைப்படுத்திக் கொண்டவன், மெல்ல அவன் கையை வருடியபடி, “என்னாச்சு மேக்னா? ஏன் இன்னைக்கு டல்லா இருக்க?” என்று தாழ்ந்த குரலில் கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதும் , விஷ்வமேக்னாவுக்கு இதயம் தடதடத்தது. அவளுடைய அடர்ந்த இமைகள் படபடவென அடித்துக் கொண்டன.
அவள் அவனுடைய முகத்தைத் திரும்பி, நேராகப் பார்க்கவில்லை. ஆனால் அவள் கண்ணாளன் , அடர்ந்த அவளது இமைகள் படபடவென அடித்துக் கொண்டதை, இடதுபக்கத்தின் பக்கவாட்டுத் தோற்றமாயினும், பார்த்துக் கொண்டு தானிருந்தான்.
அந்த இமைகளின் படபடப்பு இரசிக்கத்தக்கதாய் இருந்தது ஓரிரு கணங்களே. அவளுடைய மௌனத்தின் காரணம் புரியாமல், அவன் புருவங்கள் இரண்டும் இடுங்கித் தான் போயின.

அவளுடைய மௌனத்தினை களைப்பதற்கு நேரமளித்து, ஆதி ஒரு சில கணங்கள் தாமதித்துத் தான் நின்றான்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே… நா… வழக்கம் போல தான் இருக்கேன்… எனக்கு கொஞ்சம் படிக்க இருக்கு… டிஸ்டர்ப் பண்ணாம போறியா?” என்று அவள் சாதாரண குரலிலேயே, கத்தாமல், அவன் முகத்தைப் பாராமல் , அதே சமயம் எடுத்தெறிந்து பேச , ஆதிக்கு எதுவோ ஒன்று சரியில்லை என்பதை மாத்திரம் நன்றாகப் புரிந்தது.

அவள் வாய் வார்த்தைகள் தான், அவளை அங்கிருந்து போகச் சொல்லியது. இருப்பினும் அவள் கை, எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் தன் கைக்குள், சிறைப்பட்டிருப்பதைக் காணவும் அவனுக்கு உள்ளே உறுத்தியது.

தன் தலைவியின் நயனங்கள் தன்னுடன் காதல் மொழி பேசவில்லை என்று அவனுடைய காதல் நெஞ்சம் ஏங்கித் தவிக்க, அவனால் எப்படி அங்கிருந்து நகர முடியும்?

அவளது ஒதுக்கத்துக்கான காரணம், கேட்டு விட நாடியவன், குரலை செருகி, கொஞ்சம் கடினத்தை குரலில் முயன்று வரவழைத்துக் கொண்டான் ஆதிகேஷவ்.
பிறருடன் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என கறாராகப் பேசுபவன், இவளிடம் மாத்திரம் மென்மையுடன் , உருகும் குரலில் பேசுவதன் ஆச்சரியம் அவனும் அறியான். எல்லாம் காதல் செய்யும் மாயம்.

“இங்கப்பாரு மேக்னா….. என் கண்ணப் பாரு” என்று அவன் விழியிடுக்கி, அவளுடைய இடது பக்கவாட்டுத் தோற்றத்தையே பார்த்த படி கேட்க, அவள் உள்ளே திருட்டுவிழி விழித்துக் கொண்டிருந்தாள்.

அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளுக்கு ரொம்ப பயமாய் இருந்தது. ஆழ ஆழமாக மூச்சுக்களை வெளிவிட்டுக் கொண்டே, சிலையென அமர்ந்திருந்தாள் விஷ்வமேக்னா.

ஆதியின் பொறுமையோ, தன்னவளிடமிருந்து எவ்வித துலங்கலும் வராததால் எல்லை கடந்தது. குரலில் இன்னும் கொஞ்சம் கடினத்தைக் கூட்டிக் கொண்டான் ஆதிகேஷவ்.
“மேக்னா… என்ன நிமிர்ந்து பாரு… நிமிர்ந்து பாருன்னு சொல்றேன்ல?”என்று இறுதியில் அவன், உச்சஸ்தாயியில் முடிக்க , விஷ்வமேக்னாவுக்கு உள்ளே கிலியெடுத்தது.

கண்களை இறுக மூடிக் கொண்டு, கைகள் இரண்டையும் பின்னிப் பிணைத்த வண்ணம், அவனைப் பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தாள் விஷ்வமேக்னா.

ஆனால் ஆதி, அவளை அப்படியே விட்டு விட்டு தன் வேலையைப் பார்க்கச் செல்ல நாடவில்லை. ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று ஊர்ஜிதமாக, தன்னவளின் காணக்கிடைத்த, பக்கவாட்டுத் தோற்றத்தின் பிறை நிலா முகத்தை ஆழ்ந்து நோக்கினான்.
அவளது பூரணை நிலா முகத்தையும் காண நாடி, தன்னுடைய நீளக்கையினை நீட்டி , அவளுடைய நாடியை, அவள் சம்மதமின்றிப் பற்றி, தன்னை நோக்கித் திருப்பியவன் அப்படியே அதிர்ச்சிக்குள்ளாகி நின்றான்.

அவனது தொடுகையை உணர்ந்து, மெல்ல கண் திறந்தவள், முதலில் பார்த்தது, தன்னவனின் அதிர்ந்த முகமே. அதைக் கண்டதும் , மேற்கொண்டு என்ன நடக்குமோ என்று பயமாக இருந்தது.
பேசாமல் இன்று காலேஜிற்கு வராமல் இருந்திருக்கலாம் என்று அவள் எண்ணிக் கொண்ட வேளை, பேராசிரியர். அன்பழகனிடம் தான் ஒப்படைக்க வேண்டிய, செயல்திட்டம் நினைவுக்கு வந்தது. அதனால் தான் அவள் வந்ததே.

அவளுடைய வலது பக்கக் கன்னம் சற்று வீங்கி, சிவந்து , ஐவிரல்கள் பதிக்கப்பெற்ற சுவடு தெரிய கலங்கிப் போனான் ஆதி.

இதனால் தான் விஷ்வமேக்னா , தன்னை விட்டும் ஒதுங்கி ஒதுங்கிச் சென்றாளா? அவளுடைய ஒதுக்கத்துக்கான காரணம், அவளைக் கண்டதும் தான் புரிந்தது அவனுக்கு.

அறை வாங்கிய போது தன்னவளில் தெரிந்த வலியை, கண்ணாடி போல பிரதிபலித்துக் காட்டிக் கொண்டிருந்தது அவன் முகம்.

அவளுடைய கன்னத்தை ஏந்தித் தடவப் போன கையை, மீண்டும் உள்ளெடுத்துக் கொண்டு, உடனடியாகத் தோன்றிய கோபத்துடன் அவளைப் பார்த்தான் ஆதி.

அவனுடைய அன்பு முத்தங்கள் மட்டும் பதிய வேண்டும் என்று அவன் நினைத்திருந்த அவனுடைய தேவதையின் கன்னத்தில், யாரோ ஒருவனின் கைத்தடம்.

தன்னுள் எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்ற படி, “யார்ர்ர்ருன்ன்னன அடிச்ச்சது..?” என்று பற்களைக் கடித்த வண்ணம் கேட்டான் ஆதிகேஷவ்.
இதுவரை அவனுடைய அதிர்ந்த முகத்தைக் கண்டு, விழிகள் தாழ்த்தியிருந்தவள், “யார்ர்ர்ருன்ன்னன அடிச்ச்சது..?” என்ற அவனுடைய கோபக் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

அவனுடைய சினங்கொண்ட முகத்தைக் கண்டு பதறித் தான் போனாள் விஷ்வமேக்னா. அவனை முதலில் ஆசுவாசப்படுத்த எண்ணியவள், அவனுடைய விழிகளைக் காதலுடன் நோக்கி, அவனுடைய வன்மையானக் கன்னத்தை தன்னிரு கைகளில் ஏந்தி, சிறிதே கண்கள் கலங்க, “அ… அ.. அ.. தெல்லாம்… ஒண்ணுமில்ல.. க.. கண்ணா” என்றாள்.

“கண்ணா” என்று விஷ்வமேக்னா, அவனை அழைத்தால், சர்வமும் கரைந்துருகிவிடும் என்று அவள் அறிவாள். அதனால் தான் அவள் “கண்ணா” என்றதே.

மேக்னா என்றுமே, பொது இடங்களில் இப்படி அவனுடன் அந்நியோன்யமாய் நடந்து கொண்டதும் இல்லை. அவனுடைய சினத்தை அடக்க வழி தெரியாமல் தான், விஷ்வமேக்னா, அவனுடைய கன்னத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டதே.

அவனுடைய பார்வையாயிருக்கட்டும், உடலாயிருக்கட்டும், இதயமாகவேயிருக்கட்டும். கனிந்தது எல்லாம் ஒரு சில நிமிடங்களுக்குத் தான். பின் அவனுடைய பார்வை சினத்துடன் நிலைத்து நின்றது, அவளுடைய வீங்கிய வலக்கன்னத்தில்.

முதன் முதலாக அவளுடைய தீண்டலுக்கும், “கண்ணா” என்ற அழைப்புக்கும் அவனிடம் உருகல் இல்லாமல் போயிற்று.

அவளுடைய கைகளை தன்னிலிருந்தும் எடுத்து விட்டுக் கொண்டே, தீர்க்கமாய் அவளை ஒரு பார்வை பார்த்த படி, “நா… யார்ர்ர்ருன்ன்னன அடிச்ச்சதுன்னு கேட்டேன்” என்றான்.

விஷ்வமேக்னாவுக்கு எப்படி சமாளித்தாலும், சுற்றி வளைத்து தன்னவன் அதிலேயே இருப்பதை எண்ணி எரிச்சல் மண்டியது.
“ப்ச்.. அதான்.. .. சொல்றேன்ல ஒண்ணுமில்லன்…” என்று அவள் தான் கூற வந்ததை முடிக்கக் கூட இல்லை, அவனுடைய சினந்த குரல் இடையிட்டது.

“யார்ர்ர்ருன்ன்னன அடிச்ச்சது?” என்று மூச்சையிழுத்துப் பிடித்துக் கொண்டு, அவன் கேட்ட தினுசில் மேக்னாவின் விழிகளில் ஒரு தடுமாற்றம்.

அதற்கு மேல் எதைக் கூறினாலும், அவள் செவிகள் அதனை வாங்கிக் கொள்ளாது என்பதனை உணர்ந்தவள், எப்படி விடயத்தைக் கூறுவது என ஒரு நிமிடம் தயங்கியவள், யோசனையுடன் தலையை மீண்டும் குனித்துக் கொண்டாள்.

அவளது தாழ்த்திய விழிகளின் வழியேயும், ஆதிகேஷவன் தன்னையே கூர்ந்து கவனிப்பதை அறிந்தும் அறியாதவள் போல வெகுநேரம் அவளால் இருக்க முடியவில்லை.

பிறகு தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு, கலங்கிய விழிகளுடன் , இனி நடக்கப் போகும் விபரீதத்தை எண்ணி, பயந்து கொண்டே, “அ… அ… அண்ணா.. தான் அ.. அடிச்..” என்று அவள் கூறியதும் தான் தாமதம், அவள் முடிக்க முதல் , ஆதிகேஷவன் தன்னுடைய இருக்கையிலிருந்து ஆவேசமாக எழுந்தான்.

அவன் எழுந்த போது அவனுடைய கோபத்தின் வீரியத்தைப் பறைசாற்றிய , விழுந்த கதிரையும், ஆடிய மேசையும் , அவளை திகிலடையச் செய்ய, மருண்ட விழிகளுடன் அவனை அண்ணார்ந்து பார்த்தாள் விஷ்வமேக்னா.

இப்படி ஏடாகூடமாக ஏதாவது நடக்கும் என்று தான் அவள் வாய் கூட திறக்க விரும்பவில்லை. இன்னும் ஏன்? முகங் கூட காட்ட விரும்பவில்லை. இப்பொழுது என்ன நடக்கக் கூடும் என்பதை நினைக்கையிலேயே அவளுடைய இதயம் ஒருகணம் நின்று துடித்தது.

அவனோ, அவளுடைய தடுமாற்றத்தையெல்லாம் உள்ளெடுக்கும் நிலையில் இல்லை. சிவந்த விழிகளுடனும், முறுக்கேறிய உடலுடனும், விறைத்துக் கொண்டு , அவளிருக்கையை ஓரெட்டில் அடைந்தவன், அவளும் எதிர்பாராத தருணத்தில் , அமர்ந்திருந்தவளின் முன்னங்கையைப் பற்றினான்.

விஷ்வமேக்னாவோ, அவனுடைய திடீர் செய்கையில் அரண்டு போய், விழி மலர்த்தி, தன்னவனின் சுட்டெரிக்கும் சூரிய முகத்தை, பூமியிலிருந்தே அண்ணார்ந்து பார்க்கும் சூரியகாந்தி போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய மருட்சியைக் கூட பொருட்படுத்தாது, அவளுடைய கையினைப் பற்றி ஆதி இழுக்க , மிரண்டு போனவளாய் எழுந்து கொண்டாள் விஷ்வமேக்னா.

எழுந்து கொண்டவளின் , பிடித்த கையை விடாமல் , அவளை இழுத்துச் சென்றான் ஆதிகேஷவ்.

அவனுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், இரண்டெட்டு பின்னேயே வேக நடை நடந்து வந்தவளுக்கு, நடப்பது புரிய, அவன் கையிலிருந்து, தன் கையை உருவ முயற்சித்தாள் விஷ்வமேக்னா.
அந்த இரும்புப் பிடியில் இருந்து விடுபட முடியாமல் தவித்த அவனுடைய தலைவி, அவனுடைய கோப முகம் நோக்கினாள்.
கோபத்தில் சிவந்த முகமாயிருப்பினும், அதில் தெரிந்த அவனுடைய அன்பில் மனம் பூரித்தவள், அதனை விடுத்து, “ப்ளீஸ்… ஆதி… லி.. லி.. லிஸின் டு மீ…” என்று படபடத்த குரலில் அவள் தனக்கு செவிசாய்க்குமாறு கூறியது, அந்த வீறு கொண்ட சிங்கத்தின் காதில் விழவேயில்லை.

பிறகு அவனுடைய கையிலிருக்கும், தன் கையை விடுவிக்க போராடியபடி, “ஆ.. ஆ.. தி… கைய விடு.. ஆதி..”என்று அவள் அரற்றியதைக் கூட அவன் கேட்கும் நிலையில் இல்லை.

அவனோ, தன் தேவதையை அறைந்தவனை, அறைய வேண்டும் என்ற வெறியில் துடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய வேகம் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
அவனுடைய வலிய பாதங்கள் போய் நின்றது, அவன் சற்று முன்பு தாவி குதித்து இறங்கி வந்த அதே வாகை மரத்தின் முன்பு தான்.

வாகை மரமும் அவனை போலவே, எதற்கும் அசர மாட்டாமல், கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது.

வாகை மரத்தின் தாழ்ந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த கிஷோர், கதிர் மற்றும் அவனுடைய இதர நண்பர்கள் அனைவரும், ஆதியின் ருத்ரதாண்டவ போஸில் ஸ்தம்பித்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.

அதிலும் அவனுடைய கைச்சிறையில் மேக்னாவின் கையிருப்பதைக் கண்ட கிஷோர் தான், அந்த வாகை மரக்கிளையை விட்டும் முதலில் குதித்து இறங்கினான்.
கிஷோரின் முகத்தில் குழப்பம் குடி கொண்டிருந்தது. குழப்பம் தோய்ந்த முகத்துடனேயே நண்பனை நோக்கி, “மச்சி… என்னாச்…” என்று அவன் எண்ணியதைக் கேட்டு முடிப்பதற்குள், ஆதியின் வலது கைவிரல்கள் ஐந்தும், கிஷோருடைய இடது கன்னத்தில் பதிந்திருந்தன.
இதர நண்பர்கள் அனைவரும், கிஷோரைப் பின்தொடர்ந்து மரக்கிளையை விட்டும் தாவி இறங்கி வந்த வேளை, எதிர்பாராமல் நடந்த தாக்குதலில் உறைந்து போய் நின்றிருந்தனர்.

கன்னத்தை கைளால் தாங்கிப் பிடித்துக் கொண்டே, கிஷோர் , நண்பனை நோக்கி “டேய் ஏன்டா இப்போ அடிச்ச?”என்று அறை விழுந்த கன்னத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு , பரிதாபமான குரலில் கேட்டும், ஆதியின் சீற்றம் சற்றும் குறையவில்லை.

மேக்னாவுக்கோ, தன் “அண்ணன் கிஷோர்” அடிவாங்கும் போது சிரித்து மகிழ முடியவில்லை. அண்ணன் அடி வாங்கிய போது தடுக்க முனைந்த அவளுடைய கரத்தை, ஆதியுடைய இடது கரம் பற்றியிருந்தது.
“என்ன தைரியமிருந்தா… “என் மேக்னா” மேல கைய வைப்ப?” என்று அவன், காந்தக் குரலில் கோபத்துடன் கேட்டான்.
அவனுடைய “என் மேக்னாவில்” கவனம் பதியாத கிஷோர், ஒரு கையால் கன்னத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டே, “அவ என்ன காரியம் பண்ணான்னு தெரியுமா மச்சி? … ப்ரொஃபஸர் . சிவரஞ்சனிக்கு… ஐ லவ் யூ சிவரஞ்சனின்னு மெசேஜ் அனுப்பியிருக்கா… அந்த கிழிஞ்ச வாய் சிவரஞ்சனி கிட்ட வாங்கின கிழி.. எனக்கு தான்டா தெரியும்” என்று விஷ்வமேக்னாவின் அண்ணன் கிஷோர், தங்கையை அறைந்ததற்கான காரணம் கூற, இப்பொழுது திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள் மேக்னா.

இப்போது தான் செய்த பிழையை அண்ணன் வாயிலாக அறிந்ததும் தன்னை முறைப்பானோ என்று பயந்தபடி, தன்னவனைப் பார்த்த போது , ஆதியின் பார்வை அண்ணன் கிஷோரிலேயே அப்போதும் நிலைத்து நின்றிருந்தது.
“அதுக்காக அடிப்பியாடா? இன்னொரு தடவ “என் மேக்னா” மேல கை வச்சி பாரு… கொன்னுருவேன்”என்று இம்முறையும் சீற்றம் குறையாமல் கத்தினான் ஆதிகேஷவ்.

தற்போது தான், நண்பன் உரைத்த “என் மேக்னா”வில் கவனம் பதித்த கிஷோர், தான் அறை வாங்கிய வலியையும் மறந்து, “என்ன சொன்ன.. என்ன சொன்ன…. “என் மேக்னாவா?” என்று “கப்”பென விடயத்தைப் பிடித்துக் கொள்ள, இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தாள் மேக்னா. .

இப்படி ஏடாகூடமாக ஏதாவது நடக்கும் என்று தான் , இந்த தடிமாட்டிடம், “அதெல்லாம் ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல”என்று கூறி சமாளித்தாள்.
இவன் கேட்டால் தானே? ஒரு கணம் ஆதியின் அன்பை எண்ணி அவஸ்தையில் நெளிந்தாள் விஷ்வமேக்னா.
அண்ணனில் இருந்து பார்வையை எடுத்து, தன்னவனின் முகத்தில் பார்வையைப் பதித்தாள் மேக்னா. அவளைப் போலவே ,தன் ஆத்திரத்தால் நண்பன், உண்மையைக் கண்டு கொண்டு விட்டானே என்ற தடுமாற்றம் தென்படுகிறதோ என்பதைக் காணும் நோக்கில்.
ஆனால் ஆதி எதற்குமே அசராத, அஞ்சா நெஞ்சனாய், உறுதியான , ஸ்திரமான குரலில் , “ஆமா… நானும், அவளும் லவ் பண்றோம்.. இப்போ அதுக்கு என்ன?”என்று அவன் நெஞ்சு நிமிர்த்தி கேட்ட ஸ்டைலை, கண் கொட்டாமல் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள் மேக்னா.
ஆனால் மற்ற அனைவரையும் விட கிஷோர் தான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயிருந்தான்.
அதிர்ந்த குரலில் “டேய்… என்னடா சொல்ற? நண்பனுக்கு இப்டி துரோகம் பண்லாமா?” என்று கேட்க, அதற்கு ஆதி கூறிய பதிலில், அந்தாடிக்கா பனிப்பாறையாய் உறைந்தே போனான் கிஷோர்.

“டேய் மச்சி.. உன்னோட ஃப்ரண்டானதே.. நா மேக்னாவ லவ் பண்றதுக்கு… அப்புறம் தான்டி…அதுனால நீயெல்லாம் ரொம்ப ஃபீல் பண்ணாதடி” என்று ஆதி, கிஷோரிடம் கூற, முழு நண்பர் பட்டாளமுமே ஆதியின் காதல் கதையை அறிந்து உறைந்து போய் நின்றிருந்தது.
ஆதி கூறியது தான் நிஜம். கிஷோருடன் நட்புக்கரம் நீட்டியதே மேக்னாவைக் காதலிக்க , வாய்ப்புகள் கிட்டும் என்று தான்.
அதே சமயம் ஆதி – மேக்னா காதல் அந்தக் கல்லூரியில் பரவாமல் இருந்ததற்கு கிஷோரின் நட்பு தான் காரணம். இவர்களிருவரும் பேசிக்கொண்ட நேரமெல்லாம் ,ஆதி கிஷோரின் நண்பனாதலால், வேறு சந்தேகங்கொண்டு பார்க்கவில்லை. அவர்களும் பிறர் கண்ணுக்கு உறுத்தும் படியாக பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதும் இல்லை.

ஆயினும் கிஷோர், அவர்கள் காதலுக்கு வில்லனாக அமைய விரும்பவில்லை. ஆனால் என்ன? எப்பொழுதும் விறைப்பு பேர்வழியாய் சுற்றிக் கொண்டிருக்கும், தன் நண்பன் , தங்கையைத் தான் காதலிக்கிறேன் என்று சொல்லாமல் விட்டாலும், தான் ஓர் பெண்ணை காதலிக்கிறேன் என்னும் விடயத்தையாவது கூறியிருக்கலாமே என்ற ஆதங்கமே தோன்றிற்று அவனுள் .

நண்பனே தனக்கு மச்சானாக வரப்போவதையிட்டு மகிழ்ந்த கிஷோர், பின்னாளில் இப்படியெல்லாம் அசம்பாவிதங்கள் நடக்கக் கூடும் என்று தெரிந்திருந்தால், அவர்கள் காதலுக்கு, பச்சைக் கொடி காட்டியிருக்கவே மாட்டான்.

விடயமறிந்து ஆதி அதிர்ச்சியானது போலவே , முழுக்கல்லூரியும் அதிர்ந்தது. தங்கு தடையின்றி அவன் காதலும் வளர்ந்தது.

பாரிலிருந்த கிஷோரின் வெறித்த பார்வைக்கு இது தான் காரணம். மேக்னாவை அடித்ததற்கு, ஆதியின் கையால் அறை வாங்கியும், அதை இன்றும் நினைவில் வைத்து, “ஏன்டா மேக்னாவ அடிச்ச?” என்று குடிக்காமல் உளறும் நண்பனை வெறித்துப் பார்க்க மட்டும் தான் அவனால் முடிந்தது.

அன்றைய ஆதியின் நிலையை எண்ணியும், இன்றைய ஆதியின் நிலையை எண்ணியும் பெரிதும் மனம் வருந்தினான் கிஷோர்.
ஆனால் ஆதியோ, அன்று கிஷோருக்கு விடயம் தெரியவந்த பின், மேக்னா தன்னுடன் நடந்து கொண்ட முறையில் லயித்திருந்தான்.

வழமைக்கு மாறாக ஆதி, அன்று மேக்னாவை அழைத்துச் சென்றது ஆடிட்டோரியத்திற்குப் பின்னிருக்கும் குட்டி அறைக்கு.
சுற்று முற்றும் தன் அடர்ந்த இமை முடி கொண்ட நயனங்களை ஓட விட்ட விஷ்வமேக்னாவைக் கண்களாலேயே பருகிக் கொண்டிருந்தான் ஆதிகேஷவ்.

மருண்ட விழிகளுடன் அவனை நோக்கி, “இங்க எதுக்குடா.. என்ன கூட்டி வந்த?” என்று சற்றே அச்சத்துடன் கேட்க, கண்களில் காதலுடன் அவளை நெருங்கினான் ஆதி.

அவளோ, அவன் தன்னை நோக்கி நெருங்கி வருவதை, மார்பு விம்மிப் புடைத்து , மேலும் , கீழும் மூச்சி வாங்கியபடி, பின்னே பின்னே நகர்ந்தாள்.
அவள் பயப்படுவதை எண்ணி, சிறிதும் லட்சியம் செய்யாமல் தயக்கமேயின்றி, அவளை நெருங்கி வந்தவன், அவளுடைய கன்னத்தைப் பற்றி, மெல்ல வருடி விட்டான் ஆதி.

“ரொம்ப வலிக்குதா மேக்னா? நல்லா அடிச்சிட்டானாடா?” என்று அவன் கரிசனையுடன் கேட்க, அவளுக்கு சட்டென கண்கள் கலங்கின.

யாருமில்லா தனியறைக்குத் தன்னையழைத்து வந்தவன், தன் காதலை பயன்படுத்தி நினைத்திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.
ஆனால் அவன் தன் கன்னத்து வலியைப் பற்றி விசாரிக்க, மனம் நெகிழ்ந்தவளுக்குக் கண்கள் குளமாகின.

அவளது கண்ணீரைக் கண்டு பதறி, உள்ளம் துடித்தவன், கண்ணீருக்குக் காரணம் வலி தான் என்று எண்ணிக் கொண்டவனாய், “ஹேய் என்னாச்சு மேக்னா? ரொம்ப வலிக்குதாடா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டான்.

அதற்குக் காரணமான கிஷோர் மீது , உடனடியாக ஒரு கோபம் முளைக்க, “அவன என்ன பண்றேன்னு பாரு” என்று கருவிய படி, அங்கிருந்து நகர முயன்றவனை, சட்டென இரு கைச்சந்தின் இடையிலும் கையிட்டு, அவனை இறுக அணைத்துக் கொண்டாள் மேக்னா.
அவளுடைய அடிவாங்கிய கன்னம், அவனுடைய இதயத்தில் அழுந்தியிருந்தது. அவள் கைகள் அவனுடைய முதுகை பற்றிப் பிசைந்து, இன்னும் இன்னும் அவனைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டன.

ஆதிகேஷவனோ என்றுமில்லாமல், இன்ப சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அவளுடைய பஞ்சுக் குவியல் மேனி, தன் முரட்டு மேனியில் படும் போது, புதுவித அவஸ்தையை உணர்ந்தான் ஆதி.

அவளை அணைத்து, உணர்ச்சிகளை அலை பாயவும் விட முடியாமல், அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தவும் முடியாமல் அப்படியே நின்றிருந்தான் ஆதி.
கூடவே தலையில் ஜில்லென்று ஐஸ்கட்டியை கொட்டியது போல குளிர்மையாகவும் இருந்தது அவனுக்கு. காரணம் அவன் தேவி, “ஐ… ஐ.. ஐ.. ல.. லவ்.. யூ ஆதி.. ஐ லவ் யூ ஸோ மச்”என்று கூறக் கேட்டமை தான்.

ஆதி பாரினுள் அமர்ந்து , அன்றையை நிகழ்வுகளை அசை போட்ட படியிருந்த போது, அவனுடைய செல்,
“சக்கரை நிலவே… பெண்ணிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதியில்லை.. ஏனில்லை
நீயில்லையே!”
என்று பாட, பேன்ட் பாக்கட்டினுள் கைவிட்டு, செல்பேசியை எடுத்துத் திரையைப் பார்த்தான்.
“மை ஸ்வீட்டி” என்று காட்ட, சிரித்துக் கொண்டே, அதனை இயக்கி, காதில் வைத்து, “சொல்லு ஸ்வீட்டி…” என்றான்.

மறுமுனையில் இருந்து கேட்ட பெண்குரல் ஏதோ சொல்ல, இவன் இங்கிருந்து கொண்டே, “நா பார்ல இருக்கேன் ஸ்வீட்டி” என்றான்.

மறுமுனையில் இருந்த பெண், குடிக்கிறாயா என்று கேட்டிருக்க வேண்டும். அதற்கு அவன், “நா குடிக்கல ஸ்வீட்டி… குடிச்சா மேக்னாவுக்கு பிடிக்காது” என்றான் தெளிவான குரலில்.
“மேக்னா”என்ற சொல்லைக் கேட்டதும் , மறுமுனையில் இருந்த பெண்மணிக்கு, வயிற்றில் புளியைக் கரைத்தது போல இருந்தது.
இன்னும் ஆதி மேக்னாவை மறந்து தொலைக்கவில்லை என்று நினைக்கையில் , அப்பெண்மணிக்கு இலேசாக கண்கள் கூட கலங்கின.
அதனை வெளிக்காட்டாது, குரலைக் கடினமாக்கிக் கொண்டு, “இப்போ மணி என்ன?” என்று கேட்க, இடது கையின் மணிக்கட்டைத் திருப்பி மணி பாரத்தவன், சற்றே குற்ற உணர்வு ஓங்கிய குரலில், “மணி பன்னன்டரை” என்றான்.
அது நண்பகல் பன்னிரண்டரை அல்ல. மாறாக நடுச்சாமம் பன்னிரண்டரை.

மறுமுனையில் இருந்த பெண்மணியும் ஏதோ சொல்ல, “சரிமா..வந்துட்றேன்மா..”என்று தாழ்ந்த குரலில் மொழிந்த படியே அழைப்பைத் துண்டித்த கையோடு, அந்த சொகுசு ஆசனத்தை விட்டும் எழுந்தான்.

நண்பன் செல்லப் போவதை அறிந்த கிஷோர், அமர்ந்திருந்த நிலையிலேயே , ஆதியின் கையைப் பற்றித் தடுத்து, “எங்கடா போற? முதல்ல காச வச்சிட்டுப் போ” என்றான்.
தன் பின்புற பாக்கெட்டில் கை விட்டு, கர்ப்பிணி பெண்ணிண் வயிறு போல இருந்த பர்ஸிலிருந்து , சில ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து, மேசை மீது வைத்து விட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.
அன்று பார்த்து கிஷோர் தன்னுடைய பர்ஸை மறந்து வைத்து விட்டு வந்திருந்ததால், அவ்வாறு கூறினான். இன்றேல்.. கிஷோரை கட்டணத்தை செலுத்தியிருப்பாள்.
ஸ்வீட்டி வேறுயாருமல்ல. அவனைப் பெற்ற தாய் தான். வீட்டுக்கு வருமாறு அழைத்ததும், உடனேயே கிளம்பி விட்டான் ஆதி. வெளியே வந்து பார்க்கிங் ஏரியாவினுள் இருந்த தன்னுடைய பழைய ரக “ஹீரோ ஹொன்டா” பைக்கில் ஏறியவன், வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தவாரம்பித்தான்.

அத்தியாயம் – 2

நடு இரவில், எதிர்க்காற்று சில்லென்று முகத்தில் மோத, அதிக வாகனமில்லா சாலையில் , ஆதிகேஷவன் பறந்து கொண்டிருந்தான்.

அவனுடைய தொளதொள சொக்காவும், அடர்ந்த மயிரும் காற்றில் அவனைப் போலவே பறந்து கொண்டிருந்தது.
அந்த இருவழிப்பாதையினைப் பிரித்து , நடுவே சென்று கொண்டிருந்த தெருவோர மின்விளக்குகள் எல்லாம், அவனுக்கு சல்யூட் அடிக்கும் வீரர்கள் போல தென்படலாயிற்று.

அந்த மங்கிய மஞ்சள் ஒளியில், அதிக வாகன நெரிசல் இல்லாத சாலையில் , வண்டியோட்டிக் கொண்டிருந்தவனின் கண்கள், தானாகவே, இடதுபுறக்கண்ணாடியை நோக்கின.

அங்கே அவனுடைய ஆருயிர்க் காதலி மேக்னா, அவன் பின்னால் அமர்ந்து, அந்தக் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்து , மோனப் புன்னகை சிந்திக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்டவனின் முகத்திலும், தானாய் ஓர் முறுவல் ஒட்டிக் கொண்டது.
மனம் சிறகடித்துப் பறக்க, அந்தக் கண்ணாடியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

விஷ்வமேக்னாவோ , தன் தங்கமகனின் தோளின் மேலால் கையிட்டு, அவன் நெஞ்சில் தன்னிரு கைகளையும் பதித்துக் கோர்த்து, அவன் கன்னத்தோடு, தன் கன்னத்தை இழைத்துக் கொண்டாள்.

அச்சமயம் , ஆதிகேஷவனின் முப்பத்திரண்டு பற்களும், வாய் எனும் அருங்காட்சியகத்திலிருந்து, பார்வைக்கு கிடைத்தது. அவளுடைய மென்மைக் கன்னங்கள், தன் மயிரடர்ந்த கன்னத்தில் இழையும், சுகத்தை அனுபவித்துக் கொண்டே, ஒரு சில கணங்கள் கண்ணை மூடித் திறந்தான் ஆதிகேஷவ்.

கண்ணாடி, அவனுடைய திறந்திருந்த வாய் எனும் அருங்காட்சியகத்தின், இதழ்கள் எனும் கதவுகளை மெல்ல மெல்ல மூடிக் கொண்டதைத் தான் காட்டியது.
அவனுடைய கண்களில் குழப்பம் மிகுந்திருந்தது. கன்னம் இழைந்த அவனுடைய விஷ்வமேக்னா, அந்த விம்பத்தில் இல்லை. அவன் மட்டும் தனியாக நிஜத்துடன் நிழலாகி நின்று கொண்டிருந்தான்.

சங்ககாலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த தலைவியர்கள் தான் போர்காலம் முடிந்து, தலைவன் வீடு வரும் வரை, வழி மேல் விழி வைத்து காத்திருப்பர்.
ஆனால் இங்கே தலைவன், தன்னை விட்டும் சென்ற தலைவிக்காக, முல்லை வாழ் தலைவி போல காத்திருக்கிறான் அதுவும் ஏழு வருடங்களாக…

இதே பாதையில் அவனும், அவளும் சென்றது நினைவு வந்து, அவனுடைய நெஞ்சைப் பிழிந்தது. அவனுடைய மேக்னா, என்றாவது ஒரு நாள் தன்னை நாடி வருவாள் என்று அவன் இதயம் உறுதியாக நம்பியது.

அதே நேரம்…..
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே, டீஷேர்ட்டும், ஜீன்ஸூம் அணிந்து, சிவப்பு நிற மாருதி காரின் கதவில் சாய்ந்து கொண்டு, நின்றிருந்தாள் தாரிணி.
அவளுடைய விழிகள் இரண்டும் , தன் தேடலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

நெற்றியை பாதி மறைத்து விழும் படி, வெட்டப்பட்டிருந்த கூந்தலை , வலது கையால் கொஞ்சம் சரிசெய்து கொண்டே, தன்னுடைய ஜீன்ஸ் பாக்கட்டினுள் கைவிட்ட படி, நொடிக்கொருதரம், தன்னுடைய இடது கை மணிக்கட்டைத் திருப்பித் திருப்பி, கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி பரபரப்பாகவே இருந்தாள் தாரிணி.

“எவ்ளோ நேரமாச்சு.. சொன்னா.. சொன்ன டைம்க்கு இருக்கணும்.. சரி அரைவல் செக்ஷன்க்கு வந்து நிற்குறேன்னு சொன்னா… இல்லடி.. நீ பார்க்கிங் ஏரியாவுலேயே வெய்ட் பண்ணுனு… சொல்லிட்டு… எங்க போய்த் தொலைஞ்சாளோ தெரியல…” என்று தாரிணி கொவ்வைச் செவ்வாயூடாக , நடிகை ஸ்ருதி ஹாசனின் தொனியில் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

இயல்பிலேயே தாரிணியின் குரல் கொஞ்சம் தடிப்பானது. கேட்பதற்கு அச்சு அசல் நடிகை ஸ்ருதி ஹாசனின் குரல் போலவே இருக்கும்.
இப்படியவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கையில், பின்னாலிருந்து யாரோ, தன் வலப்புறத் தோளைத் தட்டுவது போல இருக்க, சலித்த முகமாகவே திரும்பினாள் தாரிணி.

அங்கே, தொடையழகு முழுதும் பிரதிபலிக்கக் கூடியளவிலான கறுப்பு நிற மிடியில், மாரளவு வெட்டப்பட்ட கூந்தலுடன், ஓர் பெண் நின்றிருந்தாள்.

அவளைக் கண்டதும் தாரிணியின் முழுத் திங்கள் முகம் ஒரு கணம் பிரகாசித்து, இருண்டு, கோபத்துக்கான அறிகுறியைக் காட்டியது.

தாரிணியின் கோபத்துக்கான காரணம் புரிய, வந்தவளும், தாரிணியை சமாதானப்படுத்தும் நோக்கில், தோழியை சட்டெனத் தாவிக் கட்டிக் கொண்டாள்.
புதிதாய் வந்தவளின் “கட்டிப்பிடி வைத்தியம்”, தாரிணியின் கோபத்தை மெல்ல மெல்லக் குறைக்கத்தான் செய்தது.
“ஸாரிடி… கொஞ்சம் லேட்..ஆயிடுச்சு.. ஏம் ரியலி ஸாரி..” என்று கட்டிக் கொண்டே, புதியவள் காதுக்குள் கிசுகிசுக்க, தாரிணியின் கோபமும் முற்றாய்த் தணிந்தது.

“சரி சரி.. மன்னிச்சிட்டேன்.. மூச்சு முட்டுதுடி.. முதல்ல விடு நிரோ ”என்று தாரிணி, தோழி நிரோஷாவின் அணைப்பிலிருந்து விடுபடக் கூற, நிரோஷாவும் சிரித்துக் கொண்டே, தாரிணியை விடுவித்தாள்.
“எவ்ளோ நாளாச்சுடி.. உன்ன பார்த்து…”என்று மகிழ்ச்சி பொங்கிய குரலில் கூறிய நிரோவை நோக்கிய தாரிணி, “சரிடி.. கெட் இன்டு கார்”என்று சிரித்துக் கொண்டே கூறிய படியே, கண்களால் காரைக் காட்டினாள்.

நிரோஷாவும் , அழைப்பை இன்முகமாக ஏற்று, தான் கையோடு இழுத்துக் கொண்டு வந்த லக்கேஜ்ஜினை, கார் டிக்கியில் ஏற்றி விட்டு, சாரதி ஆசனத்தில் இருந்த தாரிணியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
இரு பெண்களும் சீட்பெல்ட்டினைப் போட்டுக் கொண்டதும், வண்டியும் கிளம்ப ஆயத்தமானது.
“அப்புறம் நிரோ.. யு. எஸ் எல்லாம் எப்படியிருக்கு?” என்று எதையோ எதிர்பார்த்த வண்ணம் தாரிணி கேட்க, நிரோவின் முகத்தில் புன்னகை பரவியது.

தோழியின் மறைமுகமான கேள்வியைப் புரிந்து கொண்ட நிரோவும், “எல்லாம் நல்லா தான் இருக்கு…” என்றவள், தன்னுடைய வலக்கையின் சுட்டுவிரலை, மூக்குக்கு நேராக வைத்து, எடுத்த படி “ஒருத்தன தவிர…” என்று கூற, தாரிணி ஸ்டியரிங்கில் இருந்த இடது கையை எடுத்து, கூந்தலை சரிசெய்து கொண்டே சிரித்தாள்.

“அந்த ஒருவன்..
தன் தலைவன்” என்று சொல்லாமல் அவளுக்குப் புரிய, அவளுடைய கன்னக்கதுப்புக்கள் இரண்டும் குங்குமம் போல சிவந்தன.

“உன்னோட கார்த்திக்… நல்லா தான் இருக்கான்.. ஆனா நான் தான் பாவம்… மூச்சுக்கு முன்னூறு தரம்.. தாரிணி.. தாரிணின்னு சொல்லி சொல்லியே.. என் காதுல..ரத்தம் வர வைச்சிட்டான்” என்று போலியாக சலித்துக் கொண்டே கூறிய நிரோவின் முகத்தைத் திரும்பிப் பாராமல், நேர்ப் பார்வையுடன் வண்டியோட்டிக் கொண்டிருந்த தாரிணியின், முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

அவளுடைய கார்த்திக். அவளுக்கே மட்டும் சொந்தமான கார்த்திக். “உன்னோட கார்த்திக்” என்று தோழி கூற, கேட்ட போதே அவள் மனம் எங்கோ சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.
தன் தோழியிடம் கூட, அவன் தன்னைப் பற்றியே காவியம் பாடிய கதையை, காவியத்தின் ஒவ்வொரு படலத்தையும், ஒவ்வொரு அடியையும் இரசித்துக் கேட்கத் தான் அவளுக்கும் ஆசை.
ஆனால் உசிதமான தருணம் அதுவல்ல என்பது உணர்ந்தே, தாரிணி மௌனமாக வந்தாள்.
தோழியுடைய மகிழ்ச்சி பொங்கிய முகத்தைப் பார்த்துத் தன் முகம் மட்டும் திருப்பியிருந்த நிரோ, தற்போது தன்னுடலையும் தோழியை நோக்கித் திருப்பினாள்.

“உன் மூஞ்சி.. ஒகே…. கொஞ்சம் சுமாரா தான் இருக்கு… ஆனா உன் வாய்ஸ்.. அதைக் கேட்டு எப்டி தான் கார்த்திக் விழுந்தான்னே தெரியல?” என்று காற்றில் கை விரித்துக் கூறிய வண்ணமே, தாரிணியின் குரலுக்கு கமெண்ட் அடிக்க, நிரோவைப் பார்த்து முறைத்தாள் தாரிணி.

“ஹேய்.. என் வாய்ஸ்.. ரொம்ப பெடிக்யூலர் வாய்ஸ்.. புரிஞ்சுதா?” என்று ஸ்டியரிங்கில் இருந்த இடது கையை எடுத்து, அருள் புரிவது போல காண்பித்துக் கூறினாள் தாரிணி.

தோழி சற்று தன்னை முறைப்பதை உணர்ந்த நிரோ கதையை மாற்ற எண்ணி, “சரிடி.. நா ஒத்துக்குறேன்.. ஆமா.. தாரிணி .. அம்மா நல்லாருக்காங்கள்ல? சரியா பார்த்தா.. நா ஆன்ட்டிக்குத் தான் தேங்ஸ் சொல்லணும்.. மிட்நைட்ல.. தனியா.. என்ன பிக்-அப் பண்ண அனுப்பியிருக்காங்கலே!!” என்று தாரிணியின் தாயை நினைவு கூர்ந்து நன்றி சொன்னாள்.

தாரிணிக்கும் தாயின் நினைவில், முன்னைய முறைப்பு எல்லாம் மறந்து தான் போனது. இலேசாய் முகம் கூட கனிந்தது.

அவளுக்கு தந்தையில்லை. தாய் மட்டுமே. கொஞ்ச காலத்திற்கு முன் வீட்டில் நடந்த தீ விபத்தில் தந்தை எமலோகம் சென்று விட, அவளுக்கென்றிருக்கும் ஒரே சொந்தமாக ஆகிப் போனவர் அவளுடைய தாய் மட்டுமே.

தந்தையைப் பற்றி, அவருடைய உருவத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு இலேசாக தலை வலிக்க ஆரம்பிக்கும்.

வெம்மையுடன் கூடிய தீப்பிழம்பின் உஷ்ணம் முகத்தில் மோதுவது போல ஓர் பிரம்மை தோன்றும். உடல் வியர்க்க ஆரம்பிக்கும்.
இந்த சங்கடங்களாலோ? என்னவோ? தாரிணி தந்தையைப் பற்றி நினைப்பதை அடியோடு நிறுத்தியிருந்தாள்.

ஆனால் அவளுடைய தாய், பட்டிக்காட்டுத் தாயாக அன்றி, பட்டணத்துக்குப் பொருத்தமான தாயாக அமைந்ததில் அவளுக்கும் மகிழ்ச்சியே.

அமெரிக்க மாப்பிள்ளையான கார்த்திக்குக்கு தோதாக , தன் மகளை மாற்ற எண்ணி, பல காரியங்கள் தாரிணியின் தாய் செய்ததுண்டு. மேற்கத்திய ஆடைகள், மேற்கத்திய உணவு வகைகள், மேற்கத்திய “கெட்டுகெதர் விருந்துகள்” என எல்லாமும் அதில் அடக்கம்.

இப்படி தாயே, அவளுக்கு எல்லா வகையிலும், அவளுக்கு தைரியம் தர, நடுஇரவில் தனியாக, விமானநிலையத்திற்கு, தோழியை அழைத்து வர அனுப்பியது ஒன்றும் அவளுக்கு பெரிய விடயமே இல்லை.
தோழியை நோக்கிய தாரிணி, “அம்மா நல்லா தான் இருக்காங்க.. அம்மாவுக்கு எப்போவுமே.. பெண்கள் தைரியசாலியா வளரணும்னு ஆசை இருக்கு… அதனால் ஐம் ஸோ லக்கி..” என்று கண்ணைச் சுருக்கி மூடி, தோள்களை குவித்து, உயர்த்தி அழகாக கூறிய படியே, “நினைச்ச நேரத்துல… நினைச்ச இடத்துக்கு .. நினைச்ச மாதிரி போய் வரலாம்… பட்.. இன்ஃபோர்ம்.. பண்ணிட்டு போகணும்.. சொல்லாம போனா.. மீ காலி.. ” என்று தன்னுடைய தடித்த குரலை உயர்த்திப் பேச , நிரோஷாவும் அமைதியாய் கேட்டுக் கொண்டு வந்தாள்.

நிரோஷாவும், தாரிணியும் மாணிக்கக் கற்கள், இரத்தினக் கற்கள், வைரக்கற்கள் என பலவகையான கற்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் “க்ரிஸ்டல் பேலஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற தனியார் நிறுவனத்தில் , ஒன்றாக பணி புரிபவர்கள்.

நிரோஷாவுக்கு, அந்நிறுவனத்தின் , அமெரிக்கக் கிளையில், ஆறு மாதம் தற்காலிக வேலை கிடைக்க, அமெரிக்காவைப் பார்க்கலாம் என்று மகிழ்ச்சியோடு சென்றவள், திரும்பி வந்தது இன்று தான்.

நிரோஷாவுக்கு தாய், தந்தை என யாரும் கிடையாது. சர்வமும் ஹாஸ்டல் வாசம் தான். தாரிணி தன்னோடு வந்து தங்குமாறு, காலில் விழாத குறையாக கெஞ்சியும் நிரோ சிரித்த முகமாகவே மறுத்து விட்டாள்.
நிரோவுக்கு எப்போதுமே , பிறரில் தங்கி வாழாது, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரு கொள்கை உண்டு.

அதனால் தான் அவளை விமான நிலையத்திலிருந்து , அழைத்துச் செல்ல தாரிணி வந்திருந்தாள்.

கருநீல வானில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் மின்ன, எதிர்க்காற்று சில்லென்று முகத்தில் மோத , நண்பியுடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் தாரிணி.

அதே நேரம்….
மிதமான வேகத்தில் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான் ஆதிகேஷவ். அவனுடைய கரங்கள், பைக்கின் கைப்பிடியை, அழுத்திப் பிடித்திருந்தன.

ஓர் பாறாங்கல்லை ஏற்றி வைத்தால் வலிப்பது போல, அவனுடைய மையல் கொண்ட நெஞ்சம் வலித்துக் கொண்டிருந்தது.

சும்மாவே கலங்கியிருந்த கண்கள், எதிர்க்காற்றினால் இன்னும் கொஞ்சம் கலங்க, வலது புறங்கையினால், கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டான்.

மேக்னா போனதன் பின்பு, அவளை தேடாத இடமில்லை. நினைக்காத நேரமில்லை. உயிருக்குயிராய் நேசித்த அவளுக்கு, எப்படி அவனை விட்டும் செல்ல, மனம் வந்தது?

வெறும் கூடு மட்டும் இங்கிருக்க, அவனுயிர் மாத்திரம் அவளைத் தேடி சென்று விட்டிருந்தது.

அவனுடைய கண்கள் கூட, பாதையின் இருபுறமும் திரும்பித் திரும்பி, அவளைத் தான் தேடிக் கொண்டிருந்தன. அவள் கிடைத்துவிடமாட்டாளா? என்று அவனுடைய உள்மனம் ஏங்கிக் கொண்டேயிருந்தது.

காதோரம் கிசுகிசுக்கும் அவளுடைய போதைக்குரல், முத்தமிடும் போது மூடிக் கொள்ளும் விழிகளின் அடர்ந்த இமைகள், அவளுக்கேயென்று மட்டும் உரித்தான அவள் மேனியின் மல்லிகைப் பூவின் மனத்தையொத்த வியர்வை மனம் என்பவற்றையெல்லாம் மீண்டும் சுகிக்க மாட்டோமா என்று அவனுடைய ஆண்மனம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது.

“என்னோட மேக்னாவ… எனக்கு ஒரு முறை பார்த்தாலே போதும்” என்று அவனுள்மனம் மானசீகமாக அவனுக்குக் கூறிக் கொண்டது.
சாலையின் இடப்புறமாய் அமைக்கப்பட்டிருந்த , பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணின் மீது கண்களை தூரத்திலிருந்தே ஓட விட்டான் ஆதி.

நடுஇரவில் ஓர்பெண், பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டவனுக்குள், பளிச்சென்று மனதுக்குள் மின்னல் வெட்டியது.

சிவப்பு நிற டாப்ஸ் மற்றும் மஞ்சள் நிற லெகிங்கும் அணிந்திருந்தவள், வலது தோள் வழியே முந்தானையை வழிய விட்டிருந்தாள்.

தோளில் மாட்டப்பட்டிருக்க வேண்டிய கைப்பையை அவள் , தொங்கிக் கொண்டிருந்த இரு கைகளாலும் பற்றிப்பிடித்திருந்தாள்.

தூரத்தில் வந்து கொண்டிருந்த ஆதியின் பைக், அந்தப் பெண்ணைக் கண்டதும் அதிர்ச்சியில் பிரேக் அடித்து, பஸ் தரிப்பிடத்தை அடையும் முன்பே நின்று விட்டது.
அவனுடைய கண்களில் ஓர் பிரகாசமும், முகத்தைச் சுற்றி ஒளிவட்டமும் தோன்றிய வேளை, அவனுடைய உதடுகள், “ம்மேக்.. ன்னா..!” என்று ஆனந்த அதிர்ச்சியில் உச்சரித்தன.

அவனுடைய மேக்னா , இந்த நடுநிசியில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்றெல்லாம் அவனுடைய காதல் மூளை யோசிக்கவில்லை.
மாறாக அவளைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில் , புது உற்சாகம் கிளம்ப, மீண்டும் பைக்கைக் கிளப்பிக் கொண்டு, அப்பெண்ணை நாடிப் போனான் ஆதி. பைக்கை அவளுக்கு ஓரிரு அடிகள் தொலைவிலேயே நிறுத்தியவன், அவளை நோக்கி நடக்கவாரம்பித்தான்.

அவளை நோக்கி மெல்ல மெல்ல எட்டுக்கள் எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஆதியின் முகம் இலேசாக வியர்த்தது.
அவனுடைய உள்ளம், அவனுடைய காதலியின் முகத்தை நோக்கப் போகும் தருணத்தை எண்ணி கழிந்து கொண்டிருந்தது.

ஆனால் அவனுடைய மேக்னாவுக்குத் தான், ஆதிகேஷவன் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பது புரியவேயில்லை. அந்தப்பக்கமாய் ஒரு ஆட்டோ வரவே, அதற்குக் கை காட்டி நிறுத்தி விட்டு, சிறிதும் தாமதியாமல் ஏறிக் கொண்டாள்.

அவள் தன்னை விட்டும் செல்லப் போவதையறிந்து, ஆட்டோவில் அவளை ஏற விடாமல் தடுக்க, அவன் வேக எட்டு எடுத்து வைப்பதற்குள், ஆட்டோ நகர்ந்திருந்தது.

தன் வண்டியைப் பற்றிய நினைவை முற்றிலும் மறந்த ஆதிகேஷவ், தன் மேக்னா தன்னை விட்டும் சென்று கொண்டிருப்பதைத் தாங்க முடியாமல், அவளை எப்படியாவது தடுத்து நிறுத்தி விடும் நோக்கில், “மேக்னா….. மேக்னா” என்று இரைந்த வண்ணம், ஆட்டோவின் பின் அசுர வேகத்தில் ஓடத் தொடங்கினான்.

அந்த ஆட்டோ விட்ட பெரும் இரைச்சலில், இவனுடைய கூப்பாடு தானும், அவனுடைய மேக்னாவின் செவிகளிலோ, சாரதியின் செவிகளிலோ விழாமல் போயிற்று.

ஆயினும் அவனுடைய ஓட்டம் மட்டும் நிற்கவேயில்லை. தன்னால் இயன்ற மட்டும் வேகமாய், அந்த ஆட்டோவின் பின் மூச்சிறைக்க இறைக்க ஓடிக் கொண்டிருந்தான் ஆதிகேஷவ்.

“மேக்னா.. ப்ளீஸ் மேக்னா… வண்டிய நிறுத்து மேக்னா…..” என்று , கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை விட்டு, வேகவேகமாக முன்னேறிக் கொண்டிருந்த ஆட்டோவின் பின்னே கத்திக் கொண்டே, சென்று கொண்டிருந்தான் ஆதிகேஷவ்.
ஒரு கட்டத்தின் மேல், இயந்திரத்தின் வேகத்துக்கு ஆதிகேஷவனால் வேகம் கொடுக்கவே முடியவில்லை. தன் கண்களை விட்டும் முற்றாக அகன்ற , அந்த ஆட்டோவினைப் பிடிக்க முடியாமல் களைத்துப் போன, அவனுடைய உடலை விடவும், அவனுடைய மனம் அதிகமாகவே களைத்துப் போனது.

குனிந்து முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, வேகவேகமாக மூச்சிறைத்தவனுக்கு, இனிமேல் என்ன செய்வது என்ற குழப்பம் மேலோங்கி இருந்தது.

தன் மேக்னாவைத் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போன, தன் கையாலாகாத தனத்தை எண்ணி கண்கள் வெகுவாகக் கலங்க, நடு வீதியில் அழ முடியாமல், தன் கீழுதட்டை பற்களால் அழுந்தக் கடித்து, தொண்டைக்குழிவரை வந்த அழுகையை அடக்கிக் கொண்டான் ஆதிகேஷவ்.

அந்தக் கலக்கத்துடனேயே நிமிர்ந்தவன், தன்னுடைய செல்லை எடுத்து, காதில் வைத்தான்.

அங்கே….

நிரோஷா தன் கைப்பையில் இருந்து, வண்ணக் கடதாசியால் சுற்றப்பட்டிருந்த ஓர் பரிசுப் பொதியை எடுத்து, “டொட்டடொய்ங்” என்று வாயால் பின்னணி இசை வாசித்துக் கொண்டே, தாரிணியின் முகத்தின் முன் நீட்டினாள்.

பாதையை மறைத்த பரிசினை, இடக்கையால் முகத்தை விட்டும் அப்புறப்படுத்திக் கொண்டே தாரிணி புரியாமல் விழிக்க, நிரோ தோழியின் குழப்பம் அறிந்து வாய் திறந்தாள்.

“என்ன பார்க்குற? இது தான் உன் ஆளு…என்னோட குயில்க் குரல் சித்ராக்கு கொடுக்க சொல்லி கொடுத்தனுப்ச்ச கிஃப்ட்டு…”என்றாள் நிரோ, மீண்டும் தன் நண்பியின் தடித்த குரலைக் கலாய்த்த வண்ணம்.

கார்த்திக்கா.. இதை தனக்கு கொடுத்தனுப்பினான்? சொற்ப நேரத்திற்கு முன் உரையாடிய போது கூட, தனக்கொரு பரிசு அனுப்பியிருப்பதாக சொல்லவேயில்லையே?
ஒருவேளை “ஷாக்கிங் சர்ப்ரைஸோ?” என்று எண்ணிக் கொண்ட தாரிணிக்குள், தன் மன்னவன், தனக்கனுப்பிய பரிசினை பார்த்தாக வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

ஸ்டியரிங்கில் இருந்து ஒரு கையை மாத்திரம் எடுத்து, வாயெல்லாம் பல்லாகவே, சந்தோஷத்துடன் அந்த பரிசை எடுக்க முயன்றாள் தாரிணி.

நிரோஷாவுக்கும் , தாரிணியின் செய்கையை கண்டு , எதிர்பார்ப்பு தூண்டிவிடப்பட , அந்தப் பரிசை தாரிணியின் கைகளுக்கு சிக்க விடாமல், போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்.

கையை நீட்டி, ஆவலுடன் அந்தப் பரிசை எடுக்க முயன்ற போதெல்லாம் , அங்குமிங்கும் கையை கொண்டு சென்றாள் நிரோ.

ஒரு கட்டத்தில் அதிலிருக்கும் பரிசினைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், ஸ்டியரிங்கில் இருந்து இரு கையையும் எடுத்து , அதனை எட்டிப் பிடிக்கப் பார்த்த வேளையில், பெருங்குரலெடுத்துக் கத்தவாரம்பித்தாள் நிரோ.

கார்க் கண்ணாடி வழியாக பாதையை வெறித்த நிரோ, “ஹேய் பாத்துடீ… இடிச்சிட போற?” என்று கூறிய போது, தாரணியின் விழிகள் அப்போது தான் சாலையில் பதிந்தன.

எதிரே ஒரு ஆடவன், வண்டிக்கு புறமுதுகிட்டு நின்று கொண்டிருந்தான்.
அவசரத்துடனும், பதற்றத்துடனும் ஹாரனை அடித்துக் கொண்டு, அவனை வழியை விட்டு அகலுமாறு கூறியவளின் முயற்சிகள் வீணாய்ப் போக, சிலை மாதிரி நின்று கொண்டிருந்தவனின் மேல் மோதி விடாமல் தடுத்து நிறுத்த, ப்ரேக்கைப் போட பாதத்தினை கொண்டு போன அந்த நொடியில்,தாரிணி எதிரே நின்ற ஆடவன் மேல் இடித்து விட்டிருந்தாள்.

அத்தியாயம் – 3
அவசரமாய் “ப்ரேக்கைப்” போட்டு வண்டியை நிறுத்தியவளின் கைகள், ஸ்டியரிங்கினையே இறுக்கிப் பிடித்திருந்தன.
இருபெண்களின் முகத்திலும் அதிர்ச்சி கலந்த அச்சம் துளிர் விட்டிருந்தது. அதிலும் தாரிணியின் முகத்தில் முத்து முத்தாய், நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான் போல வியர்வை முளைத்திருந்தது.

அவளின் மார்போ அச்சத்தில் விம்மிப் புடைத்து, ஏற இறங்க மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.
இருவரும் நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துக் கொள்ளக் கூட துணிவின்றி, காரின் ரியர் வியூவ் கண்ணாடி வழியாக, ஒருவரைப் பார்த்த படி அமர்ந்திருந்தனர்.

இருவரும் பேச்சு மூச்சற்று, மூளைகள் வேலை செய்யாமல் நின்ற வேளை , தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு முதலில் பேசியது நிரோஷா தான்.

“அந்தாளுக்கு என்னாச்சோ தெரிய.. லடீ” என்று பயத்தில் கைகளை உதறிய படி, பதற்றத்துடனே, தாரிணியைப் பார்த்தாள் அவள்.
தன் வதனத்தை மறைத்த கார்குழலை பின்னுக்குத் தள்ளி, மனதில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தோழி இறங்குவதை, கண்ணுற்ற நிரோஷாவும் காரிலிருந்து இறங்கிக் கொண்டாள்.

உள்ளே என்ன தான் மலையளவு அச்சம் ஒளிந்து கிடந்தாலும், அதையும் மீறி அவளுக்கு தன் வண்டி மேல் வந்து விழுந்தவனின் உயிரைப் பற்றிய அக்கறை எழ, பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், தன் வண்டியின் முன் வந்து விழுந்த ஆடவனை நோக்கி நடந்தாள்.

இரத்தம் ஆறாய் பெருகி வழிந்து கொண்டிருந்த சுவடுகளைக் கண்டதுமே, கைகால்கள் உதறின இரு பெண்களுக்கும்.

மெல்ல மெல்ல காரின் முன்பக்கத்தை அடைந்த தோழியர்கள் இருவரினது முகங்களும், மழை கொண்ட கார் மேகம் போல இருண்டன.
சற்று முன்னிருந்த மகிழ்ச்சியான சூழ்நிலை எங்கேயோ போய் விட்டிருந்தது இருவருக்கும்.

ஆனால் அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்தது ஆதிகேஷவனே தான். அவனது பின்னந்தலையிலிருந்து தான் இரத்த ஆறு ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது.
மல்லாக்காக விழுந்திருந்தவனின் இரு கண்கள் மட்டும் , தன்னை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த பெண்களிலேயே நிலைத்திருந்தன.

அவனுடைய உதடுகள் அந்த மோசமான தருவாயிலும் , ஈனஸ்வரத்தில் “மேக்னா.. மேக்னா”என்று மொழிந்த படியே இருந்தன.

“அடீ.. இன்னும் உயிர் இருக்குடீ…” என்றது தாரிணியின் தடித்த குரல்.

“ஆமாடி… நல்லவேளை நம்மள யாரும் பார்க்கல… வாடி போயிடலாம்” என்று அங்கிருந்து ஓடி விட எண்ணினாள் நிரோ.
ஓர் உயிர் அல்லாடிக் கொண்டிருக்க , எப்படி விட்டு விட்டு செல்வது? அதுவும் இந்த உயிர் சேதத்திற்கு தன் கவனமின்மை தான் காரணம் என்னும் போது, எப்படித் தான் இடையே விட்டு செல்ல முடியும்?

தோழியை முறைத்துப் பார்த்தாள் தாரிணி. எல்லாம் இவளால் தான். வண்டியோட்டும் போது இந்த விளையாட்டு எல்லாம் தேவை தானா?
தோழியை இந்த நிலையில் வெளிப்படையாக கடிந்து கொள்ள மனமற்று, “வாய மூடிக்கிட்டு .. தூக்குடி… ஹாஸ்பிடல் போலாம்” தாரிணி பற்களைக் கடித்துக் கொண்டு கத்த, அதற்கு பணிந்தவளாய் , அடிபட்டு விழுந்து கிடந்த ஆதியின் கால்களைப் பிடித்துத் தூக்கி, தோழிக்கு உதவலானாள்.

தாரிணி ஆதியின் கைச்சந்து வழியாக கையிட்டு, அவனைப் பிடித்து கடினப்பட்டு தூக்கிக் கொள்ள, மற்றவள் அவனுடைய கால் பகுதியினை சிரமத்துடன் தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
இருவரும் ஒருவாறாக , ஆதியைத் தூக்கி பின்னாசனத்தில் ஏற்றினர்.

தாரிணி கைப்பக்கம் தூக்கியதால், காரின் உள்ளே செல்ல, தோழி உள்ளே முழுமையாக நுழையாமல், ஆதியின் கால்களை மாத்திரம் தூக்கி உள்ளே போட்டாள்.
தற்போது அவனின் தலை, தாரிணியின் மடியில் சாய்ந்திருந்தது.
அவனின் இரத்தம் தன்னில் படுவதைக் கண்டவளுக்கு, கண்களில் கண்ணீர் உற்பத்தியானது. அவளுடைய கரங்கள் எல்லாம், அவளுடைய கட்டுப்பாட்டை மீறி நடுங்கவாரம்பித்தன.
ஆதியின் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்ற பயத்தின் காரணமாக எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளுக்கு, தன் மடியில் இருப்பவனுக்கு எந்தவித உயிர்ச்சேதமும் வந்து விடக் கூடாது என்பதே முக்கியமாகப் போனது .
ஆகையால் தோழியிடம் வண்டியை எடுக்குமாறு துரிதப்படுத்தினாள் தாரிணி.
அவளின் கையொன்று அவளையறியாமலேயே , ஆதியின் நெஞ்சில் படிந்தது. அந்த உயிர் போகும் வலியில் முகம் சுளித்துக் கன்றினாலும், தன் மடியில் கிடந்தவன் தன்னை நோக்கிப் புன்னகைக்க, அவளுக்கு உள்ளே ஏதோ செய்தது.
தன்னையறியாமலேயே கண்களில் இருந்து , உவர் நீர் எட்டிப்பார்க்க, தன் தோழியை நிமிர்ந்து நோக்கியவள், “சி.. சி.. சீக்.. சீக்கிரம் போடீ”என்று துரிதப்படுத்தினாள் .
நிரோஷாவுக்கோ, ஸ்டியரிங்கில் இருந்த கைகள் இரண்டும் நடுங்கினாலும், இதயத்தை யாரோ கழற்றிக் கொணர்ந்து, தன் செவிப்பறையில் வைத்தது போன்று, இதயத் துடிப்பு சத்தம் தனக்கே கேட்டாலும், சமாளித்துக் கொண்டு வண்டியை ஓட்டினாள்.
அரச மருத்துவமனைக்கு செல்ல, அதி தூரம் போக வேண்டுமானபடியால், அவள் வண்டியை, தனியார் மருத்துவமனைக்கே விட்டாள்.

தன் இலங்கை வருகை, இப்படி தன் விளையாட்டு புத்தியால், ஓர் உயிருக்கு பாதகமாக அமைந்து விட்டதே என்று நிரோவின் உள்ளம் தன்னைத் தானே நொந்து கொண்டது.

நிரோஷாவுக்கும் அந்த சூழ்நிலையில் பயத்தில் கண்கள் கலங்கத் தான் செய்தது. இருப்பினும் தன் மனதை சோர விடாமல், தன்னைத் தானே கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய தருணம் என்பதால், அவள் வண்டியை தன்னாலியன்ற மட்டும் வேகமாகவே ஓட்டினாள்.

ஹாஸ்பிடலில் வைத்து, ஹாஸ்பிடல் ஸ்ட்ரெச்சரில் தள்ளிக் கொண்டு போகும் போது, இரு பெண்களும், இவனுக்கு என்ன ஆகுமோ என்று அச்சத்தில் கதிகலங்கிப் போனாலும், ஆதியோ ஓர் கடின புன்முறுவலுடனேயே அவர்களைப் பார்வையால் தொடர்ந்தான்.
ஐசியூவிற்குள் அவன் மட்டும் நோயாளியாக தனியே செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்ட வேளை, அவன் தன் மீசை அடர்ந்த அதரங்கள் திறந்து, தாரிணியை நோக்கி,உருக்கமாக “ப்ளீஸ்.. என்….. ன விட்டு மட்டும் போயிடாதேமா” என்றுரைத்த படியே மெல்ல மெல்ல கண்கள் மூடினான்.

அவனது உருக்கமான வேண்டல் அவளது மனதை என்னமோ செய்தது. தன்னால் விளைந்த விபத்து என்று உள்ளம் பதறிக் கொண்டிருக்குங்கால், இவனது வேண்டல் வேறு மனதை பிழிந்தது.

நிரப்பப்படவேண்டிய விண்ணப்பங்கள் எல்லாம் நிரப்பப்பட்டு, தாரிணி தன் கையாலேயே கட்டணம் செலுத்தி முடித்த போது , ஐசியூவில் சிகிச்சை ஆரம்பமாகத் தொடங்கியிருந்தது.
தாரிணியின் மனம் உள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. இரு பெண்களும் இரு வேறு மனநிலையில் இருந்தனர்.
மருத்துவமனை நிர்வாகத்தினால் இந்த நேரம் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். நிச்சயம் அவர்களும் இந்நேரம் வந்து கொண்டிருக்கக் கூடும். விபத்து பற்றிய கேள்விகள் கேட்கக் கூடும்.. அதன் பிறகு நினைத்துப் பார்க்கக் கூட நிரோஷாவுக்கு பயமாக இருந்தது.
அந்நேரம் அவளின் ஒரே பிரார்த்தனையாக இருந்தது, அவன் பிழைக்க வேண்டும் என்பதே.

ஆனால் தாரிணியின் மனம் மாத்திரம் உலகம் பற்றிய நினைவற்று, அவனுடைய உருக்கமான வேண்டலிலேயே தங்கியிருந்தது.
“ப்ளீஸ்..என்… ன விட்டு மட்டும் போயிடாதேமா”என்ற அவனின் குரலும், வாடி , வதங்கிப் போன அந்தக் குழந்தை முகமும் மீண்டும் மீண்டும் அவள் மனக்கண் முன் வந்து அவளை இம்சித்தது.
மெல்ல தன்னிரு இமைகளாலும், கண்களைப் போர்த்திக் கொண்டவளாய், ஐசியூ அறைப்பக்கத்தில் போடப்பட்டிருந்த தொடர் கதிரைகளுள் ஒன்றில் தொப்பென அமர்ந்தாள்.

தோழி மயக்கம் போட்டுத் தான் விழுந்து விட்டாளோ என்று பயந்தவளாய், அருகே வந்த நிரோவுக்கு, தோழி வானை அண்ணார்ந்து பார்த்து , பெருமூச்சு விடுவதைக் கண்டதன் பின்பே , மூச்சு வந்தது.
நிரோ ,தோழியின் பக்கத்திலேயே வந்து அமர்ந்து கொண்டாள். அந்நேரம் பார்த்து தாரிணியின் செல் சிணுங்கியது.

அத்தியாயம் – 4
தொடும் திரையை நோக்கிய தாரிணிக்கு, எம்பயர் ஸ்டேட் முன்னாடி, ஸ்வெட்டருடன் சிரித்துக் கொண்டிருந்த ஓர் வாலிபன் தெரிந்தான்.
கன்னங்களின் ஓரம் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை, சுரணை வந்தவளாக துடைத்து விட்டு, குரலை செருகிக் கொண்டே, அழைப்பை ஏற்றாள் அவள்.
“சொல்லுங்க கார்த்திக்”என்று அவள் இயல்பாக பேச துணிந்தாலும், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த கார்த்திக்குக்கு, அவளது தொடக்கத்திலேயே, அவள் மாற்றம் புரிந்தது.
வழமையாக “ஹாய் கார்த்தி செல்லம்..” என்று குரலில் இளக்கத்துடன் குழைபவள், இன்று எடுத்தவுடனே “சொல்லுங்க கார்த்திக்”என்றது மறுமுனையில் இருந்த கார்த்திக்கை மனம் வாடச் செய்தது.
கூடவே ஏதோ என்று சரியில்லை என்பது புரிய, “ஹேய் பேப்… இஸ் எவ்ரிதிங் ஒகே?” என்று நிலைமையை அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்க, என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தாள் அவள்.
ஒரு சில கணத்தில் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு, இயன்றவரை தன் குரலில் நடுக்கத்தை வரவழைத்துக் கொள்ளாமல், “ஆ.. ஆமா.. கார்த்திக்..ஐம் ஒகே… நிரோவ பிக்-அப் பண்ணிட்டு.. லேட் நைட் ஆச்சேன்னு… நிரோ ஹாஸ்டல்லயே ஸ்டே பண்டேன்..” என்று அந்த நிமிடத்தில் தோன்றியதையெல்லாம் கோர்த்து, உண்மை போல உரைத்தாள் .
நிரோவும் , தோழியை இடையூறு செய்யாமல், அச்சத்தில் இன்னும் சமரசப்படாத முகத்துடன் , பார்த்துக் கொண்டிருந்தாள் .
“அப்டியா…?”என்று சாதாரணமாக உரைத்தவன், அடுத்து உற்சாகமான குரலில் “என்னோட கிஃப்ட்ட பார்த்தியா பேபி..” என்றான்.
அந்தப் பரிசைப் பற்றிக் கேட்டதும் திரும்பவும், அவளுக்கு கார் ப்ரேக் போடும் போது எழுந்த, க்ரீச்சிடும் ஒலியும், மோதுண்டு விழுந்த அவனது நிழல் உருவமும் கண் முன்னே நிழலாடியது.
இருக்கும் டென்ஷன் அறியாமல், கார்த்திக் கேட்ட கேள்வியில், நிஜமாகவே தலை வலிப்பது போல ஓர் பிரம்மை தோன்ற, “கா.. கார்த்திக்… லைட்டா தலவலிக்குது… அ.. அப்றம் பேசட்டுமா?”என்று நெற்றியை நீவி விட்டுக் கொண்டே கேட்டாள் .

மறுமுனையிலோ, இதைக் கேட்டதும் கார்த்திக்கின் குரல் பதற்றமாக ஒலித்தது. “ஹேய் ரொம்ப வலிக்குதா பேப்… டேப்லெட் போட்டிக்கிட்டியா?”என்று கேட்க , ஒப்புக்காக “ம்” என்று மட்டும் மொழிந்தாள்
.
அவளது “உம்”காரம் கூட, கார்த்திக்கிற்கு கவலையைத் தந்தது. அருகில் தானிருந்தால், நன்றாக கவனித்துக் கொள்ளலாமே? என்ற ஏக்கம் தோன்ற, அதை மறைத்து “பக்கத்துல நிரோ இருந்தா.. கொஞ்சம் கொடேன்”என்றான்.
தன்னால் கவனித்துக் கொள்ள முடியா விட்டாலும், நிரோவிடம் கூறியாவது பார்த்துக் கொள்ள கூற வேண்டும் என்பது அவன் எண்ணம்.

தாரிணி தன் காதிலிருந்த செல்லை எடுத்து, உணர்ச்சி துடைத்த முகத்துடனேயே தோழி பக்கம் நீட்டினாள். , கார்த்திக் தன்னுடன் பேச விளைவது நிரோஷாவுக்கும் புரிந்தது.
தோழியின் பக்கத்தில் அமர்ந்து, அவளுடைய பொய்களை எல்லாம் கேட்டதனால், அதற்கு ஒத்துப் பாட எண்ணியபடி செல்லை வாங்கிக் கொண்டாள் அவளும் .

ஒரு சில “உம்”களைக் கொட்டியபடி, கார்த்திக் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த வேளை, நர்ஸ் அவர்கள் பக்கமாய் வருவது புரிய,நர்ஸ்ஸின் விபத்து சம்பந்தப்பட்ட பேச்சின் குரல், கார்த்திக்கிற்கு கேட்டால், தோழி அகப்பட்டுக் கொள்ளக் கூடும் என்று எண்ணியவளாய் மெல்ல எழுந்து, அந்த கொரிடோரின் மூலைக்குச் சென்றாள் நிரோ.

ஆனால் தாதி தன்னை நோக்கி வருவதைக் கண்ட தாரிணிக்கு இலேசாக வியர்க்கத் தொடங்கியது. அவன் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஐசியூ அறையில் இருந்து, வந்த தாதி எதிர்மறையாக ஏதாவது சொல்லி விடுவாளோ? என்று அவளுடைய மனம் உள்ளே அலறிக் கொண்டிருந்தது.

தன்னையறியாமலேயே கைகால்கள் நடுநடுங்க, இதயம் வேகவேகமாக துடிதுடிக்க, வியர்க்க விறுவிறுக்க அவள் சட்டென தன் கதிரையில் நின்றும் எழுந்து, தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் தாதிப் பெண்ணையே பலவித எதிர்பார்ப்புடனும், ஏக்கத்துடனும் பார்த்தாள்.
அவளருகில் வந்த தாதிப் பெண், “நீங்க தான்… ஏக்ஸிடன்ட் பேஷண்ட்ட அட்மிட் பண்ணவங்களா?”என்று கேட்டாள்.

எதற்கு அவள் கேட்கிறாள் என்று புரியா விட்டாலும், தாரிணி மெல்ல மேலும், கீழும் தலையசைத்து விட்டு, தனக்கே கேட்காத ஈனஸ்வரத்தில், “ஆ… ஆமா.. அவருக்கு இப்.. போ…”என்று தடுமாறியபடி, முழு விவரத்தையும் கேட்க முதல் இடையிட்டாள் தாதி.

“இப்போ ட்ரீட்மெண்ட் நடந்துட்டுருக்கு… இப்போ ஒண்ணும் சொல்ல முடியாது….. .”என்று ஒருவித அவசரத்துடன் மொழிந்தவள், தன்னுடைய தாதி உடையின், இடது பக்க பாக்கெட்டில் கை விட்டு, ஆதியுடைய செல்லை எடுத்து, தாரிணி பக்கம் நீட்டினாள்.

என்னவென்று புரியாமல் விழித்தவளிடம், “பொதுவா யாருக்கும்… இந்த மாதிரி பேஷண்ட்டோட திங்ஸ் எல்லாம் கொடுக்குறதில்ல…சில சமயங்கள்ல.. ஆதாரமாக இருக்குறதனால… பொலிஸ்ட்டயே தான் ஹேன்ட் ஓவர் பண்ணுவோம்… இருந்தாலும் மனசு கேக்கல.. சின்ன பொண்ணுங்களா வேற இருக்கீங்க…. இதுல இருக்க… நம்பர்ஸ் பார்த்து… உங்க ஃபோனால… பேஷன்ட்டுக்கு தெரிஞ்சவங்கள.. கன்ட்டாக்ட் பண்ண முடியுமான்னு பாருங்க… பட் பேஷண்ட்டோட ஃபோனால கோல் பண்ணிடாதீங்க..”என்றவள் திருட்டுத்தனமாக அக்கம் பக்கம் பார்த்த படி நின்றாள்.
அந்தத் தாதியின் பார்வையில், அகப்பட்டுக் கொள்வோமோ என்ற அச்சம் துளிர்த்ததில் இருந்து, அவள் நிர்வாகம் அறியாமல் தான் இந்த செல்லை எடுத்து வந்திருக்கிறாள் என்று புரிந்தது. கூடவே அவளுடைய அவசரமான பேச்சுத் தொனிக்கான காரணமும் புரிந்தது.
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத தாரிணி, “தேங்க்ஸ்”என்றபடி செல்லை எடுத்துக் கொண்டாள்.

செல்லின் திரை, கீழ்வானில் மின்னல் தோன்றின் ஏற்படும் கிறுக்கல் போல, “சிக்சேக்” வடிவத்தில் சென்றிருந்தது. இருப்பினும் செல் உயிருடன் தான் இருந்தது.
அவன் இறுதியாக அழைப்பெடுத்த இலக்கத்தை கோல் லோக்கில் பார்த்து , தன் செல் மூலம் அழைப்பெடுத்தாள் தாரிணி.
ஆதி இறுதியாக அழைப்பெடுத்தது கிஷோருக்குத் தான். அதுவும் மேக்னாவைத் தான் கண்டுவிட்டேன் என்று கூறுவதற்காக.
தாரிணி தனக்குதவிய தாதியிடம், கட்டாயமாக வரவழைக்கப்பட்டப் புன்னகையுடன் “ரொம்ப தேங்க்ஸ்ங்க” என்ற படி செல்லை திரும்பி ஒப்படைத்த நேரம், தோழி வரவே, “அவரோட ஃப்ரண்டுக்கு கோல் பண்ணேன்… வ.. வர்றாராம்..”என்றாள் ஒரு ரோபோவைப் போல உணர்ச்சிகளற்ற குரலுடனும், முகத்துடனும்.

தோழி கூறியதை கேட்ட பின்பு நிரோஷாவும் “உனக்கு தலவலின்னு நீ சொன்னதும்.. உன்ன பக்கத்துல இருந்தே கவனிச்சிக்கட்டாம்.. உன் மேல எவ்வளவு அன்பா இருக்கான்… அவன் கிட்ட உண்மைய சொல்லியிருக்கலாம்ல”என்று தாரிணியின் தோழி நிரோ குறைபட்டுக் கொள்ள, தாரிணி குற்ற உணர்வில் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
என்ன காரணத்திலோ தெரியவில்லை. அவளால் கார்த்திக்கிடம் உண்மையை கூற முடியவில்லை. அதற்கு நா எழவில்லை.
வீட்டுக்கு தொடர்பு கொண்டு அதே பொய்யை கூறியாயிற்று.
தோழியை மேலிருந்து கீழாகப் பார்த்த நிரோவுக்கு, அவளை அந்தக் கோலத்தில் பார்க்கவே கவலையாக இருந்தது.
தோழியின் அருகே வந்தவள், “தாரிணி… உன் மேல் எல்லாம் ரத்தக்கறையா இருக்கு… போய் வொஷ் பண்ணிட்டு வா.. அது வரைக்கும் நா பார்த்துக்கறேன்” என்று மெல்லிய குரலில் கூற, அப்போது தான் குனிந்து தன்னைப் பார்த்தாள் தாரிணி.
அவள் ஆடையெங்கிலும் இரத்தக்கறை. அவளுக்குள் இது அனைத்துக்குமே தான் தானே காரணம் என்ற குற்ற உணர்வு தோன்ற, மெல்ல எழுந்து தளர்நடையுடனேயே வொஷ் ரூமை நாடிப் போனாள் .
இரத்தம் என்றாலே வயிற்றைக் குமட்டிக் கொண்டு வாந்தியெடுப்பவளா? இன்று தோழி சொல்லும் வரை இரத்தக்கறை படிந்திருப்பது கூட அறியாமல் இருந்தாள்?
ஓர் உயிர் அவளது கவனயீனத்தால், ஐசியூவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. அவன் பிழைத்து வர வேண்டும் என்றே அவள் மனம் மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டது .
இறுதியாக, அவன் ஐசியூவினுள் நுழைந்த போது, “ப்ளீஸ்..என்… ன விட்டு மட்டும் போயிடாதேமா” என்று அடிக்குரலில் கூறிய அவனுடைய வலியில் தோய்ந்து போன முகம் நினைவு வர, அவளுக்கு கண்களில் கண்ணீர் சுரந்தது.
இவ்வுலகை விட்டும் செல்லப் போகிறவனின், கடைசி வார்த்தைகளோ என்று தோன்ற, அந்த “வொஷ் ரூமில்” இருந்த வொஷ் பேஸின் பின்னே, சுவரோடு பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியின் முன் நின்று மௌனமாய் வாய் விட்டு அழுதாள் .
ஓர் உயிர் பிரிவதற்கு, தான் காரணமாக அமைந்து விடப் போகிறோமே என்ற எண்ணமே அவளை உள்ளுக்குள் கொன்று கொண்டு இருந்தது.
ஒரு மூச்சு அழுது முடித்தவள், குழாயைத் திறந்து, தண்ணீர் கொண்டு முகத்தை அடித்துக் கழுவினாள். கொஞ்சம் தெளிவு பிறக்கவே, தண்ணீரை எடுத்து, தன் மேல் இருந்த இரத்தக்கறையை , இயன்றளவு சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

மீண்டும் தோழி இருந்த இடத்தை அடைய, அவள் கால்கள் நகர்ந்தன.
ஐசியூ பக்கத்தில் இருந்த தோழியிடம், ஓர் வாலிபனும், ஓர் வயது முதிர்ந்த பெண்மணியும் , கூடவே அவர்கள் பக்கத்தில் காக்கிச் சட்டையில் காவல் துறை அதிகாரி ஒருவரும் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு,இனம்புரியாத பயம் வந்து தொற்றிக் கொண்டது. .

அவள் வருவதைக் கண்ட நிரோஷா, “இதோ…. தாரிணியே வந்துட்டாம்மா..” என்ற படி அவள் புறம் கை காட்ட, அவளுக்கோ, குப்பென வியர்க்கத் தொடங்கியது.

அந்த வாலிபனும், அந்த பெண்மணியும் அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் உள்ளார்ந்த மனநிலையோ பெரிதும் பரிதாபகரமாக இருந்ததது.
கையும், களவுமாக அகப்பட்ட திருடனைப் போல, அவர்களை கண்டவள் பேச்சுமூச்சற்று, கண்கள் இரண்டையும் அகல விரித்து, கைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைய நின்று கொண்டிருந்தாள்.

அநேகமாக அது, அவனின் உறவினர்களாக இருக்க வேண்டும் என்பது அவளுடைய எண்ணம். அது பொய்யுமில்லை.
அந்தப் பெண்மணி தன்னை நாடி வந்து, தன் பிடரியை பிடித்திழுத்து, “அவனோட நெலைமைக்கு காரணமான.. உன்ன நான் சும்மா விட மாட்டேன் டி… நீ நாசமா தான் போயிடுவ..நா வயிறெரிஞ்சு சொல்றன்டி..”என்று கண்களில் எரிமலை வெடிக்க, தனக்கு சாபமிடக் கூடும் என்று எதிர்பார்த்தவளுக்கு, முடிந்த அழுகை திரும்பி வந்து விடும் போல இருந்தது.

அவளுடைய கண்கள் பயம் எனும் அஞ்சனத்தை பூசிக் கொண்டு, அந்தப் பெண்மணியையும், அந்த வாலிபனையும், அவர்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த காவல் அதிகாரியையும் மாறி மாறி பார்த்தன.
உண்மையைக் கூறிவிடலாம் என்று முடிவெடுத்தவளாய், “எ..எ..என்ன. மன்னிச்சிடுங்க ஆன்ட்டி…”என்று தயக்கம் மாறாத குரலில் மெல்ல இயம்பியவள், நா.. நான்…வேணும்னே இதெல்லாம் பண்ணல….தெ…தெரியாம..ந..நடந்திருச்சி..நா பண்ண இந்த தப்புக்கு பிராயச்சித்தமா….. அவரு குணமாகி வர்ற வரைக்கும்.. ஹாஸ்பிடல் செலவ நா ஏத்துக்குறேன்” என்றாள் தளதளத்த குரலில்.

திகைப்பூண்டை மிதித்தது போல நின்றிருந்த அந்த பெண்மணியோ , தன் வலது கையை, நெஞ்சின் மத்தியில் வைத்துத் தாங்கிப் பிடித்த படி, காலில் வலுவற்றவராய், “மேக்… னா” என்று கண்கள் கலங்க, குரலில் நடுக்கத்துடன் கூறியவராக, பின்னே சாயப் போக, அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டான் அந்த வாலிபன். பிறகு அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அருகில் இருந்த இருக்கையில் அமரவும் வைத்தான்.
அந்தப் பெண்மணியை ஓரமாய் இருந்த இருக்கையில் அமரவைத்த வாலிபன் , வேறுயாருமல்ல கிஷோர் தான்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் அதிர்ந்து போய் விழித்துக் கொண்டிருந்தாள் அவள்.

மெல்ல திரும்பி தோழியின் முகம் நோக்கியவளுக்கு, அவள் பார்வை அந்தப் பெண்மணியிலேயே நிலைத்திருப்பது புரிந்தது.

மெல்ல அவளருகில் நடந்து சென்ற தாரிணி, “என்ன நடந்திச்சுடீ”என்று தோழிக்கு மட்டும் கேட்கக் கூடிய குரலில் என்று கேட்க, “ஹாஸ்பிடல்ல எல்லாரும் நம்பின மாதிரி.. இவங்களும் நாங்க தான்.. அவங்க பையன அட்மீட் பண்ணதான் நம்பிட்டாங்கடீ.. இப்போ நீ எல்லா உண்மையையும் உளறிக் கொட்டினதால… என்ன நடக்குமோன்னு தெரிய.. ல”என்றாள் கைகள் இரண்டையும் காற்றில் உதறி, தன் பதற்றத்தை வெளிப்படுத்தியபடி..

நுணலும் தன் வாயால் கெடும் என்பது இது தானோ? தோழி, “இதோ தாரிணியே வந்திட்டாம்மா?”என்று நிதானமாக மொழிந்த போதே புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?

இனி அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? என்று பயந்தபடி அவள், தோழியின் தோள்களை பற்றிய வண்ணம் நின்றிருந்த வேளை அவர்களை நோக்கி வந்தான் கிஷோர்.

தன்னை அவன் தாருமாறாக திட்டக் கூடும் என்று எண்ணியவளாய் அவள் அச்சத்தில் நின்றிருக்கையில், அவனோ ,தாரிணியிடம் வந்து, “நீங்க கிளம்புங்க மிஸ். தாரிணி… அதான் நாங்க வந்துட்டோம்ல… நாங்க பாத்துக்குறோம்” என்று தாரிணியை அங்கிருந்து அப்புறப்படுத்த முயல, தாரிணியோ ஏன் தன்னை இவன் விரட்ட முனைகிறான் என்ற காரணம் தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.
இவன் போக சொன்னால் போய் விட முடியுமா என்ன? சட்டத்தின் முன்னிலையில் இந்த விபத்துக்கு காரணமான இவள் ஓர் குற்றவாளி அல்லவா? தன்னுள் மேலிட்ட குற்ற உணர்வினால் அவள் கண்கள், அவளையறியாமலேயே, கிஷோரின் பின்னே நின்றிருந்த காவல் அதிகாரியை நோக்கின.
அவள் பார்வை சென்ற திசையை வைத்து, இவள் காவலதிகாரிக்கு பயப்படுகிறாள் போலும் என்று சரியாக கணித்தவன், “போலிஸ் இஷ்யூ… ஆகிடும்னு பயப்படாதீங்க.. நாங்க பாத்துக்குறோம்… உங்க பேரு வெளியில வராது… ப்ளீஸ்…. நீங்க இங்க இருந்து கிளம்புங்க…”என்று கூறி, இரு பெண்களையும் அனுப்பி விட முனைந்தான் அவன்.
ஆனால் அவனின் அவசரம் அவள் மனதை குழப்பியது. ஏன் இவர்கள் தன்னை இங்கிருந்து கிளப்ப பார்க்கிறார்கள்? என்று தோன்றிய அதே கணம், “போலிஸ் இஷ்யூ”…ஆகாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியது, அவள் மனதின் அச்சத்தைப் போக்கியது.
“ப்ளீஸ்..என்… ன விட்டு மட்டும் போயிடாதேமா” என்று அவன் இறுதியாக கூறி விட்டுச் சென்றது, அவள் காதுகளில் அசரிரீயாக ஒலித்து மறைத்தது.

அந்த வார்த்தைகள், அவள் இதயத்தை அங்கிருந்து நகர விடாமல் கட்டிப் போட, “அது… இல்ல… நா… நா.. அவரு கண்ணு முழிச்சதும் கிளம்புறேனே”என்றாள் கெஞ்சும் குரலில்.
அவன் கண்விழித்தாலாவது, அதைக் கண்ணுற்று மனநிம்மதியுடன் செல்லலாம் என்பது அவளது குற்றம் தோய்ந்த மனதின் எண்ணம்.
ஆனால் கிஷோர், கிட்டத்தட்ட கலங்கிய குரலில், “ஐயோ.. ஆதி கண்ணு முழிச்சதும்… உன்ன பார்க்கக் கூடாதுன்னு தாம்மா போ சொல்றேன்.. ப்ளீஸ்.. உங்கள கையெடுத்து கும்புட்றேன்…”என்று சட்டென முகத்துக்கு நேராக இரு கரம் கூப்பி நின்று வணங்கியவன், “இங்க இருந்து கிளம்புங்க..”என்றான்.
ஆனால் அப்பொழுதும் அவள் மறுத்துப் பேச முற்பட்ட வேளை, இத்தனை நேரம் அமைதியாக இருந்த நிரோஷா இடையில் புகுந்தாள்.
தோழியின் தோளைப்பற்றியவள், “வா தாரிணி கிளம்பலாம்”என்று மெல்ல எடுத்துரைத்து, தோழியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
வழிநெடுகிலும் தாரிணி ஏதும் பேச வாய் திறக்கவில்லை. அமைதியாகவே வந்தாள். நிரோவும் தோழியின் குழப்பமான மனநிலை அறிந்து ,ஏதும் பேச விரும்பவில்லை. பேசாமலேயே வண்டியோட்டினாள்.
அவன் கண் விழிக்கும் போது, தான் ஏன் அவனை பார்க்க கூடாது? தன்னை பார்த்து ஏன் அந்த அம்மாள் கதி கலங்கிப் போய் நின்றாள்? தன்னை ஏன் அங்கிருந்து கிளப்ப முயன்றான் அவன்? என்ற பற்பல கேள்விகளுக்கு அவளிடத்தில் விடையிருக்கவில்லை.
இதுவரை விபத்துக்கு தான் தான் காரணம் என்று குற்ற உணர்வில் தள்ளாடியவளுக்கு, அந்த இருவரின் வருகையினால் மனதில் ஓர் குழப்ப உணர்வு வந்து ஆட்கொண்டது.

நிரோ இலங்கை வந்த போது நடு நிசியாக இருந்தது. இப்போது கீழ்வானில் சூரியன் மெல்ல மெல்ல உதயமாகி, அதிகாலையாகியிருந்தது.
காலை ஆறு மணி. ரொம்பவும் மறக்க முடியாத நாளாக இருந்தது இரு கன்னிகைகளுக்கும்.
ஹாஸ்டலில் வண்டியை நிறுத்தியவள், “வா.. இன்னைக்கு என் கூடயே தங்கிக்கலாம்”என்று அழைத்தாள் நிரோஷா.
ஆனால் தாரிணிக்கு அவள் இருந்த மனநிலையில், தோழியின் அழைப்பை ஏற்க முடியவில்லை. “இல்லடி….நா வீட்டுக்கே போறேன்..” என்றவளை, வற்புறுத்த மனமற்று, “சரி வீட்டுக்கு போனதும்.. மனச போட்டுக் குழப்பிக் கொள்ளாத.. ஃப்ரீயா விடு…””என்ற அறிவுறுத்தலோடு விடை கொடுத்தாள் நிரோஷா .

அத்தியாயம் – 5

மருத்துவமனையில்…
கிஷோர் ஏதும் பேசாமல் , ஆதியின் தாயாருடன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனுடைய முகத்திலே நண்பனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற துக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு இருந்ததோ, அதேயளவு அதிர்ச்சி கலந்த அச்சமே துளிர் விட்டிருந்தது.
ஆதியின் தாயாரின் முகமும் கண்ணாடி போல, கிஷோரின் முகபாவங்களையே வெளியே காட்டியது .
ஐந்து வருடங்களுக்கு முன், தம் அனைவரின் வாழ்க்கையை விட்டும் நிரந்தரமாக பிரிந்து சென்ற மேக்னாவை மீண்டும் சந்திப்போம் என்று கிஷோர் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

மேக்னாவின் அதே உயரம், அதே நிறம், அதே அங்கங்கள், அதே முகஜாடை என தன் தங்கையையே அச்சில் வார்த்து செய்தவள் போலிருக்கும் தாரிணியை முதன் முதல் கண்டதும், அவனுக்குமே …. வந்தது மேக்னா தானோ? என்ற எண்ணம் எழலாயிற்று .

முதன் முதலில் தாரிணியைக் கண்டவனுக்கு, தான் அடித்த சரக்கின் வீரியத்தில் தான், தனக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் அந்தப் பெண் மேக்னாவாக தெரிகிறாளா? என்று தன் கண்கள் மேலேயே அவனுக்கு சந்தேகம் எழலாயிற்று.
அந்நேரம் ஆதியின் தாயார் சரிந்து விழத்தான் அவனுக்கு தான் கண்டது பொய்யில்லை என்பதும் புரியலாயிற்று.

அவன், அவளைக் கண்டதும் அதிர்ந்தான் என்றால், ஆதியின் தாயாரோ மேக்னாவைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார்.
அவர் சரிந்து வீழ்ந்தமை கூட, அந்த அதிர்ச்சியை தாங்க முடியாத பலவீனமான இதயத்தின் வெளிப்பாடே.

தன் தங்கையே தானோ? என்று சந்தேகக்கண் கொண்டு அவன் பார்த்த வேளை, தாரிணியின் தடித்த குரல் மட்டும் கேட்டிருக்காவிடின், அவள் மேக்னாவே தான் என எண்ணியிருப்பான் கிஷோரும்.
“என்ன மன்னிச்சிடுங்க ஆன்ட்டி…” என்ற அவளது தடித்த குரல், அவனுக்கு அது தன் தங்கையில்லை என்பதை உணர்த்தியது.
மேக்னாவுக்கு இயல்பிலேயே மென்மையான குரல். அவள் குரல் பூவை உரசிடும் தென்றலின் இதத்தை மனதுக்குள் எழச் செய்யும்.
அதேசமயம் அவன் மனது தன் ஆருயிர் நண்பனை பற்றி எண்ணியும் வேதனை கொண்டது. அவனை தனியே அனுப்பாமல், தானும் அவனுடன் சென்றிருந்திருக்க வேண்டும் என்று காலங்கடந்து எண்ணி வருந்தினான் கிஷோர்.

விட்டு விட்டு கேட்கும் இதயத்துடிப்பைப் போல, தன் நண்பனுக்கு ஏதாகிலும் ஆகிவிடுமோ என்ற மரணபயம் விட்டு விட்டு எழுந்தது அவனுள்.

போதையில் தள்ளாடிய படி ஒருவாறு வீடு வந்த கிஷோர், தன் படுக்கையில் குப்புறப்படுத்து அடித்துப் போட்டது போல தூங்கிப் போனான்.

அந்த நேரம் செல் அலற, கடினப்பட்டுக் கொண்டு , கண்களை திறவாமலேயே, கைகளால் துலாவிய படி, தன் பேன்ட் பாக்கட்டினுள் இருந்து செல்லை எடுத்து காதில் வைத்த கிஷோருக்கு கேட்டது ஆதியின் குரல்.

“டேய் கிஷோர்.. நா மேக்னாவ பாத்தேன்டா.. அவ இப்போ தான்டா ஆட்டோல ஏறி போனா…” என்றான் ஆதி உற்சாகம் கலந்த குரலில். அவனுக்கு தன் காதலியை கண்டு விட்ட மகிழ்ச்சி.
ஆனால் கிஷோருக்கு நடு இரவில் , யாரோ ஒரு பெண்ணை பார்த்து விட்டு, மேக்னா என்று எண்ணிக் கொண்டு, தனக்கு அழைத்து கடுப்படிக்கிறான் என்றிருந்தது.
அதே கடுப்பு மாறாமல், “டேய் ****….உனக்கு வேற வேலையில்ல.. ஃபோன வைடா..”என்று கோபத்தில் மொழிந்து விட்டு, அழைப்பை துண்டித்து விட்டு , செல்லை மெத்தையில் எறிந்து விட்டு, மீண்டும் புரண்டு படுத்தான் கிஷோர்.

இல்லாத மேக்னாவை தேடப்போய், ஆதி நிஜமாகவே ஒரு மேக்னாவை கொண்டு வந்து விட்டான் என்று மட்டும் கிஷோரால் நிச்சயமாக கூற முடிந்தது.
ஆதி நடு இரவில் வைத்து கண்டது விஷ்வமேக்னா அல்ல. யாரோ ஒரு பெண். அதுவும் மேக்னா பாணியில் ஆடை அணியும் ஒர் பெண்ணாக இருக்க வேண்டும். அதைக் கண்டு தான், ஆதியும் அது மேக்னா என்று எண்ணிக் கொண்டான்.
மெல்ல திரும்பி, தாயாரைப் பார்த்த போது , அவர் கண் மூடி மௌனமாய் அழுது கொண்டிருப்பது புரிந்தது. கண்ணுக்கு கண்ணாய் ஒரே ஒரு வாரிசு. அவனால் எத்தனை துன்பம் இவருக்கு? தாயாருக்காகவாவது.. கொஞ்சம் தன்னை மாற்றிக் கொள்ள கூடாதா? என்று மனதுக்குள் தோழனைப் பற்றி எண்ணி கவலை கொண்டான் கிஷோர் .

மெல்ல ஆதியின் தாய் குருப்ரபாவதியை தொட்டவன், அவர் கண் திறந்து நோக்கவும், “ஒண்ணும் கவலப்படாதீங்கமா? எல்லாம் சரியாயிடும்… நம்ம ஆதிக்கு ஒண்ணும் ஆகாதுமா” என்று மெல்ல அவரைத் தேற்ற முனைந்தான் கிஷோர்.அதுவும் நிலைகுலைந்த இதயத்தோடும், கலங்கிய கண்களோடும்.

“தெரியும் கிஷோர்… அவர எங்கிட்ட இருந்து எடுத்துகிட்ட அந்த கடவுள், என் பையனையும் எங்கிட்ட இருந்து எடுத்துக்க மாட்டாருன்னு நம்புறேன்..”என்று ஒடிந்து போன குரலில், நம்பிக்கையுடன் கூறினாலும், அவரால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
அழாமலும் இருக்க முடியவில்லை. அதற்காக அழுகிறேன் பேர்வழி என்று அந்த ஹாஸ்பிடலே அதிரும்படி ஒப்பாரி வைக்கவுமில்லை. கடலளவு சோகம், தன் சீமந்த புத்திரனை இழந்து விடுவோம் என்று பயம் இருந்தாலும் மௌனமாகவே துக்கம் அனுஷ்டித்தார் அவர்.

அவரது மனதுக்கு அமைதியைத் தரும் வகையிலேயே டாக்டரும் வந்து, “பயப்பட்ற மாதிரி ஒண்ணுமில்ல..”என்று கூறினாலும், அடுத்து டாக்டர் கூறிய விடயத்தில் சர்வமும் கலங்கிப் போயிற்று தாய் மனதுக்கு.

“பின்னந்தலையில லேசா அடிபட்டிருக்கு..” என்ற போது, தாயுள்ளம் தன்னுள் எழுந்த வலியை, அப்பட்டமாக முகத்தில் காட்டிக் கொண்டது. அதே சமயம் அவருள், தன் மகனின் உயிருக்கு ஏதாவது ஆபத்தோ? என்று தோன்ற உள்ளூர ஓர் நடுக்கமும் பரவியது.

அதைக் கண்ட டாக்டர், அவரை தேற்றுமுகமாக, “பயப்படாதீங்கமா… சின்ன அடி தான்.. இப்போ மயக்கத்துல இருக்காரு.. வார்டுக்கு சேன்ஜ் பண்ணப்பறம் போய் பாருங்க.. ஹி வில் பி ஓல்ரைட்” என்று இருவரையும் பார்த்து மொழிந்து விட்டுப் போக, அப்போது தான் கிஷோருக்கு சற்றே நிம்மதியாக இருக்க முடிந்தது.

தன்னுள் மிகுந்திருக்கும் கலக்கம் தாயை பாதிக்கக் கூடும் என்று உள்ளளவில் எண்ணியவன், கலக்கத்தை மறைத்து, தாயிடம், “பயப்படாதீங்கமா.. அதா.. டாக்டரே சொல்லிட்டாருல்ல.. ஒண்ணும் இல்ல… குணமாயிடுவான்னு.. ..” என்று ஆறுதல் படுத்தினான்.

வார்டுக்கு மாற்றப்பட்ட ஆதிக்கு மெல்ல மெல்ல சுயநினைவு வந்த போது காலை பத்து பதினைந்தை தாண்டியிருந்தது.

அவனுடைய சாதாரண ஆடைகள் எங்கோ மாயமாகியிருந்தன. மருத்துவமனையில் நோயாளிகளுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்கும், இளம்பச்சை நிறத்திலான நீள அங்கி அணிந்திருந்தான்.

வலது கன்னத்தில் பெருக்கல் அடையாளத்துடன் சிறு பிளாஸ்டர் துண்டுகள். நெற்றியை முழுதுமாய் மறைத்து சென்றிருக்கும் பேன்டேஜ் கட்டு.

அவனுடைய நீள அங்கியின் கழுத்து சற்று விலகியிருந்ததில், இடது தோள்பக்கத்திலும் பிளாஸ்டர் கட்டு போடப்பட்டிருப்பது வெளியே தெரிந்தது. இது தவிர கைகளிலும் கால்களிலும் சிறு சிராய்வுகள் மற்றும் ஓரிரண்டு பிளாஸ்டர்கள் இருந்தன. கையிலே ட்ரிப்ஸ் குழாயிற்கான ஊசி.

இந்தளவு அடியுடன் அவன் தப்பித்ததே தெய்வாதீனம் தான்.

அவனுடைய முகத்திலே சோர்வு டன் கணக்காய் வழிந்து கொண்டிருந்தது. தன் கண்களின் கருமணிகளை, மூடிய இமைகளின் பின் மெல்ல மெல்ல அங்கும் ஓடவிட்ட பின், ஒருவாறு இமைகளைப் பிரித்து கண்ணைத் திறந்தான் ஆதிகேஷவ்.

அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. தான் யார்? தான் எங்கிருக்கிறோம்? என்று கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் அவனுடைய உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை.
ஆனால் யாரும் சொல்லாமலே அவனுக்கு சில நிமிடங்களில் அனைத்தும் நினைவுக்கு திரும்பியது. ஆழ்ந்த மயக்கத்திலிருந்து விழிக்கும் பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த மாதிரி நிகழ்வது இயற்கை.

மெல்ல கண்களை சுழற்றி சுழற்றி தன்னைறயை நோட்டம் விட்டான் ஆதி.

அப்படியே அவன் கண்கள் மெல்ல மெல்ல இடமிருந்து வலமாக இடம் பெயர்ந்தது. அவன் தாய், அவன் நண்பன் என இருவரும் கண்களில் சோகம் தாங்கி நின்றிருந்தது எல்லாம் அவன் மூளைக்கு செல்லவில்லை.
அவன் கண்கள் நண்பனை தாண்டியும் நகர்ந்தது எதையோ தேடி. தேடியது கிடைக்கவில்லையென்றானதும் , தன் கண்கள் தான் தனக்கானதை தன் கண்ணுக்கு காட்டவில்லையோ? என்று எண்ணியவன், மீண்டும் ஒரு முறை கண்களை வலமிருந்து இடமாக ஓடவிட்டான்.

அப்போதும் அவனுக்கு வேண்டியது கண்ணில் தட்டுப்படாமல் போகவே, அத்தனை உடல் சோர்விலும், தன் இதழ்களை அசைக்க முடியாமல் பூட்டு போடப்பட்டிருப்பது போல இருந்தாலும் கடினப்பட்டுக் கொண்டு வாயசைத்து, “ம்மா…” என்றான்.

தன் மகன் சுயநினைவடைந்து பார்த்த பார்வையில், பழையதை மறந்து விட்டானோ என்று எண்ணியிருந்த குருப்ரபாவதிக்கு மகன் தன்னையழைத்தது கண்களில் ஆனந்தக் கண்ணீரை தோற்றுவித்தது.
“என்னப்பா..?” என்று குரல் தளதளக்க கூறிய படி, மகனை வாஞ்சையுடன் நெருங்கிய தாய், அவன் அடுத்து கேட்டதில் கல்லாய் சமைந்தார்.

“ம்மா… என் மேக்னா.. எங்கேமா?” என்று மெல்லிய குரலில் ஆதி அந்த நிலையிலும் , மேக்னாவைக் கேட்டான். தாய் கல்லாய் சமைந்து நிற்க, கிஷோருக்கோ, எது நடக்கக் கூடாது என்று எண்ணியிருந்தானோ அது மட்டும் நடந்திருக்கிறது என்று சர்வ நிச்சயமாக புரிந்தது.

ஆதியின் கண்களோ நண்பனின் பின்னால் இருக்கும் , மூடப்பட்டிருந்த அறைக்கதவில் சென்று நிலைத்தது.

“கி… கி.. கிஷோர்… எ.. என் மேக்னா வெளிய நிற்கிறாளாடா?.. அவள உள்ள வர .. வர சொ.. சொல்லுடா… நா.. நா அவள பார்க்கணும்டா?” என்றான் ஆதி அதே மெல்லிய குரல் மாறாமல் .
அவனுடல் நிலையை போலவே, குரலும் பலவீனமாகத் தான் இருந்தது. இறுதியில் அவன் பேசிய போது, அவனையறியாமலேயே நா தளதளக்கத் தான் செய்தது.
ஆனால் தன் நண்பன் ஆதி அன்றிலிருந்து இன்று வரை, அவன் தங்கையை “என் மேக்னா” என்று அழைப்பதை கைவிடவேயில்லையே என்பது புரிந்த போது, அவனுக்குமே ஆதியின் காதல் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
தன்னைத் தானே சுதாரித்துக் கொண்ட கிஷோர், முயன்றவரை இயல்பான குரலை வரவழைத்துக் கொண்டு , “மேக்னாவா?” என்றான் மேக்னாவின் பெயரையே இன்று தான் உச்சரிப்பது போல.

ஆதியின் குரலில் இம்முறை சற்றே பலம் கூடிப் போயிருந்தது. எப்படியாவது மேக்னாவை, தான் இத்தனை வருடங்களாக காணத்துடித்த மேக்னாவைக் கண்டுவிடும் ஆர்வம் அவன் கண்களில்.
அந்த பரபரப்பு அப்படியே அவனது முகத்தில் தெரிந்தது. அந்நேரம் அவனுக்கு அவனுடைய உடல் நிலை பற்றி மறந்து தான் போனது. பின்னந்தலையில், யாரோ நொடிக்கொருதரம் சம்மட்டியால் அடித்துக் கொண்டேயிருப்பது போல வலித்தது.
இருப்பினும் அவன் அதையெல்லாம் பொருட்படுத்துவதாய் இல்லை. அந்த வலியைக் காட்டிலும், தன்னவளை காண வேண்டும் என்ற பேராசை கண்ணில் மின்ன, “ ஆ.. ஆமாடா… என்.. என்.. மேக்னாடா… ப்ளீஸ் மச்சி.. அவள… கூப்புடு மச்சி” என்றான் ஆதி வலியை சகித்த குரலில்.

கிஷோர் எப்படி சமாளிப்பது என தெரியாமல் நின்றிருக்க, ஆதியின் தாய்க்கோ , பேசவே நா எழவில்லை. கிஷோரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் ஏதாவது சொல்லி சமாளித்து விட மாட்டானா? என்ற நப்பாசையில்.

மெல்ல ஆதியின் அருகாமையில் வந்த கிஷோர் , மெத்தையில் படிந்திருந்த அவனுடைய கையை, தன்னதற்குள் அடக்கி, பணிவான குரலில், “டேய் மச்சி… நா சொல்றத கேளு.. எல்லா அப்றம் பேசிக்கலாம்… பழசையே நினைச்சு நினைச்சு.. மனச போட்டுக் குழப்பிக்காம.. முதல்ல ரெஸ்ட் எடு.. இங்க மேக்னான்னு யாருமில்ல..” என்றான்.

ஆனால் ஆதி அப்படியே தன் மேக்னாவை விட்டு விடுவானா என்ன? ஐந்து வருடங்களாக காண துடித்த மதி முகத்தை காணாமல் தான் அவனுக்கு ஓய்வு என்பது ஏது?

“இ.. இல்ல.. கி.. கி..” என்றவன் முழுதாக நண்பனின் பெயரைக் கூட சொல்லி முடிக்காமல், அவசரமாய் பேசிவிடும் வெறியில் , “ நா… நா மேக்னாவ.. பா.. பாத்தது உண்மை.. அவ மடியி… ல தான்.. தல வச்சி.. படுத்துகிட்டேன்..” என்றவன், ட்ரிப்ஸ் ஏற்றப்படும் கையை எடுத்து, அதன் வலியைக் கூட பொருட்படுத்தாது தன் நெஞ்சில் வைத்து, “இங்…. இங்… க.. கைய வச்சிகிட்டாடா… எனக்கு நல்லா ஞாபகமிருக்கு… க.. கடைசியா.. “என்.. ன விட்டு மட்டும் போயிடாதேமா”ன்னு சொன்னப்போ… கண்ண கசக்கி கிட்டே சரின்னு தலையாட்டினாடா??” என்றான் கலங்கிய விழிகளுடன் .

கிஷோருக்கு அதன் பின் நண்பனின் முகத்தை பார்க்க முடியவில்லை. தலையை இடப்புறமாய் திருப்பி நின்று கொண்டான்.
தாரிணியை இவன் பார்த்து விடக்கூடாது என்று விடாப்பிடியாக நின்று அனுப்பியும் தான் என்ன பயன்? ஆதி தான் பார்க்க கூடாததை எல்லாம் பார்த்து விட்டானே?? ஆதியை வாழ்க்கையை பொறுத்த வரையில் , தொலைந்து போன அத்தியாயம் திரும்பவும் , வந்து குறுக்கிடும் என்று கிஷோர் எதிர்பார்த்திருக்கவில்லை.

கிஷோர் சொல்வதறியாது தலையை திருப்பிக் கொண்டதை கண்ட ஆதியின் தாயார், கண்ணீரை அழுந்த துடைத்து விட்டுக் கொண்டே, ஆதியின் அருகே வந்து , அவன் கையை பற்றி, புறங்கையில் மெல்ல முத்தமிட்டு தலைகோதினார்.
தாய்மையுடன் தன் மகனை நோக்க , அவனும் மெல்ல தன் விழிகளை தாயின் விழிகளுடன் கலக்க விட்டான்.

அவருடைய கை விரல் கோதலின் மென்மை, அவனுடைய பதற்றத்தை மெல்ல மெல்ல குறைத்தது.
மகன் கொஞ்சம் ஆசுவாசப்பட்டதும் அன்பான குரலில், “டேய் கண்ணா… அம்மா சொல்றேன்.. நீ பார்த்தது உன் மேக்னா இல்ல.. அது உன் கற்பனை …. எதைப்பத்தியுமே யோசிக்காம… நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ..”என்று கூறினார்.

தாயின் விதந்துரைகளை புதல்வன் கேட்பதாயில்லை. அனைவரும் சேர்ந்து , தன் மேக்னாவை, தன் கண்ணில் காட்ட விடாமல் கண்ணாமூச்சி விளையாடுபவர்களாக தோன்ற அதற்கு அவன் செவிமடுப்பதாயில்லை.

“இல்லமா.. நா கண்டது எதுவுமே கற்பனையில்ல.. நா மேக்னாவ பாத்தது நிஜம்… என்ன நம்புங்கமா…”என்று தான் கண்டதை உண்மையென புரிய வைக்க முயன்றான் ஆதி.

“டேய்…என்னடா.. உளர்ற?.. ஃபர்ஸ்ட் கோல் பண்ணி மேக்னா ஆட்டோல போறாடான்னு சொன்ன? இப்போ… மேக்னா மேல தலவச்சி படுத்துகிட்டேன்னு சொல்ற…?..ஆட்டோல போனது உன் மேக்னான்னா.. இப்போ நீ சொல்ற இரண்டாவது மேக்னா யாரு? எத்தன மேக்னாடா இருக்கா?எனக்கிருக்குறது ஒரே தங்கச்சிடா?? விட்டா இந்த உலகத்துல இருக்குற அவ்ளோ பொண்ணுங்களையும் மேக்னான்னு சொல்வியாடா?”என்று நண்பன் கண்டது கற்பனையே தான் என சாதிக்க முயன்றான் கிஷோர்..

“ம..ச்சி…என்ன நம்பு..ஃபர்ஸ்ட் நா பாத்தது..மேக்னாவான்னா… .எனக்கு இப்போ சொல்ல தெரியல.. ..ஆனா நா லாஸ்ட்டா கண்ண மூடும் போது பாத்தது.. என் மேக்னா தான்… நிச்சயமா அவ பக்கதுல.. எங்கேயோ தான் இருக்கணும்னு என் மனசு சொல்லுது..”என்ற படி வாசலை கண்களாலேயே துலாவத் தொடங்கினான்.
கிஷோர் அவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காத மகனின் மனதை, எப்படி மாற்றுவது என்று தெரியாமல் பரிதவித்துப் போய் நின்றிருந்தாள் தாய்.

“கண்ணா.. கிஷோர் சொல்றது தான் நிஜம்… இங்க யாரும் மேக்னான்னு இல்லடா… அப்டியே அது.. உன் மேக்னாவா இருந்திருந்தா.. உன்ன இந்த நிலைமையிலேயே விட்டுட்டு போயிருப்பாளாப்பா.. கொஞ்சம் யோசிச்சு பாரு.. நீ எதையும் போட்டு அலட்டிக்காதப்பா… கொஞ்சம் தூங்கியெழுந்திரிச்சா எல்லாம் சரியாயிடும்..அம்மா பக்கத்தில இருக்கேன்… தூங்கு கண்ணா.. “என்றாள் கண்களை அழுந்தத் துடைத்த படியே.

அவள் அவனுடைய உண்மையான மேக்னாவாக இருந்திருந்தாள் அவனை விட்டு போயிருக்க மாட்டாள் தான். ஆனால் அது அவனுக்கு புரியவில்லை.

ஏற்கனவே தன்னுடன் இருக்கும் ஊடல் காரணமாக தன்னை விட்டும் பிரிந்து சென்றவள், எப்படி இங்கே அவனுக்காக நின்றிருக்கக் கூடும்? நிச்சயம் அவள் மருத்துவமனையை விட்டு கிளம்ப ஆயத்தமாயிருக்கக் கூடும் என்று தான் அவனுக்கு தோன்றலாயிற்று.

தாயும்,நண்பனும் சொல்லும், “எல்லாமே கற்பனை”என்னும் கதையை கேட்க அவன் இனியும் தயாரில்லை.

தலையை மறுப்பாக முதலில் ஆட்டிக் கொண்டே, பிறகு வாய் திறந்தவன் “இ.. இல்ல.. இல்ல… நா.. நம்ப மாட்டேன்.. நா நம்ப மாட்டேன்.. நம்ப மாட்டேன்” என்று திரும்ப திரும்ப சொன்னதையே கூறிக் கொண்டிருந்தவனாய் , கண்ணிமைக்கும் நேரத்தில் குணமானவன் போல எழுந்தான்.

கிஷோரும், தாயாரும் அவனுடைய செய்கையில் விக்கித்துப் போய் நின்றிருந்தனர். அவர்கள் சுதாரித்துக் கொள்ளும் முன்னர், சேலைன் குழாயை தன்னிலிருந்தும் பிய்த்தெறிந்தவன், “என் மேக்னா இங்க தான் இருக்கா.. நானே போய் என் மேக்னாவ பாத்துக்குறேன்”என்று குரலில் ஓர் கடினத் தன்மையுடன் கூறியவன், எழுந்து கதவை நோக்கி விரைந்தான்.
“மச்சீ..எங்கடா போ..”என்று முழுமையாக வசனத்தை முடிக்க முதல், ஆதி அவ்வறையை விட்டும் அசுர வேகத்தில் வெளியேறியிருந்தான்.

ஆதியின் தாய் குருப்ரபாவதியோ, நடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் ஒரு கணம் சுதாரித்து நின்று, பின் கிஷோரின் பின்னால், “கண்ணா.. எங்கடா போற?”என்றபடி ஓடத் தொடங்கினார்.

“மேக்னா… மேக்னா… மேக்னா!!!!” என்று அவன் கத்திக் கொண்டே புயல் வேகத்தில் ஓட முயல, அவனை பிடிக்க கிஷோருக்கு சிரமமாகப் போனது.

வெளியே நின்று கொண்டிருந்த மற்றும் போகும் வரும் பெண்களையெல்லாம் “மேக்னா” என்ற அழைப்புடன் அவன் நெருங்கிக் கொண்டிருந்தான்.
“மேக்னா”என்ற படி ஓர் பெண்ணை நெருங்குவது, அவர்கள் முகத்தை ஆராய்வது, அது தன் மேக்னா இல்லை என்று தெரிந்ததும், அடுத்த பெண்ணை நோக்கி நகர்வது என அவன் செய்கை முடிவுறாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
மருத்துவமனையில் பல்வேறு தேவைகளுக்கா வந்திருந்த இளம்பெண்களோ இவனைக்கண்டு பயத்தில் அலறிக் கொண்டு பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.
கண் மண் தெரியாமல், கிட்டத்தட்ட பைத்தியக் காரன் போல மேக்னாவைத் தேடி ஓடும் ஆதியை பிடிப்பதற்காக கிஷோர் மட்டுமல்ல, அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் சிற்றூழியர்கள் கூட வந்தனர்

இறுதியில் ஒரு வழியாக அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் , ஆதியைப் பிடித்து , அறைக்கு அழைத்து வந்து , மயக்க ஊசி கொடுத்து , அவனை தூங்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது அனைவருக்கும்.

அப்பொழுதும் அவன் இடைவிடாமல் , “என்.. ன விடுங்கடா… நா மேக்னாவ பார்க்.. கணும்.. நா மேக்..னாவ பாத்தது உண்ம… நா மேக்னா… வ பார்க்கணும்… நா மே…. க்னாவ. … பாக்கணும்..”என்று இறுதியில் ஈனஸ்வரத்தில் முனகிய வண்ணம் கண்ணயர்ந்தான் .

அத்தியாயம் – 6

மயக்கத்திலிருந்த ஆதிகேஷவனை பரிசோதித்துக் கொண்டே, டாக்டர் கேட்ட முதல் கேள்வி , “யாரு அந்த மேக்னா?” என்பது தான்.
டாக்டர் அப்படியொரு கேள்வி கேட்டதும், கிஷோரும், தாயாரும் ஒருவரையொருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டனர்.

நண்பன் ஆடிய ஆட்டத்தில், டாக்டருக்கு மட்டுமல்ல மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் அந்த கேள்வி எழுந்திருக்கும்.
“யாரந்த மேக்னா?”-டாக்டர் கேட்ட போது அவனுள் தங்கையின் முகம் வந்து போனது. அவனது ஒரே உடன்பிறப்பு. தன்னை விடவும் ஆதியின் மேல் உயிரையே வைத்திருந்தவள்.

டாக்டரை நிமிர்ந்து நோக்கியவன் , “டாக்டர்.. மேக்னான்றது… என்னோட சிஸ்டர்… ஆதியும், மேக்னாவும்.. ஒருத்தருக்கொருத்தர்.. சின்ஸியரா லவ் பண்ணாங்க…” என்று இதுவரை உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூறிக் கொண்டிருந்தவன், தற்போது சோகமே உருவாய், “அப்புறம் … எதிர்பாராம.. நடந்த சின்ன ஆக்ஸிடன்ட்ல… மேக்னா.. நம்மள விட்டு போயிட்டா…. அவளோட bodyஅ கண்ணால கண்டும்… ஆதியால.. மேக்னா.. தன்னோட இல்லன்ற உண்மைய ஏத்துக்க முடியல… பல வருஷங் கழிச்சு.. மேக்னா மாதிரியே ஒரு பொண்ண கண்டதும்… அவ தான் மேக்னான்னு நினைக்கிறான் டாக்டர்..” என்று நடந்ததை முழுவதுமாக கூறினான் கிஷோர்.

அந்த கோர சம்பவத்தில் தங்கையைப் பறிகொடுத்தவனுக்கு, அண்ணனாய் அதிலிருந்து மீண்டு வர பல நாட்களானது. ஆனால் ஆதியால் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.

அவனைப் பொறுத்த வரையில் மேக்னா தன்னை பிடிக்காமல் தலைமறைவாகி விட்டாள். அவனால் மேக்னாவின் மரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் உலகத்தின் எங்கோ ஓர் மூலையில் இருக்கிறாள் என்பது அவனுடைய திண்ணிய எண்ணம்.
ஆதி பைத்தியக்காரத்தனமாக, தன் கண் முன் இறந்த மேக்னாவை தேடவாரம்பித்தான். முகப்புத்தகத்தில் அறிவித்தல் விடுத்தான். ட்விட்டரில் ட்வீட் செய்தான். போலிஸில் புகார் கொடுத்தான். இன்னும் பல வகைகளில் தேடலானான் ஆதி.

இறந்த பெண்ணை தேடுகிறானே என்று ஊர், உலகம் தன் ஆதியைப் பார்த்து சிரிக்கக் கூடாதே என்ற ஒரே காரணத்துக்காக , ஆதியின் தேடலை எல்லாம் வெளியுலகம் சென்றடையாமல் முடக்கவும், அதே சமயம் ஆதியின் கண்களுக்கு மாத்திரம் , அதை தேடலாகவும் காண்பிக்கவும் மிகுந்த சிரமப்பட்டுப் போயினர் கிஷோரும், தாயாரும் .

கிஷோரின் மூலம் உண்மையை அறிந்து கொண்ட டாக்டர், தலையை குனித்துக் கொண்டே, தாடையை தடவிய படி எதையோ தீவிரமாக சிந்தித்தார்.
அவரது ஆழ்ந்த சிந்தனை பாவம், பெற்ற மனதில் பூகம்பத்தை உருவாக்கியது. அதை கவனியாத டாக்டர், “கம் டு மை ரூம்”என்று விட்டு நகர்ந்தார்.
ஆதியின் தாயாரின் கலக்கத்தை உணர்ந்து கொண்ட கிஷோர், அவரை தோளோடு அணைத்துப் பிடித்த படி, “பயப்படாதீங்கமா… ஒண்ணுமே.. இருக்காது” என்று தேற்றிய படி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
இருவரும் அறைக்குள் நுழைந்த போது, டாக்டர் ஓர் எக்ஸ் – ரே கார்டை தூக்கிப் பார்த்து ஆராய்ந்து கொண்டிருந்தார். அது ஆதியின் கதிர்வீச்சு படம் தான்.

அவரது முகம் இறுகிப் போயிருந்த அதே நேரத்தில் சிந்தனை வயப்பட்டிருந்தது.

ஆதியின் தாயாருக்கோ, அறைக்குள் நுழைந்த போது வெகுவாகக் கண்கள் கலங்கியிருக்க, டாக்டரின் இன்னுமே இறுகியிருந்த முகத்தைக் கண்டதும், கண்ணீர் தானாக அவரது கட்டுப்பாட்டையும் மீறி கன்னங்கள் வழியே வழிய ஆரம்பித்தது.

அவர்கள் இருவரும் , டாக்டருக்கு முன்னிருந்த கதிரைகளில் அமர்ந்து கொள்ள, டாக்டர் அவர்களை நிமிர்ந்து நோக்கினார். தன்னிரு கைகளையும் பின்னிப் பிணைத்து, மேசையில் வைத்தபடி பேசத் தொடங்கினார்.

“இங்கப்பாருங்க மிஸ்டர். கிஷோர்.. உங்க ஃப்ரண்டுக்கு அடிபட்டிருக்குறது தலையில.. அதுவும் மூளைக்கு பக்கத்துல… இந்த மாதிரி நேரங்கள்ல… மூளைக்கு ரொம்ப வேலை கொடுக்கக் கூடாது…. இயன்றவரை ரிலாக்ஸ் மைன்டா வச்சிக்கணும்.. fortunately or unfortunately.. அவரு… திரும்பவும் அதே பொண்ண மீட் பண்ணியிருக்காரு… அவ தான் மேக்னான்னு அவர் மூளை நம்ப ஆரம்பிச்சிருக்கு… இப்போ போய் உண்மைய சொன்னோம்னா…”என்று தெளிவான மற்றும் அடக்கமான குரலில் பேசிக் கொண்டிருந்தவர், தன் பின்னிப் பிணைந்திருந்த கைவிரல்களில், பசை ஒட்டி, அதிலிருந்து விடுபட முனைவது போல விரல்களை இணைத்து பிரித்த படி, “அவரோட மூளைக்கு அது.. சிக்கலான விஷயமா இருக்கும்” என்றார்.

அதைக் கேட்டவுடன் ஆதியின் தாயாருக்கோ, பாறாங்கல்லொன்றை தன் நெஞ்சில் ஏற்றி வைத்தது போல வலித்தது.
“முருகா… இதுக்காப்பா.. தவமா தவமிருந்து ஒரு பிள்ளை பெற்றேன்..”என்று உள்ளே கிடந்து அல்லாடியது பெற்ற மனம்.

தன் கலக்கத்தை வெளிப்படையாக காட்டினால், எங்கே தாயார் முற்று முழுதாக ஓய்ந்து விடுவாரோ என்ற அச்சம் காரணமாக தைரியமாக இருப்பதாக வெளிக்கு காட்டிக் கொண்டான் கிஷோர்.
“இப்போ போய்… நீ பாத்தது.. மேக்னா இல்ல.. அது வேறொரு பொண்ணுனு சொன்னீங்கன்னா.. அவரு அப்நார்மல் ஆககூட சான்ஸ் இருக்கு..”என்றார் டாக்டர்.
“அப்நார்மல்” என்ற வார்த்தையை கூற கேட்டதும், தாய் அதிர்ச்சியில் “டாக்டர்”என்று பயத்தில் அலறியே விட்டார்.
அவரை நோக்கிய டாக்டர், நிதானம் துளிர்த்த முகத்துடனேயே, “இதுல பயப்பட்றதுக்கு ஒண்ணும் இல்லமா.. அப்படி நடக்க வாய்ப்பிருக்குன்னு தான் சொல்றேன்..”என்றவர் தற்போது கிஷோரை நோக்கினார்.

கிஷோர் ஆதரவாக தாயின் கைகளைப் பற்றிக் கொண்டான்.

“ஸோ… அதனால… அந்த பொண்ண கூப்பிட்டு பேசி பாருங்க… அவங்களால மட்டும் தான்.. ஆதி அப்நார்மல் ஆகாம தடுக்க முடியும்… அவங்க.. அவர் கூட பேசகூட தேவையில்ல.. சும்மா வந்து நின்னா கூட போதும்… அவரோட உடம்பு நிலை கொஞ்சம் தேறினப்பறம்.. உண்மைய சொன்னா.. அவரு யதார்த்தத்த புரிஞ்சுப்பாரு” என்று டாக்டர் ஆதியை குணப்படுத்துவதற்கான, முழுத் திட்டத்தையும் கூறி விட்டு, இறுதியில் கூறியது இது தான்.
“hurry up கிஷோர்… நமக்கு அவ்ளவா டைம் இல்ல.. ஆதி முழிக்க முதல்.. நாம மேக்னாவ கொண்டு வந்தாகணும்… நீங்க பேசுங்க அவங்க கிட்ட.. இல்ல இங்க கூட்டி வாங்க.. நா பேசுறேன் அவங்க கிட்ட” என்றார்.

தலையாட்டி விட்டு வெளியே வந்த கிஷோர், செய்த முதல் வேலை இத்தனை நேரமாய் காபித் தண்ணியாவது குடிக்காமல் இருக்கும் குருப்ரபாவதியை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தது தான்.
அவரை வற்புறுத்தி ஒருவழியாக சாப்பிட வைத்தானாயினும், அவனால் சாப்பிட முடியவில்லை. இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் அவனுக்கு பசியெடுக்கவுமில்லை.
அவன் இளைஞன். சாப்பிடாமல் அவனால் நாள் முழுதும் இயங்க முடியும். ஆனால் வயதான குருப்ரபாவதியால் முடியுமோ?
அவன் அவசரமாக செயற்பட வேண்டிய தருணம் இது. சாப்பிட்டு நேரத்தை வீணடிக்க அவன் விரும்பவில்லை. சாப்பாட்டை விட ஓர் மனித உயிர் முக்கியமாக போய் விட, விரைந்து செயற்பட தொடங்கினான்.

ஆதியை இங்கே அனுமதிக்கும் போது, தாரிணி தன்னைப் பற்றி கொடுத்திருந்த விபரத்தில் இருந்து, அவள் இலக்கத்தை எடுத்து அவளுக்கு அழைப்பெடுத்தான் கிஷோர்.

அவளோ இன்று திங்கட்கிழமையாதலால், வீட்டில் ஓய்வெடுக்கக் கூட முடியாமல் , அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே, அவசர அவசரமாக தயாராகி, அரக்க பறக்க வேலைக்கு ஓடியிருந்தாள்.

இன்று அவளுடைய மாணிக்கக் கற்களின் விநியோகத்தை மையப்படுத்தி செய்யும் அந்த வியாபாரக் கம்பனியின் எம். டி வருகை தரும் நாள் . அதாவது க்ரிஸ்டல் பேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம். டி வருகை தரும் நாள்.
அந்நிறுவனத்தின் இரத்தினக் கற்கள் தரம் பிரிக்கும் பகுதிக்கு தலைமையதிகாரியாக இருந்தாள் தாரிணி.

வெள்ளை நிறத்திலான பெண்கள் அணியும் கோட் சூட்டுடனும், பின்னந்தலையில் “போனிடெயில்” அலங்காரத்துடனும் “ப்ரசன்டேஷன் அறையில்” நின்றிருந்தவள், நுனிநாக்கில் ஆங்கிலம் தாண்டவமாட, இரத்தினக் கற்களை தரம் பிரிக்கும் பகுதியில் , ஊழியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி கூறிக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் அவள் கழுத்தில் மாலையாய் தொங்க விடப்பட்டிருந்த செல்ஃபோன் அலற, எந்தவித தயக்கமும் காட்டாமல் , அழைப்பை துண்டித்து விட்டு தன் பேச்சை தொடர்ந்தாள்.

“ஸாரி சர். .. அக்கோர்டிங் டு.. திஸ்…” என்று அவள் கூறிக் கொண்டிருந்த பொழுது, மீண்டும் செல் அலறியது. யார் இது தன் வேலை நேரம் அழைப்பெடுப்பது? ஒரு வேளை கார்த்திக்காக இருக்குமோ? என்று மனதளவில் எண்ணியவளுக்கு, அவனாய் இருக்காது என்று தோன்றியது.

திரையை நோக்காமல், எம். டியின் முகம் கோணுகிறதா? என்று நோக்கிக் கொண்டே, “ஸாரி சர்..”என்று மன்னிப்பை மறுபடியும் உதிர்த்த படி, அழைப்பை துண்டித்தாள் தாரிணி.
எம். டியின் முகம் அனாவசியமாக ஏற்பட்ட இடைஞ்சலால் சிறிது கோணத்தான் செய்தது. அதேசமயம் அவளது பணிவான மன்னிப்பில் கோணல் மறைந்து விட, இலேசாக தலையசைத்து, அந்த புன்னகையை ஏற்றுக் கொண்டவராய், “கோ ஹெட்”என்றார்.
விட்ட இடத்திலிருந்தே தொடரும் முகமாக, “சர்.. அக்கோர்டிங் டு.. திஸ்…” என்று அவள் கூறிய நேரம், மீண்டும் அவள் அழைப்பின் நாதம் கேட்டது.
எரிச்சல் மீதூற, செல்லை எடுத்து திரையை வெறித்தாள் தாரிணி. இலங்கை இலக்கங்கள் தான். ஆனால் அவளுக்கு பழக்கப்படாத இலக்கங்கள்.

“ப்ச்” என்று எரிச்சலை வெளிப்படையாக காட்டிய வண்ணம், அழைப்பை துண்டிக்கப் போனவளை தடுத்த அவளுடைய நரை முடி எம். டி, “நோ தாரிணி…” என்று தடுத்தவர், “ஏதாவது முக்கியமான கோலா இருக்கப் போகுது.. முதல்ல போய் பேசுங்க”என்று கூற, அதற்கு மேலும் அங்கு நிற்க மனமற்று, அவ்வறையின் பாரிய கண்ணாடிக் கதவைத் தள்ளித் திறந்த படி வெளியே வந்தாள் தாரிணி.

சும்மாவே மறுமுனையிலிருந்தவன் மீது, இடையூறு செய்து விட்டானே என்று கோபத்தில் இருந்தவள், பேசியது கிஷோர் என்று தெரிந்ததும் கோபத்தின் உச்சியிற்கே சென்று விட்டான்.

இந்த தொந்திரவு எல்லாம் அவனால் தானே? விபத்துக்குள்ளான அவன் நண்பன் “ஆதி”யை அம்போ என்று அப்படியே வீதியில் விட்டு விட்டு செல்லாமல், செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஆதியை ஹாஸ்பிடலில் அனுமதித்து , நினைவு திரும்பும் வரை, அங்கேயே மனம் பதை பதைக்க, பசியையும் அடக்கிக் கொண்டு நின்றால், “கெளம்புங்க ப்ளீஸ்”என்று அடித்து விரட்டாத குறையாக அங்கிருந்து அனுப்பி விட்டான்.

அலுப்பும், களைப்புமாக வீடு வந்து சேர்ந்தால், அலுவலகத்திலிருந்து எம். டி வந்திருப்பதாகவும், அவசரமாய் வந்து சேரும் படியும் தகவல் வர, அடித்துப் பிடித்துக் கொண்டு அலுவலகம் வந்தாயிற்று.

இந்த கிஷோர் மட்டும் அங்கிருந்து விரட்டாமல் இருந்திருந்தால் அப்படியே அயர்வோடு அயர்வாய், ஹாஸ்பிடலிலேயே இருந்து விட்டு, அலுவலகத்திலிருந்து அழைத்தால், உண்மையைக் கூறி வரமுடியாது என்று கூறி விட்டு , அப்படியே ஆதி விழித்த பின் மன நிம்மதியோடு வீடு வந்து, ஓய்வும் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

எல்லாம் இவனால் தானே? ஒட்டு மொத்த கோபமும் கிஷோர் மீது திரும்ப, கிஷோர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அடுத்த கணமே தாருமாறாகத் திட்ட ஆரம்பித்தாள் தாரிணி.

அவளிருந்த கடுப்பான மனநிலையில், ஆதியைப் பற்றியோ அவனது உடல்நிலை பற்றியோ ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை அவளுக்கு.

ஆனால் அவளது திட்டு எல்லாம் மறுமுனையில் இருந்த கிஷோரின் காதுகளுக்கு இடி இடியாய் கேட்டது.

சும்மாவே தடித்த குரலுடையாளுக்கு, கோபத்தின் உச்சியில் இன்னும் கொஞ்சம் குரல் வலுக்க, “ஏன்டா.. வெள்ளப்பனியாரம்… உனக்கு அறிவில்ல… ஒருத்தி திரும்ப திரும்ப கோல கட் பண்றான்னா.. வேலையில பிஸியா இருக்கான்னு தெரிய வேணாம்…” என்று கத்தியவள், கிஷோருக்கு பேசவே இடங் கொடுக்காமல் திட்டிக் கொண்டே போனாள்.

“அது தான் அடிச்சு விரட்டாத குறையா… விரட்டி விட்டேல்ல… எருமமாடு… இப்போ எதுக்குடா கோல் பண்ண இடியட்”என்று இறுதி வரை ஆவேசமாகவே பேசினாள் தாரிணி.
கிஷோருக்கு மூக்குத்துவாரம் விடைக்குமளவுக்கு கோபம் வந்தாலும், நண்பனின் உடல் நலங்கருதி பல்லைக் கடித்துக் கொண்டு, பொறுமையாக அனைத்து திட்டையும் தாங்கினான்.

பெருமூச்சொன்றை விட்டு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், கோபப்பட்டால் காரியம் சாதிக்க முடியாது என்று தோன்ற, பணிவான குரலிலேயே, “இல்ல சிஸ்டர்… எங்களுக்கு கண்டிப்பா… உங்க ஹெல்ப் தேவைப்படுது… அவசரமா கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் வர முடியுமா? ப்ளீஸ்” என்று தன் தேவைக்காக , அவளிடம் கெஞ்சிய படி பேச, தாரிணியின் குரலில் இருந்த நூறு சதவீத சீற்றத்தில், இரண்டு சதவீத சீற்றம் குறைந்து ஒலிக்கவாரம்பித்தது.

“நீ நினைச்ச நேரத்துக்கு போறதுக்கும், வர்றதுக்கும்.. நா என்ன உன் வீட்டு வேலைக்காரியா?” என்று அவள் விட்டேற்றியாக மொழிய , கிஷோருக்கு அவள் பேசிய அதிக பட்சமான பேச்சில், தன் செல்லை தூக்கி எறிந்து, தன் கோபத்தை போக்கிக் கொள்ள வேண்டும் போலிருந்தாலும், நண்பனுக்காக அமைதியாக இருந்தான்.

இதே அவள், அவனுடைய தங்கை விஷ்வமேக்னாவாக இருந்திருந்தால், நடப்பதே வேறு. கன்னத்திலே நான்கு அறை விட்டாவது, ஹாஸ்பிடல் அழைத்து வந்திருப்பான் கிஷோர்.

“இல்ல சிஸ்டர்.. இது ரொம்ப அர்ஜன்ட் மேட்டர்.. என் ஃப்ரண்டோட உயிர காப்பாத்தனும்னா.. நீங்க வரணும்…” என்று அவன், இவ்வளவு கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, பணிவாக பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“ஹலோ.. ஹலோ..” என்று தனியே அவன் மட்டும் இம்முனையில் இருந்து பேசிக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பை துண்டிக்கிறாள்? என்ன பெண்ணிவள்… என்று நொந்து கொண்டவனாய், மீண்டும் அழைப்பெடுத்த போது, அவளது செல் இயக்கத்தில் இருக்கவில்லை.

ச்சே… என்ற படி, காலால் தன் எதிரே இருந்த சுவற்றுக்கு ஓங்கி உதைத்தவன், வலது கையால் , தலை முடியை நெற்றியிலிருந்து பின்னோக்கி கோதி விட்டபடி, “இவளுக்கு போய்.. மேக்னாவோட உருவமா?” என்றான் எரிச்சலுடன்.

தடித்த குரலும், ஓட்டை வாயும், அடங்காப் பிடாரித்தனமும், விஷ்வமேக்னாவின் மென்மை சுபாவத்துக்கு ஈடாகுமோ? எல்லாம் என் நேரம் என்று தன்னிலையை எண்ணி, தன் நெற்றியில் அடித்துக் கொண்டே, தாயார் இருக்கும் இடத்தை அடைந்தான்.
கிஷோரைக் கண்டதும் ஆதியின் தாயார் குருப்ரபாவதி, “அந்த பொண்ணு என்ன சொன்னாப்பா?வரேன்னாலா?” என்று ஆர்வம் தோய்ந்த முகத்துடன் கேட்க, கிஷோர் பதில் மொழியத் தெரியாது , தரை பார்த்து குனிந்த படி நின்றான் .

கிஷோர் பதிலேதும் கூறாமல் , அமைதியாய் இருந்ததை வைத்தே நடந்ததை அனுமானித்த தாய்க்கு , தன் மகனின் நிலையை நினைத்து மௌனமாய் கண்ணீர் சிந்த மட்டும் தான் முடிந்தது.

தாயின் வாடிய முகம் காணப் பிடிக்காமல் , இன்னொரு முறை அழைப்பெடுத்தால் தான் என்ன? என்று தோன்ற, அழைப்பெடுத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தாரிணி அழைப்பை முற்றாக நிறுத்தி வைத்திருந்தாள். மீண்டும் மீண்டும் அழைப்பெடுத்தும், “ஸ்விச்ட் ஆஃப்” என்று வர, நண்பனின் நிலையை நினைத்து கிஷோருக்கும் கவலையாய்ப் போயிற்று.
அவர்களிருவரும் செய்வதறியாது நின்ற போது , அவர்களின் ஒரே பிரார்த்தனையாக அமைந்தது, எழுந்திருக்கும் ஆதி, தப்பித் தவறியேனும், மேக்னாவை கேட்கக் கூடாது என்பது தான்.
ஆனால் ஆதி கண் விழித்ததும் முதலில் கேட்டது அவனுடைய ஆருயிர்க் காதலி மேக்னாவைத் தான். டாக்டர் போட்ட ஊசியினால், எந்தவித கவலையுமற்று சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக உறங்கிய ஆதி , கண் விழிக்கையில் முதலில் கண்டது குருப்ரபாவதியை தான்.
கண்களில் சோர்வு மின்ன தாயைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவன், மெல்ல கண்மணியை சுழற்றி சுழற்றி, தன் கண்மணியைத் தேடினான் .

அவனது தேடலை புரிந்து கொண்ட இருவருக்கும், டாக்டர் கூறியதை நினைக்குங்கால், இனி நடக்கப் போவதை நினைத்து பயமாக இருந்தது.
அவன் நாவும், வாயும் உலர்ந்து வரண்டு போயிருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அவன் வாய் ஓயாமல், மென்மையான குரலில் “மேக்னா… மேக்னா…” என்று உளறிக் கொண்டே தானிருந்தது.
ஆதியின் தாயாருக்கோ , பெற்ற மகனின் நிலையைக் கண்டு அழுகை பீறிட்டு எழ, இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்.

தாயின் அழுகை மனதை சுட, “ஸ்வீட்டி…. ஏன் அழுவுற?” என்று கேட்டவனுக்கு, அவரின் அழுகை வேறு விதமாகத் தோன்றலாயிற்று.
மேக்னா திரும்பவும் தன் மகனை விட்டு ஓடி விட்டாள் என்பதற்காகத் தான், தாய் அழுவதாகத் தோன்ற, அவன் மனதுக்குள் எழுந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் முகமாக, “மே… மேக்னா.. மேக்னா.. என்ன விட்டு மறுபடியும் போயிட்டாளாமா?” என்று அவன் ஸீலிங்கைப் பார்த்து வேதனையுடன் கேட்ட நேரம், ஆதியின் கண்ணிமையோரம் தானாகவே, கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
கிஷோரோ எதை சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் திக்கு முக்காடியவனாய் நின்று கொண்டிருந்தான்.
சில நிமிடங்கள் அவ்வறையில் அமைதியே நிலவியது. அங்கணம் அறைக்குள், மருந்துத் தட்டுடன் நுழைந்த தாதி, தட்டை கட்டிலுடன் இருந்த மேசை மீது வைத்து விட்டு, மீண்டும் வெளியேறினார்.

ஆதியின் தாயும் தலை குனிந்த வண்ணம் மௌனமாய் இருக்க, கிஷோரும் எப்படி இருவரையும் தேற்றுவது என்பதறியாமல் குழப்பத்தில் தவிக்க, ஆதியின் பார்வை இவை எவற்றையும் கவனியாமல் சீலிங்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தது.

அதில் தற்போது கண்ணீர் இல்லை. விரக்தியே தென்பட்டது. அவளே தன்னை வேண்டாம் என்று சென்ற பிறகு , தானேன் இந்த உலகத்தில் உயிர் வாழ வேண்டும்?அவளுடன் வாழாத இந்த வாழ்க்கையே தனக்கு தேவையில்லை என்று நொடியில் முடிவெடுத்தவன், சட்டென தன் தலையை திரும்பி தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கான வழிவகை தேடினான்.
அவனுக்கு பிடரியில் அடிபட்டதால் ஏற்படுகின்ற வலியையெல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு இந்த உயிர் தேவையில்லை என்பதே பிரதானமாகப்பட்டது.

தன்னுயிரை மாய்த்துக் கொள்ள உபகரணம் தேடியவனின் கண்களுக்கு, அந்த அறையில் அவனது கட்டிலுக்கு அருகாமையில் இருந்த நடுத்தர அளவிலான சிறு மேசையில் இருந்த அந்த மருந்துத் தட்டு பட்டது.

அவன் கண் விழித்த போது, அவனது அறைக்கு , அவனுடைய பிரதான காயமான தலைக்காயத்தை விட இதர காயங்களுக்கு மருந்திட, தேவையான பொருட்களுடன் வந்த தாதி, ஏதோ மருந்துப் பொருளை மறந்து விட்டு வந்து விட்டாள் போலும்.

அதை எடுக்க சென்றவள், விட்டு விட்டுப் போன மருந்துத் தட்டிலிருந்த வெள்ளி நிறத்தினாலான , கூர்மையான கத்திரிக்கோல் அவனெடுத்த முடிவுக்கு சாதகமாய்ப் போய் விட்டது.

இரண்டாவது முறையாகவும் , ட்ரிப்ஸ் குழாயை கைகளால் பிய்த்தெறிந்த வண்ணம் எழுந்தவன், நொடியில் அந்த மருந்துத் தட்டை நாடி, அதிலிருந்த கத்திரிக்கோலை எடுக்க முயன்ற போது தான் , கிஷோர் அதனைக் கண்டான்.
“டேய் என்னடா.. பண்ற?” என்ற படி கிஷோர் ஆவேசமாக பாய்ந்து , ஆதியை தடுக்கும் முன், ஆதியின் கைகளுக்கு அந்த அபாயகரமான கருவி சென்றுவிட்டிருந்தது.
ஆதியின் தாயாரோ, பதற்றத்துடனே எழுந்து , ஆதியின் கையைப் பற்றி தடுக்க முயல, கிஷோரும் இணைந்து அவன் கையை, அவன் கழுத்திற்கு செல்ல விடாமல் தடுக்க , பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.
மறந்து விட்ட மருந்துப் போத்தலுடன் வந்த தாதியும், அறைக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அசம்பாவிதத்தை கண்டு ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள்.

பிறகு நிதானித்துக் கொண்டவள், மேசையில் அவசரமாக மருந்து போத்தலை வைத்து விட்டு, அவளும் இணைந்து, ஆதியின் தற்கொலை முயற்சியை தடுக்க முயன்றாள்.

ஆதியோ மூவர் ஒன்றிணைந்து தடுத்தாலும், அவனுடைய மொத்த பலத்தையும் திரட்டி , தன் வலது கையை மீண்டும் மீண்டும் தன் கழுத்தை நோக்கியே கொண்டு சென்றான்.

தன்னைத் தடுப்பவர்களை வெறித்தனமாக தள்ளி விட்டுக் கொண்டே, கிட்டத்தட்ட ஓர் மனநோயாளியைப் போல , தன்னுயிரை மாய்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தான் ஆதி.

“டேய்… என்ன விடுங்கடா …. நா சாகணும்… என்ன விடு கிஷோர்… மேக்னா இல்லாத வாழ்க்கையே எனக்கு தேவையில்ல… நான் சாகுறேன் என்ன விடுங்கம்மா..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு, சாக வேண்டும் என்ற வெறியில் அவன் கத்திக் கொண்டேயிருந்தான்.

“சொன்னா கேளுங்க மிஸ்டர். ஆதி…”என்று தாதி ஒரு பக்கமும், “டேய் வேணான்டா.. ப்ளீஸ்டா.. எங்கள விட்டு போயிடாதே மச்சி” என்று தளதளத்த குரலில் கிஷோர் ஒரு பக்கமும், “வேணாம் ஆதி.. உன்ன பிரிஞ்சி.. அம்மாவால இருக்க முடியாது ஆதி” என்று கண்ணீருடன் தாயார் ஒரு பக்கமும் என அனைவரும் கெஞ்சிக் கொண்டிருக்க, ஒரு சில நிமிடங்களில் ஆதி யாரும் தடுக்க முனையாமலே தன் முயற்சியை கை விட்டான்.
அவனது வலது கையிலிருந்த கத்திரிக்கோல் தானாகவே கீழே விழுந்தது. கத்திரிக்கோலின் அழுத்தம் கராணமாக அவன் உள்ளங்கையில் இருந்து இரத்தம் சொட்டு சொட்டாக வழிந்தோடிக் கொண்டிருந்தது.

அவனுடைய கண்கள் ஒருவித ஒளியுடன், அறையின் கதவிலேயே நிலைத்து நின்றிருந்தன. அவன் வாளாவிருப்பதைக் கண்ட தாயார், கிஷோர், தாதி ஆகிய மூவரும் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தனர்.
அவன் பார்வை நிலை குத்திப் போய் நின்றிருந்த இடத்தை மூவரும் நோக்க, அங்கே தாரிணி அரண்ட விழிகளுடன் நின்றிருந்தாள்.
பெண்கள் அணியும் கோட் சூட் அணிந்து, பின்னந்தலையில் “போனிடெயில்” அலங்காரத்துடனும், தோளில் ஒரு கைப்பையுடனும் , கூடவே விழி நிறைய அச்சத்துடனும் நின்றிருந்தாள் தாரிணி.
ஹாஸ்பிடல் பக்கமே வரக் கூடாது என்று எண்ணியிருந்தவள் தான். ஆயினும் , “ஆதி உயிர காப்பாத்தனும்” என்று கிஷோர் உருக்கமாக கூறியதும், அதே சமயம் நேற்றிரவு ஆதி, “என்ன.. விட்டு போயிடாதேமா” என்று கூறியதும் நினைவுக்கு வர, இருக்கும் வேலையை ஒதுக்கி விட்டு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு இங்கு வந்து நின்றால், தலையில் கட்டு மற்றும் கையில் கத்திரிக்கோல் சகிதம் உயிரை மாய்த்துக் கொள்ள துடிக்கும் தற்கொலை வெறியுடன் ஆதியைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தாள் தாரிணி.
அதை விடவும் பெரிய அதிர்ச்சி, அவளைக் கண்டதும் தற்கொலை முயற்சியை கை விட்டு விட்டு, அவளிடம் , வேகத்துடன் ஈரெட்டில் அணுகியமை தான்.
இவ்வளவு நேரம் கொலை வெறியுடன் தன்னுயிரையே மாய்த்துக் கொள்ளப் போனவன் அதை கைவிட்டு விட்டு , அவளருகே வந்தால், அவள் நிலைமையிலிருக்கும் யாருக்கு தான் பயம் வராது?
அவளோ, அவன் தன்னை நோக்கி வர, அச்சத்தில் சட்டென பின்னே நகர்ந்தாள்.
ஆதி அவளுடைய செய்கையில் மனமுடைந்தவனாய் அவள் விழிகளை கலக்கத்துடன் பார்த்த படி நின்றான். அவனுடைய பார்வையில் , தன் காதலி மேக்னாவுக்கு, அன்றைய ஊடல் சம்பவத்தினால் விளைந்த கோபம் இன்னும் தீரவில்லை என்றே தோன்றிற்று.
தாரிணியைக் கண்டதும், உள்ளத்தில் காதல் பெருக்கெடுக்க , கட்டியணைக்கத் தான் அவளை அணுகினான் ஆதி . ஆனால் அவள் விலகவும், மனமுடைந்தவனாய் , அப்படியே தரையில் தொப்பென மண்டியிட்டு அமர்ந்தான்.
அவன் செய்கையில், அவளுடைய விழிகள் அகலமாக விரிந்தன. என்ன நடக்கிறது என்பதை அனுமானிக்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அவள் புரியாமல் விழிக்க, ஆதியோ, “உன்ன.. கெஞ்சிக் கேட்குறேன் மேக்னா… ப்ளீஸ்.. இன்னொரு தடவ என்ன விட்டுட்டு போயிடாதேமா”என்று கண்களில் அதுபாட்டுக்கு கண்ணீர் வடிய, தளதளத்த குரலில் கூறினான்.
தாரிணிக்கு அவனுடைய செய்கை, இவன் மனம் பிறழ்வானவனோ? என்று எண்ணத்தை எழச் செய்ய, சட்டென தன்னிரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள்.
தாரிணியைத் தவிர அங்கிருந்த மூவருக்கும் ஆதியின் நிலைமையை நினைத்து கண்கள் கலங்கின.
நிலைமையை முதலில் சமாளித்தது தாதி தான். “அட வாங்க மிஸ். மேக்னா…” என்று, புதிதாக வந்த தாரிணியை வரவேற்க, தாரிணிக்கோ இவளுக்கும் பைத்தியமோ? என்று தோன்றலாயிற்று. தான் மேக்னாவா?

அந்த நினைப்புடன் புரியாதவளாக தாதியின் முகம் பார்க்க, தாதியோ சுட்டு விரலைத் தன் உதடுகளில் நிலைக்குத்தாக வைத்து , “எதுவும் பேச வேண்டாம்” என்று சைகையில் உணர்த்த, தாரிணியும் மெல்ல தலையசைத்து விட்டு, நடப்பதை மட்டும் வேடிக்கைப் பார்க்கலானாள்.
“நேரத்தோட வந்திருக்கலாமே மிஸ். மேக்னா?.. நீ வரல்லைன்னதும்.. சார்… நம்மள எல்லாம் ஒரு வழி பண்ணிட்டாரு” என்று இயலுமான வரை இயல்பான குரலில் மொழிந்த படியே, ஆதியருகில் வந்து குனிந்து, அவன் தோளைப் பற்றித் தூக்கி, “வாங்க ஆதி… இப்போ தான் மேக்னா வந்துட்டாங்கல்ல… வந்து ரெஸ்ட் எடுத்துக்குங்க” என்று கூறியபடி ஆதியைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கட்டிலில் சாய வைத்தாள் தாதி.

பிறகு கீழே இருந்த கத்திரிக்கோலைக் குனிந்து பொறுக்கிக் கொண்டு , கிஷோரிடமும், தாயிடமும் “நா போய்… டாக்டர அழைச்சிட்டு வர்ற வரைக்கும்.. அவர பத்திரமா பாத்துக்குங்க..” என்று மருந்துத் தட்டுடன் வெளியேறிய தாதி, கதவுப்பக்கம் நின்று கொண்டிருந்த தாரிணியிடம் , அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் , “டாக்டர்.. வர்ற வரைக்கும் ஆதி.. என்ன சொன்னாலும் செய்ங்க தாரிணி..” என்று படபடப்பு மிகுந்த குரலில் கூறி விட்டு அங்கிருந்து அகன்றாள்.

தாரிணியோ, தாதி அவ்வாறு கூறி விட்டு சென்றவுடன், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றறியாமல், உள்ளூர ஓர் நடுக்கம் தோன்ற, என்ன செய்வது என்று தெரியாமல் வெளவெளத்துப் போய் நின்றிருந்தாள்.

ஆதியோ பல வருடங்கள் கழித்து மேக்னாவைக் கண்டதும், ஆயிரம் நிலா வானத்தில் உதித்தாற் போன்ற சந்தோஷத்தில் இருந்தான்.
சற்று நேரத்திற்கு முன், உயிர் துறக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தவனுக்கு, தன்னவளின் மதி முகம் கண்டதும், அந்த வெறியெல்லாம் எங்கு போயிற்று என்றே தெரியவில்லை.

காதலுடன் தன் காதலியை நோக்கி, இதற்கு முதல் எந்த வித அசம்பாவிதமும் நடவாதது போல, மிக மிக இயல்பாக, “ஏன்.. அங்.. கேயே நிற்குற மேக்னா… வா வந்து உட்காரு”என்ற படி அருகிலிருந்த சிறு பிளாஸ்டிக் கதிரையைக் கண்களால் காட்டினான்.
அவளுக்கோ தான் ஏதேனும் கனவு காண்கிறோமோ? என்ற சந்தேகந் தோன்றவாரம்பித்தது. இவன்.. யாரென்று எண்ணி தன்னை “மேக்னா” என்கிறான்? ஒருவேளை சித்தங் கலங்கி விட்டதோ? எதுவுமே புரியவில்லை அவளுக்கு.

அங்கிருந்து நகர்ந்து சென்று விடலாமா?? என்று கணத்தில் தோன்றிய சிந்தனையை கட்டுப்படுத்திக் கொண்டு, தாதி கூறியது போல, மெல்ல மெல்ல நத்தை போல நகர்ந்து வந்து, அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

தாரிணிக்கு உள்ளே இதயம் பக்பக் என்று அடித்துக் கொண்ட சத்தம், அவள் காதுகளுக்கு நன்றாகவே கேட்டன. தன்னருகில் மருந்து நெடியுடன் மல்லாக்காக படுத்திருந்து, தலையை மட்டும் தன்புறம் திருப்பி, தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் அவனை தாரிணி நிமிர்ந்து கூட பார்த்தாளில்லை.

அவனுடைய பார்வை, தாழ்த்திய விழிகளினுள்ளும் ஊடுருவுவது போன்ற ஓர் பிரம்மையை ஏற்படுத்தியது அவளுக்கு . அந்த ஏசி அறையினுள்ளும் வியர்க்க, அடிக்கடி தன் கைக்குட்டையால் முகத்தை ஒத்தி ஒத்திஒத்தி எடுத்துக் கொண்டாள் தாரிணி .

தாரிணிக்கு எப்பொழுதடா டாக்டர் வந்து, எப்பொழுதடா தான் அங்கிருந்து செல்வோம் என்றிருக்க, ஆதிகேஷவன் வித்தியாசமான மனநிலையில் இருந்தான்.
பல வருடங்கள் கழித்து சந்தித்த காதலியைக் கட்டியணைக்க, முத்தாட, தன் பிரிவின் ஏக்கத்தை எல்லாம் ஒரே நாளில் உணர்த்த என பலவற்றிற்கும் அவன் மனம் கிடந்து தவித்தது. இருப்பினும் அவனால் அவனிருந்த உடல்நிலையால் முடியவில்லை.

தன் தற்கொலை எண்ணம் ஓய்ந்ததும், நிதானத்திற்கு வந்தவனுக்கு, அப்போது தன் உடல் உபாதைகளின் வலி இரட்டிப்பாக தென்படலாயிற்று.
பின்னந்தலை வலியில் “விண் விண்”என்று தெறிக்கவாரம்பித்துக் கொண்டிருந்தது.

முகத்தில் அவனுடைய வலி அப்பட்டமாக விளங்கினாலும், கண்கள் கூட இமைக்காது, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிகேஷவ்.
தாரிணிக்கு இந்நிலைமை இன்னும் கொஞ்சம் சங்கடமாய்ப் போனது. அருகில் இருந்த ஆதியின் தாயாரும், கிஷோரும் ஒரே மனநிலையில் இருந்தனர்.
விஷ்வமேக்னா மேல் தூய காதல் மாறாமல் இருக்கும் தன் நண்பனை நினைத்து பெருமைப்படுவதா? அன்றேல் இதற்கு இடையில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கும் தாரிணியின் நிலையை நினைத்து இரங்குவதா என்று தெரியாமல் டாக்டர் வரவிற்காக காத்திருந்தனர்.
ஆதியின் மனதில் விஷ்வமேக்னாவைப் பற்றி ஏராளமான கேள்விகள் நிறைந்திருந்தன. அதற்கு அவனுடைய உடல் நலம் தான் ஒத்துழைக்கவில்லை.
தன்னை விட்டும் இத்தனை வருடங்களாக மேக்னா எங்கே சென்றிருந்தாள்? என்ன செய்தாள்? அந்த சம்பவத்தை நினைத்து இன்னும் தன் மேல் கோபமா? என எக்கச்சக்கமான கேள்விகள் அவன் மனதை நிறைத்திருந்தது.

ஆனால் முதலில் போட்ட மயக்க மருந்தின் தாக்கத்தினாலும், ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதால் உடம்பும் சோர்ந்து போயிருந்ததனாலும் அவனுக்கு மெல்ல மெல்ல விழிகள் சுழன்றன.
கண்ணயர்ந்தால் மறுபடியும் மேக்னா மறைந்து விடுவாளோ? என்ற பயம் அவனை தாக்க, ஆதிகேஷவன் தன்னையும் மீறி மூடிய இமைகளை, கடினப்பட்டு பிரித்து வைத்துக் கொண்டிருந்தான்.

அவனது நிலைமையைக் கண்ட கிஷோருக்கு, ஆதிகேஷவனின் மேல் கழிவிரக்கம் மிக, நண்பன் அருகில் வந்தவன், “ஆதி.. மேக்னா எங்கேயும் போக மாட்டாடா… இங்க தான் இருப்பா… நீ ஸ்ட்ரெய்ன்… பண்ணிக்காம கொஞ்சம் தூங்குடா.. மத்ததெல்லாம்.. அப்றம் பேசிக்கலாம்” என்று கூறிய வேளை கூட, ஆதி தாரிணி முகத்திலேயே கண்கள் பதித்திருந்தான்.

மெல்ல தன் அதரங்கள் திறந்தவன், “மேக்னா.. என்ன விட்டு போகமாட்டல்ல..?”என்று தாரிணியை தன்னுயிர்க் காதலி மேக்னா என்று எண்ணிக் கொண்டு ஏக்கத்துடன் கேட்க, தாரிணியால் பதில் சொல்லவே முடியாமல் போயிற்று.
அவளது அமைதி அவனுக்குள் ஓர் கலக்கத்தை ஏற்படுத்த, ஆதிகேஷவன் மறுபடியும் அதே கேள்வியை கேட்டான்.

“மேக்னா… என்ன விட்டு போகமாட்டல்ல?” என்று இம்முறை அதே கேள்வியை கேட்ட போது அவன் குரல் சற்று கடினப்பட்டு இருந்தது.

“டாக்டர் வர்ற வரைக்கும் ஆதி என்ன சொன்னாலும் செய்ங்க” என்று விட்டு சென்ற தாதியின் அறிவுரை ஞாபகம் வர, மெல்ல தன் தலையை உயர்த்தி அவனைப் பார்த்து, “இல்ல” என்றாள்.

அவள் அவ்வாறு சொன்னதும், அவனுடைய முகத்தில் மின்னல் வெட்டியது போல ஓர் பிரகாசம் தோன்றியது. மெல்ல புன்முறுவல் செய்தவன், அவனுடைய கையை நீட்டி, அவள் கைகளுள் ஒன்றைப் பற்றி, தன்னுள் சிறைப்படுத்திக் கொண்டவன், மெல்ல மெல்ல இமைகள் மூடினான்.

தன் சீதையின் குரல் ஏன் இன்று வித்தியாசமாக இருக்கிறது?அவளது மென்மையான பஞ்சன்ன உள்ளங்கை ஏன் இன்று சற்றே சற்று சொரசொரப்பாக விளங்குகிறது? என்று அவனுக்கு உள்ளே தோன்றினாலும், அதைக் கேட்கும் முன் எங்கும் கும்மிருட்டு பரவியிருந்தது. அவன் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டிருந்தான்.
தாரிணியோ விபரிக்க முடியாத உணர்ச்சியில் இருந்தாள். ஓர் ஆடவன் அவள் கைப்பிடித்து உறங்குவது இது தான் முதல் தடவை அவளுக்கு.
குழந்தை போலுறங்குபவனின், தலை கோத வேண்டும் என்ற தாய்மையுணர்வு தோன்றுவதை அறிந்தவள், அதனை வளர விடாமல் தடுக்க, அவன் ஆழ்ந்து உறங்கி விட்டான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு விட்டு, அவனில் தன் கையை மெல்ல உருவ முயன்றாள்.

அவன் உறக்கத்திலும் கெட்டியாகப் பிடித்திருப்பதைக் கண்டவள், மெல்ல அவன் விரல்கள் ஒவ்வொன்றாய் பிடித்து பிரித்து விட்டு தன் கையை விடுவித்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *