அன்றைய பயணம்
அதோ தூரத்தில் தெரியும் கீழ்பாகம் சிவப்பும், மேல் பாகம் மஞ்சளும், இடையிடையே சிவப்பு
கோடுகளும் கலந்த கேரளத்துக்கே
உரித்தான பிரித்தேயகமான பேருந்து வருகிறது. அதன், முன் கண்ணாடியில் ஓட்டுநரின் தலைக்கு மேல் KSRTC என பெரிய
எழுத்துகள். அது நெருங்கி வர வர என் நெஞ்சு பட படவென அடித்துக்கொள்கிறது. ஆனால்
நேரமும் ஆகிறது காலை எட்டு மணிக்கு முன்னால் சென்றால் மட்டுமே வேலைக்கு செல்ல
முடியும். இன்று தவற விட்டுவிட்டால் இந்த வாரம் முழுவதும் இங்கே தங்க நேரிடும்.
இங்கோ வேலைகள் மிக குறைவு. அங்கு சென்றுவிட்டால் இந்த வாரம் முழுவதும் வேலை
பார்த்து கொஞ்ச காசோட வீட்டிற்கு வரலாம். வீட்டிற்கு வரும் போது தங்கச்சிக்கு
கொஞ்சம் பண்டங்கள்(பலகாரங்கள்) வாங்கி வரலாம். அவளுக்கு முட்டை பப்ஸ் என்றால் மிக
பிடிக்கும். நான் வாங்கி வரும் பண்டங்களிலே அவள் முதலில் எடுத்துக்கொள்வது முட்டைபப்ஸ்தான்.
அதனால் எந்த பண்டம் வாங்கினாலும் அந்த முட்டைபப்ஸை தவற விடமாட்டேன். எனக்கும்
தம்பிக்கும் ஒரே தங்கச்சி அல்லவா. அவனும் அப்படித்தான் அவள் கேட்பதை உடனே
வாங்கிக்கொடுக்கும் திறமை எங்கள் இரண்டுபேருக்கும் இல்லை. ஆனாலும் நிச்சயம்
நிறைவேற்றிவிடவேண்டும் என்னும் எண்ணங்கள் கொண்டு சுமக்கும் சாதாரணத்து குடும்பத்து
அண்ணன்மார்கள் நாங்கள். போன வாரம் முழுவதும் அங்கேயை தங்கி வேலை பார்த்து
சனிக்கிழமை சம்பளம் வாங்கி வந்த காசை கண்ட, அம்மாவின் சந்தோஷ முகமும் மறையவில்லை. பாசம் கலந்த தனி கவனிப்பு வேற.
இருக்காத பின்ன இதுவரைக்கும் செய்யாத வேலைக்கு புதிதாக சென்று எங்கயோ தங்கி, உண்ண உணவு கிடைக்குமா, செய்யும் வேலை எப்படி என
எதுவும் தெரியாமல் யாரோ பக்கத்து ஊர்காரர்களை மட்டும் நம்பி வேலைக்கு அனுப்பி, கொஞ்சம் கஷ்டமில்லாமல் இந்த
வார உணவுக்கும் கொஞ்சம் கடன் தீர்க்கவும் வசதியாக கொஞ்சம் காசு பார்த்துக்கொண்டு
வந்திருக்கும் மகன்மேல் எந்த தாய்க்கு தான் பாசம் இல்லாமல் போகும். பத்தாம்
வகுப்பு பரிச்சை முடிந்து இரு வாரங்கள் ஆகிவிட்டது. போன வாரம் முதல் தான்
கேரளாவில் இருக்கும் களியக்காவழியாக கேரளத்தின் தலைமை தலஸ்தானமாக விளங்கும்
திருவனந்தபுரத்திற்கு செல்லும் வழியில் நெய்யாற்றின் கரை என்னும் பஸ்டாண்டிற்க்கு
பக்கத்தில் ஒரு பெரிய கட்டிடம் கட்டும் வேலை. கான்டிராக்டர் ஒரு தமிழர் குறிப்பாக
கன்னியாகுமாரிகாரர். மொத்த குத்தகை எடுத்த வேலை என்பதால் அதில் பணிபுரியும்
மேஸ்திரியும் கையாளும் எல்லாம் தமிழ்நாட்டுகாரர்கள். குறிப்பாக கன்னியாகுமாரி
மாவட்டத்தார்கள். அதாலால் எனக்கும் கையாள் வேலை கிடைத்தது. திங்கள் கிழமை காலை
ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். ஆறு மணிக்கு முன்னால்
மார்த்தாண்டம் சென்று ஒரு சாய குடித்து விட்டு அடுத்த திருவனந்தபுரம் பஸ் ஏறி
நெய்யாற்றின்கரை செல்ல வேண்டும். அட்வான்ஸ் காசு கூட கிடைக்கும். வாரம் முடிந்தால்
சனிக்கிழமை வேலையை முடித்து அந்த வாரத்திற்கான கணக்கும் முடித்து காசு தந்து
அனுப்புவார்கள். பின்னர் ஞாயிறு விடுமுறை, மீண்டும் திங்கள்கிழமை..
இன்று திங்கள்கிழமை,
செல்வதற்காக நானும் என் பக்கத்தில் என்னை அழைத்து செல்லும் நபரும்.
போன வாரமும் அவர்தான் அழைத்து சென்றார். இதே பஸ்தான் அன்றும். ஏறி அமர்ந்ததும்
அவரே டிக்கெட் எடுத்துக்கொண்டார். வீட்டிலிருந்து கிளம்பியது முதலே அவர்தான்
டிக்கெட் எடுக்கிறார். காசு என்னிடம் இல்லாமல் இல்லை. அவரே சொல்லிவிட்டார் தான்
டிக்கெட் எடுத்துக்கொள்வதாக. என்னிடம் எடுக்க சொன்னாலும் மார்த்தாண்டம் வரை
மட்டுமே இடம் தெரியும். அதற்கு மேல் தெரியாது. அதலால் நானும் ஒன்றும் சொல்லவில்லை.
மார்த்தாண்டம் சென்றதும் அவரே சாயயும் ஒரு பண்டமும் வாங்கி தந்தார். அவரும் அது போலவே
ஒரு சாயவும் பண்டமும் எடுத்தார். இருவரும் சாப்பிட்டோம். முடித்ததும் அவரே காசும்
கொடுத்தார். பின்னர் பஸ்டாப்புக்கு வந்தோம். அதோ தெரிகிறதே அதே பஸ்தான் அன்றும்
வந்தது. இருவரும் ஏறிக்கொண்டோம். வேலை பற்றிய ஒரு கவலையும் இல்லை தந்தை இறந்து
இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. அன்று முதலே செங்கள் சூளைக்கு வேலைக்கு சென்று
பழக்கப்பட்டவர்கள் நானும் தம்பியும். ஆனால் மேஸ்திரிக்கு கையாளாக இப்போது தான்
புதிது. தம்பி இப்போதும் செங்கல் சூளைக்கு தான் செல்லுகிறான். செங்கல் சூளைக்கு
சென்று விட்டால் வேறு வேலை செய்வது கடினமாக இருக்காது என்று சொல்லுவார்கள். அதனால்
பயமென்று ஏதுமில்லை. தெரிந்த நபர்கள் வேறு. அன்றாடா சாப்பாட்டிற்கு யாராவது
கண்டிப்பாக வேலைக்கு போகவேண்டும். ஆதலால் அம்மா அண்டியாபிஸுக்கும் பள்ளி விடுமுறை
நாட்களில் தம்பி செங்கல் சூளைக்கும் சென்றுக்கொண்டுருப்பதை நினைத்தால் எனக்கு இப்போது
பிரமோசன். எனென்றால் மேஸ்திரிக்கு கையாளாக செல்ல பத்தாம் வகுப்பாவது தாண்டியிருக்க
வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் எங்கள் மக்கள் மனதில் இருந்தது. செங்கல்
சூளையில் அப்படி வயது வரம்பு ஏதும் இல்லை. அதற்கு காரணும் உண்டு. சிறுவர்களாக
இருந்தால் குறிப்பிட்ட நேரம் வரை எவ்வளவு வேலை வேண்டுமென்றாலும் வாங்கலாம்.
சம்பளம் நாற்பது கொடுத்தால் போதும். காலையில் போனதும் ஒற்றகல்
பறக்கணும்(கன்னியாகுமாரி வட்டார வழக்கு). அது முடிந்ததும் அறுப்புகாரங்க
வீட்டுக்கு போயிடுவாங்க. நாங்க அங்க அறுத்து வைத்திருக்குற கல்ல எடுத்து வைக்குறதும்.
காய்ந்து இருக்குற கல்ல சுமந்து சுள்ளையில அடுக்குறதுமாக ஐந்து மணிவரைக்கும் வேலை
பார்க்கணும். அப்படி வேலை பார்த்த எனக்கு இப்போ நிஜமாகவே பிரமோசன். சம்பளம் நூறு
கிடைக்கும் வேலையும் அதிக கஸ்டமும் இல்லை. அந்த கனவோடு தான்
பஸ்ஸில் ஏறி அமர்ந்திருக்கிறேன். ஏறியதும் இரண்டு பேருக்கும் இரண்டு இடங்களில்
சீட் கிடைத்தது. என் பக்கத்தில் ஜன்னலோரமாக அமர்ந்திருக்கும் ஆளோ நல்ல தூக்கம்.
காலை வேளை வேற. பஸ்பயணம் எனக்கும் தூக்கமாகதான் வருகிறது. முதல் முறை அனுபவம் வேற, போக போக ஆள்களின் கூட்டம்
பஸ்ஸில் கூடிக்கொண்டே இருக்கிறது. நானும் தூங்கி போகிறேன். எவ்வளவு தூரம் எந்த
இடமென தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்கும் என்மீது ஏதோ அன்னிசியாக தட்டுபட்டு
விளித்துகொள்கிறேன். தட்டுப்பட்ட இடத்தில் சாதாரணமாக ஓர் ஆள் ஒரு பேண்டும் சட்டும்
அணிந்து பஸ்ஸின் மேல்கம்பியை பிடித்துக்கொண்டு என்மீது ஒருக்களித்து சாதாரணமாக
நிற்பது மட்டும் தெரிகிறது. மீண்டும் சாய்ந்துக்கொள்ள மீண்டும் தட்டுகிறது. என்னது
என்று பார்க்க அந்த நபரின் ஆண்மை அவரின் பேண்டின் வெளியில் வந்து என் தோளின்மீது
தட்டிநிற்கிறது. அதை பார்த்ததும் என் விழிகள் வெளியில் வந்துவிடும் போல தெரிகிறது.
என்னிடமும் தான் இருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிதல்ல. பெரிதானாதாலா இந்த பயம், என்னிடம் இருப்பது தானே, பின் ஏன் பயம். எதுவோ இதயம்
நடுங்கி ஜன்னல் ஓரம் இருக்கும் மற்றவரை நெருக்கி இருந்துக்கொண்டு என்மீது
சாய்ந்திருந்தவரின் முகத்தை ஏறிட்டு பார்க்க அவரும் என்னை பார்கிறார். அவரின்
கண்கள் எதையோ சொல்கிறது. அவர் முகம் எதையோ அசைத்து கூப்பிடுகிறது. என் உடல்
இன்னும் ஜன்னலோரம் ஒடுங்குகிறது. என் பார்வை ஜன்னலுக்கு வெளியே செல்கிறது.
ஜன்னலோரம் இருந்தவர் பாவம், எதுவும்
புரியாமல் நெருக்கிய நெருக்கத்தில் சிறிது நெளிந்துக்கொடுக்க, அவரின் நெளிதலில் நானும்
நெளிய அந்த முகம் சிறிது இடமாற ஆரம்பிக்கிறது. பின் எங்கு சென்றது என தெரியவில்லை.
என் உடல் நடுக்கம் தீராமல் நடுங்கியபடியே கம்பியை இறுக்க பிடித்து
அமர்ந்திருக்கிறேன். சிறிது நேரத்தில் என்னை அழைத்து செல்லும் நபர் என் கைபிடித்து
பஸ்சில் இருந்து இறக்கி செல்கிறார். புது இடம் புது அனுபவம் என் கைகள் மட்டும்
நடுங்கிகொண்டே இருந்தது அன்றைய நாள் முழுவதும். ஒரு வழியாக அந்த வாரம் முழுவதும்
கடந்து இன்றும் பஸ்சுக்காக காத்திருக்கிறேன். அதோ வருகிறது அந்த பஸ். என் கைகள்
இன்றும் நடுங்க ஆரம்பிக்கிறது…….
