புகழ் பெற்ற கவிதைகள் சொல்வது

புகழ்பெற்ற கவிதைகள்
நிறைய வர்ணித்துக் கொண்டிருக்கவில்லை
எதுகையோ மோனையோ
எங்கும் காணவில்லை
ஓசையும் ஒழுங்காக
அமைக்கப்படவில்லை
மனிதநேயம்
என்ற சொல்லைக்கூட
பதியாமல் மனிதத்தைப்
போற்றிக் கொண்டிருந்தது
தொலைந்து போன
மனிதத்தின் ஆணிவேர்தேடி
அடையாளம் காட்டியிருந்தது….
பசியால் 
உயிரிழந்த கடைக்கோடி
மக்களின் அவலத்தை
விவரித்து இருந்தது….
பெண்ணுரிமை
என அரற்றாமல்
பெண்களை அதிலே
உயர்த்திக் காட்டியிருந்தது
பெண்ணின் வலியைச்
சொன்னதோடு வலிமையையும்
சொல்லி வாழ்த்தியிருந்தது
பெண்ணை 
வர்ணிக்கும் காதலெனும்
மாயைக்கு தயங்காது
அங்கே சாணியடித்திருந்தது….
மனிதர்களின்
கூட்டு வாழ்க்கை சமூகம்
அதிலே பணம் 
மட்டுமே வேறுபாடு
உணர்த்தியிருந்தது….
பிரிவினையின்
அடிவயிற்றில் ஆணியடித்திருந்தது
மூடப்பழக்கத்தின் முகத்தில்
காறி உமிழ்ந்திருந்தது….
நின்று யோசிக்க
யோசித்து அழவைக்க
ஏழைகளின் இயலாமையை
வரிக்குள் அடக்கியிருந்தது….
ஏவல் அரசாங்கம்
நடுநிலை தவறிய
நீதித்துறை
அடக்குமுறை காவல்துறை
அனைவரையும்
சுடுகோல் கொண்டு
சூடுவைத்திருந்தது…..
இயற்கையை மட்டுமே
வர்ணித்து வாழ்க்கையைக்
கொண்டிருந்தோருக்கு
ஏழ்மையையும் அறியாமையையும்
எடுத்துச் சொல்லென
சுட்டியிருந்தது….
எப்படிப் படித்தாலும்
படித்தவுடன் மறந்துவிடும்
உணர்வற்ற சிலகவிதைகளை
ஆங்காங்கே
அடையாளம் காட்டியிருந்தது…
தேடிப் படித்துப்பாருங்கள்
புகழ்பெற்ற கவிதைகள்
எளிமையானவை
எளிதில் மறக்க
இயலாதவை….
புகழ்பெற்ற கவிதைகள்
நிறைய வர்ணித்துக் கொண்டிருக்கவில்லை..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *