#இறைஞ்சிச்_சாதல்
எதற்கும் பொருளில்லை
அணைக்க இயலா
வெகுதூர உடலுக்காய்
காதல் கசிவதற்கு முன்னமே
வெயில் பட்டு உலர்ந்துதிர்ந்து
பாலையில் நிற்கும் ஒற்றை
மொட்டை மரமாகிறது
இக்கூடு.,
மறுதலித்து மறுதலித்து
உற்பத்தியில் பயன்படுத்தவென்று
சேமித்த சகல அன்பையும்
வெகு மூர்க்கமாய்
விண்ணில் வீசி எறிய
முனைகிறேன்..,
முயற்சி எனும் ஏனைய காரணிகளின்
சிறகிலிருந்து ஒவ்வொரு
இறகாக பிய்த்து எறிந்து
ரத்தஞ் சொட்ட திகம்பரனாகிறேன்..,
ஒரு பிடி கருணை,
ஒரு பிடி சாதம்,
ஒரு பிடி ஏக்கம்,
ஒரு பிடி தவிப்பு,
ஒரு பிடி காத்திருப்பு,
ஒரு பிடி கனவு
என இருப்பது,
இருப்பதாக நம்பப்பட்டவை
அனைத்தையும் தவிர்த்து
இந்நிலத்தில்
தொழுங் கொற்றவையிடம்
அனைத்தையும் தாரைவார்த்து
கூடலும் கூடல் நிமித்தமுமான
குறிஞ்சிக்கு நகர்த்த முருகுவை
முன்நிறுத்தித் தேம்பியழ ஆரம்பிக்கிறேன்
